இதழ்: 13     பங்குனி -2014 (March)
   
 
  உள்ளடக்கம்
 
மராத்தி சினிமா - ஷாந்தா கோகலே

--------------------------------

கமல்ஹாசன் - நேர்காணல் - ஆர்.விஜய சங்கர் மற்றும் ஆர்.இளங்கோவன்

--------------------------------
தமிழ்ஸ்டூடியோவின் புகைப்படக்கண்காட்சி - தினேஷ் குமார்
--------------------------------
இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஆறாம் ஆண்டு தொடக்க விழா - தினேஷ் குமார்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 2 - S. ஆனந்த்
--------------------------------
கல்வித்துறை ஆய்வுகளும் ஜனரஞ்ஜக சினிமாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
young and beautiful - தமிழில்: தினேஷ் குமார்
--------------------------------
பாலு மஹேந்திரா சில ஞாபகக் குறிப்புகள் - ரவிசுப்பிரமணியன்
 
   

   

 

 

இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்

- யமுனா ராஜேந்திரன்

தமிழ்ப் பிரச்சினை குறித்து மட்டும் சிங்கள திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமா மூன்று திரைப்படங்கள் இயக்கியிருக்கிறார். இது எனது சந்திரன் (This is My Moon - 2001), இந்த வழியால் வாருங்கள் ( Come Along This Way - 2002) மற்றும் இனி அவன் ( Him, Here After - 2012) போன்றன அப்படங்கள். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் உக்கிரமாகச் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தை இது எனது சந்திரன் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் இந்த வழியால் வாருங்கள் படத்தின் கதை நடக்கிறது. இனி அவன் திரைப்படம் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பான யாழ்ப்பாணத்தைக் கதை நிகழிடமாக எடுத்துக் கொள்கிறது.

யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து எடுக்கப்பட்ட, முள்ளிவாய்க்காலின் பின்னான முள்வேலி முகாம் விளைவுகள் குறித்து தமிழர்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட முதல் முழுநீளத்திரைப்படம் என இனி அவன் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். ஹந்தகமாவின் முதலிரண்டு திரைப்படங்கள் சிங்கள மொழிப்படங்களாக இருக்க இனி அவன் திரைப்படம் முழுமையான தமிழ்மொழித் திரைப்படமாக இருக்கிறது. தமிழ்க்கலைஞர்களும் யாழ்ப்பாண மக்களும் பங்கேற்க இனி அவன் திரைப்படம் உருவாகியிருக்கிறது.

வன்முறை அரசியல் சூழலில் வாழ நேர்ந்த ஓரு கலைஞன் அவனது முதல் தேர்வாகஒடுக்கப்பட்ட மக்களின் உவியல் அமைவுக்குள் வாழ்வதன் வழியில் தனது விமோசன அரசியலை அல்லது கலாதரிசனத்தை முன்வைக்கலாம். பிறிதொரு வழிமுறையில் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் ஒடுக்கும் சமூகத்தினுள் விதைக்கும் குற்றஉணர்வின் அடிப்படையில், அவர் சார்ந்த சமூகத்தினள் ஏற்படும் விளைவுகளை உருக்கமாக முன்வக்கலாம். அவர் சார்ந்த சமூகம் குறித்த கடுமையான விமர்சனங்களை அவர் இதன் மூலம் முன்வைக்க முடியும். சிங்களக் கலைஞர்கள் பெரும்பாலும் இந்த இரண்டாவது பாதையையே தேர்ந்து கொள்கிறார்கள். முப்பது ஆண்டுகள் நீண்ட ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ராணுவம் எனும் அமைப்பு மானுட அவலம் எனும் அளவில் சிங்கள சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளையே பெலும்பாலுமான சிங்களக் கலைஞர்கள் தமது திரைப்படங்களில் முன்வைத்திருக்கிறார்கள்.

ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உளவியலுக்குள் நின்று இனப்பிரச்சினையைப் பார்த்த சிங்களத் திரைக்கலைஞர்கள் என எவரும் இல்லை என்றே என்னால் சொல்ல முடியும். இனப் பிரச்சினை குறித்து குறிப்பிடத்தக்க திரைப்படங்களைக் கொடுத்த பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தரா, அசோக ஹந்தகமா போன்ற மூன்று திரைக்கலைஞர்கள் குறித்த எனது அறுதியான மதிப்பீடும் இதுதான்.

தாம் சார்ந்த சிங்கள சமூகத்தில் ராணுவமயமாதல் என்பது எவ்வளவு குரூரமான அழிவை விளைவித்திருக்கிறது என்பதை இந்தக் கலைஞர்கள் உக்கிரமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் எவ்வளவு அவமானகரமாகச் சிங்கள மக்களின் உளவியல் இழிந்திருக்கிறது என அவர்களது திரைப்படங்கள் சொல்கின்றன. மனிதர்கள் எனும் அளவில் இந்த ராணுவமயமாதல் தமது வெகுமக்களுக்கிடையில் ஏற்படுத்திய வேதனைகளை அவர்கள் தமது படைப்புக்களில் முன்வைத்திருக்கிறார்கள். விதானகேவின் பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் ( Death In A Fullmoon Day) மற்றும் ஆகஸ்ட்டுச் சூரியன் (August Sun), விமுக்தி ஜயசுந்தராவின் கைவிடப்பட்ட நிலம் (Forsaken Land), ஹந்தகமாவின் இது எனது சந்திரன் போன்ற படங்கள் இப்பிரச்சினைகளைத்தான் பேசின.

சிங்கள ராணுவமயமாதலும் வன்முறையும் வன்பாலுறவும் வடக்கு-கிழக்கு சமூகத்தினுள் ஏற்படுத்திய பாதிப்புக்களை, வடக்கு-கிழக்கு நிலஅமைவைக் கொண்டு சிங்களத் திரைக்கலைஞர்கள் ஒரு போதும் சித்தரித்ததில்லை. இவர்கள் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் பிரசன்னன்மும் விளைவுகளும் குறித்துப் பேசாமைக்கான காரணங்களும் இலங்கை அரசியல் கூ+ழலில் வலுவாக இருக்கிறது. ராணுவத்தை விமர்சித்ததற்காக இக்கலைஞர்கள் அரசினாலும் ராணுவத் தளபதிகளாலும் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசவிரோதிகள் எனவும் பயங்கரவாத்தோடு சேர்ந்து செயல்படுபவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாகவே இவர்களுக்கு அரசினால் உயிராபத்தும் இருந்தது. அரசின் அச்சுறத்தலின்றி படைப்புச் சுதந்திரம்; இலங்கையில் நிலவியிருக்க முடியுமானால் கென் லோச் எனும் ஸ்காட்லாந்தின் மகத்தான கலைஞன் இதில் இவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்க முடியும். வட அயர்லாந்துப் பிரச்சினை, நிகரகுவப் புரட்சி, வட அமெரி;க்கக் குடியேறிகளின் வாழ்வு, பெர்லின் சுவர் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய அகதிகள், இங்கிலாந்திற்குக் குடியேறிய பாகிஸ்தானிய மக்கள் என உலக நாடுகளின் எல்லைகள் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலுக்குள் சஞ்சரித்துத் திரைப்படங்களை வழங்கிய உன்னதக் கலைஞன் அவன்.

இனி அவன் திரைப்படம் முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது இலங்கை ராணுவத்தினால் பிடிக்கப்பட்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு ‘விடுதலை’ செய்யப்பட்ட ஒரு முன்னாள் விடுதலைப்புலிப் போராளியின் கதையைச் சொல்கிறது. மறுவாழ்வு மையத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்துவிட்டு, முன்னாள் போராளி யாழ்ப்பாணம் திரும்பும் பேருந்துப் பயணத்துடன் படம் துவங்குகிறது. யுத்தத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என இலட்சம்பேர் கொல்லப்பட்டதாக படத்தின் முன்வரிகள் தோன்றி மறைகின்றன. அவனது கிராமத்திற்கு வரும் அவனை கிராமத்துச் சிறுவர்கள், சிறுமியர், ஆண்கள், பெண்கள் முதியவர்கள் என அனைவருமே பயத்துடன், அசூசையுடன், வெறுப்புடன், கோபத்துடன்பார்க்கிறார்கள். அவனைக் கண்டவுடன் சிலர் விலகிப் போகிறார்கள். எண்ணற்ற விதவைகள், தமது புதல்வியரையும் புதல்வர்களையும் இழந்து நிர்க்கதியான முதியவர்கள், தமது தந்தையரை இழந்த குழந்தைகள், இதனோடு வேலையின்மைப் பிரச்சினை. இதுதான் இன்று ஹந்தகமா நமக்குக் காட்டும் யாழ்ப்பாணம்.

இவனது வருகை இரண்டு குடும்பங்களில் உடனடியான எதிர்விணையை உருவாக்குகிறது. இவனைக் காதலித்து, இவனுடன் இயக்கத்துக்போக விரும்பிய, கட்டாய ராணுவப் பயிற்சிக்கு விடுதலைப் புலிகளால் பிடித்துப்போகாமல் தடுப்பதற்காக இளம்வயதில் முதியவருக்கு மணம் செய்விக்கப்பட்டு உடலுறவின் பின் முதலிரவில் கணவன் மரிக்க விதவையான பெண்ணின் வீட்டில் பிரச்சினை வெடிக்கிறது. அவளுக்கு இப்போது ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. அவள் தனது காதலனோடு போய்விட விரும்புகிறாள். கீழ்சாதி நாயான அவனுடன் தனது மகள் போக ஒரு நாளும் தான் அனுமதிக்க மாட்டேன் என்கிறார் தகப்பன். பிறிதொரு குடும்பத்தில் தமது மூன்று புதல்வரும் மரணமெய்த நிர்க்கதியாக நிற்கிறார்கள் முதியவயதுப் பெற்றோர். அந்த மூன்று புதல்வர்களையும் கட்டாயமாக விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவன்தான் இப்போது தனது கிராமம் திரும்பியிருக்கும் முன்னாள் போராளி. தனது புதல்வர்களின் மரணத்திற்குக் காரணமான அவன்மட்டும் வீடு திரும்பியிருப்பதைச் சபிக்கிறார் முதியவர். அவன் வீட்டு வாசலுக்கு வந்து மண்ணள்ளி அவனைத் தூற்றுகிறார் அவர்.

இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் உடனடியாக ஒரு வேலை. வாகனம் ஓட்டத் தெரிந்த, வாகன சாரதியாக விரும்பும் அவன் அதற்கான உரிமம் எடுப்பதற்காக அதற்கான அலுவலகத்தை நாடிச் செல்கிறான். உரிமத்திற்கு இருபதாயிரம் ரூபாய்கள் கொண்டுவருமாறு அலுவலர் கோருகிறார். அவனிடம் எதும் காசு இருக்கவில்லை. அந்தக் கிராமத்துக் கடைக்காரரிடம் காசு கேட்கிறான். கப்பம் கேட்கிற காலமெல்லாம் போய்விட்டது என அவர் நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிவிடுகிறார். அவனது தாய் வீட்டின் பின்புறம் புதைத்துவைத்த நகையைத்தோண்டியெடுத்து அதனை விற்று வாழ்வைத்தொடங்குமாறு சொல்கிறார். இதற்குள் தனது காதலியைக் குழந்தையுடன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டிருக்கிறான். நகையை விற்க கடைகடையாக ஏறி இறங்குகிறான். பெரும்பாலமானவர்கள் அவனதுதாயின் பாரம்பர்ய நகையை திருட்டு நகையைத் தாம் வாங்குவதில்லை என மறுத்து விடுகிறார்கள். ஓரு கடையில் அது பாதுகாவலனுடனான கைகலப்பாக ஆகிறது. அவனது கோபம் அங்கு அவனுக்குப் பாதுகாவலன் உத்தியோகத்தைப் பெற்றுத்தருகிறது.

இதனது விளைவுகள் அவன் எதிர்பார்த்திராத திருப்பங்களில் அவனைக் கொண்டு சேர்க்கிறது. அவனால் வேளையிழந்த மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான, இவனால் வேலையிழந்த முன்னால் பாதுகாவலனும் அவளது மனைவியும் இவனைத் தேடித்தேடித் துரத்துகிறார்கள். வேலையிழப்புக்குக் காரணமான அவன் தமது குடும்பத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமென அக்குடும்பத்தின் பெண் அவனை நிர்ப்பந்திக்கிறாள். கடை வாசலில், கோவில் முன்றிலில், அவனது வீட்டு வாசலில் என அவனைத் தொடர்கிறாள். அவளைக் கண்ணுறும் நகைக்கடை முதலாளியும் இவனது எஜமானனுமான கறுப்புக் கண்ணாடி போட்ட கடத்தல்காரன் வழித்துணைக்கு அப்பெண்ணைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோருகிறான். அவன் மறுக்கும்போது, இத்தொழிலில் கட்டளைகள்தான் உண்டு, மறுப்புக்கு இடமில்லை, தலைவர் சொன்னதை நீ மறுத்துப் பேசினாயா என்ன?எனக் கேட்கிறான். கைத்துப்பாக்கி கொடுத்து கடத்தல் தொழிலுக்கு அவனை அனுப்பிவிட்டு, அங்கு தங்கியிருக்கும் பிறரைச் சந்தோசப்படுத்த பெண்ணை அங்குவிட்டுசு செல்லுமாறும் கோரப்படுகிறான். பெண்ணை வீட்டுக்கு இட்டுச் செல்ல அவன் விரும்ப, பெண் அதனை மறுத்து அங்கு தங்குகிறாள். அவனது கடத்தில் பயணம் தொடர்கிறது….

கொடுத்த வேலையை முடித்து அவன் முதலாளியின் இருப்பிடம் திரும்புகிறபோது அவ்விடத்தில் தனது முன்னாள் இயக்கச் சகாவும், பிறதிரு சந்தர்ப்பங்களில் இனது எதிர்காலத் திட்டம் குறித்து உரையாடியவனும், இவனால் உதாசீனிக்கப்பட்டவனும் ஆனவன் முதலாளியோடு அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறான். இந்தச் சகாவும் சேர்ந்துதான் இப்போது கடத்தல் தொழில் நடைபெறுகிறது என்பது அவனுக்குத் தெரியவருகிறது. இவனது முன்னாள் சகா இவனை இருமுறை சந்திக்கிறான். இவர்கள் இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பது காட்சியமைப்பில் திட்டவட்டமாகத் தெரிகிறது.

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினான அவன் இப்போது கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பி வந்திருக்கிறான். இவனை அவன் விரும்பும் தொழிலில் ஈடுபடுத்துவது அவன் திட்டம். பிறிதொரு முறை கோவில் மைதானத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். கனடாவிலிருந்து வந்தவன் நீ இனி என்ன செய்யப் போகிறாய் என கதாநாயகனான முன்னாள் போராளியைக் கேட்கிறான். எங்கள் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு உங்களுக்கு வெளிநாடு போகக் கடவுச் சீட்டு பெற்றவன்தானே நீ என பதிலிறுத்துவிட்டு அவனை நிராகரித்துவிட்டுப் போகிறான் கதாநாயகன். இப்போது இவனுக்கு இரண்டு பெரிய உண்மைகள் துலக்கமாகத் தெரிகின்றன. முன்னாள் விடுதலைப் புலிகளினாலும் இன்னாள் நவ முதலாளிகளாலும் நடத்தப்படும் கடத்தலின் பங்காளி தான் என்பது இவனுக்குத் தெரிகிறது. தான் அழைத்துவந்த பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதும் இவனுக்குத் தெரியவருகிறது. அந்தப் பெண்ணை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அவன் உணர்கிறான்.

வீட்டிற்குப் புறப்படும் வேளையில் அவனிடம் முதலாளியினால் தரப்பட்ட கைத்துப்பாக்கியை அவனிமிருந்து திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். கனடாவிலிருந்து வந்தவன் இவனது அருகில் வந்து சொல்கிறான். நீ இதனை புதிய வாழ்க்கை என நினைத்தாய் இல்லையா? இல்லை, இது புது சந்தர்ப்பம், நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய இன்னொரு சந்தர்ப்பம் என்கிறான் அவன். தனது வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்த தானியங்கித் துப்பாக்கியைத் தேடிப்போகிறான் முன்னாள் போராளி. அது அங்கு இல்லை என்பதறிந்து திடுக்கிடுகிறான். சமநேரத்தில் அவனைத்தேடி மோட்டார் சைக்கிளில் வரும் இரு இளைஞர்கள் துப்பாக்கியுடன் அவனைத் தேடுகிறார்கள். தொடர்ந்து வெடிக்கும் தானியங்கித் துப்பாக்கியின் ஒசை கேட்டு அவர்கள் ஓடிப்போகிறார்கள். அவனது மனைவிதான் துப்பாக்கியை இயக்கியவள். அவனுக்கு முன்னதாகவே அவள் துப்பாக்கியை அங்கிருந்து அகற்றி வீட்டில் மறைத்து வைத்திருக்கிறாள். வெற்றுத் தானியங்கித் துப்பாக்கி மட்டுமே இப்போது மிஞ்சியிருக்கிறது. வந்த இளைஞர்கள் விட்டு ஓடிப்போன மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தான் விட்டு வந்த பெண்ணைத் தேடிப்போகிறான் முன்னாள் போராளி.

வாசலை அண்மித்துக் கொண்டிருக்கும்போது வெள்ளை வான் அந்த வளாகத்திலிருந்து புறப்பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது. வேகமாகச் செல்லும் வாகனத்தை அவனால் நெருங்கமுடியாது பின்தங்கும்போது ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து புழுதியில் வீசப்படுகிறாள் பெண். வாகனம் ஓடி மறைகிறது. ஓடிச்சென்று அவளை மடியில் ஏந்துகிறான். அவள் கடைவாயில் இரத்தம் வழிய அவன் மீது தழைகிறாள். இப்போது அவளை அவன் வீடு கொண்டு சேர்க்க வேண்டும். மோட்டார் சைக்கிள் வேலை செய்யவில்லை. அதனை இயக்க அவன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவள் கெக்கலியிட்டுச் சிரித்தபடி அவனை நையாண்டி செய்தபடியிருக்கிறாள். இனி எதுவும் இழக்க இல்லாத அவளுக்கு, எப்படியும் வாழவேண்டும் எனும் நம்பிக்கையை மட்டும் விடாப்படியாகக் கொண்டிருக்கிற அவளுக்கு, இப்போது உரத்துச் சிரிக்க மட்டுமே தெரிகிறது. வல்லுறவுகளைக் கூட அவள் இயல்பாக ஏற்கிறாள் அல்லது தேடிச் சென்று அதற்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறாள். இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் குறித்த ஹந்தகமாவின் சித்திரம்.

அவளை அவளது வீடுசேரப்பித்துவிட்டு கதாநாயகன் தனது வாகனத்தைத் திருப்பும்போது கமெரா வானில் உயர்ந்து நெடிதுயரந்த பனைமரங்களைக் காண்பிக்கிறது. இனி அவன் எனும் எழுத்துக்கள் தோன்றப் படம் முடிகிறது.

அரசியல் அல்லாத ஆண்பெண் உறவு குறித்த ஹந்தகமாவின் கனல் தகிக்கும் சொல் (Aksharya - 2005)படம் முதல் இனி அவன் போன்ற அரசியல் படம் வரையிலுமான அவரது நான்கு படங்களில் அவர் மனிதர்களையும் வாழ்வையும் எவ்வாறு அணுகுகிறார் என்பது குறித்தவொரு சித்திரத்தை என்னால் அவதானிக்க முடிகிறது. அவரது திரைப்படங்களை நாடகபாணி சினிமா எனவோ அல்லது யதார்த்தவாத சினிமா எனவோ சொல்லமுடியாது. வரலாறு-தனிதர்கள்-அவர்தம் பாலுறவு வேட்கைகள் எனும் முப்பரிமாணத்தை அதீத எல்லைகளுக்கு நகர்த்திச் சென்று சித்தரிப்பது அவரது திரைப்படச் சொல்நெறி. இந்த அதீதம் என்பது யதார்த்தத்தில் வேர்கொண்ட, ஆனால் யதார்த்தம் அல்லாத, யதார்த்தம் கடந்த நாடகத்தன்மை கொண்ட சொல்நெறி. இதனை மீயதார்த்தம் என்று சொல்வது அவரது பாணியை அவ்வாறே பற்றிப்பிடிக்கிறது என்று சொல்ல முடியாது. அவரது பாணியைஒரு கருத்தாக்கம் அல்லது கருத்தமைவை அடிப்படையாகக் கொண்ட தொடர் உருவகம் என நாம் வரையறுக்கலாம்.

வல்லுறவுக்கு உள்ளான ஈழப்பெண் வல்லுறவு புரிந்த சிங்கள ராணுவத்தினன் பின் போவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதா என்பதற்கு அப்பால் அப்படிப் போவாளானால் என்ன நேரும் என்பதை கருத்தாக்க அளவில் சித்தரித்தால் என்ன நடக்கும் என ஹந்தகமா யோசிக்கிறார். இதை ஏன் கருத்தாக்கத்திற்குள் கொணர வேண்டும்? ஆண்பெண் பாலுறவு, தமிழ்ப் பெண் உடலின் மீதான சிங்கள ஆண் உடலின் ஆதிக்கம் எனும் கருத்தமைவுக்குள் ஹந்தகமா தனது கருத்தாக்கத்திற்கான நியாயங்களைத் தேடுகிறார். தமிழ்ப் பெண்களின் மீதான சிங்கள ஆண்களின் உடலாதிக்கத்திற்கு அரசியல் வன்மம் தோதாக அமைகிறது எனும் முடிவுக்கும் அவர் வந்து சேரலாம். இது எனது சந்திரன் படத்தில் கண்ணில் படுகிற சிங்கள ஆண்கள் எல்லோரும் தமிழ்ப் பெண்ணை வல்லுறவுக்கு ஆட்படுத்துகிறார்கள் அல்லது தமிழ்ப்பெண் எந்த அடிப்படையான யதார்த்த நியாயங்களும் அற்று தனது பெண்ணுறுப்பைத் திறந்து தானாகவே சிங்கள ஆண்களுக்குத் தருகிறாள்.

தமிழர் உளவியலில் சிங்கள ஆண்களின் பாலியல் வல்லுறவுக்கு எதிராக அல்லது தமது ஆளுமையை நிறுவிக்கொள்ள பெண் போராளிகளின் படையையே தமிழ் இயக்கங்கள் கொண்டிருந்தன. பெண் தற்கொலைப் போராளிகளை நம்மால் ஹந்தகமாவின் படங்களில் காணமுடியவில்லை. மாறாக எல்லா சிங்கள ஆண்களுக்கும் தனது உறுப்பைத் திறந்து காண்பிக்கிற தமிழ்ப்பெண்ணையே காணமுடிகிறது. இருவேறு எல்லைகளில் தமிழ்ப் பெண்களில் ஹந்தகமாவின் தேர்வு ஏன் இரண்டாவது வகையில் அமைகிறது என்பது நிஜத்தில் தேடுதலுக்கு உரியது. கனல் தகிக்கும் சொல் படத்தில் அருங்காட்சியகத்தில் நடக்கும் பாலியல் வல்லுறவின் பின் வல்லுறவில் ஈடுபட்டவனுடனான வல்லுறவுக்கு உள்ளான பெண்ணின் நிதானமான உரையாடல், தனது சொந்தவீட்டை விட்டுவர மறுத்து கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தனது பாழடைந்த வீட்டுக்குள் சென்று அணையும் இந்த வழியால் வாருங்கள் யாழ்ப்பாண முஸ்லீம் முதியவர், வன்பாலுறவு கொண்ட சிங்கள ராணுவத்தினன் பின்னால் அவனது கிராமத்துக்குப் போகும் இது எனது சந்திரன் தமிழ்ப் பெண், திட்டமிட்டு வன்முறைக்குத் தன்னை ஓப்புவித்துக் கொள்வதோடு, வல்லுறவையும் நகைதுதும்ப ஏற்கும் இனி அவன் யாழ்ப்பாணப் பெண் போன்ற ஹந்தகமாவின் திரைப்பாத்திரங்கள் தம்மைச் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கும் வன்முறையில் வேர்கொண்ட, ஆனால் அதனது விளைவுகளின் அதீத எல்லைகளில் சஞ்சரிப்பவர்களாகவே உருவாகியிருக்கின்றனர்.

படத்தினுள் முன்னாள் போராளிக்கும் நகைக்கடை முதலாளிக்கும் நடக்கும் உரையாடலில் யாழ்ப்பாணத்து மக்கள் தாம் தவறவிட்ட வாய்ப்பை விரைவில் கைப்பற்றிவிட நகரம் வேகமாக இயங்குகிறது எனும் அவதானம் முன்வைக்கப்படுகிறது. படம் குறித்த நேர்காணல்களிலும் கூட பயங்கரவாதம் - ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம் எனவே ஹந்தகமா குறிப்பிடுகிறார் ((Sunday Observer, 27 May 2012 : Interview with Anuratha Kodagoda) - முடிவுக்கு வந்தபின்னாலும் இலங்கையின் தெற்கில் ஏற்கனவே இருப்பது போல முதலாளித்துவ தாராளவாதத்தின் பெருபேறுகள் இன்னும் வடக்கு-கிழக்கைச் சென்று சேரவில்லை, குறிப்பாக அடித்தட்டு மக்களைச் சென்று சேரவில்லை என அவர் குறிப்பிடுகிறார். ஹந்தகமாவுக்கு மாறாக பிரசன்ன விதானகேவும் இனோகா சத்யாங்கினியும் தாராளவாத முதலாளித்துவத்தின் திறந்த சந்தையும் சுதந்திர வர்த்தக வலயங்களும் சிங்களப் பெண்களின் வாழ்வின் மீது மேற்கொண்டிருக்கும் ஈவிரக்கமற்ற வன்றையையும் பாலுறவுச் சுரண்டலையும் தமது பௌர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் மற்றும் காற்றுப் பறவை (The Wind Bird - 2004) படங்களில் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்கள். சிங்கள ராணுவம் எனும் அமைப்பு தெற்கின் இளைஞர்களின் மீதும் யுவதிகளின் மீதும் செலுத்தியிருக்கிற உளவியல் பாதிப்புக்களையும் அவர்கள் சித்தரித்திருக்கிறார்கள்.

இலங்கை ராணுவம் எனும் வன்முறை இயந்திரம் தெற்கிலும் வட-கிழக்கிலும் செலுத்தும் பாத்திரமும் அது குறித்த வேறுபட்ட பிரதேச மக்களின் அனுபவங்களும் புரிதலும் வித்தியாசமானவை. தெற்கில் ராணுவம் ஒரு தொழில்துறை. பாலுறவுச் சந்தைக்கான பெரும் நுகர்வுக் கூட்டம். தேசபக்தியின் உருவம் மற்றும் வீரத்தின் உருவகம். வடக்கு கிழக்கு மக்களுக்கு அவர்கள் இவ்வாறான எந்தப் பண்புகளும் அற்றவர்கள். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். வல்லுறவு புரிபவர்கள். அந்நியர்கள். மக்களது வாழ்வின் சகல தளங்களையும் கட்டுப்படுத்தும் வன்முறை இயந்திரத்தின் திருகாணிகள் அவர்கள். இந்தப் பரிமாணம் தமிழர் பிரதேசங்களுக்கள் வந்து திரைப்படம் உருவாக்காதவரையிலும், தமிழர்களின் உளவிலுக்குள் நுழையாத வரைக்கும் சிங்களக் கலைஞர்களுக்கு எந்தவிதமான படைப்பு சார்ந்த நெருக்கடியையும் கொடுக்க வேண்டிய அசியமில்லை. பிரசன்ன விதானகே வடக்கிலுள்ள தமிழ்த் திரைப்படக்கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தார் எனும் செய்தியை முன்வைத்துப் பார்க்கிறபோது சிங்களத் திரைபமபடக் கலைஞர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டிரகக் கூடமு; எனினும், இலங்கையில் நிலவிய ராணுவமய, ராணு அதிகாரச் சூழலில் அவர்கள் அதனை நிச்சயமாகச் செயல்படுத்தயிருக்க முடியாது.

இன்றைய வடக்கின் யதார்த்தம், குறிப்பாக யாழ்ப்பாண யதார்த்தம் சிங்கள ராணுவமயமாக்கம் என்பது உள்ளுர் அரசியல்வாதிகள் முதல் உலக மனித உரிமை நிறுவனங்கள் வரை அக்கறைக்குரிய ஒரு விடயமாக இருக்கிறது. காட்சிரூபம் எனும் அளவில் சிங்கள ராணுவத்தின் பிரசன்னம் என்பதும் மக்களின் மீதான அவர்களது கண்காணிப்பு என்பதும் ஹந்தகமாவின் இனி அவன் படத்தில் துப்புரவாகவே இல்லை என்பது ஒரு சிக்கலான விசயமாகவே இருக்கிறது. சிங்கள நிலப்பரப்பை வைத்து இது எனது சந்திரன் படத்தினை எடுத்த ஹந்தகமா படத்தின் முழுமையையும் ராணுவத்தின் பரவல் ஒரு சிங்கள குக்கிராமத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைச் சுற்றியே அமைத்துக் கொண்டிருந்தார். ராணுவத்திலிருந்து ஓடிவந்தவன். ராணுவத்தில் சேர்வதையே இலட்சியமாகக் கொண்ட மாணவன். திருமணப் பதிவுசெய்த நிலையில் காதலியைக் கர்ப்பிணியாகவிட்டு மரணமுற்ற ராணுவத்தினன். தாயை நிர்க்கதியாகவிட்டு மரணமுறும் இளைய ராணுவவீரன். சிங்கள நிலப்பரப்பினுள் பெயர்த்து வைக்கப்படும், தொடர்ந்து வல்லுறவுக்குள்ளாகும் தமிழ்ப் பெண் என சிங்கள ராணுவம் என்பது ஒரு தொழில்துறையாகவும், அதற்காக மரணமுறும் இளைஞர்களது வாழ்வை முகாரியின் சோகத்துடனும் சித்திரித்த ஹந்தகமா ஒரு அரசியல் யதார்த்தமாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் ராணுவத்தின் பிரசன்னமும் அதனது விளைவுகளும் குறித்து அருவமாகக் கூட இனி அவனில் காட்சிப்படுத்தாமை படத்தின் சமநிலையை நிஜத்தில் குலைத்துவிடுகிறது. பின் முள்ளிவாய்க்கால் யதார்த்தம் இதுதானா எனும் கேள்வியையும் முன்வைக்கிறது.

இன்றைய யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளோ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ ஆட்சியில் இல்லை. கிரீஸ் பூதம், மாற்று அரசியலாளர்கள் கடத்தல், பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல், கழிவு எண்ணைத் தாக்குதல், அரசின் விமர்சகர்கள் மீதான தாக்குதல் அனைத்தும் ராணுவத்தின் கண்காணிப்பில், அரசின் அனுசரனையாளர்களால்தான் நடத்தப்படுகிறது. இந்த நிலைமையில் இது குறித்த சுவடுகள் கூட படத்தில் இல்லாமல், முன்னாள் விடுதலைப் புலிகளால் அரசின்-ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி அவர்கள்தான் தாராளவாத முதலாளிகளோடு சேர்ந்து கடத்தல் முன்னெடுக்கப்படுகிறது என்பது தர்க்கத்துக்கோ யதார்த்தத்துக்கோ உகந்த சித்தரிப்பாக இல்லை. ஓரு பகுதி முன்னாள் விடுதலைப்புலிகள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள். புலிகள் அல்லாதவர்கள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள். ராணுவத்துடன் இணைந்து செயல்படும் இவர்கள் மட்டுமே அங்கு எதனையும் செய்ய முடியும். தரவுகளும் நிதர்சனமும் இதனையே உறுதி செய்கின்றன.

ஓரு படைப்பு யதார்த்தப் படைப்பாக மெய்மையைத் தீண்டுவதாக ஆவது என்பது யதார்த்தமான தெருக்களையும்; சீதோஷ்ண நிலைமையையும் உடுப்புகளையும் வியர்வையையும் குடிசையையும் பனை மரங்களையும் அசலான வட்;டார மொழியையும் உள்ளுர் மனிதர்களையும் சிற்சில சமூக முரண்களையும் கச்சிதமான காட்சிரூப மேதமையுடன் பாவிப்பதாலும உருவாகுவதுதூன். துரதிருஷ்டவசமாக கலைப்படைப்பில் மெய்மை என்பது ‘குறிப்பிட்ட’ நிலப்பரப்பில் வாழ நேர்ந்த ‘குறிப்பிட்ட’ மனிதர்களுக்கு இடையிலான உறவிலும்; முரணிலும் மோதலிலும் வெளிப்படும் மெய்மையும்கூடத்தான்.

படைப்பின் அரசியல் முழுமை குறித்த தயக்கங்கள் இருப்பினும் மிகமுக்கியமான வரலாற்றுக் காரணங்களுக்காகவும் நித்தியமெய்மை சார்ந்த காரணங்களுக்காகவும் ஹந்தகமாவின் இனி அவன் திரைப்படம் திரும்பத்திரும்பப் பேசப்படும். பின் முள்ளிவாய்க்கால் காலம் குறித்து வெளியான முதல் முழு நீளத் திரைப்படம் இனி அவன்தான். முதல் ஈழத் தமிழ்ப்படமான பொன்மணி ஒரு சிங்களக்கலைஞரால் இயக்கப்பட்டதைப்போல, ஈழத் தமிழ் வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு தருணத்தை முதன்முதலாக ஒரு சிங்களக்கலைஞர் வெளிப்படுத்தியிருப்பது ஈழத் திரைவராலற்றில் முக்கியமானதுதான்.

புரட்சி வெற்றிபெற்ற சமூகங்களிலும் சரி, புரட்சி தோல்வியுற்ற சமூகங்களிலும் சரி அந்தப் புரட்சியில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள், ஆண்களாகவும் பெண்களாகவும் பொதுச்சமூகத்தில் இணைவதில் மிகப்பெரும்சிக்கலையும் பொதுச்சமூக ஒதுக்கத்தையும் எதிர்கொள்கிறார்கள். இப்பிரச்சினையை ஆண் போராளிகளை விட பெண் போராளிகளே எதிர்கொள்கிறார்கள். மரபான குடும்ப வாழ்வு, சுமூக சமூகத்தில் நிர்வாக வேலைகள் போன்றன அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. மரபான சமூகத்தில் அவர்களது பாலுறவுப் பாத்திரமும் ஆண்சமூகத்தினால் தமக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. பெண் போராளிளை மட்டுமல்ல முகாமுக்கு முகாம் அலைந்து திரிந்து மிகக்கடுமையான இருத்தலியல அவலங்களை எதிர்கொள்ளும் பொதுச்சமூகப் பெண்களும் இவ்வாறான நிலைமையையே எதிர்கொள்கிறார்கள். இதிலும் அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கப் போராளிகளும், பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை கூடுதலான அவலத்திற்கு ஆளாகிறது. வேலையின்மை நிலவும் ஒரு சமூகத்தில் பெண்கள் குடும்பத்தைக் காக்க இரந்து வாழும் நிலைமைக்கும், வருமானத்திற்காக பாலியல் தொழிலை இயல்பாக ஏற்கவும் துரத்தப்படுகிறார்கள். அவர்கள் எதிர்கொண்ட் நீண்ட கடினமான வாழ்வு இத்தகைய உளவியலை அவர்களுக்குத் தருகிறது. போராளி காப்பாற்றி அவளது வீடு சேர்க்கும் பெண்ணின் உளவியல் அத்தகையதுதான்.

முள்வேலி முகாமிலிருந்து புனர்வாழ்வுப் பயிற்சியின்பின் இரு ஆண்டுகளின் பின் வீடு திரும்பிய, ஊரும் உறவும் சுற்றிலுமுள்ளவர்களும் பொதுச்சமூகத்தினாலும் ஒதுக்கப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒரு நாள் விடிகையில் தனது மனைவியின் அலறலைக் கேட்கிறான். அவன் வீட்டு முற்றத்தில் ஒரு பிணம் கிடக்கிறது. அது அவனால் விடுதலைப் புலிகளின் படைக்குப் பலவந்தமாக இணைக்கப்பட்டு போரில் கொல்லப்பட்ட மூன்று புதல்வர்களின் தந்தை. நிர்க்கதியாகிப் போன தந்தையின் பிணம் அது. அவன் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அவரது வீட்டுக்குப் போகிறான். யாருமற்ற அந்தவீட்டின் வெளிச்சுவர் மீது ஸ்மரணையற்ற நிலையில் நிரக்கதியான தாய் தனித்து அமர்ந்திருக்கிறாள். அவனுக்கு நிலைமை புரிந்துவிடுகிறது.

திரும்பி வீடுவரும் அவன், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டத்திடம் சொல்கிறான். நான் உங்கள் அனைவருக்காகவும் ஒரு நாடு வேண்டும் என்பதற்காகத்தான் போராடப்போனேன். என்னை நிம்மதியாக வாழவிடுங்கள், கைகொடுங்கள் பிணத்தை எடுப்போம் என்கிறான். இப்போது ஊர்மக்கள் கைகொடுக்க பிணம் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. படத்தில் மிக மிக உணர்ச்சிசகரமான துக்கமான காட்சி இதுதான். படத்தின் அரசியல் சமநிலைக்குலைவை அனைத்தையும் நிரவிக்கொண்டு - படத்தின் கடத்தல்காரர்கள் அரசின் ஆதரவாளர்கள் என்பதைச் சித்திரிக்கக் கூடுவது அல்லது அல்லாததற்கு அப்பால் - இப்படத்தை உலக சினிமாவின் மிக முக்கியமான சினிமாவாக ஆக்குவது வரலாற்றின் கைதியாக இருந்த போராளியின் பாலான கலைஞனின் இந்தப்பரிவுணர்வுதான். ‘இனி‘, அவனது வாழ்வைப் பற்றியதாக இந்தப்படம் இருக்கும் அதேபோல்தில் இயல்பில் அவன், ‘இனியவன்’ என்பதனையும் ஹந்தகமா நமக்குச் சொல்கிறார். இந்தச் செய்தியே இந்தப்படத்தை உலக சினிமாவில் முக்கியமான சினிமாவாக நிலைநிறுத்தவல்லது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </