இதழ்: 20     ஆவணி (August 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பேசாதிருத்தல் என்பது ஒரு தேர்வுரிமை ஆகாது - ஆனந்த் பட்வர்தனோடு உரையாடல்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா - சாரு நிவேதிதா
--------------------------------
கடவுளின் பெயரால் - வசந்தி சங்கரநாராயணன்
--------------------------------
மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல் - கே.எஸ்.சங்கர் & ராஜா
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - தினேஷ் & யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது - அருண் மோ.
--------------------------------
தனி மர தோப்புகள் - வருணன்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 6 - கே.ஹரிஹரன்
--------------------------------
   
   

 

 

தனி மர தோப்புகள்

American Beauty

- வருணன்

கொலம்பஸ் வட அமேரிக்க கண்டத்தில் காலடி வைத்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த பூர்வக் குடிகளான செவ்விந்தியர்கள் அழித்தொழிக்கப்பட்ட பின்னர், ஐரோப்பியர் குடியேற்றங்கள் அங்கே பெருக ஆரம்பித்தன. பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அபாரமான வளர்ச்சி அதனை வல்லரசாக்கி, இன்று அது உலகில் தவிர்க்க இயலாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறது. அந்நாட்டின் வளர்ச்சி பல்வேறு கலாச்சார பிண்ணனி கொண்ட பல தேசத்து மக்களை தன் பால் ஈர்க்கிறது. இதனால் அம்மண்ணில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. இத்தகைய பன்மைக் கலாச்சார சூழலில் தனக்கென ஒரு கலாச்சாரத்தை அமெரிக்கா வளர்த்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான போது அது சற்றே திணறித்தான் போனது. அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியில் அதன் அசுரப் பாய்ச்சல் சாத்தியமான போதிலும், கலாச்சார அடிப்படையில் அது கைகூடிடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சமூதாயத்தின் அடிப்படை அங்கம் குடும்பமே.சிறிய அளவில் குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் நாளாவட்டத்தில் சமூகத்தின் முகத்தை, அது பயணிக்கும் திசையை மாற்ற வல்ல காரணமாக நிச்சயம் உருவாகும். நமக்கு மைய நீரோட்ட (Main stream) ஹாலிவுட் சினிமா ஒரு மாயயையே அமெரிக்காவாக முன் வைக்கிறது. அது முன்வைக்கும் கதாபாத்திரங்களின் வழியாக அமெரிக்க சமூகத்தின் நிச முகத்தினை நாம் ஒருபோதிலும் கண்டடைய முடியாது. அமெரிக்க கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பிற்கு மிக முக்கியமான மதிப்புண்டு. இந்நிலை மெல்ல மாறத்துவங்கியது. அமெரிக்க கலாச்சார வரலாற்றில் எழுபதுகளின் பிற்பகுதியில் அங்கு புகுந்து புயலென வீசிய ஹிப்பி கலாச்சாரம், குடும்ப அமைப்பிற்கு நேரடியான சாவாலாக இருந்தது. நாளாவட்டட்தில் குடும்ப உறவுகளைத் பிணைத்து வைக்கிற திறனை அமெரிக்க குடும்ப அமைப்பு இழந்து விட்டது அல்லது அத்தகைய திறன் மங்கத் துவங்கிவிட்டது. தொழிற்நுட்பத்தின் பெருவளர்ச்சி மேலும் மேலும் தலைமுறை இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டே செல்வது நிதர்சனம். இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான விரிசலை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க மக்கள் போலித்தனங்களின் மீது தங்களின் வாழ்க்கையை கட்டமைக்கிறவர்களாக பெரிதும் மாறிப் போயிருந்தார்கள். கடந்த பத்தாண்டுகளில் தகவல் தொடர்பின் அடுத்த கட்ட வளர்ச்சி இதனை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. மேலும் 9/11 நிகழ்வு நாட்டளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அதன் விளைவாக அமெரிக்கர்களிடையே ஏற்பட்ட உளவியல் மாற்றங்கள் என ஒட்டு மொத்த அமெரிக்க சமூகமும் வெகுவாக மாறிப் போனது.

நான் பார்த்தவரையில் அமெரிக்காவின் கலாச்சார தள்ளாட்டத்தினை சினிமாவில் 1999 இல் சாம் மெண்டஸ் (Sam Mendes) இயக்கத்தில் வெளியான American Beauty மிகச் சிறப்பாக பதிவு செய்தருக்கிறது. மத்திய வயதில் இருக்கும் ஒரு வகை மாதிரி அமெரிக்கனின் வாழ்க்கை, அவனுக்கும் அவனது குடும்பத்தினருக்குமான உறவுச் சிக்கல்களை முன்வைக்கிறது ஆலன் பாலின் (Allen Ball) திரைக்கதை. தான் வாழ்க்கையைத் தோற்று தன்னை வாழ்க்கையை உணர்ந்து கொண்ட கதையை நாற்பத்தியிரண்டு வயதான லெஸ்டர் பர்ன்ஹம் (Lester Burnham- Kevin Spaecy) சொல்லத் துவங்குவதின் கதை துவங்குகிறது.

லெஸ் எனும் லெஸ்டர், ஒரு மாத இதழில் பணியாற்றும் ஒரு சராசரி மத்தியத்தர அமெரிக்கன். மனைவி தொழில் ரியல் எஸ்டேட். பள்ளி செல்லும் பதின்ம வயது மகள். மனம் நிறைய ஏக்கங்களுடன், நேர்மாறாக எதுவும் கைகூடாத கனவுகளுடன் வாழ்க்கையைக் வாழாமல் கடத்திக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மத்திய வயதினன். குடும்பத்தின் தலைவன் என்று பெயருக்கு இருந்தாலும் மனைவியின் அதிகாரத்திற்கு தன்னைக் கையளிப்பவனாகவும், ஒரே செல்ல மகளின் அன்பைப் பெற முடியாதவனாகவும் இருக்கிறான். வாழும் வாழ்க்கையில் துளியும் ஈடுபாடின்றி வெறுமையாக உணர்கின்றான். மனைவி கேரலின் (Carolyn – Annette Bening) தனது தொழிற் போட்டிகளை சமாளிக்கும் சாதுர்யம் அற்று விரக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறாள். மேலும் கணவனுடனான தாம்பத்திய வாழ்க்கையும் சோபிக்காத நிலையில் வாழ்க்கையின் மீது பிடிப்பற்றவளாக இருக்கிறாள்.

இளமையின் வாயிலில் நிற்கும் மகள் ஜேன் (Jane – Thora Birch) , தனது வயதிற்கே உரிய மனகுழப்பம், நிச்சயமின்மை, அகநெருக்கடிகளுக்கு இடையே அல்லாடுகிறாள். பெற்றோருக்கு தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் சரியாக இருப்பதால், அன்பிற்கு ஏங்குபவளாகவும் இருக்கிறாள்.

இத்தகைய கதாபாத்திரங்களை நாம் பல புனைவுகளிலும் நிச வாழ்விலும் சந்தித்திருக்கலாம். ஆனால் இத்திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருந்த போதிலும், அதன் குறைகளைக் களைந்து உண்மையிலேயே வாழ்வை நல்ல முறையில் மார்றிக் கொள்வதைக்க காட்டிலும், தங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாக பிறரிடம் பாவனை செய்வதிலேயே அதிக முனைப்பு காட்டுபவர்களாக இருக்கின்றனர். வீசாத வசந்தம் தங்கள் உறவுகளுக்குள் வீசுவதாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்களே ஒழிய தங்களிடமுள்ள குறைகளை களைய முற்படவில்லை. இவர்கள் தங்கள் வாழ்வை உண்மையில் அடுத்தவர்களுக்காக வாழும் போலிதனங்களில் தான் தங்கள் கவனத்தை குவிக்கின்றனர்.

இவர்கள் வீட்ட்ற்கு அடுத்து ஒரு முன்னாள் ராணுவ வீரரின் குடும்பம் புதிதாக குடியேறி இருக்கிறது. அதன் குடும்பத் தலைவர் கோலோனல் ஃபிராங் (Col. Frank Fitts- Chris Copper) தனது ஆதிக்கத்தினை சர்வ காலமும் தனது மனைவி பார்பராவிடம் செலுத்துபவராகவும், தனதுகன் ரிக்கியின் மீது ஒழுக்கம் என்ற பெயரில் அதீத வன்முறையை பிரயோகிப்பராகவும் இருக்கிறார். சமூக ஒழுக்க விழுமியங்களுக்கு பெருமதிப்பு தருபவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஃபிராங் தனது வீட்டிற்கு அருகில் குடியேறும் ஓரினச்சேர்கை தம்பதிகளை முற்றுமாக வெறுக்கிறார். தனது மகனுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அவன் போதைப் பழக்கத்திற்கு ஆட்படாதை நிரூபிக்கும் பொருட்டு, சிறுநீரகப் பரிசோதனை செய்யுமளவிற்கு தந்து கண்டிப்பால் தொல்லை தருகிறார்.

ஜேனுடன் படிக்கும் அவனை, ஜேனின் நெருங்கிய தோழி ஏஞ்சலா (Angela – Mena Suvari) பைத்தியம் என்று பரிகாசம் செய்கிறாள். ரிக்கியோ அண்டை வீட்டிலிருக்கும் ஜேனை அவள் அறியாமல் ரகசியமாக தனது வீடியோ காமிராவில் படம்பிடிக்கிறான். விரைவிலேயே இதனை அறிய வந்தாலும், அவன் மீது சிறு பிரியம் கொள்கிறாள் ஜேன். அவ்ன் அவளை மட்டுமல்லாது சதா எப்போதும் எதையாவது படம் பிடித்தபடியே, பிறருடன் ஒட்டாமல் தனிப்பறவையாக இருக்கிறான்.

கரோலின் தந்தை மகளிடையே விரிசல் அதிகமாவதை சுட்டிக் காட்டி உறவை பலப்படுத்தும் விதமாக, பள்ளி கூடைப்பந்து போட்டியின் இடைவேளையில் ஜேன் கலந்து கொண்டு நடனமாடும் நிகழ்வுக்கு, லெஸ்ஸை வற்புறுத்தி அழைத்துக் போகிறாள். அங்கு தனது மகளின் சக வயது தோழி ஏஞ்சலாவை பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்கிறான். தனது தனி வாழ்க்கையில் உடற்தேவைகள் பூர்த்தியாகாத விரக்தியில் உழலும் லெஸ் ஏஞ்சலா மீதான பொருந்தா காமத்தால் நிலை கொள்ளாமல் தவிக்கிறான். மகளின் முன்னிலையிலேயே அவன் அவளிடம் வழிந்து பேசுவது ஜேனுக்கு மிகுந்த தர்மசங்கடத்தினை தருகிறது. ஆனால் ஏஞ்சலா இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள்.

ஏஞ்சலா தனது சுயத்தினை அடுத்தவரின் அங்கீகாரத்தில் ஒளித்து வைக்கும் ரகம். பெரும்பாலான பதின்மர்களின் மன ஓட்டத்தின் வகை மாதிரி அவள். இயல்பிலேயே அவள் அடுத்தவரின் கவனத்தினை கோருபளாக இருக்கிறாள். தான் தனது நண்பர்கள் வட்டத்திலேயே மிகவும் அழகி என்றும் தனது அழகிற்கு மயங்காதவர்களே இல்லையென்றும், வயது வித்தியாசமின்றி ஆண்கள் தன்னை மோகிப்பதாகவும் சுயதம்பட்டம் அடிப்பவள் ஏஞ்சலா. இந்த குணமே தந்து தோழி ஜேனின் தந்தை தன் மீது மோகம் கொண்டு இருப்பதை பெருமையாகவும் தனது அழகிற்கு அதுவே ஒரு ஆணாக அவர் த்ரும் அங்கீகாரமாகவும் நினைக்கிறாள். தான் பல ஆண்களோடு உறவு கொண்டுள்ளதாக வெளிப்படையாக தன் நண்பிகளிடம் பீற்றிக் கொள்கிறாள். பள்ளியில் ரிக்கியை பைத்தியக்காரன் என்பதை தாண்டி தனக்கு பிடிக்காததற்கு அவள் சொல்லும் ஒரு காரணம்- அவன் என்னை ஒரு முறை கூட பார்க்கவில்லை.

ஜேனின் அறையில் ஏஞ்சலா அவளை வெறுப்பேற்ற அவளது தந்தை அழகாக இருப்பதாகவும், இன்னும் சிறிது உடற்பயிற்சி செய்தால் இன்னும் கவர்ச்சியாக இருக்கும் எனவும் சொல்கிறாள். பேசுவதை ஒட்டுக் கேட்கும் லெஸ் அதனை அப்படியே கடை பிடிக்கத் துவங்குகிறான். நாட்கள் செல்லச் செல்ல அவன் தொலைந்து போனதாக கருதிய தனது இளமையை மீட்டெடுத்த ஒரு புதிய மனிதனாக தன்னை உணருகிறான். அலுவலகத்தில் தந்து பதிநாஙு வருட சேவையை கூட கருத்தில் கொள்ளாமல் ஆட்குறைப்பில் பணி பறிபோகையில் கூட வருத்தம் கொள்ளாது மேலதிகாரியை மிரட்டி தன்க்குச் சேர வேண்டியதை விட அதிகமான படிகளைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மாறிப் போகிறான். மேலும் புதிதாய் ஊற்றெடுத்திருக்கும் இந்த உற்சாகத்தின் உந்துதலில் வீட்டில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துகிறான்.

மாற்றம் அவனிடம் மட்டுமல்ல. ஒரு விருந்தில் தனது தொழில் முறை போட்டியாளனான கேனை (Kane) சந்திக்கும் கேரலின் அவனது வசீகரத்தில் தடுமாற்றமடைகிறாள். நாளடைவில் அது அவளை திருமண பந்தத்தை மீறிய ஒரு உறவுக்கு அவளை அது இழுத்துச் செல்லுமளவிற்கு வலுவானதாக இருக்கிறது. இதனை அறிய வரும் போது அது குறித்து துளியும் அலட்டிக் கொள்ளாத ஒரு மனநிலைக்கு லெஸ் வந்து விடுகிறான். ஒரு முறை பர்ன்ஹம் தம்பதியினர் சகிதமாய் செல்லும் ஒரு கேளிக்கை விடுதியில், அங்கு பகுதி நேர ஊழியனாக வேலை செய்யும் ரிக்கியை சந்திக்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் லெஸ், ரிக்கி தங்களுகிடையில் அலைவரிசை ஒத்துப் போவதால் நண்பர்களாகின்றனர். தனது தந்தையை ஏமாற்றுவதற்காவே இப்பகுதி நேர பணி செய்யும் ரிக்கி உண்மையில் ஒரு ரகசிய மாரிஜுவானா (கஞ்சா) வியாபாரி.

இடையே ஜேனுக்கும் ரிக்கிகும் இடையே இருந்த நட்பு காதலாக பரிணமிக்கிறது. இருவருமே தமது பெற்றோரால் ஏதொ ஒரு வகையில் அன்பு செய்யப் படாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடுக்கிடையேயானா அன்பு மிகவும் ஆறுதலளிப்பதாக அந்த தருணத்தில் இருக்கிறது. அது அவர்களுக்கு தேவையாகவும் இருக்கிறது. லெஸ் புத்தெழுச்சி பெற்ற மனிதனாய் வாழ்க்கையை ரசித்து வாழ துவங்குகிறான். ஒரு முறை அவனுக்கு போதைப் பொருள் வினியோகம் செய்யும் பொருட்டு பொய் சொல்லி ரிக்கி செல்லும் போது சந்தேகித்து அவனை வேவு பார்க்கும் ஃபிராங் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்களை ஓரினக் காதலர்களாக தவறாக புரிந்து கொள்கிறான். இது அவனுக்கு கட்டுக்கடங்காத கோபத்தை வரவழைக்கிறது. மகனை நையப்புடைக்கிறான். முதன் முறையாக தகப்பனை எதிர்க்கும் ரிக்கி வீட்டை விட்டு வெளியேறுகிறான். கேரலினோ தன்னிடமிருந்து விலகும் தனது காதலனின் இழப்பில் மீண்டும் மனநிம்மதியின்றி அவதியுறுகிறாள். அவசர கதியில் ஒலிநாடாவில் கேட்கும் ஒரு ஊக்க உரையை, தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு, தனது வாழ்வின் அத்துணை குழப்பங்களுக்கும் லெஸ் மட்டுமே காரணம் எனும் முடிவுக்கு வந்தவளாய், கைத்துப்பாக்கியுடன் அவனை கொல்ல வீட்டிற்கு விரைகிறாள். நிசத்தில் ஒரு ஓரினசேர்க்கையாளனரான ஃபிராங், வருடங்களாக தனுக்குள் துயில் கொண்டிருந்த வேட்கையால் உந்தப்பட்டு லெஸை- தான் தரித்திருக்கும் கண்டிப்பானவன் எனும் போலி அவதாரத்தினைத் துறந்து- அணுகுகிறான். நேர்மாறாக லெஸ் ஓரினப் பிரியன் அல்ல என்பதை அறிந்து விலகுகிறான்.

வீட்டை விட்டு வெளியெறிய ரிக்கியோ நேரே, ஏஞ்சலா ஜேனின் அறையில் தங்கியிருக்கும் அந்த இரவில், வந்து தான் நியூயார்க் செல்வதாகவும் அவளை தன்னுடன் வருமாறு வேண்டுகிறான். ஏஞ்சலாவின் எதிர்ப்பை மீறி ஜேன் அவனுடன் செல்ல சம்மதிக்கிறாள். இதனால் ஏற்படும் வாக்குவாதத்தில் ஏஞ்சலாவை அவள் நினிப்பது போல பேரழகி இல்லை எனவும், மாறாக மிகவும் சாதாரணமானவள் எனவும் கூறுகிறான். தான் சாதாரணமானவள் என்பதை அறவெ வெறுக்கும் அவளோ இத்தனை நாள் தான் பூசியிருந்த போலிப் பூச்சுகள் வெளித்துப் போய் தனது சுயத்தினை சீரணிக்க திராணியரற்றவளாக அழுதபடி வெளியேறுகிறாள். கீழறையில் தனிமையில் இருக்கும் லெஸ் அவளது இயல்பினை துல்லியமாக கணித்து அவளை அடைய தேன் தடவிய புகழ்ச்சிப் பேச்சால் சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முனைகிறான். தனக்கு கிடைக்கும் போலி அங்கீகாரத்திற்கு பதிலாக தன்னையே அவனுக்கு தர ஏஞ்சலா துணிகிறாள். அவள் மீது படர எத்தணிகும் கடைசி நொடியில் அவள் இதுநாள் வரை சொல்லியதெல்லாம் பொய்கள் என்றும் அவள் இன்னும் ஒரு முறை கூட எந்த ஆடவனுடனும் கூடியதில்லை எனவும் அறிந்து கொள்கிறான்.

அடுத்த கணம் தன்னை உணர்ந்தவனாக அவளிடம் இருந்து விலகுகிறான். வாழ்க்கையில் தனக்கு மின்னல் போல வந்த அந்த ஞானம் அவனை உள்ளத்தளவில் மாற்றுகிறது. ஏஞ்சலாவும் சுய பிரக்ஞையுற்றவளாக வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறாள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என நினைக்கும் தருணத்தில் லெஸ் சுட்டுக் கொல்லப்படுகிறான். தான் இத்தனை ஆண்டு காலம் பொத்தி வைத்திருந்த குண ரகசியத்தினை தெரிந்தது பொறுக்காது அவனை கொன்றது ஃபிராங் என நாம் அறிய வருகிறோம்.

கதாப்பத்திரங்கள் அனைத்தும் நிகழ்கால அமெரிக்க மக்களின் மனவோட்டத்தினை துல்லியமாக படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. கதாப்பாத்திரங்களை தனித்தனியாக திரனாய்வு செய்வதன் மூலமாகவே நாம் அமெரிக்கர்களின் போலிந்தனமான வாழ்க்கை முறையினை பிரிந்து கொள்ள முடியும். படம் முழுக்க கதை யதார்த்தம் துறந்த, மனிதர்களை விடவும் பொருட்கைளை மையப்படுத்திய செயற்கைதனம் மிகுந்த அமெரிக்க வாழ்க்கையை பகடி செய்கிறது. கதை மாந்தர் அனைவரும் தங்களது அந்தரங்க வாழ்க்கை எத்தனை உறவுச் சிக்கல் மிகுந்ததாக இருப்பினும் அது நன்றாக உள்ளதாக சமூதாயத்தின் கண்களின் முன்பு நிலை நிறுத்திக் கொள்ளும் தன்முனைப்பு உடையவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தின் மும்ன்னிலையில் தங்களை நல விதத்தில் காட்டிக் கொள்ள எவ்வளௌ நடித்திடவும் தயாராக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களின் உண்மையான சுயத்தினை இழந்து நடிப்பே வாழ்க்கையாகிறது. சமூக அங்கிகாரத்திற்காக ஏங்கிடும் சமூக விலங்குகளாக மாறிப் போகிறார்கள். அவசியமில்லாத போலி முகமூடிகளையும் ஒப்பனைகளையும் கொண்டு நெருங்கிய உறவுகளிடம் கூட தங்களது சுயத்தினை மறைக்க கடும் பிரயத்தனப்படுகிறர்கள். தங்களின் இயலாமையால் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியாதவர்களாக பெற்றோர்களையும், ஒரு வகை மாதிரி பெற்றோருக்காக ஏங்கித் தவித்திடும் நிலையில் பிள்ளைகளையும் கதை முன்வைக்கிறது. பெயரளவிற்கு குடும்பம் எனும் அமைப்பு இருக்கும் போதிலும், அதில் வாழும் மரங்கள் தங்களது சுயநலத்தால் தனி மரங்களாகவே வாழ்கின்றனர்.

படம் வெளியாகி ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த திரைப்பிரதி முன்வைத்திடும் சிதைவுற்ற குடும்பங்கள் நமது நாட்டின் இன்றைய யாதார்த்தத்திற்கு வெகு அண்மையில் இருக்கின்றது என்பது கவலைக்குரியதே.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </