ஏன் பதிப்பகம்?
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால் ஒரு இயக்கம் தொடர்ச்சியாக செயல்படவும், அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரவும், சில கட்டமைப்பு வசதிகள் அவசியம். அதுவும் தமிழ் நாடு மாதிரியான, மாற்றங்களை எளிதில் விரும்பாத மோசமான சமூகத்தில் இயக்கத்திற்கென எவ்வித கட்டமைப்புகளும் இல்லாமல் செயல்படுவது அத்தனை எளிதல்ல. நல்ல சினிமா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தால், அதை பிரசுரிக்க இங்கே எந்த பத்திரிகையும் இல்லை. காரணம், எல்லா பத்திரிகைகளும் மோசமான சினிமாவின் நிழல்களாகவே இருக்கிறது, இந்த மோசமான வணிகக்குப்பைகளை எதிர்த்து எந்த பத்திரிகையும் வெற்றிகரமாக செயல்பட முடியாது. சிற்றிதழ்கள் இருக்கிறது என்று நினைத்தால், சிற்றிதழ்களுக்கும் நிறைய சச்சரவுகளை ஏற்படுத்தும் கட்டுரைகள்தான் அதிகபட்ச தேவையாக இருக்கிறது, ரசனை வளர்ப்பது பற்றியோ, நுண்கலைகள் பற்றிய புரிதலை வளர்க்கவோ எந்த சிற்றிதழும் முன்வருவதில்லை. எல்லா சிற்றிதழ்களுக்கும் நிறையவே குழு அரசியல் இருக்கிறது. அவரவருக்கு தனித் தனி சித்தாந்தங்கள் இருக்கலாம், அதில் தவறில்லை, ஆனால் குழு அரசியல் இருப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அத்தனை நல்லதல்ல.
இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு முக்கியமான ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ் ஸ்டுடியோவிற்கு என்று தனியாக, நான் நினைத்ததை காட்டிலும், அருமையான அலுவலகமும், தமிழ் ஸ்டுடியோவில் இருந்தே, நாங்கள் நினைக்கும் கட்டுரைகளை புத்தகமாக கொண்டு வரவும், இயக்க செயல்பாடுகளையும், அதன் சித்தாந்தகளையும் பிரசுரிக்கவும், எந்த சமரசமும் இன்றி செயல்பட எங்களுக்கென ஒரு பதிப்பகமும் உருவான ஆண்டு இந்த ஆண்டுதான். பேசாமொழி பதிப்பகம் தொடக்க விழாவும், பேசாமொழி பிரசுரித்த முதல் புத்தகமான யமுனா ராஜேந்திரனின் "இலங்கையின் கொலைக்களம்" புத்தக வெளியீட்டு விழாவும், எதிர்வரும் 18 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள, புக் பாய்ன்ட் அரங்கில் நடைபெறவுள்ளது.
நண்பர்களுக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம், ஆனால் எவ்வித பிரதிபலனையும் பாராமல் இயங்கும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்து வேறுபாடுகள் எல்லாம், என்னுடைய எழுத்தோடுதான், தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளோடு இல்லை என்பதும் எனக்கு தெரியும், எனவே தமிழ் ஸ்டுடியோவின் இந்த புதிய முயற்சியை, முக்கியமான முன்னெடுப்பை நண்பர்கள் நிச்சயம் வரவேற்று ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் என்னால் அறைகூவல் விடுக்க முடியாது. புத்தகம் உண்மையாகவே, முக்கியமான புத்தகமென்றால், அதன் உள் சரடுகள் அத்தனை தீவிரமனாது என்றால், அது தானாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். டார்வினின் கோட்பாடு, இதற்கும் பொருந்தும். இப்படி ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது என்பதை எல்லாருக்கும் அறிவிப்பது ஒன்று மட்டுமே என்னுடைய வேலை. அதை நான் செவ்வனே செய்து விடுவேன். இந்த பதிப்பக முயற்சியும், பேசாமொழி மாத இதழும், தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கான முக்கியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன். இந்த கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு தமிழ் ஸ்டுடியோ அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதும் எனது எண்ணம்.
இந்த நேரத்தில், இந்த பதிப்பக முயற்சியை சாத்தியப்படுத்திய, நண்பர் ராஜ சிம்மனுக்கு நன்றி சொல்வதற்கு பதில் அவரை பேசாமொழி பதிப்பகத்தின் பங்குதாரராகவே இணைத்துக்கொண்டேன். முதல் புத்தகமாக, தன்னுடைய புத்தகத்தை பதிப்பிக்கக் கொடுத்த, ஒத்த சிந்தனையுள்ள நண்பரான யமுனா ராஜேந்திரன் எப்போதும் என்னுடைய நன்றிக்குரியவர். செய்து முடிப்பதுதான் என்னுடைய வேலை, அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், நண்பர்களின் கையில்... விழாவிற்கு அனைத்து நண்பர்களையும் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli |