சுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்
சம்பவம் - 01
பால்ய வயதில் தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சுரையா, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறாள். கணவன் சிறைக் காவலனாக இருப்பதனால், அவன் மீது முழு ஊராருக்கும் ஒரு அச்சமிருக்கிறது. அவன் ஒரு பதினான்கு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். சுரையா அதனைத் தீவிரமாக மறுக்கிறாள். கணவன் அவளைச் சித்திரவதைப்படுத்துகிறான். அவள் தனது தாய் வீட்டுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறாள். கணவனாலும், அவனை எப்பொழுதும் உசுப்பி விட்டுக் கொண்டேயிருக்கும் அவனது நண்பனாலும் சுரையாவின் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு ஏவப்படுகிறது. ஊர்ப் பெரியவர்கள் விசாரிக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்களின் தீர்ப்பு சுரையா உயிருடன் வாழத் தகுதியற்றவள் என்கிறது. கணவன் திருமணம் முடிக்கக் காத்திருந்த சிறுமி அவனைத் திருமணம் முடிக்க மறுத்து விடுகிறாள். நிரபராதியான சுரையா ஊராரால் கல்லெறிந்து கொல்லப்படுகிறாள். குழந்தைகள் அநாதைகளாகின்றனர்.
சம்பவம் - 02
தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட லக்ஷ்மி, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறாள். கணவன் அந்த ஊர்ப் பள்ளியின் மேலதிகாரியாக இருப்பதனால், அவன் மீது மொத்த ஊராருக்கும் ஒரு அச்சமிருக்கிறது. அவன் லக்ஷ்மியின் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். லக்ஷ்மி அதனைத் தீவிரமாக மறுக்கிறாள். கணவன் அவளைச் சித்திரவதைப்படுத்துகிறான். அவள் தனது தாய் வீட்டுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறாள். கணவனாலும், அவனை எப்பொழுதும் உசுப்பி விட்டுக் கொண்டேயிருக்கும் அவனது நண்பனாலும் லக்ஷ்மியின் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு ஏவப்படுகிறது. ஊர்ப் பெரியவர்கள் விசாரிக்கிறார்கள். மன உளைச்சலுடனான உடல்நலக் குறைவின் காரணமாக லக்ஷ்மி இறந்து விடுகிறாள். கணவன் இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்கிறான். கணவனின் இன்னுமொரு கொடூர முகம் முழு ஊருக்குமே தெரியவரும் பொழுது, ஊர்ப் பெரியவர்களின் தீர்ப்பு கணவன் உயிருடன் வாழத் தகுதியற்றவன் என்கிறது. கணவன் திருமணம் முடித்திருந்த பெண் அவனை விட்டுப் போய் விடுகிறாள். குற்றவாளியான கணவன் ஊராரால் ஆற்றில் மூழ்கிச் சாக நிர்ப்பந்திக்கப்படுகிறான். குழந்தைகள் அநாதைகளாகின்றனர்.
|
நமது இந்தியத் தமிழ்த் திரைப்படங்களை விமர்சிப்பவர்கள், ஒரு தமிழ்த் திரைப்படத்தை விமர்சிக்க முன்பு, அத் திரைப்படத்தின் மூலத் தழுவல் எங்கிருந்து பெறப்பட்டிருக்கிறது எனத் தேடத் தொடங்கி விடுவார்கள். அவ்வாறான தேடலின் போது ஏதேனும் ஓரிரு ஒற்றுமைகளோடு வேற்று நாட்டுப் படமொன்று, அத் தமிழ்த் திரைப்படத்தோடு ஒத்துப் போகும் எனில், அந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குனர் அவ்வளவுதான். அத்தோடு அவர் பாடு முடிந்தது. உலகத் திரைப்படத்தை அடியொற்றி, தமிழ்த் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் என்ற குற்றச்சாட்டை மிகப் பலமாக இயக்குனர் மீது ஏவுவார்கள் விமர்சகர்கள். இது இந்தியத் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களினதும், இயக்குனர்களினதும் இன்றைய நிலை.
நான் முதலில் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களும் இரண்டு புகழ்பெற்ற திரைப்படங்களின் மூலக் கதைகள். முதலாவது சம்பவம் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்ற 'The Stoning of Soraya M.' எனும் ஈரானியத் திரைப்படத்தின் மூலக் கதை. இரண்டாவது சம்பவம் 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக் கதை. இரண்டு திரைப்படங்களுமே முழுமையாக ஒன்றுடனொன்று ஒத்துப் போகின்றன. தாய்க்கு, குழந்தைகள் மீதுள்ள பாசமும் கூட இரண்டு திரைப்படங்களிலும் சொல்லி வைத்ததுபோல பூங்காங்களில் பூக்களோடு சேர்த்து படமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், ஈரானியத் திரைப்படமானது, ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் இரண்டுக்கும் பொதுவான அம்சங்கள் பல உள்ளன.
1. கதை
2. கதை நிகழும் பின் தங்கிய கிராமம்
3. ஊரார் கணவன் மீது வைத்திருக்கும் அச்சம்
4. கையறு நிலையிலிருக்கும் உத்தமியான மனைவி
5. கணவனின் இரண்டாம் திருமணம் மீதுள்ள மோகம்
6. கணவனின் இரண்டாம் திருமணத்துக்கு தடையாக இருக்கும் மனைவி
7. கணவனை உசுப்பி விடும் நண்பன்
8. கணவன் தனது மனைவி மீது ஊர் முழுவதுமாகக் கிளப்பி விடும் அவளது ஒழுக்கம் குறித்தான அவதூறு
9. ஊராரின் தீர்ப்பு, ஊரார் இணைந்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதல்
10. பிரதான கதாபாத்திரத்தின் மரணம்
11. கதாநாயகியின் மரணத்தின் பின்னர் வெளிவரும் உண்மை
12. உதிரிப் பூக்களாகும் குழந்தைகள்
'உதிரிப் பூக்கள்' திரைப்படமானது இக் காலத்தில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருந்தால், நான் மேலே கூறியுள்ள ஒப்பிடல்களோடு இன்னும் பொதுவான பலவற்றைக் கூறி, இயக்குனர் மகேந்திரனின் இத் திரைப்படமானது, ஒரு உலகத் திரைப்படத்தின் தழுவல் எனப் பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் பலராலும் எழுப்பப்பட்டிருக்கும். நல்ல வேளை, அவ்வாறான சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் 'உதிரிப் பூக்கள்' 1979 இல் வெளிவந்திருக்கிறது. ஈரானியத் திரைப்படம் 2008 இல் வெளிவந்திருக்கிறது.
-------------------------------------------------------
விடிகாலையிலேயே சுரையாவின் சிற்றன்னை ஸஹ்ரா தனது வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். வரண்ட பாறைகளினிடையே அவர் செல்லும் பிரதான பாதையில் ஒரு கார் விரைவாகச் செல்கிறது. வனத்தின் எல்லையில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் கரையில் ஓநாயொன்று எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. சிற்றன்னை அதனைக் கல்லெறிந்து துரத்துகிறார். ஓநாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த எலும்புகளை எடுத்து ஓடும் நீரில் கழுவுகிறார். பின்னர் தனது கரங்களினாலேயே குழியொன்றைத் தோண்டி அதற்குள் எச்சங்களையிட்டு மூடுகிறார். அதன் மீது அடையாளமிட்டு விட்டுப் பிரார்த்திக்கிறார். அவை முன் தினம் படுகொலை செய்யப்பட்ட சுரையாவின் எலும்புகள்.
வேகமாகச் சென்ற கார் இடைவழியில் பழுதடைந்து நின்று விடுகிறது. அந்தக் காரைத் திருத்துவதற்காக இன்னுமொரு வாகனத்தின் உதவியோடு அருகிலிருக்கும் கிராமத்துக்கு எடுத்துவருகிறார் அதனைச் செலுத்தி வந்த பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர். அது சுரையாவின் கிராமம். அந்த அந்நியர் பிற தேசத்து ஊடகவியலாளர் என அறியும் சுரையாவின் சிற்றன்னை இரகசியமாக தனது சகோதரியின் மகளான சுரையாவின் கதையை அவரிடம் கூறி அதனை ஒலிப்பதிவு செய்து முழு உலகுக்கும் தெரியப்படுத்தும்படி வேண்டுகிறார். அதனைச் செய்கிறார் ஊடகவியலாளர். சிற்றன்னை கூறுவதன் வழியாக சுரையா சம்பந்தப்பட்ட காட்சிகள் விரிகின்றன.
அந்த பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்தான் Freidoune Sahebjam என்பவர். 1990 இல் வெளிவந்த அவரது 'La Femme Lapidée' எனும் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு 2008 ஆம் ஆண்டு இயக்குனர் Cyrus Nowrasteh எடுத்த திரைப்படம்தான் 'The Stoning of Soraya M.' இந்தத் தொகுப்பும், திரைப்படமும் ஈரானில் தடை செய்யப்பட்டிருப்பதானது, அங்கு இன்றும் கூட இவ்வாறான கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைத்தான் உணர்த்துகிறது.
முப்பது வயதுகளில் இருக்கும் சுரையா நான்கு குழந்தைகளின் தாய். இலஞ்சம் வாங்கிக் கொண்டு சிறைக்கைதிகளைத் தப்பிச் செல்ல வைக்கும் சிறைக்காவலனான அவளது கணவனுக்கு ஊரில் எல்லோரும் அஞ்சுகின்றனர். சிறைக்கைதியாக இருக்கும் தனது தந்தையைப் பார்வையிட வரும் ஒரு பதினான்கு வயதுச் சிறுமியின் மீது அவனது பார்வை விழுகிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அதற்கு சுரையாவின் அனுமதி தேவைப்படுகிறது. அவள் தனது குழந்தைகளின் நலனை மனதிற் கொண்டு அதற்கு உடன்பட மறுக்கிறாள். தெருவழியே அவளை அடித்து உதைக்கிறான் கணவன். சுரையாவின் சிற்றன்னை ஸஹ்ரா அவளைக் காப்பாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
தனது குழந்தைகளின் உணவுத் தேவைகளுக்காக வேண்டி அயல்வீடொன்றில் வீட்டு வேலைகள் செய்து வருகிறாள் சுரையா. அந்த வீட்டில் மூளை வளர்ச்சியற்ற ஒரு சிறுவனும், அவனது வயது முதிர்ந்த தந்தையும் மாத்திரமே வாழ்ந்து வருகிறார்கள். சிறுவனைப் பார்த்துக் கொள்வதும், உணவு சமைத்துக் கொடுப்பதும் அவளது தினசரி வேலைகளாக இருக்கின்றன. தினந்தோறும் பகலில் அதனைச் செய்து வரும் சுரையா மீதான அவதூறுகளைக் கிளப்பி விடுகிறான் அவளது கணவன். அத்தோடு சுரையாவின் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதற்காக, அம் முதியவனை மிரட்டிப் பணிய வைக்கிறான். ஊரார் அந்தப் படுதூறுகளை நம்புகிறது. சுரையா மீது கல்லெறிந்து கொல்லப்பட தீர்ப்பாகிறது. வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்ட சுரையா, சுற்றிவர ஆண்கள் சூழ்ந்திருக்கும் மைதானத்தின் நடுவே அழைத்து வரப்படுகிறாள். பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட பின், ஒரு குழிக்குள் இறக்கப்பட்டு, இடுப்பு வரை மண்ணால் மூடப்படுகிறாள். முதல் கல்லை எறிய சுரையாவின் தந்தை நிர்ப்பந்திக்கப்படுகிறார். இரண்டாவதை கணவனும், மூன்றாவதாக அவளது சிறு வயது மகன்களும் கற்களை எறிகின்றனர். தொடர்ந்து வரும் அந்த ஊர் ஆண்கள் எறியும் கற்கள் அப்பாவியான அவளைக் கொன்று விடுகின்றன.
இவ்வாறான கொடுமைகளுக்கும், அநீதங்களுக்கும் எதிராக முன்னாள் ஈரானியத் தூதுவரின் மகனான ஊடகவியலாளர் Freidoune Sahebjam குரல்கொடுத்து வருகிறார். இவர், சுரையாவின் சிற்றன்னையிடம் கேட்டறிந்து கொண்ட இந்த உண்மைச் சம்பவத்தை தனது தொகுப்பின் மூலம் உலகறியச் செய்ததைத் தொடர்ந்து இவ்வாறான தண்டனைகளுக்கெதிரான கோஷங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. எனவே ஈரானிய அரசு அத் தொகுப்பை தடை செய்திருக்கிறது. ஈரானில் இடம்பெற்று வரும் பழமைவாத தண்டனைகளை உலகுக்கு வெளிக் கொண்டுவந்த முதல் ஊடகவியலாளராக அறியப்படும் இவர், ஈரான் - ஈராக் யுத்தத்தின் போது எட்டு வயது சிறுவர்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரங்களோடு நிரூபித்ததன் காரணமாக ஈரானின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.
இத் திரைப்படத்தில் பிரபல அமெரிக்க நடிகர் Jim caviezel ஊடகவியலாளராகவும், நடிகை Mozhan marnò சுரையாவாகவும், நடிகை Shohreh aghdashloo சிற்றன்னை ஸஹ்ராவாகவும், நடிகர் Navid negahban சுரையாவின் கணவனாகவும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் Cyrus Nowrasteh இன் இத் திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
-------------------------------------------------------
தமது இலாபங்களுக்காக வேண்டி பெண்களின் மீது குற்றங்களைச் சுமத்துவது ஆண்களுக்கு இலகுவாகவே உள்ளது. அது உலகில் எப்பாகத்தில் இருந்தாலும் சரி. எந்தச் சமூகத்தில் இருந்தாலும் சரி. பெண்ணின் மீது, அவளது ஒழுக்கத்தைக் குறிப்பிட்டு அவதூறுகளைக் கிளப்புவதன் மூலம் அவளை நிந்தனைக்குள்ளாக்கி ஆண் வெற்றியடைந்து விடுகிறான். தனது விருப்பத்துக்கு மாற்றமாக பெண் எழுந்து நிற்கையில், அவளை அடக்கி விடவும், பணிய வைக்கவும் ஆண், அவளது ஒழுக்கம் குறித்தான சந்தேகங்களைக் கிளப்பி விடுகிறான். ஒரு பெண்ணுக்கு எவ்வாறான மன உளைச்சல்களை அவை ஏற்படுத்துமென அவனுக்கு நன்றாகத் தெரியும்.
இயக்குனர் மகேந்திரனின் 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்திலும் இது துல்லியமாகக் காட்டப்பட்டிருக்கிறது. லக்ஷ்மியின் கணவன் சுந்தர வடிவேலு, அவளது ஒழுக்கத்தின் மீது அவதூறுகளைக் கிளப்புவதும், சுந்தர வடிவேலின் தாய், தனது மகனுக்கு இரண்டாவதாக மணமுடித்து வைக்கப் பெண் பார்க்கச் சென்றிருக்கையில் அந்தப் பெண்ணைப் பற்றி அவளது தந்தையிடமே கூறி, அவர்களைச் சம்மதிக்க வைப்பதுவும் இதனை வெளிப்படுத்துகிறது.
1979 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள மிகச் சிறந்த திரைப்படங்களிலொன்றாக 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தையும் தயங்காது வகைப்படுத்தலாம். இந்தியத் தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையில், கதாபாத்திரங்கள் எனும்போது கதாநாயகனும், கதாநாயகியும் மிக மிக நல்லவர்களாகவும், வில்லன் மிகக் கொடியவனாகவும் வலம் வருவர். அவர்கள் நாம் தினந்தோறும் சந்திக்க நேரும் நிஜமான மனிதர்களுக்கு எல்லாவிதத்திலும் அப்பாற்பட்டு நிற்பர்.
ஆனால் 'உதிரிப் பூக்களை'ப் பொறுத்தவரையில், இயக்குனர் மகேந்திரனின் பாத்திரப் படைப்புக்கள் அனைத்துமே யதார்த்தமானவை. அக் காலகட்டத்தில் வெளிவந்த பல திரைப்படங்களில் உள்ளதுபோல போலியான மச்சங்களை ஒட்ட வைத்து வில்லத்தனத்தை முகத்திலும், தோற்றத்திலும் காட்ட வைக்காமல், தனது நடவடிக்கைகளில் மறைத்து வைத்திருக்கும் கதாநாயகனைப் பார்க்கும்போது பெரிதாக நமக்கு அவர் மீது கோபம் எழுவதில்லை. ஏனெனில், நாம் அவ்வாறானவர்களை தினந்தோறும் நேரில் பார்க்கிறோம்; சந்திக்கிறோம். முகத்தையும், புன்னகையையும், நடை உடை பாவனைகளையும் பார்க்கும்போது மிக நல்லவர்களாகத் தெரிபவர்கள், மறைவில் என்னென்ன மோசமான செயல்களைச் செய்து வருகிறார்களென பார்த்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வாறானாவர்களுள் ஒருவராகவே சுந்தர வடிவேலைப் பார்க்க முடிகிறது. கதாநாயகி லக்ஷ்மியும் கூட சாதாரணமானவள்தான். 'குழந்தைகள் மட்டும் இல்லைன்னா, நான் எப்பவோ ஓடிப் போயிருப்பேன்' என அவள் தனது கணவனிடம் கூறுவது யதார்த்தமானது. கணவனின் நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்லவிழையும் சாதாரணப் பெண்ணாக அங்கு அவள் தோற்றம் கொள்கிறாள்.
வில்லத்தனம் கலந்த பாத்திரப் படைப்பு என்ற போதிலும், அதி தீவிர நடிப்பை வெளிப்படுத்தாமல் மிக இயல்பாக அதனை பார்வையாலும், புன்னகையாலும் வெளிப்படுத்துவது சிரமமானது. அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சுந்தர வடிவேலுவாக நடித்திருக்கும் நடிகர் விஜயன். லக்ஷ்மியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஸ்வினியின் முகத் தோற்றமே அவர் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இயக்குனர் மகேந்திரன் திரைக்கதையை எழுதும்போதே இவ்வாறான உருவத்தைத்தான் கற்பனை செய்திருக்கக் கூடும். ஒரு குடும்பப் பெண்ணுக்குரிய சர்வ இலட்சணங்களும் பொருந்தியுள்ள அஸ்வினியின் முகத்திலேயே தோன்றும் ஒரு வித சாந்தம், கவலை, ஆழ்ந்த யோசனை ஆகியன அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகவும் வலுச் சேர்த்திருக்கிறது.
அவரைப் போலவே அவரது தங்கையாக நடித்திருக்கும் மதுமாலினி, சாருஹாசன், சரத்பாபு, பிரேமி, இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் பெண், குழந்தை நட்சத்திரங்கள் என திரையில் தோன்றியிருக்கும் அனைவருமே தமது பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் எனும்போது, இவர்களை இவ்வாறு நடிக்க வைத்த இயக்குனர் மகேந்திரனைத்தான் முதலில் பாராட்டத் தோன்றுகிறது. அவ்வாறே ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
'உதிரிப் பூக்கள்' திரைப்படம் வெளிவந்து இப்பொழுது மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன. பலரது வாழ்க்கைக்கும் பாடங்களைப் புகட்டும் விதமாக உலகம் முழுவதிலும் இவ்வாறான ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன; வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் நான் மேற்சொன்ன இரண்டு திரைப்படங்களிலும் இயக்குனர் சுட்டிக் காட்டியிருக்கும் அநீதங்கள் இன்றும் கூட இரகசியமாகவும், வெளிப்படையாகவும், உலகம் முழுவதிலும், எல்லாச் சமூகங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பெற்றோரின் தவறுகளாலும், பொடுபோக்கான நடத்தைகளாலும், தப்பான ஆசைகளாலும் பாதிக்கப்படுவதெல்லாம் அவர்களிலிருந்து உதிர்ந்துகிடக்கும் அவர்களது குழந்தைப் பூக்கள்தான். அந்த உதிரிப் பூக்கள்தான் தனது தாய் மீது கற்களையும் எறிகின்றன. தந்தையை நீராட அனுப்பி விட்டு அநாதையாக வழிதவறிப் பார்த்துக் கொண்டுமிருக்கின்றன.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |