மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை
ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.
|
இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான 'பொர திய பொகுன(மாசுற்ற நீர்த் தடாகம்)' திரைப்படம் பேசுகிறது. அழகற்ற சிறுமியாக உள்ளதனால் பாடசாலையின் நாடகப் போட்டியில் பிரதான கதாபாத்திரம் நிராகரிக்கப்படும் சிறுமி கோதமி, பின்னாட்களில் என்னவாகிறாள் என்பதனை அவளுடனேயே பயணிக்கச் செய்து திரைப்படத்தின் மூலம் சித்தரித்து முடிக்கும்போது நம் மத்தியில் இவ்வாறான கோதமிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கவலையும், வருத்தமும் மேலோங்கவே செய்கிறது.
|
சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன. கோதமி ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு யுவதி. அவள் தனது சக தோழிகள் இருவருடனும் ஒரு வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறாள். சக தோழிகளில் ஒருத்தி மிகவும் அழகானவள் என்பதோடு அவளுக்கு ஒரு காதலனும் இருக்கிறான். கோதமியின் அவலட்சணமான தோற்றம் அவளை, இலங்கை கடற்படையில் பணிபுரியும் அழகி மங்களாவின் காதலனுக்கு தூது கொண்டு செல்லுமொருத்தியாக மாற்றி விட்டிருக்கிறது. பொதுவாக படையினர் தங்கியிருக்கும் இராணுவ முகாம்களுக்கு இளம்பெண்கள் தனியே செல்ல அச்சப்படும் நிலையில் கோதமி எவ்வித அச்சமுமின்றி எந் நேரத்திலும் சென்று வரக் கூடியவளாக இருக்கிறாள். மங்களாவின் காதலன் உயரமாகவும் கட்டுமஸ்தானவனாகவும் அழகி மீது பேரன்பு கொண்டவனாகவும் இருப்பதனால் அவன் மீது கோதமிக்கு ஒருதலைக் காதல் ஏற்படுகிறது.
|
தனது சக தோழிக்கும் அவளது காதலுக்கும் துரோகமிழைக்கும் கோதமி, அவளது காதலனுடன் பலவந்தமாக இணைவதன் மூலமாக ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் அழகியின் காதலன் தற்கொலைக்கு முயல்கிறான். அவனது கவலையுணர்ந்த சக படையினர் கோதமியைக் கடத்திச் சென்று கருவைக் கலைத்துவிடும்படி மிரட்டுகிறார்கள். மீண்டு வரும் கோதமி, இலங்கையில் வறள் பிரதேசக் காடொன்றுக்குள் வசிக்கும் தனது தூரத்து உறவினரைத் தேடிச் சென்று, மாதக் கணக்கில் அவர்களுடன் தங்கி சேனை விவசாயம் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அங்கிருந்து தனது ஊருக்கு வரும் வழியில் குழந்தையை புகையிரத நிலையத்தில் விட்டு வருகிறாள். தனது ஊருக்கு வந்தவள் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்கிறாள். ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை வரும் அவள் இன்னுமொருவரைத் திருமணம் முடித்து வாழ்கிறாள். இவர்களது வாழ்வில் திரும்பவும் மங்களாவும் அவளது காதலனும் நுழைகிறார்கள். காதலன் தனது குழந்தையைக் கேட்டு கோதமியிடம் வந்து நிற்கிறான். இதன் பிறகு என்னவாயிற்று என்பதைத்தான் திரைப்படம் சொல்கிறது.
|
சாதாரணமாக தெருவில் செல்லும் எந்த இளைஞர்களுமே திரும்பிக் கூடப் பார்க்காத கோதமிக்குள்ளும் உள்ள காதல் உணர்வுகள் மிகவும் நுட்பமாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி எனப்படுபவள் மிகவும் தூய்மையானவளாகவும், தீய எண்ணங்கள் எதுவுமற்றவளாகவும், மிக மிக நல்லவளாகவும், வானத்திலிருந்து குதித்த தேவதை போலவும் சித்தரிக்கப்படுகையில் அவை எல்லாவற்றுக்கும் நேர்மாறான ஒரு கதாநாயகியை இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தனது அவலட்சணமான தோற்றத்தின் காரணமாக எழும் சக சமூகத்தின் நடைமுறைகளால் தாழ்வு மனப்பான்மைக்கும், உள்மனக் குமைச்சலுக்கும் ஆளாகும் கோதமி மிக இரகசியமாகச் செய்யும் குற்றங்கள் எளிதில் மன்னிக்க முடியாதவையாக இருப்பினும், பார்வையாளர்களிடத்தில் அவை ஒரு நியாயத்தையும் சொல்பவையாக அமைந்திருக்கின்றன என்பதுதான் சிறப்பு.
இலங்கையில் பெரும்பான்மையான சமூகத்தினால் பின்பற்றப்படும் பௌத்தமதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மூன்று பெண்களைக் கொண்டு கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே. பாசம், காமம், வன்மம் ஆகிய மூன்று உணர்வுகளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வேறுபடும் புள்ளி எதுவென திரைப்படத்தின் மூலமாகக் காண முயற்சித்திருக்கிறார். இதனாலேயே 2003 ஆம் ஆண்டு திரையிடலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையிலும், ஒரு தசாப்தம் கடந்த நிலையில் இன்று வரையும் இத் திரைப்படத்தினை இலங்கையில் திரையிட அரசு அனுமதிக்கவில்லை. பத்து வருடமாக தனது படைப்பினை வெளிப்படுத்த இயலாது பிரசவ வேதனையை ஒத்த வலியை சுமந்தலையும் இயக்குனரின் வலி மிகவும் வலியது. அது ஏனைய திரைப்படங்களை இயக்க அவருக்கு தடையாக அமைந்திருக்கிறது.
திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கோதமியின் கதாபாத்திரத்தை எந்தப் பிரதான நடிகையுமே ஏற்று நடிக்கத் தயங்குவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் கதையினைக் கேட்ட மாத்திரத்திலேயே அக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, திரைக்கதை எழுதுவதில் பங்குகொண்டு அதனைச் செம்மைப்படுத்தி, மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் பல விருதுகளை வென்ற நடிகை கௌசல்யா பெர்ணாண்டோ. தற்பொழுது பல்கலைப்பழக பேராசிரியராகக் கடமையாற்றிவருமிவர் விருதுகள் பல வென்ற திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். மங்களா எனும் அழகியின் கதாபாத்திரத்தை பிரபல நடிகை டிலானி அபேவர்தனவும் அவளது காதலன் கதாபாத்திரத்தை இலங்கை ரக்பி அணியின் விளையாட்டு வீரர் துமிந்த டி சில்வாவும் ஏற்று நடித்திருக்கின்றனர். அத்தோடு திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரங்களிலும் கூட சிங்களத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகையர்களான தர்மசிறி பண்டாரநாயக்க, ஐராங்கனி சேரசிங்க, வீணா ஜயகொடி, சாந்தனி செனவிரத்ன, ப்ரியங்கா சமரவீர, சந்திரா களுஆரச்சி, லியோனி கொத்தலாவல போன்றோர் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|
இலங்கையில் பௌத்த சமூகத்திலுள்ள இளைய சமுதாயத்தினர் அக, புறச் சிக்கல்களைப் பேசும் இத் திரைப்படமானது ஜனவரி 21 முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நடைபெற்ற 33 ஆவது ரொட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அது அங்கிருந்த பல்வேறு தேசங்களையும் சேர்ந்த திரையுலக முக்கியஸ்தர்களது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அத்தோடு விழாவின் கௌரவ விருதான டைகர் விருதிற்கும் இத் திரைப்படம் முன்மொழியப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் பின்னணியானது இலங்கையின் கிராமப்புறங்களிலிருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களது காதல், காமம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை பல சந்தர்ப்ப சூழ்நிலைச் சிக்கல்களோடு பொருத்தி, அரசியல், சமூகக் கோட்பாடுகளின் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறது. சமூகம், அரசியல் என இரு மட்டங்களிலும் வகைப்படுத்தக் கூடுமான இத் திரைப்படத்தின் அத்திவாரம் பௌத்தவியலாக அமைந்திருக்கிறது.
பௌத்த நீதிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைக் கேள்விக்குட்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படமானது 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஹொனொலுலு’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புனைவுத் திரைப்படத்துக்கான விருதினை வென்றது. இலங்கை அரசை கடந்த ஒரு தசாப்த காலமாக அச்சுருத்திக் கொண்டிருக்கும்படியாக, பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தையெடுத்து, அதனைத் தான் பிறந்த மண்ணில் திரையிட்டுக் காட்டமுடியாத மனவேதனையை அகத்தில் புதைத்தபடி பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசியராகக் கடமை புரியும் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது திரைப்படம் குறித்து இவ்வாறு கூறுகிறார் 'தமது காதல் வாழ்க்கை நொறுங்கிப் போனதன் காரணமாக தீய வழியில் செல்லும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது கனவுலகம் சிதைந்த பின்னர் நிஜ வாழ்க்கையைச் சந்திக்கும் தைரியம் அவர்களிடமில்லை. ஒருவகையில் இத் திரைப்படம் அவர்களது நடைமுறை வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கையானது எவ்வளவுதான் இன்னல்களுக்குள் உள்ளபோதிலும், எல்லாவற்றையும் விட மிகவும் பெறுமதியானது வாழ்வதுதான் என நான் இத் திரைப்படத்தின் மூலம் கூற விரும்புகிறேன்'.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |