இதழ்: 13     பங்குனி -2014 (March)
   
 
  உள்ளடக்கம்
 
மராத்தி சினிமா - ஷாந்தா கோகலே

--------------------------------

கமல்ஹாசன் - நேர்காணல் - ஆர்.விஜய சங்கர் மற்றும் ஆர்.இளங்கோவன்

--------------------------------
தமிழ்ஸ்டூடியோவின் புகைப்படக்கண்காட்சி - தினேஷ் குமார்
--------------------------------
இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஆறாம் ஆண்டு தொடக்க விழா - தினேஷ் குமார்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 2 - S. ஆனந்த்
--------------------------------
கல்வித்துறை ஆய்வுகளும் ஜனரஞ்ஜக சினிமாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
young and beautiful - தமிழில்: தினேஷ் குமார்
--------------------------------
பாலு மஹேந்திரா சில ஞாபகக் குறிப்புகள் - ரவிசுப்பிரமணியன்
 
   

   

 

 

தமிழ்ஸ்டூடியோவின் புகைப்படக்கண்காட்சி

(இந்திய சினிமாநூற்றாண்டு விழாவினை முன்னிட்டு)

- தினேஷ் குமார்

முதல் கட்டமாக நூறு அரிதான திரைப்படங்களை திரையிடும் நிகழ்வினை தொடங்கிய பின்பு, அடுத்தநிலையாக புகைப்படக் கண்காட்சி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இரண்டு பெரும் நடிகர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடி நிற்பதோ, முகப்பூச்சுகளற்றமுகத்தோடு படத்தின் உணவு இடைவேளையில் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் ஒன்றாக உணவு பரிமாறி உண்பதனையோ, பிரபலமான இயக்குனர் கேமராவை கண்ணில் பிடித்தபடியே கதைக்கு தேவையான இடத்தினை தேர்வு செய்வதனையோ,படம்பிடிக்க அக்காலத்தில் பயன்படுத்திய படப்பிடிப்புக் கருவிகளையோ, படத்திலிருந்து நறுக்கப்பட்ட காட்சிகளையோதான் புகைப்படக் கண்காட்சி என்று வைத்திருப்பார்கள். அல்லது இதுவரையிலும் பார்த்த கண்காட்சிகளெல்லாம் இதனையே வழிவழியாக பின்பற்றி வந்தவைகளாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கு மாற்று ஊடகத்தின் மாற்று முயற்சியாக அரிதினும் அரிதான பொக்கிஷங்களாக மதிக்கப்பட வேண்டிய சினிமாக்கலைஞர்களின் அஞ்சல் தலைகளை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றாட வாழ்க்கையில் அஞ்சல் துறையின் அத்தியாவசியம் வழக்கொழிந்துவிட்ட இக்காலகட்டத்தில் எவரும் இதனைச் செய்ய முன்வருவதற்கில்லை, காரணம் பணம் கட்டினால் தன் தலையையே அஞ்சல்தலையாக மாற்றிவிடுகின்ற பக்குவம் வாய்ந்த மனநிலை வந்துவிட்டது நம் மக்களுக்கு. ஆனால், இன்றைய கணினியின் முக்கியத்துவம்போல, க்காலத்தில் அஞ்சல்துறை இருந்து வந்திருக்கின்றது, தனை மறவாதிருக்க அஞ்சல்துறையை நேசித்தவர்கள் எவரேனும் சேமித்துவைத்திருக்கலாம். அல்லது தமிழகத்திற்கு வருகின்ற முதல்வர்களெல்லாம் சினிமாவிலிருந்தே வருகின்ற காரணத்தினால் அச்சினிமாவின் மீதான பற்றுதலில் ஒருவேளை அவர்கள்கூடசெய்திருக்கலாம். ஆனால் அப்படி எந்த அரசாங்கமும் இதனைச் செய்யவில்லை. அரசாங்கம் செய்யாத வேலையைத்தான் சினிமாவை நேசித்தவர்என்பதன்அடிப்படையில் சினிமாசுவாசத்தின்துணையோடு, வருகின்ற சிரமங்களை பொருட்படுத்தாமல் இத்தகைய வேலையில் ஈடுபட்டிருக்கின்றார், திரு. பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள்.

அவரது அனுமதியின் அடிப்படையிலும் அவரை தலைமையாகவும் ஏற்றுக்கொண்டு புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. இவரோடு’அவள் அப்படித்தான்’,ஒளிப்பதிவாளர் நல்லுச்சாமி, மற்றும் ஓவியர் மருது ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டனர்.

இங்குள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம், ஆனால் அது ஆழ்ந்த சிந்தனை இல்லாதவர்களின் வெற்றுப்பார்வை. ஒவ்வொரு புகைப்படமும் பின்னால் ஒரு கதையினை கொண்டுள்ளது. சிந்திக்கத் தெரிந்தவர்களால் அதனை படித்துக்கொள்ள இயலும். இதுசினிமாவை நேசிப்பவர்களுக்கான தேடலுக்குரிய இடமாக மட்டுமே உள்ளது. உங்கள் தேடல்களுக்கான சிறகுகள் இங்கிருந்து விரிவதாக இருக்கட்டும்.

இங்கு தமிழ்த்திரையுலகின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற நடராஜமுதலியார் புகைப்படம் இருக்கின்றது, அவரை இங்கு பார்த்தோம், வேலை முடிந்தது என்று நினைத்துக்கொள்ளாமல் அவரைப்பற்றி மேலுமதிக விவரங்களை நீங்கள் தேடுவதில்தான் இந்தப் புகைப்படக்கண்காட்சியின் வெற்றி அடங்கியிருக்கின்றது என்று தமிழ்ஸ்டூடியோ அருண் இக்கண்காட்சியைபற்றி முதலிலேயே அறிவிப்பு செய்துவிட்டார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது:

இந்திய சினிமாவின் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பங்களின் பங்கில் தமிழகம் குறிப்பிடத்தக்கதாகயுள்ளது. அதுவும் இங்குள்ள ஓவியங்களும் கலையும் ஏனைய மாநிலத்தவரைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தாக அமைந்திருக்கின்றன. நடராஜ முதலியார் ”கீசகவதம்”, எடுத்த பின்பு அடுத்த முப்பது ஆண்டுகளில் மராத்தி சினிமாவில் அரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பின்பு எல்லீஸ் ஆர் டங்கன் போன்றோர் தமிழகத்தில் ஸ்டூடியோக்களை நிறுவினார்கள். எனவே இங்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன, மற்ற மாநிலத்தவரும் இவ்வேலைகளை பயன்படுத்திக்கொள்ள தமிழகம் வருகின்றனர். அச்சமயமே தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி பேசும் மக்களெல்லாம் இணைந்து தென்னிந்திய சினிமாவாக மாறுகின்றது.

தமிழ் சினிமா ஓரளவு வளர்ந்து வருகின்ற வேளையில்தான், நாடகக் கலைஞர்கள் சினிமாவிற்குள் வருகின்றனர். அதில் என்.எஸ்,கிருஷ்ணனின் பங்கு அதிமுக்கியமானது, இவரது படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றி பெறுகின்றன. மேலும் பல நாடகக்கலைஞர்களையும் தன்னுடன் சினிமாவில் அறிமுகம் செய்ய அழைத்து வருகின்றார்.

கொஞ்சம் தொழில்நுட்ப நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்தான் இயக்குனராக இருந்தபொழுது, இயக்குனரின் பெயரையும் கவனிக்கத்தொடங்கியது ஸ்ரீதர், பீம்சிங்கின் காலத்தில்தான்.இப்பொழுது தொழில்நுட்பங்களெல்லாம் பலமடங்கு பெருகிவிட்டதன் காரணமாக சினிமா மொழியோடு வருகின்ற படங்களைத்தான் உண்மையான படங்கள் என்று சொல்ல வேண்டும். வருகின்ற கலைஞர்களும் இத்தகைய தொழில்நுட்பங்களை முறைப்படி அணுகப்பழகியிருக்கவும் வேண்டும்.

ஒளிப்பதிவாளர் திரு. நல்லுச்சாமி.

உடனே படம் பண்ண வேண்டும் அதிலிருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆவலோடு பலரும் உலாத்திக் கொண்டிருக்கின்ற இவ்வூரில் இக்கண்காட்சிக்கு இத்தனை பேர் மெனக்கெட்டு வந்திருப்பதற்கு மிக்க நன்றி, என்று ஆரம்பித்த ஒளிப்பதிவாளர் பேசும்பொழுது 35எம்.எம்மில் எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு 70எம்எம்மில் மாற்றப்படுகின்றன என்பதனையும், வண்ணப்படங்களின் ஆரம்ப காலகட்டம் எவ்வாறு அமைந்திருக்கின்றது, அதை நம்மவர்கள் எப்படியெல்லாம் காட்சிப்படுத்துதலின்பொழுது பயன்படுத்தினார்கள், குரு தத்தின் முதல் சினிமாஸ்கோப் படம், ஈஸ்ட்மென்கலரின் காலம் எத்தகையது?, என்பதனையெல்லாம் தொழில்நுட்ப ரீதியாகவே விளக்கிக்கூறினார் நல்லுச்சாமி.

மேலும் அவர் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதென்பதனை மறுப்பதற்கில்லை, ஆனால் அந்தளவிற்கு படங்கள் தரத்தில் உயர்ந்துள்ளனவா? என்ற கேள்விக்கான பதில் கண்டிப்பாக ”இல்லை”, என்பதுதான். இதனை உயர்த்துவதற்காகவே பலர் சினிமாவை நாடி வருகின்றார்கள் என்று வைத்துக்கொண்டேமேயானாலும் அவர்களில் திறமையானவர்கள் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தங்களது சினிமா அறிவினை வளர்த்துக்கொண்டு இத்துறையில் நிற்க தகுந்த படங்களைப் பார்க்க வேண்டும். இக்காலப்படங்களைப்பார்ப்பதைக்காட்டிலும் அக்காலப் படங்கள் பார்ப்பது மேல். குறிப்பாக பாவமன்னிப்பு, வெண்ணிற ஆடை, பாகப்பிரிவினை, மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களிலெல்லாம் அருமையான ஒளிப்பதிவு நிகழ்த்திக்காண்பித்துள்ளனர்.

இந்தக்காலங்களில் கேமராவில் புகைப்படம் எடுத்தவுடனேயே அதனைப் பார்த்து சரியாக இல்லையெனில் அதனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் அப்படியான வசதிகளெல்லாம் இல்லை. அச்சமயத்தில் நாங்கள் பயன்படுத்திக்கொள்கின்ற உத்திதான் இன்றுவரை என்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆதாராமாக இருக்கின்றது. ஒரு புகைப்படம் எடுத்துவைத்துவிட்டு அதன் அளவுகளை குறித்து வைத்துக்கொள்வேன். இது சரியானதாக வந்துள்ளதா என்பதெல்லாம், தெரியாது. அதனை பிரிண்ட் போடும்பொழுதுதான் அப்படம் எப்படி வந்திருக்கின்றதென்று தெரியும். புகைப்படம் சரியாக வரவில்லையென்றால் அதன் அளவுகளை மாற்றி மீண்டும் புகைப்படம் எடுப்போம். சரியாக வந்துவிட்டதென்றால் இதுதான் சரியான அளவு என்று அதன்அளவீடுகளைக் குறித்து வைத்துக்கொள்வோம்.

ஆனால் இப்பொழுது வருகின்ற எத்தனை இளையதலைமுறையினர் இத்தகைய தொழில்நுணுக்கங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு திரைத்துறைக்குள் வருகின்றனர். கேமிராவின் பொத்தானை அமுக்கினால் பொம்மை வரும் என்பதுதான் பலருக்கு தெரியும்.

கலைத்துறைக்கு வருவதற்கு முன் நீங்கள் சரியான முறையில் கற்றுக்கொண்டு வரவேண்டும். ஒரு இயக்குனரின் உதவியாளராக வேலை பார்த்து வந்தீர்களேயானாலும், சிலர் ஐந்து வருடங்கள் சென்றாலும் ஒன்றும் கற்றுக்கொள்வதில்லை, காரணம் கற்றுத்தருவது ஒரு இயக்குனரின் வேலையில்லை. அதேபோல்தான் உங்களுக்கு கற்றுத்தருவதற்காகவே ஒளிப்பதிவாளருக்கு சம்பளமும் தரப்படுவதில்லை.

உங்களுக்கு ஆசையிருந்தால் கற்றுக்கொள்வதற்கு எண்ணிக்கையற்ற ஊடகங்கள் கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்கின்றன. இணையதளங்கள் இப்பொழுதெல்லாம் எல்லாருடைய அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றானதாக வந்துட்டவிட்டது, இனிமேல் நீங்களாகவே கற்றுக்கொள்வதுதான் சிறப்பு. ஆனால் எத்தனைபேர் கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர்?

ஒரு இயக்குனரிடம் மூன்று நான்கு வருடங்கள் உதவியாளனாக இருந்த பின்பு நல்ல கதை கிடைத்தால் நாமே ஒரு படம் இயக்கிவிடலாம், என்றுதான் பலரின் எண்ணம். அந்தக்தையையும் ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லும்பொழுது வேறுயாரையாவது இயக்கிக்கொள்ளலாம் என்று நினைக்கையில் கதை சொல்லுகின்றவர் ”நானே தான் இயக்குவேன்”, என்பார். நம் நாட்டைப்பொறுத்தவரையில் படத்தின் கதையும் இயக்கமும் ஒருவரேதான் இருக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.

கதை நன்றாக இருக்கின்ற காரணத்தினால் ஒரு நல்ல கேமிரா மேனாக படத்திற்கு கொடுத்துவிட்டால் படத்தை ஒப்பேற்றிவிடலாம் என்று தயாரிப்பாளர்நினைத்து அதைப்போலவே செய்வார்கள். படமும் ரிலீஸாகி ஓடிவிடும்.

ஆனால் அடுத்த படம்????

இப்படி வருகின்ற நிறையபேர் சினிமாவில் நிலையாக நிற்பதில்லை.

”அவள் அப்படித்தான்”, என்ற படத்தில் ஆத்மா இருப்பதனால்தான் முப்பத்தைந்து வருடங்கள் கழித்தும் என்னை ஞாபகம் வைத்து என்னை இங்கு பேச அழைத்து வந்திருக்கின்றனர், என்று தன் இருப்பிடத்தைஇனிவருங்காலங்களினாலும் அழிக்கமுடியாது என்றதிண்மையுடன் ஒளிப்பதிவாளர் நல்லுச்சாமி பேசிமுடித்தார்.

ஒளிப்பதிவாளர் சொன்னதுபோலவே சினிமாவின் மீதான மோகத்தினால்தான் பலரும் சினிமாவிற்குள் வருகின்றனர். மோகம் வருவதற்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லை, ஆனால் அவற்றைக்கடந்தும் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளுதல் அவசியம். சினிமாவின் மீதான மோகத்திற்கு சற்றும் குறையாமல்தான் கிரிக்கெட்டும் உள்ளது.

அண்மையில் சச்சினின் ஓய்வு அறிவிப்பின்போதும், அவரது கடைசி ஆட்டத்தின் போதும் சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தவர்கள்அநேகம்பேர். அவர்களில் முக்கியமானவராக சுதீரைச் சொல்லலாம். இவர் சச்சினை துவண்டு விடாமல் விளையாட வைத்த விசிறிகளில் முக்கியமானவர். தன் உடல்முழுவதும் வண்ணங்களைப் பூசிக்கொண்டு சச்சின் ஆடும் கிரிக்கெட் மைதானத்தில் ரணகளம் பண்ணிக்கொண்டிருப்பார். ஒரு சமயம் சச்சினே இவரைப்பற்றி கேள்விப்பட்டு ஓய்வறையில் சந்தித்திருக்கின்றார். மற்றொருசந்தர்ப்பத்தில் இந்திய உலகக்கோப்பை வாங்கிய சமயத்தில் கோப்பையை சுதீரிடம் கொடுத்து ஆனந்தம் கண்டாராம் சச்சின். இது வடமாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இதேபோல தென்மாநிலத்தில் சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவருக்கு தமிழக அரசு மிகச்சிறந்த பரிசளித்து மகிழ்ந்திருக்கின்றது, அது என்ன என்பதனை பிலிம் நியூஸ் ஆனந்தனின் பேச்சிலிருந்து பார்க்கலாம்.

பிலிம் நியூஸ் ஆனந்தன்:

1913ல் தாதா சாகேப் பால்கே ”ராஜா அரிச்சந்திரா”, எடுத்தபின்பு மூன்று வருட இடைவெளியில் நடராஜ முதலியார் “கீசகவதம்”, எடுக்கின்றார். நடராஜ முதலியார் படமெடுக்குமுன்பு அதனை முறைப்படி கற்றுக்கொண்ட பின்புதான் எடுக்கத்துவங்குகின்றார்.

இதற்குப் பின்னர் பல படங்கள் வரத்துவங்கி, தமிழ் சினிமாவும் வெள்ளி விழா காண ஆரம்பித்தது. அன்றைய நாளில்தான் வெள்ளிவிழாநிகழ்வில் நடராஜ முதலியாரை முதன்முதலாகப் பார்த்தேன். இந்த வெள்ளிவிழாவில்கூட நடராஜ முதலியாரை அதிகபட்சமாக யாருக்கும் தெரியவில்லை. அவர் தனியாக வெளியில் அமர்ந்திருந்தார். நான் அவரைப்பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு சரி என்று அனுமதித்தார். நான் போட்டோ எடுத்ததும் அழத்துவங்கி விட்டார். தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியாரைப்பார்த்திருக்கின்றேன், பழகியிருக்கின்றேன், கேமிராவில் அவரை படம் பிடித்திருக்கின்றேன், இதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அதன் பின்பு அவர் எந்தப்பத்திரிக்கையாளரையும் சந்திக்கவில்லை.

எனக்குத் தெரிந்தோ தெரியாமலேயோ, சினிமாவைத்தவிர வேறுஎதனுடனும்எனக்குபரிட்சயமில்லை. சிறுவயதிலிருந்தே அஞ்சல்தலைகளை சேர்க்கத்தொடங்கிவிட்டேன். இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழ்சினிமாக்கலைஞர்களுக்கு மட்டும்தான் அதிகளவில் அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு மாசமும் தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம்என்றுமொழிவாரியாக எத்தனை படம் வெளியாகின்றது?,அப்படங்களின் இயக்குனர் யார்?, தயாரிப்பாளர்யார்? என இன்ன பிற விவரங்களையும் குறித்துவைத்துக்கொள்வேன். இவ்வேலையை 1954 (64)ல் ஆரம்பித்து இன்றுவரையிலும் செய்து வருகின்றேன். ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் வந்திருக்கின்றன?, எந்த நடிகருடைய படம் அதிகமான எண்ணிக்கையில் வந்திருக்கின்றன?, எந்த இயக்குனரின் படங்கள் அதிகம்?, குறிப்பிட்ட தயாரிப்பாளரின் எத்தனை படங்கள் ஒரு வருடத்தில் வெளியாகியிருக்கின்றன?, என்பதையெல்லாம் என்னோடு வைத்திருப்பேன். அதனை பத்திரிக்கைகளின் வேண்டுகோளுக்கிணங்க கொடுப்பேன். 1965ல் எனக்கொரு காசோலை வந்தது, 120 ரூபாய் அனுப்பியிருந்தார்கள், 120 ரூபாய் அக்காலத்தில் மிகப்பெரிய தொகைதான், ஆனால் ஒரு வருடத்திற்கு 120 ரூபாய் அனுப்பியிருந்தார்கள். இருப்பினும் சினிமாவிற்காக நான் செய்த வேலைக்கான சன்மானம் என மனதார அதனை வாங்கிக்கொண்டேன். இந்த 2013ஆம் வருடமும் முடியப்போகின்றது. இவ்வருடமும் என்னை அணுகி இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கையை கேட்பார்கள், ஆனால், ஆண்டவனே என் தலையில் நீ ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதென நினைத்துவிட்டார் போல.

ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம்தான் வேலையென்றால் ஒருநாளைக்கு பதினொரு மணி நேரங்கள் சினிமாவிற்காக உழைத்திருப்பேன். இனிமேலும் இதேபோல்தான் வேலை செய்துகொண்டிருப்பாய், உனக்கான கண்பார்வையை எடுத்தால்தான் சரியாக இருப்பாய் என்று நினைத்ததன் காரணமாகவோ என்னவோ என்னால் சரியாக பார்க்கமுடியவில்லை, எதையும் படிக்கமுடியவில்லை, இப்பொழுதெல்லாம் சினிமாவும் பார்க்கமுடிவதில்லை.

நான் சேர்த்து வைத்த விஷயங்கள் எக்கச்சக்கமாக இருப்பதனால் அதனை தொகுத்து புத்தகமாக போடவேண்டுமென்று எனக்கொரு ஆசை, இதனால் பலரையும் அணுகினேன். நடிகர் சங்கத்தினர் கூட ஒத்துழைப்புதருவதுபோல் கூறி மறுத்துவிட்டனர். தமிழக அரசிடம் அனுப்பினேன், பின்னர் அங்கு சென்றால் ’இன்றைக்கு வா, நாளைக்கு வா’, என்று இழுத்தடித்தனர். பின்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நான்கு வரியில் கடிதம் எழுதினேன். காரணம் அவர்களை சிறு குழைந்தப்பருவத்திலிருந்தே எனக்குத்தெரியும்.

நான் சேர்த்து வைத்திருக்கின்ற தொகுப்புகளைத்திரட்டி ஒரு கண்காட்சி வைக்க வேண்டும், அதேபோல புத்தகம் ஒன்றும் போட வேண்டும், என்று எழுதியிருந்தேன். அடுத்தவாரமே அரசாங்க அதிகாரிகள் வந்தனர்.

’புத்தகம் போட எவ்வளவு பணம் வேண்டும்?’ என்று கேட்டனர்,

’இப்போதைக்குமூன்றுலட்சம்போதுமென்றுநினைக்கின்றேன், ஒருவேளை புத்தகம் போட அதிக காலம் எடுக்கலாம், அதேவேளை அதிக தகவல்கள் இடம்பெறப்போவதால் அதிக பணம் தேவைப்படலாம் எனக்கு சரியாக தெரியாது, அத்தோடு பணம் பற்றாக்குறையானால் புத்தகம் பாதியிலேயே நின்றுவிடும்’, என்றும் கூறினேன்.

பின்னர் மற்றொரு அரசாங்க அதிகாரி வந்துபார்வையிட்டு, மிகப்பெரிய சேமிப்புகளாக இது உள்ளது, கண்டிப்பாக 4 லட்சம் ஆகும் என்றவுடன், உடனடியாக ஜெயலலிதா மூன்று லட்சத்தை நான்கு லட்சமாக உயர்த்திக்கொடுத்தார். மேலும், புத்தகம் முடிந்தவுடன் இந்த தொகுப்புகளையெல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நான் எல்லாப்புத்தகங்களையும், காசு கொடுத்துதான் வாங்கியிருக்கின்றேன். அப்படியே அவர்கள் இனாமாகக் கொடுத்தாலும், காசு வாங்க மறுத்தாலும் அவர்களின் புத்தகங்களை நான் வாங்க மாட்டேன். இப்படியாக சிறுக சிறுகச் சேர்த்ததுதான் எனது மொத்த தொகுப்புகளும். ( 1931- 2003).

இந்த மொத்த தொகுப்புகளும் 2003ல் என்னைவிட்டு போயின. யாரோ என் குழந்தைகளை என்னைவிட்டு தூக்கிச் சென்றதுபோல் இருந்தது. ஒரு மாதமாக தூக்கமில்லை, கண்ணிர்தான் வந்தது.

இன்றுவரையிலும் அந்த தொகுப்புகளெல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை, நான் வைத்த அறைக்குச்சென்று பார்த்தேன், அங்கு அந்த புத்தகங்கள் ஒன்றுமே இல்லை. 2003லிருந்து அடுத்தஇரண்டு வருடங்களுக்கு எனக்கு இந்த பொக்கிஷங்களைக்குறித்து எந்த ஒரு கடிதமும் வரவில்லை, நானே அவர்களுக்கு கடிதம் போட்டாலும், அங்கிருந்து எந்தப்பதிலும் திரும்பவுமில்லை.

மீண்டும் 2005லிருந்து மீண்டும் சினிமாவைப்பற்றி சேர்க்க ஆரம்பித்திருக்கின்றேன், ஆனால், எனது பழைய தொகுப்புகளின் அளவிற்கு இன்று இல்லை. அந்த தொகுப்புகளெல்லாம் எங்கே போனது, என்று இன்றளவும் தெரியவில்லை, அரசாங்கத்தை குறை சொல்கின்றோமே, இந்த அரசாங்கத்தை விடுங்கள், சினிமாக்காரர்கள் எங்கே போனார்கள்? நடிகர் சங்கம் எங்கே போனது?, அவ்வளவு நடிகர்கள் இருக்கின்றார்களே அவர்களின் எத்தனைபேர் எனக்கு உதவ முன்வந்தனர்?.

அறுபது வருட காலமாக பிலிம் சேம்பருக்காக நாயாக உழைத்திருக்கின்றேன். எனக்காகவா செய்தேன். அவர்களாவது இதனைப்பற்றி கேட்டிருக்க வேண்டாமா.? எத்தனை நடிகர்களுக்கு என்னைத்தெரியும், அவர்கள் யாருமே இதனைக்கண்டுகொள்ளவேயில்லையே. இனிமே கிடைக்கவே கிடைக்காது என்று நினைக்க்கூடிய புத்தகங்களை ஆயிரக்கணக்கில் நான் வைத்திருந்தேன். பல படங்களின் படச்சுருள்கள் கிடைப்பதில்லை, அதனைப்பற்றி வந்திருந்த செய்திகளை ஒட்டி, அதில் படத்தின் பெயரினையும், நடிக நடிகர், இயக்குனர் இன்ன பிறவிவரங்களையும் எழுதிவைத்திருப்பேன். பின்னர் தினகரனில் சினிமாவின் வரலாறைப்பற்றி தொடர் எழுதி வருகின்றேன். அங்கு எழுதப்படும் சமயத்திலெல்லாம், அப்படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் சந்ததிகள் மிக்க நன்றியோடு தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கின்றார்கள். இப்படி இருக்கின்ற சமயத்தில் அரசாங்கத்திற்கு ஏன் இதனை ஒரு ஆவணமாக சேர்த்துவைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை.

நடிகர் சங்கத்தைப் பார்த்தும் பலமுறை நான் இதுகுறித்துமுறையிட்டிருக்கின்றேன். ராதாரவியைச் சந்தித்தால், ’நான் சொல்கின்றேன், நான் சொல்கின்றேன்’, என்கின்றார், யார் சொன்னார்கள்?, இதுவரையிலும் யாரும் சொன்னதாக தெரியவில்லையே.

இப்பொழுதுகூட இந்திய சினிமா நூறுவருடத்திற்கான விழா கொண்டாடினார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசை, நமது கண்காட்சியை நிர்மாணிப்பதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், என்று நினைத்திருந்தேன். மீண்டும் அவர்களைச்சந்தித்து பேசியபொழுது வேறு சிலர் இருந்தனர் அவர்கள்என்னிடம் பயோடேட்டா கேட்டனர். இதற்கு என்ன அர்த்தம் விளங்காதவனாக அடுத்த நாள் சென்று பயோடேட்டா கொடுத்தேன். “ஆனந்த்சார் உங்களை நாங்க நெஞ்சிலயே வைத்திருக்கின்றோம், எதற்கு பயோடேட்டா” என்றனர். பின்னர் யாரையும் நம்பாதீர்கள், உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கின்றோம்”, என்றனர், இதிலேயே தெரிந்துவிட்டது இவர்களை நாம் நம்பக் கூடாது என்று. நான் என்ன வீட்டிலா எல்லா பொருட்களையும் வைத்திருக்கின்றேன்?.

பின்னர்நூற்றாண்டுவிழாவிற்கான அழைப்பிதழை ஆபீஸ் பாயிடம் கொடுத்து அனுப்பினர். இரண்டாவது வரிசையில் இடம் கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன், பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. ஆனால், அப்போதுகூட எனக்கு விருது கிடைக்காது என்று தெரியவில்லை. அங்க உட்கார்ந்திருந்தவர்களெல்லாம் ;’என்ன சார் விருது வாங்க வேண்டிய ஆள் நீங்கள், இங்க உட்கார்ந்திருக்கின்றீர்கள்” என்று அத்தனை பேரும் கேலி பேசினார்கள். எனக்கு அனைத்து மொழி நடிகர்களையும் தெரியும், அம்மாநிலத்தவரின் முதல்வர்கள் கூட என்னிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள். தெலுங்கில் விழா எடுத்தால் பிலிம் நியூஸ் ஆனந்தனை கூப்பிடு என்று எனக்கான சிறப்பு அழைப்பிதழ் வரும். தெலுங்குதிரையுலகினரின் வேண்டுகோள் படி ஆறு நாட்கள் தெலுங்கு படத்தின் தொகுப்புகளை மட்டும் கண்காட்சிக்கு வைத்திருக்கின்றேன். மலையாள சினிமாவிலும் எனக்கான மரியாதை உண்டு. என் பெயரை உச்சரித்தாலே மரியாதையாக பார்ப்பார்கள். இந்த தொகுப்புகளையெல்லாம் எதற்காக சேர்த்தேன்?.

நீங்கள் நினைப்பதுபோல சினிமாவை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நடிகர்கள் இரண்டு பேரும் கைகுலுக்குவதுபோல வந்தால் அவர்கள் பின்னால் கத்தி இருப்பதை மறந்துவிடவேண்டாம், இதனை நன்றாகவே உணர்ந்திருக்கின்றேன். ஒருத்தன் விருது வாங்கிட்டானா, அவனை மனசார பாரட்டுகின்ற சினிமா ஆட்கள் ஒருத்தர் கூட இங்குஇல்லை. அப்புக்குட்டி தேசிய விருது வாங்கியிருந்தாரே, எத்தனைபேர் அவரை பாராட்டினார்கள்?, அவருக்காகயார் விழா எடுத்தார்கள்.?

ஒரு வார்த்தை இந்த நடிகர்களெல்லாம் முதல்வரிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ சொல்லியிருந்தால் மறுத்திருப்பார்களா?, அதனால் உங்களிடம் சொல்கின்றேன். என் தொகுப்புகளை கண்காட்சியாக வைக்கவேண்டு. சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல உங்களால் ஆன உதவிகளை செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இதுதான் அரசாங்கம் ஆனந்தனுக்கு கொடுத்த பரிசு. அரசும் உருப்படியாக ஆவணம் அமைக்காது, ஒருவர் கடின உழைப்பில் தமிழ்சினிமாவிற்கான ஆவணமாக தொகுத்திருப்பினும் அதுவும் அரசாங்கத்திற்கு பிடிக்காது. இது பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனந்தனைப்போன்றவர்களெல்லாம் உண்டு உடுத்தி வாழ்கின்ற மனிதர்களைப் போல் வாழ்கின்ற வித்தை தெரியாதவர்கள். ஆனந்தனின் நிலமையை எண்ணிப்பார்த்தால்இனி எவரேனும், இதேபோல் ஒரு முயற்சியில் ஈடுபட தயங்குவார்கள்,. ஆனால், அவர்கள் தடுத்தாலும் நாம் தொடர்ந்து போரடுவதில்தான் நமக்கான வெற்றியிருக்கின்றது. நமக்கான பாதைகளை நாம்தான் செதுக்கிக்கொள்ளவேண்டும். இத்தோடு இன்னொரு எண்ணமும் மீதமிருக்கட்டும், இன்னமும் எதுவும் கைமீறிப் போய்விடவில்லை.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி பிலிம் நியூஸ் ஆனந்தனோடு சேர்ந்து தமிழ் ஸ்டுடியோ சினிமா தொடர்பான புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. ட்ராட்ஸ்கி மருது தொடங்கி வைக்க, ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கண்காட்சி திங்கள் (14-10-2013) வரை நடைபெற்றது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
    </