இந்திய சினிமா வரலாறு – 6
- பி.கே.நாயர் :: தமிழில் : அறந்தை மணியன் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார் |
“உண்மை நிகழ்வு”ப் படம்
இந்தியாவின் முதல் ‘உண்மை – நிகழ்வு’ப் படம் 1901 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. “சாவே தாதா” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட “ஹரிச்சந்திர சகாரம் பட்வடேகர்” என்பவர்தான் இவ்வகையில் முன்னோடி! இங்கிருந்து சிறப்பு விருது பெற்றுத்திரும்பிய ‘வாதப்புலி’ (ராங்க்னர்) பராஞ்சபை’ என்பவருக்கு பம்பாய் செளபாத்திக் கடற்கரையில் பொதுமக்கள் வரவேற்பு ஒன்று அளித்தனர். 1901ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடந்த அந்த வரவேற்பு நிகழ்ச்சியை ‘நடந்தது நடந்தபடி’ அப்படியே படம் பிடித்தார் ‘சாவே தாதா’/
அவர் , மேலும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு ஒன்றையும் விறுவிறுப்பான துணுக்குக் காட்சிகளாகத் திரைப்படத்தில் பதிவுசெய்தார்.
”இந்தியத் திரைப்பட உலகின் தந்தை” என்ற போற்றுதலுக்குரிய தாதாசாகேப் பால்கே என்று சொல்லக்கூடிய திரைப்படத்தைத் தயாரித்தவர். 1912ஆம் ஆண்டு அவர் “நேரம் – நழுவும் – புகைப்படக்கலை” (Time – Lapse Photography) என்ற வகையில் தயாரித்த “ஒரு பட்டானிச்செடியின் ஜனனம்” என்ற படம்தான் இத்தகைய படங்களுக்கான முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. பால்கே அப்போதுதான் இங்கிலாந்திலிருந்து ஒரு காமிராவை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். அதனுடைய நுணுக்கமான செயல்பாடுகள் அவருக்கே விளங்காதிருந்த நேரமிது! அதற்குள்ளாகவே அவர் ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கினார். ஒரு பட்டாணி விதையைத் தொட்டியில் நட்டுவைத்து, அது முளைத்து குறுஞ்செடியாகி, வளர்ந்து பெரும்செடியாகி பட்டாணிகள் காய்த்துக் குலுங்கும் வரை, ஒவ்வொரு கட்டமாகப் படம் பிடித்துக் காட்டினார் பால்கே. ஒரு நாளைக்கு ஒரு ‘ஷாட்’ வீதம் படம்பிடித்தார். பொறுமையாக அச்செடி வளர்ந்த வரலாற்றை திரைப்படமாக தமது வசதிமிக்க நண்பரொருவருக்கு போட்டுக் காட்டினார். அதைப் பார்த்துப் பிரமித்துப் போன அந்த நண்பர்தான், இந்தியாவின் முதல் ‘கதைப் படமான’ “ரானா ஹரிச்சந்திரா”வை 1913ல் உருவாக்க பால்கேக்கு பண உதவி செய்தார்.
அந்தக் காலகட்டத்தில் ‘ஜான் கிரியர்ஸன்” உருவாக்கி அமரத்துவம் கொடுத்த ‘டாகுமெண்டரி” படங்களைப் பற்றி இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதுவுமே தெரியாதிருந்தது. திரைப்படம் என்பது ஒரு “பெரும் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் சாதனம்” என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் பால்கே உணர்ந்திருந்தார். இது அந்தத் திரைப்பட முன்னோடியின் ஆரம்பகாலப் படங்களிலேயே வெளிப்பட்டது. ’இந்தியாவின் முதல் திரைப்படம் உருவான விதம்’ பற்றியே ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு எவருக்கு ஏற்பட்டிருக்க முடியும்?! தமது “ரானா ஹரிச்சந்திரா” படம் எப்படி உருவானது என்பதை “திரைப்படங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?” என்ற தலைப்பில் 1913லேயே “ ஒரு ரீல்’ படமாக பால்கே தயாரித்தளித்தார். திரைப்படத்தயாரிப்பில் உள்ள பல்வேறு தொழில் – நுட்ப அம்சங்களை பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பதற்காகவென்றே குறிப்பாக அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. ஒரு “கலை – உருவாக்க மேதையின்” தீர்க்கதரிசனத்திற்கு எடுத்துக்காட்டாக அப்படம் விளங்குகிறது. திரைப்படம் என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அறிவிப்பதும் , கற்பிப்பதும் கூட அதன் நோக்கமாக இருக்கவேண்டுமென்பதை அந்த ஆரம்ப கால கட்டத்திலேயே பால்கே உணர்ந்திருந்தார்.!
’கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில்’ கிரீயர்ஸன் அந்த நேரத்தில் தத்துவப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தார். “டாக்குமெண்டரி” என்ற சொல்லைக்கூட அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. புகழ்பெற்ற எந்த ஒரு மேஜிக்வித்தைக்காரரும், தமக்கு போட்டியாளர்கள் அதிகமாகி விடுவார்களே என்ற பயத்தில் தமது தொழில் – இரகசியங்களை வெளியிடமாட்டார்! ஆனால் மேஜிக் தெரிந்த திரைப்பட மேதை பால்கேக்கு வேறுவிதமான பார்வைகள் இருந்தன. திரைப்படத்தயாரிப்பில் உள்ள நுணுக்கமான முறைகளையும், மக்களைக் கவர்ந்திழுக்கும் அத்துறையின் இரகசியங்களையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் பார்வையாளருக்கு கற்பிக்க முடியும் என்று பால்கே உண்மையாக நம்பினார். திரைப்படத் தொழிலைப்பற்றியும் அதில் ஈடுபட்டிருப்போரைப் பற்றியும் மதிப்பும் மரியாதையும் அதன் மூலம் பார்வையாளர்களுக்கு உண்டாகும் என்று அவர் நினைத்தார். திரைத்துறையிலுள்ளோரை கவுரவமாக நடத்தும் பழக்கம் அந்தக் காலகட்டத்தில் குறைவாகத் தான் இருந்தது. (இன்றளவும் அது தொடருகிறது என்பதும் வருத்தத்துக்குரியது உண்மையாகும்)!
புராணக்கதைகளைத் தாம் தமது பார்வையில் வழங்குவதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களைத் தயார் செய்யும் தமது பழக்கத்தை 1914ல் அவர் உருவாக்கிய “காலிய மர்தன்” படத்தின் போதும் தொடர்ந்தார் பால்கே. தமது ஏழுவயது மகள் மந்தாகினியை குழந்தை கிருஷ்ணனின் வேடத்தில் நடிக்கப் பயிற்றுவித்த முறைகளெல்லாம் ஒரு ‘உண்மை – நிகழ்வுப் படமாக’ தயாரித்து “காலிய மர்தன்” படத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைத்தார்.
முதமுறையாகக் காமிராவை எதிர்கொள்ளும் ஒரு ஏழுவயதுக் குழந்தை – நடிகையை படிப்படியாக எவ்வாறு அதன் திறமையை வெளிக்கொணரும் வகையில் தயார்படுத்தினார் என்று விளக்கும் வகையில் அதை ஒரு தனிப்பட்ட துண்டுப்படமாக அவர் எடுத்திருக்க முடியும். தனது முன்னோடித் தந்தையின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெருமளவு நியாயப்படுத்த அந்தப் பிஞ்சு வயதிலேயே பால்கேயின் மகளும் அவருக்கிணையான திறமை பெற்றிருந்தார் என்பதிலும் ஐயமில்லை.
பால்கேயின் மற்றொரு ஆர்வத்தைத்தூண்டும் துண்டுப்படம் “நகரும் நாணயங்கள்” என்பதாகும். அதிலும் அவர் தமது விருப்பமான “ப்ரேம்களை நிறுத்தி நிறுத்திப் படம் பிடிக்கும்” தந்திரமான படப்பிடிப்பு முறையைப் பயன்படுத்தினார். அசையாத ஜடப்பொருளான நாணயத்தை அசைய வைத்து இயக்கிக் காட்டினார்.
அவரது மற்றொரு சிறந்த டாக்குமெண்டரிப் படம் “செங்கல் வைத்துக் கட்டுதல்” என்பதாகும். அதில் மகாராஷ்டிர மாநிலக்கிராமங்களில் செங்கல் தயாரிப்பு முறைகளை, எவ்வாறு குடிசைத் தொழிலாகச் செய்கிறார்கள் என்று விளக்கியிருந்தார். அப்படத்தில் நிஜமான தொழிலாளர்கள் (ஆண்களும், பெண்களும்) திறமை வாய்ந்த மேற்பார்வையாளரின் கீழ் செங்கல் தயாரிப்பில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடியும். களிமண்ணைப் பிசைந்து , செங்கல் செய்து வெளியில் காயவைத்துப் பிறகு சூளையில் இட்டுச் சுடுவது வரை விரிவாகக் காட்டியிருக்கிறார் பால்கே.
காமிரா மெதுவாக நகர்ந்து, திறந்த வெளியில் செங்கல்கள் அழகாக அடுக்கப்பட்டுள்ள காட்சியைக் காட்டுகிறது. மனிதனின் “படைப்புத்திறமை”யை வெளிக்கொணரும் திரைப்படத் தயாரிப்பாளரின் கலைப்பார்வையை அந்த மனத்தைக் கவரும் ‘ஷாட்’ உயர்வாக பேசுகிறது!
மவுனப்பட காலகட்டத்தில் பிரதான படத்திற்கு முன்னால் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் கொண்ட ‘உண்மை – நிகழ்வுப் படத்தை’ இணைப்பது ஒரு பொதுவான வழக்கமாகத் தொடர்ந்தது. இவ்வகையில் இரண்டு அருமையான உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன. முதலாவது 1926ல் ‘ஹிமான்சுராய்’ புத்தரைப் பற்றிய படமான ‘லைட் ஆஃப் ஆசியா’வின் ஆரம்பக்காட்சியாகும். அடுத்தது, 1931ல் தயாரிக்கப்பட்ட “மார்த்தாண்ட வர்மா” என்ற மலையாள (மவுனப்)படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் திருவாங்கூர் ராஜாவின் ‘ஆரநாட்டு’ ஊர்வலமாகும்.
நாசிக் அருகே உள்ள தமது சொந்த ஊரான திரியம்பகேஷ்வரி ல் 1921ல் நடைபெற்ற “சிம்ஹஸ்த மேளா” என்ற விழாவைப் படமாகத் தயாரித்து ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு சிறுகதையைப் , படமெடுக்கும் முயற்சியையும் செய்திருக்கிறார் பால்கே; “பிடையிச்சி பாஞ்சே” என்ற நகைச்சுவைப் படம் அது! அப்படத்தின் கதாநாயகன், மனைவி கடைக்குப் போயிருக்கும்போது, வேலைக்காரியிடம் குறும்பு செய்கிறான். மனைவி திரும்பி வந்து அவர்களைக் கையும் கலவுமாக பிடிக்கிறாள்.
1928ஆம் ஆண்டில் அன்றைய வெள்ளையர் அரசு நியமித்த , “திவான் பகதூர் ரெங்காச்சாரி” (ஒரு நபர்) “திரைப்பட விசாரணைக் கமிட்டியிடம்”:............. “கற்பிக்கும், இயங்கத் தூண்டும், மற்றும் பிரயாணப் படங்களைத் தயாரிப்பதில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். அரசு இவை போன்ற படங்களைத் தயாரிக்க முடிவெடுத்தால் கூட எனது படங்களுடன் அவற்றிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது; ஏனெனில் இந்த்துறை பரந்துவிரிந்தது. எனது துண்டுப்படங்களை பிரதான படத்துடன் இணைத்துக் காட்ட வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள்”..... என்று கூறினார் பால்கே! அந்தக் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, தாம் தயாரித்த “டாலேகாவன் கண்ணாடித் தொழிற்சாலை” என்ற டாக்குமெண்டரிப் படத்தையும் குறிப்பிட்டார். 1920களின் ஆரம்பத்தில் அவர் தயாரித்திருந்த அந்த “தொழிற்சாலை பற்றிய துண்டுப் படம்”திரைப்பட ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. அதற்குப் பிறகு பால்கே தயாரித்த எந்தவொரு துண்டுப்படத்தையும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கித் திரையிட முன்வந்தனர்.
1920 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,500 துண்டுப்படங்களும், டாக்குமெண்டரி படங்களும் தயாரிக்கப்பட்டதாக அந்நாளைய தணிக்கை இலாக்கா ஆவணங்கள் தெரிவிக்கின்ன. அதாவது சராசரியாக, ஆண்டுக்கு, 75 படங்கள்! மவுனப்பட காலத்து, நிலைத்திருந்த பெரும்பாலான திரைப்படத்தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் , தங்களது, ‘செய்திப்படங்களை’ கூடவே தயாரித்தன. “மதன் தியேட்டர்ஸ்” நிறுவனம் “கல்கத்தா டாப்பிகல் சீரிஸ்” என்றும் “அரோரா சினிமா கம்பெனி” “அரோரா கெனாட் சீரிஸ்” என்றும் “கே.டி. பிரதர்ஸ்” நிறுவனம் “டாபிக்கல் சீரிஸ்” என்றும் செய்திப்படங்களையும் தயாரித்து வெளியிட்டன.
”பேர்ல் டாப்பிகல் நியூஸ்” “பிரீமியர் டாப்பிகல்ஸ்” “இம்பீரியஸ் ஸ்க்ரீன் நியூஸ் சீரிஸ்” “குளோசப் தியேட்டர் ஸின்... “குளோப் கெனாட்ட” “கோஹினூர் டான்ஸ் சீர்ஸ்... கோஹறினூர் பிலிம்க் அம்பெனியின் “காங்கிரஸ் டாப்பிகல்1” மற்றும் “வாடியா மூவிடோன் எண்டெர்டெயின்மெண்ட் சீரிஸ்... ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவைதான். இருபதுகளில் தொடங்கப்பட்ட இத்தகைய “செய்திப்பட”முயற்சிகள் முப்பதுகளிலும் தொடர்ந்தது.
முக்கிய தேசிய நிகழ்ச்சிகளெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களால் , பாலகங்காதர திலகரின் இறுதிஊர்வலம், 1920ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில் “கோஹினூர் பிலிம் கம்பெனி” “ஓரியண்டல் பிலிம் கம்பெனி” “பதங்கர் ப்ரெண்ட்ஸ் அண்ட் கம்பெனி” மற்றும் “கே.டி.பிரதர்ஸ்” ஆகிய நான்கு நிறுவனங்களால் செய்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. அவை ஐநூறு அடியிலிருந்து ஆயிரம் அடி நீளம் வரையிலுமாக வேறுபட்டிருந்தன.
இத்தகைய செய்திப்படங்களை அன்றைய ஆங்கிலேய தணிக்கை அதிகாரிகள்.
.... “வேறொரு நாளில் நடந்ததாகவோ அல்லது’
இறுதி ஊர்வலத்தில் இல்லாததாகவோ எதுவும் காட்டப்படாத பட்சத்தில்....”
என்று குறிப்புடன் அனுமதித்தது சுவாரஸ்யமான செய்தி!
இது ஏனெனில் , அன்றைய காலனி ஆட்சியில் அடங்கிக் கிடந்தவர்கள் தங்களது “செய்திப் படங்களிலும்” “டாக்குமெண்டரி”களிலும் பொய்யான தகவல்களை இணைத்து விடுவதாக ஆங்கிலேயே ஆட்சி கருதியதால்தான்!
சமயங்களில், ஸ்டுடியோ முதலாளிகளும் அவ்வாறு விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் பல காட்சிகளை ஸ்டுடியோவிலேயே எடுத்துச் சேர்த்தும் வந்தார்கள். ஒளிப்பதிவாளர்கள் வெளிப்புறங்களில் தேவையான சுவாரஸ்யம் இல்லையெனில், “மேஜை மீது மினியேச்சர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள்” சிகரெட் மற்றும் சுருட்டுப்புகையைப் பயன்படுத்தி குண்டு வெடித்துப்புகை வரும் காட்சிகளை சேர்த்துத் தொகுத்து விடுவார்கள். அத்தகைய காட்சிகளின் நம்பகத்தன்மை பற்றி அக்காலகட்டத்து ரசிகர்களுக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை. இவைபோன்ற நடவடிக்கைகள், கேவலமான ஏமாற்றுவேலைகள் என்பதை மறந்து, “புத்திசாலித்தனமான துணிவுமிக்க வியாபாரம்” என்ற வகையில்தான் கடும்போட்டி நிறைந்திருந்த அன்றையத் திரையுலகம் மதித்தது.
எந்தவிதக்கொள்கை, கோட்பாடு அற்ற வியாபாரிகளிடமிருந்து “உண்மை – நிகழ்வு”ப்படங்களை மீட்க வேண்டியிருந்தது. அப்படி மீட்டதற்கான பெருமை, மனச்சாட்சியும், அர்ப்பணிப்பும் நிறைந்த கலைஞர்களான, தாதாசாகேப் பால்கே, அநாதி நாத் போஸ், நித்தீஷ் லாஹிரி, திரேந்திர நாத் கங்கோ பாத்யாயா, சுச்சேத் சிங், பாபுராவ் பெயிண்ட்ர், ஆர். வெங்கையா, ஏ.நாராயணன், மற்றும் பலரையே சாரும்.
அக்காலப் படப்பிடிப்பு, நிறுவனங்கள் தயாரித்த “உண்மை – நிகழ்வு” படங்களின் பெயர்களைப் பார்த்தாலே, இரண்டு மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்து வந்தன என்பது நன்கு புரியும். நமது நாட்டை ஆண்டுவந்த காலனி ஆதிக்க வாதிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வது என்ற அணுகுமுறை கல்கத்தாவைச் சேர்ந்த மதன் தியேட்டர்ஸ் முன்னோடியாகத் திகழ்ந்த படநிறுவனங்களிடம் காணப்பட்டது.
”டாபிக்கல் பிலிம் லிமிடெட்” என்ற நிறுவனமும், “டாட்டா கார்ப்பரேஷன்” என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த, ஏழு ரீல்களும் 6,400 அடி நீளமும் கொண்ட “ஹிஸ்ராயல் ஹைனஸ், தி டியூக் ஆஃப் கன்னாட்டின் இந்திய விஜயம்” “பல்வேறு இந்திய நகரங்களுக்கு வைஸ்ராயின் விஜயம்”.... மற்றும் “அரச குடும்பத்துத் திருமணங்கள்”.... ஆகிய தலைப்புகள் முதல்வகையைச் சேரும்.
பிற நிறுவனங்களான , “ஹிந்துஸ்தான் சினிமா பிலிம் கம்பெனி” “கோஹினூர் பிலிம் கம்பெனி” “இம்பீரியல் பிலிம் கம்பெனி” “சாரதா” “கிருஷ்ணா” மற்றும் பல நிறுவனங்களோ தேசிய இயக்கத்தின் பின்புலமாக இருந்த வலுவான மனவெழுச்சியை, பதிவு செய்திருக்கின்றன. அன்றைய தணிக்கை இலாக்கா ஆவணங்களில் பதிவாகியிருக்கும் கீழ்க்கண்ட தலைப்புகளே இத்தகைய அணுகுமுறைக்கு உதாரணங்களாகும்.
1.) “கோஹினூர் பிலிம் கம்பெனி” (1921 ஆம் ஆண்டு அக்டோபர்) தயாரித்த,
”எபின்ஸ்டன் காம்பவுண்டில்
அந்நியத்துணிகள் எரிப்பு”
2.) “சவுராஷ்டிரா சினிமாட்டோகிராஃப் கம்பெனி லிமிடெட்” என்ற நிறுவனம் தயாரித்த 713 அடி நீளமுள்ள,
”பருத்திப் பட்டையிலிருந்த வீட்டில் நெய்த துணிவரை – மற்றும் சர்க்காவில் நூல் நூற்கும் சிலர்.”
3.) நவல் காந்தி என்பவர் 1926ல் தயாரித்த
”ஓர் இந்தியத் தூய்மை உணவுப்பொருள் தயாரிக்கும் தொழிலின் வளர்ச்சி”
4.) “பூனா நகரில் திறந்து வைக்கப்பட்ட சிவாஜியின் சிலை”
(1928 ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில், “மதன் கம்பெனி” உட்பட ஐந்து நிறுவனங்கள் அந்த நிகழ்ச்சியைப் படமாகத் தயாரித்திருந்தன).
5.) 1924ல் பி.வி.வரேர்க்கர் மற்றும் பி.ஆர். லீலே இருவரும் தயாரித்த... “மகாத்மாவின் விந்தை”
மேற்சொன்ன பட்டியலில் பல கதைப்படங்களும் அடங்கும். அத்தகைய துண்டுப்படங்களின் தலைப்புகள் பின்வருமாறு;
1. “ஈஸ்ட் இண்டியா பிலிம் கம்பெனி”யின் “நவநாகரிகக் கணவன் மீது விசாரணை”
2. “மனோரமா பிலிம்ஸ்” தயாரித்த.... “மனைவிகள்- ஒன்றும் இரண்டும்”
3. (”ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனி தயாரித்த... “மீறப்பட்ட சத்தியம்”
4. அதே நிறுவனத்தின் “பட்வர்த்தனின் ராயல் சர்க்கஸ்”
’ உண்மை – நிகழ்வுப்’ படங்களைத் தயாரிப்பதில் தென்னிந்தியாவும் பின்தங்கி விடவில்லை.
தென்னிந்தியாவில் தயாரான அத்தகைய படங்களின் பெயர்கள் பின்வருமாறு இருந்தன.;
1) 1922ல் “மதன் தியேட்டர்ஸ்” நிறுவனம் தயாரித்த
(அ) “திருச்சூர் பூரம் திருவிழா”
(ஆ) “தஞ்சாவூர் , திருச்சி, மதுரை – சில காட்சிகள்”
(இ) “சென்னை – சில காட்சிகள்” (1923)
(ஈ) “சென்னையில் ரம்ஜான் பண்டிகை”
(உ) “சென்னை – மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளி – வாழ்க்கை.
2.) 1924ல் “இந்தியன் ஆர்ட் – கிராஃப்ட்” நிறுவனம் தயாரித்த
(அ) “தேசிய உடல் நலவாரம் – சென்னை”
(ஆ) “தென்னிந்தியாவில் வெள்ளம்”
3.) 1925ல் “எக்ஸெல்சியல் பிலிம் கம்பெனி”தயாரித்த
(அ) “மைசூர் தசரா ஊர்வலம்”
(ஆ) “தென்னிந்தியாவில் காதி கண்காட்சிகள்”
(இ) “மாட்சிமை தாங்கிய நிஜாமின் பிறந்த நாள்” – (1926)
(ஈ) “சென்னை விமானப்பயிற்சி கிளப்பின் தொடக்கம்...”
(உ) “சென்னை சாரணம்னம்போரி” (1927) “வினாய நகரில் கிரிக்கெட்”
4.) 1927ல் “மதன் தியேட்டர்ஸ் தயாரித்த “ஹைதராபாத் டாப்பிகல்”
5.) 1929ல் “ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்த “சென்னையில் “பார்க் பேர்” கண்காட்சி”
“மதன் தியேட்டர்ஸ் “தயாரித்த “மைசூர்”
6) 1931ல் “ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்த “தென்னிந்திய ரயில்வேயில் மின்சார ரயில் வண்டி தொடக்கம்...
7.)“சரஸ்வதி பிலிம்ஸ் லிமிடெட்” தயாரித்த “குருவாயூர் கோயில் சத்யாக்ரகம்...”
(அ) “சென்னைக்கு மகாத்மா காந்தி வருகை”
(ஆ) “சாகர் பிலிம் கம்பெனி” தயாரித்த “ஹைதராபாத் டாப்பிக்கல்”
(இ) “அஜந்தா சினிடோன்” தயாரித்த “மிஸ்டர் கோபிநாத்தின் நடனம்”
8.) 1934ல்
(அ) “பயனீர் பிலிம்ஸ்” – “மிஸ்டர் சத்யமூர்த்தியின் உரை”
(ஆ) “ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ்” – “பரதநாட்டியம்”
(இ) “ஷண்முகானந்தா டாக்கீஸ்” – “மேட்டூர் அணை”
(ஈ) “தி மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்” – “நவரசக் கூத்து”
(உ) “சுந்தரம் டாக்கீஸ்” - “நாசகாலக் கோட்டை”
(ஊ) “ராஜேஸ்வரி டாக்கீஸ்”- “ருக்மணி தேவியின் நடனம்”
(எ) அதே நிறுவனத்தின் – “கய்யாடு பேட்டை”
(ஏ) “ராம் டாக்கீஸ்” – “மன்னார்சாமி”
(ஐ) “ஸ்ரீனிவாஸ் சினிடோன்” – “வரதட்சிணை மாப்பிள்ளை”
துரதிர்ஷ்டவசமாக, தெற்கு ரயில்வே நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட சில மவுனப் படக்காட்சிகளைத் தவிர, மேற்கண்ட பட்டியலிலிருந்து வேறெந்த படத்தின் பிரதியும் தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்திற்குக் கிடைக்கவில்லை.
வேறெந்தத் தனிமனிதரிடமிருந்தோ நிறுவனத்தினரிடமிருந்தோ, இப்படங்களிலிருந்து காட்சித் துண்டுகள் கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை.
ஆயினும், நமது நாட்டில் தயாரான, மவுனப் படகாலத்து, ‘உண்மை – நிகழ்வு’ப் படங்களின் பிரதிகள் வெளிநாட்டு திரைப்பட ஆவணக்காப்பகங்களில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது.
மேற்சொன்ன பட்டியலைப் பார்க்கும்போது அந்தப்படங்களெல்லாம், வெறும் புகைப்படப்பதிவுகள் மட்டும் அல்ல என்பதும், அந்தப் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு, விழிப்புணர்ச்சி, தூண்டுதல், ஆகியவை நிறைந்திருந்தன என்பதும், தெரியவருகிறது. பால்கேயும் அவரது சமகாலத் தயாரிப்பாளர்களும் புதிய கலைச்சாதனமான திரைப்படத்தின் அளவிடமுடியாத சக்தியை உணர்ந்திருந்தார்கள். ரசிகர்களின் பொழுதுபோக்குத் தேவையைத் தீர்ப்பது மட்டுமில்லாது, திரைப்படங்களை, கற்றுக் கொடுக்கும், அறிவுக்கும் மற்றும் தூண்டுதல் செய்யும் பணிக்கான கருவியாகவும் பயன்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதனால்தான் மவுனப் பட காலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் பொழுதுபோக்குப் படங்களைத் தயாரித்ததுடன் , தங்களது முதலீடுகளில் ஒருபகுதியை, நமது நாட்டுமக்கள், நடப்புகள், இடங்கள் மற்றும் உண்மை நிகழ்வுகள் ஆகியவற்றைப் பதிவுசெய்து வைப்பதற்கு ஒதுக்கி வைக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்திருந்தனர். இந்த வகையில், தேசிய அரசு அமைக்கப்பட்ட பிறகு, அத்தகைய உயர்ந்த நிலையிலான உள்ளுணர்வில் வளர்ந்த திரைப்படத் தயாரிப்பு முறை. சந்தேகத்துடன் கீழானதாகக் கருதப்பட்டதும். ஓர் அரசுத்துறை நிறுவனம் மட்டுமே கட்டாயமாக இத்தகைய செய்தி மற்றும் டாக்குமெண்டரிப் படங்களைத் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்று கருதப்பட்டதும், எத்தகையதொரு வினோத நிலை?!
இடையில் எங்கோ, எப்படியோ நாம் தவறியிருக்கிறோம். தவறிக்கொண்டிருக்கிறோம்...!
ஆகஸ்ட் – செப்டம்பர் 1992
- தொடரும் -
சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |