இதழ்: 15     வைகாசி - 2014 (May)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 10 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் 3 - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்

--------------------------------
விருப்பம் வேலையானால் 2 – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2 - தினேஷ் குமார்

--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 1 - பி.கே. நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 1 - என்.சி.நாயுடு
--------------------------------
சந்திரபாபு - சித்ராலயா
--------------------------------
 
   
   

 

 

சந்திரபாபு

நன்றி: சித்ராலயா - ரோஜா முத்தையா நூலகம்

தட்டச்சு உதவி: தினேஷ் குமார் :: ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்து கட்டுரையை பிரதி எடுத்து வந்தவர் கார்த்திக்.


எனக்கு ஆறு வயது என் நினைவுக்குத் தெரிந்து என்னால் மறக்க முடியாத கிறிஸ்துமஸ் அது. என் தகப்பனார் ரோட்ரிக்ஸ், காங்கிரஸில் இருந்ததால் அவருடைய அச்சகத்தை வெள்ளைக்காரர்கள் பறிமுதல் செய்து விட்டார்களாம். என் தாயாருக்குரிய சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. எனவே நடுத்தர வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தோம்.

தினசரி காலை கோவிலுக்குப் போக வேண்டும் ஞாயிற்றுக்கிழமையானால் தவறவே கூடாதென்று அப்பா கண்டிப்பாக இருப்பார். காலையிலேயே எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்து விட்டுக் கோயிலுக்கு ஓடுவோம். இன்றுவரை நான் குளிர்ந்த பச்சைத் தண்ணீரைத் தவிர வேறு எதிலும் குளித்ததில்லை. எங்கள் வீட்டில் ஒரு பழக்கம். இரவுச் சாப்பாட்டை ஏழு மணிக்கெல்லாம் முடித்துவிட்டுப் படுக்கைக்கு போய்விடுவோம். அன்று கிறிஸ்துமஸ்! நடுச்சாம பூஜைக்கு கோவிலுக்குப் போக வேண்டும்! வழக்கமாக தூத்துக்குடி சின்னக் கோவிலுக்குத் தான் போவதுண்டு என்று அம்மா ஒரேயடியாக பெரிய கோவிலுக்குத்தான் போக வேண்டுமென்று கூற, அப்பா சின்னக் கோவிலுக்குத்தான் போக வேண்டும் என்று கூற இருவருக்கும் தகராறு. சாப்பிட்டு விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த என்னை, அப்பா தட்டி எழுப்பி, ”வா, நாம் சின்னக் கோவிலுக்குப் போவோம்” என்று கூப்பிட்டார். நானும் அவரும் சின்னக் கோவிலுக்குப் போனோம். அங்கு ஆளே இல்லை. கோவில் பூட்டிக் கிடந்தது.

”என்னப்பா......... இது....... பூசை முடிஞ்சுட்டது போலிருக்கே” என்றேன் நான்.

”இருக்காது”, என்று கூறிவிட்டு மணியை போய் பார்த்தார். அப்போதுதான் மணி 09:45 என்று தெரிய வந்தது. நான் சிணுங்கிணேன். அருகே இருந்த வெங்காய மண்டியைக் காட்டி “ஏலேய் அங்க படுத்து தூங்கு, நான் பூசை ஆரம்பிச்சதும் எழுப்புறேன்” என்றார். நானும் படுத்துத் தூங்கி விட்டேன்.

”ஏலேய்.......... எந்திரிலே” என்று என் அப்பா தட்டி எழுப்ப நான் பதறிப்போய் எழுந்தேன். இருவரும் கோவிலுகுப் போனோம். அங்கு நடுச்சாம பூஜை முடிந்திருந்தது. என் அப்பாவும் என்னோடு சேர்ந்து சேர்ந்து தூங்கிய விஷயம் அப்போதுதான் தெரிந்தது. இரண்டாவது பூஜை நாலரை மணிக்கு அதையாவது பார்த்து விட்டுப் போகலாமென்று மீண்டும் அந்த வெங்காய மண்டியில் போய் பார்த்தோம்.

அப்பா எழுப்பினார்! நானும் எழுந்தேன்! வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது மணி எட்டு.

இலங்கையில்...

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட என் அப்பாவை நாடு கடத்திச் சென்றுவிட்டார்கள். அவருடன் நாங்களும் இலங்கைக்குப் போய் விட்டோம். தூத்துக்குடியில் என் பெரியண்ணன் ‘சுதந்திர வீரன்’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். பின்னர் இதைப் பார்த்துதான் லட்சுமி காந்தன் பத்திரிக்கையைத் தொடங்கினார்..!

ஒரு நாள் என் அண்ணனும், அச்சு எந்திரத்தை இயக்குபவரும் சேர்ந்து பிரஸ்ஸை இலங்கைக்கே கடத்தி வந்து விட்டார்கள். அங்கு ‘அருணோதயம் பிரிண்டிங்க் பிரஸ்’, என்று தொடங்கினோம்.

இலங்கையில் உள்ள பிரபல தினசரியான வீர கேசரிக்கு அந்தப் பெயரைச் சூட்டியதே என் தந்தைதான். எனவே அந்தப் பத்திரிக்கை அலுவலகம் அருகிலேயே ஒரு சிறிய வீட்டை எடுத்து அதில் பிரஸ்ஸை ஏற்படுத்தினோம். எதிரே “ஆனந்தா பிரிண்டிங்க் பிரஸ்”, என்று ஒரு அச்சகம் இருந்தது.

எனக்கு அப்போது 9 வயதிருக்கும்! அன்று கிறிஸ்துமஸ் தினம். அன்றுதான் எங்கள் அச்சகத்திறப்பு விழா நடந்தது. அதே வீட்டின் பின்புறம் என் அண்ணன் சோப்பு தயாரித்து விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். இரவு கிறிஸ்துமஸ்! நடுச்சாம பூஜைக்காக எல்லோரும் கோவிலுக்குப் புறப்பட்டுப் போனோம். சிறிது தூரம் சென்றதும் தகவல் அறிந்து திரும்பிப் பார்த்தோம். எங்கள் அச்சகம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. எங்கள் எதிர் அச்சகத்தைச் சேர்ந்தவர்கள் தீ வைத்து விரட்டினர்.

கிறிஸ்துமஸ் பூஜைக்குப் போக வேண்டிய நாங்கள் இரவு முழுவதும் தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருந்தோம்.

மாட்டுக்கறியும், குண்டுவீச்சும்:

கொழும்பில் ஆட்டுக்கறி சாப்பிடுவதாகச் சொன்னால் அவ்வளவு மதிப்பு கிடையாது. நம் ஊரில் பருப்பு சாம்பார் மாதிரி அது. மாட்டுக்கறி சாப்பிடுவதுதான் மவுசு. யாராவது “இன்னைக்கு உங்க வீட்டில் என்ன கறி” என்று கேட்டால், ஸ்டைலாக “பீஃப்” என்று பதில் சொன்னால் ரொம்ப மதிப்பாக நினைப்பார்கள். 1942ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று காலையில் மாட்டுக்கறி வாங்கி வர என்னை கொழும்பில் உள்ள ‘கெய்மன்ஸ் கேட்”க்கு அனுப்பினார்கள். போனேன். அங்கு ஒரு பெரிய ஆலமரத்தை இரண்டாகப் பிளந்து போட்டு, அதன்மீது மாடுகளை வரிசையாகப் போட்டு ஏறத்தாழ 12 பேர் நின்று கொத்திக் கொண்டு இருப்பார்கள். இருநூறு, முந்நூறு மாடுகளை வெட்டித் தொங்க விட்டிருப்பார்கள். நான் கறி வாங்க காத்துக் கொண்டு நின்றேன். சங்கு ஊதும் சப்தம் கேட்டது. அது அங்கு சகஜம். சங்கு ஊதும் சத்தம் கேட்டதும் வேடிக்கை பார்க்க வெளியே ஓடி வருவோம்.

போர் விமானங்கள் வானத்தில் பறந்து குட்டிக்கரணம் அடிக்கும். அது போல் எதிர்பார்த்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..!

’ஃடுமீல்’, ஒரு பயங்கரச்சத்தம்!

தென்னை உயரத்துக்கு இருந்த ’கெய்மன்ஸ் கேட்’, அதிர்ந்து அங்குமிங்கும் ஆடியது. மீண்டும் ஒரு குண்டு. மாடு வெட்டுவதற்குப் பயன்படுத்தும் ஆலமரம் வானத்தில் பறந்து தரையில் வீழ்ந்தது. அது ஜப்பானியர் குண்டு வீச்சு. ஹார்பரில் போட வேண்டிய குண்டுகளை தவறான இடத்தில் போட்டு 200 பேர் அதில் பலியானார்கள். ஒரு குண்டு என் மச்சானின் மீது உரசிக்கொண்டு சென்றிருந்தது. இதனால் அவருக்குப் பேதியாகிக் கொண்டிருந்தது. என் சின்ன அக்கா வளர்த்த கோழிக் குஞ்சுகள் எல்லாம் அதிர்ச்சியில் செத்துப் போய் விட்டன.

காங்கிரஸ் ஸ்டோர்:

அதன்பிறகு ஹட்டன் பகுதியில் குடியேறச் சென்றோம்! அலவை என்ற இடத்தில் எங்கள் வீடு, ஹட்டன் டிக்கோயா ரோட்டில் அப்பா, பலசரக்கு கடை ஒன்றைத் திறந்தார். நான்தான் கடைக்குப் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் என்று பலசரக்கு சாமான்கள் எல்லாம் வாங்கிப் போட்டாகி விட்டது. அரிசிக்கு தட்டுப்பாடு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல கட்டுப்பாடு வேறு இருந்தது.எனவே அலவையிலிருந்து தேங்காய் மூட்டைக்குள் அரிசியும் போட்டுக்கொண்டு வந்து கடையில் சேகரித்து வைத்தோம்! கடையின் பெயர் ‘காங்கிரஸ் ஸ்டோர்!’ கிறிஸ்துமஸ் தினத்தில் கடை திறக்கப்பட்டது. அன்று இரவு நானும் அப்பாவும்,கோவிலுக்குப் போனோம். 2 மணி நேரம் பாட்டுப்பூஜை நடந்தது. முடிந்து திரும்பி வந்த போது கடை காலியாக இருந்தது. யாரோ கொள்ளை அடித்துவிட்டுப் போயிருந்தார்கள். மிஞ்சி இருந்தது தராசு மட்டும்தான்.

எங்கப்பா பக்கத்தில் உள்ளகுவின்ஸ் ஹோட்டலில் போய் பத்து ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வந்து “ஏலேய், மூட்டைக் கட்டுலே” என்றார். நாங்கள் அலவை வந்து சேர்ந்தோம்.

தாயகம் வந்த கதை:

தினமணி ஆசிரியராக இருந்த சொக்கலிங்கம் அப்பாவுக்கு நீங்கள் தினமணிக்கு சப்-எடிட்டராக வந்துவிடுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தார்.

உடனே எங்கள் குடும்பம் தாயகம் புறப்பட்டது. எல்லோருக்கும் டிக்கட் பணம் சேர்ந்துவிட்டது. எனக்கு மட்டும் சேரவில்லை. எங்களுக்கு குத்தகைக்கு எடுத்த தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. ‘ஏலேய்.., தேங்காயை வெட்டி விற்றுவிட்டு ஊருக்கு வா!” என்று சொல்லிவிட்டு குடும்பத்துடன் மதுரைக்குப் புறப்பட்டு போய்விட்டார் அப்பா! அப்போது எனக்கு வயது 11. நாலைந்து நாள் கழித்து தேங்காயை வெட்ட ஏற்பாடு செய்யும்போது வீட்டுக்காரன் வந்துவிட்டான். ஆறு மாதம் வீட்டு வாடகை பாக்கி, தேங்காயை வெட்டக்கூடாது என்று என்னைத் துரத்தி விட்டான். வீட்டுக்காரன் மனைவி ரொம்ப நல்லவர் அவரிடம் போய் கேட்டேன். ஊருக்குப் போக நிறைய காசு வேண்டுமே. நான் வேண்டுமானால் 5 ரூபாய் தருகிறேன். கொழும்புக்குப் போய் அங்கிருந்து சமாளித்துக்கொள் என்று சொல்லிவிட்டார். நான் தலைமன்னார் வரை டிக்கெட் எடுத்தேன். பிறகு எப்படி எப்படியோ மதுரை வந்து சேர்ந்தேன். (எப்படியோ என்ன? டிக்கெட் இல்லாமல் மதுரையில் வேதமாணிக்கம் என்ற ரயில்வே அதிகாரி என்னை கையும் களவுமாக பிடித்துவிட்டார். நான் ரோட்ரிக்ஸ் மகன் என்று கூறி என் கதையைச் சொன்னேன். அவர் என்னை தன் வீட்டிற்கு அழைத்துப்போய் குளிக்க வைத்து, சாப்பாடு போட்டு என் அண்ணனிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டார்.)

சீப்பு வியாபாரம்:

அப்பா தினமணியில் வேலை பார்க்க சென்னை போய்விட்டார். அண்ணன் மாட்டுக்கொம்பு சீப்பு வியாபாரம் செய்தார். என்னைச் சீப்பு விற்க அனுப்புவார். நானும் அங்குமிங்கும் அலைந்து சீப்பு விற்பேன். நான் சரியாக விற்கவில்லையென்று வேலை வெட்டி செய்யாதவனுக்கு சோறு போட முடியாதென்று அண்ணன் சொல்லிவிட்டார். நான் சென்னைக்கு ரயில் ஏறிவிட்டேன். திருச்சியில் ஆசையோடு ஒரு நீலம் மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டேன். பிறகுகையில் மிஞ்சியது 6 அணாதான். மாம்பழம் தின்ற சிறிது நேரத்தில் கை, கால் எல்லாம் ஆடத் தொடங்கிவிட்டது. சென்னையில் இறங்கி தினமணி ஆபீசுக்குப் போனேன். கூர்க்காவிடம், “அப்பாவைப் பார்க்கணும்” என்றேன். அவன் ‘கியா, கியா’ என்றான். உடல் தள்ளாடியது, திண்ணையில் உட்கார்ந்துவிட்டேன். சற்று நேரம் கழித்து வேட்டி ஜிப்பா அணிந்து ஒருத்தர் வந்தார். அவரிடம் கூறினேன்.

”ரோட்டரிக்கும், கோபாலய்யரும் போய்விட்டார்கள். நடிகை S.R.ஜானகி வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”, என்று கூறிவிட்டு என்னை அவர் அழைத்துப் போனார்! மைலாப்பூரில் உள்ள மாநதி பார்மஸிக்கு என்னை அழைத்துப்போய், ‘இந்தப் பையனுக்கு மலேரியா கடுமையாக தொற்றி இருக்கிறது, கவனித்துக்கொள்ளுங்கள்!” என்று கூறிவிட்டார்.! அவர்தான் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன் என்று பின்னர்தான் தெரிய வந்தது. மறுநாள் கிறிஸ்துமஸ்! நான் அனாதை போலக்கிடந்தேன். 3 நாள் கழித்து கண்விழித்த போது உடல் சற்று குணமாகி இருந்தது. என் தலையை மொட்டை அடித்திருந்தார்கள். அப்பா தங்கியிருந்த விலாசம் வாங்கிக்கொண்டு போனேன். ‘ரோட்ரிக்ஸ் இருக்கிறாரா’ என்று அந்த வீட்டில் போய் விசாரித்தேன். அங்கு வந்த என் அப்பா என்னை அடையாளம் தெரியாமல் ‘யாருப்பா வேண்டும்’ என்று கேட்டவர் மறுகணமே நான் என்று தெரிந்து கொண்டு ‘ஏலேய்’ என்று கட்டிப்பிடித்து அழுதார். நானும் அழுதேன். !

சினிமா கிறிஸ்துமஸ்:

எனக்கு வயது 22. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நிறைய ஏற்பட்டு இருந்தது. அப்பாவிடம் ‘நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன்!’ என்றேன். அப்பாவுக்கு கோபம் வந்தது. “சினிமாவில் நடிப்பதாக இருந்தால், இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது” என்று வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். அன்று இரவு கிறிஸ்துமஸ் இரவு.

முதல் கிறிஸ்துமஸ்:

கல்யாணமான பிறகு வரும் கிறிஸ்துமஸ் மிகச் சிறப்பானது. இதை முதல் கிறிஸ்துமஸ் என்பார்கள். எனக்கும், ஷீலாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தவரே பழைய S.J.அருள்தாஸ்தான். 15 நாள் நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்! இருவரும் தேன் நிலவுக்காக கிருஷ்ணராஜி சாகருக்கு போயிருந்தோம். அங்கே வைத்து திடீரென்று அவள் நான் செத்துப் போவேன் என்றால். ஏன்? என்றேன். நான் உங்களை ஏமாற்றி விட்டேன் என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “நான் வேறு ஒருவரை காதலித்து கெட்டுப்போனவள்” என்று அழுதாள். நான் அவளுக்கு ஆறுதல் சொல்லி வைத்தேன். ஊருக்கு வந்த பிறகும் தினசரி செத்துப் போவேன் என்று கூறி அழ ஆரம்பித்தாள். “உங்களைப் போன்ற மென்மையான மனம் படைத்தவரை வஞ்சித்து விட்டேனே!, என்னை லண்டனுக்கே அனுப்பிவிடுங்கள்”, என்பாள். நான் அப்போது கமிஷனராக இருந்த அருளிடம் சென்று “ஃபெரடி அண்ண.... (அப்படித்தான் அவரை அழைப்பேன்) அவள் அழுதுக்கொண்டே இருக்கிறாளே?”, என்று விஷயத்தைச் சொன்னேன். “கவலைப் படாதே சரியாகிவிடும்” என்று ஆறுதல் கூறினார். நான் என் நண்பர் மனுவேலிடம் சென்று அவரிடமும் விஷயத்தைச் சொன்னேன்.

அதற்குள் வீட்டிலிருந்து வேலைக்காரன் மணி போன் செய்து, ‘அம்மா தற்கொலை பண்ன மாத்திரை, மருந்துகளை தின்றுவிட்டார்கள்”, என்று கூறினான். நான் ஓடினேன். அதற்குள் மணி கோழி சிறகை அவள் வாயில் விட்டு வாந்தி எடுக்கச் செய்திருந்தான். அருள் வந்தார். ‘அவளை லண்டனுக்கே அனுப்பி விடு’ என்று கூறிவிட்டார். நானும் அவளை அனுப்ப ஏற்பாடு செய்தேன். எங்களுக்கு வந்த கல்யாணப் பரிசு உட்பட, ஒரு லட்சத்து 65ஆயிரம் ரூபாய் அவளுக்கு கொடுத்தேன். அன்று டிசம்பர் 23ம் தேதி. ஷீலா பிறந்த நாள். அதை வீட்டில் சிறப்பாக கொண்டாடினோம். நான் அவளுக்கு சேலை மற்றும் பிறந்தநாள் பரிசு எல்லாமே வாங்கினேன். மறுநாள், பிற்பகல் 1:30மணிக்கு பிளேனில் நாங்கள் இருவரும் கொச்சிக்குப் போனோம். அங்கு அவளை லண்டனுக்கு செல்ல விட்டுவிட்டு நான் சென்னை புறப்பட்டேன்! நான் நடிகனாக பிறகு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸை தடபுடலாக கொண்டாடுவேன். சினிமா உலகமே அன்று என் வீட்டிலிருக்க தடபுடலாக விருந்து நடக்கும். ஆனால் இந்த கிறிஸ்துமஸ் வேலைக்காரன் கூட வீட்டில் இல்லை. அன்று இரவு நன் தனிமையில் என் வீட்டிலிருந்தேன். என் அருகில் என் நண்பன் . அது சிறிதளவு “விஸ்கி”.

மாடி வீட்டு ஏழை ஆனேன்.!

”மாடி வீட்டு ஏழை”, என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தேன். நான் பட்டினி கிடப்பதாக இருந்தாலும் யாரிடமும் பண உதவி கேட்க மாட்டேன். ஒரு பாக்கெட் சிகரெட் இருந்தால் போதுமென்று இருந்துவிடுவேன். சாப்பாட்டுக்கு வழி இல்லையே என்று மோதிரத்தையோ, கைக்கடிகாரத்தையோ, அடமானம் வைத்த அனுபவமும் எனக்குக் கிடையாது. அப்படிப்பட்ட நான் போடக்கூடாத பத்திரங்களில் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கினேன். நட்சத்திரங்களுக்கு லட்சம் லட்சமாக பணம் கொடுத்தேன். அட்வான்ஸாக என் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. ஏழரை லட்ச ரூபாய் செலவில் கட்டிய என் வீடும் கடனில் மூழ்கியது. என்னால் இந்தச் சோகத்தைத் தாங்கவே இயலவில்லை. மது தரும் போதை கூட என் துயரத்தைத் தணிக்கவில்லை. அதற்காக மயக்கம் தரும் “பெதடின்”, ஊசி போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்கு நான் அடிமை ஆகிப்போனேன்.

பேறு கால நேரத்தில் 50 மிலி அளவு இந்த ஊசியை பெண்களுக்குச் செலுத்துவார்கள். ஆனால் நான் 2500 மில்லிவரை போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு நானே ஊசி போட்டுக் கொள்வேன். பின்னர் மயங்கிய நிலையில் கிடப்பேன்! மயக்கம் தெளியும் ஊசி போடுவேன். மீண்டும் சுய நினைவு இழப்பேன். ஒரு நாளில் ஒரு மணி நேரம்தான் கண் விழித்து இருப்பேன்.

8 அணா மருந்தை 300 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கின்றேன். ! அமிஞ்சிக்கரையில் போய் ஊசி போட்டுக் கொண்டு வருவேன். அந்த மருந்து இல்லையென்றால் துடித்துப்போவேன்.! அத்தனை டாக்டர்களிடமும் யாசகம் கேட்பது போல் அந்த ஊசி மருந்தைக் கேட்டு மன்றாடி இருக்கிறேன். அந்த மருந்துக்காக நான் தெருநாய் போல் அலைவேன்.

1968- டிசம்பர் :

பிராட்வே போய் 6 ஆம்பிள் “பெதடின்” வாங்கிக் கொண்டு வந்தேன். கடற்கரையில் வைத்து எனக்கு நானே அந்த மயக்க மருந்தை செலுத்திக்கொண்டேன். என்னுடன் சதன் இருந்தார். பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டோம். நானே காரை ஓட்டி வந்தேன். இசை அமைப்பாளர் விஸ்வநாதன் வீட்டருகே வரும்போது சுயநினைவு இழந்தேன்!

கார் கூவத்துக்குள் இறங்கியிருக்கிறது. உடனே சதன்கைபிரேக்கைப் போட்டுக் காரை நிறுத்து இருக்கிறார். சதனுக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனால், என்னை அவர் வீடு கொண்டு வந்து சேர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கின்றது.

மயக்கம் தெளிந்து எழுந்தேன். மீண்டும் ஒரு ஊசி போட்டுக் கொண்டேன். எனக்கு ஞாபக மறதி அதிகம். ஒரு தடவை என் பிளைமவுத் காரில் வந்து இறங்கி வீட்டுக்குள் போய் ஃபேண்டையும் அவிழ்த்துவிட்டேன்! அப்போது ஒரு பெண் வந்து என்ன வேண்டுமென்று கேட்டார். பிறகுதான் தெரிந்தது நான் நுழைந்தது என் வீடு அல்ல. பக்கத்து வீடு என்று.

எனவே ‘பாத்ரூம்’ போனால் கூட முன்கதவை தாளிட்டு விட்டுத்தான் செல்வேன். படுக்கையில் மயங்கிக் கிடந்த நான் மீண்டும் கண் விழித்தேன்.! கதவைப் பூட்டி விட்டு, ‘பாத்ரூம் போனேன். கொஞ்ச நேரம் கழித்து கதவை சதனும் வேறு சிலரும் உடைப்பது போல் தட்டினார்கள். பாத்ரூமிற்குள் விழுந்து கிடந்த நன் தட்டுத்தடுமாறி எழுந்து கதவைத் திறந்தேன். மீண்டும் மயங்கி விழுந்தேன். என்னை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள். 25 நாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தேன். ‘பெதடின்’ஊசி இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஒரு நாள் சுவர் ஏறிக்குதித்து வெளியே போய் ஊசி போட்டுக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டேன். இந்த நிலையில் என் கையில் பணமும் தீர்ந்தது. கையிருப்பு 15 ரூபாய் மட்டுந்தான். ஆஸ்பத்திரிக்கு பில் கட்ட வேண்டும்! திகைத்தேன். அன்று டைரக்டர் ராமண்ணா 2000 ரூபாய்க்கு ‘செக் அனுப்பி இருந்தார். என்னை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்ய!

’பெதடின்’ஊசியை நான் போட்ட அளவு தொடர்ந்து போட்டு வந்தால், கைகால் விளங்காமல் போயிருக்க வேண்டுமாம். நான் நடனம் ஆடுவதன் காரணமாகத்தான் அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பெதடின் போதை ஊசி போடுவதை நிறுத்தினாலும் என் உயிருக்கு ஆபத்து. நிறுத்தா விட்டாலும் ஆபத்து. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது?

ஒரு கணம்-

ஊசி போட்டுப் போட்டுச் சாவதை விட, அந்த ஊசியை போடாமலேயே இருந்து செத்து விட்டால் என்ன?
நான் சிந்தித்தேன். அதன் பிறகு அந்த ஊசியை நான் போட்டுக் கொள்ளவேயில்லை. அன்று முதல் நான் மாறிவிட்டேன். அன்றைய தினம், ”கிறிஸ்துமஸ் தினம்!”.

போதை ஊசியை நிறுத்திய பிறகு ஆறு நாட்கள் இரவும் பகலும் எனக்குத் தூக்கம் வரவில்லை. நர்சுகள் வந்து ஒரு தூக்க மாத்திரையாவது சாப்பிடுங்கள் என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏழாவது நாள் என்னை மறந்து அயர்ந்து தூங்கினேன். எட்டாவது நாள் டாக்டர் என்னிடம் வந்து ‘நீங்கள் பிழைத்து விட்டீர்கல். வேண்டுமானால் சிறிதளவு பிராந்தி சாப்பிடலாம்’ என்றார் சாப்பிட்டேன்.

எத்தனையோகிறிஸ்துமஸ் வந்து போய்விட்டது. ஒவ்வொரு கிறிஸ்துமஸின் போதும் என்னோடு இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நானும் அவர்களுடன் சிரித்துக் கொண்டிருப்பேன்.

ஆனால் பூமிக்குள் கண்ணுக்குத் தெரியாமல் நீரோட்டம் இருப்பதுபோல், என்னுள் ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் எப்படி இருக்கும் எனக்குத் தெரியாது.?


சித்ராலயா இதழில் வெளியான சந்திரபாபு பற்றிய இந்த கட்டுரை, ஆவணக்காப்பகம் பிரிவில் பேசாமொழியில் வெளியிடப்படுகிறது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </