வெள்ளி விழா காணும் வீடு
இன்னமும் கட்டி முடிக்கப்பெறாததால் புதுமனை புகுவிழா கூட கண்டறியாத அந்த வீட்டினைப் பற்றிய ’வீடு’ படம் வெள்ளி விழா கொண்டாடுகிறது. அதற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஒருமித்த அங்கீகாரமும் வரவேற்பும் போன்று ஒருசில தமிழ்ப்படங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் ‘பராசக்தி’ படம் வெளிவந்து அறுபது வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. தமிழின் திருப்புமுனைப் படங்களில் ஒன்றென அது கருதப்பட்டாலும் அதன் பாதிப்புகள் முற்றிலும் வேறானவை.
தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ’அழியாத கோலங்கள்’. அந்தப் படத்தின் மொத்த வசனங்கள் அதிக பட்சம் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் இருக்காது என்று ஏற்பட்ட எண்ணமே ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. காட்சிகளின் பலத்துடன் ஒரு படத்தின் கதையை பெருமளவு சொல்லிவிட முடியும் என்பதை ரசிகர்கள் அதன்மூலம் கண்டுகொண்டார்கள். இதனால்தான் அவருக்கு கேமரா கவிஞர் என்கிற பட்டம் தரப்பட்டது.
அழியாத கோலங்கள் படத்திற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த மாதிரியான படங்கள் வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்தன. அவரது மூன்றாம் பிறை பரவலாக பேசப்பட்ட படம். ஆனால் நடிகர்களின் மிகையான நடிப்பு, புத்தி பேதலித்த பெண்ணை ஒரே நாளில் குணப்படுத்தும் நாட்டு வைத்தியம் போன்ற பலவும் அந்த எதிர்பார்ப்பினை மேலெடுத்து செல்வதாக இல்லை. அந்தப் படத்திற்கு விருதுகள் கிடைத்தன என்பது வேறு விஷயம். அதில் இடம்பெற்ற பொன்மேனி உருகுதே, பாடல் காட்சி மட்டும் இன்றளவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. நடன அசைவுகள், உடை, ஒளிப்பதிவு, இசை என்று ஒவ்வொன்றிலும் காமம் கட்டுப்பாடான அழகியலுடன் அதில் வெளிப்பட்டது.
வீடு சற்றும் எதிர்பாராத தருணத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்களை பிரமிக்க வைத்த படம். பெரிய நடிக, நடிகையர்களோ மற்றும் வழக்கமான தமிழ் சினிமா அம்சங்களோ அதிலில்லை. கீழ்மத்திய தர வர்க்கத்தின் வாழ்வினை வலுவான திரைக்கதை மூலம் எளிமையாக சொல்லிய அப்படம் கலைப்படம் வரிசையில் சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னால் வந்த தமிழ்க் கலைப்படங்களிலிருந்தும் அது வேறுபட்டு நின்றது. திரைக்கதை நன்றாக இருந்தாலும் படம் எடுக்கப்படுவதில் டெக்னாலஜி குறைகள் கலைப் படங்களில் தென்படும். இதற்கு ஒரு முக்கிய காரணம் அப்படங்களுக்கு கிடைக்கும் குறைந்த முதலீடு , குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய குறைகள் ஏதுமின்றி வீடு படம் வெளிவந்தது.
வீடு வெளிவந்தவுடன் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். காலச்சுவடு சிற்றிதழைத் தொடங்கியிருந்த சுந்தர ராமசாமி என்னிடம் ஏதாவது ஒரு கட்டுரை தருமாறு கேட்டிருந்தார். உடனேயே அதை அவருக்கு அனுப்பிவைத்தேன். காலச்சுவடு நாலாவது இதழில் அது பிரசுரமாயிற்று. அதை மீண்டும் படித்துப் பார்க்கும்பொழுது அதிலுள்ள கருத்துகளுடன் நான் கொண்டுள்ள இசைவினை அறிய முடிகிறது.
|
’வீடு’ கலைத்திறன் கொண்ட படம். சர்வதேச வீடற்றவர்களின் ஆண்டாகப் பிரகடனஞ்செய்யப்பட்ட 1987ஐச் சேர்ந்ததாக இப்படம் தமிழில் வெளிவந்ததற்கு மேலும் கூடுதல் நியாமும் இருக்கிறது. எழுபதுகளின் ஆரம்பத்திலேயே மராத்திக்காரர்களை நாடகங்களிலும் சினிமாக்களிலும் பாதித்த ‘வீடு’ பிரச்சினை எண்பதுகளில்தான் சென்னை வாசிகளைப் பூதாகரமாகப் பாதிக்கிற பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பலகாலமாக ரூ.120 வாடகையில் ஒண்டிக் குடித்தனம் புரிந்துவரும் முருகேசனின் குடும்பத்தாருக்கு ரூ.500க்குள் வாடகைக்கு மாற்று வீடு கிடைக்கவில்லை என்னும் போதுதான் அப்பிரச்சனையின் அழுத்தம் அவர்களுக்குப் புரிகிறது. வளசரவாக்கத்திலுள்ள காலி மனையில் வீடு கட்டுவது இயல்பானதாகத் தொடர்கிறது. இப்பொழுது ‘வீடு’ என்னும் பிரச்னை வழக்கத்திற்கப்பாற்பட்ட கோணங்களைக் கொண்டிருக்கிறது.
இருக்க ஒரு வீடு என்னும் எளிமையான பாரம்பரியத்திற்குப் பழக்கப்பட்டுள்ள மனிதர்களால் வீடு கட்டிப் பார்ப்பதென்பது பொருள் மற்றும் ஆள் பலத்தை நாடுவது மட்டுமல்ல என்பது தெரிகிறது. வீடு என்னும் அறிவினை அவர்கள் கொள்ளவேண்டியதாகிறது. எம்.எம்.டி.ஏ., பஞ்சாயத்து போடு, ப்ளான் ஷாங்ஷன், லோன் போன்ற விதிமுறைகள் நடைமுறைகள் அவர்களால் அறியப்பட வேண்டியனவாக உள்ளன. ஆனால் மனிதர்கள் இன்னும் தங்களை முழுதாகத் தயார்படுத்திக்கொள்ளவில்லை. மெட்ரோ வாட்டர் போர்டின் பறிமுதலுக்குள்ளான மனை தங்களுடையது என்னும் மிக முக்கியமான தகவலை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அறியாமை பரஸ்பரம் என்பதனால் மொத்த மனையிலிருந்து ஒரு கிரவுண்டை இவர்கள் விற்கும்பொழுது இன்னொருவர் அதை வாங்கவும் முடிகிறது.
ஆகிவந்த நடைமுறைகளிலிருந்து மாற்றங்கொண்ட புதிய நடைமுறைகளைப் பயில்வதில் தடுமாற்றமடையும் மனிதர்களைப் பற்றிய படம் இது.
ஒற்றைக் கருப்பொருளை ஆக்ரமிக்கும் ஓர் ஓரங்க நாடகத்தினைப் போல் வீடு என்னும் ஒற்றைப் பிரச்னையை மட்டும் எடுத்துக்கொண்டுள்ள இப்படத்தில் தண்ணீர்ப் பிரச்னையும் அரசல்புரசலாகத் தலைதூக்குகிறது.
வீடு பிரச்னையைச் சுமப்பவர்களில் ஒருவராக வரும் 84 வயதுக் குடும்பத் தலைவர் முருகேசனாக கே.ஏ.சொக்கலிங்க பாகவதர் சொந்தக் குரலிலும் பாடி அருமையாக நடித்துள்ளார். வீடு கட்டப்பட்டுவிட்டதான மன நிறைவுடன் அவரைச் சாகடித்திருப்பது படத்தின் புத்திசாலித்தனமான முத்திரைகளில் ஒன்றாகும். இதனால் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட மனையில் வீட்டைக் கட்டிவிட்டு அதனுடன் போராட வேண்டிய விதி இளைய
வீட்டைக் கட்டிப் பார்த்துவிடும் பெண் சுதாவினை அர்ச்சனா தன் எளிமையான தோற்றத்தில் நன்றாக உள்வாங்கியிருக்கிறார். கோபியாகவரும் பானுசந்தர் மிக இயற்கையாகத் தன் காதலியை ‘அய்யா’ என்று அழைக்கிறார். தன் காதலிக்கு அவளது பிரச்னையில் தோள் கொடுப்பவராயினும் அவர் அதிலிருந்து விடுபட்டு நிற்கிறவராய் நம்மை உணரவைக்கிறார். குறுந்தாடி, மீசை, மூக்குக் கண்ணாடி, ஜோல்னா பை, ஜிப்பா போன்றவையால் ஆன புறத்தோற்றமும் காதலியுடன் உரிமையுடன் நடந்துகொள்வது, அவளது பிறந்த நாளன்று புடவை வாங்கித்தருவது போன்ற நிகழ்ச்சிகளும் அதற்கு உதவுகின்றன.
நுணுக்கமான பல தகவல்களை பாலு மகேந்திரா படம் முழுவதும் தந்திருக்கிறார். முருகேசன் தனது உயிலில் பத்தாயிரம் ரூபாயைப் பற்றி எழுதிய வரிகள் பின்வரும் காட்சியில் யாதார்த்தத்திற்குகந்த வகையில் அடிக்கப்படிருப்பது. தங்க நகைகளை விற்றுவிட்டதால் சுதா போட்டுக்கொண்டிருக்கும் கவரிங் நகைகளை லிப்டில் வரும் பெண் கவனித்துக் கேட்பது. வீட்டுக் கடனுக்காக சுதா Richardson (India) Ltd. என்று அச்சடிக்கப்பட்ட அவளது அலுவலக விண்ணப்ப பாரத்தைத் தருவது, படத்தின் ஆரம்பக் காட்சியில் சுதா கட்டிருந்த புடவையை மங்கா அவளிடமிருந்து தானமாகப் பெற்று பின்வரும் காட்சியொன்றில் தான் கட்டியிருப்பது போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
தமிழ்ப் படத்தின் விரிசல்களைக் காட்டுகிற வழக்கமான சுலபத்துடன் இப்படத்தினை நோக்கி நாம் ஆள்காட்டி விரலைச் சுட்ட முடியாத வகையில் பாலு படத்தை எடுத்திருக்கிறார். மிகக்குறைந்த வசனங்கள் கொண்ட ஸ்கிரிப்டைத் தயார் செய்து அநேக சிறு ஷாட்டுகளாகப் படத்தை வேய்ந்திருக்கிறார்.
இவ்வாறு சிறு சிறு ஷாட்டுகளாகப் படமெடுப்பதன் முலம் மனிதர்களைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடங்களில் நிறுத்தி பிரச்னையின் தளத்தை அதிகப்படுத்தியும் அதேசமயத்தில் புரிந்துகொள்ளலைச் சுலபமாக்கவும் முடிந்திருக்கிறது. வேகமான கேமிரா அசைவுகளற்ற இப்படத்தில் ஷாட்டுகளைக் கிரமப்படியும் அமைத்துள்ளார். வீடு மனை பேரம் பேசப்பட்டு முடிவானவுடன் அடுத்த ஷாட் ரெஜிஸ்தர் ஆபீஸில் விற்பனை கையெழுத்தாவது காட்டப்படுகிறது.
முக்கியமாக இன்னொரு விஷயம் இப்படத்தில் நடந்திருக்கிறது. அது சுதாவுடன் கோபியும் திருமணத்தை நோக்கியவர்களாயினும் படம் முழுவதும் நண்பர்களாக நெருக்கம் கொண்டிருக்கும் ஆண் – பெண் உறவினைப் பற்றியது. தமிழ்ச் சமூகம் இவ்வுறவினைச் சமூக வாழ்வில் ஓரங்கமாக ஏற்றுக்கொண்டுவிட்ட போதிலும் தமிழ்ப் படங்களில் இது இன்று வரை இத்தனை எளிமையாகக் காட்டப்படவேயில்லை. மாற்றங்கொள்ளாத தமிழ்ப் படங்களிலிருந்து விடுபடுகிற நேரத்தில் அவைகள் காட்டத் துணியாக மாறிவரும் சமூக நடைமுறை ஒன்றினை எந்தவொரு பரபரப்புமின்றி எவ்வாறு சித்தரிப்பது என்பதை பாலு இதன்மூலம் நமக்குக் காட்டியுள்ளார். படத்தின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.
‘வீடு’ வெளிவந்து இடைப்பட்ட இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்ப்படங்களில் எவ்வளவோ மாறுதல்கள் வந்துள்ளன. நல்ல மாறுதல்களும் அவற்றில் உண்டு. குறைந்த செலவில் யதார்த்தமான களனில் நட்சத்திரங்களைத் தவிர்த்து துணிச்சலாகப் படமெடுப்பது என்பது போன்றவற்றை மாறுதல்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆனால் இயல்பாகவும் முற்போக்காகவும் உள்ள மனிதர்கள் மிகையுணர்வின்றி சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது அரிதாகவே உள்ளது. வீடு படத்தில் வருகிற கதாநாயகியைப் போல ஒரு சராசரியான பெண் அவருக்கேயுரிய வலிமை, பலவீனம் ஆகியவற்றுடன் கூடிய எத்தனை கதாபாத்திரங்களை விரல்விட்டு எண்ணமுடியும்? ஆணும், பெண்ணும் கொள்கிற காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் கொள்கிற பருவ உணர்வு என்பதோடு இல்லாது வாழ்வின் சவாலை ஒன்றாக எதிர்நோக்குவது என்பது போன்ற திரைக்கதை வார்க்கப்படுகிறதா?, என்பதை கவனிக்கவேண்டும்.
’வீடு’, வெளிவந்த மறுவருடமே அவரது ’சந்தியா ராகம்’ வெளிவந்தது. ’வீடு’, படத்திற்கு சற்றும் குறைவில்லாத ஆற்றலுடன் அப்படம் வெளிவந்திருப்பதை இப்போது என்னால் உணரமுடிகிறது.முதியவர்கள் தங்களுக்குள் கொள்கிற தோழமையை அப்படம் காட்டியதைப்போல் இதுவரை வேறு எந்தப் படமும் கட்டியதில்லை. தமிழ் சினிமா மரபில் தென்படாத குணங்களுடன் இரண்டு படங்களை ஒன்றன் பின் ஒன்றாக படைத்த ஒரே கலைஞன் பாலு மகேந்திரா. ஆனால் அதற்குப்பிறகு அந்தத் தொடர்ச்சியை காணமுடியாதது ஒரு பேரிழப்பாகும். இதற்கு படைப்பாளியை குற்றம் சொல்லும் போக்கினை நான் கடுமையாக எதிர்க்கிறேன், தொடர்ந்து அத்தகைய படங்கள் வெளிவருவதற்கான சூழலை நாம் கலைஞர்களுக்கு உருவாக்கித் தந்தோமோ? என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாகவேஉள்ளோம்.அவரது கதைநேரம் என்னும் தொலைக்காட்சித் தொடர்வாயிலாக பல சிறந்த குறும்படங்களை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. பிரபலமான தமிழ் சிறுகதைகள் மட்டுமின்றி அதிகம் கவனத்திற்கு வராத சிறுகதைகளையும்கூட அவர் அதில் சிறப்புற கையாண்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் .தற்போது தலைமுறைகள் என்கிற படத்தை அவர் எடுத்து முடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வீடு , சந்தியா ராகம் ஆகியவற்றின் வரிசையில் அப்படம் இருக்கும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மிக நல்ல படம் என்பதோடு மட்டுமின்றி இன்றளவும் அதைப்பார்த்து திரையுலகினர் கற்றுக்கொள்வதற்கும் ரசிகர்கள் ரசிப்பதற்கும் அதில் நிறையவே இருக்கின்றது என்பதே ’வீடு’ படத்தின் சிறப்பு.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |