வீடு - வெள்ளி விழா!!!
தமிழ்நாட்டில் திரைப்படங்கள் என்றாலே பாடல், அதற்கடுத்து வசனம் என்று இருந்த நிலையை மாற்ற முயற்ச்சித்தவர்கள் அனைவரும் இறுதியில் தமிழ் திரைப்படங்களுக்காகவே தங்களை மாற்றிக் கொண்டார்கள். அதுதான் வியாபார சினிமா. ஆனால் அவ்வபோது தமிழ் சினிமாவில் சில முத்துகள் பிறக்கும். அதில் ஒன்று வீடு. இத்தனை ஆண்டு கால திரைப்பட வாழ்வில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் நான் படைத்தது இரண்டு படங்கள்தான். ஒன்று வீடு. இரண்டு சந்தியா ராகம் என்று பாலு மகேந்திரா அடிக்கடி சொல்வார். ஆனால் 12 லட்சத்தில் உருவான வீடு திரைப்படம் 75 லட்சங்கள் வசூலித்தது என்கிற புள்ளிவிவரத்தையும் பார்க்கும்போது, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் போதும், நிச்சயம் அந்த படைப்பு வெற்றி பெரும் என்பது உறுதியாகிறது.
சின்ன பட்ஜெட் படங்கள் என்றும், மாற்று சினிமா என்றும், வணிகப் படங்கள் என்றும் தமிழ் சினிமா பிளவுண்டுக் கிடக்கும் வேளையில் வீடு மாதிரியான ஒரு படத்தை கொண்டாடுவது இன்றியமையாததாகிறது. நல்லப் படைப்புகள் கொண்டாடப்பட்டால் அடுத்தடுத்த நிறைய நல்லப் படங்கள் வெளிவரும்.
திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம். இங்கே வார்த்தைகளுக்கு அதிகம் வேலை இல்லை. மேலும், ஒரு படைப்பு உலக அளவில் சென்று சேர மொழி ஒரு தடையாக இருக்க கூடாது. என்னதான் Sub-Title போட்டு உலகம் முழுக்க படங்கள் அனுப்ப நினைத்தாலும், தாய் மொழியில் உருவாகும் அதிர்வு இன்னொரு மொழியில் அப்படியே உருவாக வாய்ப்பில்லை. உலக அளவில் போற்றப்படும் அனைத்து படங்களையும் பாருங்கள். அது மிக அதிகமாக காட்சிகளால் உருவான படைப்பாகவே இருக்கும். திரைப்படம் என்பது காட்சிகளுக்கு இடையே நடக்கும் உரையாடலின் மௌன கீதம். அங்கே அதிகமான வசனங்களுக்கோ, சப்தங்களுக்கோ வேலை இல்லை. வீடு திரைப்படம் இதில் ஓரளவிற்கு வெற்றி பெற்ற படம். தமிழ்நாட்டில் நாம் கொண்டாடும் படங்களை எல்லாம், தமிழ் நாட்டில் உள்ள மற்றப் படங்களோடுதான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். காரணம் இங்கே நல்லப் படங்கள் வெளிவருவது அத்தனை எளிதல்ல. தமிழ்நாட்டில் இதுவரை வெளியான நல்லப் படங்களின் எண்ணிக்கையை இரண்டு கைகளில் எண்ணி விடலாம். அதில் நிச்சயம் வீடு திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு.
|
வீடு திரைப்படத்தின் கதையே நமக்கு மிக நெருக்கமானது. தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் இத்தகைய பிரச்சனையை எதிர் கொண்டிருப்பார்கள். ஆனால் அதை திரைமொழியில் சொல்வதென்பது மிகுந்த சிக்கலான விஷயம். ஆனால் பாலு மகேந்திரா போன்ற ஒளியியலாளர்கள் அதனை மிக சிறப்பாக செய்ய முடியும். இந்த படத்தில் வரும் பல காட்சிகள் உலக சினிமாக்களுக்கு ஈடாக தமிழ் சினிமாவை உயர்த்தி நிற்க வைக்கிறது.
சொக்கலிங்க பாகவதர் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் வசனங்கள் ஒதுங்கி நின்று காட்சிகளை தரிசித்து நிற்கிறது. வீட்டில் இருந்து வெளியே வரும் சொக்கலிங்க பாகவதர், கொஞ்சம் அண்ணாந்து பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் போவார். பின்னர் மீண்டும் வெளியில் வரும்போது குடையை விரித்துக் கொண்டு வருவார். இந்த இடத்தில் மற்ற தமிழ் படங்களில் வருவது போல், வெளியில் வெயில் கொஞ்சம் ஜாஸ்தி இருக்கு.. குடையை எடுத்துக் கொண்டு போவோம், என்று வசனங்கள் எல்லாம் வரவில்லை. அதுதான் சினிமா. காட்சியின் மூலம் உணர்த்துவது. ஆனால் இந்த மாதிரியான காட்சிகள் எங்களுக்கு புரியவில்லையே என்று சிலர் சொல்லக் கூடும். அங்கேதான் நமக்கு பயிற்சி தேவைப்படுகிறது. திரைப்படங்கள் இப்படிதான் இருக்க வேண்டும். அதை புரிந்துக் கொள்ள நாம் கொஞ்சம் மெனெக்கெட வேண்டும். ஆனால் இங்கே திரைப்படங்கள் கட்டமைக்கப்பட்ட விதமே வேறு.
படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி, சொக்கலிங்க பாகவதர் இறந்ததும் அந்த வீட்டில் எந்தவித சலனமும் இருக்காது. பின்னர் ஒரு நாள் அவரதுப் பேத்தி அவர் பெட்டியை எடுத்துப் பார்க்கும்போது அவர் நினைவு வந்து கதறி அழுவார். எத்தனை கனமான, நேர்த்தியான காட்சி அது. இந்த ஒரு காட்சியே வீடு திரைப்படத்தை கொண்டாட போதுமானது. ஆனால் வீடு திரைப்படத்தை கொண்டாட நிறைய காரணங்கள் நமக்கு இருக்கிறது.
பாலு மகேந்திரா நினைத்திருந்தால் இந்த படத்தை பார்ப்பவர்களை கதறி கதறி அழ வைத்திருக்கலாம். ஆனால் மிக மென்மையான உணர்வுகளின் மூலம் படத்தை அதன் கருவும், அரசியலும் மாறாமல் படைத்திருக்கும் விதம் மிக நேர்மையான ஒன்று. அவரே அடிக்கடி சொல்வார், படைப்புகள் கழிவிரக்கங்களை கோரக் கொடாது என்று. அதை அவர் நிகழ்த்தி காட்டி இருக்கும் இடம் வீடு திரைப்படம். ஒரு வீடு காட்டுவதின் வழியாக இந்த சமூகத்தில் மலிந்து போய் கிடக்கும் பல விசயங்களை போகிற போக்கில் சாடி விட்டுப் போவார். அரசாங்க எந்திரம் எவ்வளவு பாழ்பட்டுப் போன ஒன்று என்பது இந்த படத்தின் இறுதியில் நமக்கு புரிந்து விடுகிறது.
ஒரு படைப்பு காலம் தாண்டியும் அதன் கருத்தியலுக்காகவும், நேர்த்திக்காகவும் பேசப் பட வேண்டும். வீடு திரைப்படத்தை இன்று பார்த்தாலும், அதனை எந்தவித நெருடலும் இல்லாமல், ரசித்து கொண்டாட முடிகிறது என்றால் அதுதான் அந்த படைப்பின் வெற்றி. வீடு திரைப்படத்திற்காகவே பாலு மகேந்திராவை இன்னும் சில நூற்றாண்டுகள் கொண்டாடலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |