மராத்தி சினிமா, இந்திய சினிமாவின் வயதுடன், மிகவும் செல்வாக்கு பெற்றதாக உள்ளது
- ஷாந்தா கோகலே (தமிழில்: ஃபால்ஸ்டாப்) |
1910'ஆம் ஆண்டு வாக்கில், தாதாசாஹேப் பால்கே என்று பிரபலமாக அறியப்பட்டவரான துண்டிராஜ் கோவிந்த் பால்கே, கிறிஸ்துவின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை பம்பாயில் பார்த்தார். திரையில் பிம்பங்கள் மாயமாய் நகருவதை கண்டு ஆச்சரியப்பட்டார். அதே நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் "கடவுள்கள், ஶ்ரீ கிருஷ்ணா, ஶ்ரீ ராமசந்திரா, அவர்களின் கோகுல் மற்றும் அயோத்தியாவை" கற்பனை செய்துக் கொண்டார். இரண்டாவது முறையாக அத்திரைப்படத்தை பார்த்தார், அப்போது "தான் என்ன கற்பனை செய்தோமோ அதுவே திரையில் நிகழ்வது போல உணர்ந்தார்". "இந்தியர்கள், எப்போது திரையில் இந்திய பிம்பங்களை பார்க்க முடியும்?" என்ற கேள்வி அவரை ஆக்கிரமித்தது, அந்த உணர்வுடனே அங்கிருந்து அவர் சென்றார். இரண்டாண்டுகள் கழித்து, அந்த கேள்விக்கு இராஜா ஹரிஷ்சந்திரா திரைப்படம் உருவாக்கியதன் மூலம் அவரே சிறப்பான பதில் அளித்தார். இந்தியாவின் மற்றும் அவரின் முதல் திரைப்படம், ஒரு மெளனப்படம்.
இந்திய சினிமாவிற்கு "புராணக் கதைகள்" என்ற வகையை அறிமுகப்படுத்தியவர் இராஜா ஹரிஷ்சந்திரா, அடுத்த பல பத்தாண்டுகளுக்கு இந்த வகை படங்கள் இந்திய சினிமாவில் நிலையான இடத்தை பிடித்திருந்தது.
புதிய போக்கை அமைத்த அடுத்த மராத்தி திரைப்படம், சாவ்கரி பஷ் (1926). மஹாராஷ்ட்ரா ஃப்லிம்ஸ், கோலாபூர் நிறுவனத்திற்காக பாபுராவ் பெய்ண்டர் இயக்கிய திரைப்படம். சமகால சிறந்த நாவலாசிரியரான ஹரி நாராயன் அப்டே எழுதிய நாவலை தழுவி எடுத்த திரைப்படமாகும். "சமூகம்" என்ற வகையை அறிமுகப்படுத்தியது இத்திரைப்படம். நில அபகரிப்பவனும் பணம் கடன் தருபவனுமானவன், விவசாயி ஒருவனை சுரண்டுவதை குறித்தான படம். அதே சூழலில் படமாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் நவீன, யதார்த்தமான படம் இது என சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள், 30 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பதேர் பாஞ்சாலி என்று கூறுகின்றனர். பாபுராவ் பெய்ண்டர் அர்ப்பணிப்பு அற்ற திரை கலைஞராக மாறினார், சோர்வுற்று விருப்பமற்ற வழியில் அவர் நிறுவனத்தை நடத்துவதை பார்த்து, அவரது சகாக்கள் வி.ஷாந்தாராம், வி.ஜி.டாம்லெ, கே.ஆர்.தய்பார் மற்றும் எஸ்.ஃபடேலால் அவரிடமிருந்து பிரிந்து பிராபாத் ஃப்லிம் கம்பெணி என்பதை நிறுவினார்கள். 1929'இல் கோலாபூரில் ஆரம்பிக்கப்பட்டது பிராபாத் ஃப்லிம்ஸ், நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைய, 1933 ஆம் ஆண்டில் பூனேவில் பரந்து விரிந்த பெரிய வளாகத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். அதே வளாகத்தை 1960 ஆம் ஆண்டு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி (FTII) ஆரம்பிப்பதற்காக அரசு பெற்றுக்கொண்டது.
|
முதல் மராத்தி திரைப்படம் இராஜா ஹரிஷ்சந்திரா இல்லை என சில விமரிசகர்கள் வாதாடுவதுண்டு. மராத்திய இயக்குநர் மற்றும் மராத்திய நடிகர்கள் இடம்பெற்று இருந்தாலும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே சப்டைட்டில் போடப்பட்டது. சினிமாவை வரையறுப்பதில் மொழியை கருத்தில் கொண்டால், பிராப்த் ஃப்லிம்ஸ்க்காக 1932'இல் ஷாந்தாராம் இயக்கிய அயோதியெச்சா இராஜாவே முதல் மராத்தி திரைப்படம். ட்ரிக் ஷாட்ஸ் மற்றும் இராஜா இரவி வர்மாவின் புராண ஓலியோகிராப் ஓவியங்களின் தாக்கத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட முன்பக்க அமைப்புடன், பால்கேவின் சினிமா மொழியின் தாக்கம் இத்திரைப்படத்தில் இருந்தது. இராணி தாராமதியாக நடித்த துர்கா கோட்டே, "செல்வாக்கான குடும்பத்தில்" இருந்து வந்து நடித்த முதல் பெண் ஆவார். அவர் அறிமுகமான போது, முற்றிலும் பயிற்சியற்றவராக இருந்தார், அவரது சுயசரிதையில் தனது மிகதிறமையான நடிப்பிற்கு முழு காரணம் பிராப்த் ஃபிலிம்ஸ்ஸில் உரிமையாளர்களே என்றும், அவர்களே தாராமதியின் நடிப்பை என்னுளிருந்து கொண்டுவந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் எதிர்கால திரைப்பயணம் இந்த பயிற்சியின் மீதே உறுதியாக நிறுவப்பட்டது.
பிராப்த் நிறுவனம், மராத்தி சினிமாவின் சில மிக சிறந்த திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. அதன் துக்காராம் திரைப்படம், இன்றும் ஒரு சக்தி வாய்ந்த சினிமா அனுபவத்தை கொடுக்கிறது. துக்காராமாக விஷ்னுபன்ட் பாக்னிஸ், பறவைகளிடமிருந்து வயல்களை காக்கும் போது பாடும் பக்தி பாடலான ஆதி பீஜ் ஏகலே என்ற பாடலின் காட்சிப்படுத்தும் முறை, பக்தியின் ஆழ்ந்த வெளிப்பாடாக நம்மோடே இருக்கிறது. துக்காரமுடன் மராத்தி சினிமாவின் மூன்றாவது வகை அறிமுகமானது, "பக்தி". பரிசுத்தவான்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படங்கள் வெளிவர துவங்கியது. இதுவும் அடுத்த பல ஆண்டுகளுக்கு மிகவும் பிரபலமான வகையாக இருந்தது.
நான்காவது வகையான "வரலாற்று" திரைப்படங்கள் பிராப்த் ஃபிலிம்ஸின் இராம்ஷாஸ்த்ரி திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தது. முன்பு இருந்த வரலாற்று நாடங்கள் போன்று வரலாற்று நிகழ்வுகள் வைத்தே இத்திரைப்படத்தை எடுத்தனர். ஆனால் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் எடுத்த திரைப்படம் அல்ல இது, தேசியவாத காரணத்திற்காக, நாட்டின் வரலாற்றை புகழ்ந்து மக்கள் மத்தியில் தேசப்பற்று உருவாக்கவே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, இந்த வகை திரைப்படங்களுக்கு இந்திய சினிமாவில் இடமில்லை, ஆனால் மகாராஷ்ட்ராவில் மட்டும், ஷிவாஜி பிரபலமான விஷயமாக தொடர்ந்தார்.
|
வெற்றிகரமாக வளர்ந்து வரும் சினிமா தொழிலுக்கு இரண்டாம் உலகப் போர் மிக பெரிய நெருக்கடியை கொடுத்தது. போருக்கு பின்னான பொருளாதார மாற்றங்களினால் பல தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்டுடியோக்களும் மூடப்பட்டது. திரைப்படத்திற்க்கு தேவையான பெரும்பாலான உபகரணங்கள் இறுக்குமதி செய்தாக வேண்டும், முக்கியமாக ஃபிலிம் சுருள்கள். ஃபிலிம் சுருள்களின் விநியோகம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, பிராந்திய படங்களுக்கு முன்னுரிமை அளிக்கபடவில்லை. ஹிந்தி திரைப்படங்களுடன் ஓப்பிடும் போது பிராந்திய படங்களின் வீச்சு இந்தியளவில் குறைவு தான். எனவே இந்தி திரைப்படங்களுக்கு பங்கீட்டு கொடுக்கையில் அதிக ஃப்லிப் சுருள்கள் கிடைத்தது. மராத்தி திரைப்பட நிறுவனங்கள், பிராந்திய மொழி மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் படங்கள் செய்தன. 1937இல் வெளிவந்தகுன்கு (துனியா நா மானே), 1939இல் வெளிவந்த மானஸ் (ஆத்மி) மற்றும் 1941இல் வெளிவந்த ஷெஜாரி (படோஸி) ஆகிய படங்கள் சீர்திருத்த கருத்துகள் பரப்பும் சமூக படங்களாக இருந்தன. போருக்கு பின்னான ஹிந்தி திரைப்படங்கள் கருப்பு பணத்தில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலும் தேவையற்ற படங்களாகவே இருந்தன.
|
மராத்தி திரைப்படம், போருக்கு பிறகான ஆண்டுகளில் பார்வையாளர்களில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டது. நடுத்தர வர்க்கம் இனி அவர்களின் ஒரே ஆதரவாளர்கள் இல்லை. அது தற்போது நகரத்தில் வாழும் வளர்ந்து வரும் தொழிற்சாலை பணியாளர்கள் எண்ணிக்கையுடன் பொருந்தியது, ஆனால் அவர்களின் வேர் இன்னும் கிராமத்திலேயே இருந்தது. இந்த புதிய பார்வையளர்களை திருப்தி படுத்துவது திரை கலைஞர்களுக்கு முக்கியமான ஒன்றாக மாறியது. இந்த புதிய சூழலில், நடுத்தர வர்க்க திரைப்படங்கள் போல கிராமத்து படங்கள் பல எடுக்கப்பட்டது. பெரும்பாலான படங்களை எழுதியவர், திறமைமிக்க மற்றும் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜி.டி.மட்குல்கர். அவரது பெயரே படத்தின் வெற்றியை ஓரளவு உறுதி செய்துவிடும். வசனமே முக்கியமாக இருந்தது, காட்சி மொழி அல்ல, இப்படியான சுழலில் இயக்குநர் அல்லாமல் ஒரு எழுத்தாளர் புகழ்பெற்று இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கவில்லை.
வார்த்தைகள் உணர்வுகளை (சென்டிமென்ட்) வெளிபடுத்த விரைவான மற்றும் எளிதான வழி, உணர்வுகளே திரைப்படங்கள் வெற்றியடைய காரணமாக இருந்தது. 1950களின் வெளியான கிராமிய படமாக இருக்கட்டும் அல்லது நகர்புற நகைச்சுவை படமான பெடகோன்சே ஷாஹானே மற்றும் லக்காச்சி கோஷ்ட் ஆகியவற்றில் உணர்வுகள் சார்ந்த காட்சிகளே உச்சத்தில் இருந்தது. இன்னும் அந்த நிலை இருக்கிறது. ஹிந்தி திரைப்படங்களின் காட்சிப் பகட்டான கேளிக்கைகள் ஒரு வடிவம் என்றால், பெண்கள் மற்றும் ஏழைகளின் துன்பத்தினால் பார்வையாளர்கள் கண்ணீர் சிந்துவது இன்னொரு வடிவம். பி.கே.அட்ரே அவர்களின் ஷியாம்ச்சி அய்(1953), 1950களின் மிக பெரிய சாதனை படமாகும். சமூக ஆர்வலர் மற்றும் சிறந்த எழுத்தாளரான சானே குருஜி அதே பெயரில் அம்மாவின் அன்பை குறித்து எழுதிய நூலின் தழுவலே இத்திரைப்படம். சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் தங்க பதக்கம் விருதை நாட்டின் முதல் தேசிய விருது விழாவில் பெற்றது.
கிராமத்தை மையமாக வைத்து 1950களில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஐந்தாவதான "நகைச்சுவை" வகையை மராத்தி சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. ஆனந்த் மனே இயக்கி, ஜி.டி.மட்குல்கரின் சகோதரர் வியன்கடேஷ் மட்குல்கர் எழுதி 1959இல் வெளிவந்த சங்கட்யே ஐக்க இந்த வகை படங்களில் மிக பெரிய வெற்றியடைந்த முதல் படமாகும். ஹன்சா வட்கரின் பிரமாதமான நடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நடிகரும் - நடனமாடுவபரான ஹன்சா வட்கரின் வாழ்க்கையில் இது மிக முக்கியமான திரைப்படமாகும், அவரின் சுயசரிதைக்கும் இத்திரைப்படத்தின் பெயரையே வைத்தார். இவரின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து ஷ்யாம் பெனகல் பூமிகா திரைப்படத்தை எடுத்தார், அதில் ஹன்சா வட்கராக ஸ்மிதா பட்டேல் மிக சிறப்பாக நடித்திருப்பார். சங்கட்யே ஐக்க திரைப்படத்திற்கு பிறகு நகைச்சுவையும் லாவனிகளும் (ஒரு வகை இசை மற்றும் நடனம்) மராத்தி கிராம படங்களில் இடம்பெறுவது ஒரு முறையாகவே மாறியது. திரைப்பட லாவனியர்கள் தொழில் முறை லாவனியர்களின் திறைமைகளை விரைவில் பெற்றனர். விஜய் டென்டுல்கர் எழுதி, ஜாபர் பட்டேல் இயக்கி, 1975 வெளிவந்த சாம்னா திரைப்படத்திலும் லாவனி இடம்பெற்றது. தேவையின்றி இத்திரைப்படத்தில் லாவனி புகத்தப்பட்டதாகவே இருந்தது.
சமூக அரசியல் சூழல் :
1970கள், சமூக அரசியல் எழுச்சி இருந்த காலகட்டம். சுதந்திரத்திற்கு முந்தைய சீர்திருத்த காலத்தில் செய்தது போல் சமூகம் மீண்டும் தன்னையும் அதன் ஆட்சியாளர்களையும் கேள்வி கேட்க துவங்கியது. ஷியாம் பெனிகல், பின்னர் கோவிந்த் நிஹாலினி இயக்கிய திரைப்படங்களுக்கும், குமார் சஹானி மற்றும் மணி கெளல் அவர்களின் பரிசோதனை திரைப்படங்களும் மற்றும் வணிக சூத்திரங்கள் அடங்கிய ஹிந்தி திரைப்படங்களும் ஒரு இடைவெளி இருந்தது. மராத்தி சினிமாவின் இந்த புதிய உணர்வின் தனி பிரதிநிதி ஜாபர் பட்டேல். இதழாளர் அருண் சாதுவின் அரசியல் புதினம் ஆஜ் தினக் அடிப்படையாக கொண்டு 1979இல் வெளிவந்த சின்ஹாசன் திரைப்படம் மற்றும் ஷாந்தா நிசல் அவர்களின் சுயசரிதையான நாவலை அடிப்படையாக கொண்டு பெண்கள் உரிமை குறித்து பேசிய 1981இல் வெளிவந்த உம்பர்தா திரைப்படம், இரண்டும் ஜாபர் பட்டேலின் திரைபடங்களாகும். 1970களின் சமூக அரசியல் சூழலில் ஒரு பகுதியாக பெண்கள் இயக்கமும் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
|
ஜாபர் பட்டேலின் திரைப்படங்கள் போன்ற வெகு சில படங்களே தாரளவாத நடுத்தர வர்க்க மக்களுக்கு பிரத்தியேகமானதாக இருந்தன. அன்றைய காலகட்டத்தில் அவை பிரபலமான திரைப்படங்கள் அல்ல. பிரபலமான திரைப்படங்கள் தாதா கோன்ட்கேவுடையதாகவே இருந்தது. கிராமப்புற நகைச்சுவையின் நகர்ப்புற வடிவமான லோக்நாட்டியாவில் அவருக்கு அனுபவம் இருந்தது. பொதுவழக்கில் உள்ள கொச்சையானவற்றையும் இரட்டை அர்த்த வசனங்களையும் திரைக்கு கொண்டுவந்தார். தொழிற்சாலை பணியாளர்கள் குறித்து எடுத்த படம், அவர்களுக்கான படமாகவே இருந்தது. ஆலை தொழிலாளி குடும்பத்தில் இருந்து வந்தவர், அதனால் அவர்களுக்கான இரசனையில் எப்படி திரைப்படம் எடுப்பது என்பதை தெரிந்து வைத்திருந்தார். 1971 ஆம் ஆண்டு வெற்றி படமான சொங்கடயாவிற்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார். தொடர்ந்து 9 படங்கள் 25 வாரங்கள் ஓடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ஒரு திரைப்பட படபிடிப்பின் மத்தியில் இருந்த போது, 1998'இல் தனது 65'வது வயதில் மாரடைப்பால் இறந்தார்.
1980'களில் தயாரிப்பாளர்-இயக்குநர்கள் மகேஷ் கோதாரே மற்றும் சச்சின் பில்கோன்கர், ஹிந்தி படங்களின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிக்கு நிகராக மராத்தியில் படம் எடுத்தார்கள். கோதாரேயின் 1985ஆம் ஆண்டு திரைப்படமான தூம்தட்தகா, வணிக வெற்றி பெற்ற படமாகும். கிராமப்புற பார்வையாளர்கள் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் இருவரின் இரசனையையும் தன் எல்லா படங்களிலும் நிறைவேற்றும் வகையில் எடுத்தார். மராத்தி மொழியின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படத்தை எடுத்தவர் அவர், பின்னர் டிஜிட்டல் டால்பி ஒலியையும் மராத்தி சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். 1980'களில் கோத்தாரேயின் படங்கள் வெற்றி கண்டது ஆனால் 1990'களில் அவரின் படங்கள் தோல்வி கண்டது.
1991ஆம் ஆண்டு மஹேர்ச்சி சாடி திரைப்படம் வெளியானது. தாதா கோன்ட்கேயின் உடன்பிறந்தவரின் மகன் விஜய் கோன்ட்கே இயக்கிய வணிக வெற்றி பெற்ற படம் இது. தாதா கோன்ட்கே ஆண் பணியாளர்களுக்காக படங்களை எடுத்தார், விஜய் கோன்ட்கே பெண்களுக்காக இப்படத்தை எடுத்தார். கதாநாயகி சந்திக்கும் துன்பங்களை பார்த்து அழுவதற்காகவே பலமுறை இந்த படத்தை பெண்கள் பார்த்தனர். மராத்தி சினிமாவின் சோக இராணி அல்கா குபல் கதாநாயகியாக நடித்தார். தாதா கோன்ட்கே போல அல்லாமல், விஜய் ஒரு பட அதிசயமாகவே இருந்துவிட்டார்.
சமூக ஈடுபாடு கொண்ட திரைப்படங்கள் :
1990'களில் குறைந்த செலவில், சுமித்ரா பாவே மற்றும் சுனில் சுக்தன்கரின் சமூக ஈடுபாடு கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தது. அறியாத நடிகர்களுடன் இணைந்து அவர்களின் சிறந்த யதார்த்தமான நடிப்பில், தண்ணீர், எய்ட்ஸ், மனச்சிதைவு மற்றும் விட்டிலிகோ (ஒரு வித தோல் நோய்) ஆகிய கருப்பொருள்களில் சிறந்த திரைப்படங்கள் எடுத்து பல மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றார். இந்த தலைமுறையின் சிறந்த இரு திரை கலைஞர்கள் உமேஷ் குல்கர்னி மற்றும் சச்சி குன்டல்கர், இவர்களுடன் பணிபுரிந்து அல்லது இவர்களினால் ஈரக்கப்பட்டனர். இருவரும் புனே திரைப்பட கல்லூரியின் முன்னால் மாணவர்கள்.
1990களின் பிற்பகுதியில், மராத்தி சினிமா வளர மூன்று காரணிகள் இருந்தது. தாராளமயமாக்கலுக்கு பிறகு, அதிக பணம் புழங்க ஆரம்பித்தது, கார்பரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஹிந்தி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மராத்தி திரைப்படங்களில் முதலீடு செய்ய துவங்கினர். ஒரு திரை திரையரங்குகள், பெரிய மல்டிப்ளக்ஸ் திரையரங்களுக்கு வழி விட்டது, அவை சிறிய மற்றும் நட்சத்திர நடிகர் அல்லாத திரைப்படங்களையும் திரையிட்டது. மாநில அரசு 1969 சட்டத்தை அமல்படுத்தி, அனைத்து மகாராஷ்ட்ரா திரையரங்குகளும் ஆண்டுக்கு கட்டாயம் நான்கு வாரங்கள் மராத்தி திரைப்படங்கள் திரையிட்டே ஆக வேண்டும் என்று நிர்பந்தித்தது. இந்த விதிமுறைகளை மீறும் திரையரங்களின் உரிமம் இரத்து செய்யபடும் அல்லது ஒரு வாரம் திரையரங்கம் மூடப்படும்.
2004ஆம் ஆண்டு வெளியான ஷ்வாஸ் திரைப்படம், ஷியாமாச்சி அய் திரைப்படம் விருது பெற்று சரியாக ஐம்பந்தாண்டுகளுக்கு பிறகு தேசிய விருது பெற்றது. ஆஸ்காருக்கான இந்தியாவின் அதிகார்ப்பூர்வ திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. உண்மை சம்பவமான, கண் அறுவை சிகிச்சைக்கு முன்பு பேரனை ஒரு நாள் வெளியே கொண்டுசெல்லும் தாத்தாவின் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டது. உணர்ச்சிபூர்வமானதாகவும், நட்சத்திர நடிகர் எவரும் இல்லாமலும், சமூக ஈடுபாடு கொண்ட, சிறப்பான நடிப்புடன், மராத்தி சினிமாவின் முத்திரையாக எப்போதும் இருக்கும் விதமாக இந்த திரைப்படம் இருந்தது. இயக்குநர் சந்தீப் சாவந்தின் முதல் திரைப்படம் இது, அவர் இன்னொரு திரைப்படம் இன்னும் எடுக்கவில்லை. மூன்று தனி நபர்கள் இந்த படத்தை தயாரிக்க நிதி அளித்தனர், தாத்தாவாக நடித்த அருண் நலவாடேவும் அதில் ஒருவர்.
2005இல் வெளிவந்து விமரிசன ரீதியாக பாராட்டப்பட்ட, நிஷிகாந்த் காமத் இயக்கிய, சந்தீப் குல்கரினியின் சிறந்த நடிப்பில் வெளிவந்தது டோம்பிவலி ஃபாஸ்ட் திரைப்படம். நடுத்தர வர்க்க மனிதர் ஒருவரின் வாழ்க்கையை சுற்றியே கதை பயணிக்கும், சட்டத்தை மதிக்கும் வங்கி ஊழியர் அநீதிக்கு எதிராகவும் சமூதாயத்தில் பரவி இருக்கும் ஊழலுக்கு எதிராகவும் தனி மனிதராக எதிர்த்து போராடுவதே கதையாகும்.
கடந்த எட்டாண்டுகளாக, நூற்றாண்டின் இறுதிவரை நினைக்க முடியாத அளவுக்கு மராத்தி சினிமா வளர்ந்து வருகிறது. அதிக பண இருப்பு மற்றும் திரைப்படங்களை வெளியிடுவது/ஒளிப்பரப்புவதற்கான சாத்தியகூறுகள் இருக்கிறதனால், மராத்தி திரைப்படம் எடுப்பது சாத்தியமான ஒன்றாக உள்ளது. தயாரித்த படங்களின் எண்ணிக்கை 2003இல் 23 ஆக இருந்து, 2005இல் 57 ஆக உயர்ந்திருக்கிறது. 2006இல் 72, 2007இல் 90 மற்றும் 2008இல் 100 திரைப்படங்கள் வெளியானது. அதன் பிறகு இந்த எண்களை சுற்றிய படங்களின் எண்ணிக்கை இருக்கிறது.
2009ஆம் ஆண்டு எருதுகள் பற்றி இரண்டு அசாதாரண படங்கள் வெளியானது. உமேஷ் குல்கர்னியின் நகைச்சுவை படமான "வாலு" சுபாஷ் காயின் முக்தா ஆர்ட்ஸ் மூலம் உலகெங்கும் விநியோகிக்கப் பட்டது, மற்றும் மங்கேஷ் ஹடவாலேயின் டிங்கியா தயாரிப்பில் ரவி ராயின் தயாரிப்பு நிறுவனம் உறுதுணையாக இருந்தது. சிறுவன் மற்றும் எருதுக்கிடையான உறவு அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், சிறுவன் டிங்கியாவாக நடித்த ஷரத் கோய்கர் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருது பெற்றான்.
2009இல் வெளிவந்த பரேஷ் மோகஷியின் ஹரிஷ்சந்திரச்சி ஃபேக்டரி திரைப்படம், திரை உலகையும், பார்வையாளர்களையும் பெரிதும் ஈர்த்தது. ஐந்தாண்டுகள் தயாரிக்கப்பட்ட திரைப்படம், ஒரு வகையில் மராத்திய சினிமாவின் கதையை ஆரம்பத்திற்கே கொண்டுசென்றுவிட்டது. தாதா சாஹேப் பால்கேயின் முதல் திரைப்படமான இராஜா ஹரிஷ்சந்திரா தயாரிக்க அவர் சந்தித்த போராட்டத்தை துணிச்சலாகவும் நகைச்சுவையாகவும் திரைப்படம் எடுக்கப்பட்டது. ஷ்வாஸ் திரைப்படத்திற்கு பிறகு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் ஆஸ்காருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது மராத்தி திரைப்படம் இது
இன்று, மராத்தி சினிமா தேசிய திரைப்பட அரங்கில் உயரமான நிலையில் உள்ளது. உமேஷ் குல்கர்னி, சச்சின் குன்டல்கர் (ரெஸ்டாரன்ட்), சந்திராகாந்த் குல்கர்னி (துக்காராம்), ரவி ஜாதவ் (நட்டாராங், பால்கந்தர்வா) மற்றும் பல இயக்குநர்கள் வலுவான கதைகள் மற்றும் சிறந்த நடிப்புடன் தொடர்ந்து திரைப்படங்கள் எடுத்துக்கொள்டிருக்கின்றனர். மராத்தி சினிமா வளரமட்டுமில்லை, செல்வாக்கும் பெற்றிருக்கிறது.
ஷாந்தா கோகலே, நாவலாசிரியர், நாடக ஆசிரியர், நாடக விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். மும்பையில் வசிக்கிறார்.
ப்ரண்ட்லைன் (Frontline), இந்திய சினிமா நூற்றாண்டு சிறப்பிதழில் வெளிவந்த சில கட்டுரைகள், இந்த இதழிலும், அடுத்த இதழிலும் தமிழில் மொழியாக்கம் செய்து பேசாமொழியில் வெளியிடவிருக்கிறோம். இதற்கான அனுமதியை வழங்கிய ப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியர் திரு. விஜயஷங்கர் அவர்களுக்கும், ப்ரண்ட் லைன் நிர்வாகத்திற்கும் பேசாமொழி தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி: ப்ரண்ட்லைன் (Frontline)
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |