இதழ்: 26    கார்த்திகை (December 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
சத்யஜித்ரே : இந்திய மரபின் செவ்வியல் முகம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா - 6 - சாரு நிவேதிதா
--------------------------------
இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல் - தினேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ்
--------------------------------
ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை‘நிர்மலா’- தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வாழ்க்கை – கீஸ்லோவ்ஸ்கி எனும் கலைஞன் - நா.முத்துகுமார்
--------------------------------
திரைப்பட நடிகர் : இயக்குனரின் பார்வையில் - மைக்கலஞ்சலோ அந்தோனியோனி
--------------------------------
 
   


   

 

 

'With You, Without You'
திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத்திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத்திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

'With You, Without You' திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் 'A Gentle Creature' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய 'ஆண்மையை' விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது?

இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

இத்திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

இத்திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

இத்திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம் ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </