இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
1. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம்
சினிமா என்பது ஓர் உன்னதக் கலைச் சாதனமாகும். எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரபலமான கலையாகும். வேடிக்கையாக ஆரம்பித்த சினிமாக்கலை வேகமாக உலகமெல்லாம் பரவி அனைத்து மக்களையும் ஈர்த்து நிற்கின்றது.
இந்தச் சினிமா, கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் எமது இலங்கை நாட்டில் சளைத்துவிடவில்லை. சர்வதேசப் பரிசில்களைப் பெறுமளவுக்குப் பல சிங்களப் படங்கள் இங்கிருந்து உருவாகியிருக்கின்றன. அந்தச் சிங்களப் படத்தொழிலை நம்பியே பல கலைஞர்கள் நிலைக்கத் தொடங்கி விட்டார்கள். அது பெரிய தொழிலாகவே மாறிவிட்டது.
இந்த உயர்ந்த நிலை இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் ஏற்படவில்லை? இலங்கையின் தமிழ்த் திரை உலகம் இறந்துவிட்டது போன்று காணப்படுவதற்குக் காரணம் என்ன? இவை போன்ற கேள்விகள் என் மனத்தில் உதித்தன. மனத்தை உறுத்தின.
1991ஆம் ஆண்டு ஜே.வி.பியினரின் அச்சுறுத்தலால் இலங்கையில் இந்தியப் படங்கள் சிலமாதங்கள் திரையிடப்படாமல் இருந்தன. அப்பொழுது சில பழைய இலங்கைத் தமிழ்ப் படங்கள் கொழும்பில் மட்டும் காட்சி தந்து மறைந்தன. பல படங்கள் எங்கே என்று தெரியவில்லை. பல தயாரிப்பாளர்கள் தம் படங்களை அரைகுறையாக வைத்திருக்கிறார்கள். பல திரைப்படங்களைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் எரித்துவிட்டது.
எத்தனையோ வருடங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படங்களின் வரலாறே அழிந்துவிடும் போலிருக்கிறது!
அந்தக் கலைஞர்களின் பெயர்களை எல்லோருமே மறந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. இந்தக் கலைஞர்களின் கலையபிமானத்தை மற்றவர்களும் அறியவேண்டாமா?
இவ்வாறான பலத்த வேதனைகளாலும் உரத்த கேள்விக்கணைகளாலும் அந்த வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமா என்று எண்ணத்தோன்றியது.
நான் எழுதுவது இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதைமட்டுமல்ல. நம் நாட்டுச் சினிமாக் கலைமீது ஆசைகொண்ட அபிமானிகளின் சோக வரலாறும்கூட. இந்த வரலாறே எங்கள் ரசிகர்களின் மனத்தை ஆட்கொள்ளாதா?
தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், தென்னிந்தியாவிலேயே அதிகமான தமிழ்ப் படங்கள் உருவாகியிருக்கின்றன. நெடுங்காலமாகவே இந்தியத் தமிழ்ப் படங்களை இலங்கை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆரம்ப காலச் சிங்களப் படங்கள்கூடத் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுவந்தன. 1956ஆம் ஆண்டின் பின்புதான் இலங்கையிலும் சிங்களப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது வருடத்தில் 25க்கு மேற்பட்ட சிங்களப் படங்கள் திரைக்கு வருகின்றன. அந்தளவுக்கு முன்னேறிவிட்டன.
1950ஆம் ஆண்டிலேயே இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை 50க்கு மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அவற்றில் 36 படங்கள் மட்டுமே திரைக்கு வந்திருக்கின்றன.
இலங்கையில் உருவான கதைத் தமிழ்த் திரைப்படங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:-
(1) குறுந் திரைப்படங்கள் (16 மில்லி மீட்டர்)
(2) சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட படங்கள் (டப் படங்கள்)
(3) தமிழ் மொழியிலேயே தயாரிக்கப்பட்ட முழுநீளப் படங்கள்.
(4) இலங்கை - இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்.
‘சமுதாயம்’, ‘பாசநிலா’ ஆகிய இரண்டு படங்களும் 16 மில்லி மீட்டரில் தயாரிக்கப்பட்ட குருந் திரைப்படங்களாகும்.
‘கலியுக காலம்’, ‘நான்கு லட்சம்’, ‘யார் அவள்’, ‘சுமதி எங்கே’, ‘ஒரு தலைக்காதல்’, ‘பனிமலர்கள்’, ‘இவளும் ஒருபெண்’, ‘அஜாசத்த’ போன்ற எட்டுப் படங்களும் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட படங்களாகும்.
‘தோட்டக்காரி’, ‘கடமையின் எல்லை’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘நிர்மலா’, ‘மஞ்சள் குங்குமம்’, ‘வெண்சங்கு’, ‘குத்து விளக்கு’, ‘மீனவப் பெண்’, ‘புதிய காற்று’, ‘கோமாளிகள்’, ‘பொன்மணி’, ‘காத்திருப்பேன் உனக்காக’, ‘நான் உங்கள் தோழன்’, ‘வாடைக்காற்று’, ‘தென்றலும் புயலும்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘ஏமாளிகள்’, ‘அனுராகம்’, ‘எங்களில் ஒருவன்’, ‘மாமியார் வீடு’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘இரத்தத்தின் இரத்தமே’, ‘அவள் ஒரு ஜீவநதி’, ‘நாடு போற்ற வாழ்வு’, ‘பாதை மாறிய பருவங்கள்’, ‘ஷர்மிளாவின் இதயராகம்’ போன்ற 26 திரைப்படங்களும் முழுநீளப் படங்களாகும். அவற்றில் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற படம் அகலத்திரையில் (70 மி.மீ) எடுக்கப்பட்டதாகும்.
‘பைலட் பிரேம்நாத்’, ‘தீ’, ‘நங்கூரம்’, மோகனப் புன்னகை’, ‘வசந்தத்தில் ஓர் வானவில்’ போன்ற படங்கள் இலங்கையில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்கள். இவற்றுடன் இலங்கைக் கலைஞர்களுக்குத் தொடர்பிருந்தாலும் தயாரிப்பு என்ற ரீதியில் இவை இந்தியப் படங்களே. இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள் என்று சொல்லலாம்.
இலங்கையில் உருவான இத்தனை படங்களும் தரமானவையா? தரமற்றவையா? என்பது வேறு விடயம். இத்தனை படங்களையும் உருவாக்க நம் கலைஞர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? அவர்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது. உண்மையான கலைஞர்கள் பலரின் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து பிறந்தவைதாம் இந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்.
தமிழ்ச் சினிமா பிறந்த தென்னிந்தியாவிலேயே இன்று கூடத் தயாரிப்பாளர்கள் ரசிகர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள். கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வளர்ந்துவிட்ட அங்குகூட இப்படியான ஒருநிலை.
வசதிகள் அதிகமற்ற அந்தக் காலத்திலேயே இலங்கையில் இத்தனை தமிழ்ப் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால், இந்தக் கலைஞர்கள் எத்தனை பெரிய கெட்டிக்காரர்கள். ஆத்ம திருப்திக்காக அவர்கள் ஈடுபட்ட மாபெரும் முயற்சிகள் எத்தனை பெருமை வாய்ந்தவை.
முதலாவது சிங்களப் பேசும் படம் 1956ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பெயர் ‘கடவுனு பொறந்துவ’ (உடைந்த உறுதிமொழி) என்பதாகும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களாகிய நாம் பெருமைப் படலாம். ஏனெனில், அந்த முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவர் தமிழரான எஸ்.எம். நாயகம் என்பவரே.
உண்மையான சிங்களக் கலாசாரத்தைப் பிரதிபலிக்காமலும், பிறமொழிப் படங்களை டப் செய்தும் ஆரம்பித்த சிங்களச் சினிமா, இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்கள் மட்டுமல்ல, வளர்த்துவிட்டவர்களும் தமிழ் பேசும் கலைஞர்களே! இவர்கள் தான் சிங்களக் கலாசாரத்தையே சினிமாவில் சீரழித்தவர்கள் என்ற பெயரையும் பின்னாளில் பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கையின் முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை (16 மி.மீ) தயாரித்தவர் ஒரு சிங்களவர். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையில் உருவாகும் அனைத்து சிங்கள, தமிழ்ப் படங்களிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் ஒற்றுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் 1951ஆம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டன. முக்கியமாக ‘குசுமலதா’ என்ற தமிழ்ப் படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இத்திரைப்படம் 1951-12-29 இல் திரையிடப்பட்டதாகக் குறிப்புகள் இருக்கின்றன. பி.ஏ.டபிள்யூ. நிறுவனத்தினர் தயாரித்த இப்படத்தில் எடிஜெயமான, ருக்மணிதேவி ஜோடியாக நடித்தார்கள். இப்படத்தின் பாடல்கள் இடம்பெற்ற இசைத்தட்டொன்று இப்பொழுதும் இலங்கை வானொலி நிலையத்தில் இருக்கிறது.
1951ஆம் ஆண்டு இந்தியாவில் ‘சங்கவுனு பிலிதுற’ என்ற சிங்களப் படத்தைத் தயாரித்தார்கள். அப்படம் இலங்கையில் 1951-05-20இல் திரையிடப்பட்டது. பி.ஏ.டபிள்யூ. ஜெயமான்ன என்பவர் இப்படத்தைத் தயாரித்து நெறியாண்டார். இச் சிங்களப் படத்தையே தமிழுக்கு டப் செய்து ‘குசுமலதா’ என்ற பெயரை வைத்தார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இச் சிங்களப்படத்துக்கு இந்தியக் கலைஞர்களைக் கொண்டே தமிழில் பின்னணிக் குரல் வழங்கப்பட்டிருப்பதால்’ குசுமலதாவை’ இலங்கைத் தமிழ்ப் படம் என்று முற்று முழுதாகச் சொல்லிவிட முடியாதே!
அக்காலத்தில் இலங்கையில் தமிழ்ப் படங்களை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் பல கலைஞர்களின் உள்ளத்தில் உருவாகியிருந்தது. திரைப்படத் தயாரிப்பு என்பது பணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் பலர் முன்வரவில்லை. கலையார்வம் கொண்ட செல்வந்தர்கள் குறைவாக இருந்தார்கள். சில செல்வந்தர்கள் இந்தியத் தமிழ்ப்படங்களை இங்கு இறக்குமதி செய்து திரையிடும் பெருந் தொழிலாகவே மாற்றிக்கொண்டார்கள். இலங்கை ரசிகர்களும் அப் படங்களையே பார்த்து ரசிக்கப் பழகிக்கொண்டார்கள். இன்று ஒரு புதிய சிங்களப் படம் ஒரே நேரத்தில் 16 தியேட்டர்களில் ஓடுகிறது. இதைப் போலவே அந்தக் காலத்தில் ஒரு புதிய இந்தியத் தமிழ்ப் படம் 16 தியேட்டர்களில் ஓடியிருக்கிறது. காலப்போக்கில் இந்நிலை மாறி வந்தது.
இலங்கைத் தமிழ்ப் படங்களில் ஆர்வமும் தேசாபிமானமும் கொண்ட பலர் தலைநகரிலும் மலையகத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அடிக்கடி துளிர்விட்டுக் கொண்டேயிருந்தனர்.
1952 ஆம் ஆண்டளவில் நாடக அனுபவமும் சினிமா ஆர்வமுமுள்ள இலங்கைக் கலைஞர்கள் சிலர், மலையகத்தில் கொஸ்லந்தை என்ற ஊரில் ஒன்றுகூடினார்கள். அந்தக் கலைஞர்கள்தாம் இலங்கையில் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார்கள்.
அவர்கள்தாம் எம்.வி.ராமன், ஏ.அருணன், வி.தங்கவேலு, ஹென்றி சந்திரவன்ஸ போன்ற கலைஞர்கள். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதால் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த முடிவு. அந்த எண்ணங்களின் பிரதிபலனாகக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘சினிமாக் கலாநிலையம்’ என்ற மன்றத்தை உருவாக்கினார்கள்.
மன்றத்தின் முதல் முயற்சி ஆரம்பமாகிவிட்டது அவர்கள் கூட்டுறவு முறையில் கறுப்பு வெள்ளை நிறத்தில் தமிழ்த் திரைப்படமொன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com
இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |