முள்ளும் மலரும் சில பகிர்தல்கள்
முள்ளும் மலரும் திரைப்படம் வெளியானபோது நான் பதின்வயதுச் சிறுவன். எல்லா சினிமாக்களையும் வியந்து ரசிக்கும் பருவம். சினிமாவுக்கு கூட்டிப் போகச் சொல்லி வீட்டில் அழுது அடம்பிடிப்பவனாக இருந்த காலம். அப்போது பார்த்து ரசித்த பல படங்களை இப்போது கேடிவியிலேயோ அல்லது முரசு தொலைக்காட்சியிலேயோ பார்க்கும் போது ஓரிரு காட்சிகளைக் கூட சகிக்க முடியவில்லை. நமது வயதும், வளர்ச்சியும் அறிதலும் பல பூச்சுகளையும் கற்பிதங்களையும் உதிர்த்து விடுகின்றன. ஒரு காலத்தில் படித்த புத்தகம் திரும்ப் படிக்கையில் இவ்வளவுதானா? எனும் உணர்வை ஏற்படுத்துகிறது. நானே எழுதி சிலாகித்துக் கொண்ட சில சிறுகதைகள் கூட இப்போது படிக்கையில் இதுக்காடா அவ்வளவு ஃபீல் பண்ணோம்! என்று வெட்கப்பட வைக்கின்றன.
|
இப்படியில்லாமல் பல காலம் தாண்டியும் ஒரு படைப்பை படிக்கும் போதோ பார்க்கும் போதோ புதுசான ஒரு அனுபவத்தை, வேறு விதமான பார்வையை, சட்டென மனதில் மூலையில் ஒரு உன்னத உணர்வை விதைக்கிற படைப்ப்புகள் மிக மிகக் குறைவுதான். காலம் கழித்துப் போட்ட பிறகு எஞ்சி நிற்கும் எக்காலத்துக்குமான படைப்புகள் என்று அவற்றைத்தான் நாம் கொண்டாடுகிறோம். அவ்விதமான படைப்புகளே காலம் தாண்டி வாழ்கின்றன. அவற்றை நாம் காவிய அந்தஸ்து கொடுத்து ரசித்து மகிழ்கிறோம். தமிழ் சினிமாவை பொறுத்த அளவில் முள்ளும் மலரும் சந்தேகமில்லாமல் ஒரு காவிய அந்தஸ்து பெறத் தகுதியான படைப்பு என்பது எனது உறுதியான நம்பிக்கை.
மதுரை அலங்கார் தியேட்டரில் ரிலீஸாகி இருந்தது முள்ளும் மலரும். அரிவாளோடு ரஜினி இருப்பது மாதிரி வரையைப்பட்ட கட் அவுட் நினைவில் இருக்கிறது. மாமா ஒருத்தர் அண்ணன் வகையறாக்களோடு என்னையும் படத்துக்கு கூட்டிப் போனார். அப்போது ரஜினியின் க்ரேஸ் உருவாகி செழிக்கத் துவங்கியிருந்த நேரம். ரஜினி வெத்திலை எச்சில் துப்புவதற்கெல்லாம் கைதட்டல் விழுந்த்து ஞாபகம் இருக்கிறது. பாட்டெல்லாம் நன்றாக இருந்தது. உற்சாகமாக பார்த்து விட்டு வந்தோம். அதைத் தாண்டி பெரிதாக எதையும் அந்த வயதில் உணரவில்லை.
ஆனால் வளர வளர அதன்பின் பலமுறை பல திரையரங்குகளிலும் சின்னதிரையிலும் தனியாகவும் நண்பர்களுடனுமாக ஏகப்பட்ட தடவை பார்த்து விட்டேன். இப்போது பார்த்தாலும் ரசித்து நெகிழ்ந்து பார்க்கிற ஒரு படமாகத்தான் முள்ளும் மலரும் இருக்கிறது.
|
திருவள்ளுவர் சொல்வாரே `நவில்தொறும் நூல் நயம் போல’ என்று...ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப்புது அர்த்தங்களையும் நயங்களையும் தருவதாக ஒரு சிறந்த நூல் இருக்கும் என்பது அதன் பொருள்...அது என்னைப் பொறுத்த மட்டில் முள்ளும் மலரும் திரைப்படத்துக்கு மிகவும் பொருந்துகிறது. அலங்கார் தியேட்டரில் பார்த்த பின் முள்ளும் மலரும் படத்தை பல்வேறு டெண்ட் கொட்டகைகளில் மோசமான பிரிண்டுகளாக சுமாரான ஒலி ஒளி அமைப்பில் பார்க்க நேர்ந்தது. மெல்ல மெல்ல அந்த படத்தின் நுட்பங்களை நான் உணரத் துவங்கி இருந்தேன். கல்லூரி முடித்த சமயம் தேனி அல்லிநகரம் ஃபாத்துமா தியேட்டரில் புத்தம் புதிய காப்பியாக முள்ளும் மலரும் மறுபடி ரிலீஸானது. நான் பரபரப்படைந்தேன்..நண்பர்கள் ஏழெட்டுப் பேருடன் போய் மறுபடியும் தியேட்டரில் அமர்ந்து பார்த்தேன். முழுமையாக ரசித்து புதிதாக பார்ப்பது போல் பார்த்தேன். மனித உணர்வுகளையும் சின்னச் சின்னச் சின்ன கோப தாபங்களையும் ஈகோவையும் நுட்பமாக காட்சியாக்கி இருந்த அந்த அழகு பிரமிக்க வைத்தது. நெகிழ வைத்தது.
சில படங்களுக்குத்தான் எல்லாமே கூடி வரும். கதை வசனம் இசை கேமரா லொகேஷன் பாத்திரங்களின் நடிப்பு என்று சினிமாவின் அனைத்து அமசங்களும் சிறப்பாக கூடி வந்த படம் முள்ளும் மலரும்...
இசை நடிப்பு ஆகியவை சிறப்பாக அமைந்த வேறு பல படங்கள் நம்மை இந்த அள்வுக்கு ஈர்த்தது இல்லையே, அப்படியெனில் முள்ளும் மலரின் சிறப்பு என்ன என்று யோசிக்கிறேன். அந்தப் படம் ஒரு வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் மிகுந்த நம்பகத்தன்மையுடன் சொல்கிறது என்பதே காரணமாக படுகிறது.
இந்த படத்தின் காளி பாத்திரம் வெகு நுட்பமானது. பொதுவாக தமிழ் சினிமாவின் பாத்திரங்கள் மேலோட்டமான பொதுத் தன்மையை கொண்டிருப்பவை. நுட்பங்கள் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. ஒருவன் ஹீரோ அதனாலேயே நல்லவனாக இருப்பான். தெரு நாய்க்கு பிஸ்கெட் போட்டு, கிழவிகளை ரோடு கிராஸ் பண்ணி விட்டு, முதல் மாச சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து அம்மாவிடம் தந்து விட்டு மனைவிக்கு மல்லிகைப் பூவும் அல்வாவும் வாங்கி வந்தால் முடிந்தது. அவன் ஒரு கேரக்டர். அப்படித்தான் பெரும்பான்மையான வகை மாதிரிகள் நம்மிடையே உலவிக்கொண்டிருந்தன. ஹீரோயின்களும் அவ்வாறே ஹீரோவை பார்த்து முதலில் ஓவராக கோபப்பட்டு பின்னர் ஓவராக வெட்கப்பட்டு கல்யாணமான பின்னர் ஓவராக அழுது என்று அதீதமாக இருப்பார்கள். அம்மாக்களையும் அப்பாக்களையும் பற்றியோ சொல்லவே வேண்டாம்.சினிமா பார்த்து பார்த்து அம்மா என்றால் பண்டரிபாய் அப்பா என்றால் மேஜர் சுந்தர்ராஜன் என்பது போன்ற இல்யூஷன்கள் எனக்குள் சிறுவயதில் ஏற்படுமளவுக்குதான் தமிழ் சினிமாவின் வகை மாதிரி கதாபாத்திரங்கள் இருந்தன.
|
காளி அவற்றிலிருந்து மாறுபட்டவன். தான் நம்புவது எல்லாம் சரி, தான் செய்வது எல்லாம் சரி என்று திடமாக நம்புகிறவன். வெறுமனே அப்படி நம்புகிறவனாக மட்டும் அவனைக் காட்டி இருந்தால் அவனும் ஒரு மேம்போக்கான கதாபாத்திரமாக மாறிப் போயிருக்கும் அபாயமுண்டு. ஆனால் மகேந்திரன் அவன் அப்படி ஆனதின் பின்னணியை உறுத்தாமல் உணர்த்தி இருக்கிறார். காளி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன். ஆனால் சுயமாக சம்பாதித்து தங்கையை வளர்த்து சமூகத்தில் ஒரு விஞ்ச் ஆபரேட்டர் எனும் நிலைக்கு முழுக்க முழுக்க தனது உழைப்பால் வந்து சேர்ந்தவன். வாழ்வில் நிறைய கசப்புகளை சந்தித்தவன்.
எவர் தயவுமின்றி சுயமாக வளர்ந்து ஒரு இடத்தைப் பிடித்த பெரும்பாலான ஆட்களிடம் இந்த கர்வமும்,தான் நினைப்பதுதான் சரி எனும் திடமான நம்பிக்கையும் இருப்பதை நான் பின்னாட்களில் நேரில் கவனித்திருக்கிறேன். தவிர்க்க முடியாமல் காளியுடன் அந்த இயல்புகளை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ஒரு பாத்திரம் இந்த அளவுக்கு நம்முள் ஆழமாக இறங்குவது என்றால் சும்மா இல்லை. அது வாழ்வின் சாரத்தை தன்னுள் கொண்டிருப்பதால்தான் இது சாத்தியமாகிறது என்று புரிந்தது.
முள்ளும் மலரும் படத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் அதனதனளவில் நேர்த்தியோடு சுவாரஸ்யமாக படைக்கப்பட்டிருக்கும். சாமிக்கண்ணுவின் மனைவியோடு வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு உறவு இருக்கும்.(கிராமப்புறங்களில் ஒரு வித கண்டும் காணாத தன்மையோடு இவ்விதம் அங்கீகரிக்கப்பட்ட உறவுகள் நிறைய உண்டு) ஒரு நெருக்கமான தருணத்தில் அவள் காளிக்கு உதவி செய்வதைப் பற்றி சொல்லி வேண்டாம் என்று அறிவுரை சொல்கையில் நீ எங்க நிக்கணுமோ அங்க நில்லு என்பார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
காளியின் கூட இருக்கும் சாமிக்கண்ணு ஓரிடத்தில் அவன் செஞ்சதுக்கும் நீங்க செஞ்சதுக்கும் ரொம்ப கரெக்ட்டுண்ணே...ஆமா அவன் அப்படி என்னண்ணே செஞ்சான்? என்று வெள்ளந்தியாகக் கேட்பார்.
காளியின் மனைவியாக வரும் ஃபடாஃபட் ஜெயலட்சுமி,எஞ்சினியர் சரத்பாபு என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக சித்தரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அந்த பாத்திரங்களுடன் நூறுச் சதவீதம் பொருந்திப் போயிருப்பது இப்படத்தின் சிறப்பு. கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதை நடைபெறும் பின்னணி. அந்த கிராமம். ஈபி ஸ்டேஷன். மேலும் கீழும் போய் வரும் விஞ்ச் என்று ஒரு வித்தியாசமான வாழ்வியல் சூழல் கொண்ட அழகிய பின்னணி முள்ளும் மலரும் பட்த்தின் மற்றொரு சிறப்பு.
ஒரு வசனகர்த்தாவாக எனக்கு மிகவும் பிடித்தவர் மகேந்திரன். இந்த படத்தில் காளி ஓரிடத்தில் சொல்வான். தன்னை எஞ்சினியர் வஞ்சித்து விட்டதாக நம்பி கோபத்தை அடக்கி பொருமலாகச் சொல்வான். ``பரவால்லை சார், உங்க இடத்தில நான் இருந்தாலும் இப்படிதான் நடந்துகிட்டிருப்பேன். நாமெல்லாம் கேவலம் மனுஷங்கதானே?”
மனிதனின் பொதுவான சிறுமைப் புத்தியை இதை விட செருப்பாலடிக்கிற மாதிரி சொல்ல முடியுமா என்ன?
காளி வறட்டுப்பிடிவாதக்காரன் இல்லை. அவனுக்குள் தங்கைக்கான ஒரு நெகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. அவளுக்காக அவன் இறங்கி வரும் சமரசப் புள்ளிதான் க்ளைமாக்ஸ்...ஊரில் அவனுக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் அவன் தங்கையின் நன்மைக்காக அவனுக்கு எதிராக நிற்பதும், தங்கைக்காகவே வாழ்கிற காளி அவனது தவறான முடிவின் காரணமாக தனிமைப் படுத்தப்படுவதும், மற்ற எவரையும் விட தன் அண்ணனின் மனம் நோகக் கூடாது என்பதற்காக மணக்கோலத்தில் அனைவரையும் உதறிவிட்டு அண்ணனிடம் ஓடி வரும் வள்ளியும் அவளது அருமை உணர்ந்து தன் பிடிவாதத்தை விலக்கிக் கொள்கிற அதே நேரம் `இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்’ என்று நேராக சொல்கிற காளியும்.....தமிழ் சினிமாவின் உச்சகட்ட காட்சிகளிலேயே வெறும் தாள ஒலியில் இளையராஜா கொடுத்திருக்கும் அற்புதமான இசைப் பின்னணியில் நிகழும் முள்ளும் மலரின் க்ளைமாக்ஸ் காட்சி நிஜமான காவியத்தன்மை கொண்டது.
இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்க்க முடியும். முதல் முறை பார்ப்பது போன்ற குதூகலத்தோடும் மன நெகிழ்ச்சியோடும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |