வீடு சிறப்பிதழ் :: இதழ்: 2, நாள்: 15-தை-2013
   
 
  உள்ளடக்கம்
 
பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’ - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
வெள்ளி விழா காணும் வீடு - அம்ஷன் குமார்
--------------------------------
'வீடு' - பாலு மகேந்திரா 1988 - எஸ். தியடோர் பாஸ்கரன்
--------------------------------
வீடும் விடுதலையும்: பாலு மகேந்திராவின் திரைப்படைப்பின் அர்த்த தளங்கள் - ராஜன் குறை
--------------------------------
வீடும் சில நினைவுகளும் - மு.புஷ்பராஜன்
--------------------------------
'வீடு' சொல்வது யாதெனில்... - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
பாலு மகேந்திராவின் வீடு - ராஜேஷ்
--------------------------------
வீடு - மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவு - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
வீடு - வெள்ளி விழா!!! - அருண் மோகன்
--------------------------------
வீடு திரையிடல் & கலந்துரையாடல் - அருண் மோகன்
   
   

   


பாலு மஹேந்திராவின் வீடு

ராஜேஷ்

எனக்கு விபரம் தெரிந்த காலத்தில், தொலைக்காட்சி என்றாலே அது தூர்தர்ஷன் மட்டுமே. ஹிந்தி மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனின் மூலமாக மட்டுமே பார்த்த இளம் வயது கிடைக்கப்பெற்றவர்களில் நானும் ஒருவன். சன் டிவி முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட 1993ல் எனக்கு பதிநான்கு வயது. ஆக, சிறுவயதில் கார்ட்டூன்களாகட்டும், பாடல்களாகட்டும், செய்தி நிகழ்ச்சிகள் ஆகட்டும் – எல்லாமே தூர்தர்ஷன் என்று இருந்த காலம். அப்போது ஞாயிறு மதியம், ’மாநில மொழித் திரைப்படம்’ என்ற ஒரு நிகழ்ச்சியில், பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் வெளிவரும். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதில் தமிழ்ப்படங்களும் காட்டப்படும். இப்படி தமிழ்ப்படங்கள் வரும்போது மட்டும் நாங்கள் அதைப் பார்ப்பது வழக்கம். காரணம், அப்போதெல்லாம் தமிழ் சினிமாவை தொலைக்காட்சியில் பார்க்கவேண்டும் என்றால் ஞாயிறு மாலை மட்டுமே சாத்தியமாக இருந்தது. அதிலும், புதன்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் ‘எதிரொலி’ நிகழ்ச்சியில் வாசகர் கடிதங்களைப் படிக்கையில், வரும் ஞாயிறு எந்தப்படம் காட்டப்படப்போகிறது என்பதை பலத்த சஸ்பென்ஸுக்குப் பின்னர் நிலைய அதிகாரி சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் - அவற்றில் பெரும்பாலான படங்கள் பழைய படங்களாகவே இருந்தாலும் கூட.

‘வீடு’ திரைப்படத்தின் வெள்ளிவிழா சிறப்பிதழில் எனது தூர்தர்ஷனைப் பற்றிய மலரும் நினைவுகள் தவறாக இடம்பெற்றுவிட்டது என்று இதைப்படிக்கும் நண்பர்கள் நினைத்துக்கொள்வதற்கு முன்னர், விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மேலே சொன்ன ’மாநில மொழித் திரைப்படங்கள்’ வரிசையில்தான் ‘வீடு’ படத்தையும் பார்த்தேன். அதுவே முதல். அதுவே கடைசி. அந்த நேரத்தில் அந்தப் படம் பிடிக்காமல் – ஆனால் வேறு வழியும் இல்லாமல் – முழுப்படத்தையும் பார்த்தது நினைவு வருகிறது. அப்போதெல்லாம் என்னைக் கேட்டால் ஆங்கில ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அல்லது ரஜினி கமல் படங்களே பிடிக்கும் என்று சொல்லியிருப்பேன்.

ஆனால், காலமாற்றத்தில் ரசனை மாற்றமும் நிகழ்ந்து, ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் அதே சந்தோஷத்துடன் – ஏன்? அதைவிடவும் மகிழ்ச்சியுடன் உலகத் திரைப்படங்களைப் பார்க்கத் துவங்கியபின்னர், சினிமாவைப் பற்றிய எண்ணமும் மாறத் துவங்கியது. பல அருமையான உலகப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் ரித்விக் கடக், சத்யஜித் ரே, மீரா நாயர், சுதீர் மிஷ்ரா போன்ற இந்திய இயக்குநர்களின் படங்களும் உண்டு.

தமிழில் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் அரிது. மிகச்சில படங்களே கலை அனுபவத்தைத் தரக்கூடியன. ‘வீடு’ இயக்குநர் பாலு மஹேந்திராவையே எடுத்துக்கொண்டாலுமே, அவரது பிற படங்கள் அத்தனையையும் பார்த்திருந்தாலும், அவற்றில் எனக்குப் பிடித்தமானவை- ‘மூன்றாம் பிறை’, ‘நீங்கள் கேட்டவை’ (மசாலா முயற்சி. நன்றாகவே வந்திருக்கும்), ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ’மறுபடியும்’, ’ரெட்டைவால் குருவி’ (இந்தப் படம் ஆங்கிலத் தழுவலாக இருந்தாலும், அதில் பல சுவாரஸ்யமான வசனங்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணம், அர்ச்சனா மோஹனிடம் பேசும்போது ’ஆஃபீஸ் வந்து பாரு; கிழம் லோ லோன்னு கத்தும்’ என்பார். அடுத்த ஷாட்- ‘Low low low. அட்டெண்டன்ஸ் லோ; பெர்ஃபார்மன்ஸ் லோ; டெபாஸிட்ஸ் லோ; எல்லாமே low’ என்று கத்தும் செந்தாமரையின் முகம்). பாலு மஹேந்திராவும் பிறமொழிப்படங்களைத தமிழில் எடுப்பதிலிருந்து தப்ப முடியவில்லை. பாலு மஹேந்திராவின் ‘வீடு’ படத்தை நினைக்கும்போதெல்லாம் எனது சிறுவயது அனுபவம் நினைவு வரும். ஆகவே சென்ற வாரம் வரை அந்தப் படத்தின் மீது ஒரு சுவாரஸ்யம் வரவே இல்லை.
ஆனால், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து ‘வீடு’ படத்தை இரண்டாம் முறை இன்று பார்க்க நேர்ந்தது.

படத்தைப் பற்றிப் பார்க்குமுன், ’வீடு’ திரைப்படத்தைப் பற்றிய பொதுவான கருத்து என்ன என்பதைப்பற்றி ஓரிவு வரிகள் எழுத நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் இந்தப்படத்தைப் பற்றிச் சொன்னாலே கடுக்காய் சாப்பிட்டதைப்போல் ஒரு முகபாவத்தைத் கொடுத்துவிட்டு பிற மசாலாப்படங்களைப் பற்றிப் பேசத் துவங்கிவிடுகின்றனர். குறைந்தபட்சம் எனது வட்டத்தில் பலரும் இப்படி இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஏன்? நானே அப்படி இருந்தவன் தானே?
படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துக்குள் ஆழ்ந்துவிட்டேன் என்று சொன்னால், அது பொய்யே இல்லை. அப்படி படத்துக்குள் ஆழ்ந்தவன், படம் முடிந்தபிறகும் – இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதும் – அந்தப் படத்தையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படம் எழுப்பிய தாக்கத்திலிருந்து என்னால் விடுபட இயலவில்லை.

ஏன் என்று சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

படத்தின் காலகட்டத்தை எடுத்துக்கொள்வோம். 1988.

முதல் பாயிண்ட்டாக, இந்தப் படத்தின் கரு. இந்தக் காலகட்டத்தில் அன்றாட வாழ்வில், பெண்களைப் பெற்ற நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் முதலாவது மற்றும் தலையாயதாக, திருமணமே இருந்தது. எனது நெருங்கிய உறவுக்காரர்களின் வாழ்க்கையில் இந்தப் பிரச்னையைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். எளிய வருமானம், சிறிய வாடகை வீடு என்று அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாயில் திருமணம் செய்துவைப்பதற்குள் நுரைதள்ளி விடும். இந்தப் பிரச்னைக்கு அடுத்தபடியாக, வீடு கட்டுவது என்பது ஒரு பெரும் சிக்கல். இப்போதுகூட, வீடு கட்டுவதில் இறங்கும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி எத்தனை கேள்விப்படுகிறோம்? ‘ஏன் இந்த வீட்டைக் கட்ட ஆரம்பித்தோம்’ என்று எண்ணி வருந்தும் நேரங்களே அதிகம். காரணம், வல்லூறுகளைப் போல் நம்மை வட்டமிடும் சில சமுதாய விலங்குகள். கூடவே இவர்களால் நமக்கு நேரும் பல துன்பங்கள்.

எனவே, படத்தின் கரு, இன்றைய வாழ்க்கையின் பிரதான பிரச்னைகளில் ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. கூடவே, இந்தப்படம் சமர்ப்பிக்கப்படுவது – உலகெங்கிலுமுள்ள வீடற்ற மக்களுக்கு. படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை என்பது படத்தின் அடுத்த ப்ளஸ். கதாநாயகி, ஒரு பெண். இந்தப் பெண், அவளது தங்கை மற்றும் அவர்களின் தாத்தாவோடு ஒரு சிறிய வாடகை வீட்டில் (மாதம் 125/- வாடகை) வாழ்ந்துவருகிறாள். படத்தின் துவக்கம் – முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்துவிடுகிறது. வீட்டு ஓனரின் தபால். வக்கீல் நோட்டீஸ். வீட்டை இடித்துவிட்டு அபார்ட்மெண்ட் கட்டுவது ஒனரின் முடிவு. இங்குதான் ஆரம்பிக்கிறது படம்.

ஓனரின் இந்த முடிவு, அந்த வீட்டில் வாழ்ந்துவரும் சுதாவையும் அவளது தாத்தா முருகேசனையும் எப்படி பாதிக்கிறது, அவர்களின் முடிவு என்ன, அவர்களின் வாழ்க்கையில் நேரும் மாறுதல்கள் என்ன என்ற கேள்விகளுக்கு விடையாக இந்தப்படம் நம் கண்முன் விரிகிறது.

நாம் ஒரு வீட்டில் வாடகைக்கு வாழ்ந்துவருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஓனர் நம்மை வெளியேறச்சொன்னால் டக்கென்று இன்னொரு வீட்டைப்பிடித்து அங்கே குடியேற நம்மால் முடியும். ஆனால், சுதாவின் குடும்பத்துக்கு அது கடினமானதொரு முடிவாக இருக்கிறது. காரணம், பல வருடங்களாக ரூ. 125/- வாடகையில் அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்தக் குறைவான வாடகை, அவர்களுக்குப் பலவிதங்களிலும் அனுகூலமாக இருக்கிறது. தங்கையின் பள்ளிச்செலவு, தாத்தாவின் மருத்துவ செலவு ஆகியனவற்றில் கவனம் செலுத்த சுதாவால் முடிகிறது. ஆனால், ஓனரின் வக்கீல் நோட்டீஸ் வந்த ஒரே நாளில் அவளது நிம்மதி குலைகிறது.

அன்றாட வாழ்வில் ஒரு தாத்தாவும் அவரது இரண்டு பேத்திகளும் என்ன செய்வார்களோ அதை அப்படியே இந்தப் படத்தில் காண்கிறோம். எந்த சினிமாத்தனமும் இல்லாமல். வக்கீல் நோட்டீஸ் வந்த அடுத்த ஸீனில், சுதா அவளது காதலன் கோபியுடன் பல்லவனில் பயணம் செய்துகொண்டிருக்கிறாள். அங்கே கோபியிடம் தனது ஆசையை வெளிப்படுத்துகிறாள். ‘ஒரு பெட்ரூம்; ஒரு கிச்சன்; ஒரு ஹால். போர்ஷனா இருந்தாக்கூட பரவால்ல..ஐநூறு ரூபா வாடகை.. அஞ்சாயிரம் அட்வான்ஸ்.. தங்கச்சி கல்யாணத்துக்குன்னு மாசாமாசம் 200 ரூபா சேர்த்துக்கிட்டிருக்கேன்’.. சுதாவுக்கு நல்ல வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை உள்ளூற இருந்தாலும், அவளைச் சுற்றியிருக்கும் சங்கிலிகள் அவளை வெளிப்படையாக ஆசைப்பட விடுவதில்லை. இதன்பின் வாடகை வீடு பார்க்கும் சாங்கியங்கள் நடந்தேறுகின்றன. பக்கத்திலேயே இருக்கும் 800 ரூபாய் வாடகை வீடு சுதாவுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அவளது தங்கை, அதில் ஒரு அறையைக்கூட தனக்கென ரிஸர்வ் செய்துவிடுகிறாள்.

ஆனால், அங்கேயும் ஐநூறு ரூபாய்க்குமேல் ஒருபைசா தரமுடியாத சூழல் சுதாவுக்கு. ஓனர் வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய் குறைத்துக்கொள்வதாகக் கூறுவதால் அந்த வீட்டை இவர்களால் பிடிக்கமுடிவதில்லை (இங்கே ஒரு சுவாரஸ்யமான வசனம் இருக்கிறது. இந்தப் படத்திலும் ஆங்காங்கே காட்சிகள் முடியும் நேரம் அல்லது காட்சிகளின் மத்தியில் படத்துக்கு அந்நியமாக இல்லாத பல ஜாலியான வசனங்கள் உண்டு. இந்தக் காட்சியில், ஓனர் தனது மனைவியிடம் பேசுவதைக் கேட்டுவிட்டு, முருகேசன் தாத்தா, நைஸாக சுதாவிடம் ‘ப்ராமின்ஸ்’ என்று கிசுகிசுப்பது புன்முறுவலை வரவழைப்பதாக இருக்கிறது. நாமாக இருந்தாலும் வீடு பார்க்கச் செல்கையில் இப்படியெல்லாம் குசுகுசுத்துக்கொள்வது உண்டல்லவா?).

பல்வேறு வீடுகளை தினமும் முருகேசன் தாத்தாவும் சுதாவும் அவளது காதலன் கோபியும் பார்க்கிறார்கள். எதுவும் ஒத்துவருவதில்லை. அப்போதுதான் உடன் வேலைசெய்யும் ஐயங்கார் ஒருவர், சொந்த வீடு ஒன்றைக் கட்ட முயற்சி செய்யலாமே என்று சுதாவிடம் சொல்கிறார். அதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளையும் விவாதிக்கிறார். இவர்களுக்கு வளசரவாக்கத்தில் இரண்டு க்ரௌண்டு நிலம் இருப்பதால், அங்கேயே அழகான வீடு ஒன்றைக் கட்டமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். நமது வாழ்விலும் இப்படி அவசியம் ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கும். வாடகைக்கு வீடு மாறும்போது, ‘சொந்த வீடு ஒன்றைக் கட்டினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றாத மனிதனே இருக்க முடியாது. எப்படியும் வாடகைக்கு தரப்போகும் பணத்தை லோன் மூலமாக வங்கிக்கு செலுத்திவிடலாம் என்றே மனம் கணக்குப்போடும். இதற்கேற்றவாறு நமது நண்பர்கள் யாராவது வீடு வாங்கியோ அல்லது கட்டியோ இருப்பார்கள். அவர்களைப் பார்த்து நமக்கும் நம்பிக்கை வரும். இதைப்போலத்தான் இந்தப் படத்தில் நடக்கிறது.

இதன்பின்னர் நண்பரின் சிபாரிசின் பேரில் அவரது வீட்டைக் கட்டிக்கொடுத்த காண்ட்ராக்டரின் மகன் சுதாவின் வீட்டைக் கட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார். வீட்டு ப்ளான் தயாராகிறது. ஒரு மாதமாகியும் அப்ரூவ் ஆகாத ப்ளானுக்காக முருகேசன் தாத்தாவின் நண்பர் லஞ்சம் கொடுக்கிறார். மறுநாளே ப்ளான் கைக்கு வருகிறது. அலுவலகத்தில் லோன் போடுகிறாள் சுதா. தன்னிடமிருக்கும் நகைகளையும் அடகு வைக்கிறாள். வீட்டு அஸ்திவாரம் தயார் ஆகிறது. மழை. வேலை தாமதமாகிறது. வீட்டுக்கு வாங்கும் சிமெண்ட் மூட்டைகளை காண்ட்ராக்டர் வெளியே விற்கிறார். கேள்வி கேட்கும் சுதாவை அசிங்கமாகப் பேசுகிறார். இதற்கிடையில் பணம் போதாமல், இரண்டு க்ரௌண்டில் ஒரு க்ரௌண்டை விற்பதாக சுதா முடிவெடுக்கிறாள். நினைத்த விலைக்குப் போகாமல் அதைவிடக் குறைந்த விலைக்கே நிலம் விற்பனையாகிறது. வாங்குபவர் ஐந்தாயிரம் கூடுதலாகக் கொடுக்கிறார் –சுதாவின் நிலையை அறிந்து. அலுவலகத்தில் உடன் வெலை பார்க்கும் தோழிகளிடம் வேறு வழியே இல்லாமல் கடன் கேட்கும் நிலைக்கு சுதா தள்ளப்படுகிறாள்.

எல்லாமே முடிந்து, வீடு தயாராகும்போது சுதாவின் வாழ்வில் இரண்டு பேரதிர்ச்சிகள் நிகழ்கின்றன. இதன்பின் என்ன ஆகிறது என்பது முடிவு.

பெரும்பாலும் இந்தியாவில் ’கலைப்படங்கள்’ என்ற முத்திரையோடு வெளியாகும் படங்களில் பிழியப்பிழிய சோகக்காட்சிகள் இருப்பதைக் காணலாம். எந்த மொழியானாலும் சரி. ஆனானப்பட்ட ரித்விக் கடக்கே இதிலிருந்து தப்ப முடியவில்லை. அவரது ‘மேகே தாக்க தாரா’ மற்றும் ‘சுபர்ண ரேகா’ ஆகிய படங்கள் அற்புதமானவையாக இருந்தாலும், அப்படங்களில் இயல்பு வாழ்க்கையை மீறிய சில சோகமூட்டும் காட்சிகளைக் காணமுடியும் (இந்த இரண்டு படங்களுக்கும் இடையே வந்த ‘கோமல் கந்தார்’ அப்படி இருக்காது. அதில் ஒரு நாடகக்குழுவின் அன்றாட வாழ்க்கையின் அபத்தங்கள் சற்றே பகடி செய்யப்பட்டிருக்கும்). ஆனால், எப்படிப்பட்ட சோகமாக இருந்தாலும் சரி-வாழ்வில் அவற்றை மீறிய நம்பிக்கையூட்டும் தருணங்களும் இருக்கின்றன; அதேபோல் வாழ்க்கை நமக்காக ஆங்காங்கே சின்னச்சின்ன சந்தோஷங்களை வைத்திருக்கிறது. இவற்றை ‘வீடு’ திரைப்படம் அழுத்தமாகக் காண்பித்திருக்கிறது. படத்தில் சுதாவின் காதலன் கோபி ஒரு முன்கோபக்காரன். இருந்தாலும் சுதா வீட்டைப்பற்றி எடுக்கும் முடிவுகள் அத்தனையிலும் அவளுடனேயே இருக்கிறான். தன் தங்கைகளுக்காக சேமித்துக்கொண்டிருக்கும் பணத்தை எந்தத் தயக்கமும் இன்றி சுதாவின் வீட்டுக்காக செலவு செய்ய முன்வருகிறான். வீடு கட்டுவதுபோன்ற பெரும்சுமையின் அழுத்தத்தை, இதுபோன்ற இலல்பான சந்தோஷங்களே அவ்வப்போது மறக்கடிக்கும் தன்மை உடையன. படம் நெடுக, பெரும்பாலும் வசனங்களில் இவர்களது காதல் வெளிப்படுவதில்லை. காதலன் கோபியின் கைகளை தன் கைகளோடு கோர்த்துக்கொள்ளும் சுதாவின் அரவனைப்பின் மூலம்தான் காதல் சொல்லப்படுகிறது. இவை, படத்தின் அழகிய தருணங்களில் சில.

இன்னொரு விஷயம். படத்தில் அக்காலத்திய சென்னை நன்றாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. பல்லவன் பேருந்துகள், சாலைகளின் இருபக்கங்களிலும் இருக்கும் கடைகள், அவற்றின் மேலே இருக்கும் மிகப்பழைய நேம் போர்டுகள், அக்காலத்திய விலைவாசி, அலுவலக காண்டீன்கள் போன்ற நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறும் விஷயங்கள் மட்டுமே இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. குறிப்பாக, மழைக்கால சென்னை.

ரித்விக் கடக்கைப் பற்றிச் சொல்லியதால், அவரது ‘மேகே தாக்க தாரா’ கதாநாயகி நீதாவுக்கும் ’வீடு’ கதாநாயகி சுதாவுக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளும் மனதில் தோன்றின. இருவருமே கிட்டத்தட்ட கீழ் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் உழைப்பது அவர்களின் குடும்பத்துக்காக. இருவருக்குமே தங்களது சந்தோஷங்களைவிடவும் குடும்பத்தினரின் சந்தோஷமே பெரிதாக இருக்கிறது. இருவருக்குமே அவர்களது காதலர்களின் பக்கபலம் இருக்கிறது. ஆனால், நீதாவுக்கும் சுதாவுக்கும் இருக்கும் பெரிய வேற்றுமை என்னவென்றால், நீதாவின் குடும்பம் அவளை சம்பாதிக்கும் கருவியாகவே பார்க்கிறது. அவள்மேல் அன்பு அங்கே அவளது மூத்த சகோதரனுக்கு மட்டுமே உண்டு. இங்கோ, சுதாவின் தங்கையும் அவளது தாத்தாவும் அவள்மேல் அன்பைப் பொழிகின்றனர். சுதாவின் முயற்சிகளில் அவளது குடும்பத்தினரின் ஆதரவு பலமாக இருக்கிறது. இதுதான் சுதாவை அவளது முடிவுகளை தயங்காமல் எடுக்க வைக்கிறது. மேலே சொன்னதுபோல், வாழ்வின் சிறிய சந்தோஷங்கள் சுதாவுக்குக் கிடைக்கின்றன. ஆனால் நீதாவோ எந்தவிதமான சந்தோஷமும் வாழ்க்கையில் இல்லாத பெண்ணாகவே படம் நெடுகவும் காட்டப்படுகிறாள். சுதாவாக அற்புதமாக நடித்திருக்கும் அர்ச்சனா, நுண்ணிய உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் (காண்ட்ராக்டர் சிமெண்ட் திருடும்போது சுதா அவரிடம் பேசும் காட்சி. காதலன் கோபி கோபித்துக்கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றுவிடும்போது வசனமே இல்லாமல், அவனை அரவணைத்துக்கொள்ளும் காட்சி etc..)
படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் – சொக்கலிங்க பாகவதர். ‘வீடு’ திரைப்படம் வெளிவந்தபோது விகடனில் ஒரு கட்டுரை படித்திருக்கிறேன். பாகவதரின் பேட்டியுடன். படத்தில் முருகேசன் என்ற தாத்தாவின் கதாபாத்திரம், பாகவதரால் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு நடிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவரது குறும்பு கலந்த செய்கைகள் (’ப்ராமின்ஸ்’ – ஒரு உதாரணம். மற்றொன்று – இதுபோன்ற எள்ளல் கலந்த சில வசனங்களைப் பேசும் அவரது முகபாவம்).

தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் முருகேசன் தாத்தாவை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பது பாலு மஹேந்திராவினால் நன்றாகவே காட்டப்படுகின்றன. நண்பர் இறந்ததைக் கேள்விப்பட்டு உடனேயே தாத்தா உயிலெழுதும் காட்சி, தனியாக வீட்டில் இருக்கும்போது திடுதிப்பென்று புதுவீட்டைப் பார்க்க கிளம்புவது, வீட்டுக்கு வரும் கோபியிடம் ‘சுதாவை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவல்ல?’ என்று தழுதழுத்த குரலில் கேட்பது, அவ்வப்போது ஜாலியாக ராகம் போட்டு சத்தமாகப் பாடுவது (முருகேசன் தாத்தா ஒரு ரிட்டையர்ட் பாட்டு வாத்தியார்) போன்ற காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன. படத்தின் இறுதியில் வசனம் இல்லாத பத்து நிமிடக் காட்சியில் நம்மை அழுத்தமாக பாதிக்கிறார் சொக்கலிங்க பாகவதர்.

இந்தப் படத்தின் மற்றொரு விசேடம் – பின்னணி இசை. இளையராஜா. இந்தப் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புகள் பலவற்றை, இந்தப்படம்தான் என்று அறியாமலேயே பலமுறை கேட்டிருக்கிறேன். செல்ஃபோன் ரிங்டோன்கள் மூலம். இந்தப் படத்தில் பின்னணி இசை என்று தனியாக இல்லாமல், இளையராஜாவின் ‘How to name it’ ஆல்பத்தின் இசைதான் இந்தப் படத்தில் பின்னணியாக உபயோகிக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்று இணையத்தில் படித்தேன். பஸோலினி, ஸ்டான்லி குப்ரிக் ஸ்டைல் இது. படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது (’’வீடு’ படத்துக்கு முந்தைய பாலு மஹேந்திராவின் படமான ‘ரெட்டைவால் குருவி’ பாடல்களுக்கென்றே பெயர் பெற்ற படம் என்பதை கவனத்தில் கொள்க).

’வீடு’ திரைப்படம் தற்போது வெளியாகியிருந்தால் அவசியம் பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது (மிகச்சில குறைகள் இருந்தாலும் கூட). காரணம், தற்போது பல உலகப்படங்களும் பலராலும் பார்க்கப்படுகின்றன. இந்தப் படம் வெளிவந்த 1988ல் இது மிகமிகக் குறைவு. 1988ல் வந்த தமிழ்ப்படங்களை கவனித்தால், வீடு படத்துக்கு இணையாகப் பேசப்படக்கூடிய படம் எதுவுமே இல்லை என்று தெரிகிறது. The movie deserves more. இப்படி ஒரு படத்தை தமிழில் எடுத்திருக்கும் பாலு மஹேந்திராவும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </