வீடு சிறப்பிதழ் :: இதழ்: 2, நாள்: 15-தை-2013
   
 
  உள்ளடக்கம்
 
பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’ - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
வெள்ளி விழா காணும் வீடு - அம்ஷன் குமார்
--------------------------------
'வீடு' - பாலு மகேந்திரா 1988 - எஸ். தியடோர் பாஸ்கரன்
--------------------------------
வீடும் விடுதலையும்: பாலு மகேந்திராவின் திரைப்படைப்பின் அர்த்த தளங்கள் - ராஜன் குறை
--------------------------------
வீடும் சில நினைவுகளும் - மு.புஷ்பராஜன்
--------------------------------
'வீடு' சொல்வது யாதெனில்... - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
பாலு மகேந்திராவின் வீடு - ராஜேஷ்
--------------------------------
வீடு - மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவு - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
வீடு - வெள்ளி விழா!!! - அருண் மோகன்
--------------------------------
வீடு திரையிடல் & கலந்துரையாடல் - அருண் மோகன்
   
   
   


'வீடு' சொல்வது யாதெனில்...

எம்.ரிஷான் ஷெரீப்

வீடுகள் எப்பொழுதும் அழைத்துக் கொண்டேயிருக்கின்றன. மலைக்காடுகளிலுள்ள கருங்குகைகள் குடையப்பட்டு இருப்பிடங்களாகத் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே மனிதன் தனது உறைவிடம் குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்டான். பறவைகளுக்கு இருப்பிடம் பற்றிய பிரச்சினைகள் எவையும் இல்லை. அவைக்கு மரங்களே கூடு. பறத்தலே தேடல். மனிதன் எப்பொழுதுமே தேடலைத் தொடர்ந்தபடி அலைபவன். பெருவிருட்சங்களைப் போல அவனது பாதங்கள் ஓரிடத்தில் மாத்திரம் தரித்து நின்று விடுவதில்லை. அவன் தனது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டே இருக்கிறான். அத் தேடல்களின் பின்னே அவனது வாழ்வு குறித்த ஒரு ஏக்கம் சுமையென அழுத்திக் கொண்டேயிருக்கிறது. அந்த ஏக்கம் அவனைத் துரத்துகிறது. அவனை ஒரு நதியென மாற்றிச் சுழல விடுகிறது. நதி கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டே இருக்கிறது. மனிதனும் அவ்வாறேதான். உணவிற்கான பசியும், கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான ஆடையும் கணத்துக்குக் கணம் மனிதனை இயங்கச் செய்துகொண்டேயிருக்கிறது. எல்லாவற்றுக்கும் அத்திவாரமாக அமைதியாக அமர்ந்திருக்கிறது வீடு. அது மாயக் கரம் கொண்டு தன் பக்கம் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதன் அலைந்து திரிந்தாலும் அவனது இறுதி இலக்காக அவனது வீடே அமைகிறது. ஒரு மனிதன் எங்கு பயணித்தாலும், அவன் மீளத் திரும்புவது தனது இருப்பிடத்துக்கேயாகும்.

இயக்குனர் பாலுமகேந்திராவின் 'வீடு' மூன்று தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வீட்டில் வாழும் மனிதர்கள் எல்லாக் காலத்து மனிதர்களையும் மிகவும் கூர்மையாகப் பிரதிபலிக்கிறார்கள். எல்லா மனிதர்களுக்குள்ளும் குடியிருக்கும் உள்மன ஆசைகளிலொன்று 'சொந்தமாக தனக்கென ஒரு வீடு' என்பதுதான். அவ்வாறான ஒரு வீட்டைத் தனக்கென சொந்தமாக்கிக் கொள்வதில் எழும் நடைமுறைப் பிரச்சினைகள்தான் 'வீடு' திரைப்படத்தின் கதைக் களமாக அமைந்திருக்கிறது. சொந்தமாக ஒரு வீடு இல்லாமல் வாடகைக்குக் குடியேற வேண்டிய நிர்ப்பந்தங்களுள்ள மூவரும், அவர்களுக்கு உதவும் உள்ளங்களுமென படம் முழுவதும் நாம் அடிக்கடி அயலில் பார்க்கும் மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அம் மக்களுக்குள் எம்மைக் காண முடிகிறது. நமது உணர்வுகளைக் கொண்டு வாழும் மனிதர்களை 'வீடு' திரைப்படம் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா.

வாடகைக்குக் குடியிருக்கும் மனிதர்களுக்குள் எப்பொழுதும் ஒரு துரும்பு உள்ளத்தில் இடறிக் கொண்டேயிருக்கும். என்னதான் வாடகையை ஒழுங்காகச் செலுத்தியபோதும், எல்லாவிதத்திலும் ஒரு நிரந்தரமற்ற தன்மை அவர்களுக்குள் உருத்திக் கொண்டேயிருக்கும். மனம், சொந்தமாக ஒரு இருப்பிடத்தை எப்பொழுதும் கற்பனை பண்ணிக் கொண்டேயிருக்கும். வீட்டின் சொந்தக்காரன் எப்பொழுது வெளியேறச் சொல்வானோ? தனது செயற்பாடுகள் வீட்டை இழக்கச் செய்துவிடுமோ? என்பன போன்ற ஐயங்கள் மனதின் மூலையிலிருந்து கிளர்ந்து கொண்டேயிருக்கும். ஒரு நிலையில், வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டை விட்டு, இன்னுமொரு வாடகை வீட்டுக்கு மாற வேண்டிய நிலைமை ஏற்படும்போது உள்ளுக்குள் ஏற்படும் சங்கடங்கள் மிகவும் ஆழமாகத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியன. தனக்குப் பொருத்தமான வீட்டினை வாடகைக்குத் தேடியலைவது, வீட்டுக்கான வாடகை தனது எண்ணத்திற்கேற்ப அமைவது, வீட்டின் அமைவும், உள்ளக வசதிகளும் தனக்குப் பிடித்த வகையில் அமைவது என எல்லாச் சிந்தனைகளும் வாடகை வீடு எனும் மையத்தினை நோக்கியே குவிந்திருக்கும். அவ்வாறான சிந்தனைச் சுழலின் அலைகள் வீடெங்கும் பரவ ஆரம்பிக்கும் நிலையினைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகள் பார்வையாளனைத் திரைப்படத்திற்குள் இழுத்துச் சென்று விடுகின்றன. குடும்பத்துக்கு ஆதாரமாக இருக்கும் வேலைக்குப் போகும் பெண்ணானவள், இச் சிக்கலில் என்ன செய்யப் போகிறாள் என்பது குறித்த எண்ணத்தையும், இப்படிச் செய்தால் என்ன? என அவளுக்குக் கருத்துக் கூற வைக்கும் தன்மையையும் பார்வையாளன் அக் காட்சிகளின் மூலம் ஒருங்கே பெற்றுவிடுகிறான்.

கதாநாயகியின் உள்ளுக்குள் புதைந்திருக்கும் சொந்த வீடு குறித்த ஆசையைக் கிளறிவிடுகிறார் சக அலுவலகர். அதற்கான வழிகளையும் அவர் விவரித்துச் சொல்கையில் கதையின் நாயகிக்குள் கிளர்ந்தெழும் சொந்த வீடு குறித்த ஆசை பார்வையாளனுக்குள்ளும் எழுகிறது. சொந்த வீடு கட்டுவதற்கு எழும் பணம் குறித்தான நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் விதங்களை அவர் விவரிக்கையில் நமக்குள்ளும் ‘அப்படியொரு வீடு கட்டிப் பார்த்தாலென்ன?’ என எழும் கேள்வியைத் தவிர்க்க முடியாதுள்ளது. அவரது உரையைச் செவிமடுக்கும் அர்ச்சனாவின் முகத்தில் தோன்றும் மாற்றங்களை நோக்கி கேமரா நகர்வதானது பார்வையாளனின் மனநிலையையே சித்தரிக்கிறது. ‘அவள் இங்கு என்ன சொல்லப் போகிறாள்?’ , ‘அவளது முடிவு என்னவாக இருக்கும்?’ போன்ற கேள்விகளோடு, அவள் இதற்கு சம்மதிக்க வேண்டுமேயென்ற எண்ணமும் நமக்குள் எழுகிறது.

காணியைப் பார்க்கச் செல்லும் மழைநாளும், நிலத்தின் குழிகளில் தேங்கியிருக்கும் சேற்றுநீரும் அந்தக் காலநிலையை அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. இயக்குனர் அந்தக் காலநிலையைத் தேர்ந்தெடுத்தற்கு கதை மாந்தர்களுக்குள் அவ்வாறான நிலைமையில் எழுந்திருக்கக் கூடிய மனச் சஞ்சலங்களும் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

திரைப்படத்தின் மையக் காட்சிகள் எல்லாமே வீட்டினைச் சுற்றியே நகர்கிறது. படத்தில் நடித்திருக்கும் எந்த நடிகர்களுமே வீணாக வந்து செல்லவில்லை. எல்லாக் கதாபாத்திரங்களும் படத்தினை நகர்த்திச் செல்ல மிகவும் இன்றியமையாதவையாக உள்ளன. திரைப்படத்தின் ஒரு காட்சியில் அந்த வீட்டினைக் கட்ட வைக்க வேண்டி, மேல்மாடியில் குடியிருப்பவர் தாத்தாவுக்குத் தெரியாமல், அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கிறார். சக வாடகை வீட்டார்களிடத்தில் அரிதாக இருக்கும் 'தனக்கு இல்லாவிட்டாலும் அவர்களாவது சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும்' என்ற நல்லெண்ணத்தை இயக்குனர் கையாண்டிருக்கும் விதம் போற்றத்தக்கது. அவ்வாறே வீட்டு மனைக் கிணற்றில் தண்ணீரெடுக்க வரும் பெண்களை ஒப்பந்தக்காரர் திட்டி விரட்டுகையில் அவரது குணநலன்களையும், அதனைத் தடுக்கும் கதை நாயகனின் குணநலன்களையும் ஒரே காட்சியில் இயக்குனர் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தக்காரர் ஏமாற்றிய பிற்பாடு, வீடு கட்டும் பொறுப்பை ஏற்றுச் செவ்வனே கட்டி முடித்திடும் மேஸ்திரியும், சித்தாளும் சமூகத்தில் நமது கவனத்துக்குள் வந்து செல்லாதவர்கள். அவர்களது இருப்பும், செயற்பாடுகளும் குறித்து எவ்விதக் கவலைகளுமற்று நாகரீக மனிதர்களாக உலவும் சமூகத்தைக் கிண்டலடிக்கும் விதமாக, அவர்களுக்குள் வாழும் நல்ல மனிதர்களை சமூகத்தின் பார்வைக்கு முன்வைத்திருப்பது சிறப்பு. வீடு கட்டும் தேவைக்காக கடன் கேட்டுப் போகையில் நவீன மனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் தோழியின் வீட்டில் கிடைக்கப் பெறும் அவளது கணவனது வசையும், தான் இரகசியமாகச் சேர்த்து வரும் பணத்தை பேத்தியிடமே கையளித்துவிட்டு அமைதியுறும் நோயாளித் தாத்தாவின் இயல்பும் என முரண்களைச் சித்தரிப்பதன் மூலம் தற்கால சமூகத்தின் நிலைப்பாடுகளைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பணம் படைத்தவர்களின், மேலும் மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசையையும், பணத் தேவையுள்ளவனின் சொத்துக்களை மிகக் குறைந்தளவில் வாங்குவதற்கான ஆர்வத்தையும் படத்தின் ஒரு காட்சி சொல்கிறது.

வளசரவாக்கத்திலிருக்கும் தமக்குச் சொந்தமான நிலம் குறித்த உரையாடலோடு, பார்க்கச் செல்லும் வாடகை வீடானது தமது கனவு வீட்டோடு மிகவும் பொருந்திப் போகும்போதும் வீட்டுக்காரர் மிகவும் நல்லவராக இருப்பதாலும் ஏற்படும் மகிழ்வானது, தொடர்ந்து வரும் காட்சிகளில் சித்தரிக்கப்படும் பண நெருக்கடி சம்பந்தமான பிரச்சினைகளால் துயரமாக மாறுகிறது. வீடு மறுதலிக்கப்பட்டுத் திரும்பும் தாத்தாவின் சோகம் ததும்பிய முகமும், 'கொளுத்துதில்ல..குடையைத்தான் விரியுங்களேன்' என யாரென்றே அறியாத போதும் பாசத்துடனும் உரிமையுடனும் தாத்தாவிடம் கூறும் தெருவோர காய்கறிக்காரரின் மனப்பான்மையுமென படத்தின் நகர்வு மனிதர்களால் பூரணமடைந்திருக்கிறது.

'வீடு' திரைப்படத்தின் பிரதான கதைக் கருவாக 'வீடு' அமைந்திருந்தபோதிலும், படத்தில் எக் காலத்திலும் மாற்றமுறாத மிகவும் முக்கியமான விடயங்களும் காட்சிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தனது சொந்த நிலத்தில் வீடொன்றைக் கட்டுவதற்காகப் பாடுபடும் பெண்ணிடம் லஞ்சமாக உடலையும், பணத்தையும் எதிர்பார்க்கும் நிலைமை இன்றும் எங்கும் வியாபித்துள்ளது. காலத்தின் ஓட்டத்தில் எவ்விடயத்திலும் மாற்றமுறாத திரைப்படமாக 'வீடு' எனும் இந்த அற்புதமான திரைப்படத்தைக் குறிப்பிடலாம். ஒரு வீடு கட்டுவதிலுள்ள அத்தனை சிரமங்களையும், எதிர்கொள்ளும் இடர்களையும் மிகவும் தெளிவாக திரைக்காட்சியாக ஆக்கியுள்ளார் இயக்குனர்.

படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறது. அர்ச்சனாவும் குடும்பத்தினரும் வாடகைக்கு வீடு தேடியலையும் போதும், வீடு சம்பந்தமான ஆவணங்களுக்கு, உரிய அதிகாரிகளிடம் கையெழுத்துக்களை வேண்டி நிற்கும்போதும், சிறு மனஸ்தாபத்துக்குப் பிறகு பேருந்துக்குள் நாயகனதும், நாயகியினதும் பாசப் பரிமாற்றத்தைச் சித்தரிக்கும் காட்சியிலும், வீடு சிறிது சிறிதாக கட்டியெழுப்பப்படும் காட்சிகளிலும், படத்தின் இறுதிக் காட்சியில் புது வீட்டினை தாத்தா பார்க்கச் செல்லும் காட்சியிலும், தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு வரும் காட்சிகளிலும் என படத்தின் நகர்வுக்கு இளையராஜாவின் இசையும் மிகவும் பிரதானமாகவும் அருமையாகவும் அமைந்துள்ளது. அத்தோடு ஆழமான அன்பு கொண்ட காதலர்களுக்கிடையிலான யதார்த்தம் மிகுந்த உரையாடல்களாக அமையும் பானுசந்தருக்கும், அர்ச்சனாவுக்குமிடையிலான காட்சிகள் மிகவும் இயல்பாகவும் யதார்த்தமானதாகவும் இருப்பது கவனத்திற்குரியது.

'வீடு' திரைப்படத்துக்கான நடிகர்கள் தேர்வும், அவர்களது நடிப்பும் கதாபாத்திரங்களை உச்ச அளவுக்கு உயிரூட்டியுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திரைப்படத்தின் கதாநாயகி அர்ச்சனாவின் நடிப்பு மிகவும் அருமை. அத்தோடு இத் திரைப்படத்தின் மூலம் மேலும் இருவர் எப்பொழுதும் மனதில் இருக்கின்றனர். தாத்தாவாக நடித்திருக்கும் K.A சொக்கலிங்க பாகவதரின் பாத்திரப் படைப்பு மிகவும் நேர்த்தியானது. தனது முக பாவனைகளாலேயே கதையின் ஆழத்தை உணர்த்துகிறார் அவர். தனது பேத்தி புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டினைப் பார்க்கச் செல்கையில் அவரில் தென்படும் சோர்வும், பார்க்கும்போது எழும் பூரிப்பும் பார்வையாளனையும் தனக்குள் உணரச் செய்வன. அடுத்ததாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிப்பு சத்யாவினுடையது. தமிழ் சினிமாவில் அதிகம் கண்டுகொள்ளப்படாத திறமை மிக்க நடிகையான சத்யா, சித்தாளாக வந்து சென்னைத் தமிழில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

திரைக்கதை, வசனம், எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என ஒரு திரைப்படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் சிறப்பாகக் கையாண்டிருக்கும் இயக்குனர் பாலுமகேந்திராவின் மிகவும் தைரியமான முயற்சி இத் திரைப்படம் என்பதனைக் குறிப்பிட வேண்டும். டிஸ்கோ ஆட்டங்களும், கவர்ச்சி நடனங்களும், சண்டைக் காட்சிகளோடு வீர வசனங்கள் பேசி பழிக்குப் பழி வாங்கும் கதைகளும் செறிந்திருந்த தமிழ் சினிமாவின் ஒரு காலப் பகுதியில், இவ்வாறான யதார்த்த வாழ்வியலையும், நடைமுறைச் சிக்கல்களையும் சித்தரிக்கும் ஒரு அருமையான திரைப்படத்தினைத் தந்திருக்கும் இயக்குனர் பாலுமகேந்திராவைப் பாராட்டியே ஆகவேண்டும். பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? திரைப்படத்துக்கெனச் செலவாகும் பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்குமா? போன்ற திரைப்படத்துறை அச்சங்களைப் புறந்தள்ளி சிறந்த கதை இருந்தால் திரைப்படம் காலத்தை வென்று வாழும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் பாலுமகேந்திரா.

- எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </