ஆவணப்பட இயக்குனர், பேராசிரியர் சொர்ணவேல்
அன்புள்ள அருண்,
பேசாமொழியில் அறந்தை மணியன் அவர்களின் தமிழ் சினிமா சஞ்சிகைகள் குறித்த கட்டுரை எனக்கு மன நெகிழ்வுடன் கூடிய பிரமிப்பை ஏற்படுத்தியது. நான் தமிழ் சினிமா ஸ்டுடியோக்களின் ஒரு கால கட்டத்தைப் பதிவு செய்ய அந்தக் கால சினிமா ஏடுகளை தேடி கடந்த சில ஆண்டுகளாக அலைந்தேன். எனக்கிருந்த குறுகிய கால அவகாசத்தில் நண்பர் முத்தைய்யா வெள்ளையனின் உதவியுடன் பல நூலகங்களை அணுகினேன். சினிமா உலகம், குண்டூசி, ஆடல் பாடல், பேசும் படம் மற்றும் நாமறிந்த பிரபல விகடன், குமுதம், கல்கி போன்ற சஞ்சிகைகளுடன் எம்கேடி பற்றிய மிக முக்கியமான புத்தகத்தை எழுதிய சுரெஷ் பாலகிருஷ்ணன் அவர்கள் உதவியுடன் டாக்-எ-டோன் என்ற பத்திரிக்கையையும் அலசி ஆராய்ந்தேன். ஆயினும் தமிழ் சினிமா வரலாற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுபவரும் அதை மீட்டெடுக்க தொடர்ந்து செயல் பட்டு வருபவருமான அறந்தை மணியன் அவர்கள் பட்டியலிட்டிருக்கும் சஞ்சிகைகளை வைத்துப் பார்க்கும்போது நான் ஆராய்ந்தது ஒரு சிறு துளியே என்பது புலனாகிறது.
|
மணியன் அவர்களின் தமிழ் சினிமா வரலாற்றைக் கருதி நினைவிலிருந்தும் ஆய்விலிருந்தும் எழுதியிருக்கும் "தமிழ் சினிமா சஞ்சிகைகள்" (பேசாமொழி 18 [15-30ஜூலை/ஆனி 2014]) என்ற இக்கட்டுரை பாராட்டுக்குரியது--என்றும் என் நன்றிக்குரியது.
மணியன் அவர்கள் விஜயா-வாகினி ஸ்டூடியோவின் பதிப்பகம் சார்ந்த வெளியீடான பொம்மை பத்திரிக்கையில் இருபது வருடங்கள் வெவ்வேறு விதங்களில் பணியாற்றியிருக்கிறார் எனபதும் இங்கு நினைவுகூறத்தக்கது. "அந்த நாளும் வந்திடாதோ" என்று அன்றைய கலைஞர்களின் பங்களிப்பை அன்றே தொடராக பதிவு செய்திருக்கிறார். விகடன் பிரசுரம் மூலமாக மணியன் அவர்கள் பதிவு செய்துள்ள வசனகர்த்தாக்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் தமிழ் சினிமா மாணவர்களுக்கு முக்கியமானது. ஒரு வகையில் பார்க்கப் போனால் வரலாற்றை மீட்டுருவாக்கம் செயவதும் சொன்ன கதையையே புதுமையாகவும் காலத்திற்கேற்ப சொல்வதும்தானே சினிமா.
அந்த வகையில் நண்பர் யமுனா ராஜேந்திரனுடனான மதிப்பிற்குரிய தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் பாஸ்கரன் அவர்களின் நேர்காணலை மையமாக கொண்டுள்ள இதழில் அறந்தை மணியன் அவர்களின் கட்டுரை வந்துள்ளது பொருத்தமானதே. பி.கே. நாயர், பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று விரியும் சினிமா வரலாற்றிக்காக உழைத்த ஜாம்பவான்களின் நினைவலைகளின் படிமங்களுக்கு மணியன் அவர்களின் தொகுப்பு மெருகேற்றுகிறது. மாணவர்கள் அறந்தை மணியன் அவர்களின் சினிமா சார்ந்த அறிவையும் அனுபவத்தையும் (ஞான ராஜசேகரன் அவர்களின் ராமானுஜன் வரை விரியும் அவரது தொழில்முறை பங்களிப்பையும்) பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது பெருமதிப்பிற்குரிய மருது அவர்களின் காண்பியலை மையமாக கொண்ட கட்டுரைகளும், சினிமா சார்ந்த மொழிபெயர்ப்பில் புதிய எல்லைகளைத் தொடும் ஆனந்த் (ஹெர்ஜாக்) அவர்களின் தொடரும் பாராட்டுக்குரியவை.
மிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால் இளம் எழுத்தாளர்கள், ராஜேஷ், தினேஷ் குமார், யுகேந்தர், ஜெயசந்திர ஹாஸ்மி, கார்த்திக் பாலசுப்ரமணியன், அருண் மோகன், வருணன் போன்ற பலரின் முயற்சிகளை பற்றிச் சொல்ல வேண்டும். அதைப் பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன்.
அன்புடன்,
சொர்ணவேல்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |