இதழ்: 10, நாள்: 15- புரட்டாசி -2013 (September)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 7 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திருத்தப்பட வேண்டிய பதிவுகள் - தியடோர் பாஸ்கரன்

--------------------------------

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் - யமுனா ராஜேந்திரன்

--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - II - தினேஷ்
--------------------------------
மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 57ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004 - கார்த்தி
--------------------------------
மீதி வெள்ளித்திரையில்... - தியடோர் பாஸ்கரன் - அருண் மோ.
--------------------------------
மார்த்தாண்ட வர்மா (1933) - மௌனப்படம் - அருண் மோ.
--------------------------------
   

   


முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004

- கார்த்தி

தமிழில் வெளிவந்த திரைப்பட சிற்றிதழ்களில் இருந்து முக்கியமான, அல்லது விவாதத்திற்குரிய, அல்லது ஆவணமாக இருக்க கூடிய சில கட்டுரைகளை பேசாமொழியில் படிக்க கொடுக்கிறோம். முடிந்த வரை அந்த கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகை ஆசிரியர்களின் அனுமதி பெற்றே அவை வெளியிடப்படும். ஆனால் சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களை அணுகவே முடியாத சூழலில் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இங்கே வெளியிடுகிறோம். தொடர்புடைய யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் கட்டுரைகள் நீக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

விஸ்வாமித்ரனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த செவ்வகம் சிற்றிதழில் இருந்து சில கட்டுரைகளை இந்த இதழில் வாசிக்க கொடுக்கிறோம்.

முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004

கோவாவின் சூழல் ரம்மியமானது. நீளமாகப் படரும் சாலைகள் யாவும் கடலுக்கு இட்டுச்செல்லக்கூடியது. போக்குவரத்துகள் அதிகம் தென்படும் இடங்களில் கூட நம்மை துன்புறுத்தாத அமைதி வியப்பை அளிக்கவல்லது. இயற்கையின் வளமையும் மக்களின் தோழமையும் இந்தியத்தன்மையின் இறுக்கமான இயல்பிலிருந்து விலகி விடுபடும் சுதந்திரவெளியும் கலை ரசனையை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகிறது.

கோவாவில் திரைப்படவிழா கொண்டாடப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். கொண்டாட்டங்களின் மத்தியில் சினிமா அழகு பார்க்கப்பட்டது. திரைப்பட விழாவின் முதல்நாள் ஆரவாரங்களைக் கேட்டபடி நுழைவு அட்டை தரப்படாமல் கண்கள் வெறித்தபடி, கால்கள் பரபரத்த வளாகத்தின் எல்லைச் சுவர்களில் சுற்றிச்சுற்றி அலைந்த நூற்றுக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.’முதல்முறை நடத்துகிறோம்’ என்ற அடைமொழிக்குள் தங்கள் தவறுகளை மறைக்க நிர்வாகிகள் முயற்சித்தார்கள். சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வலுத்தபோது கோவா அரசு தலையிட்டு, டெல்லி திரைப்பட அமைப்பினரின் சட்ட விதிகளை தளர்த்தி, நகைப்பிற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விலக்கிக்கொள்ளச் செய்தது. இந்தியத் திரைப்படவிழா மெல்ல கோவா அரசின் சொந்த விழாவாக உருக்கொள்ளத் துவங்கியது தெளிவாயிற்று.

’ நீங்கள் திரைப்படவிழா நடத்தவில்லை. திருவிழா நடத்தியுள்ளீர்கள்’ என்று ஒருவர் சொன்னபோது, கோவாவின் முதலைமச்சர் ‘ நாங்கள் அதிகமும் திருவிழாக்களை நடத்திப் பழக்கப்பட்டவர்கள். அடுத்தமுறை திருத்திக்கொள்கிறோம் ‘ என்று சாதகமாக பதிலளித்தார்.

கோவா அரசின் அரசியல் அரவணைப்பு பெரும்பாலும் நன்மை பயத்தது. இருப்பினும், சுற்றுலாவும் திரைப்படவிழாவும் சங்கமிக்கும் புள்ளியாக கோவா மாறுவதென்பது சிலருக்கு சங்கடம் அளிக்கக்கூடியது என்பது விவாதங்களின் போது தெரியவந்தது. விருந்தோம்பல் பண்பாடு கொண்ட தோழமைமிக்க மக்கள், புகழ்பெற்ற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், தெருவில் எங்கும் நம்மை ஏதோ ஒருவிதத்தில் கவரக்கூடிய ஏதோ ஒரு கலாச்சார நிகழ்ச்சி கடற்கரைத் திரையிடல்கள், ‘பாலிவுட்’டின் ஆதிக்க பிரவேசம் என்று இந்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் தீவிர சினிமா ரசனையை பின்னுக்குத் தள்ளியது. என்பதை மறுக்க இயலாது. இன்னொருபுறம், சர்வதேசத் தரத்தாலான நான்கு திரையரங்கங்களை உள்ளடக்கிய inbox திரையரங்கு, உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒரு சர்வதேச திரைப்பட விழாவின் தேவைகளையும் வசதிகளையும் பூர்த்தி செய்யமுடிகிற சாத்தியங்களை கோவா கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த இருநிலைகளுக்கும் ஸ்திரமான பாலமாக அமைந்திருக்க வேண்டியது திரைப்படங்கள். இருநூறு திரைப்படங்களை தேர்வு செய்த குழு, தற்கால உலக சினிமாவின் வேகத்தோடு ஒப்பிடுகையில் பிந்தங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு சில படங்களைத் தவிர ஏனைய படங்கள் சிரத்தையுடன் தேர்வு செய்யப்படவில்லை. பல தரத்திலான சினிமா ரசனை கொண்டவர்களை கருத்தில் கொண்டு படத்தேர்வு அமைந்துள்ளது. ‘எல்லோருக்கும் கொஞ்சம்’ என்கிற விகிதக் கணக்கில் உள்ளீடாக நம்மை ஆறுதல்படுத்தியது தேர்வுப் பட்டியல். அந்தப் பட்டியலில் என்னைக் கவர்ந்த படங்கள் பின்வருமாறு;

பிராமிஸ்ட் லேண்ட் நாடு : இஸ்ரேல்

இப்படம் சினாய் பாலைவனத்தின் வழியே ஆட்டு மந்தையைப் போல் முறைகேடான வகையில் இழுத்து வரப்பட்டு, பலவிட பாலியல் சித்திரவைதைகளுக்கு உட்படுத்தி, மிருகங்களைவிட கீழ்த்தரமான முறையில் விற்கப்பட்டு சர்வதெசெச கட்த்தலுக்கு பலிகடாவாகும் கிழக்கு ஐரோப்பிய பெண்களைப் பற்றியதாகும். கடிவாளமிடப்பட அவர்களின் வாழ்வின் சூன்யவெளிக்குள் இயக்குநர் நம்மை இழுத்துச் செல்கிறார். எங்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்று கண்முன் தெரியாமல் முட்டிமோதி மெல்ல மனச்சிதைவுக்குள் மூழ்கிவிடும் பெண்களின் இயலாமை நம்மை ஒவ்வொரு காட்சியிலும் பற்றி இறுக்குகிறது. இருள் உலகின் குரூர யதார்த்தங்கள் துர்கனவுகளைப்போல் காட்சிக்கு காட்சி நீள்கிறது. அந்த பெண்களின் பார்வையில் பயணப்பட்டு நம்மை அவர்கள் எதிர்படும் உலகை உணரும்படிச் செய்ததில் அமோஸ் கிதாயின் தேர்ந்த இயக்கம் வெளிப்படுகிறது.

அவரின் முந்தைய படங்களான காதோஷ் (kadosh) , கேத்மா (kedma) போன்றவற்றில் காணப்படும் உள்ளீடான அரசியலை கவித்துவமாக கையாளும் உத்திகள் ஏதும் இப்படத்தில் இல்லை, மாறாக, நம் குரல்வளையை நெரிக்கும் நேரடித்தன்மையும் தீவிரமும் காணமுடிகிறது. அவர் தேர்ந்த்தெடுத்த கதைக்களனுக்கு ஏற்ப டிஜிட்டல் ஊடகத்தின் சாத்தியங்களை நுட்பமாக பயன்படுத்தியிருப்பதும், அவரது பாணியான நீண்ட காட்சியமைப்புகள் டிஜிட்டலின் வழி வேறொரு அனுபவத்தை தருவதும் குறிப்பிடத்தக்கது.

மனிதன் உருவாக்கிய மதங்களும் அது சார்ந்த போர்களும், எல்லைகளும், எப்படி பெண்ணுடலை ஒரு அரசியல்பூர்வமாக மாற்றி உருச்சிதைக்கிறது என்பதை பூடகமாக உணர்த்துகிறது படம் ‘சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் சரக்கு/ பெண் போல் வேறேதும் இல்லை . என்ற தஸ்லிமா நஸ்ரீனின் கவிதைவலி நிதர்சனமாக இப்படத்தின் வழி நம் கண்முன்னே நிகழ்த்தப்படுகிறது. நாம் செயலற்றவர்களாக அக்கொடிய விவரணைகளை பார்க்கிறோம். மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் வன்மத்தை களைத்துவிட்டு, நம்மை சூழ்ந்திருக்கும் உலகின் அச்சுறுத்தும் நிழல்களை நம்மீது படியவிட்டு, குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிற இப்படம். கதாபாத்திரங்களின் குணவியல்புகளை பயணத்தின் வேகத்தில் நழுவிவிட்டதாகவே படுகிறது. ரோஸ், அன்னா என்ற பெண்களின் பின்னணிகள் அலைக்கழிக்கப்பட்ட உணர்வுநிலைப் படிமங்களாக காட்டப்பட்டுள்ளது. இது அவர்களின் கதாபாத்திர ஆறுதலுக்கு போதுமானதாக இல்லை. ஆவணப்படம் பதிவுபோன்ற இயக்கத்திலிருந்து கதாபாத்திரங்களின் உள்முகம் நோக்கும்போது அது பலகீனமான தளத்தில் இடர்பட்டு நிற்கிறது. இருப்பினும் அவர்களின் நட்புறவில் அவர்களுக்குக் கிடைக்கும் கணநேர ஆசுவாசம் படத்தில் நம்பிக்கைக் கீற்றாக மாற்றமடைகிறது. ரோஸ், அன்னா என்ற இரண்டு பெண்களும் ‘நெட் கிளப் ‘பில் ஏற்படும் திடீர்க்குண்டு வெடிப்பை பயன்படுத்தி தப்பி ஓடும் இறுதிக்காட்சியில் அன்னா உணர்வு பிறந்த டநிலையில் காணப்படுகிறாள். விடுதலை அவளை இன்னொரு பைத்திய நிலைக்குள் ஆழ்த்துகிறது. அந்நரகத்தின் பிடியிலிருந்து பைத்திய நிலைக்குள் ஆழ்த்துகிற. நரகத்தின் பிடியிலிருந்து தரையிரங்கத்தடை விட்டு தப்பிவந்த பார்வையாளர்கள் அன்னாவின் உண்ர்வை பெற்றோர்கள் என்றே தோன்றியது.

மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்: நாடு: அர்ஜென்டினா

இப்படம் சே குவேராவும் அவரது நண்பரான ஆல்பெர்ட்டோ கிரனாடோவும் இளைஞர்களாக இருந்தபோது தென் அமெரிக்காவில் 20,000 கிலோமீட்டர் தூரம் மேற்கொண்ட பயணத்தை துவங்கும் சே குவேரா தன்முன் விரியவிருக்கும் வாழ்வின் மர்மங்களை அப்போது அறிந்திருக்கவில்லை. பயணத்தின் ஆரம்பங்கள் மிக களிப்போடும் வேகத்தோடும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளை இனி பயன்படுத்த இயலாத நிலை உருவாகிறது. கையில் பணமும் இல்லை. இந்நிலையில் இவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் நகைச்சுவை இழையோட விவரிக்கப் பட்டுள்ளது. இச்சூழலில்தான் சே குவேரா என்ற இருபத்தி மூன்று வயதுடைய இளைஞனின் மனநிலை தீவிரமான மாற்றங்கள் அடைகிறது. தன் வளமான மரபு சார்ந்த நாடுகளின் தற்போதைய பின்னடைவுகளும், வரலாறு எளிய மனிதர்களின் விதைத்திருக்கும் கொடுமைகளும், அந்த இளைஞனின் கண்களுக்கு புலனாகிறது. “இத்தனை அற்புதமான கட்டிடங்களை எழுப்பியவர்களும், செழுமையான நாகரீகம் கொண்டவர்களும், பிளவுபட்டு கீழ்நிலையில் உள்ளவர்களே!” என வருத்தம் கொள்கிறான். அவன் மனதில் புரட்சியின் விதைகள் தூவப்பட்ட தருணங்கள் அவை.

பயணத்தின் இறுதிக்கட்டத்தில் தொழுநோய் காப்பகத்தில் பணியாற்றிடும், வேளையில் தனது வாழ்வின் நோக்கம் மெல்ல போராட்டத்தை நோக்கி நகர்வதை உணர்கிறான். மருத்துவமனைக்கும் காப்பகத்திற்கும் இடையில் ஓடும் நதி சே குவேராவின் மனதை உறுத்துகிறது. சமூகத்தால் கைவிடப்பட்டவர்கள் ஒருபுறத்திலும் வசதி வாய்ப்புடன் உள்ளவர்கள் மறுபுறத்திலும் இயங்குவதை நதியின்மூலம் பார்க்கிறான். தன் சுயம் முழுவீச்சில் விழிப்பு கொள்கிறது. தன் வாழ்வின் பாதை இதுவென ஊர்ஜிதமாகிறது. தன் உடலின் பலகீனத்தையும் மீறி (ஆஸ்துமா நோய்) தனது போராட்ட குணம் மேலிடுகிறது. புறப்படும் இறுதிநாள் இரவு நதிக்குள் குதிக்கிறான். மனிதன் விதித்த கண்மூடித்தனமான எல்லைகளை மீறும் பாய்ச்சலது. கிட்டத்தட்ட அரைகிலோ மீட்டர் அகலமுள்ளதும் மிக கொடிய நீரினங்கள் வாழும் நதியைக் கடந்து அவன் கரையேறும்போது சே குவேரா எனும் புரட்சியாளன் நம் கண்முன் விஸ்வரூபம் கொள்கிறான். அவனது கண்களில் புதிய நம்பிக்கைகள் ஒளிர்கின்றன. புதிய வரலாறு படைக்கவிருக்கும் ஒருவனது உணர்ச்சிமிக்க ஆரம்பம் அக்கணம்.
இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவமான படத்தை இயக்குவதற்கோ திரைக்கதை அமைப்பதற்கோ நுட்பமான திறந்தேவை. அதை மிகுந்த அக்கரையுணர்வோடும் கவனத்தோடும் கடந்திருக்கிறார். பிரேசிலிய இயக்குநரான வால்டர் சாலஸ். தனது சுய திறன்களை பரிசோதிப்பதை விடுத்து திரைப்பரப்பில் வரலாற்று ரீதியான பிரதி பலிப்புக்களின் ஆக்கிரமிப்பைக் குறைத்து புத்தகத்திற்கு மெல்லியமாற்றங்களை கூர்மையாக வெளிப்படுத்தியிருப்பது இயக்கத்திற்கும் திரைக்கதைக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இப்படம் சென்ற வருடத்திற்கான சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சே குவேரா என்ற இளைஞனின் முகத்தில் சே குவேரா என்ற புரட்சியாளனின் பிம்பம் நேரடியாக விழுந்துவிடாமல் அது காலமாற்றங்களில் இயல்பாக மலர்வதை, கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கெயல் கார்சியா பெர்னல் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோவாவில் பார்வையாளர்களின் கண்கள் சிவக்க கரங்கள் சிவக்க நெகிழ்வுணர்வில் கோஷமிடச் செய்த ஒரே படம் மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்தான்.

லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன் நாடு: அமெரிக்கா

இரண்டு அமெரிக்கர்களின் பார்வையை படம் உணர்த்துகிறது. புகைப்படக் கலைஞனான தனது கணவனோடு வசித்துவரும் ஒரு இளம்பெண்ணுக்கு டோக்கியோ நகரின் அந்நியத்தன்மை வெற்றிடத்தை தருகிறது. ஒரு நாள் என்பது ஒருயுகமாக மாறக்கூடிய நீண்ட தனிமை அவளுடையது. உறக்கமும் விழிப்புமற்ற வெறுமையில் முட்டிக்கொண்டு வரும் அழுகையை அடக்கியபடி வாழ்ந்து வருகிறாள். நாற்பது வயதுகளைத் தாண்டிய அந்த அமெரிக்க நடிகர் ஒரு விளம்பரப்படத்தில் பணியாற்றிட டோக்கியோ நகருக்கு வருகிறார். தொழில் ரீதியாகவும் மனரீதியாகவும் தனது வாழ்வின் இரண்டாம் கட்டத்தில் உழல்பவர் அவர். இருவரும் ஒரே விடுதியில் வசித்து வருகிறார்கள். மது அருந்துமிடத்தில் ஏதேச்சையாக சந்திக்கும்போது தங்களது மன அலைவரிசைகள் ஒன்றிணைய அவர்களிடையே அது ஒரு தற்காலிகமான உற்சாகத்தையும் உயிர்ப்பையும் காட்டுகிறது.
படம் அவர்களின் நட்புறவையும் பகிர்தலையும் வயது சார்ந்த இடைவெளிகளையும் – மென்மையோடும் , நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்த புத்துணர்ச்சியோடும் விளக்குகிறது. ஜப்பானியர்களின் மொழி, கலாச்சாரம், சூழல் ஆகியவை இவர்களின் உலகத்தோடு முரண்படும் இடங்களிலெல்லாம் இயலாமை உணர்வும் அதே சமயத்தில் அங்கதமான நிலையும் திரைக்கதைக்கு கூடுதல் சுவாரசியத் தன்மையை தருகிறது. முக்கியமாக, வசங்கள், மிகுந்த நுண்ணுணர்வோடும் நகைச்சுவையுணர்வோடும் எழுதப்பட்டிருக்கிறது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை இப்படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் திரைப்பட இயக்குநரான வோங்க் கார் வேய் படங்களில் காணப்படும் கதைக்களனும், அந்நியப்படும் கதாபாத்திரங்களின் மீது நகரத்தின் மனோவியல் கவிகிற இசைத்தன்மையும், சோஃபியா கப்போலாவின் இயக்கத்தில் தென்படுகிறது. நகரத்தை காட்சிப்படுத்திய விதமும், வசனங்களில் தென்படும் அறிவுக்கூர்மையும் பிரஞ்சு திரைப்பட இயக்குநரான கோடார்டின் படங்களை நினைவுபடுத்துகிறது. இருப்பினும், ஹாலிவுட் படங்களுக்கே உரிய நேர்த்தியான கட்டமைப்பும் அதற்கு முரணான ஆர்ப்பாட்டமற்ற தன்மையும், இதனை தனித்துவமான படமாக்குகிறது. டோக்கியோ நகர வாழ்வின் பதட்டமான ஓட்டத்தினூடேயே நிலை கொள்ளாமல் விலகி மிதக்கும் இரண்டு இதயங்களினிடையே மிக நுண்ணிய தளத்தில் ஏற்படும், ஆர்ப்பரப்பை, மனதில் மட்டுமே வாசிக்கப்பட வேண்டிய அழகிய அழகிய கவிதையைப் போன்று திரவடிவமாக்கியிருக்கும் சோஃபியா கப்போலா மேலம் பல படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கிறேன்.

செலஸ்டேவும் எஸ்த்ரெல்லாவும் நாடு: பிரேசில்

அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் பெருவாரியான கவனம் பெற்ற பிரேசில் படங்களின் திரைப்பட அணுகுமுறை திரைக்கதைக் கட்டமைப்பின் புதிய தளங்களை விரிவடையச் செய்வதாகவும், மிகத் துரிதமான தொழில்நுட்ப நேர்த்தி கொண்ட படத் தொகுப்போடும், வன்முறைக் களன்களின் முழு வீச்சோடும் பிரவேசித்து வருகின்றன. உதாரணம்: கடவுளின் நகரம் (city of god), கராண்டிரு (carandiru) போன்ற படங்கள் இவற்றினிடசியே மேற்கூறப்பட்ட அதே இயல்புகளை கொண்டிருப்பினும் பிரேசிலின் அன்றாட யதார்த்தங்களை களனாக கொள்ளும் வெகுவான படங்கள் வரவே செய்கின்றன. சென்ற ஆண்டு திரையிரப்பட்ட ரேடியோ ஃபவேலா (rasdio favela), நகல் மனிதன் (man who copied) நல்ல உதாரணங்கள். இந்த வரிசையில் செலஸ்டாவும் எஸ்த்ரெல்லாவும் குறிப்பிடத் தகுந்த படம்.

செலஸ்டே மிகத் துறுதுறுப்பான பெண், தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற மனோதிடம் கொண்டவள். இருப்பினும் தனது முதல் திரைப்படத்திற்கான தயாரிப்பாளரை கண்டடைவதென்பது கடினமான காரியமாகவே இருக்கிறது. எஸ்த்ரெல்லா செலஸ்டேவை குறும்படங்களுக்கான விருது வழங்கும் விழாவின் போது முதன்முறையாக காண்கிறான். பிறகு இரண்டு வருடம் கழித்த ஒரு திரைக்கதை வகுப்பின்போது அவளுடன் நட்பு ஏற்படுகிறது. செலஸ்டேவின் சினிமா மீதான ஈடுபாடும் அவளது குதூகலமான இயல்பும் அவனை கவர்கிறது. ஒரு நண்பனாக, காதலனாக, பிறகு கணவனாக செலஸ்டேவின் கனவு நிறைவேறிட உதவுகிறான்.

படம் பல தளங்களில் செயல்படுகிறது. படத்தின் கதையுடன் தொடர்புடைய இத்தளங்கள் வெவ்வேறு விதமான அனுபவங்களாய் சரளமாக பின்னப்பட்டுள்ளன. செலஸ்டே மற்றும் எஸ்திரெல்லாவின் நட்பு – செலஸ்டேவின் திரைப்படத் தேடல்; செலஸ்டேவின் திரைக்கதையில் காணப்படும் மூன்று கதாபாத்திரங்கள் நிஜ உருக்கொண்டு நம் முன் உரையாடுவது; திரைக்கதை வகுப்பில் செலஸ்டேவுக்கு சொல்லப்படும் திரைக்கதை விதிமுறைகள் படத்தின் திரைக்கதையுடன் அவ்வப்போது நேரடியாகவும் நையாண்டியாகவும் ஒப்பீடு செய்திருப்பது; பிரேசில் திரைப்பட தயாரிப்புத் துறையினரின் பின் அரசியல் – என்று ஒன்றின் மேல் ஒன்றாய் சுவாரசியமாக அடுக்கப்பட்டவை. ஒன்றுக்கு மேல் ஒன்றாய் சுவாரசியமாக அடுக்கப்பட்டவை. ஒன்றுக்கு ஒன்று முரணான உணர்வுகளை ஏற்படுத்துவதால் படம் முழுக்க நகைச்சுவைக்கு வித்திடுகின்றன.

சூழ்நிலை சார்ந்து இயல்பாக நிகழும் நகைச்சுவை குறைவாகவும், புத்திக்கூர்மையான வசனங்களும் திரைக்கதைக் கட்டமைப்பு ரீதியான முரண்களும் சற்றே மிகையான நடிப்பும் அதிகமாக காணப்படுவதால் படம் ஒரு கட்டத்திற்கு மேல் அதீதமான போக்குடன் செல்கிறது. படத்தின் துரிததன்மை இந்த பலகீனங்களை மறைத்து விடுகிறது. அல்லது சமன் செய்து விடுகிறது, எனலாம், மேலும் செலஸ்டேவின் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் டிரா பீஸ்சின் உற்சாகமான நடிப்பு அவ்வப்போது பித்தம் பிடிக்கும் திரைக்கதையைக் கூட தெளிவுறச் செய்கிறது.

சினிமா ரசனை உடையவர்கள் பற்றிய படம் என்பதால் சினிமா குறித்த அனுபவங்கள் அவர்களின் வாழ்வில் பிணைந்துவிட்டதை படத்தின் வசனங்களில் காண நேரிடுகிறது. குறிப்பாக, செலஸ்டே ஒரு candy camera- வில் தன்னை சுயபதிவு செய்து எஸ்த்ரெல்லாவுக்குத் தெரியாமல் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் “நீ த்ரூபோவின் படங்களில் வரும் ரம்மியமான ஆடவனில்லை. மெதுவாக நகரும் ஈரானியப் படங்கள் போன்றவள். நீ பிரேசில் படங்களைப் போன்று தயக்கமுடையவன். இருப்பினும் உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. “ என்ற வசனம் ரசிக்கும்படியாக வெளிப்படுகிறது. வசனங்களில் மட்டுமல்லாமல் திரைப்படத்தின் இயல்பிலும் உலக சினிமாவின் தாக்கத்தை உணரமுடிகிறது. பிரெஞ்சு ‘புதிய அலை’ இயக்கத்திடம் காணப்பட்ட குணாதிசயங்களும், இத்தாலிய திரைப்பட இயக்குநர் ஃபெலினியினுடைய படங்களின் கார்டூன் தன்மையிலான பாணியும் படத்தில் ஆங்காங்கே தலைதூக்குகிறது.

திரையிடலுக்கு முன் பேசிய படத்தின் இயக்குநர் பெட்சே தி பவ்லா ‘இது ஒரு நகைச்சுவைப் படம்’ என்றார். இக்கருத்தின்படி பார்த்தால் செலஸ்டே தன் முதல் படமெடுக்கப்படும் அவஸ்தை உடனடியாக உற்சாகமான திருப்பங்களை நோக்கி சாமர்த்தியமாக நகர்த்தப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ‘வாழ்க்கை சினிமாவைப் போலத்தான்’ என்று முடிகிறது திரைப்படம். திரையரங்க இருட்டை விட்டு வெளியே வந்த எனக்கு இக்கூற்று திரையரங்கத்தினுள் மட்டுமே சாத்தியம் என்று தோன்றியது.

NDTV 24+7, தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய இருபத்தி நான்கு வயதுக்குட்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு. இதில் திரைப்பட விழாவின் அரங்கத்தினுள்ளேயே ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒருநாள் கால அவகாசத்திற்குள் படமெடுக்க அனுமதித்திருப்பது கூடுதல் சிறப்பாகும். Arriflex camera நிறுவனம் நடத்திய பயிற்சிக்கூடம் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த இரு நிகழ்வுகள் தொடர்ந்த இன்னும் செறிவாக நடத்தப்படும் என நம்புகிறேன்.

ஆனால், கோவாவின் தற்போதைய அரசியல் சூழல் இனி அங்கு திரைப்படவிழா நடத்தப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சர்வதேச திரைப்பட விழா நடத்துவதற்கும், அதன் வளர்ச்சியை தொடர்ந்து கொண்டு செல்வதற்குமான தகுதிகள் கோவாவிற்கு நிச்சயம் உண்டு. அது தன் மிகையான அலங்காரங்களையும் பார்வையாளரை வசப்படுத்த முயலும் அனாவசியமான நிகழ்வுகளையும் குறைத்துக் கொண்டு ஆழ்ந்த சினிமா ரசனையை வளர்த்து விடும் பட்சத்தில் அது சாத்தியம். தொடர்ந்து அப்படி நடத்தப்படுமெனில், சில ஆண்டுகளில் உலக அளவில் முக்கியமான திரைப்பட விழாவாக கோவா மாறக்கூடிய தடயங்கள் இவ்விழாவில் தென்பட்டன.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </