விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 3
சென்ற இதழின் தொடர்ச்சியாக:
ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன்., நான் படம்பிடித்து தொகுத்து வைத்திருக்கின்ற இரட்டை வேட புகைப்படங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றார். என்னை மிடுக்காகப் பார்த்தபடியே புகைப்படங்களை மேசையின் மீது வைத்துவிட்டு, “எப்படிடா, இதையெல்லாம் எடுத்த?” என்றார். நான் அப்பொழுது சிறுவனாகயிருக்கின்ற காரணத்தினால், ’இளங்கன்று பயமறியாது’, என்பதற்கேற்ப, அவர் கேள்வியை ஒரு பொருட்டாகவே மதியாமல் “ என்ன சார்., அட்டைய எடுத்துட்டு, கேமராவுக்கு இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மறச்சு வச்சுகிட்டு படம்பிடிச்சா, இந்தமாதிரி போட்டோ கிடைச்சுட்டுது” என்றேன். என் சாதாரண பதிலுக்கு அவர் இணங்கிவிட்டார் என்பதை அவர் முகச்சாயலில் தெரிந்துகொண்டேன்,. இந்நிகழ்ச்சிக்குப் பின்பே, சி.ஜே. மோகனுக்கும், எனக்குமான நெருக்கம் அதிகமானது.
என்னிடம் கேமரா இருக்கின்ற காரணத்தினால், என்னால் ஓரிடத்தில் இருந்துகொண்டு பொழுதைக் கடத்த பிடிக்கவில்லை. என் பால்ய காலத்தில் கேமராவுடன் செலவான நாட்களே அதிகமானாலும், அதனை முறைப்படி கற்றுக்கொண்டு அத்துறையில் சிறந்த ஒளிப்பதிவாளராக இந்த ஆனந்தன் பெயரும் சினிமா வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுழன்றுகொண்டிருந்தேன். இச்சமயத்தில்தான் ஜெமினி ஸ்டுடியோவின் விளம்பரமும் என் பார்வைக்கு கிடைத்தது.
|
”ஜெமினி ஸ்டுடியோ தயாரிக்கின்ற புதியபடத்தில் நடிப்பதற்கு நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர், இயக்குனர் வேண்டும். புதுக்கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்ற நோக்கில் இந்த வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. ஆர்வமிருப்பவர்கள் கலந்துகொள்ளலாம்”, என்பதே அச்செய்தியின் சாரம்சம். மேற்கொண்டு, ”ஒளிப்பதிவில் ஆர்வமிருப்பவர்களுக்கு முன்னுரிமை. ஒளிப்பதிவாளர்களுக்கு நாங்களே தக்க பயிற்சிகளையும் கொடுத்து, அவர்களை நாங்கள் தயாரிக்கின்ற படங்களிலேயே பயன்படுத்திக்கொள்ளும் எண்ணமும் இருக்கின்றது”, என்பதும் அந்நாளிதழில் நான் கண்ட கூடுதல் செய்தி. நான் அப்போது பாக்ஸ் கேமிரா தான் வைத்திருக்கிறேன், இருப்பினும் இது ஓர் நழுவ விடக்கூடாத சந்தர்ப்பமாக எனக்குப் பட்டது.
அவர்கள் தருகின்ற முன்னுரிமை எனக்கும் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில், ஜெமினி ஸ்டூடியோவுக்கு ஒரு கடிதம் எழுதினேன், சில நாட்களில் அவர்களிடமிருந்து பதிலும் வந்தது. பதில் கடிதத்தை எடுத்துகொண்டு மகிழ்ச்சியாக அவர்களைச் சந்திக்கச் சென்றேன்.
நான் அங்கு போனபொழுது கே.ஜே. மகாதேவன் என்பவர் இதற்கான பொறுப்பில் இருந்தார். என்னையும், என் வயதையும், தோற்றத்தையும் பார்த்துவிட்டு, என்னை நிறுத்தி, ”யாரப்பா நீ? உனக்கு இங்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். நான் உடனேயே ஒளிப்பதிவாளராக வந்திருப்பதற்கான காரணத்தைச் சொன்னேன். கடிதத்தையும் காண்பித்தேன். அமைதியாக அமர்ந்திருந்து கேட்டவர், லேசாக சிரிக்க ஆரம்பித்தார். ”உனக்கு கேமரா சம்பந்தமான வேலையெல்லாம் தெரியுமா?”, என்று அடுத்த கேள்வி அவரிடம் இருந்து வந்தது.. நானும் ஏதோ தைரியத்தில் ”எல்லாம் தெரியும், சார்”, என்று சொல்லிவைத்தேன்.
பின்னர், அந்த இடத்தில் திரைப்படங்களுக்கு பயன்படுத்துகின்ற கேமராக்களின் தோற்றம் கொண்ட மினியேச்சர் இருந்தது. பார்க்க அசல் காமிரா போன்ற வனப்பு கொண்டது. அந்த மினியேச்சர்களை என் பார்வையில் காட்டி, “அதைத் தூக்கிக்கொண்டு இங்குவா” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்ன சார், நான் சின்னப்பையன் என்னால் எப்படி, அவ்வளவு கனத்தைத் தூக்கமுடியும்” என்று கேட்டேன். உடனே அவர் “உன்னால் எப்பொழுது அதைதூக்க முடிகின்றதோ, அந்த வயதில் இங்குவா, நீ கேமரா மேனாகலாம், இப்போது கிளம்பு “ என்றார். அந்தக் காலத்தில் பயன்படுத்துகின்ற கேமராக்கள் அதிக எடையுடையவை. கேமராமேனாக ஆசைப்படுவது மட்டுமின்றி அதைத்தூக்கிவேலை செய்யும்திறமும் இருந்தால்தானே தொழிலில் தொடர்ந்து நீடிக்க முடியும். அதைத்தான் அவர்சரியாக எனக்கு உணர்த்தியிருக்கின்றார். பின்னர் காலத்தின் சுழற்சியில் கே.ஜே.மகாதேவன் ஜெமினிஸ்டுடியோவிலிருந்து விலகி, தனியாக தயாரிப்பாளரான பின் ஓர் படம் எடுத்தார், ”அவள் யார்?” என்பது படத்தின் பெயர், நானே அந்தப்படத்திற்கு பி.ஆர்.ஓ.வாக வேலைசெய்கின்ற சமயத்தில், நான் அந்தப் பழைய சம்பவத்தை அவருக்கு நினைவூட்டினேன், அவரும் பழசை நினைத்துப் பார்த்துச் சிரித்தார்.
நான் ஜெமினிஸ்டுடியோ என்ற காரணத்தினால்தான் அவர்கள் எடுக்கின்ற படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர்வம் கொண்டேன். மேலும் அந்தக் காலத்தில் மாதசம்பளம் கொடுக்கின்ற ஒரே ஸ்தாபனம், ஜெமினிஸ்டுடீயோதான்.
நானும் கேமரா வைத்திருக்கின்ற காரணத்தினால் எந்த ஸ்டுடியோவைப் பார்த்தாலும் தயங்காமல் உள்ளே போய்விடுவேன். நானும் அங்கு அடிக்கடி காரில் வருகின்ற காரணத்தினால், என்னையும் படப்பிடிப்பில் வேலை செய்கின்றவர் என்றெண்ணி எவரும் என்னை கேள்வி கேட்கமாட்டார்கள். இப்படி நான் ஸ்டூடியோக்களுக்குள் சென்று அங்கு நடப்பவற்றை போட்டோ எடுத்துக்கொண்டுருந்த பொழுது, இந்த பாக்ஸ் காமிராவைக் காட்டிலும் அதிநவீன வசதிகள் கொண்ட புதிய ரோலிஃப்லெக்ஸ் (Rolleiflex) காமிராக்கள் எனக்கு அறிமுகமாகின்றது. அப்பொழுது அதன் விலை 3000 ரூபாய். நான் வைத்திருக்கின்ற பாக்ஸ் காமிராவின் விலை 12 ரூபாய் மட்டும்தான். இருப்பினும் ரோலிஃப்லெக்ஸின் தோற்றத்திலும், வசதிகளிலும் எனக்கு காதல் ஏற்பட்டதால், அதனை எனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.
என்னுடைய தேவையை என் தந்தைதான் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் அந்தக் காமிராவைப் பற்றிச் சொல்லி, அது எனக்கு வேண்டும் என்றவுடன், ஓரிரு தினங்களிலேயே எனக்கு அந்த ரோலிஃப்லெக்ஸ் காமிராவை வாங்கிக் கொடுத்துவிட்டார். ”12 ரூபாய் எங்கேயிருக்கின்றது, 3000 ரூபாய் எங்கேயிருக்கின்றது”., என்ற கேள்வியை முன்னிலைப்படுத்தி என்னைக் கண்டித்திருந்தாள் கூட அந்தக் கேமராவின் மீதான பிரியத்தை தளர்த்திக்கொண்டிருப்பேன். ஆனால், அப்பா எதுவுமே மறுமொழி சொல்லாமல் வாங்கிக்கொடுத்தார். இப்படிப்பட்ட அப்பா கிடைத்திருப்பதே என் முதல் பாக்கியம். அப்பாவிற்கு நான் செல்லப்பையன். முதல் இரண்டு பையன்களும் இறந்துவிட்டார்களென்பதால் எனக்கு இந்த உரிமையும், பாசமும் கிடைத்திருக்கின்றது.
இந்த மாதிரி அப்பா எனக்கு கிடைத்திருக்கின்ற காரணத்தினால்தான் என்னால் இம்மாதிரியான தொகுப்புகளையெல்லாம் மேற்கொண்டு சேகரிக்க முடிந்திருக்கின்றது.
புதிய ரோலிஃப்லெக்ஸ் (rolleiflex) கேமராவை எடுத்துக்கொண்டு ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகனை பார்க்கக் கிளம்பினேன். அவர் SAFC என்ற சூத்திரத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தார்.
S- Speed
A- Aperture
F – Focus
C – Click
கேமராவைப் பொறுத்தமட்டிலும் இந்த நான்கு விஷயங்களும் முக்கியம். நீ காமிராவைத் தொடும்போதெல்லாம் இந்த நான்கு மந்திரங்களும் உன் ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.
புதுக் காமிரா வந்தவுடன் நான் முதலில் புகைப்படம் எடுத்தது நடிகர் திலகம் சிவாஜிகணேசனைத் தான்.
ரோலிஃப்ளக்ஸ் காமிராவானது, பாக்ஸ் காமிரா என்பதுபோல் பக்கவாட்டில் திருகினால்தான் அடுத்த பிலிமிற்கு நகரும் என்பதாகயில்லாமல், ஒரு ரீலுக்கான 12 புகைப்படங்களையும் அடுத்தடுத்து எடுக்கலாம்.
சிறுவயதிலிருந்தே பணத்திற்கு குறையேதும் இல்லாமல் வளர்ந்துவந்த காரணத்தினால் காரில் தான் எங்கும் செல்வேன்,. ஒரு ஸ்டூடியோவிற்குச் சென்றால் அங்கு மூன்று தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும், அந்த மூன்று தளங்களிலும் படப்பிடிப்புகள் நடக்கும்.
இதில் கீழ்ப்பாக்கத்திலிருந்த நியூடோன் ஸ்டூடியோதான் மெட்ராஸ் மாகாணத்தின் மிகப்பழமை வாய்ந்த ஸ்டூடியோ என்னும் பெயர் பெற்றது. இதற்கு முந்தையது பூந்தமல்லியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீநிவாஸா ஸ்டூடியோ. நான் நியூடோன் ஸ்டூடியோவினுள் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர் மட்டும் மிடுக்காக 80 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் அமர்ந்திருந்தார். மற்ற தொழிற்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் அவரைக் கண்டதும் மரியாதையாக எழுந்துநிற்பதும், அவருக்கு தனியான மரியாதைகள் செய்வதும் நடந்தேறுகின்றது. அவர் யார் என்று தூரத்தில் நிற்கின்ற எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நியூடோன் ஸ்டூடியோவில் வேலை செய்கின்றவர்களெல்லாம் எனக்கு பழக்கமாகயிருக்கின்ற காரணத்தினால் அவர்களில் ஒருவரை அழைத்து, அங்கு உட்கார்ந்திருக்கின்ற கிழவர் யார் என்று கேட்டேன். அவர்தான் சிவாஜி என்று மறுமொழி வந்தது.
சிவாஜி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்த ”ராஜா ராணி”, என்ற படத்திற்காக சிவாஜிகணேஷன் 80 வயது விநாயகமுதலியார் என்ற வேடம் தரித்து அமர்ந்திருக்கின்றார்.
சிவாஜியைப் பார்த்துவிட்டோம் என்கிற சந்தோஷத்தில் அவரருகில் சென்று அவரிடம் “சார் உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்றேன். அதற்கு சிவாஜி கூறிய பதில்தான் பிரமிப்பாக இருந்தது. அவர் என்ன சொன்னாரென்றால் “ofcourse , you take it”. சிவாஜி அதிகம் கோபப்படுவார் என்பார்கள். ஆனால், அவரிடமிருந்து இப்படியான பதில்வந்ததில் தான் தாமதம். ஒரு படம் எடுக்கின்றேன் என்று அனுமதிபெற்ற நான், மொத்தமாக 12 படங்களும் அவரை மட்டுமே எடுத்தேன். வீட்டிற்கு வந்தவுடன் ”நான் சிவாஜியை போட்டோ எடுத்துட்டேன்”, என்று அனைவரிடமும் ஆச்சரியமாக சொன்னேன். சிவாஜியைப் புகைப்படம் எடுத்துவிட்டேன் என்ற செருக்கு, அப்புகைப்படங்களை பிறரிடம் காண்பிக்கின்றபொழுதும் இருந்தது.
இதுமாதிரியாக சிலநடிகர்களையும் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு ஆல்பமாக தயார் செய்தேன். நான் காரில் செல்கின்ற சமயத்திலெல்லாம் இந்த ஆல்பமும் என் கூடவே வரும்.
|
பின்பு அடையாறில் இருந்த நெப்டியூன் ஸ்டூடியோவில், ”மனோகரா”, படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது. மனோகரா சங்கிலியை அறுக்கின்ற முக்கியமான காட்சிக்காக ஆயத்தப்பணிகள் மும்மரமாக நடந்தேறுகின்றது. ஆறு கேமராக்கள் மூலமாக படம் பிடிக்கப்போவதாக திட்டம். நானும் அக்காட்சி படமாக்கப்படுகின்ற வேலையில் கூடவே நின்றிருந்தேன். என் கேமராவை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் நடப்பவைகளை எவருக்கும் தெரியாமல் படம்பிடிப்பேன். எங்கே எவருக்குமேனும் தெரிந்துவிட்டால் தன்னால் படப்பிடிப்பிற்கு இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம். அதேசமயம் ஃபிளாஸ் போடாமல் தான் படம் எடுப்பேன். அதிலிருந்து வருகின்ற வெளிச்சம்கூட படப்பிடிப்பிற்கு இடையூறாக இருக்கின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. ஸ்டில்போட்டோகிராபர் ஒருவர் ஒவ்வொரு படத்திற்கும் தனியாகயிருந்தாலும், அவர்கள் இயக்குனரையோ, தயாரிப்பாளர்களையோ படம் பிடிக்கமாட்டார்கள், ஆனால், நான் அந்தப் படத்தில் வேலை செய்யவில்லையாதலால், தூரத்திலிருந்து படம் எடுக்கின்ற பட்சத்தில் இயக்குனர்களையும், சிலநேரத்தில் தயாரிப்பாளர்களையும் என் புகைப்படத்தில் காணலாம். இதையே ஒருமுறை எல்.வி.பிரசாத் அவர்களிடமும் காட்டியிருப்பதனால் அவரும் பாராட்டியிருக்கின்றார், நடிகர்களையும், அரங்கங்களையும், ஒப்பனைகளையுமே புகைப்படங்களாக பார்த்துவிட்டு அலுத்தவருக்கு, இதுபோன்று இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரெல்லாம் பங்கெடுத்துக்கொண்ட என் புகைப்படங்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இனி நான் தாராளமாக ஸ்டூடியோவினுள் எங்கும் செல்வேன், யாரையும் சுதந்திரமாக படமெடுப்பேன்.
தொடரும்...
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |