குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909
- லதா ராமகிருஷ்ணன் :: நன்றி: சிலம்பு 2002 |
மனித வரலாற்றில் ஒரு புதிய விடியலாக உதித்த இருபதாம் நூற்றாண்டில் உலகமெங்கிலுமுள்ள நாடுகள் பலவற்றிலும் மானுட வாழ்க்கையின் பல பிரிவுகளில் பெரிய அளவில் மாறுதல்கள் நிகழ்ந்தேறின. இந்த சீர்திருத்தங்கள், மறுமலர்ச்சிகள் முதலியவற்றை பதிவு செய்வதிலும், பிரதிபலிப்பதிலும் ஏன் தூண்டியெழுப்புவதிலும் கூட சினிமா முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு வெள்ளித்திரையில் அலுங்கி நலுங்கும் பிம்பங்களை உருவாக்கிய இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சக்திவாய்ந்த தொடர்பு சாதனமாக, பொழுதுபோக்கு சாதனமாக இந்த நூற்றாண்டில் உருவாகும் என்று யார் தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
பம்பாயில் புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடும் விதமாக எடிசனுடைய கைனெடோஸ்கோப்பில் (Projecting King to scope) இருபத்தைந்து படங்கள் காண்பிக்கப்பட்டது. அந்நிய நாட்டில் – உருவாக்கப்பட்டதான ஃபாத்திமா என்ற இந்திய நடனமும் அதில் ஒன்று. அதற்குப் பின்பு நாவல்டி, 120 உயிரூட்டப்பட்ட விசயங்களைக் கொண்ட புதிய பயாஸ்கோப்பை பெற்றது. தென்னாப்பிரிக்காவில் அப்போது நடந்தேறியிருந்த விசயங்களும் அவற்றில் அடங்கும். ட்ரான்ஸ்வால் போர் மற்றும் போர் முதலியவை சினிமாவுக்கான ஏராளமான விசயங்களை கொண்டிருந்தன. மக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவை பயாஸ்கோப்பில் பிரத்யேகமாக காட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து நம் நாட்டில் வெவ்வேறு வகையான நிழற்பட நிகழ்ச்சிகளின் பெயர்கள் அடிபடலாயின. அப்படிக் காண்பிக்கப்பட்ட படங்கள் பல தரப்பட்டவை. சில வெறும் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகள் அல்லது கவினுறு காட்சிகளாக இருந்தன. சில நடித்துக் காட்டப்பட்ட குட்டிக்கதைகளாக இருந்தன. ஆனால் இவையெல்லாமே இந்த புதிய ஊடகத்தின் பொழுதுபோக்கு சாதனத்தின் அளப்பரிய சாத்தியப்பாடுகளைப் புலப்படுத்துவதாக அமைந்தன. பின்னர் இது செய்திச்சுருள்கள், உண்மைச் சரித்திரங்கள் (Documentaries) மற்றும் கதை சொல்லித் திரைப்படங்கள் என்ற மூன்று பெரிய வடிவங்களை ஏற்றன.
|
1900 மத்தியில் F.B. தானாவாலா என்ற இசுலாமியர், மின்பொறியாளர் இத்தகைய சிறு படங்களை வாங்கித் திரையிடுவது என்பதைவிட்டு தானே தயாரிப்பதில் ஈடுபடத்தொடங்கினார். கல்பாதேவியில் இருந்து அவரது கடையில் திரைப்படக் காட்சிக்கருவி (Projector) ஒலிப்பதிவுக் கருவி முதலியன விற்கப்பட்டன. வசதி படைத்த மற்றும் உயர் குடிக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவற்றை வாங்கித் தங்கள் வீடுகளில் வைத்துக்கொண்டனர். அந்தஸ்து சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவும், தனியாக அல்லது தங்களுடைய உள்வட்ட மனிதர்களோடு அமர்ந்து பொழுதுபோக்கவும் அந்தக் கருவிகள் அவர்களுக்குப் பயன்பட்டன. சமயங்களில் வறட்சி நிவாரண நிதி முதலிய பொதுநலக் காரியங்களுக்குப் பணம் வசூலிக்கவும் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்ய இந்தக் கருவிகள் பயன்பட்டன.
தானாவாலாவுக்கு முந்தியே இந்தத் துறையில் ஈடுபட்ட சவேதாதா, 1901ல் தன்னுடைய செயல்பாடுகளை மறுபடியும் தொடங்கினார். டாக்டர் ஆர்.பி.பரஞ்பய் கேம்பிரிட்ஜிலிருந்து திரும்பியபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஒரு குறும்படமாக எடுத்தார். இந்தியாவில் உபயோகிக்கப்பட்ட மிக தொடக்கக்காலத் திரைப்படக்கருவியான பெயர் வாய்ந்த Lumier Gadget இவரிடத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்தது. இதைக்கொண்டு சிரா பஜாரிலுள்ள பார்ஸின நெருப்புக் கோயிலின் புன்நிர்மாணத்தைப் பற்றிய குறும்படமொன்றையும் 1901ம் ஆண்டு எடுத்தார். சவே தாதா எடுத்த குறும்படங்கள் எல்லாம் கெயிட்டி மற்றும் பிற வேறு திரையரங்குகளின் திரைப்பட நிகழ்ச்சிகளின் அங்கமாகத் திகழ்ந்தன.
அதே வருடம் ஹிராலால் சென் என்பவர் வங்காளத்தில் இந்தப் புதிய பொழுதுபோக்கு சாதனத்தின் சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டார். அவரும், அவருடைய சகோதரர் ஹிராலால் சென்னும் ராயல் பயாஸ்கோப்பின் கூட்டுரிமையாளர்கள். 1900 டிசம்பரிலிருந்து அவர்கள் சில அசாதாரண இறக்குமதி செய்யப்பட்ட படங்கள் கல்கத்தா க்ளாசிக் திரையரங்கத்தில் கண்காட்சியாகத் திரையிட்டு வந்தார்கள். இந்த இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய விசயங்கள் வங்காளத்தின் பிரபல மேடை நாடகங்களோடு காண்பிக்கப்பட்டன. இசை, நாடகம், அலிபாபா, குடும்பஞ்சார், துன்பியல் நாடகம், சரளா போன்ற கதைபாடல்களை நாடகங்களிலிருந்து படமாக்கினார். 1901 பிப்ரவரியில் இந்தப் படங்களும், அவை எவற்றிலிருந்து எடுக்கப்பட்டனவோ அந்த நாடகங்களும் ஒரே சமயத்தில் பார்வைக்கு தரப்பட்டு அதன் வழி மேடைக்கும் , திரைக்கும் இடையேயான ஒத்திசைவு காரணமாய் இந்தத் திரை வடிவம் மிகவும் பிரபலமாகியது.
|
ஹிராலால் சென் |
குறும்படங்களுக்கு கருப்பொருட்கள் ஏராளமாக இருந்தன. தில்லி தர்பார் மற்றும் முடிசூட்டு விழா ஊர்வலம் ஆகிய இரண்டும் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அப்பொழுது வங்காளத்தில் பஞ்சமும், கொள்ளை நோயும், பீடித்திருந்ததால் மேடை, திரை நிகழ்ச்சிகள் அதிகம் இல்லை. ஆனால் தில்லி தர்பார் பலரால் படமாக்கப்ப்ட்டது. சவே தாதாவும் அதில் ஒருவர். அதைப்போலவே ஏழாம் எட்வர்ட் மற்றும் அரசி அலெக்சாந்திரா ஆகிய இருவரின் முடிசூட்டு விழாவும் உலகமெங்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இவ்வாறாக சினிமா நிகழ்ச்சிகள் சில காலம் தர்பார் படங்களால் நிரப்பப்பட்டிருந்தன. ஸவே தாதாவும் இந்தப் படங்களை சென்னை, மங்களூர், கோவா, பெல்காம் எனப் பல ஊர்களுக்கு கொண்டு சென்றார்.
நன்றி: சிலம்பு 2002
உலகத் தமிழ் குறும்பட விழா மலர்
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |