திரைமொழி - 12
முதல் பாகம் – Visualization – The Process
அத்தியாயம் 3 – Storyboards (தொடர்ச்சி)...
எளிமையான ஸ்டோரிபோர்ட் வரையும் முறைகள்
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
சென்ற மாதம் Empire of the Sun படத்தின் ஸ்டோரிபோர்ட்களையும் நாவல் மற்றும் திரைக்கதை ஆகியவற்றைக் கவனித்தோம். இனி, இந்த சீக்வென்ஸை எப்படிப் படமாக்கினார்கள் என்பதைப் பார்ப்போம்.
ஷாங்காயின் நதியின் பல்வேறு ஷாட்களுடன் இந்த சீன் தொடங்குகிறது. ஜிம் இருக்கும் இருட்டான ஹோட்டல் அறையின் விதானத்தில் ஒரு போர்விமானத்தின் நிழல் கடந்து செல்கிறது. அப்போது கேமரா மெல்ல அந்த நிழலையே தொடர்வதால், அது ஜிம்மின் கையில் இருக்கும் விமான பொம்மையின் நிழல்தான் என்பதை உணர்கிறோம். அங்கிருக்கும் ஃப்ளாஷ்லைட்டின் உதவியால் ஜிம் இப்படிச் செய்திருக்கிறான். கேமரா அப்படியே இன்னும் நகர்ந்து முழுதாட உடுத்திக்கொண்டு படுக்கையில் படுத்திருக்கும் ஜிம்மைக் காட்டுகிறது. அப்போது கேட்கும் கப்பலின் பலத்த ஒலியால் கவரப்பட்டு ஜன்னலுக்கு வருகிறான் ஜிம்.
ஜன்னலில் நின்றுகொண்டு ஜப்பானிய போர்க்கப்பல் கொடுக்கும் சிக்னல்களைக் கவனிக்கும் ஜிம்மை ஒரு புதிய ஆங்கிளின் மூலம் பார்க்கிறோம்.
இதன்பின்னர் மூன்று வெளிப்புற ஷாட்களால் ஜப்பானியப் படைவீரர்கள் சிக்னல்களை அனுப்புவதைப் பார்க்கிறோம்.
நதியைக் காட்டும் ஒரு wide shot. பின்னணியில் ஹோட்டலும் போர்க்கப்பலும். இந்த ஷாட்டில் இரண்டு போர்க்கப்பல்கள் மாற்றிமாற்றி சிக்னல்களை அனுப்பிக்கொள்வதைப் பார்க்கிறோம். திடீரென, ஹோட்டலின் ஜன்னல் ஒன்றிலிருந்து மூன்றாவதாக ஒரு சிக்னல் ஒளிர்கிறது.
இந்த இடத்தில் விவரிப்பை நிறுத்திவிட்டு இந்தக் காட்சிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். காட்சி ஆரம்பிப்பதே ஒரு விமான பொம்மை மற்றும் ஃப்ளாஷ்லைட்டை வைத்துத்தான் என்பதால் அந்தச் சிறுவனின் இயல்பைப் பற்றி ஸ்பீல்பெர்க் நமக்கு ஆரம்பத்திலேயே காட்டிவிடுகிறார். ஃப்ளாஷ்லைட்டை சிறுவனுக்கு நன்றாக உபயோகிக்கத் தெரியும் என்பது ஆரம்பத்திலேயே காட்டப்பட்டுவிடுகிறது.
நாவலில் ஜிம் செய்யும் சைகைகள் என்பதைப் படத்தில் ஃப்ளாஷ்லைட் சிக்னல்கள் என்று மாற்றியிருக்கிறார்கள். அது ஏனெனில், ஒளிதானே மிகவும் தூரத்தில் இருந்து பார்க்கப்படமுடியும்? போலவே, சைகைகளால் ஜிம் சிக்னல் கொடுக்கிறான் என்பதை விட, ஃப்ளாஷ்லைட்டை அங்குமிங்கும் ஆட்டுவதன்மூலம் தெரியாமலேயே ஒரு ஆபத்தான சிக்னலை ஜிம் அனுப்பிவிடுகிறான் என்று எண்ணுவதுதானே லாஜிகலாக இருக்கிறது?
படமாக்கப்பட்ட சீக்வென்ஸில், ஜிம் ஜன்னலிலிருந்து திரும்பிவந்து ஃப்ளாஷ்லைட்டை எடுக்கும் காட்சி இல்லை. இந்தக் காட்சி திரைக்கதையிலும் ஸ்டோரிபோர்டிலும் இருப்பதை சென்ற மாதத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். ஃப்ளாஷ்லைட்டை இந்தக் காட்சியின் துவக்கத்திலேயே காட்டிவிடுவதால் மறுபடியும் அதை ஜிம் சென்று எடுப்பதைக் காட்டத் தேவையில்லையல்லவா? இந்தக் காட்சிகளையெல்லாம் காட்டாமல் திடீரென ஜன்னலில் இருந்து சிக்னல் ஒளிர்வதால் ஆடியன்ஸ் வியப்படைகின்றனர். கூடவே அந்தக் காட்சியும் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்கிறது.
ஸ்டோரிபோர்ட்களில் சொல்லப்பட்ட காட்சிகளில் கடைசியாக ஒரு அருமையான மாற்றத்தை ஸ்பீல்பெர்க் செய்திருக்கிறார். கப்பலிலிருந்து குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சியடையும் ஜிம் பின்னால் விழுகிறான். அப்போது அவன் விழுவதை அவனுடனேயே பயணிக்கும் கேமரா காட்டுகிறது. திடீரென்று பக்கத்தில் இருக்கும் மூன்று கண்ணாடிகளுக்குக் காட்சிகள் மாறி, அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பங்களால் ஜிம் விழுவதைப் பார்க்கிறோம். உடனேயே எழும் சத்தத்தால் அவன் தந்தை வேகமாக உள்ளே வருகிறார். அப்போது ஒரு கண்ணாடியில் அவரது பிம்பமும், இரண்டு கண்ணாடிகளில் ஜிம்மின் பிம்பமும் தெரிகின்றன. இவை உண்மையில் மூன்று ஷாட்கள். ஆனால் ஒரே ஷாட்டில் அவை சேர்ந்துவிடுவதால் ஒரே ஷாட் என்ற பிரமையை அது அளிக்கிறது.
இந்தப் படத்தில் இரண்டு ப்ரொடக்ஷன் டிஸைனர்களின் உச்சபட்ச திறமை வெளிப்பட்டது. டேவிட் ஜோனாஸ் (David Jonas) மற்றும் எட் வெர்ராக்ஸ் (Ed Verraux) ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்தப் படத்தில் வேலை செய்தனர். ஷாங்காயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துக்கொண்டு யுனிவர்சல் ஸிடியில் இருக்கும் ஸ்பீல்பெர்க்கின் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டில் இந்த இருவரும் வேலை செய்தனர். ஏனைய பிறரைப்போலவே ஜோனாஸூம் டிஸ்னியில்தான் ஒரு இல்லஸ்ட்ரேட்டராக தனது வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறார்.
Empire of the Sun படத்தில் ஸ்டோரிபோர்ட்கள் 81/2 x 11 இன்ச்களில் வரையப்பட்டிருக்கின்றன. இவை மிகவும் தத்ரூபமாகவும் துல்லியமாகவும் வரையப்பட்டு ஜோனாஸின் திறமையைப் பறைசாற்றுகின்றன என்று அவசியம் சொல்லலாம். இப்படிப்பட்ட ஸ்டோரிபோர்ட்களின் ஸ்கெட்ச்கள் மிகவும் கடினம். காரணம் படத்தின் ஒவ்வொரு காட்சியுமே அதே செய்நேர்த்தியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன. ஜோனாஸ் மற்றும் வெர்ராக்ஸ் ஆகியவர்கள் ஒரு வருடம் தங்கிச் செய்த வேலை சோடைபோகவில்லை என்பதைப் பெருமையுடன் சொல்லலாம்.
ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேஷனில் எப்படி வேலை செய்யத் துவங்குவது?
ஸ்டோரிபோர்ட்கள் வரைதல் என்பது மிகவும் செய்நேர்த்தி தேவைப்படும் ஒரு தொழில். அதேசமயம் செய்த வேலைக்கு வெளிப்படையான அங்கீகாரம் என்பது பிற இடங்களைப்போன்ற அளவு கிடைக்காது. பெரும்பாலும் ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர்கள் யாரோ ஒருவரின் ஐடியாவையே காட்சிகளாக மாற்றும் தொழிலில்தான் இருக்கின்றனர். கூடவே இவர்களுக்குக் கிடைக்கும் நேரமும் மிகக் குறைவு. ப்ரஷர் அதிகம். பெரும்பாலான ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர்களுக்கு, யாரேனும் நல்ல ப்ரொடக்ஷன் டிஸைனருடனும் தொழில் தெரிந்த இயக்குநருடனும் வேலை செய்து அவர்களின் ஸ்கெட்ச்கள் சிறந்த திரைப்படங்களாக உருமாற்றம் அடைவதே அவர்களுக்குரிய அங்கீகாரம்.
இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் ஹாலிவுட்டில் பல இடங்களில் ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேஷன் என்பது ஒரு கோர்ஸாக சொல்லித்தரப்படவில்லை. மிகச்சில திரைப்படக் கல்லூரிகளிலேயே இது ஒரு பாடத்திட்டமாக வழங்கப்பட்டது.
ஆனால், ஓவியக்கலையை முறையாகக் கல்லூரிகளில் படிப்பதே இந்தத் தொழிலுக்கு நல்லவிதமான அடித்தளம்தான். அமெரிக்காவில் பல கல்லூரிகளில் விளம்பரங்களில் படம் வரைதலைப் பற்றிய கோர்ஸ்கள் இருக்கின்றன. இதுபோன்ற கோர்ஸ்களும் அவசியம் பலனளிப்பவையே. படம் வரையும் திறமை முக்கியம்தான் என்றாலும், ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர் என்பவரின் முழுக் கவனமும் உண்மையில் கேமரா கோணங்களும் எடிட்டிங்கும் அந்தக் காட்சியில் எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் இருக்கவேண்டும். இதனால் அடிப்படையான புகைப்படம் எடுக்கும் திறமையும் திரைப்படங்களின் தொழில்நுட்பம் போன்றவற்றில் நல்ல அறிவுமே ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டராக ஆவதற்கான தகுதிகள் என்று ஆகிறது.
ஹாலிவுட்டில் ப்ரொடக்ஷன் டிஸைனர்கள், இல்லஸ்ட்ரேட்டர்கள் ஆகியவர்களுக்காக சங்கங்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தில் தோன்றும் பல்வேறு ஸ்கெட்ச்களும் இந்த சங்கத்தின் அங்கத்தினர்களால் வழங்கப்பட்டவையே. இந்த யூனியன்களின் ஆதரவும் அரவணைப்பும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான இல்லஸ்ட்ரேட்டர்கள் வேறு வேலைகளைத் தேடிச் சென்றிருப்பார்கள் என்பதிலேயே இந்தச் சங்கங்களின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர முடியும்.
இத்துடன் ‘Storyboards’ என்ற Shot by Shot புத்தகத்தின் மிகப்பெரிய அத்தியாங்களில் ஒன்றான மூன்றாவது அத்தியாயம் முடிகிறது.
தொடரலாம்...
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |