இதழ்: 10, நாள்: 15- புரட்டாசி -2013 (September)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 7 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திருத்தப்பட வேண்டிய பதிவுகள் - தியடோர் பாஸ்கரன்

--------------------------------

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் - யமுனா ராஜேந்திரன்

--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - II - தினேஷ்
--------------------------------
மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 57ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004 - கார்த்தி
--------------------------------
மீதி வெள்ளித்திரையில்... - தியடோர் பாஸ்கரன் - அருண் மோ.
--------------------------------
மார்த்தாண்ட வர்மா (1933) - மௌனப்படம் - அருண் மோ.
--------------------------------
   

   


தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013

- தினேஷ்


சென்ற இதழின் தொடர்ச்சி...

சென்ற இதழில் நடிகர் சார்லியின் பேச்சுடன் முடிக்கப்பட்ட கட்டுரையானது, இவ்விதழில் பத்திரிக்கையாளர் அசோகனிடமிருந்து, தொடர்கின்றது.

பத்திரிக்கையாளர் அசோகன்:

இந்த ஆண்டிற்கான லெனின் விருது பெறும் இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எனது வாழ்த்துக்கள், தமிழ் ஸ்டூடியோ என்ற அமைப்பினை வெற்றிகரமாக நடத்திவருகின்ற அருணுக்கும், அவரது நண்பர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழில் நிலவிவருகின்ற வெகுஜன சினிமா மீதான விமர்சனம் எல்லோருக்கும் இருப்பதைப் போலத்தான் எனக்கும் இருக்கின்றது. தமிழின், தமிழர்களின் பெருமையை சரியாக பிரதிபலிக்காத சினிமாவாக இருக்கின்ற இன்றைய சூழலில், ஆண்டுக்கொருமுறை தமிழர்களின் வரலாற்றை, சமகாலப் போராட்டத்தை, அவர்கள் படுகின்ற திண்டாட்டத்தை மையப்படுத்தி படைப்புகள் ஏதேனும் வெளிவந்தால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கின்றது.

பெரும்பாலான சினிமாக்களில் காதல்தான் இருக்கின்றது. அதுவும் தமிழர்களின் நிஜக் காதல் அல்ல. சினிமாவெக்கென்றே உருவாக்கப்பட்ட போலியான காதல். அவன் சார்ந்த போலி மதிப்பீடுகளை, இழிச்சவாயத்தனத்தை, நேர்மையுடன் படைக்கும் சிலரும் வணிகநோக்கம் என்ற காரணத்திற்காக முற்றிலும் புறக்கணித்துவிட்டார்கள். இது அவர்களின் நியாயம்.

இந்நிலையில்தான் மாற்றுசினிமாவிற்கான தேவை உருவாகின்றது. குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. வணிகசினிமாவிற்கான துருப்புக்களாக இவ்வகை குறும்படங்களும் ஆகியுள்ளன என்பதும் ஒருவகை அபாயமே. பெரும்பாலான குறும்படங்கள் இணையம் வழியாக காணக்கிடைக்கின்றன. அவைகளும் வெகுஜன சினிமாவிற்குண்டான அனைத்து கூறுகளையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையினை சொல்பவைகளாக உள்ளன.

வலிமையான கருத்தை உரக்கச் சொல்பவையாக , ஒரு விவாதத்திற்குரிய கருப்பொருளை முன்வைப்பதாக அவைகளில்லை. அவற்றை மாற்றுசினிமாவிற்கான அறிகுறிகளாக எண்ண எனக்கு விருப்பமில்லை.

வணிக சினிமாவில் சொல்ல முடியாதவைகளை மாற்று சினிமாவில் சொல்லலாம். இங்கே கருத்து வேறுபாட்டிற்கு தடைகள் ஏதுமில்லை. சினிமா என்பதற்குண்டான மொழி தெரிந்திருந்தால் போதும்.
இதில் லீனாவின் படங்கள் அனைத்துமே வலிமையான கருத்துக்களை கொண்டவை.

அதிகாரத்திற்கெதிரான கூர்மையான பார்வை அவரது அனைத்து படைப்புகளிலும் காண முடிகின்றது. ஒரு கவிஞராக ஏற்கனவே அவர் தனது சொற்கள் மூலம் பிணங்களை சிதைக்கும் வேலையை செய்துவருகின்றார். சாதாரண மக்களின் இதயங்கள் அவரது கவிதைகளை படிக்கும் சமயத்தில் உடைந்து போகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதிகார மையங்களில் முறையீடு செய்கின்றார்கள். அல்லது பக்கத்தில் இருப்பவர்களிடம் புலம்பித் தீர்க்கின்றார்கள்.

இந்த எதிர்வினையை குறிவைத்தே அவர் எழுதுகின்றார். அதனையே அவரும் சரியாக பெறுகின்றார். இதையே அவரது சினிமா செயல்பாட்டிலும் கொண்டுவருவதைப் பார்க்கின்றோம். கவிதைகளில் இருக்கின்ற உணர்ச்சி ஊட்டக்கூடிய தாக்கத்தை, காட்சிப்படுத்துதலில் குறைத்துக்கொண்டிருக்கின்றார் என்று சொல்லலாம். அல்லது பார்வையாளர்களை இன்னமும் கொஞ்ச நாள் தயார் படுத்துவோம், என்று விட்டுவைத்திருக்கின்றார் என்பதற்கான அர்த்தம். மாத்தம்மாவில் அவர் காண்பிப்பது ஆயிரக்கணக்கான ஆண்களினால் பெண்ணியம் மீது செலுத்துபடுகின்ற வன்முறையின் சின்ன துளி.
தேவதை ஆவணப்படத்தில் அந்த மூன்று பெண்களையும் காட்டுவது தன்மீது ஒடுக்கப்படும் ஆதிக்கத்தை எதிர்க்கின்ற பெண்சக்தியின் முகங்கள். சமூகத்தின் மிகவும் அடிமட்ட நிலையில் இருந்துகொண்டு போராட்ட குணத்தினை கொண்டிருக்கின்ற அந்த சாதாரண பெண்களை, தேவதைகளாக்கி உலகெங்கிலும் எடுத்துச் சென்றிருக்கின்றார். பெண்ணாடியில் ஒளவை முதலான சங்க கால பெண்கவிஞர்களின் பாடல்களை காட்சிகளாக்க முயற்சி செய்தார். ஒளவையின் வரிகளை ஒரு ஆண் புரிந்து கொள்வதைக் காட்டிலும், ஒரு பெண் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

அவரது கவிதைகள் படங்கள் ஆகியனபற்றிய எதிர்மறை விமர்சனங்கள் எங்கும் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஒரு கள செயல்பாட்டாளராக அவரது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் மீதான விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் படைப்பாளி எல்லோருக்கும் பிடித்தமானவராக இருந்துவிட்டால் அவர் எடுப்பது மாற்று சினிமாவாகவோ, எழுதுவது பெண்ணியம் சார்ந்த உண்மையான கவிதைகளாகவோ இருக்க இயலாது.

ஆவணப்படங்கள் எவ்வகையில் அமைக்கப்பட வேண்டும், என்பதற்கான உதாரணங்களாகவும், மிகச்சிறந்த பதிவுகளாகவும் அவரது படங்கள் இருக்கின்றன. ஆவணப்படம் எடுக்க துணிபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற இக்காலத்தில் இவரது படங்கள் அவர்களுக்கு நல்ல முன்மாதிரியான படங்களாக அமைகின்றது.

சுயாதீன சினிமா என்று சொல்லப்படுகின்ற, இயக்குனரே தன் படைப்பை மக்களிடம் கொண்டுசெல்வதிலும் முன்னோடியாக இருக்கின்றார். தமிழ் உலகில் லீனாவைப் பின்பற்றி பல சுயாதீன சினிமாக்கலைஞர்கள் வர வாய்ப்பிருக்கின்றது. அத்துடன் லீனா மணிமேகலையிடம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு குணம் அவரது போராட்ட மனப்பாண்மை.
அவர் இச்சமூகம் எது சரியென்று கண்ணை மூடிக்கொண்டு கருதுகின்றதோ, அதற்கு எதிரானதாக தன்னை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றார். அவருக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

பத்திரிக்கையாளரின் பார்வையில் லீனாவின் செயல்பாடுகள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன, என்பவைகளை திரு. அசோகன் அவர்களின் பேச்சிலிருந்து தெரிந்துகொண்டோம். இவரையடுத்து அடுத்ததாக பேச எழுந்தவர் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

எழுத்தாளர் அழகிய பெரியவன்:

மேடையிலே இருக்கக்கூடிய தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுக்கும், இந்த அரங்கத்தில் இருப்போர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

நான்கு கவிதை நூல்கள், பத்து ஆவணப்படங்கள், ஒரு திரைப்படம் இவைதான் லீனாவினுடைய அறிமுகமா? என்று கேட்டால், இல்லை. லீனாவினது துணிச்சல்தான் அவரது அறிமுகமாக தோன்றுகின்றது. துணிச்சல், என்று சொன்னவுடனேயே அதற்கும், பெண்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்றுதான் இந்த சமூகம் நினைத்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும்?, இந்தச் சமூகம் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றதோ, அதுமாதிரியான வார்ப்பாக ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண்டும் என்றுதான், இந்த சமூகத்தை கட்டமைக்கின்ற, இந்த சமூகத்தின் சிந்தனையை கட்டமைக்கின்ற, சமூகத்தினுடைய அத்தனை விஷயங்களையும் தீர்மானிக்கின்ற ஆண்கள் விரும்புகின்றார்கள்.

அதைத்தாண்டி, ”நான் உனக்கானவள் அல்லல், எனக்கான தனி அடையாளம் இருக்கின்றது, நீங்கள் எதனை சரி என்று சொல்கின்றீர்களோ, அதனை நான் சரியென்று ஒப்புக்கொள்ளமாட்டேன்”, என்று சொல்லக்கூடிய துணிச்சல் துணிச்சல்தான், லீனாவினுடைய மிகப்பெரிய அடையாளமாக, பலமாக இருக்கின்றது.

நண்பர்களே லீனாவினுடைய படங்களைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள், நான் மிக நீண்ட காலமாக அவரது கவிதைகளை படித்து வருகின்றேன். பொதுவாகவே எனக்கு பெண்ணிய கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி விமர்சனங்களும், ஐயப்பாடுகளும் உண்டு. ஏறக்குறைய சிவகாமி அவர்கள் கூறிய அதே விமர்சனம்தான், உடல் மட்டும்தானா, கவிதை அல்லது. உங்கள் கவிதை நெடி, என்பதே எனக்கிருக்கும் கேள்வி.

ஒரு தலித் பெண் என்பவள், அழகாகயிருக்கின்றாள் என்பதற்காக மட்டுமல்ல, அல்லது அவளொரு பெண் என்பதற்காக மட்டுமல்ல, அவள் ஒரு தலித் என்ற சாதிய விஷயத்தைச் சேர்த்தேதான் அவள் வன்புணர்விற்கு உண்டாக்கப்படுகிறாள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

உதாரணத்திற்கு பந்தரி தேவியினுடைய கதையை நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள், நான்கு பேர் அந்தப் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள். அவளுக்கு அந்தக் கொடூர சம்பவம் நடந்தபொழுது வயது நாற்பதைக் கடந்திருந்தாள். அவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபொழுது நீதிபதி ஒரு தீர்ப்பை எழுதினார். அதனைக் குறித்து நானும் கூட பிற்காலத்தில் ஒரு கவிதை எழுதினேன். நண்பர்களே அத்தீர்ப்பை படித்தவுடனேயே கோபமும் வெறியும் உருவாகியது.

அந்த நீதிபதியினுடைய தீர்ப்பு யாதெனில், ”பந்தரி ஒடுக்கப்பட்ட சமூகத்திலே, தாழ்த்தப்பட்ட சமூகத்திலே பிறந்தவள். அவளை உயர்சாதிக்காரர்கள் தொட மாட்டார்கள் என்பதால் வன்புணர்ச்சியே நடந்திருக்காது, எனவே இதுவொரு பொய்யான வழக்கு”, என்று தீர்ப்பு வந்தது. அவ்வளவு மோசமான நாடாக நம் நாடு இருந்துகொண்டிருக்கின்றது. அதற்கு நாம் இன்று விடுதலை நாள் வேறு கொண்டாடி வருகின்றோம்.
இம்மாதிரியான கேள்விகள்தான், பெண்ணிய கவிஞர்களின் கவிதைகள் ஊடாக எனக்கு எழுகின்றது. ஒரு பெண்ணுக்கு ஏற்படுகின்ற அவஸ்தைகள் வெறுமனே உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, என்கின்ற ஒரு வினா எனக்கெழுகின்றது. அதைத்தாண்டி ஒரு பெண்ணுக்கென்று தனியான விருப்பங்கள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லாமேதான் உள்ளடக்கியிருக்கின்றது. ஆனால் அத்தகைய பதிவுகள் எல்லாம் அக்கவிதைகளில் பதிவாகியிருக்கின்றதா? என்கின்ற கேள்வியும் எனக்கு உண்டு. அதையும் தாண்டி லீனா என்கின்ற ஒரு ஆளுமையின் மீதான விருப்பு, ஆர்வம் என்பது எப்போதுமே எனக்கு குறைந்ததேயில்லை.

அடிமை வர்க்கத்தின் பதிவினை அழுத்தந்திருத்தமாக பதிவு செய்திருக்க கூடிய தோழராகத்தான் அவரை நான் பார்க்கின்றேன்.

எனக்கு மிகவும் பிடித்தமான ”தேவதைகள்”, படத்தைப் பற்றி மட்டும் எனக்குள்ள விஷயங்களைச் சொல்கின்றேன். எல்லோருமே அப்படத்தைப் பற்றி சொன்னார்கள்.

அந்த படத்திலே வரக்கூடிய லட்சுமி , சேதுராக்கு, கிருஷ்ணவேணி இந்த மூவரையுமே பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றியது என்று சொன்னால், ஏற்கனவே இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள சட்டகங்களுக்குள்ளே அடங்க மறுக்கின்ற பெண்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் புதிய பெண்களா?

இந்த சமுகத்திலிருந்து வேறு வழியினை தேர்ந்தெடுத்துக்கொண்ட வகை மாதிரிகளா?
என்கின்ற கேள்வியை எழுப்பினால், என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரையில், “ இல்லை” என்பதுதான் எனது பதிலாக வருகின்றது.

என்னுடைய கிராமத்திலே இப்படியான பல பெண்கள் இருக்கின்றார்கள். தோழர்களே இப்பொழுதுகூட என்னுடைய ஊரான பேரணாம்பட்டிக்கு வந்தீர்கள் என்றால், மார்க்கெட்டிலே மூட்டை தூக்க கூடிய பெண்மணி இருக்கின்றாள். அவளது பெண்குழந்தை வகுப்பில் என்னிடம் படித்த மாணவி. இன்றைக்கு கூட ஒரு ஆணுக்கு நிகராக, மூட்டையைத் தூக்கிக்கொண்டு அவள் அவ்வளவு அநாசியமாக மார்க்கெட்டினுள் நுழைவதை நீங்கள் பார்க்கலாம். ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டேயிருப்பாள்.

என்னுடைய உறவுக்காரர்கள் பல பேரை நான் சொல்ல முடியும், மரம் ஏறுகின்ற பெண்மணியை எனக்கு தெரியும். மாட்டுக்கறியை கூவிக்கூவி விற்கக் கூடிய பெண்ணாக இங்கே லட்சுமி அறிமுகப்படுத்தப்படுகின்றாள், ஆனால் என்னுடைய கிராமத்திலே தலித் பெண்களின் முக்கிய வேலையே அதுதான். மாட்டுக்கறி மட்டுமல்ல, அதில் பிரியாணியை செய்து விற்பது. ”கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காளை”, என்றோர் கதை நான் எழுதியிருந்தேன். அந்தக் கதையில் ’கிளியம்மா’ -என்று சொல்லக்கூடிய அந்தக்கிழவி மாட்டு ரத்தத்தை கொண்டுவந்து சோற்றில் பிரட்டி, கூவிக் கூவி விற்பாள். நண்பர்களே என்னுடைய பாட்டிகள், என்னுடைய ஊரிலிருந்த பெண்கள் விரகுச் சுமையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவார்கள்,. அவ்வளவு உழைப்பாளிகள், கடுமையான உழைப்பாளிகள்., ஆனால் தோழர்களே என்ன இந்த சமூகம் விரும்புகின்றது என்று சொன்னால், இவர்களெல்லாம் பெண்கள் அல்ல, பெண்களுக்கான முன்மாதிரிகள் அல்ல.

பெண்ணாகப்பட்டவள் இப்படித்தான் இருக்க வேண்டுமென கட்டமைக்கும் வேலையை இச்சமூகம் செய்து வருகின்றது. அதாவது மேல்நிலை ஆட்களை நோக்கி இச்சமூகம் நகர்ந்துக்கொண்டிருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். எல்லாவற்றிலுமே ஒரு மேல்நிலை ஆட்கள்.

இதன் மூலமாக என்ன நடக்கின்றது என்று சொன்னால் அடிப்படி யதார்த்ததை மறுக்க கூடிய ஒரு ஆணாதிக்க சிந்தனை ஒரு ஒற்றை மைய சிந்தனை அங்கு உருவாகின்றது. காந்திதான் நம் நாட்டின் அடையாளம் என அடையாளப்படுத்தப் படுகின்றது. சமஸ்கிருதம்தான் நாட்டின்மொழி என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றது. அதே மாதிரிதான் இதுதான் பெண்ணினுடைய பிம்பம், இதுதான் அவளுக்கான முன்மாதிரியான படிமம் என்று சொல்லி, தொடர்ச்சியாக கட்டமைப்புகள் நடந்துகொண்டேயிருக்கின்றது.

அதனை தலித் பெண்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் தொடர்ச்சியாக உடைத்துக்கொண்டேயிருக்கின்றார்கள். இந்த உடைப்பினை மிக அற்புதமாக லீனா அவர்கள் தேவதைகள் ஆவணப்படத்திலே காட்டியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.
இதற்கான காரணம் என்ன?

இங்கே மேல்நிலையாக்கம் என்று சொன்னவுடனே ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
உங்களுக்கு மதுரை வீரன் கதை தெரியும். அந்தக் கதையில் சிவசுப்ரமணியம் போன்றோர்கள் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகளை செய்துள்ளார்கள். இப்படி பல ஆய்வுகள் நடத்தி நாட்டுப்புறக் கதைகளைப்பற்றி அவர்கள் சொல்கின்ற பொழுது மிக நுட்பமாக கவனிக்க வேண்டியதாகயிருக்கின்றது.

மதுரை வீரன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பிறக்கின்றவன். ஆனால் என்ன நடக்கின்றது என்று சொன்னால், மேல்நிலையாக்கம் என்று சொல்லப்படுகின்ற விஷயத்திலே அவர் தேவலோகாத்திலே செய்த தவறினால்தான், அவர் வந்து இந்தச் சமூகத்திலே இப்படி பிறந்தார் என்று சொல்லி சின்ன மாற்றத்தை அங்கே உருவாக்கி விடுவதன் மூலமாக, அந்த இழிமையை அவருக்கு உரித்தானது அல்ல, சமூகத்திற்கு உரியதாக தப்பித பிரம்மையை உருவாக்குகின்றார்கள். இதுமாதிரி பல விஷயங்களைப் பார்க்கலாம்.

நாங்கள் வந்து ஆளுகின்ற வர்க்கமாக இருந்தோம், நாங்க பறையே அடிச்சதில்லை, மாட்டுக்கறியே சாப்பிடுவது கிடையாது, எங்களுக்கு அதெல்லாம் என்னவென்றே தெரியாது, நாங்கதான் ஆண்ட பரம்பரை, இப்படியாக சொல்கின்ற பொய்கள்தான் மேல்நிலையாக்கம் என்று சொல்வது. இவற்றையெல்லாம் ”தேவதைகள்”, போட்டு உடைக்கின்றது நண்பர்களே. இத்தகைய போக்கு சமூகத்தால் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது. அதற்கு எதிராகத்தான் இம்மாதிரியான படைப்பாளிகளின் படங்கள் இருக்கின்றது என்று சொல்கின்றேன்.
நான் ஒரு ஆசிரியர். நமது பாடத்திட்டத்தை நீங்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு, ஏழு, எட்டு இந்த மூன்று பாட வகுப்புகளையும் புரட்டிய பின்பே நான் இங்கு வந்தேன். நண்பர்களே அதிர்ச்சியாகயிருக்கின்றது. ஒரு பெண்கவியின் பாடல் கூட அப்புத்தகங்களில் இல்லை. ஆனால், ஒளவையார் மட்டும் இதில் விதிவிலக்கு. அதுவும் ஒரேயொரு பாடத்தில் ஏழாம் வகுப்பில் இருக்கின்றது.

நண்பர்களே இவர்களுக்கு எது தேவையோ, அதையே தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றார்கள்.
ஏழாம் வகுப்பில் ஒரு பாடல் உள்ளது,
“நெல்லும் உயிரன்றெ,
நீரும் உயிரன்றே.......”,
என்கின்ற வரிகளைக் கொண்ட பாடல்,
அதாவது மன்னன்தான் இச்சமூகத்தின் உயிர், ஆனால் அதற்கு அடுத்த பாடலாக புறநூறில் ஒளவையின் பாடல் இருக்கின்றது. மிக அற்புதமான பாடல்,
“நாடா கொன்றோ,
காடா கொன்றோ........”
என்று வரக்கூடிய பாடலில்,
“எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலமே”
ஆணாதிக்க சமூகத்தில் ஆண்கள் இருக்கின்ற அழகில்தான் இந்த நாடும் இருக்கும், என்று அடித்துச் சொல்லியிருப்பார். ஆனால் இப்பாடலை பாடத்திட்டத்தில் சேர்க்க மறுக்கின்றார்கள்.
ஆனால் நீங்கள் கவனித்தீர்களென்றால், மன்னன்தான் உயிர் என்கின்ற கருத்தாளமிக்க பாடலை உடனடியாக புறநானூற்றில் இருந்து எடுத்து வைக்கின்றார்கள்.
இப்படி வளருகின்ற பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான, அல்லது பெண்களை இழிவாக நினைக்கின்ற மூளையை உருவாக்குகின்ற வேலையை இச்சமூகம் தொடர்ந்து செய்துவருகின்றது.

இச்சூழலில்தான் பொதுமையை உடைக்கின்ற, ஏற்கனவே இருக்கின்ற மடைமையை தகர்க்கின்ற ”தேவதைகள்”, ஆவணப்படம் மிகவும் பிடித்திருந்தது. இந்த ஆவணப்படத்தில் பலரும் பல காட்சிகள் பிடித்திருந்ததாக சொன்னார்கள், ஆனால் எனக்கு பிடித்தது கிருஷ்ணவேணியை காட்டும் முன்பாக இசைக்கப்படுகின்ற புல்லாங்குழல் ஒலி, அதுவொரு அற்புதமான பகுதி.

இதுபோன்ற படைப்புகளை தொடர்ந்து லீனா மணிமேகலை தொடர்ந்து வெளிக்கொண்டுவரவேண்டும், அவருக்கு இவ்வருடத்திற்கான லெனின் விருது கிடைத்த மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்துகொண்டு விடைபெறுகின்றேன்.

தேர்ந்த மேடைப்பேச்சாளரின் பாவனை அழகிய பெரியனின் பேச்சினூடாக தெரிந்துகொள்ள முடிந்தது. லீனாவின் கவிதைகள் மீது தனக்கிருக்கும் எண்ணத்தை அழகாக எடுத்துரைத்தார் எழுத்தாளர்.

அழகிய பெரியவனைத் தொடர்ந்து பேச வந்தவர் தமிழ்ச் சினிமாவின் தவிர்க்க இயலாத இயக்குனர், படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர். தமிழ் ஸ்டூடியோவின் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்குத் தன் பங்களிப்பை உறுதிசெய்து, நிகழ்ச்சியை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தும் பாலுமகேந்திரா பேசும்பொழுது பார்வையாளர்களை தன்கைவசப் படுத்திக்கொண்டார். இவர் பேச்சில், தேர்ந்த இயக்குனரின் அணுகலும், பெற்றவனின் ஆனந்தமும் கலந்திருந்தது.

பாலுமகேந்திரா:

நண்பர்களே, இன்று ஆகஸ்ட் 15, சுதந்திர தினம்.

என்னுடைய மாணவனும், எனது பிள்ளைகளில் ஒருவனுமான அறிவுமதி, சொல்லிய இரண்டு வரிகளிலிருந்து என் பேச்சை ஆரம்பிக்கின்றேன்.

“நள்ளிரவில் பெற்றோம்,
இன்னும் விடியவில்லை”

இங்கே லீனா மணிமேகலைக்கு விருது வழங்கும் விழாவில் என்னையும் பேச அழைத்திருப்பதில் சந்தோஷம். அது சம்பந்தமாக உங்களோடு சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

என்னை அப்பா என்று அன்போடு அழைக்கும் ஒருசில பெண்களுள் லீனாவும் ஒருவர். லீனா மணிமேகலையின் ’தேவதைகள்’, ’மாத்தம்மா’ ’பெண்ணாடி’ பார்த்திருக்கின்றேன். இப்போது சொன்ன இந்த மூன்று படங்களில் ”தேவதைகள்”, எனக்கு மிகவும் பிடித்த படம். அதுவும் அடிநிலை மக்களின் வாழ்வை பதிவு செய்திருக்கின்ற அழுத்தமான பதிவு.
அதனையும் எங்கள் பள்ளிக்கூடத்தில் திரையிட்டோம்.
எதற்காக?
நடிப்பு என்றால் என்ன? என்பதனை எங்கள் மாணவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.
நடிப்பிற்கும் ஆவணப்படத்தில் உள்ள பெண்களுக்கும் என்ன சம்பந்தம்?
இல்லை,
அந்தப்பெண்கள் நடித்தார்களா?
அதுவும் இல்லை.
அவர்கள் நடிக்கவில்லை, அதுதான் சம்பந்தம்.

சிறந்த நடிப்பு என்றால் என்ன என்று எதை சொல்ல முடியும்?
ஒத்திகை பார்க்கப்பட்டு, வார்த்தைகள் மனப்பாடம் செய்யப்பட்டும் வருவதில்லை சிறந்த நடிப்பு.

தேவதைகள் படத்தில் பேசுகின்ற பெண்களின் வசனங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதில்லை. தன்னுடைய குணத்தை , சுபாவத்தை, முக பாவத்தை எப்படி உபயோகப்படுத்திக்கொள்வது. இதற்காக லீனாவின் ஆவணப்படத்தை உபயோகப்படுத்திக்கொண்டேன்., அதற்காக நான் அவரிடம் அனுமதி கேட்கவில்லை. அந்த உரிமையை நானாக எடுத்துக்கொண்டேன்.

லீனாவினுடைய துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவருமே தீக்குச்சிகள். இரண்டுமே உரசிக்கொள்ளும்.

அவருடைய படங்களில் கடைசியாக பார்த்த படம், இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கின்ற படம் ”பெண்ணாடி”. இப்படத்தை இத்தோடு நான்காவது முறையாக பார்த்து முடித்துவிட்டேன்.

நான் பச்சைத்தமிழன் தான். ஆனால் இன்று சங்க இலக்கிய பாடல்களில் பலவற்றை புரிந்துகொள்ள அதிக காலம் பிடித்துக்கொள்கின்றது. சினிமாவும் அப்படித்தான்.

இன்றும்கூட சில படங்களை நான் புரிந்துகொள்வதற்கு கடினமாக உள்ளது. இத்தனைக்கும் நான் இன்னும் சினிமாவில்தான் இருக்கின்றேன். சினிமாவின் மீதான காதல் காரணமாக பூனே திரைப்பட கல்லூரியில் படித்தவன். இன்னும் 40 ஆண்டுகாலமாக அந்தக் காதல் குறையாமல் பார்த்து வருகின்றேன். இருப்பினும் சில படங்கள் என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

லீனாவிடம் ”பெண்ணாடி” புரியவில்லை என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை.

லீனா இந்த ”பெண்ணாடி”, படத்தில் என்ன சொல்ல வருகின்றார். என்பது எனக்கு புரியவில்லை.
இன்றோடு நான்காவது முறையாக படத்தினை பார்த்து முடித்துவிட்டேன். இன்றளவும் இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என புரியவில்லை. ஒருவேளை இன்னும் நான்கு முறை, ஐந்து முறை, அல்லது இன்னும் பல முறைகள் தொடர்ந்து பார்த்தபின்பு புரியலாம்.

ஆனால்,
இந்த புரிதல் என்பது படைப்பாளியின் நோக்கமா?
எந்தவொரு படைப்பாளியும் முன்வைக்கின்ற படைப்பின் நோக்கமென்ன? இந்த விஷயத்தில் மற்றவர்களைப் பற்றி பேசவேண்டாம். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்.

என்னுடைய படைப்பின் நோக்கமென்ன?

என்னுடைய பலபடங்கள், வணிகத்திற்காக எடுக்கப்பட்ட படங்களில் கூட நல்ல படமாக இருக்க வேண்டும்., வணிக ரீதியிலும் வெற்றி பெற வேண்டும், தியேட்டர்களில் நன்றாக ஓட வேண்டும்,என்பதே எனது நோக்கமாக இருந்தது.

இந்த நோக்கத்திலிருந்து விலகிதான், வீடும், சந்தியாராகமும் எடுத்தேன்.

நான் எனக்காக எடுத்துக்கொண்ட படங்களாக இவ்விரண்டு படங்களையும் சொல்லலாம். எனவே படைப்பாளிக்கும், படைப்பிற்கும் நோக்கம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கின்றேன்.
இப்படியாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நோக்கமிருக்கலாம். என்னுடைய நோக்கத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக இந்த நெகட்டிவோடு ரொமான்ஸ் செய்துவிட்டு, இப்பொழுது டிஜிட்டல் சினிமாவை கையில் எடுத்திருக்கின்றேன். அதில் 5டி என்ற காமிரா, என்னைப்பொறுத்தவரை நிழற்படம் எடுக்க மட்டும்தான் உதவும் என்று நினைத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு படம் எடுப்பது என்பதும், அதனை தூக்கி கையில் பிடித்த பொழுதும் என் மனதில் தோன்றிய எண்ணத்தை இங்கே இருக்க கூடிய நண்பர்கள் முன்னிலையில் மனம் திருந்து சொல்கின்றேன். ’ஒரு சிறுமியோடு புணர முயன்றேனோ?’, என்ற எண்ணம் எனக்கு எற்பட்டது.

“machines don’t make films” இதனை நான் நன்றாக புரிந்துவைத்திருக்கின்றேன். எனது மாணவர்களுக்கும் அழுத்தமாக சொல்லிகொடுத்து வருகின்றேன்.

எந்த காமிரா பயன்படுத்தி படம் எடுத்தீர்கள் என்று என்னைக் கேட்டால் எனக்கு கோபம்தான் வரும்.
எந்தப்பேனாவில் கவிதை எழுதினீர்கள் என்று ஒரு கவிஞனை கேட்கலாமா?

நீ எழுதுவது கவிதையாக இருக்கின்ற பட்சத்தில் அது டாய்லெட் பேப்பரில் எழுதப்பட்டாலும் அது உன்னுடைய கவிதை.

“paper doesn’t matter,” இந்த எண்ணம்தான் என் மனதில் வலுவாக ஊறிபோயிருக்கின்றது.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். எங்கள் ஊரில் சாம்பார் எடுக்க பயன்படுத்தப்படுத்துவதை ’அகப்பை’, என்று சொல்வோம். இங்கேயும் அகப்பை என்றே சொல்கின்றார்கள், அதுவரையில் சந்தோஷம். இங்கே சரளமாக பேசப்படுகின்ற வார்த்தைகளின் அர்த்தங்கள் எனக்கு பலவும் புரியமாட்டேன் என்கின்றது. ஆனால், போகப் போக தெரிந்து கொள்ளலாம். அதனைப் பொறுத்தவரையில் இந்த அகப்பைக்கு இந்த ஊரிலும் அகப்பை என்ற சொல்லையே பயன்படுத்துகின்றார்கள் என்பதில் சந்தோஷம். எனவே இந்த அகப்பை என்ற கருவியை அச்சாரமாக வைத்துக்கொண்டு ஒரு இசைக்கலைஞர் அருமையாக இசை வாசித்து காண்பித்தார். அதனை இங்கே முன்பு சொன்ன விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றேன். ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, என்பதனை நிரூபித்துக்காட்டியவர்.

அது அவருக்கு அகப்பையாக இருந்தால் என்ன? ஜெர்மானியில் செய்யப்பட்ட கிட்டாராக இருந்தால் என்ன? It doesn’t matter. அந்த அகப்பைதான் அவருக்கு இசையை கொடுப்பது.

பெண்ணாடியை புரிந்துகொள்ள தடையாக இருப்பது என்ன என்று நினைத்துப்பார்த்தேன். ஒருவேளை சினிமாவைப்பற்றி நான் புரிந்துகொண்ட எண்ணம்தான் பெண்ணாடியை புரிந்துகொள்ள தடையாக இருக்கின்றதா?

மொழி என்கின்ற பொழுது, கவிதை என்கிற பொழுது நான் முன்பு குறிப்பிட்டேனே, சங்க இலக்கியத்தில் உள்ள விஷயங்களை இன்னும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அது என்னுடைய குறைதானே தவிர, இலக்கியத்தின் மீதான குறையல்ல.

எனக்கு சூரியனை பார்க்கமுடியவில்லை என்றால், சூரியன் இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. மொழியைப் பொறுத்தவரை சில வார்த்தகளுக்கு இரண்டு மூன்று அர்த்தங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இரண்டு மூன்று அர்த்தங்கள் தொனிக்கின்ற வார்த்தையாக ”அணை”, என்பதனை பயன்படுத்தலாம்.

அணை என்றால் பெண்ணை கட்டி அணைப்பதற்கும், தண்ணீரை போகவிடாமல் தேக்கி வைப்பதற்கும் கட்டிவைப்பதற்கும் அணைக்கட்டு என்றுதான் பெயர். விளக்கை அணைப்பதும் அணைத்தல் தான்.

இன்னும் சில வார்த்தைகள் பேசப்படும் சூழல்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் வரும். ஆனால் சினிமாவில் ஒரு காட்சி எதனை கேமிராவில் பதிவு பண்ணியிருக்கின்றதோ, அதனைத்தவிர அதில் வேறு காட்சிகள் தோன்ற முடியாது. வாய்ப்பேயில்லை.

இப்பொழுது ஜெயபாலனை காட்சிப்படுத்தினால், அது எந்த கேமிரா கோணமாக இருந்தாலும் அது ஜெயபாலன் தான். அவர் லீனாவாகவோ, வேறொருவராகவோ மாறிவிடமுடியாது. அதுவே நான் நம்பிக்கொண்டிருப்பது.

இந்த நம்பிக்கைதான் லீனாவின் பெண்ணாடியை புரிந்துகொள்ள தடையாக இருக்கின்றதோ?, என்று எனக்கு தோன்றுகின்றது. ஏனென்றால் சினிமாவில் நீ எடுக்கும் பிம்பத்தை தவிர வேறொரு அர்த்தங்கள் இல்லை என்று நான் நம்பிக்கொண்டிருக்கின்றேன். நான் கற்றது அது மாதிரியாக உள்ளது.
என்னால் அரை மணிநேரம் பார்த்தாலும் நவீன ஓவியத்தை புரிந்துகொள்ள இயலவில்லை. லீனா ஒருவேளை சினிமாவை நவீன ஓவியத்தின் தூரிகையாக பயன்படுத்தியிருக்கின்றாரோ என்று தோன்றுகின்றது.

இதேபோன்றதொரு முயற்சியை நானும் முயற்சித்திருக்கின்றேன். சென்னையில் நாற்பது ஆண்டுகாலம் பழகிவந்திருக்கின்றேன் என்று சொல்லும் என்னால், பகலில் பார்த்த சென்னை இரவில் இருக்காது என்றும் சொல்ல முடியும். இரவிலிருக்கும் சென்னை முற்றிலும் மாறுபட்ட வர்ணங்களை கொண்ட சென்னையாக இருக்கின்றது.

முதலிரவிற்கு தயாராகும் பெண்ணை போல சென்னை இரவில் தன்னை தயார்செய்துகொள்கின்றது. இதனை என்னுடைய காமிராவில் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது.
இந்த வர்ணங்களை நான் எப்படி பதிவு செய்வது? பதிவு செய்வதென்றால் அடிமட்ட பதிவல்ல. இரவின் சென்னை என் மனதில் ஏற்படுத்தும் அதிர்வை பதிவு செய்ய வேண்டும். அதனைப் பதிவு செய்ய எனது கேமிராவை தூரிகையாக தயார் செய்துகொண்டேன். இது என்னுடைய வெளிப்பாடாக இருக்கின்றது.
இதேபோல லீனாவும் காமிராவை தன் மனசில் ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்யும் தூரிகையாக்கியிருக்கலாம்.

பெண்ணாடியில் சங்க இலக்கியம் பற்றியதான உணர்வுகளை பதிவுசெய்திருக்கின்றார். அவற்றில் காதல், பிரிவு, சோகம் போன்ற உணர்வுகளை யெல்லாம் காட்ட வேண்டும்.

காதலைப் பொறுத்தவரை நான் புரிந்துகொண்டது போல வேறு யாரேனும் புரிந்துகொண்டுள்ளனரா என்பது சந்தேகம். தேவைக்கு அதிகமாகவே நான் புரிந்துவைத்திருக்கின்றேன். இதனை சொல்லிக்கொள்வதிலும் எனக்கு கொஞ்சமும் கூச்சமில்லை.

அப்பா என்று என்னை அன்போடு அழைக்கும் லீனா மணிமேகலை எனக்கு மகளாக கிடைத்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் உபயோகிக்கும் அதே காமிரா அவர் கையில் மாற்று பாதையில் பதிவு செய்வதை நினைத்து பிரமிப்படைகின்றேன்.

லீனா இன்னும் நிறைய நிறைய ஆவணப்படங்கள் எடுக்க வேண்டும். நான் என்னுடைய மாணவர்களுக்கு சொல்லிக்கொள்வது, தயவு செய்து கோடம்பாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். இன்றைக்கு நீங்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிவருகின்ற அத்தனை படங்களும் இந்த கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்டவைகள்தான். அதனை மறக்கக்கூடாது. ஆகையால் கோடம்பாக்கத்தில் இருந்துகொண்டே நீங்கள் அற்புதங்கள் படைக்கலாம்.

இப்போது நான் எடுத்துக்கொண்டிருக்கின்ற படத்தின் நோக்கத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். ஒரு படைப்பை செய்கின்றான், செய்கின்றாள் என்றால் அப்படைப்பின் நோக்கமென்ன? அது படைப்பவர்களின் மனதைப்பொறுத்து அமையும்.

இப்போது நான் எடுத்து முடித்திருக்கின்ற படத்தின் ஒரே நோக்கம், என்னுடைய மரணத்திற்கு பிறகும் குறைந்தது இருபத்தைந்து வருடங்களாவது நிலைத்து நிற்கவேண்டும். நிற்கும்.

தந்தைக்கு அடுத்ததாக, மகளான லீனா மணிமேகலையின் பேச்சு தொடங்கியது. இத்தனை நேரமாக பிறர் எண்ணவோட்டங்களை அறிந்துகொள்ளும் ஆவலில் அமர்ந்திருந்தவர், தன் மனதில் ஓடுகின்ற சிந்தனைகளை பார்வையாளர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொண்டார்.

லீனா மணிமேகலை:

நான் எந்தச் சமயத்திலும் என் வாழ்வில் பயந்ததில்லை, ஆனால் இன்று பயமாக இருக்கின்றது. இத்தனை ஆசீர்வாதங்களுக்கும் நான் தகுதியானவள்தானா? என்பதே என் அடிமனதில் ஓடிக்கொண்டிருக்கும் பயத்திற்கான காரணம். இதற்கு நடுவில்தான் நான் என்ன பேச வந்தேனோ அதனைக் கோர்வைப்படுத்தி பேசவேண்டும். அல்லது இங்கு பேசப்பட்ட விஷயங்களை ஆரம்பப்புள்ளியாக வைத்து அதிலிருந்து பேசவேண்டும். மிகவும் சங்கடமான நிலையில்தான் இன்று இருக்கின்றேன்.

நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வியந்த ஆளுமைகள் என்னை ஆசீர்வதிக்க இங்கு வந்ததனை மிகுந்த நெகிழ்ச்சியோடு நினைத்துப்பார்க்கின்றேன். இதனை சாத்தியப்படுத்திய தமிழ் ஸ்டூடியோவிற்கும், அவர்களுடைய நண்பர்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

நான் தேர்ந்தெடுத்திருக்கின்ற பாதை நிச்சயமாக தனிமையான பாதைதான். ஆனால் நான் தனிமையாக பயணிக்கவில்லை. இவ்விருதை என்னோடும், என் படைப்புகளோடும் தொடர்ந்து பயணித்து வருகின்ற ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் உரித்தாக்கிக்கொள்கின்றேன்.

நான் பங்கேற்பு சினிமாவினை நம்புகின்ற ஒரு படைப்பாளி. என்னுடைய குழுவினருக்கும், காட்சிப்படுத்தியிருக்கும் சமூகத்திற்கும், பார்த்து ரசித்த பார்வையாளர்களுக்குமே இவ்விருதில் சரிசமமான பங்கு உள்ளது.

அதனால் இங்கு தரப்பட்ட ஒவ்வொரு பாராட்டும், ஒவ்வொரு சிறப்பு சொல்லும் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதே சரியானதாகயிருக்கும்.

இவ்விருதுடன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை தந்திருக்கின்றார்கள், அதனையும் தமிழ்ஸ்டூடியோவிற்கே தர விரும்புகின்றேன்,.

ஏனென்றால் திரைப்படம் எடுப்பதைக்காட்டிலும், அதனை திரையிடுவது மிகவும் அசாதாரணமானது.

வெறித்தனமான வேட்கையால்தான் இப்பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். எனினும் எனக்கு இப்பாதையில் இவ்வித தடைகள் வருமென்று முன்னமே தெரிந்தே இருந்தது. என்னை சுற்றியிருக்கின்ற சூழலே இப்பாதையை எதிர்க்கின்றது. ஆனால் அதனையெல்லாம் கடந்துதான், நான் தொடர்ந்து படம் எடுத்து வருகின்றேன். அதற்கான தண்டனைகளையும் அனுபவித்துதான் வருகின்றேன். அந்நேரத்தில் இம்மாதிரியான பாராட்டுக்கள் எனக்கு புதிய சக்தியை தரும்.

இங்கு தமிழ்ஸ்டூடியோ நண்பர்களால் என்னைப்பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் எனது சிறுவயது தோழி ப்யூலா,வையும் பேட்டி எடுத்திருக்கின்றனர். எனக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. நாங்கள் இருவரும் திருச்சியில் படித்தோம். அதற்கு பின்னர் வெகு வருடங்கள் அவருடன் தொடர்பேயில்லை. அதற்குபின்னர், தங்கராஜ், ஷோபா சக்தி போன்றோரெல்லாம் ஆவணப்படத்தில் பேசியிருப்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. பேசியவர்களும் என்னிடம் சொல்லவில்லை. அந்தப் படத்தினை பார்க்கும் சமயத்தில் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. இப்படியான இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி.

பின்னர் கொட்டாங்குச்சி இசைக்கலைஞர் ராம் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். கிட்டத்தட்ட அவரைப்போலத்தான் நானும், அவரது இசையை கேட்ட பொழுது ’செங்கடல்’, படம் எடுத்த சம்பவங்கள்தான் ஞாபகம் வருகின்றது. இணையத்தில் கிடைத்த வீடீயோ, யூ ட்யூபில் கிடைத்த வீடியோ என்று கிடைத்தனவற்றையெல்லாம் கொண்டு எடுத்து முடித்த படம்தான் செங்கடல்.

“machines don’t ever make films”, என்பதனை நானும் ஒப்புக்கொள்கின்றேன். படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் என்னை இப்படியான படம் எடுத்துக்காண்பிக்க ஆதாரமாக இருந்தது.
நான் செய்வது எல்லாராலும் எடுக்கப்படுகின்ற படம் போன்றது இல்லை, அவைகள் போலியானதாகத்தான் இருக்கின்றது. எனது படங்கள் மூலமாக அடிமை வர்க்கத்தினரின் மீது செலுத்தப்படுகின்ற அதிகாரத்தை ஒடுக்க நினைக்கின்றேன், சமூக மாற்றத்தை கொண்டுவர விரும்புகின்றேன், எவரும் பேச தயங்குகின்ற விஷயங்களை துணிச்சலுடன் காட்சிப்படுத்த எண்ணுகின்றேன், நான் நல்ல சினிமா செய்துகொண்டிருக்கின்றேன் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து இத்துறையில் உழைத்து வருகின்றேன்.

இதற்காக எல்லாவிதமான வசவுகளையும் நான் எதிர்கொண்டிருக்கின்றேன். இத்தனை வசவுகளை இதற்கு முன்னால் இருந்தவர்கள் அனுபவித்திருப்பார்களா? என்பது தெரியாது. எல்லா இடத்திலேயும் பிரச்சனைகள் வந்திருக்கின்றது. ஆனாலும் எடுத்துக்கொண்ட பயணத்தில் தளராமல் பின்வாங்காமல் தொடர்ந்து பயணித்து வருகின்றேன்.

அதேபோல எல்லோராலும் படம் எடுக்க முடியும், என்று உரைப்பதுபோலத்தான், நான் இளைய தலைமுறையினர்க்கு முன்னால் பயணித்து வருகின்றேன். என்னோடு சக தோழர்களும் பயணித்து வருகின்றனர். ’மாத்தம்மா’, முதற்கொண்டு இப்பொழுது எடுக்கப்பட்ட ’செங்கடல்’ வரையிலான படங்கள் எல்லாமே, கையில் காசு இல்லாமல்தான் ஆரம்பித்திருக்கின்றேன். மொத்தமாக மாத்தம்மாவை எடுத்து முடித்த பின்பு கணக்கு போட்டுப்பார்த்தால் முப்பதாயிரம் செலவில் அப்படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

பேசாமொழியிலிருந்து பேட்டி எடுத்த பொழுதுகூட கேட்டனர். உங்கள் ஆவணப்படத்திற்கான பட்ஜெட்டை எப்படி சமாளிக்கின்றீர்கள் என்று?

நான் என்ன செய்தாவது அப்படத்தை முடித்துவிடுவேன். கடன் வாங்கி சமாளிப்பது போன்று எந்தவிதமான வேலையை செய்தாவது அப்படத்தை நான் முடித்துவிடுவேன். இப்படித்தான் இந்த பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளேன்.

’மாத்தம்மா’, படம் எடுத்து முடித்த பின்பு கிட்டத்தட்ட 200 கிராமங்களில் அப்படத்தை திரையிட்டோம், ஆனால் திரையிட்ட இடங்களிலே கூட சில பிரச்சனைகள் வந்தது. ஆனால் இதனையெல்லாம் விட, பாதிக்கப்பட்ட அப்பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற எண்ணமே முதன்மையாக இருந்தது.

’மாத்தம்மா’, திரையிடலின்பொழுது அக்கிராமத்தில் வாழ்ந்த பெண்கள், தாங்களும் எங்களுக்கு நிகழ்கின்ற அநியாயத்தை சொல்கின்றோம் என்று சொன்ன பொழுதுதான் “பறை” என்றோர் ஆவணப்படம் உருவானது.

”பறை” படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் பல மிரட்டல் அழைப்புகள் வந்தன. ’ஒடுக்குகின்ற இனம்’, என்று சொல்லப்படுக்கின்ற இனத்திலிருந்து எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்தது. பிரச்சனைகள் வந்தது. அதேபோல படம் எடுத்து முடித்த பின்பு சென்சாரிலும் பிரச்சனையாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட 40 நிமிட படத்தில் 19 இடங்களில் படத்தினை துண்டிக்க சொன்னார்கள். ஆனால் நான் எதற்கும் பயப்படவில்லை. ஒரு சின்ன வீடியோகூட பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்மையாக கிடைக்குமென்ற எண்ணத்தில் துணிச்சலாக இருந்தேன். மற்ற எந்த விஷயங்களைப்பற்றியும் சிந்திக்கவில்லை.

பல கமிஷன்களையும் தாண்டித்தான் ஆவணப்படத்தை திரையிட அனுமதி கிடைத்தது. ஒரு படத்தின் மூலமாக நாளைக்கே சமூக மாற்றத்தைக் கொண்டுவரமுடியுமென்று நான் நிச்சயமாக நம்பத் தயாராகயில்லை. அது நீண்ட பயணம், அந்தப் பயணத்தை எப்படி மேற்கொள்வது என்பதனை இந்த “பறை” தான் எனக்கு சொல்லிக்கொடுத்தது.

என்னுடைய மூதாதையர்களுக்காக எடுத்த ”பெண்ணாடி”, என்னுடைய மீனவ சமூகத்திற்காக எடுத்த “செங்கடல்” அதில் பங்கேற்ற ஒவ்வொரு கதாபாத்திரமுமே ரத்தமும், சதையுமாக வாழ்ந்தது. அந்த வழிகாட்டுதலின் பேரில்தான் தொடர்ந்து பல நல்ல படங்கள் செய்து வருகின்றேன். இந்த மேடை எனக்கு மேலும் ஆற்றலைக் கொடுக்கின்றது.

பல நேரங்களில் நான் இழந்தவைகளை இம்மாதிரியான நேரங்கள்தான் நிவர்த்திசெய்பவைகளாக இருக்கின்றன.

அப்படியான இந்த அவையும், இலக்கியத்திலும், சினிமாவிலும் ஆசான்களாக நினைக்கின்ற ஆளுமைகளுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்.

மேடையில் அமர்ந்திருப்பவர்களும், பார்வையாளர்களும் இத்தனை நேரமாக ஒருவரின் பேச்சைக் கேட்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர் என்றால் அவர்தான், லெனின். நிகழ்ச்சியிலும், இக்கட்டுரையிலும் அவரது தாக்கங்களே இறுதியாக, லெனின் அவர்களின் பேச்சு வழக்கிலிருந்தே,

படத்தொகுப்பாளர், இயக்குனர் லெனின்:

1993ல shortfilm documentary association of southern india என்ற அமைப்பு FFI மூலமாக அங்கீகரிக்கப்பட்டது, பத்து அல்லது பதினோரு பேர் கொண்ட குழுவில் சிவகாமி அம்மாதான் தலைமையாக இருந்தார். ஆனால் அதில் எவ்வித செயல்பாடுகளும் இல்லை. அவ்வமைப்பு செய்ய வேண்டிய வேலைகளைத்தான் தமிழ் ஸ்டூடியோ செய்து வருகின்றது.

அடிக்கடி சொல்றாங்க, தமிழ், தமிழ்னு அதைப்பத்தி ஜெயகாந்தன் ஒரு விஷயம் சொல்லியிருக்கின்றார். மெட்ராஸ்ல என்ன பாஷை பேசறானோ அதைப் புரிஞ்சுக்கணும், அதுவும் தமிழ்தான்.

சினிமாவுக்கென்று ஒரு தமிழ், “ஓடினான், ஓடினான் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான், ” என்கின்ற மாதிரியான வசனங்கள் எல்லாம் எழுதியிருக்கின்றார்கள் நம் மூத்த குடிமக்கள். அதையும், இந்த குடிமக்கள்தான் ரசித்தார்கள்.

தலைவர் வர்றாரு மரியாதை கொடுங்கனு, ஜெயகாந்தன்கிட்ட ஒருமுறை சொன்னாங்க.,
“நாங்க இந்தமாதிரியான படம் எடுத்ததுக்கு அவுங்கதாணடா மரியாதை கொடுக்கணும்”னு சொன்னவரு ஜெயகாந்தன்.

அதே ஜெயகாந்தன்தான் இப்ப எங்க போயி உட்கார்ந்திருக்கார்னு பார்க்கணும்.

தளர்ந்து போயிருவாங்கனு சொல்றாங்க.
தளர்ந்து போயிராதீங்க, உடம்பை திடமா வச்சிக்கணும்.
சும்மா சொல்லல. நடக்கிற நிஜத்தை சொல்றேன்.

இன்றைக்கு காலையிலேயே என்னை அழைத்து சொல்கின்றார்கள், ”தினமணில உங்க பேர் போட்ருக்காங்க சார், என்னவாம் சார்?, என்ன விஷயம்?” என்கின்றான் ஒரு கவிஞன். பேப்பரையும் சரியாகப் படிக்கல. லீனா படம் எடுத்திருக்கின்றார்கள், அதற்காக பரிசு கொடுக்கின்றார்கள் என்கின்ற அளவிற்குத் தான் தமிழ் இன்று இருக்கின்றது., தமிழ் இலக்கியவாதிகளும் அப்படியே இருக்கின்றார்கள்.

ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீஸர பொறுக்கினு சொல்லலாமா?னு இளையராஜா கேட்டார்.
”உடனே நீ பொறுக்கிடா, நான் பொறுக்கி , எங்க அம்மா பொறுக்கிடா”,னு சொன்னேன். உடனே அதிர்ச்சியாக இருந்தார் இளையராஜா.

பின்பு நானே அதற்கு பதிலும் சொன்னேன்.

“நீ மியூசிக்ல நோட்ஸ் பொறுக்குற, நான் எடிட்டிங்க்ல பிலிம பொறுக்கறேன், எங்க அம்மா அரிசில கல்லு பொறுக்குறாங்க” இங்க பேசற விஷயத்திற்கெல்லாம் கைதட்டிட்டு போயிராதீங்க.

உணருங்கள்.

சும்மா தமிழ் தமிழ் முத்தமிழ் என்கின்றார்களே,

“தமிழனென்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொன்னவனது சமாதியை போய் பார்த்து வாருங்கள்.

அங்கிருந்து தலமைச் செயலகத்தையும் பாருங்கள். சொன்னவன் எடம் எப்படியிருக்கு, அவனை வச்சு வாழ்ந்துட்டு இருக்கறவன் கட்டிடம் எப்படி இருக்குனு.
இதனை ஒரு ஆளும் கேட்கவில்லை.

சாகித்ய அகாதமியில இருக்கிறவன் என்ன சொல்றான்னா? என்னைப்பார்த்து “நீங்க ஊருக்கு நூறு பேர்”,னு குறும்படம் எடுத்தீங்களே”, அப்படீன்னு சொல்றான். அப்படி தமிழ் படிச்சவந்தான் சாகித்ய அகாதமியில உக்காந்திருக்கானுக.

’உட்கார்ந்திருக்கானுக’,னு சொல்றேன், அந்த அளவிற்கு தைரியம்.

லீனாவை ஒரு பெண் என்றெல்லாம் பார்க்கவில்லை. நாம் செய்ய வேண்டிய காரியத்தை ஒரு ஆள் செய்துகொண்டிருக்கின்றாரே என்றுதான் சந்தோஷம்.

நிறைய பேர் பேசுவார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் செய்கையில் பம்முவார்கள்.
பம்முவார்கள் என்றால் என்ன அர்த்தம்?
எல்லாம் நீயே தெரிஞ்சுக்கோ., அதுவும் தமிழ் தானய்யா.

டாகுமெண்டிரி மாதிரியே இருக்குனு படம் பார்க்க வர்றானுக. விஜய் படம்னா, வாயைத் தொறந்துவச்சிக்கிட்டு பார்க்கறானுக.

விஜய நாந்தானடா விஷீவல் கம்யூனிகேஷன்ல சேத்துவிட்டேன். அதுவும் விஷீவல் கம்ப்யூனிகேஷன்னா அதுதான் சினிமானு நிறைய பேர் நினச்சுக்கிறாங்க.
அடப்பாவிகளா?.

Journalist, நம்ம தமிழ் நாட்டுல journalist சூப்பரா வேலை செய்யறாங்க. ஒரு படத்தை review பண்ணுங்க அப்படீன்னு சொன்னா, படத்தோட கதையை அப்படியே சொல்றாங்க. போய் மலையாளப்பக்கமாக பாருங்கப்பா.

இந்தக்கூட்டம் கேரளத்தில நடந்திருந்தால், எத்தனை பெண்கள் வந்திருப்பார்கள் என்று தெரியுமா?
சும்மா பெண்கள், பெண்கள் என்று பேசுகின்றீர்களே, எங்கே வந்தார்கள் பெண்கள். ஏதோ நாலைந்து பேர் அமர்ந்திருக்கின்றனர். அந்த அளவில்தான் பெண்கள் இருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலில்தான், தளராத மனத்துடன் அருண் அவர்கள் நல்ல சினிமாவிற்கான முயற்சியை செய்து வருகின்றார், முன்னர் குறிப்பிட்ட அமைப்பு கூட செய்யவில்லை.அதற்கு அருணுக்குத்தான் வரவேற்பு கொடுக்கவேண்டும்.

விஜய், அஜித் படம்னா லைன்ல நிக்கிறான், இந்த நிலைமைல தமிழ்நாடு எப்படி உருப்படும்.
ஆனா, அருண்மட்டும் இதுலயிருந்து ஏமாந்துபோயி இந்தமாதிரியான விழாவெல்லாம் எடுத்துட்டு வர்றார்.

இந்தா இங்க உக்காந்திருக்குதே, சார்லி. இத ’உக்காந்திருக்குது’னு தான் சொல்வேன். பாக்கத்தான் சந்திரபாபு மாதிரி இருக்கும், ஆனா, அவருக்குள்ள என்னாமாதிரியான விஷயம் இருக்குனு தெரியுமா?
சும்மா படிச்சதனால வர்ல.

ராத்திரில போனை எடுத்துட்டு, எங்கிட்ட பேசும், “அண்ணா என்னான்னா பண்ணிட்டு இருக்கீங்க. ”அப்படீன்னு பேச ஆரம்பிச்சா, பல விஷயங்களை அவருகிட்ட இருந்து நான் கத்துக்கிறேன்.
ஏய்யா நீயும் இந்த சினிமாவுல நடிச்சுட்டு இருக்க. சார்லிக்குள்ளயும் ஏகப்பட்ட விஷயம் இருக்குப்பா, அத யாராவது யூஸ் பண்ணுங்கப்பா.

நானாவது பயன்படுத்திக்கலாம்னுதான் நினைக்கிறேன், ஆனா, இந்த முகங்களையே நான் எடுக்குற சினிமாவுல போடக்கூடாதுனு தான் முடிவு செஞ்சிருக்கேன். எத்தனை தடவைதான், இதே முகங்களை மேலயும், கீழயும் பார்க்கறது.

மாற்றுசினிமாவெல்லாம் இது இல்லை. லீனா எடுக்கின்றார்களே இதுதான் அசல் சினிமா. நாங்க எடுக்கின்றது எல்லாமே அசல் சினிமா. ரசிக கண்மணிகளெல்லாம் பார்க்கின்றீர்களே அதுதான் மாற்று சினிமா. எத்தனை நாள்தான் மன்றம் இல்லை இல்லைனு ரசிகர்களை ஏமாத்தீட்டு இருப்பீங்க.

இத்தனை கூட்டத்திலேயும் எவனாவது ஒருத்தன் ரெண்டு பேர் இருப்பானுக, மன்றத்தில சேர்ற பசங்க.
ஆனால், யாம் எதற்கும் அஞ்சோம்.

என்ன அடிப்பியா?
ரோட்லதான் போயிட்டிருப்பேன். எதற்கும் பயப்பட மாட்டேன்.

தமிழ் மேடைக்கு வந்தாலே, ஏதோ மாற்று மொழி மாதிரியாக வந்துவிடுகின்றது.

அதோ அங்கேயொரு கிழம் உக்காந்திருக்காரு. பேரு, பாரதி மணி. அவர ஒரு கிழம்னு சொல்றதக் காட்டிலும், well learned man அப்படீன்னுதான் சொல்லணும். தேசிய அளவிலான நாடகங்களில் பங்கெடுத்தவர், எங்கிருந்தோ வந்து, கால்களை தத்திக்கொண்டே இங்கே வந்து அமர்ந்திருக்கின்றாரே, அவர்தான் சிறந்த மனிதர்.

விஜயோ, அஜித்தோ, சூர்யாவோ எவனும் இல்லடா. அவர்தான் உண்மையான மனிதர்.

அவன் தல என்று சொல்கின்றான்.
தல இல்லைன்னா முண்டம்னு புரிஞ்சுக்கிடமாட்டாங்க.
அவங்கள பத்தி பேசிப்பேசி அலுத்துப்போச்சு. ஏன்னா அந்தமாதிரி சினிமாவா ஆக்கி வச்சிருக்காங்க.

’முதல் தேதி’, படத்தை பார்த்தபின்தான் திரைகதையை கற்றுக்கொண்டேனென, எம்.டி. பாஸ்கரன் சொல்வார். ’முதல் தேதி’ என்ற படம், ’பணம்’, என்கிற படம் இப்படங்களையெல்லாம் இப்பொழுது நீங்கள் பார்த்தீர்களேயானால் டாகுமெண்டரி மாதிரிதான் இருக்கும்.

ஏன்னா?
நடக்கிறான், நடக்குறான். எதுல டாகுமெண்டரியில.

ஏண்டா,
உனக்கு பொறுமையே இல்லையா.
அவன் நடந்து வந்துகிட்டேயிருக்கானு சொல்றீயே, அவன் எங்கிருந்து நடந்து வந்திட்டு இருக்கான்னுதான், எந்த இடம் இதையெல்லாம் தான் நீண்ட காட்சியா காண்பிக்கின்றான். அதைப்பார்த்து லேக் அப்படீன்னு சொல்றான். அதுக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாது. இதுமாதிரியெல்லாம் சொல்லிட்டு முதல்ல கோடம்பாக்கத்துல சுத்திக்கிட்டு இருந்தாங்க, இப்ப சாலி கிராமத்தில சுத்திக்கிட்டு இருக்காங்க.
அது இல்லை, சினிமா,
சினிமா என்பது வேறு.
இப்படி பேசிக்கிடே போக முடியும்.
அது வேண்டாம்.
நாம செய்ய நினைத்த காரியங்களை செய்துகொண்டிருக்கின்றோம்.

டாகுமெண்டரீஸ்னா, என்ன? குறும்படம்னா என்ன? அப்படியெல்லாம் தெரியாம இருக்கின்ற இந்த இடத்தில திரையிடும்பொழுது நாம்தான் போய் பார்க்கணும். 426 மணி நேரம், 800க்கும் அதிகமான படங்கள். இங்கு வந்திருக்கின்ற பக்கிரிசாமி தான் அழைத்திருந்தார். போய் பார்த்தோம். அவ்வளவும் அருமையான படங்கள்.

ஏம்பா அனைத்தையும் போட்ரலாமேப்பா, எதுக்காக தேர்வு செய்றதுக்குனு ஒரு குழுவை வச்சுக்கிட்டு, அவனுகளுக்கு மூணு மாசத்துக்கு சோறு போட்டு , இதெல்லாம் வீணான வேலை.

அனைத்து படங்களையும் எம்மக்களுக்கு போட்டு காண்பிக்கலாம்பா. ஏன்னா எம்மக்கள் பார்க்கணும்.
நாங்க பார்த்து இவ்வளவு தூரம் பேசறதுக்கு சினிமா ஒரு சக்தி கொடுத்திருக்கின்றதெனில், அந்த சினிமாக்களை எங்க சனங்கள் பார்க்க வேண்டாமா?

பார்க்க வைக்காததுதான் நம்முடைய குற்றம்.
அதற்குண்டான முயற்சிகள் தான், இப்பொழுது எடுத்திட்டு இருக்கோம். நாம எடுத்த படத்தை மட்டும் பேசிட்டு இருந்திடக்கூடாது. நாக் அவுட் படத்தை பத்தி நீ பேசிக்கோ.

இந்த விஷயத்திலதான் இளைஞர்கள் தெளிவாக இருக்கான். இடைப்பட்ட காலமா இருக்கின்ற 50,60 வயசு பெருசுங்கதான் பிரச்சனை. நானும் அந்தவயசுக்காரந்தான், ஆனாலும் நான் திடமா இருக்கேன். ஆனா இந்த கெழங்க எல்லாம் சரியில்லை. ஒரு பத்து பேரு இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறைக்கு அவன் எடுத்துட்டு போவான் நல்ல படங்களை.

இப்பொழுது நூறாவது ஆண்டு சினிமா கொண்டாட போகின்றார்களே , அவர்களுக்கு ஆவணப்படம் எடுக்கின்ற இவர்களைப்பத்தியே தெரியாது. திரும்பியும் ஆட்டம், பாட்டம்தான். இந்தமாதிரியான படம் எடுப்பவர்களை அழைத்து பேச வைக்கின்றனரா?, அவன் மாத்திரம் ஜிலேபி சாப்பிட்டு ஓடிடுவானுக. இதுதான் நடக்குது.

யாருய்யா நூறுவருஷம்.

பழைய படங்களை தியேட்டர் முழுவதும் மறுபடியும் போட்டு காண்பிக்கப் போகின்றார்களா?., படம் எடுத்தாரே முதலியார் அவரைப்பத்தி பேசப்போகின்றார்களா?, எதுவும் இல்லை.

திரும்பியும் அவ ஆடுவா, இவன் ஆடுவான், எடிட்டிங்கல பட், பட்னு கட் பண்ணுவானுக. அதோட முடிஞ்சு போச்சு. பின்னர் அது எந்த டி.விலயாவது ஓடும்.

சினிமாவில மொதலாளிங்கறவன் போயிட்டான். இப்பொழுது மாஃபியா தான் இருக்கான்.
இதுலதான் மொதலாளிங்களுக்குத் தெரியும், தொழிலாளர்களோட கஷ்டமெல்லாம், ஆனால் இந்த மாஃபியாக்களுக்கு தெரியமாட்டேங்குது.

இந்தமாதிரி தினமணியில செய்தி வந்திருக்குதுனு இந்த விழாவிற்கு வந்து குவிய வேண்டாமா.?
கேரளாவுல குவிஞ்சிருப்பானுக.

தமிழ் நாட்டு ஆட்களும் தங்கமானவங்கதான், ஆனா, அந்த தங்கத்தை பயன்படுத்த தெரியலை.
அதனால நல்லா யோசிங்க,
யோசிக்கறதோட நின்று விடாதீர்கள்,
நடைமுறையிலேயும் அதனை செய்யணும்.

ஒன்றே செய், நன்றே செய், அதையும் இப்பொழுதே செய்.
ஏன்னா, நமக்கு நேரம் கிடையாது.

நம்மள சினிமாதான் உருவாக்குச்சு, இப்படிப்பட்ட சினிமாவ வித்திட்டு இருக்கானுகளே, அப்படிப்பட்ட கோபம்தான் இதெல்லாம் . அது புரியணும்.

சந்திரபாபு சொன்னது மாதிரியாகத்தான்.

ஆங்கிலப்படத்தை பாருங்கடா, புரியலயே.
டேய் பார்த்துக்கிட்டே இருடா, புரியும் .
அப்படீன்னு சொல்லுவார்.
அதுக்கப்பறம் ஆங்கிலப் படங்கள் பார்த்தே ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.

எந்த குருவையும் நாடாமல், எந்த இந்திப்பிரச்சார சபாவிற்கும் போகாமல், இந்தி சினிமாவின் மூலமாகவே இந்தி கற்றுக்கொண்டேன். ஏனென்றால்., இந்த சினிமா.

1955ல தென்றல் பத்திரிக்கையில ”பூக்காமல் போகுமோ பூ.”
இந்த வரிகளுக்கு ஒருவர் எழுதியிருக்கின்றார்.

”வையகம் இகழ்ந்தாலும்
வாள் பிடிப்போர் தம் தொழிலை செய்ய மறப்பதுண்டோ.

செவ்விழியே!

மொய்க்குழலால் நோக்காமல் போனாலும்,
நோகாத கற்றாழை பூக்காமல் போகுமோ பூ!”

என்ன புரியலையா!
இது தமிழ்.

1955லயே எழுதியிருக்கான்.
இது மாதிரியெல்லாம் படிச்சு பார்க்கும்பொழுது ஏன் ரெம்ப பேரு இப்ப எழுதுறானுகன்னே புரியல.

இன்னொருவர், இன்னொரு வாக்கியம் கொடுத்திருக்கின்றார்.

’வாள் கொண்டு தாக்குவோம் வா!’

இதுவும் 1955ல படிச்சது, ஆனா நான் பிறந்தது 1947ல தான்.

தென்றல் என்கின்ற பத்திரிக்கை, கண்ணதாசன் அதற்கு ஆசிரியர்.

”சரிந்து விழும்
சாதி சமய பழக்கம்,
முறிந்துவிடாத படி முண்டு
வரிந்து கட்டி
தோள் கொடுத்து நிற்போரை தோழா!
பகுத்தறிவு வாள் கொண்டு தாக்குவோம் வா!”

என்றபடியே முடிக்கின்றார். இதெல்லாம் தான், தமிழாகத் தெரிகின்றது.
வேறெதுவும் தமிழாகத் தெரியவில்லை.

ஏட்டில், எழுத்தில், நாட்டில், நடப்பில், நான் காட்டும் உண்மையில்
’எத்தனை கோணம், எத்தனை பார்வை’
அப்படீனு ஒரு படம் இயக்கினேன். அதுவும் ஜெயகாந்தனோட கதைதான்.
அது இங்க யாருக்காவது தெரியுமா?

அதுதான் விஷயம். அவந்தான் தமிழன்.
அந்தப் படத்தை பார்த்து குறும்படம்னு சொல்வான்.

இருப்பினும்,

நோகாமல் அந்த பூ பூத்துக்கொண்டேயிருக்கின்றதே, அதேபோல பூத்துக்கொண்டேயிருப்போம். அதற்காக அஞ்ச மாட்டோம்.
ஏனெனில்,
“you’re missing the bus, we don’t”

நீங்க தவறவிட்டுவிட்டு திரும்பியும் இதையேத்தான் அரைத்துக்கொண்டேயிருப்பீர்கள். திரும்பியும் அதே ரெண்டுபேர்தான் காதலிச்சுட்டு இருப்பான்.

நீங்க நல்லா பார்த்தீங்கன்னா தெரியும்.

ரெண்டு, ரெண்டு பேருதான் தமிழ்ல மாத்தி ஹீரோ வா வந்துட்டே இருப்பாங்க.

முப்பது வருஷம், முப்பந்தைத்து வருஷத்திற்கு முன்பாக indepentant film makers என்று சொல்கின்ற பொழுது, திருப்பி என்னைய பார்த்து கேள்வி கேட்டாங்க.

என்னடா indepentant film makersனு.
ஆனால், அதுதான் இப்பொழுது வந்துகொண்டிருக்கின்றது.

ஆகையால், சினிமாக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கோடம்பாக்கமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

ஏனென்றால் கோடம்பாக்கத்தில் இல்லை இப்பொழுதைய சினிமா.
இதை அப்பொழுது சொன்னேன், champer ல இருந்து notice வந்துச்சு.

எடிட்டிங்க், கத்திரிக்கோல் வச்சு கட் பண்ணாத்தான், எடிட்டிங்கானு கேட்டேன்.
உடனே, எடிட்டிங்க் அஸோஸியேசனிலிருந்து ஒரு notice வந்துச்சு.

இப்ப எங்க இருக்கு, கத்திரிக்கோல்.

இப்ப இருக்கின்ற சூழலில் யார் வேண்டுமானாலும் பாடலாம், ஏன்னா, ஸ்ருதிய எடிட்டிங்கல ஏத்திக்கிருவாங்க.

அந்தக்காலத்தில தியாகராஜ பாகவதர் பாடினாரே, அதெல்லாம் என்னான்னு சொல்வது.

தியாகராஜ பாகவதர் 100, 150 அடியில பாடிக்கொண்டு வருகின்றார். அந்தமாதிரி இப்பொழுது யாரால் பாட முடியும்?

ஹீரோயின்களை பாட வைக்க, 1,2, 3 சொன்னால் போதும் என்று சொல்கின்றனர். நல்லா பக்கத்துல கவனிச்சு பார்த்தான் தெரியுது, திரையில அவங்க பாடவேயில்லை, திரையில் அவர்களெல்லாம் 123,123, 123னு சொல்லிட்டு வர்றாங்க.

சீ, வெட்கமாயில்லை.

இப்பொழுது கொட்டாங்குச்சியில் வாசித்தாரே, ’அகப்பை’, தூயதமிழ்.

நம்ம ஆட்களுக்கு அகம், புறம்,னாலே என்னான்னு தெரியாது. ஆனால்,, மலையாளி பேசறான்,
”அகத்தே, புறத்தே”. அவ்வளவு சுத்தமாக இருக்கின்றது.

இப்ப கொலவெறி, கிலவெறினு எவன் எவனோ பாட ஆரம்பிச்சுட்டான்.
ஆனா,
எங்க சந்திர பாபு மாதிரியாக பாடமுடியுமா.?

“சொல்லுற சொல்லிப்புட்டேன்,
செய்யிறத செஞ்சுடுங்க,

நல்லதுன்னா, கேட்டுக்கங்க,
கெட்டதுன்னா விட்டுடுங்க

முன்னால வந்தவங்க,
என்னன்னமோ சொன்னாங்க,

மூளையில ஏறுமுன்னு,
எழுதி வச்சாங்க.

ஒண்ணுமே நடக்காம,
உள்ள வந்து செத்தாங்க.

என்னாலே ஆகாதுனு
எனக்குத் தெரியுமுங்க.

சித்தர்களும் யோகிகளும்,
சிந்தனையில் ஞானிகளும்.

புத்தரோடு ஏசுவும்,
உத்தமரு காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி, எழுதி வச்சாங்க.

அத்தனையும் படிச்சு இங்க,
(இந்த எடத்துல நிறுத்தினாத்தான், லாக்னு சொல்றான், கோடம்பாக்கத்துல இருக்கிறவனுக.
அடப்போங்கடா, இங்க நிறுத்தி அடுத்த வார்த்தை சொன்னாத்தான், அதுக்கு ஒரு வலிமை கிடைக்கும்.)

என்னத்த கிழிச்சீங்க.!”

ஒரு சிவாஜி கணேசன் பாசமலர் படத்துல நடிச்சதால வர்றல விஷயம். அத அவங்க sustain பண்ணி எடுத்ததாலும், அதை கட் பண்ணி போட்டதாலும்தான் வந்துச்சு. இன்னைக்கு 50 வருஷம் கழிச்சு திரும்பியும் ”பாசமலர்” வெளியாகியிருக்கு அப்படீன்னு சொல்றாங்க. அதைத் திரும்பியும் எடிட் பண்ணும்பொழுதான் தெரிகின்றது, பல விஷயங்கள்.

அதனை இயக்குனர் பீம்சிங்கே சொல்கின்றார்.
”சிவாஜி இல்லையென்றாலும், இயக்குனர் இல்லையென்றாலும், விஸ்வநாதன் ராமமூர்த்தி இல்லையென்றாலும், கண்ணதாசன் இல்லையென்றாலும் பாசமலர் படம் ஓடும்”, என்றார்.

எப்படீன்னா?
அது கொட்டாலக்காரன் கதை.

அத எவனுமே இங்க போடல, வெறும் ‘ஆரூர்தாஸ், ஆரூர்தாஸ்” அப்படீன்னு மட்டும் போட்டுக்கிறாங்க.
அது ஒரு மலையாளியோட கதைங்கிற விஷயம் இங்க யாருக்கு, எத்தனை பேருக்குத் தெரியும்.

ஆகையால் அதுமாதிரியான விஷயங்களை ஆய்வு செய்து, அதைக் கண்டுபிடிங்கப்பா.

”என்னாலே ஆகாதுன்னு”, பட்டுக்கோட்டை எழுதியிருக்கின்றார்.

“என்னாலே ஆகுமுன்னு,
நம்மாலே ஆகுமுன்னு
நமக்குத் தெரியுமுங்க”, அப்படீன்னு அடிச்சேன் நான்.

அனைவருக்கும் நன்றி!
வாழ்க வளமுடன்.

மாற்று சினிமாவின் வளர்ச்சியையும், வணிக சினிமாவின் வீழ்ச்சியையும் இக்கூட்டத்தில் பதிவுசெய்ததோடு அரங்கிலிருந்த மக்கள் கலைந்தனர்.

அடுத்தும் இதேபோன்றதொரு நிகழ்வு வர இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அதுவரை இக்கூட்டமும், இங்கு நிகழ்த்திய ஆளுமைகளின் பதிவுகளும் மாற்று சினிமா ஆர்வலர்களின் மனதின் அடியாளத்தில் இனிமையாக குறுகுறுத்துக்கொண்டேயிருக்கும்.

முற்றும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </