இதழ்: 20     ஆவணி (August 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பேசாதிருத்தல் என்பது ஒரு தேர்வுரிமை ஆகாது - ஆனந்த் பட்வர்தனோடு உரையாடல்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா - சாரு நிவேதிதா
--------------------------------
கடவுளின் பெயரால் - வசந்தி சங்கரநாராயணன்
--------------------------------
மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல் - கே.எஸ்.சங்கர் & ராஜா
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - தினேஷ் & யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது - அருண் மோ.
--------------------------------
தனி மர தோப்புகள் - வருணன்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 6 - கே.ஹரிஹரன்
--------------------------------
   
   

 

 

மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல்

- கே.எஸ்.சங்கர் & ராஜா (தினமலர்)

மீண்டும் ஒரு சவால்

திரைப்பட கர்த்தா ஆனந்த் பட்வர்தன் இரண்டாம் முறையாய் தூர்தர்ஷனை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறார். இம்முறை பஞ்சாப் மீதான அவரது டாக்குமெண்டரி படமான, “அந்த நண்பர்களின் அன்பு நினைவுகள்” (In Memory of Friends) திரையிட மறுத்தமைக்காக.

பம்பாய் நகரின் சேரி மக்களின் வாழ்வையும், அதிகாரவர்க்கத்தின் அவலமான மறுதலிப்புகளையும் செளகரியமான நெளிவுசுளிவுகளை பட்வர்தனின் ‘பம்பாய் நம் நகர்’ (பாம்பே – ஹமாரா ஷஹர் – Bombay Our City) டாக்குமெண்ட்ரி படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுத்தது. அதை ஒதுக்கியதற்கு தூர்தர்ஷன் காரணமேதும் தரமறுத்தபோது பட்வர்தன் தூர்தர்ஷனை நீதிமன்றத்திற்கு இழுத்தார். முதலில் பம்பாய் உயர்நீதிமன்றத்திலும் பின் உச்ச நீதிமன்றத்திலுமாய் ஒரு மூன்றாண்டுப் போர் தொடர்ந்தது, கடைசியில் படத்தை ஒளிபரப்புமாறு தூர்தஷனுக்கு உத்தரவிடப்பட்டது.

இப்போது, 1992 இல், அதே போன்ற ஒரு நிகழ்வு நடத்தப்பட இருப்பதுபோல் தோன்றுகிறது. பஞ்சாப் பிரச்னை பற்றி உண்மையான கண்ணோட்டமும் சீர்தூக்கும் பார்வையும் கொண்டு புரிந்து கொள்ளும் முயற்சிக்கு ஒரு முக்கியக் காரணியான பட்வர்தனின் மற்றொரு விமரிசகப் பாராட்டுப் பெற்ற ‘அந்த நண்பர்களின் அன்பு நினைவுகள்’ படத்திற்கு ஒளிபரப்பும் நேரம் தூர்தர்ஷனால் மறுக்கப்பட்டிருக்கிறது. நாற்பத்திரண்டு வயதான பட்வர்தன் பதிலுக்கு ‘மண்டி இல்லம்’ எனத் தன் அலுவலகத்தின் பெயரால் அழைக்கப்படும் தூர்தர்ஷனை ‘ஒரு சரியான காரணம் தராமல் அவர்கள் படத்தை ஒதுக்கிவிட முடியாது’ என மீண்டும் நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறார்.

பஞ்சாபில் நிலவும் வன்முறையையும், பீதியைப் பற்றியும், மதப்பழமைவாதிகளாலும் அடக்குமுறை அரசாலும் அந்த ஒருகால அமைதிப் பூங்கா சின்னாபின்னப் படுத்தப்பட்டிருப்பது பற்றியும் பேசுகிறது இந்த டாக்குமெண்டரி படம். 1989இல் இந்தியிலும் பஞ்சாபியிலும் ஆங்கில உட்தலைப்புகளோடு ஒரு மணிநேர அளவிற்கு எடுக்கப்பட்ட இப்படம், சரித்திரப் பின்னணியை முன்வைத்து, அதன்பின், தம் உயிர் உடைமை மீதான மாபெரும் அச்சுறுத்தல்களுக்கிடையே சீக்கியர்களும் இந்துக்களும் ஆன ஒரு குழு, வெறும் பத்தாண்டுகளுக்குமுன் கூடப் பஞ்சாபில் நிலவிய சகிப்பு தன்மையின் உயிரோட்டத்தையும் மத நல்லிணக்கத்தையும் மீட்டுவரும் ஒரு முயற்சியால் ஈடுபடுவதைத் தொடர்கிறது.

அனைத்திந்திய சீக்கிய மாணவர் சம்மேளன செயல்வீரர்களுடன் உரையாடலையும் பகத்சிங்கின் அதிகப் பிரபல்யம் அடையாத ‘நான் ஏன் ஓர் நாத்திகனாய் இருக்கிறேன்?’ புத்தகவரிகளை ஒலிக்கச் செய்வதையும் ஒருங்கே நிகழ்த்தி பகத்சிங் ஒரு மத நம்பிக்கையாளர் என்ற தீவிரவாதிகளின் புரட்டுவாதத்தைத் தெளிவாக்குகிறார். புத்தக வரிகள் மீது காலிஸ் தாணி செயல்வீரர்களின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் பாவம், பதில் சொல்லத் திணறுகிறார்கள்.

பம்பாய் நகர நிர்வாகிகளைக் கேள்விகளால் துளைத்து எடுப்பதில் உயிருக்கேதும் அபாயமில்லை; ஆனால் எடுத்ததற்கெல்லாம் துப்பாக்கியைத் தூக்கும் காலிஸ்தானி இளைஞர்களைக் கேள்விகேட்டுப் பாடுபடுத்துவதென்றால்...? பட்வர்தன் தனக்கே உரித்தான அடக்கத்துடன் சிங்கத்தின் குகையிலேயே அதைச் சந்திக்கத் துணிவு வேண்டும்தான் என்கிறார்.

பஞ்சாப் பிரச்னைக்கு இராணுவத்தீர்வோ அடக்குமுறைத் தீர்வோ அன்றி, அரசியல் தீர்வுதான் வழி என்று பஞ்சாபில் என் அனுபவம் கூறுகிறது என்கிறார் பட்வர்தன்.

காஷ்மீரில் இஸ்லாம் பழமைவாதமும், பஞ்சாபில் சீக்கியர் பழமைவாதமும், பரந்த இந்திபேசும் உட்பிரதேசங்கள் மட்டுமின்றி கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் கூட இந்துப் பழமை வாதமும் வளர்ந்துவரும் காலகட்டத்தில் இந்தப்படத்தைப் போன்ற ஒரு அரசியல் மனிதநேய சாசனத்தின் மகத்துவம் அளவிலடங்காதது. மண்டி இல்ல மகாராசாக்களின் கோணங்களோ முற்றிலும் மாறாதிருப்பது வெட்டவெளிச்சம். முந்திய தீர்ப்பை உயர்த்திக் காட்டும் நிலையிலிருப்பதால், இன்றோ நாளையோ இப்படம் தூர்தர்ஷனின் ஒளிபரப்புக் கட்டமைப்பில் நுழைந்துவிடும் எனப் பட்வர்தன் நம்பிக்கை கொள்ளலாம். படத்தின் உள்ளார்ந்த நிதர்சனம் என்றுமே சார்ந்தது.

- கே.எஸ்.சங்கர்
சலனம்: ஆகஸ்டு – செப்டம்பர் 1992

------------------------------------------------------------------------------------------------------

ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல

காதல் திருமணங்களே ஜாதி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு.

ஆவணப்பட உலகில், இந்தியாவின் முகமாக திகழ்பவர் ஆனந்த் பட்வர்தன். இவரது, ‘கடவுளின் பெயரால், ஜெய்பீம் காம்ரேட், நாங்கள் குரங்குகள் அல்ல, போரும் அமைதியும், புரட்சி அலைகள், மும்பை நமது நகரம்’ உள்ளிட்ட ஆவணப்படங்கள், உலக அளவில் , பெரும் வரவேற்பை பெற்றவை.

டென்மார்க்கிலிருந்து வெளிவரும், ‘டாக்ஸ்’ என்ற ஆவணப் படங்களுக்கான இதழ், இவருடைய ‘தந்தை மகன் மற்றும் புனிதப் போர்’ என்ற ஆவணப்படத்தை, உலகின் மிகச்சிறந்த 50 ஆவணப்படங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும், ‘தமிழ் ஸ்டுடியோ’ என்ற மாற்று சினிமாவுக்கான அமைப்பு, 2014ஆம் ஆண்டுக்கான, ‘எடிட்டர் லெனின்’ விருதை, ஆனந்த் பட்வர்த்தனுக்கு சமீபத்தில் வழங்கியது.

மார்க்ஸ், காந்தி, அம்பேத்கரிய கொள்கைகளே, நாட்டை உயர்த்தும் என உறுதியாக, நம்புபவர் பட்வர்த்தன்.

அவரோடு உரையாடியதில் இருந்து…

ஆவணப்படங்களுக்கான அவசியம் என்ன?

புனைவு படங்கள், பொய் பேசுபவை. ஆவணப்படங்கள், உண்மையை பேசுபவை. ஆவணப்படங்கள் வரலாற்றின் தேவை. குறிப்பிட்ட பிரச்னையை பேசும் ஆவணப்படங்கள், பிற்காலத்தில் வரலாறாகவே மாறி வருகின்றன. அதிகார வர்க்கங்களின் பொய் புரட்டுகளுக்கு எதிரான வரலாற்று ஆவணம், ஆவணப்படங்கள்.

நம் நாட்டில், அளவுக்கு அதிகமான ஆவணப்படங்கள் வெளி வந்தாலும், மையப்பொருளில், தீவிரத்தன்மை குறைந்து வருகிறதே?

அதற்கு பல்வேரு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து வருகிற பணத்திலிருந்து எடுக்கப்படும், அதிக ஆவணப்படங்கள் வருகின்றன. இதற்கு, ‘என்.ஜி.ஓ., டாக்குமெண்டரி’ என்று பெயர். இவர்கள், முதலிடுகிறவர்களுக்கு தகுந்தாற் போன்றே, பேசுபொருளை அமைக்கின்றனர். அதனால், அதன் தீவிரத்தன்மை குறைகிறது.

நான், பின்நவீனத்துவ நோக்கில், எனது ஆவணப்படங்களை எடுத்து வருகிறேன். மற்றவர்களுக்கு மையம் மட்டுமே முக்கியம் எனில், எனக்கு விளிம்புநிலையும் பிரதானம். ஒவ்வொரு பகுதியும் பிரதானம். எனக்கு, ஒரு படைப்பில் வரும் கதாநாயகன் மட்டுமல்ல, அதில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் முக்கியம்.

வெகுஜன மக்களிடம், ஆவணப்படங்கள் சென்று சேர்ந்துள்ளனவா?

சமீபத்தில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எனது ஆவணப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இதற்கு பெரிய வரவேற்பு இருந்ததாக, தமிழ்ஸ்டுடியோ அமைப்பினர் கூறினர். அதேபோல், மும்பையின் குடிசைப் பகுதிகளில், எனது ஆவணப்படங்களை திரையிடும் போதெல்லாம், 2,000க்கும் மேற்பட்ட மக்கள், பார்ப்பர். உண்மையை பேசும் ஆவணங்களுக்கு, எளிய மக்கள், எப்போதும் வரவேற்பு அளிப்பர்.

தலித்துகளும், மார்க்ஸிய கொள்கை உடையவர்களும் இணைந்து போராடினால், நம் நாட்டில் புரட்சி சாத்தியம் என்று எப்படி நம்புகிறீர்கள்.?

ஜாதி, மற்றும் வர்க்க வேறுபாடுகளே, நம் நாட்டில் நடக்கும் , அனைத்து பிரச்னைகளுக்குமான மூலகாரணம். வர்க்க அடுக்கில், மேல் உள்ளவர்கள், ஜாதியின் பெயரால், உழைக்கும் மக்களை, பிரித்து வைத்துள்ளனர். எனவே இரண்டு பிரச்னைகளுக்கு எதிராக போராடும், தலித்துகளும், மார்க்ஸ் கொள்கையில் ஈர்ப்புடையவர்களும் இணைந்தால், புரட்சி சாத்தியம்.

நம் நாட்டில் உள்ள ஜாதிய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எது என்று கருதுகிறீர்கள்?

காதல் திருமணங்கள்., ஜாதிய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு. அகமண முறைகளால் தான், ஜாதியம் வேரூன்றி உள்ளது; ஜாதி மறுப்புத் திருமணங்களே, அதன் அடிப்படையை தகர்க்கும் என அம்பேத்கர் கூறுவார். அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

கடந்த 40 ஆண்டுகளாக , ஆவணப்படங்கள் எடுத்து வந்தாலும், குறைந்த அளவு ஆவணப்படங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளீர்களே?

முன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆவணப்படங்கள் எடுத்து வருகிறேன். எனக்கு கால அவகாசம் தேவை. மேலும், குறிப்பிட்ட ஆவணப்படத்தை எடுப்பதோடு, என்னுடைய வேலை முடிந்து விடுவதில்லை.

அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், முழு கவனம் செலுத்துகிறேன். பல நேரங்களில், அதிகார வர்க்கம் எனது ஆவணப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் வழங்க மறுக்கும். அதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, அதை மக்களிடம் கொண்டு செல்வதும் என்னுடைய வேலையே.

ஒரு சில ஆவணப்படங்களுக்கு, நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, ‘ஜெய் பீம் காம்ரேட்’ என்ற ஆவணப்படம் முழுமையாவதற்கு, 14 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதற்கு அதன் மையப்பொருளே காரணம்.

தினமலர் 18.08.2014
------------------------------------------------------------------------------------------------------

நன்றி: சலனம் & தினமலர்

சலனம் இதழில் வெளியான இந்த நேர்காணலை "பேசாமொழியின்" ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழுக்காக மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் நிர்வாகத்திற்கும், ஆசிரியர் குழுவினருக்கும் பேசாமொழியின் நன்றி.


தினமலரில் வெளியான ஆனந்த் பட்வர்தன் நேர்காணலையும் பேசாமொழியின் ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழுக்காக மறு பிரசுரம் செய்கிறோம். தினமலர் நிர்வாகத்திற்கு நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </