உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா?
இந்தக் கட்டுரை 'திரை' என்கிற இதழுக்காக சாரு நிவேதிதா எழுதியது. ஆவணப்படுத்தும் நோக்கில் 'திரை' இதழில் வெளியான முக்கியமானக் கட்டுரைகளை பேசாமொழியில் அதன் ஆசிரியர் லீனா மணிமேகலை அனுமதியுடன் வெளியிட்டு வருகிறோம்.
உலகிலேயே அதிக சினிமா தயாரிக்கப்படும் நகரங்களில் ஒன்று சென்னை. தமிழில் இதுவரை வந்துள்ள சினிமாக்களின் எண்ணிக்கை: சுமார் 5000! உலகின் பிற நகரங்களில் நடக்கும் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து திரையிடப்படுவதில்லை. உலகசினிமா வரைபடத்தில் தன் பெயரைப் பொறித்துக்கொள்ள முடியாத தமிழ்சினிமாதான் தமிழ்நாட்டு அரசியலுக்கு சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜிராமச்சந்திரன், ஜானகி, ஜெயலலிதா என்ற ஐந்து முதலமைச்சர்களை வழங்கியிருக்கிறது. இன்னும் ஒரு முதல்வர் வேறு தயாராகிக்கொண்டிருக்கிறார். இருந்தும், தமிழ்சினிமா, உலகசினிமா அரங்கில் இடம் பிடிக்காமல் போனதற்குக் காரணங்கள் என்ன?
’செனகல்’, என்ற ஒரு சிறிய மேற்கு ஆஃப்ரிக்க நாடு, அங்கிருந்து வந்த உஸ்மான் செம்பீன் என்ற இயக்குனர் உலக அளவில் பேசப்படுகிறார். ’பொலிவியா’, ஒரு வறுமையான நாடு, அங்கிருந்து வந்த ஹோர்ஹே ஸான்ஹீனஸின் படங்கள் மிக முக்கியமான திரைப்படங்களாக விவாதிக்கப்படுகின்றன. உலக வரைபடத்தில் கூபாவின் விஸ்தீரணம் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். அங்கிருந்து உலகுக்குத் தெரிய வந்த திரைப்பட இயக்குனர்கள் ஏராளம். தாமஸ் அலியா, உம்பர்த்தோ சொலாஸ், ஸாரா கோமஸ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஐரோப்பிய மேதைகளுக்குச் சமமானவர்கள். ஆசியா பக்கம் வந்தால், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்துகூட சீரிய சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
|
ousmane sembene |
இப்படி உலகத்தின் மூலைமுடுக்களிலெல்லாம் தரமான சினிமா கலாச்சாரம் உயிர்த்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் அது ஏன் நிகழவில்லை? வெளிநாடுகளில் மட்டுமல்ல; இந்தியாவிலும் வங்காளம், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளின் சினிமா கலாச்சாரம் உலகின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், 27கோடி ரூபாயில் ஒரு படம் எடுக்க முடிகிற தமிழ் சினிமா மட்டும் சீரிய சினிமாவை நோக்கி முதல் அடியே எடுத்து வைக்கவில்லையே ஏன்?
இது குறித்து சிந்திக்கும் முக்கியமான சினிமா கோட்பாட்டாளர்களில் ஒருவர் தியடோர் பாஸ்கரன். இவரது ‘எம் தமிழர் செய்த படம்’ என்ற புத்தகத்தில் தமிழில் சீரிய சினிமா வளராமல் போனதற்கும், ஜனரஞ்சக கேளிக்கை சாதனமாகவே அது மிஞ்சிவிட்டதற்குமான காரணங்கள் பற்றி மெளனப்பட காலத்திலிருந்து ஆய்வு செய்திருக்கிறார்.
அவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அக்காரணங்களை நான் இங்கே தொகுக்க முயல்கிறேன்.
தமிழ்சினிமா தனது மூலகங்களைக் கம்பெனி நாடகங்களிலிருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொன்னால், நாடகம் நடக்கும் மேடைக்கு முன்னால் கேமராவை நிலையாக நிறுத்தி அந்த நாடகத்தை அப்படியே படமாக்கியது போல் உருவாகியது தமிழ் சினிமா. 1870களிலிருந்து தொடங்கிய கம்பெனி நாடகங்கள் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இசைக்கும் பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவை. இக்கம்பெனி நாடகங்களே தமிழ் சினிமாவுக்கான நடிகர்களையும் வழங்கியது. 1931ஆம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ்ப் படமான காளிதாஸிலிருந்து 70களின் இறுதி வரை இந்த வழக்கம் நீடித்தது. உதாரணமாக., பி.யூ.சின்னப்பா, எம்.கே . தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர். ராஜகுமாரி போன்றவர்கள் 1910 ஆம் ஆண்டில் சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய சமரச சன்மார்க்க சபா போன்ற பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன்.
|
தவிர தமிழ்சினிமாவை பாதித்த சில இயக்குநர்களும் கம்பெனி நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்களாயிருந்தனர். குறிப்பாக, ஏ.பி.நாகராஜன் மற்றும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். முதல்வர், புராணப்படங்களை இயக்கியவர். இரண்டாமவர், ‘எலந்த பயம்’ புகழ் ‘பணமா பாசமா’ போன்ற படங்களுக்கு சொந்தக்காரர். இருவருமே தமிழ்சினிமாவின் மேடைத்தன்மை நீடித்திருப்பதற்குப் பங்காற்றியவர்கள். நாகராஜனின் திருவிளையாடல் படத்தின் வசன ஒலிபேழைகள் தமிழகம் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. இவ்வாறே கோபாலகிருஷ்ணனின் பட வசனங்களும் பட்டிதொட்டிகளெங்கும் ஒலித்தன. நாகராஜன், கோபாலகிருஷ்ணன் போன்ற நாடகக்காரர்களின் தொடர்ச்சியாக மேலும் பல நாடகக்காரர்களின் தொடர்ச்சியாக மேலும் பல நாடகக்காரர்கள் தமிழ்சினிமாவில் பிரபலமாயினர். அவர்கள்: கே. பாலச்சந்தர், சோ.ராமசாமி, மெளலி, எஸ்.வி.சேகர், விசு இவர்கள் அனைவரும் வசன கர்த்தாக்களாக இருந்து இயக்குநர் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா, ஒலிச்சித்திரம் என்ற பெயரில் வானொலியில் ஒலிபரப்பாகும் விநோதம் இந்த உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியமாக முடியும். கண்ணால் பார்த்து உணரப்பட வேண்டிய ஒரு கலைச்சாதனம், செவி வழியே கேட்கக்கூடிய ஒன்றாக இருப்பதும் தமிழ் சினிமா உலக அளவில் சென்றடையாததற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். (எஸ்.வி.சேகரின் சில நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் மேடையின் நடுவே தொங்கும் ஒலிபெருக்கியின் முன்னே வந்து நின்று பேசிவிட்டுப் போவார்கள். எஸ்.வி.சேகரின் நாடக ஒலிப் பேழைகள் தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் இன்றும் பிரசித்தமானவை) தமிழ் சினிமாவில் வரும் பல கதாபாத்திரங்கள் தாங்கள் செய்யப்போவதை வார்த்தைகளால் பார்வையாளர்களுக்கு விளக்கிவிட்டே அக்காரியத்தைச் செய்வதை நாம் பார்க்க முடியும். (’என் மகளை மணம் புரிந்தவனை இப்போது கொல்லப்போகிறேன்’ என்று கையில் துப்பாக்கியுடன் வசனம் பேசும் தகப்பன் கதாபாத்திரங்கள் தமிழ்ப்படங்களில் ஏராளம் தவிர விஜயகாந்த், பார்த்திபன் போன்றவர்களை வசன நடிகர்கள் என்றே கூறலாம்)
இதற்கான மூலக்கூறுகளைத் தேடிப்போனால், நாம் செல்லும் இடம்: மெளனப் படங்கள் மெளனப் படத்தில் ஏது வசனம் என்று கேட்கலாம். மெளனப் படங்கள் அனைத்தும் புராணக் கதைகளாக இருந்ததால் அவை பொதுமக்களுக்கு பரிச்சயமானவையாக இருந்தன. தமிழ் சினிமா வளராததற்கு இது ஒரு முக்கியமான காரணம். மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளாக இருந்ததால் காட்சி படிமம் வழியாகக் கதை சொல்ல வேண்டி நிர்ப்பந்தம் இல்லாமல், புதியதொரு சினிமா மொழி உருவாவதற்கான சாத்தியமும் அடைபட்டுப்போயிற்று. மெளனப் பட காலகட்டமான 1916- 32இல் தமிழ் சினிமா புராணக்கதைகளை நம்பியிருந்த நிலையில் ஐரோப்பிய சினிமா சமூக, அரசியல் தளங்களில் பயணம் செய்துகொண்டிருந்தது. அதன் உச்சகட்ட உதாரணமாக , ஐஸன்ஸ்டைனின் Battleship Potemkin – 1925இல் வெளிவந்தது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் படமும், ஐஸன்ஸ்டைனின் மற்றொரு படமான Ivan The Terrible –உம் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. வசனம் என்ற அம்சம், மெளனப் படங்களிலும் தன்னை நுழைத்துக்கொண்டது. எப்படியென்றால் அப்படங்களின் இடையே இரண்டு, மூன்று காட்சிகளுக்கு ஒரு முறை திரையில் காட்டப்பட்ட விவரண அட்டை இந்த அட்டைகளில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
|
இந்தியாவில் எழுத்தறிவு மிகவும் கம்மி என்பதால் இந்த அட்டைகளைப் படிப்பதற்கென்று தனியாக ஆட்கள் நின்றுகொண்டிருப்பார்கள். அது தவிர அரங்கில் உள்ள படிக்கத் தெரிந்தோரும் சத்தம் போட்டுப் படிப்பதால் அட்டை காண்பிக்கப்படும் சமயங்களில் அரங்கில் அந்தச் சத்தம் அலைபோல் எழும் என்று எழுதுகிறார் தியடோர் பாஸ்கரன்.
சினிமா என்பது வசனங்களால் நிரப்பப்பட்ட ஒரு வடிவம் என்ற விபரீத நம்பிக்கை திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் இன்னும் வலுவாக நிலைநிறுத்தப்பட்டது. இவர்கள் நாடக வசனகர்த்தாக்களாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அண்ணதுரை கதை வசனம் எழுதிய நல்லதம்பி (1949), கருணாநிதி எழுதிய பராசக்தி (1952), மனோகரா (1954) போன்றவை உதாரணங்கள். இப்போதும் கூட தமிழ்ச் சினிமாத்துறையில் பராசக்தியிலும், வீரபாண்டிய கட்டபொம்மனிலும் சிவாஜி பேசிய நீண்ட வசனங்கள் மனப்பாடம் செய்து உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதுதான் நடிப்பு என்பதாகப் பலராலும் நம்பப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் உள்ள நெருங்கிய உறவை நாம் இங்கே நினைவு கூர வேண்டும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளின் பேச்சை நான் கேட்டிருக்கிறேன். முழுக்கவும் செயற்கையானதொரு நாடகத் தமிழில் போலியான குரலில் (பல மணிநேரங்கள் அப்படிப் பேசிப் பேசி அதுவே பிறகு அவர்களது இயல்பான குரலாகிவிட்டது வேறு விஷயம்) அடுக்குமொழி வசனங்களில் மூன்று மணிநேரம் பேசும் திறன் படைத்தவர்கள்தான் தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய இடங்களைப் பிடித்தார்கள். இவர்களே சினிமா படைப்பாளிகளாகவும் இருந்ததால் இதே மேடைப் பேச்சுப் பாணியே சினிமாவிலும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வகையில் திராவிட இயக்கத்தை ஒரு கறாரான விசாரணைக்கு உட்படுத்திய படமாக பாரதிராஜாவின் ’என்னுயிர்த் தோழனை’,ச் சொல்லலாம். ஆனால் அந்தப் படமும் ஹீரோ, ஹீரோயின், காதல், வில்லன் , பாடல்கள், இடைவேளை என்று வியாபார சினிமாவின் ஃபார்முலாவுக்குள்ளேயே இயங்கியதால் சீரிய சினிமாவுக்குள் வர முடியவில்லை. இந்தப் படம் மட்டுமல்லாமல், ’கிழக்குச் சீமையிலே’, ’கருத்தம்மா’, போன்ற முக்கியமான படங்களை இயக்கிய பாரதிராஜா, அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற்வர்களின் வரிசையில் வைத்துப் பேசப்படாமல் போனதற்கும் இதுதான் காரணம். பாரதிராஜாவினால் கடைசி வரை பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தைக் கூட இயக்க முடியவில்லை.
ஒரு நல்ல சினிமாவின் நம்பகத்தன்மையைக் கெடுப்பதில் பாடல்களே முன்னணி இடம் வகிப்பவை. தமிழ் சினிமாவில் பாடல்களின் இடம் பற்றிப் புரிந்துகொள்ளவும் நாம் தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது. மெளனப்பட காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை இசைப் பாடல்களால் அமைந்த புராண நாடகங்கள், அதனால் மெளனப் படம் நடக்கும் கொட்டகைகளில், அந்தப் படத்திற்குச் சம்பந்தமேயில்லாமல் நடன கோஷ்டியினரின் கேளிக்கை நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. இதுபோல் சில குத்துச்சண்டை காட்சிகளும் நிகழ்த்தப்பட்டதுண்டு. மெளனப்பட காலத்தில் இசைக் கலைஞர்களுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லாமலேயே இருந்தது. இந்த நிலை பேசும் படங்கள் வந்ததும் மாறியது. பேசும் படங்களும் இசைப் பாடல்களால் நிறைந்த புராணப் படங்களாகவே இருந்ததால் சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள் இப்படங்களில் பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் நடிகர்களாகவும் பங்குபெற முடியாது. அவர்களில் முக்கியமானவர்கள் ஜி.என்.பாலசுப்ரமணியம். தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மகராஜபுரம் விஸ்வநாத ஐயர், ராஜரத்தினம் பிள்ளை, வி.வி. சடகோபன், எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோர். அதுபோல், கிட்டப்பா(?), பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி.பாகவதர், வி.ஏ.செல்லப்பா ஐயர். சி.எஸ்.ஜெயராமன் போன்ற பாடகர்கள் சினிமாவில் கதாநாயகர்களாயினர். இதன் பிறகு, ஒலிப்பதிவு வசதி நவீனமயமாகியதும் இசைக் கலைஞர்கள் கதை நாயகர்களாக நடிக்கும் காலம் முடிவுக்கு வந்தது. பின்னணி இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டனர். கண்ணதாசன் அவரது காலத்தில் ஒரு Legend ஆகவே வாழ்ந்தவர். அவரைப் பற்றிய ஏராளமான புனைவுத்தன்மை கூடிய சம்பவங்கள் தமிழ்நாடெங்கும் பேசப்பட்டவை Deccamaron கதைகளுக்கு இணையானவை அவை. தமிழ் சினிமா உலகில் வேறு எந்த நபருக்கும் கிடைக்காத ஒரு அந்தஸ்து அது. பாடல்கள் என்பவை தமிழ் சமுகத்தின் நாடித்துடிப்பாகவே இருந்து வருகிறது, என்று அடிக்கோடிட்டுச் சொல்லலாம். தங்கள் துக்கம், காதல், காமம், பாசம், வீரம், மரணம், ஜனனம், வலி, வேட்கை, விரக்தி, குதூகலம் என்று வாழ்வின் அத்தனை உணர்வுகளையும் சினிமா பாடல்களின் மூலமாகவே அடையாளப்படுத்திக்கொண்டும், பகிர்ந்துகொண்டதுமான ஒரு மனிதக் கூட்டம் இந்த உலகிலேயே தமிழர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று கருதுகிறேன். ஈழத்தமிழர்களின் Diaspora பற்றி நாம் அறிவோம். தங்களுடைய நிலத்தையும் வாழ்வையும் விட்டு உலகின் எல்லா மூலைகளிலும் சிதறுண்டு கிடக்கும் இனம் அது. பாரீஸ், பெல்ஜியம், ஜெர்மன், ஸ்விஸ், நார்வே என்று எங்கு சென்றாலும் அவர்கள் தமிழ் வாழ்க்கையுடனான தமது உறவை தமிழ் சினிமா, குறிப்பாக தமிழ்சினிமா பாடல்களின் மூலமாகத்தான் அடையாளப்படுத்திக்கொண்டும், தக்கவைத்துக்கொண்டும், உள்ளனர் என்பதை அங்கு வாழும் ஈழத் தமிழர்களிடையே உறவாடியபோது அவதானித்தேன். தங்கள் இனத்துக்குரிய நிலப்பகுதியான இலங்கையைப் பார்த்தேயிராத ஓர் ஐரோப்பியத் தமிழ்த் தலைமுறை இன்று அங்கே உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வாழும் ஒரு இளைஞியின் அதே கலாச்சார அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழ் சினிமாவும், பாடல்களும் உதவுவதாக ஏராளமான ஐரோப்பியத் தமிழ் இளைஞர்கள் என்னிடம் கூறினர். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இதே நிலைமையைத்தான் கண்டேன். கோலாலம்பூரில் உள்ள மின்னல் என்ற ஒரு தமிழ் டிஸ்கொதேயில் ‘எங்கே நிம்மதி?’ என்ற பாடலுக்கு (புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசனின் Stylized பாணி நடிப்புக்குப் புகழ் பெற்ற ஒரு பாடல் காட்சி அது) 65 வயதான தமிழர் ஒருவர் அதே சிவாஜி பாணியில் நடனமாடுவது மலேஷியத் தமிழர்களிடையே மிகவும் பிரபலமானது. ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்’ என்ற பாடலைப் போட்டு அதிநாகரீக உடைகளில் ஆண்களும் பெண்களும் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். தமிழ்ச் சமூகம் தனது ஞாபகங்களின் ‘சுவை மொக்குகளை’ தமிழ் சினிமாப் பாடல்களிலேயே தக்க வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. அதனல்தான் தமிழர்கள் சினிமா இசையமைப்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இளையராஜாவின் முப்பதாண்டு கால இசையமைப்பு வரலாற்றில் சுமார் இருபது ஆண்டுகள் படத்தின் ஹீரோவை விட அதிக முக்கியத்துவம் அவருக்குத்தான் அளிக்கப்பட்டது. விளம்பரப் போஸ்டர்களில் ஹீரோவின் படத்தைவிட அவரது புகைப்படமே அச்சிடப்பட்டது. சம்பளமும் அப்படியே ஒரு கோடி ரூபாய்க்கு அவர் இன்ஷீரன்ஸ் எடுத்தது பத்திரிக்கைச் செய்தியாயிற்று.
இந்த இடத்தில் ஓர் இடைச்செருகல், தமிழர்களுக்கு அதி தீவிர கலாச்சார மறதி உண்டு, நேற்று இருந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். இன்று இருப்பதை நாளை மறந்துவிடுவார்கள். உதாரணமாக, எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதர் ஒரு காலத்தில் மகா புருஷனைப் போல் காணப்பட்டார். பிறகு அந்த இட்த்தைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இன்று ரஜினி. அதேபோல்தான் இசையமைப்பாளர்களும் 1933 ஆம் ஆண்டிலிருந்து (கிருஷ்ணலீலா ) 1972 வரை (குறத்தி மகன்) பல படங்களுக்கு வசனமும் பாடலும் எழுதிய உடுமலை நாராயண கவியின் பாடல்களை அப்போது தமிழகமே கொண்டாடியது. அவரது சில புகழ்பெற்ற பாடல்கள்.
அண்ணாதுரை வசனம் எழுதிய ‘ஓர் இரவு’ படத்தில் ‘ஓரிடந்தனிலே’
சொர்க்க வாசல் படத்தில் ‘எங்கே சொர்க்கம்?.’ மற்றும் ‘ஆகும் நெறி எது ஆகா நெறி எது?’ இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓரிரு இசைஞானிகள் தமிழ் சினிமா உலகில் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.
இளையராஜாவை அடுத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் காலத்தில் தமிழ் சினிமா தமிழக எல்லையைத் தாண்டிவிட்டதால் அதன் பொருளாதாரமும் முன்னில்லாத அளவுக்குப் பன்மடங்கு பெருகிவிட்டது. இது பற்றி திரைப்பட ஆய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி ‘மணிரத்னமும் சினிமா அரசியலும்’ என்ற கட்டுரையில் கூறியதாவது;
’ரோஜா, காதலன் பம்பாய் என்ற மூன்று படங்கள் தமிழ் சினிமா வியாபார தாக்கத்தை இன்று மாற்றியுள்ளன. இந்த மூன்று படங்களின் ஆடியோ காஸெட்டுகளின் உரிமை தமிழில் மட்டும் ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ’
ஆக தமிழர் வாழ்வில் தமிழ் சினிமா இசை எத்தகைய பாதிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், அந்த இசையே தமிழ் சினிமா உலக அரங்கில் இடம்பிடிக்க முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றாகவும் அமைந்துபோனது.
சமீபத்தில் வந்த ’ஆட்டோகிராஃப்’, என்ற படம் உலகத் திரப்பட விழாக்களுக்குச் சென்றபோது பாடல்கள் நீக்கப்பட்ட பிறகே அனுப்பப்ட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாரதிராஜாவின் என்னுயிர்த் தோழனுக்கு அருகே செல்வோம். திராவிட இயக்க அரசியலை கறாரான விசாரணைக்கு உட்படுத்திய படம் அது என்று குறிப்பிட்டேன். இதேபோல் முயற்சித்த மற்றொரு படம், மணிரத்னத்தின் ‘இருவர்’ ஆனால் மணிரத்னம் தனது முயற்சியில் பாரதிராஜாவின் அருகில்கூட நெருங்கமுடியவில்லை. காரணம்.; மணிரத்னத்தின் மூளையாகச் செயல்படுவர் சுஜாதா. இவர் ஒரு வணிக எழுத்தாளர். எனவே பிரச்சினைகளின் ஆழத்தை நோக்கிச் செல்ல முடியாதவர். மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்தினர் போன்ற பகுதியினர் பற்றி அவ்வப்போது காழ்ப்புணர்வு மிக்க வார்த்தைகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பவர் அவர்.
தமிழகத்திலேயே அதிக விற்பனையுள்ள ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் சுஜாதா எழுதிவரும் பத்தி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு தகவல் : “ஸ்ரீரங்கத்தில் 1323ல் முகமதியர் படையெடுப்பின் போது 13,000 வைணவர்கள் கொல்லப்பட்டனர். ‘ சுஜாதா கூறும் இத்தகவலுக்கு வரலாற்றில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று இரண்டு ஆய்வாளர்கள் மிக விரிவான கடிதம் எழுதிய பிறகும் , நடந்த தவறுக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்காமல் , அந்தக் கடிதங்களையும் பிரசுரிக்காமல், ‘முஸ்லீம்கள் பற்றி எதுவுமே சொல்லக் கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று மறுபடியும் விஷமத்தனமாகவே எழுதியிருக்கிறார்.
இது பற்றிய விவரங்கள் அனைத்தும் காலச்சுவடு 2005 இதழில் வெளியாகியுள்ளன. சுஜாதா வசனம் எழுதும் எல்லாப் படங்களிலும் இதுபோன்ற காழ்ப்புணர்ச்சியை நாம் காண முடியும். இதில் அவரது முக்கிய பார்ட்னர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர்.
ஷங்கரின் ஜெண்டில்மேன் இட ஒதுக்கீட்டை மூர்க்கமாக எதிர்க்கும் படம். அதைத் தொடர்ந்து அவர் எடுக்கும் படங்கள் அனைத்துமே மக்கள் விரோதமானவை. ஃபாஸிஸத்தன்மை கொண்டவை சமீபத்தில் வெளிவந்த ’அந்நியன்’, இதற்கு முன்னால் வந்த ‘முதல்வன்’, ‘இந்தியன்’, எல்லாவற்றிலும் இதே கதைதான், சோம்பேறிகளையும், அடித்தட்டு மக்களையும் கொன்றுபோடுங்கள் என்ற கருத்தையே ஷங்கர் தொடர்ந்து தனது படங்களில் வலியுறுத்தி வருகிறார். வரலாற்றில் ஹிட்லரும் , நரேந்திர மோடியும் நிகழ்த்திக் காட்டிய ஃபாஸிஸத்தையே ஷங்கர் அந்நியனில் மிகத் தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றார். இதற்கு சுஜாதா வசனகர்த்தா. சுஜாதாவின் மற்றொரு பார்ட்னரான மணிரத்னத்தின் அரசியல், ஷங்கரைப் போல் இவ்வளவு வெளிப்படையானதல்ல, சற்றே பூடகமானது.
|
ஏற்கனவே தமிழ்சினிமா உருப்படாமல் போனதற்கான காரணங்கள் என பாடல்கள் மேடைப் பிரசங்க வசனங்கள், நாடகப் பாணி நடிப்பு போன்றவற்றைப் பார்த்தோம். இதன் பின்னர் வந்த மணிரத்னம் இவை அனைத்தையும் புறக்கணித்தார். இவரது பாத்திரங்கள் ஓரிரு வார்த்தைகளே பேசினர். அதுகூட யாருக்கும் சரியாகப் புரிவதில்லை. உதாரணமாக, ஒரு யுவன் ஒரு யுவதியைப் பார்த்து கட்டை விரலால், தன் மார்பைச் சுட்டிக்காட்டி, பின்னர், ஆள்காட்டி விரலால் அவளைச் சுட்டுவான். உடனே பின்னணியில் ஏதாவது ஒரு அரபி இசை அல்லது சூஃபி இசையிலிருந்து சுடப்பட்ட பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் ஒலிக்கும். அதாவது, அந்த யுவன் அந்த யுவதியிடம் ”ஐ லவ் யூ”, சொல்லிவிட்டான் என்று பொருள். அந்த யுவனின் பெயர் மாணிக்கவாசகமாகவும், யுவதியின் பெயர் ஸிபைதாபேகமாகவும் இருக்கும். கேட்டால் மத நல்லிணக்கம் என்று பதில் தருவார் மணிரத்னம்! அவரது படங்களில் அரசியல் பற்றி வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் ஆய்வு இங்கே குறிப்பிடத்தக்கது.
’ஒரே சமயத்தில் மூன்று மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய முகங்களையோ திறமைகளையோ கலந்து கதையையும் அதற்கேற்றாற்போல் அமைத்தால் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்ற நிலை ரோஜா, காதலன், பம்பய் என்ற படங்களினால் உருவானது. இம்மாதிரியான முயற்சிக்கு செலவு 5 கோடி என்றால் வரவு 13கோடிக்கும் மேல் செல்ல வாய்ப்புண்டு. இது உரிமைகளுக்குப் பெறும் தொகை மட்டுமே. இதைத் தவிர சினிமா கொட்டகைகளில் வரும் நிஜமான வசூல் அதையும் தாண்டிய ஒரு பெரிய தொகையாகும். ’பம்பாய்’, படம் இந்தியா மற்றும் வெளிநாட்டு வரவிலிருந்து 30 கோடி வசூல் செய்த்தாகக் கேள்வி.
|
இந்த புதிய வியாபார தர்க்கத்தினால் ஒரு கலாச்சாரக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மும்மொழிப் படங்களும் வெற்றி பெற வசதியான ஒரு பொது தேசிய அடையாளம் (Convenient National Identity) தேவையாகிறது. இத்தேவையால் மாநில வித்தியாசங்களும் அடையாளங்களும் (Regional differences and identities) வெளியாற்றப்படுகின்றன. இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் தேசத்துக்கே பொதுவானது. இத்துடன் ‘வியாபாரத்துக்கு வசதியான தேசீய அடையாளம்’ செயல்பட ஆரம்பித்துள்ளது. மண்டல் கமிஷனும் பாபர் மசூதித் தகர்ப்பும் வடக்கே பெரிய அலையைக் கிளப்பவே, அதை சித்தாந்த ரீதியில் இருந்து தேசியவாதமும் பொருளாதார அடிப்படையில் தாராள மயமாக்குதல் என்ற தத்துவமும் கட்டுப்படுத்தப் பார்க்கின்றன. இன்று பல மாநிலங்களில் வெடித்தெழும்பும் உரிமைக் குரல்களை சிறுபான்மையினரின் தேசிய விரோதத் தீவிரவாதம் (Minority antinational terrorism) என்று பெயரிட்டு கட்டுப்படுத்தப் பார்க்கின்றன. இதற்கேற்ப இன்றைய சினிமாவின் தாக்கம் செயல்பட்டு ஒரு பன்முக ஜனநாயக அடையாளத்தை அகற்றி நடுத்தரவர்க்க ஆசைக்கேற்ற தேசிய அடையாளத்தை நிலைநிறுத்த உதவுகின்றன. இந்த மறுதேசிய வாதத்தின் பிரதிபிம்பமாக ரோஜா மற்றும் பம்பாய் போன்ற படங்களை அடையாளம் காணலாம்.
இதற்கும் மேல் தமிழ் சினிமாவை அதல பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் சில விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்று; இடைவேளை. இப்படிப்பட்ட ஒரு அசட்டுத்தனத்தை இந்தியாவுக்கு வெளியே நான் கண்டதில்லை. உதாரணமாக A Hitler; A film from germany (1977) என்ற ஒன்று Hans- Jurgen Syberbeg இயக்கியது. ஏழரை மணி நேரப்படம் இது. ஆனால் இடைவேளை என்ற அசட்டுத்தனங்கள் இல்லை.
அடுத்து, படத்துக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத காமெடி ட்ராக். தமிழ் சினிமா நகைச்சுவையின் மூலம்; ஸ்பெஷல் நாடகம் மற்றும் கம்பெனி நாடகம், படுகொச்சையான பேச்சுக்களால் அதிகார வர்க்கத்தை நையாண்டி செய்வது ஸ்பெஷல் நாடகத்தின் தனிப்பண்பு கம்பெனி நாடகத்தில் நடிகர்கள் உடை மாற்றச் செல்லும்போது அல்லது மேடையமைப்பு மாற்றப்படும்போது நகைச்சுவைக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டுவார் கோமாளி. இந்த ரகத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் , காளி என்.ரத்னம், தொடங்கி டி.எஸ்.பாலையா, சந்திரபாபு என்று பல உயர்தரக் கலைஞர்கள் இங்கே இருந்துள்ளனர். இருந்தாலும் படத்துக்குப் பொருந்தாத நகைச்சுவைக் காட்சிகள் அப்படத்தை உருக்குலைப்பாதகவே உள்ளன. இது குறித்து 1938ஆம் ஆண்டு ‘ஈழ கேசரி’ என்ற பத்திரிக்கையில் தமிழ் சினிமா பற்றி புதுமைப்பித்தன் எழுதியுள்ள விமர்சனம் ரசமானது. அக்கட்டுரையில் 1935இல் கே.பி.சுந்தரம்பாள் ஆண் வேடம் தரித்து நந்தனராக நடித்து வெளிவந்து ‘நந்தனார்’ படம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
’தமிழ் படங்களில் ஒரு குறையென்னவெனில் பொருந்தாவிடத்தில் ஹாஸ்யக் காட்சிகளைக் கொண்டுவந்து செலுத்துவது. பழைய புராணக் கதைகளில் குறவன் குறத்தியின் காட்சியையும் கொண்டுவந்து செலுத்துவது ஒரு சம்பிரதாயம், இந்த வழக்கம் சமூகக் கதைகளிலும் புகுந்துகொண்டது.
அம்பிகாபதியில் வரும் ஹாஸ்யக் காட்சி மிகவும் பொருத்தமற்றது. இங்ஙனம் ஹாஸ்யக் காட்சிகளை மற்றெல்லாப் படங்களிலும் புகுத்தி வைத்தால் கீழ்த்தர சமூகத்தின் வசூல் பெறலாமென்பது படமுதலாளிகளெண்ணம். இது மிகவும் பிழையான அபிப்ராயம், எப்பொழுதும் மேன்மையானவைகளைப் பொறுக்கி எடுத்துக் காட்டினால் சினிமாக் கலை உயர்ச்சியடையும்.’
தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்காதது ஏன்? அல்லது தமிழ் சினிமா இப்படி நூறாண்டுக் காலமாக பாடாவதியாகவே கிடப்பதற்கு காரணம் என்ன? என்று விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் நிலவும் விசேஷமான ஒரு தணிக்கை முறை மற்றொரு காரணம். தணிக்கைக்கென்று இருக்கும் ஒரு அரசு நிறுவனத்தை மட்டும் நான் கூறவில்லை. அதைத்தவிரவும் இங்கே பல அரசியல் கட்சிகளும், தனிநபர்களும், அரசு நிறுவனங்களும், மதவாத அமைப்புகளும் கலாச்சாரப் போலீஸாக இருந்துகொண்டு சமூக நிகழ்வுகளைக் கண்காணித்து, அவர்கள் நிர்ணயித்துள்ள ஒழுக்க விதிகளுக்குள் அடங்காவிட்டால் கண்டிக்கவும், தண்டிக்கவும் செய்கின்றன. இவ்வகையில் தமிழ்ச்சமூகத்தை ஒரு கண்காணிப்புச் சமூகம் என்றே சொல்லலாம். தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் கலாச்சார அடக்குமுறை அதிகம் என்பது என் கணிப்பு.
பொதுவாக தணிக்கை பற்றி Catherine Breillat என்ற ஃப்ரெஞ்ச் இயக்குனர் கூறுவதாவது; தணிக்கை என்பது ஆண்களின் பிரச்சினை. எனவே அவர்கள் தரும் எக்ஸ் சான்றிதழ் எக்ஸ் க்ரோமஸோம்களுடன் தொடர்புடையது’ இப்போது அந்த க்ரோமஸோம்கள் சிலவற்றைக் குறித்துப் பார்ப்போம்.
சென்ற் ஆண்டு ‘நியூ’ என்று ஒரு படம் வந்தது. தமிழில் வரும் நூற்றுக்கணக்கான குப்பைகளில் அதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு ஒன்றும் அது பற்றிச் சொல்வதிற்கில்லை.
இந்தப் படத்திலுள்ள பாடல் காட்சியொன்றைத் தடை செய்ய வேண்டுமென்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் அருள்மொழி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இவர் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பேச்சாளர். மனுவை விசாரித்த நீதிபதிகளுக்கு படம் திரையிடப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நீதிபதி கற்பகவிநாயகம் கேட்டுள்ள கேள்வி ஒன்று நம் கவனத்திற்குரியது.
நீதிபதி: படத்தில் கதாநாயகிக்கு உதவி செய்யும் பாத்திரத்தில் வருவது ஆணா? பெண்ணா?
வக்கீல்: அது பெண்
நீதிபதி: அவரது தலைமுடி, கையில் சிகரெட் வைத்திருப்பதைப் பார்த்து அது ஒரு ஆண் கதாபாத்திரம் என்று நினைத்தேன். (செய்தி ஆதாரம்: தினமலர் 10. 09. 2004)
அதாவது ‘பாப்’ தலைமுடியும், கையில் சிகரெட்டுமாக இருந்தால் அது பெண்ணாக இருக்க முடியாது. ‘நியூ’ என்ற படம் பெண்களை அவமானப்படுத்துகிறது என்பதற்காகத் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதியே பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பது எவ்வளவு பெரிய irony இந்த 21ஆம் நூற்றாண்டில் பெண்கள், முழங்கால் வரை முடி வளர்த்து, ஜடை பின்னி, தாழம்பூ வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா நீதிமன்றம்.?
தமிழ்சினிமா பாடல்கள் பற்றி நாம் சற்று முன்னர் பார்த்தோம். அவற்றின் பரிணாம வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் – நீலப் படங்களை ஒத்த நடன அசைவுகள் கொண்டதாகவும், தமிழ் மக்களின் கூட்டு நனவிலி மனதின் (Collective unconsciousness) காமத் தேட்டமாகவும், வாழ்வினின்றும் காணாமல் போய்விட்ட காமத்தின் பதிலியாகவும் ஆகியிருக்கிறது.
ஆண் – பெண் போகத்தைக் குறிக்கும் Pelvic movements கொண்ட நடனக் காட்சிகள் சர்வ சாதாரணமாக நான்கு வயதுக் குழந்தைகள் கூட பார்க்கும் விதத்தில் தொலைக்காட்சி மூலமாக ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் வந்த பிறகு நியூ படத்தின் பாடலை மட்டும் தடை செய்து என்ன பயன்? அப்படிச்செய்தால் அத்தனை தமிழ்ப்படங்களையும் தடை செய்ய வேண்டிவரும். மணிரத்னம் படங்கள் உட்பட. இது தவிர, zoom போன்ற தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் 99% நிர்வாணமாக நடமாடும் நிகழ்ச்சிகள் சர்வசாதாரணமாக தினமும் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி அருள்மொழி போன்ற கலாச்சாரக் காவலர்களும், கனம் நீதிபதிகளும் என்ன சொல்கிறார்கள்?
சென்னை உயர் நீதிமன்றத்தால் ‘நியூ’ படப்பாடல் ஒன்று தடை செய்யப்பட்டு சுமார் ஓர் ஆண்டு ஆன பிறகு, இப்போது நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
’பொதுமக்கள் மனதில் சிற்றின்பத்தைத் தூண்டிவிடும் வித்த்தில் வேண்டுமென்றே படமாக்கப்பட்டுள்ளது . படத்தின் காட்சிகள் அமைப்புகள், கரு, பாடல்கள் இவை ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதத்தில் உள்ளன. சட்ட விதிகள், வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாலும் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் செல்லாது என்று உத்தரவிடுகிறோம். சான்றிதழை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவு விடுகிறோம். இப்படம் ஒரே ஒரு செய்தியை மட்டுமே தருகிறது. அது என்னவென்றால், கொச்சைத்தனம் , பொதுமக்களுக்குக் கல்வியறிவைப் புகட்டும் விதத்திலோ, ஆரோக்கியமான பொழுதுபோக்கையோ அளிப்பதாக இப்படம் இல்லை.’
இப்போது ஒரு எழுத்தாளன் என்ற முறையில் என்னுடைய கவலை என்னவென்றால், நீதிமன்றத்தின் இதே தீர்ப்பு வாசகங்களை வைத்து எந்த ஒரு கலைப் படைப்பையும் தடை செய்ய முடியும். ஷேக்ஸ்பியர் உட்பட என்பதுதான். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன என்பதுதான் என் கவலையை அதிகரிக்கிறது.
அண்மையில் மும்பையில் ரஹ்மான் அப்பாஸ் என்ற உருது எழுத்தாளர் கைது செய்யப்பட்டார். ‘நக்லிஸ்தான் கி தலாஷ்’ (பாலைவனச் சோலையைத் தேடி) என்ற அவரது முதல் நாவலில் சில ‘ஆபாசமான’ பகுதிகள் இருப்பதாக ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
’பாலியல் பற்றி எழுத வேண்டுமானால் இனிமேல் நாங்கள் லோக்கல் தாதாக்களையும், போலீஸ் கமிஷனர்களையும் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் எழுத வேண்டுமா?” என்று கேட்கிறார்கள் மஹாராஷ்டிரா உருது எழுத்தாளர் சங்கத்தினர்.
கைது செய்யப்பட்டது மட்டுமல்ல, அப்பாஸ் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்லூரியிலிருந்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அப்பாஸ் கூறுவது ‘Vagina Monologues’ என்ற நாடகத்தை மட்டும் மும்பையில் நிகழ்த்த அனுமதித்த போலீஸ் எப்படி என் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?”
Eve Ensler எழுதி உலகின் பல நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ‘வஜைனா மோனலாக்ஸ்’ என்ற நாடகம் சென்னைக்கு வந்தபோது போலீஸ் கமிஷனரால் பல பகுதிகள் வெட்டப்பட்ட பின்னரே இங்கு நிகழ்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டது.
இங்கே 1949ஆம் ஆண்டு ‘கலைச்செல்வி’ என்ற பத்திரிக்கையில் வந்துள்ள சினிமா டைரி ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்; ‘திருவாளர் M.M.தண்டபாணி தேசிகர் என்பவர் சைவ குருமார குலத்தில் தோன்றி மதுரை தேவாரப் பாடசாலையில் ஆசிரியராக இருந்தவர். அக்காலத்தில் அவர் சிறந்த ஒழுக்கமுடையவராய் இருந்து வந்தார். தற்போது அவர் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். மேற்படியார் சினிமாவில் நடிக்கப் புகுந்த காலமுதல் அவரை விட்டு பூர்விக ஒழுக்கங்களில் பல மாறிவிட்டன என்பதை யாரும் அறிவர். இதுவுமின்றி மணந்த மனைவியர் இருவரிருக்க, வேறொரு பெண்ணைக் காதலித்து அம்மாதையும் மனைவி ஆக்கி உடன் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். உணவிலும் வரைமுறையின்றி கண்ட இடமெல்லாம் உண்டு வருகிறார். சைவர்களுக்கு குருமாராக உதித்த இவரே சினிமாத் துறையில் புகுந்தவுடன் ஒழுக்கத்தினின்றும் நழுவி விட்டாரெனில் யாரைப் பற்றி நாம் பேச முடியும்?
இப்படிப்பட்ட ஒழுக்க விதிகள் ஒருபுறம் இருக்க, இந்தியத் திரைப்படத் தணிக்கைச் சட்டம் என்பது என்ன? என்று பார்த்தால் அது 1918ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் ஏற்படுத்திய ஒரு சட்டம் என்று தெரிகிறது. அந்தச் சட்டத்தைத்தான் வெட்டி ஒட்டித் தைத்து இன்னமும் அணிந்துகொண்டிருக்கிறது இந்திய சினிமா. இந்த இடத்தில் தமிழ்நாட்டுக் கலாச்சார அடக்குமுறைக்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறோம்.
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்திலிருந்து நடைப்பயணமாகவே இந்தியாவைச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு திகம்பர ஜைனத் துறவி, 88 வயது முதியவர்,, நிர்வாணமாக வந்தால் தமிழ்க்கலாச்சாரம் என்ன ஆவது? அவரைப் பாண்டிச்சேரி நகருக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டனர் கலாச்சாரக் காவலர்கள். அதாவது, கம்யூனிஸ்ட் கட்சியினரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் ! இந்த விஷயம் நகரத்தில் பரவி விட, உடனே அங்கு வந்து சேர்ந்தனர். பாரதீய ஜனதா கட்சியினர், திகம்பர ஜைனத் துறவியை நகருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்பது பா.ஜ.கட்சியினரின் கோரிக்கை. போலீஸீம் வந்துவிட்டது. ஒரே கலாட்டா. கூச்சல் குழப்பம். பிறகு பாரதீய ஜனதா கட்சியினர் அந்தத் துறவிக்குப் பாதுகாப்பு வளையமிட்டு நகருக்குள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
3000 ஜைனர்களை இந்து மன்னர் கழுமரத்தில் ஏற்றிக் கொன்ற வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் தலைகீழ்! அது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியினரும் திராவிடக் கழகத்தினரும் ஒரு ஜைனத் துறவிக்கு Dress code பற்றி உத்தரவிடுவதும், அவருக்கு பாரதீய ஜனதாக் கட்சியினர் பாதுகாப்பு கொடுப்பதும் எத்தகையதொரு வரலாற்று Irony!
*********************************
தமிழ் சினிமாவில் சில நல்ல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சில முயற்சிகளும் நடக்கத்தான் செய்தன. இதைச் செய்தவர்கள் நவீன இலக்கியப் பரிச்சயத்தோடு மட்டுமல்லாமல் தாமே படைப்பாளியாகவும் இருந்தனர். அம்ஷன் குமார், ஞான.ராஜசேகரன், பூமணி போன்றோரை இந்த ரகத்தில் சேர்க்கலாம். அம்ஷன் குமார் ஃபிலிம் சொஸைட்டி இயக்கத்துடன் சுமார் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். அதனால் இவர் இயக்கிய ‘சுப்ரமணிய பாரதி’ என்ற டாக்குமெண்டரி படம் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் பாரதி பற்றி நான்கைந்து பிராமண புத்திஜீவிகளிடம் பேட்டி கண்டதோடு அப்படம் முடிந்துவிட்டது. ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடியவருக்கு இந்த கதி! ஞான. ராஜசேகரனின் ‘பாரதி’ என்ற முழுநீளப் படம் தொலைக்காட்சி சீரியலை விட மட்டமாக இருந்தது. இவரது ‘மோகமுள்’ என்ற படமோ ஷகீலா டைப் மலையாளப் பட ரேஞ்ஜில் அமைந்திருந்தது. கேரளத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ‘படா பாபு’வாக (அய்யேயெஸ்ஸீக்கு அப்படி ஒரு பெயரும் உண்டு) சில வருடங்கள் பணிபுரிந்த தகுதி ஒன்றெ போதும். படம் எடுத்துவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலும்!. மறப்போம் மன்னிப்போம். பூமணி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பெயர். ஆனால் சினிமாவில் ஞான.ராஜசேகரனைக்கூட அவரால் தாண்ட முடியவில்லை. தங்கர் பச்சான் தமிழ் சினிமாவை மாற்றப்போகிறேன் என்று மாதம் நான்கு முறை அறிக்கை விடுப்பார். பச்சானின் ‘அழகி’யும் , சமீபத்தில் வந்த ‘காதல்’ படமும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஜெயமோகன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ‘காதலை’ப் பார்த்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி ஒரு மெக்கானிக் பையனை எதிர்கொள்ளும்போது –அந்தச் சந்திப்பு நடந்த தினமே ருதுவாகிறாள். ருதுவான அன்றே அவனுடன் ‘காதல்’ பிறக்கிறது. ஊரை விட்டு ஓடித் திருமணம் செய்துகொள்கிறார்கள். முதலிரவும் முடிகிறது. இப்படிப் போகிறது கதை. ஆக, இது ஒரு erotic படமாகத்தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். Paedophile பற்றிய ஸைக்காலஜிகல் த்ரில்லராக மாறியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. Paedophile படம் எடுப்பது ஃபிரான்ஸிலேயே சாத்தியமில்லை. உலகம் முழுவதும் அதற்கு எதிராகக் கடும் சட்டங்கள் உள்ளன. ஆனால் படத்தில் Paedophilia-க்கான சரியான ஆதாரமும் இல்லை. அந்த மெக்கானிக் பையனும் சிறுவனாகவே தெரிகிறான். ஆக, சிறுவர்களுக்குள் எழும் பாலியல் தேட்டத்தை எப்படி இந்தத் தமிழ்ச்சமூகம் காதல் என்று பெயரிட்டு ரசிக்கிறது? அதாவது போகட்டும் எழுத்தாளர்கள்?
எழுத்தாளர்களுக்கு சினிமா பற்றித் தெரியவில்லை. சினிமாக்காரர்களுக்கு கிஞ்சித்தும் இலக்கியப் பரிச்சயம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘பைங்கிளி!’ எழுத்தாளர்களைத்தான். அவர்கள் மட்டுமல்ல; தமிழ்ச்சமூகமே கலை இலக்கியப் பிரக்ஞையற்று சக்கையைத் தின்று கொண்டிருக்கிறது. அந்த நிலை மாறும் வரை தமிழ் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இக்கட்டுரை எழுத உதவிய நூல்களும், சஞ்சிகைகளும்:
1. சித்திரம் பேசுதடி, தொகுப்பாசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன். காலச்சுவடு பதிப்பகம், 2004
2. எம் தமிழர் செய்த படம். சு.தியோடர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம், 2004
3. ஷங்கரும், நரேந்திரமோடியும் , கட்டுரை; தேவிபாரதி, காலச்சுவடு, ஆகஸ்ட் 2005
4. தினமலர் 10.09.2004: 6.08.2005
நன்றி: திரை, லீனா மணிமேகலை.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |