இதழ்: 6, நாள்: 15 - வைகாசி -2013 (May)
   
 
  உள்ளடக்கம்
 

மகேந்திரனின் முள்ளும் மலரும் – நினைத்திராத ஒரு ஆரம்பம் -வெங்கட் சாமிநாதன்

--------------------------------
முள்ளும் மலரும் சில பகிர்தல்கள் - பாஸ்கர்சக்தி
--------------------------------
முள்ளும் மலரும்... - எஸ். ஆனந்த்
--------------------------------
முள்ளும் மலரும்... - சுஜாதா தேசிகன்
--------------------------------
முள்ளொன்று மலர்ந்தது. - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
ஒருபோதும் வாடாத 'மலர்' - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
முள்ளும் மலரும் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
முள்ளும் மலரும் - முள்ளில் மலர்ந்த மலர்....- அருண்
--------------------------------
   

   


முள்ளும் மலரும்...

- சுஜாதா தேசிகன்


ப்ரியா படம் நேற்று இரவு 11மணிக்கு சன் டிவியில் ஆரம்பித்த போது ஆர்வமாக பார்க்க உட்கார்ந்தேன். வசந்தாக வந்த அந்த நடிகரை பார்த்த போது ஸ்ரீதேவியை நினைத்து வருத்தப்பட்டேன். ரஜினி எப்படியும் அவரை காப்பாத்திவிடுவார் என்று டிவியின் மெயின் சுவிட்சை அணைத்த போது ஒரு மாசம் முன்பு அருண் "முள்ளும் மலரும் பார்த்துவிட்டு உங்க அப்பிராயத்தை எழுதி தாங்க" என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

முள்ளும் மலரும் நான் சின்ன வயசில் பார்த்திருக்கிறேன். எப்போது என்று நினைவில்லை ஆனால் சரத்பாபு பாடும் 'செந்தாழம் பூவில்..." மட்டும் நினைவு இருக்கிறது. சின்ன வயசு கருப்பு வெள்ளை ஃபோட்டோவை பார்க்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். அதே மகிழ்ச்சி எனக்கு நேற்று முள்ளும் மலரும் படம் பார்க்கும் போது ஏற்பட்டது.

இந்த கதையை தற்போது எடுக்க வேண்டும் என்றால் யாரும் தங்கள் கை காசை போட மாட்டார்கள். அதே போல ரஜினி இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்று தெரியாது. கதை என்று பெரிசாக ஒன்றும் இல்லை, ஆனால் பாத்திரப்படைப்பு, காட்சிகள் என்று போகிற போக்கில் கதையை சொல்லியுள்ளார்கள். சிவாஜி படங்களில் வருவது போல உதடு துடிக்க அழுவது மாதிரியும், பெரிய பெரிய வசனங்கள் எதுவும் இல்லாமல், அண்ணன் தங்கை பாசம் என்ற ஒரு சின்ன கருவை படம் முழுக்க சொல்லியுள்ளார்கள். சரத்பாபுவை சுலபமாக வில்லனாக காட்டியிருக்கலாம் ( ரஜினியின் தங்கையை ஏமாற்றுவது மாதிரி ) ஆனால் அப்படி செய்யாமல் விட்டது தான் இந்த சினிமாவிற்கு பிளஸ்.

ஆரம்ப காட்சியில் ரஜினியின் தங்கையாக வரும் அந்த சின்ன குழந்தையின் கண்களில் தெரியும் சோகம் எப்படி கிடைத்தது ? அந்த சோகத்தை சாலையில் பிச்சைகாரர்களின் குழந்தைகளிடம் தான் நான் பார்த்திருக்கிறேன்.

இன்று டைரக்டர்கள் படத்தில் நுணுக்கமான சில விஷயங்களை செய்யும் போது பாராட்டுகிறோம். ஆனால் இந்த படத்தை பார்க்கும் போது பல நுணுக்கமான விஷயங்களை கவனித்தேன். உதாரணத்துக்கு - ரஜினியை பற்றி தப்பாக சரத்பாபுவிடம் சொல்லும் தன் சக ஊழியரை போட்டு அடித்துவிட்டு தன் நண்பர்களுடன் தெருவில் நடந்து வரும் போது அவர் தங்கை(ஷோபா) ஒளிந்துக்கொண்டு பார்ப்பார். ரஜினி கேஷுவலாக தெருவுல் சாதாரணமாக பேசிக்கொண்டு போவார். அதில் வரும் அந்த வசனங்கள், அப்பறம் ரஜினி தூரமாக போகும் போது ஒலி fade out ஆவது எல்லாம் 'அட' போட வைக்கிறது. இதை 1978ல் யாராவது கவனித்தார்களா என்று தெரியாது.

அடுத்து ரஜினி ரஜினியாக நடிக்காமல், காளி என்ற கதாபாத்திரமாக நடித்தது. தேவை இல்லாமல் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது, பஞ்ச் வசனம் என்று எதுவும் இல்லாமல் டைரக்டர் சொல்லுவதை செய்தது இந்த படத்துக்கு பலம். இந்த கதாபாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும், படத்துக்கு பாதிப்பு வந்திருக்காது - very well crafted screenplay.

அதே போல எடிட்டிங் என்று பார்த்தால் செந்தாழம் பூவில் பாடலில் ஷோபாவின் முகபாவங்களை பொருத்தியது. குறிப்பாக 'ராஜகுமாரி' என்று வரும் இடத்தில். பல இடங்களில் பின்னணி இசை இந்த படத்தில் கிடையாது ஆனால் வரும் இடங்களில் தனியாக தெரியாமல் படத்துடன் கலந்து இருக்கிறது.

ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. அவரின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல வேண்டும் என்றால் உலகம் உருண்டை என்று சொல்லுவது போல. பல இடங்களில் ஷோபாவை ஸ்பெஷலாக தன்னுடைய கேமராவில் கவர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். செந்தாழம் பூவில் பாடல் கடைசி சரணத்தில் வரும் சில காட்சிகள் 'அடி பெண்ணே என்ற பாடலில் வரும் காட்சிகளே இதற்கு சாட்சி. கிராமத்து பெண்ணாக வரும் ஷோபா திடீர் என்று ஷாம்பு போட்ட தலையுடன் பூக்களுக்கு முத்தம் கொடுத்து சினிமா கதாநாயகியாக மாறிவிடுகிறார்.

வெண்ணீர் ஆடை மூர்த்தி வரும் காட்சிகளில் ஒரு படுக்கையும், அடுத்தவன் பெண்டாட்டியும் கூட வந்துவிடுகிறது. அடுத்தவன் பெண்டாட்டியை வைத்திருக்கும் ஒருவருக்கு பாசமிகு அண்ணன் எப்படி தன் தங்கையை கொடுக்க முன் வந்தார் என்பது ஒரு நெருடல்.

நாவலை படம் எடுக்கும் போது கதையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு அதை எடுக்க வேண்டும். இந்த நாவலை படித்ததில்லை ஆனால் மகேந்திரன் கதையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு எடுத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதே போல கதையை கொஞ்சம் மாற்றியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

"“முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை." - என்று மகேந்திரன் சொல்லியுள்ளார் என்ற தகவலை பார்த்தேன்.

வசனங்கள், மேதாவிதனமாக இல்லாமல் படம் முழுவதும் இயல்பாக இருக்கிறது (மேதாவிதனம் இருந்தால் சில சமயம் செயற்கை தனமும், நாடகத்தன்மையும் கலந்துவிடுகிறது.) அது எதுவும் இந்த படத்தில் இல்லை. நிச்சயம் சினிமா எடுக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

கவர்ந்த மேலும் சில விஷயங்கள்:
படம் அரம்பிக்கும் போது, என்னை கவர்ந்தது அதனுடைய டைட்டில் கார்ட். டைட்டில் கார்டில் பலருடைய பேர் இருந்தது என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அதை முழுவதும் படிக்க அவகாசம் தருகிறார்கள்.

படம் முடிந்தவுடன் "அண்ணன் தங்கை உறவு... " என்று ஏதாவது போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். "நன்றி" என்று போட்டு முடித்துவிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </