இதழ்: 15     வைகாசி - 2014 (May)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 10 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் 3 - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்

--------------------------------
விருப்பம் வேலையானால் 2 – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2 - தினேஷ் குமார்

--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 1 - பி.கே. நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 1 - என்.சி.நாயுடு
--------------------------------
சந்திரபாபு - சித்ராலயா
--------------------------------
 
   

   

 

 

விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 2

- தினேஷ் குமார்

சென்ற இதழின் தொடர்ச்சியாக:

பம்மல் சம்பந்த முதலியாரது நாடகம் அவரது அனுமதி இல்லாமலேயே, கதையில் பற்பல மாற்றங்களுடன் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் மேடையில் காட்சியளிக்கிறது. நான் இதுவரையிலும் ஒப்பனையறையிலிருந்து வெளியேவரவில்லை. நாடகம் முடிந்ததும், பேராசிரியரின் அழைப்பிற்கேற்ப பம்மல் சம்பந்த முதலியார் மேடையேறினார். முதலில் பார்வையாளர்களைப் பார்த்து, “இப்பொழுது நாம் பார்த்த நாடகத்தில் கதை, வசனம் எழுதியவர் என்கிற இடத்தில் என் பெயரைப் போட்ருக்காங்க, ஆனால், என் வசனத்தில் ஒரு எழுத்து கூட இந்நாடகத்தில் இடம்பெறவில்லை. நிறைய வித்தியாசங்கள் செய்திருக்கிறார்கள். என் நாடகத்தை அப்படியே மேடையேற்றியிருந்தால் ஒருபயலும் உட்கார்ந்து பார்த்திருக்க மாட்டான்” என்றார். மேலும் இந்நாடகத்தின் கதை வசனத்தை மாற்றியது பேராசிரியர்தான் என நினைத்து அவரையும் பாராட்டுதலில் இணைத்துக்கொண்டார்.

என் மாணவனுக்கு கிடைக்க வேண்டிய நல்வார்த்தைகளெல்லாம் எனக்கு கிடைக்கிறதே என நினைத்த பேராசிரியர், பார்வையாளர்களிடமும், பம்மல் சம்பந்த முதலியாரிடமும் “இந்தக் கதையை மாற்றியது நான் அல்ல, என் மாணவன் ஆனந்த கிருஷ்ணன்”, என்று என் பெயரை அழைத்தார். எங்கே எனக்கு உதை கிடைக்கப்போகிறதோ?, என்று ஒளிந்துகொண்டிருந்த எனக்கு இந்தச் செய்திகளெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. நாடக ஆசான் பம்மல் சம்பந்த முதலியாரின் கரங்களால் நான் சபாஷ் வாங்கியது, இன்றுவரை என்னால் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாட்களில்குறித்துக்கொள்ள தகுதி வாய்ந்தது.

சினிமா அறிமுகமான புதிதில், வெற்றி பெற்ற நாடகங்களெல்லாமே, திரைப்படங்களாக பரிணாமம்அடையும் வழக்கத்தில் இருந்தன. ஒய்.ஜி.பார்த்தசாரதியும், நாடகத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த காலமாதலால், அவருக்கு கணிசமான சினிமா நண்பர்கள் பழக்கத்தில் இருந்தார்கள்.

உதாரணமாக சிவாஜிகணேசன், பானுமதி நடிப்பில் உருவான ”அறிவாளி”, என்னும் திரைப்படம் ஒய்.ஜி.பின் நாடகமான ‘பெண் படுத்தும் பாடு’ என்பதனையே அடிப்படையாக கொண்டது. ஷேக்ஸ்பியரின் டிராமாவான ’oh what a girl’,தான் ’பெண் படுத்தும் பாடு’ நாடகத்திற்கும் மூலம். இந்நாடகத்தில், ஒய்.ஜி.பி, சந்தியா, இன்னும் பலரும் நடித்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில் ஓரளவு பெண்கள்தயக்கம் கலைந்து நாடகத்துறைக்குள் அடியெடுத்து வைக்கத்துவங்கினர். ஒய்.ஜி.பியின் நாடக ஒத்திகைகளுக்கு சந்தியா வருவார். அவருடன் கைக்குழந்தையாக ஜெயலலிதாவும் வருவது வழக்கம். குழந்தையிலேயே ஜெயலலிதா யாருடனும் அதிகமாக பேசமாட்டார். அப்படியே பேசினாலும் ஆங்கிலத்தில்தான் பேசும், அதுவும் எங்களுக்குப் புரியாது என்பதால் அவருடன் பேசுவதையே தவிர்த்து விடும் பழக்கம் எங்களுக்கு உண்டு..

சிறு வயதிலிருந்தே நாடகத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக, நாடக அரங்கத்திற்கு தேவையான பொருட்களை நிர்மாணிப்பதில் வெகு சிரத்தையுடன் ஈடுபடுவேன். நாடக ஒப்பனையிலும், நடிப்பிலும் கவனம் செலுத்துகின்ற பலரும், அரங்கை கதைக்குத் தேவையான பொருட்களுடன் அலங்கரிப்பதற்குபார்வையை திருப்புவதில்லை, இதைக் கவனித்துக்கொள்ளவும் தனியாக யாரும் ஒதுக்கப்பட்டதும் இல்லை. ஆனால், சினிமா என்று வரும்போது அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருக்கின்றதா? என்று பார்த்துக் கொள்ள மேலாளர் இருப்பார். ஒரு காட்சியில் மேசையும், நாற்காலியும், கடிகாரமும் காட்டப்பட வேண்டுமென்றால் அவைகளெல்லாம் அந்தக் காட்சியில் கட்டாயம் இடம்பெறும், இதைக் கவனித்து ஏற்பாடு செய்து தரவேண்டியதும், அதை நிர்வாகிப்பது மேமேலாளரின் வேலை. எனவே, நாடகத்திலும் வேண்டிய பொருட்கள் எல்லாமும் இடம்பெறவேண்டும், அதையும் கவனித்துக் கொள்ள ஆள்வேண்டும் என்று ஸ்டேஜ் இன்சார்ஜ் வேலைக்கான பிரிவை முதன்முதலில் ஏற்படுத்தியது நான்தான். நாடகத்துறையின் மீதிருந்த அதே ஆர்வம் எனக்கு சினிமாத் துறையிலும் குறையாமலிருந்தது.

சினிமாவிற்கும் எனக்குமான இணக்கம் அதிகரிப்பதற்கு என் அப்பா வாங்கித்தந்த பாக்ஸ் காமராதான் முக்கியக்காரணி. நான் பன்னிரண்டு வயதாக இருந்த பொழுது முதன்முதலாக, அப்பா எனக்கு”பாக்ஸ்கேமிரா", வாங்கித்தந்தார். ஃபோகஸும், லென்சும் சரியாக இல்லாத அந்தக் கேமிராவில் நிறைய பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்கின்ற பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டேன். இதே காமிராவில் நான் பத்மினியையும், நாகைய்யாவையும் போட்டோக்கள் எடுத்தேன் என்பது ஆச்சரியமான ஒன்று.

1951ல் ஜனவரி 15ல் தொடங்கப்பட்ட அமைப்பு ”ஃபிலிம் பேன்ஸ் அஸோஸியேஷன்”, இது வழக்கத்திற்கு மாறாக, ரசிகர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு. இவ்வமைப்பானது 50களில் வெளிவந்த படங்களில் எது சிறந்த படம், சிறந்த நடிகர், மற்றும் சிறந்த நடிகை யாரென்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏப்ரல் 14 அன்று, கெய்ட்டி தியேட்டரில் பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. எது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை யார் என்றெல்லாம் தேர்ந்தெடுக்க ரசிகர்களிடமே சீட்டு கொடுத்து வாக்குப் பெட்டி போல அவர்களிடமிருந்து ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. சிறந்தவர்கள் யார் என்று ரசிகர்கள் மனதில் வைத்திருக்க கூடிய விஷயங்களை ஒவ்வொரு தியேட்டரின் வாசலிலும் வைக்கப்பட்டிருக்கின்ற வாக்குப்பெட்டியில் படம் பார்த்து முடித்தவுடன் எழுதிச் சேர்ப்பிக்கலாம்.

இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஏற்பாடு நடக்கின்ற சமயத்தில் நானும் கூடவே இருந்த காரணத்தினால் அசோஸியேஷன்ஸ் உறுப்பினர்களெல்லாம் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ரசிகர்களின் வரவேற்பின் அடிப்படையில் சிறந்த படமாக பட்ஷிராஜா ஸ்டுடியோவின், ”ஏழைபடும்பாடு”, திரைப்படமும், அந்தப் படத்தில் நடித்த நாகைய்யா சிறந்த நடிகராகவும், சிறந்த நடிகையாக பத்மினியும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியானது கெய்ட்டி தியேட்டர் என்பதால், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே இடைவேளை நேரத்தில் நிகழ்ச்சி நடத்துவது என ஏற்பாடு. அப்பொழுதெல்லாம் புகைப்படக்காரர்கள் பத்திரிக்கைகளுக்கு மட்டும்தான் படம்பிடிப்பார்களே தவிர இதுமாதிரியான சினிமா நிகழ்வுகளையெல்லாம் அதிகமாக கண்டுகொள்வதில்லை. எந்த போட்டோஃகிராபரும் இல்லாத காரணத்தினால் என்னையே போட்டோ எடுக்கும்படி உறுப்பினர்களுள் சிலர் சொன்னார்கள். ஆனால் என்னிடம் உள்ள கேமிரா வெளிச்சத்தில் எடுக்கத்தான் பயன்படுமே தவிர இருட்டில் செல்லுபடியாகாது.

அப்பொழுது நாகைய்யாவும், பத்மினியும் விருது வாங்கிவிட்டு வெளியே வரும்பொழுது நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன். பின்னர் ஹிந்து பத்திரிக்கையாளர்கள், அசோஸியேசனுக்கு போன்செய்து, ”மன்னிக்கவும் எங்களால் வரமுடியவில்லை, நீங்கள் எடுத்த போட்டோ ஏதாவது இருந்தால் அனுப்பி வையுங்கள் நாளையே பிரசுரிக்கின்றோம்", என்றனர். இந்துவிலிருந்து புகைப்படம் கேட்டிருப்பதாக உறுப்பினர்கள் சொன்னார்கள். நான் சந்தோஷமடைவதற்குப் பதிலாக, பதற்றமானேன். ஏனெனில் இந்தக் காமிராவில் எப்படி புகைப்படம் பதிவாகியிருக்கின்றது என்பது தெரியவில்லை, எனவே, உடனடியாக பிலிம் லேபிற்கு சென்று போட்டோ வந்ததும் வாங்கிப் பார்த்தேன். எனக்கு ஓரளவு திருப்தியிருந்ததன் விளைவாக, அன்றே அவற்றை இந்து பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தேன். அப்புகைப்படமும் அடுத்த நாள் பிரசுரமானது. பத்திரிக்கையிலிருந்து எனக்கு 120 ரூபாய் சன்மானமாக அனுப்பிவைத்தார்கள்.

இன்னொரு ஆச்சர்யமான சம்பவமும் இதே பாக்ஸ் காமிராவினால் நிகழ்ந்திருக்கிறது.

’Alexandre Dumas’ன் நாவலான”the man in the iron mask”,இதனை அப்பொழுதே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில், எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் இவருடன், பி.யூ.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த படமே’உத்தமபுத்திரன்’.1940ல் வெளியானது, இதுதான் தமிழின் முதல் இரட்டை வேடப்படம் என சிறப்பு பெறுகின்றது.

பின்பு, சிவாஜி, பத்மினி நடிப்பில் உத்தமபுத்திரன் மீண்டும் 1958ல் வெளியாகிறது, இதில் வில்லனாக எம்.என். நம்பியார் நடித்திருப்பார், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் வீனஸ் பிக்சர்ஸ், வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, வீனஸ் கோவிந்தராஜன் (நடிகர் தியாகராஜனின் தந்தையார்), இறுதியாக இயக்குனர் ஸ்ரீதர், இயக்குனருக்கான சம்பளம் மிச்சமாகின்ற காரணத்தினால் அவரையும் ஒரு தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டனர் என்பது கூடுதல் செய்தி.. பி.யூ.சின்னப்பா போலவே இந்தப் படத்திலும் சிவாஜி கணேஷனுக்கு இரட்டை வேடம்தான். நானும் இந்த பாக்ஸ் காமிராவை வைத்துக் கொண்டு இந்த மாதிரியான இரட்டை வேடப் புகைப்படங்களை எடுக்க முடியுமா? என்றொரு எண்ணம் வந்தது. சினிமாவில் பயன்படுத்துகின்ற கேமராக்களை ஒப்பிடுகையில் இந்த பாக்ஸ் காமிரா சிறியது, வசதிகளும் குறைவு.

பாக்ஸ் கேமராவில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு பக்கவாட்டில் திருகினால்தான் அடுத்த பிலிமிக்கு நகரும். இது பெரும்பாலனோர்க்குத் தெரியும். அதைப் பயன்படுத்திக் கொண்டு என் வீட்டிற்கு வந்த உறவுக்கார சிறுமி ஒருத்தியை இடது புறமாக நிற்க வைத்துக்கொண்டும், லென்சின் வலது பக்கமாக, சின்ன அட்டையை வைத்து மறைத்தவாறு ஒரு புகைப்படம் எடுத்தேன். பின்பு, அடுத்த பிலிமிற்கு நகர்த்தாமல், இடப்புறமாக லென்சை அட்டையால் மறைத்தவாறும், வலதுபுறமாக சிறுமியை நிற்க வைத்துவிட்டு புகைப்படம் எடுத்த பின் பிலிம் லேபிற்குச் சென்று புகைப்படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்த்தேன்.

மிகுந்த ஆச்சர்யம், இரட்டைவேடம் என்பதற்கேற்ப இடப்புறமும், வலப்புறமும் சிறுமி நிற்கின்றாள். ஏதோ புதியதோர் கருவியை கண்டுபிடித்தது போல அகமகிழ்ந்தேன். இரட்டை வேட புகைப்பட வித்தையை சாத்தியப் படுத்தியதை மற்றவர்களிடமும் காண்பிக்க ஆர்வமாகவே இருந்தேன். காண்பித்தால் எவரும் அவ்வளவு எளிதில் நம்பி விடவில்லை, “எப்படி பெரிய காமிரா வைத்திருப்பவர்களாலேயே இப்படி ஒரு போட்டோவை எடுக்கமுடியாதே, இந்த பையன் எடுத்திருக்கின்றானே” என்று பிறகு ஆச்சரியப்பட்டனர்.

இந்த மாதிரியான சமயத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கேமராமேன் சி.ஜெ.மோகன் எனக்கு அறிமுகமாகிறார். இவரிடத்தில் சிலர் எனது இரட்டை வேட புகைப்படத்தைப் பற்றி கூறியுள்ளனர் போலும். எல்லோரையும் போலவே அவர் முதலில் நம்பவில்லை., அத்தோடு கேலியாகவும் பேசியுள்ளார். ”எப்படி இது முடியும், அவ்வளவு பெரிய கேமிராவிலேயே பத்தடி எடுத்த பின்பு மீண்டும் திரும்ப பத்து அடி நகர்த்தினால்தான் முதல் பிரேமுக்கு வரும். பின்புதான் அந்த காட்சியை மீண்டும் பதிவு செய்ய முடியும், பன்னிரண்டு வயது பையன் இதையெல்லாம் எடுத்திருக்கின்றான் என்பதில் சாத்தியமில்லை", என்றிருக்கிறார்.

நான் அதற்குள் நிறைய புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தேன். ஆனால் இதனை நான் எங்கும் வெளியில் அதிகமாக காண்பிக்கமாட்டேன். என் குடும்பத்தினருக்கு மட்டும் காண்பிப்பது வழக்கம். சி.ஜெ.மோகனின் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அவர்கள் கூப்பிட்டதும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோவிற்கு செல்கின்றேன்.

சி.ஜெ.மோகன்நான் எடுத்து வைத்திருக்கின்ற படங்களையெல்லாம் பார்த்தபின்பு கொஞ்சமும் அசராமல், மிரட்டும் விதமாக “எப்படிடா இதையெல்லாம் எடுத்த?”என்றார்.

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
    </