இதழ்: 16     ஆனி - 2014 (June)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 11 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் - மார்க்சீயத் திரைப்பட அழகியல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 10 - ராஜேஷ்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 2 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் 4 - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்

--------------------------------
விருப்பம் வேலையானால் 3 – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

'1983' ஆம் வருடத்தோடு, ஸக்கரியாவின் கர்ப்பிணிகளும்
தற்காலத் தமிழ்த் திரைப்படங்களின் போக்கும் ! - எம்.ரிஷான் ஷெரீப்

--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 2 - பி.கே. நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 2 - வெ.ஸ்ரீராம்
--------------------------------
   

   

 

 

உயிர் கொடுக்கும் கலை 11 - டிராட்ஸ்கி மருது

- ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்

வீட்டிலிருந்தே கைதட்டிக் கொண்டு கிளம்பும் கூட்டம்

இக்கட்டுரை வரும் முன்பே இக்கூட்டம் அரசு, ஊடக உதவியுடன் கல்லாவை நிரப்பியிருக்கலாம் . . .
(அல்லது நிரம்பிவிட்டது என்று பொய்யும் சொல்லலாம். எல்லாம் Business தானே . . . )

தொன்னூறுகளில் தமிழகத்தில் எழுச்சியுற்றுப் பின்பு ஒரு சரிவைக் கண்ட அனிமேஷன் துறை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு எழுச்சியை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் அனிமேஷன் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. இங்குள்ள கலைஞர்களுக்கு சாதகமான ஒரு சூழலும் ஏற்பட்டிருக்கிறது. வெளி மாநிலங்களில் பணி செய்வதென்றில்லாமல், இங்கேயே பணி செய்யும் வாய்ப்பும் இருக்கின்றது. திறமை மிக்க கலைஞர்களுக்கான ஒரு சூழல் மெதுவாக உருவாகிக் கொண்டும் வருகிறது. இப்படியான ஒரு சூழலில் கோச்சடையான் போன்ற திரைப்பட முயற்சி நல்லது என்றாலும், அனிமேஷன் முயற்சி மற்றும் அதற்கான சாத்திய கூறுகள் இங்குள்ளது என்ற சூழலை உருவாக்கியது என்பதை கடந்தும் சில விஷயங்களை சிந்திக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

அனிமேஷன் என்பது ஒரு உலக மொழி. அனிமேஷனுக்கான நல்ல இடம் பெருகி வரும் இத்தருணத்தில், தமிழ்/தமிழ் நாடு சார்ந்த கதைகளை அல்லது பகுதிகளை உலகளவில் காண்பிப்பதற்கான வாய்ப்பு இப்போது உருவாகி வருகிறது. அனிமேஷன், காட்சி, திரை மொழி மற்றும் அது சார்ந்தவற்றின் அடிப்படை மிக வலுவாக அமைந்தால் இது சரியான முறையில் செய்வது சாத்தியமாகும்.

எல்லாம் சிறப்பாக நடக்க, முடியும் தருணத்தில் யாராவது ஒருவர் தடுக்கும் சூழ்நிலை தான் அனிமேஷன் துறையை பொருத்தவரை தமிழகத்தில் நடக்கிறது. இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. தமிழகத்திலிருந்து கோச்சடையான் போன்ற ஒரு படம், குறிப்பாக 35 ஆண்டுகால அனுபவம் உடைய புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களை முன் வைத்து வெளிவருகிறது. இப்படத்திற்கு அவர் ஒரு பெரிய விற்பனை பொருளாக இருக்கிறார். அனிமேஷன் பயன்பாட்டையும் அவருடைய பிரபலத்தன்மையையும் அதன் மூலமாக வரும் வியாபாரத்தையும் ஒரு தனி கூட்டம் எப்படி வேண்டுமானாலும் வியாபாரமாக்கிவிடலாம் என்றொரு நிலை உருவாகி இருக்கிறது. சிறந்த தரத்துடன் திரைப்படம் உள்ளதா இல்லையா என அவர்களுக்கே கவலையில்லாத பட்சத்தில், ஒரு தவறான சினிமாவை இப்படியான பெரிய பிரபலத்தன்மைக்கொண்ட ஒரு முகத்தை முன்னனியில் வைத்துக்கொண்டு தவறான வியாபாரத்தை செய்திருக்கிறார்கள். இதன் முலம் மீண்டும் அனிமேஷன் துறை மீது பெரிய நம்பிக்கை வராதது போல ஒரு பிம்பம் உருவாகிவிடுகிறது. எது சரி/தவறு, எந்த காட்சி சரி/தவறு, தொழில்நுட்ப குறைகள் இதில் உள்ளது/இல்லை என நேரடியாக உண்மையை பேசும் நிலை இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல முடியும், அதுவே நல்ல/இளைய கலைஞர்கள் வருவதற்கான சாத்தியங்களை கொடுக்கும்.

ரஜினிகாந்தை முன்னிறுத்தி, அவருடைய குடும்பத்தார் இதில் ஈடுபட்டிருப்பது, பின்னனியில் ஒரு பன்னாட்டு நிறுவனம் பணத்தை முதலீடு செய்வதுடன், சரித்திரப்பிழை, உடை/தோற்றம்/வடிவம் சார்ந்த பிழை, தமிழ்நாட்டுச் சூழலுக்கான சமரசங்களை விடாது அதையே உலக மேடைக்கும், உலக அளவுத் தொழிலுக்கும் எடுத்து சென்று தமிழ் சூழலின் வியாபார சமரசம் கொண்ட வடிவத்தை உலக மேடையில் அமர்த்திக் கேவலப் படுத்துவதும், உண்மை வடிவமான இக்கலை வடிவம் உலக மொழி என்பதை அறியாது, அதன் சக்தியை அறியாத அல்லது அவசியம் என்று கருதாத, பணம் எவ்வழியிலும் ஈட்டாலாம் என்கிற ஒரு நோக்கோடு இயங்குகிற கூட்டம் தேர்ந்த முறையில் மக்களை மூளைச்சலவை செய்து காண்பிக்கும் வித்தைதான் கோச்சடையான்.

இந்த படத்தில் அனிமேஷன் சரியில்லை, தொழில்நுட்பரீதியாகவும் இந்த படம் சரியில்லை என சொல்வதற்கு இங்குள்ள சாதாரண மனிதர்களுக்கும் தகுதி, அறிவு உண்டு. அவத்தார் மற்றும் உலகின் சிறந்த தொழில்நுட்ப கூறுகள் கொண்ட பல அற்புதமான திரைப்படங்களை நமது திரையரங்குகளில் இங்கே பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள். கதை எப்படியோ ஆனால் சமீபத்திலும் இங்கு ஈ போன்ற தொழில்நுட்பரீதியில் சொல்லப்பட்ட படம் வெளிவந்து பலரும் பார்த்திருக்கின்றனர். இன்னும் சில படங்களில் சிறிய துண்டுகளாக பல இடங்களில் அனிமேஷனை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். "சூப்பர் ஸ்டார்" போன்ற ஒரு பெரிய பிம்பத்தை முன்னிறுத்தி, அனிமேஷனில் நீங்கள் சரியான விஷயத்தை பார்க்க கூடாது அல்லது பார்க்க விடாத மாதிரியான ஒரு முனைப்பு இருப்பது போன்ற ஒரு இடம் இங்கு வந்துள்ளது.

இங்குள்ள ஊடகங்கள், சில குறிப்பிட்ட தரகு நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் ஊடகங்கள், அரசுடனும், அதிகாரத்தில் இருப்பவர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு இருப்பவர்கள், பெரிய சினிமா தயாரிக்கும் முதலாளிகளும் சேர்ந்து ஒரு மோசமான விஷயத்தை மோசம் என மக்களை உணரவிடாமல் இருக்கும்படி வைப்பது ஆபத்தானது. சரியான காட்சியை சரியான காட்சியென்றும், சரியில்லாத காட்சியை சரியில்லாத காட்சியென்றும் புரிந்துக்கொள்வதற்கும் அதைப்பற்றிப் பேசுவதற்கும் இந்த அடுக்குகள் தான் மறுக்கிறது. நீங்கள் சரியில்லை என்று சொல்லவில்லையென்றால், நீங்கள் சரியான பகுதியில் வளரவே முடியாது. இந்த தொழிலும் வளர முடியாது.

அனிமேஷன் என்பதை திரைப்படங்களை மனதில் வைத்து மட்டும் நான் பேசவில்லை. கல்வி சார்ந்த விஷயங்கள், காட்சி படுத்த இயலாதது, வார்த்தைகளால் சொல்ல முடியாதது, ஆவணப்படுத்துதல், விவரண படம் என எல்லா பகுதியிலும் கையாள வேண்டிய உபகரணம் அனிமேஷன். பெரு வியாபாரமென ஒரு குறிப்பிட்ட குழு, அதை புரிந்துக் கொள்ளும் பகுதியை சொல்ல மறுப்பதும், சொல்வதற்கான இடத்தை தடை வைப்பதும் நடக்கிறது. மக்களுக்கு தெரிந்திருந்தும் எல்லாரும் பொய்யாகவே பேசுகின்றனர். நானறிந்து இப்படியான ஒரு சூழ்நிலை எப்போதும் இருந்ததில்லை என்பதும் இதுவே முதல் முறையாக இருக்குமோ என்றும் அச்சப்படுகிறேன்.

நாற்பது ஐம்பதாண்டு காலமாக அனிமேஷனை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இந்த துறையை பொருத்தவரையில் சிறப்பானது நேரடியாக கண்ணுக்கு தெரியாது, மோசமானதுதான் நேரடியாக கண்ணுக்கு தெரியும். "INVISIBLE ART" இது. கிட்டத்தட்ட மந்திரம் செய்பவன், மந்திரம் செய்ய தெரியாமல் செய்வதெப்படியோ, அது போல தான் இது. திரைப்படத்தில் இருக்கும் விநாடிகள் உண்மையாக இருந்தால் தான், உண்மையான வடிவம் பார்வையாளருக்கு சரியாக தெரியும். அது உண்மையாக இல்லையென்றால், மேற்பரப்புக்கு மேல் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தில் இருக்கும் உண்மையற்றவை, கலையிலும் உங்களுக்கு பான்டித்தியம் இல்லாத தன்மை மட்டுமே தெரியும். இதை மறுப்பது மூலமாகவும், மோசமான ஒன்றை முன்னின்று வியாபாரம் செய்வதாலும், கிட்டத்தட்ட இந்த தொழில் துறையை பின்நோக்கி தள்ளிவிடுகிறீர்கள்.

நேரடியாக சொல்ல முடியாதது, முன் வந்து சொல்ல விரும்பாதது, எல்லாரும் சேர்ந்து கைத்தட்டுவது, எல்லோரையும் சேர்ந்து கைத்தட்ட வைப்பது, திரையரங்கத்திற்கு வருவதற்கு முன்பாகவே வீட்டிலிருந்தே கைத்தட்டிக் கொண்டு கிளம்புவது போன்ற தன்மை கலாப்பூர்வமாகவும் கலாச்சாரரீதியிலும் மிகவும் மோசமான ஒரு இடத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோச்சடையான் தயாரிப்பாளர்களிடமோ அல்லது ரஜினிகாந்த அவர்களிடமோ அல்லது அதன் பின்னனியில் இருப்பவர்களிடமோ எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. அனிமேஷன் கலையை தவறாக மக்களிடம் பிரபலமாக்குவதை தடுப்பது, அதை தவறாக முன் வைத்து, வேறு யாரையும் கருத்து சொல்லவிடாத ஒரு பயத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, பேசவே முடியாத ஒரு நிலையை உருவாக்கியிள்ளது. கலாச்சாரரீதியாக தமிழகத்தின் மோசமான ஒரு சூழலை இது முன் வைக்கிறது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கிறேன், இப்போதிருக்கும் சில நல்ல அனிமேட்டர்ஸை உருவாக்கியிருக்கின்றேன். எனக்கு தெரிந்ததை, இளம் அனிமேட்டர்ஸிடம் எப்போதுமே பகிர்ந்துக்கொண்டே இருந்திருக்கிறேன். அது எனக்கு முக்கியமான கடமையாக பட்டது. அது போலவே சரியில்லை என்று சொல்லுவதையும் கடமையாக கருதுகிறேன். இதை உரிய நேரத்தில் நான் கூறவில்லையென்றால் அதுவும் தவறாகும். சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு என்பதால் இதை சொல்லுகிறேன்.

கலையை சரி தவறு என தீர்பளிப்பதற்கான இடம், ஒருவர் எதிர்த்து சொல்வது, ஒருவர் வாழ்த்து சொல்வது, ஒருவர் புரியாமல் சொல்வது அல்லது ஒருவர் புரிந்து சொல்வது என பல உண்டு, ஆனால் அனைத்தையும் தாண்டி சமூகமே புரிந்தும் கூட உண்மையை பேச வராத, உண்மையை பேசுவதற்கான இடமில்லாமல் ஒரு நிலை இருக்கிறது. ஊடகம், ஒரு விதமான பயம் என இவையனைத்தும் சேர்ந்துதான் இந்த சினிமாவை குறித்து இப்படியான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது என நம்புகிறேன். இதை நீங்கள் பல விஷயத்தோடு தொடர்பு படுத்தலாம். சமகாலத்தில் எழுத்தாளர்கள்/அறிவுஜீவிகள், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முன் வந்து காட்டமாக சொல்லாததற்கு எப்படியான ஒரு மன பிராந்தியும் சூழலும் இருக்கிறதோ அது போலவே ஒரு சூழல் கோச்சடையான் மாதிரியான ஒரு சினிமாவை பற்றி பேசுவதிலும் இருக்கிறது என்றும் நம்புகிறேன்.

உண்மையை உண்மையாக சொல்ல தயங்கும் நிலையிருக்கல்லவா, அதுவே Emperor's new cloth கதையின் சாரம். சென்ற முறை அந்த கதையில் உண்மையை உலகத்திற்கு சொன்னது அந்த சின்ன பெண். இந்த முறை நெசவாளரே அந்த பெண்தான். கிட்டத்தட்ட அது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது. அந்த கதையினுடைய சூழலையும், அந்த மக்களையும், தமிழக சூழல் தெளிவாக காண்பிக்கிறது. எனக்கு தெரிந்து இந்த படத்தை போல் எந்த படத்திற்கும் லாபி (தரகு வேலை) இப்படி நடந்ததில்லை. இவ்வளவு பெரிய பொய்யை தமிழக பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்ததை இதற்கு முன் வெளிப்படையாக உணர்ந்தோமா?. ஒருவருக்கும் துணிந்து நன்றாக இல்லை என விமரிசனம் எழுத துணிவு இல்லை. கதை நன்றாக இருக்கு, வசனம் நன்றாக இருக்கு ஆனா அனிமேஷன் நன்றாக இல்லை என்பது போல் எழுதுகிறார்கள். இந்த படத்தை புறக்கணிக்க எவருக்கும் மனமில்லை. தைரியமில்லை. தமிழ் சமூகத்தினுடைய உண்மையான வேதனையை சொல்ல தவறியவர்கள், இதில் சொல்வதற்கு வேதனை இல்லை, லாபம் மட்டுமே இருக்கிறது எனும் பட்சத்தில், மிக அருமையாக பொய் சொல்லுகிறார்கள். தனக்கு எந்த பாதகமும் இல்லை என்கிற பட்சத்தில் எல்லோரும் கொண்டாடி இங்கு கோவில் கட்டுகிறார்கள். அடிப்படை தமிழ் மக்களின் மனநிலையை அல்லது தமிழக சூழலை தெள்ள தெளிவாக கோச்சடையானை சுற்றி சுழல்கிற தூசி நமக்கு சொல்லுகிறது.

மோஷன் கேப்ச்சர் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். தமிழக மக்களிடம் அது சென்று சேர வேண்டும், அது ஒரு புது தொழில்நுட்ப உத்தி என்ற ரீதியில் தொடர்ந்து கூறினார்கள். அதை வியாபாரத்திற்காக முன்னிறுத்தினார்கள். தமிழ் நாட்டில் ஏற்கனவே மோஷன் கேப்ச்சர் செய்து வந்த படங்கள் வெளியாகியுள்ளன, குறிப்பாக டின் டின், அவத்தார், அது குறித்து இங்கு யாரும் பேசவில்லை. அது மட்டுமில்லை, பலருக்கு தெரியாது, நான் செய்திருக்கிற ராமநாராயனன் படத்தில் மோஷன் கேப்ச்சர் உத்தியை பத்தாண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியிருக்கோம். அப்போது ஒரு சில மணி துளிகளுக்கு பயன்படுத்த ஆன செலவில் இப்போது முழு சினிமாவிற்கும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது. மோஷன் கேப்ச்சரைப் பயன்படுத்துவது மட்டும் பெரிதல்ல, அதை எப்படி பயன்படுத்தினார்கள் என்பது தானே சினிமா. மோஷன் பிக்ச்சர் பயன்படுத்துகிறோம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி என்ன பயன்.

நான் எவருக்கும் எதிரானவன் அல்ல, எந்த தொழில் முறைக்கும் எதிரானவன் அல்ல. அரிசியில் கல்லை கலப்பவனை கண்டால் உங்களுக்கு எப்படி பிடிக்காதோ, அது தெரிந்த பிறகு எப்படி இந்த தொழிலை அவர்கள் செய்யாமல் இருக்க நீங்கள் முயற்சிப்பீர்களோ, அதையே நானும் செய்கிறேன்.

கலையின் மூல அவசியத்தையும், தன்மையையும் கொலை செய்பவருடன் எப்படி சமரசம் கொள்வீர்கள்?

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </