இதழ்: 26    கார்த்திகை (December 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
சத்யஜித்ரே : இந்திய மரபின் செவ்வியல் முகம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா - 6 - சாரு நிவேதிதா
--------------------------------
இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல் - தினேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ்
--------------------------------
ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை‘நிர்மலா’- தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வாழ்க்கை – கீஸ்லோவ்ஸ்கி எனும் கலைஞன் - நா.முத்துகுமார்
--------------------------------
திரைப்பட நடிகர் : இயக்குனரின் பார்வையில் - மைக்கலஞ்சலோ அந்தோனியோனி
--------------------------------
 
   


   

 

 

தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா.,

”நாடு கடந்த கலை” நூல் வெளியீட்டு விழா:

- தினேஷ்

தமிழ்ஸ்டுடியோ இயக்கமாக ஆறு ஆண்டுகளைக் கடந்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டியே கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிறன்று மாலை 6 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நிகழ்ச்சி நடந்துமுடிந்தது. அந்நாளிலேயே “நாடு கடந்த கலை” என்ற புத்தகமும் வெளியானது. சிறப்பு அழைப்பாளர்களாக படத்தொகுப்பாளர் பீ.லெனின், ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, நடிகர் சார்லி, இயக்குனர்கள் மிஷ்கின், ராம், விக்ரம் சுகுமாரன், அம்ஷன்குமார் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் ஸ்டுடியோ அருண் எழுதியிருக்கும் “நாடு கடந்த கலை” புத்தகத்தை அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வெளியிட, அருனின் ஆசிரியர் திருமதி. புஷ்பராணி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தமிழ்ஸ்டுடியோவின் செயல்பாடுகளைக் குறித்தும், அன்று வெளியான புத்தகம் குறித்தும், ஒரு இயக்கமாக தமிழ்ஸ்டுடியோ என்னென்ன செயல்களைச் செய்யவேண்டுமென்றும், அது செய்யத்தவறிய செயல்கள் என்னென்ன என்றெல்லாம் இந்த ஏழாம் ஆண்டில் பாராட்டியும் விமர்சித்தும் பல கருத்துகள் இந்நிகழ்வில் அரங்கேறின. ஒரு நல்ல படைப்பாளிக்கு கிடைக்க வேண்டியது பாராட்டுதலைக் காட்டிலும், ஆரோக்கியமான நல்ல விமர்சனங்கள் தான் என்பதை நன்கு உணர்ந்திருப்பதால், அதனை நாங்கள் வரவேற்பதும் உண்டு. இது அவர்களுக்கான உரிமையும் சுதந்திரமும் கூட.

ஆனால், அடுத்த நாளில் இணையப் பக்கத்தில் இயக்குனர் மிஷ்கின், சார்லி, பீ.லெனின் முதலானோர் பேசியதை மட்டும் இணையத்தில் பதிவேற்றி குளிர்காய்ந்து கொண்ட தமிழ் இந்து, மற்ற சிறப்பு விருந்தினர்களைக் கண்டு கொண்டது மாதிரியாக தெரியவில்லை. காரணம், அவர்கள் ஏதும், சர்ச்சைக்குரியதாக பேசவில்லை போலும். பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சி நடக்கிற பொழுது அங்கு பேசப்படுகின்ற கருத்துகளும் பொதுவெளிக்கே வருகின்றது. மறுக்க முடியாது.

அதேவேலையில், இங்கு குறிப்பிடுகின்ற மிஷ்கின், சார்லி, பீ.லெனின் போன்றோர் பேசியதை முழுவதுமாக ஒளிபரப்பாமல், அவர்கள் பேசியதிலிருந்து எது விளம்பரம் ஆகுமோ, எது ரசிகர்களை சொரிந்துவிட்டு குஷிப்படுத்துமோ அதனை மட்டும் வெட்டி., ஒட்டி மிகை செய்திருப்பது ஏற்புடையதாகாது. ரஜினியை விமர்சனம் செய்திருப்பதாக பீ.லெனினும், ”பீப்” ஒலியெல்லாம் கொடுத்து தணிக்கை செய்து ஸ்பெஷல் எபெக்டுடன் வெளியிடப்பட்டிருக்கின்ற மிஷ்கினின் பேச்சும், இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இதனைத் தவிர்த்தும், விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்றும், வேறு மாநிலங்களில் விமர்சனங்கள் எப்படியாக இருக்கிறது, தமிழ்சினிமாவில் முன்னோடி முயற்சிகளாக என்னென்ன நடந்திருக்கிறது, நல்ல சினிமாவிற்கு விமர்சகனின் தேவை என்ன? என்பதெல்லாம் குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது. இதனையெல்லாம் தவிர்த்து, சர்ச்சைக்குள்ளாகியிருப்பதை மட்டும் மெனக்கெட்டு தன் பக்கத்தில் பதிவேற்றி, சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது., சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்கு எது அத்தியாவசியத்தேவை, என்பதையெல்லாம் சிந்தித்து கடைநிலை வாசகர்களையும் சென்றைடையும் நல்ல நோக்கில் இந்த காணொளிகளை தமிழ் இந்து வெளியிட்டிருக்கிறது.

அதனைப் பார்த்து தங்களுடைய பாணியில் விமர்சனம் செய்வது எப்படி என்று நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியதை வைத்து பகடிசெய்து இணையத்தில் சிலர் வெளியிட்டிருக்கின்றனர். அதனையும் பலபேர் பார்த்து, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகின்றனர். இது முக்கியமான சமூகமாற்றம். இம்மாற்றங்களை எதிர்பார்த்துதான் தமிழ் இந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, இதுதான் தமிழி இந்துவின் எதிர்கால லட்சியம் என்றால், என்ன சொல்ல?

நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற பிரச்சனைகளையும், சம்பவங்களையும் , செய்திகளையும் இப்படித்தான் அவர்கள் தங்கள் பத்திரிக்கைகளில் நேர்மையாக., ஊடக தர்மத்தின் அடிப்படையில் வழங்கிவருகிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது.

இனி., தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழாவில் பேசிய சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துகள் பின்வருமாறு.

எழுத்தாளர் பவா செல்லத்துரை:

நான் என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் இயங்கினது போலவே, அருண் தன்னுடைய இளமைப்பருவத்தில் இயங்குவது தான் எங்கள் இருவரையும் ஒன்றாகச்சேர்க்கிறது. அண்மையில் என் மனைவி கே.வி.ஷைலஜா அவர்கள் புதுக்கதை ஒன்றை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து என்னிடம் கொடுத்தார். வழக்கமாக கதை படிக்கிற சாதாராணமான மனநிலையோடுதான் அந்தக்கதையை படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அப்போது அந்த நாள் முழுவதும் எனக்கான பித்தநிலையை அந்தக்கதை கொடுக்கப்போகிறது என்று தெரியாது.

அந்தக்கதை சாதாரணமாக பத்திரிக்கை அலுவலகத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அங்கு வேலை பார்க்கிற சப் எடிட்டர், எடிட்டரிடம் சென்று 200 ரூபாய் கடன் கேட்கிறார். ”இந்த மாதம் சம்பளம் வாங்கினவுடன் நீ தான் எனக்கு சம்பளம் தரணும், ஆபீஸ்லயிருந்து அவ்வளவு பணம் கடன் வாங்கியிருக்க ” என்று உடனடியாக எடிட்டர் சொல்கிறார்.

இனி என்னசெய்வது என்று சப் எடிட்டர் தலைகுனிந்து நிற்கிறபொழுது, எடிட்டரிடமிருந்து 50 ரூபாய் மட்டும் கடன் கிடைக்கிறது. அந்தப்பணத்துடன் அவன் வீட்டிற்குச் செல்கிறான்.

இவனைப் பார்த்தவுடன், குழந்தை காய்ச்சலாகப் படுத்திருக்கின்ற செய்தியை மனைவி சொல்கிறாள். ”குழந்தை பிறந்து இவ்வளவு வளர்ந்த பின்னும் இன்னமும் பேசவே ஆரம்பிக்கல, இதைப்பத்தியெல்லாம் உங்களுக்கு கவலையே இல்லையா?” என்று மீண்டும் கணவனைப் பார்த்துக் கேட்கிறாள். அவனும், எல்லாம் சரியாகிவிடும் என்று மனைவியிடம் சொல்லிப்பார்க்கின்றான். பின்னர் தன் கையாளாகாத தனத்தோடு குழந்தையிடம் சென்று பேசுகிறான். ”என்னைக்கு நீ வாய திறந்து பேசுவ? என்னைக்குத்தான் நீ என்ன அப்பானு கூப்பிடுவ? என்னைய விடு, அம்மாகூடவே வளர்ந்த நீ, எப்பத்தான் அவள அம்மானு கூப்பிடப்போற?” என்றெல்லாம் கேட்கிறான்.

இதெல்லாம் கதையில் சாதாரணமாக கடந்துபோகக்கூடிய விஷயங்கள் தான். ஆனால் அன்றிரவு அவன் அலுவலகம் சென்று வந்தவுடன் மனைவி புதுக்கேள்வி ஒன்றை எழுப்புகிறாள். ”நீங்க குழந்தை கையில காசு கொடுத்துட்டு போனீங்களா?” என்று கணவனைப் பார்த்து கேட்கிறாள். அதற்கு, “நானே தினமும் பத்து ரூபாய் கூட இல்லாமல் ஆபீஸ்க்கு போறேன், பின்ன நான் எப்படி குழந்தைகிட்ட காசு கொடுத்துட்டு போறது” என்கிறான் கணவன். அந்தக்குழந்தையின் கையில் நூறு ரூபாய் இருக்கிறது. மனைவிக்கு ஒரே சந்தேகம். இந்த நூறு ரூபாயை அந்தக்குழந்தையிடம் யார் கொடுத்தது. யோசித்துப் பார்க்கிறாள். ஒருவேளை எடிட்டர் தன் வீட்டிற்கு வந்திருப்பார். குழந்தையிடம் நூறு ரூபாயைக் கொடுத்திருப்பார், என்று அந்தப் பணத்தை எடுத்துச் செலவு செய்ய ஆரம்பிக்கின்றனர் தம்பதியினர்.

ஆனால், அடுத்த நாளும் அதே பிரச்சனைதான். அன்றைய மாலையில் அவன் ஆபீஸிலிருந்து வந்தவுடன் ”இன்றைக்கு குழந்தைகிட்ட யார் ஐநூறு ரூபாய் தந்தது?” என்று மனைவி கேட்கிறாள். இது நார்மலான விஷயம் இல்லை. எங்கேயோ தப்பு நடக்கிறது என்று மட்டும் தெரிகிறது. பிற குழந்தைகளைப் போன்ற சராசரி செய்கையுடன் இந்தக்குழந்தையின் நடத்தையில்லை. இருப்பினும் அந்தக்குழந்தையிடமிருந்து அன்றாடம் பணம் வருகின்றது. இவர்களுடைய பொருளாதார தேவையினை அந்தப் பணத்தை வைத்து ஈடுசெய்து கொள்கின்றனர். குடும்ப நிலையும் முன்னேற்றமடைகின்றது.

ஒரு நாள் காலை முதல் மாலை வரை அந்தக் குழந்தையை அவர்களுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கின்றனர். இருப்பினும் அந்தக்குழந்தையிடம் யார் காசு கொடுப்பது என்று கண்டறிய முடியவில்லை. இப்படியே அவர்கள் வாழ்க்கை நடக்கிறது.

இந்த ONIDA black & white T.Vயை மாத்திட்டு, புதுசா எல்.சி.டி டி.வி ஒண்ணு வீட்டுக்கு கொண்டு வரலாம் என்றெல்லாம் கணவன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது அந்தக்குழந்தை தத்தி தத்தி நடந்துவந்து ஒரு முழு 500 ரூபாய் நோட்டுக்கட்டை அவனிடம் கொடுக்கிறது. அவனுக்கு பயங்கரமான அதிர்ச்சி. அந்தப் பணத்தினால் அவனின் வீட்டின் நிலைமையும், கட்டமைப்பும் உடனே மாறுகிறது. இன்னமும் வரப்போகிற பணத்தை என்னவெல்லாம் பண்ணலாம் என்றெல்லாம் அவன் யோசிக்கிறான். ”தனியாக ஒரு விமானம் வாங்கிவிட்டு, அதற்குத் தகுந்த விமான ஓடுதளம் ஒன்றையும் உருவாக்கிக்கொண்டால் நம் பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிடும். இதுவரை போதும்” என்றெல்லாம் அவனின் கற்பனை விரிகிறது.

அப்பொழுது மனைவி அவனிடம் வந்து “எத்தனை நாளாய் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தக் குழந்தை நார்மலாகவே இல்லை, குழந்தயை டாக்டரிடம் கொண்டுபோய் காட்டுங்கள். சிகிச்சை தேவைப்படுகிறது. குழந்தைக்கான மருத்துவம் கேரளாவில் சாத்தியப்படாது. வேறு இடத்திற்குத்தான் கொண்டுசெல்லவேண்டும், பெங்காலில் இதற்கு மருத்துவம் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். நீங்க கவனிக்கவே மாட்டீங்களா?” என்றெல்லாம் கேட்கிறாள். அவன் அமைதியாகவே இருக்கிறான்.

“நீங்க ஏன் இந்தக்குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிக்க மாட்டேனென்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று மனைவி அழுகிறாள். அவன் குற்ற உணர்ச்சியால் நிலைகுனிந்து நிற்கிறான். ”ஒரு வேளை அந்தக்குழந்தையை மருத்துவரிடம் காண்பித்துவிட்டால், அவரும் அதற்கு சிகிச்சையளித்துவிட்டால், அந்தக்குழந்தையும் பேச ஆரம்பித்துவிடும். பின்னர் அந்தக்காசு எங்கிருந்து வருகிறது என்பதும் தெரிய ஆரம்பித்துவிடும்., ஒரு வேளை பணம் வருவது நின்றுவிட்டால்?” என்கிற மாதிரியான யோசனைகள் அவனை அலைக்கழிக்கிறது. இத்தனை விஷயங்களும் அந்தக்குழந்தையை அவன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லாததன் பின்னணியில் இருக்கிறது.

ஒரு நாள் டாக்டரிடம் காண்பிப்பதற்காகக் கூட்டிச்சென்ற குழந்தையை திரும்பிக் கூட்டி வருகின்றான். மனைவி காரணம் கேட்கிறாள். “நாங்கள் அங்கு போவதற்குள் பெங்காலுக்கு செல்கின்ற விமானம் போய்விட்டது” என்று அவன் பொய்யான காரணம் சொல்கின்றான். மனைவி உண்மையான காரணம் தெரிந்து சிரிக்கிறாள். அவனோ, குழந்தையை டாக்டரிம் காண்பிக்காமல் இன்னமும் கொஞ்ச காலத்திற்கு பெங்கால் பயணத்தை ஒத்திப்போடுகின்றான்.

ஒருநாள் வேகமாக எடிட்டர் அவர்கள் வீட்டிற்கு வருகிறார். ”என்னால பத்திரிக்கையே நடத்த முடியல., உங்கள் நிறுவனத்திற்கான விளம்பரத்தை எங்கள் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் கொடுத்தால் அதில் வருகின்ற பணத்தை வைத்துக்கொண்டு ஒரு ஆறு மாத காலத்திற்கு என் பத்திரிக்கையை நடத்திக்கொள்வேன்” என்று கேட்கிறார். ”நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு பத்திரிக்கையை நடத்துகிறாய்., அதனை நானே வாங்கிக்கொள்கிறேனே” என்றுதான் அவன் கேட்பான். இப்படியாக அக்குடும்பத்தின் வாழ்க்கைமுறைகள் கதையின் போக்கில் நடந்துசெல்கிறது. ஆனால், கதையின் இறுதிக்கட்டம் தான் அதிமுக்கியமானது.

ஒரு நாள் அந்தக்குழந்தையை மருத்துவரிடம் அழைத்துப் போகும் கட்டாயமான சூழல் உருவாகும். டாக்டர் அந்தக்குழந்தையை ஸ்கேன் பண்ணுமிடத்திற்கு அழைத்துச்செல்வார். சிறிது நேரத்தில் டாக்டர் ஸ்கேன் ரூமிலிருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவருவார். ”இவ்வளவு நாளாய் என்ன பண்ணிக்கொண்டிருந்தாய்?” என்று அவனைப் பார்த்துக் கேட்பார். இவனுக்கு ஒன்றுமே புரியாது. டாக்டரைப் பார்த்து “என்ன சார், என்ன ஆச்சு?” என்று கேட்பான். ”இந்தக் குழந்தை இறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது., இப்போது பணம் உற்பத்தி செய்கிற மிஷினாகத்தான் இந்தக் குழந்தை மாறியிருக்கிறது, அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. இன்னமும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தக்குழந்தை அப்படியேத்தான் இருக்கும்., இக்குழந்தையிடமிருந்தும் பணம் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், குழந்தை உயிரோடு இல்லை” என்று மருத்துவர் சொல்வார்.

நண்பர்களே! பயங்கரமான அதிர்ச்சியோடுதான் இந்தக்கதையை படித்து முடித்தேன். நாம் எல்லாருமே பணம் காய்க்கிற, பணம் உற்பத்தி செய்கின்ற மிஷின்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிற, உலகில் , லட்சத்தில் ஒருவர் தான் இந்த உலகிலிருந்து விலகி, வேறு ஏதாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டுமா? செய்ய முடியுமா? என்றெலாம் சிந்திப்பார்கள். அப்படியான ஒரு இயக்கமாகத்தான் நான் தமிழ்ஸ்டுடியோவைப் பார்க்கிறேன். இன்றைக்கிருக்கிற அப்பா, அம்மா, குழந்தை, இன்ன பிற ரத்த சொந்தங்கள் எல்லாவற்றிலும் பணம் உற்பத்தியாகுமா என்றெல்லாம் எதிர்பார்க்கிற சமூகத்தில், இல்லை, இப்போதிருக்கிற சமூகம் சகித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை, இதை இன்னமும் கொஞ்சம் மேம்படுத்த முடியுமா? என்று தமிழ்ஸ்டுடியோ எதிர்பார்க்கிறது. அவர்களை நாங்கள் தோளோடு தோளாக தோழமையாக அணைத்துக்கொள்கிறோம்.

நாமெல்லாம் இன்று தமிழ்ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறோம். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இந்த அறை முழுவதும் இருளாக்கப்படும். அதற்குப் பிறகு, அருணுக்கும், அவரோடு இருக்கின்ற மற்ற தோழர்களுக்கும் வேறு சில பிரச்சனைகள் இருட்டில் தொடங்கும். அதில் பணப்பிரச்சினை முதன்மையானது. அந்த வலி நிறைந்த நிமிடங்கள் இந்த வெளிச்சத்தில் இருக்கின்ற நமக்கு யாருக்குமே தெரியாது. களப்பணியாற்றுவர்களுக்கான வலி தான் அது. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்தபின்னும் பல அவமானங்கள்., பல அசிங்கங்கள், பல காறித்துப்பல்களை களைந்து கடந்துதான் ஒரு மனிதன் நடக்கவேண்டியிருக்கிறது.

இது வெறுமனே நிகழ்ச்சியாக மட்டுமல்லாம் அருணின் புத்தகமும் இங்கு வெளியாகியிருக்கிறது. களப்பணியாளர்கள் பெரும்பாலும் தன் எழுத்தின் மூலமாகத்தான் நின்றிருக்கிறார்கள். சமூகத்தில் நடக்கின்ற எந்த அவலத்தைப் பற்றியும் கவலைப்படாமல், என் அறைக்குள்ளேயே எழுதப்படுகின்ற கதைகளே போதுமானது என்று சுழல்கின்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் எதுவுமே சொல்ல முடியாது. ஆனால், என் பணி எழுத்தோடு மட்டுமே முடிந்துவிடக்கூடாது, அதைத்தாண்டியும் களத்தில் நிற்கவேண்டும் என்ற நினைப்பின் செயல்கள் தான் இந்த ஆயிரக்கணக்கான திரையிடல்கள், குறும்படங்கள் திரையிடல், உலப்படங்கள் திரையிடல் என்பதெல்லாம்.

இதைக்கொஞ்சம் காட்சிப்பூர்வமாகப் பாருங்கள். ஆயிரத்து இருநூறு திரையிடல்கள் என்றால், ஆயிரத்து இருநூறு தூக்கமில்லா இரவுகளை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்று அர்த்தம். இதற்குத் துணையாக இருக்கின்ற பார்வையாளர்களும், மேடையில் இருக்கின்ற சிறப்பு விருந்தினர்கள் எல்லாருமே இந்த சமூக அமைப்பை சகித்துக்கொள்ளாமல் இங்கு கூடியிருப்பவர்கள் தான்.

அருணைப்பற்றிச் சொல்லும்பொழுது எல்லோரும், அவர் கமர்சியல் சினிமாக்களை திட்டுகிறார் என்றும், எல்லாப்படங்களையும் எதிர்மறையாகவே பார்க்கிறார் என்றும் சொல்லுவார்கள். ஒவ்வொருவருக்கும் சினிமாவைப் பார்க்கின்ற பார்வை மாறுபடும். நல்ல சினிமாக்களைக் குறித்துப் பேசும்பொழுது மிஷ்கினின் பேச்சும், ராமின் பேச்சும் மாறுபடும். ஆனால், இருவருக்குள்ளுமே தகித்துக்கொண்டிருப்பது ஒரே தணல் தான். ஆனால் அதை வெளிப்படுத்துகிற விதம் வேறு வேறாக இருக்கிறது. இவ்வளவு வேலைகளை இந்த ஏழு ஆண்டுகளில் சாத்தியப்படுத்தியிருக்கிற அருணின் கோபம் மிகவும் குறைவானதுதான் என்று சொல்கிறேன்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன்:


தமிழ் சினிமாவில் பாலுமகேந்திராவின் உதவியாளர் என்பதை எப்படி பெருமையாக நினைக்கிறேனோ, அதைப்போலவே படத்தொகுப்பாளர் பீ.லெனின் சாரின் நாக் அவுட் படமெல்லாம் பார்த்ததுதான் என்னுடைய தகுதியாக நினைக்கிறேன். உண்மையாகச் சொல்லவேண்டுமானால்., இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணம் சுயநலம் தான்.

”மதயானைக் கூட்டம்”, படம் பரவலாக பாராட்டையும், எதிர்மறை விமர்சனத்தையும் எனக்குத் தந்திருக்கிறது. முதல் படம் எடுத்த பின்பு எனக்கான ஆறுதல் விமர்சனம் ஏதாவது வராதா? என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலகட்டம். இது முதல் படம் எடுத்த எல்லாருக்குமே தெரியும்.

அப்போதுதான் அருண் முகநூலில் எழுதியிருப்பதைப் படித்தேன்., ஆரம்பித்திலிருந்தே நல்ல விதமாகத்தான் எழுதியிருந்தார். எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் இறுதியில்தான், நான் படத்தில் சொல்ல வராத கருத்துக்களை , படத்தின் இறுதிக்காட்சியை வைத்து சாதியை உயர்த்திப்பேசியிருப்பதாக எழுதிவிட்டார். அவரை நிறைய பேர் திட்டுவார்கள் என்று சொன்னார்கள் அல்லவா, அருணை அப்படி அதிகமாக திட்டியவர்களில் நானும் ஒரு ஆள். மிகுந்த சிரமங்களுக்கிடையில் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை (மதயானைக் கூட்டம்) எல்லாரும் சாதியை உயர்த்துகிற படம் என்றல்லவா சொல்லிவிட்டார்கள் என்று நினைத்திருந்தேன். காலமும் கடந்தது.

பின்னர் அவரும் பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்திருந்தார். அப்போதெல்லாம் நான் வெளியூரில் இருப்பதாக பொய் சொல்லிவிட்டேன். இதே அருண், அண்மையில் என்னை தொலைபேசியில் நேர்காணலுக்காக அழைத்திருந்தார். நேர்மையான பேச்சையும் அவர் வெளிப்படுத்தினார். உங்கள் படம் மீண்டும் பார்த்தோம், அது சாதியை தூக்கிப் பிடிப்பதாக இல்லை, என்று தன் நேர்மையை அப்பொழுது வெளிப்படுத்தினார். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கண்டுகொண்டேன். இது என் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். அந்நேர்மைக்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

இன்று வெளியிடப்பட்டிருக்கின்ற “நாடு கடந்த கலை “ நூலில் an occurance at owl creek bridge மற்றும் inja (the dog) போன்ற சினிமா ரசனை சார்ந்த பல படங்களை இதில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்கான விஷயம். இன்றைக்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிப்பவர்களும் நிறைய குறும்படங்கள் எடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த மாதிரியான குறும்படங்கள் தங்கள் தேர்வுகளுக்காக பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகுந்த வழிகாட்டியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வாழ்த்துகள், பாராட்டுகளும் கூட.

ஓவியர் மருது:

முதலில் தமிழ்ஸ்டுடியோ ஆறு ஆண்டுகள் பயணித்திருப்பதுதான் பெருமைக்குரிய விஷயம். அவர்களின் செயல்பாடுகளில் பெரும்பாலும் நான் பங்கெடுத்திருக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் வருகின்றேன். எழுபதுகளில் கலைத்துறையில் நாங்களெல்லாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது, அப்போதும் இதே மாதிரியான செயல்கள் நடைபெறும். இப்போதும் நடைபெறுகிறது. இங்கே அவர்களுக்கான முகங்கள் தான் மாறியிருக்கிறது. மாற்றுவெளியை பற்றி சிந்திப்பவர்களுக்கான ஒரு இடம் எப்போதும் இருக்கிறது.

தொடர்ச்சி அடுத்த இதழில்…

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </