வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சி. ஆர். சுப்பராமன் -3

பி.ஜி.எஸ். மணியன்  

ஏமாற்றங்கள் - எல்லார் வாழ்விலும் வருவதுதான்.

ஆனால் அதை எதிர்கொள்வது என்பது அது எப்படிப்பட்ட நேரத்தில் வருகிறது என்பதை பொறுத்தே அமைகிறது.

வாழ்க்கையில் அடிபட்டு ஒரு மாதிரி பக்குவம் அடைந்த நடுத்தர வயது அனுபவசாலிகளுக்கே அதை சாதாரணமாக எதிர்கொள்வது என்பது கடினம் என்கிறபோது இருபத்தொரு வயது இளைஞன் சுப்பராமனுக்கு அது இன்னும் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

முதல் படமான "செஞ்சு லக்ஷ்மி" 1941 இல் வெளிவந்து வெற்றிப் படமான போதும் வாய்ப்புகள் அப்படி ஒன்றும் வந்து குவிந்து விடவில்லை. (அந்தப் படத்தில் கூட அவருக்கு தனி இசை அமைப்பாளர் அந்தஸ்து கிடைக்கவில்லை. சின்னையா, எஸ். ராஜேஸ்வர ராவ் இருவரும் கூட அந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்கள்.)

காரணம் அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை. இரண்டாம் உலகப்போரின் காரணமாக படச்சுருள்கள் விநியோகத்தில் நிலவிய தட்டுப்பாடுகளின் காரணமாக திரைப்படத் துறையில் ஒரு தேக்கம் ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் எச்.எம்.வீ. நிறுவனத்தில் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்திய காரணத்தால் கிடைத்ததுதான் "உதயணன்" படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு. அதுவும் கிடைத்த வேகத்திலேயே கை நழுவிப்போனது.

சாதிக்கத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இருபத்தொரு வயது வாலிபனின் மனதுக்குள் எப்படிப்பட்ட வலி ஏற்பட்டிருக்கும். அதனை அவன் எப்படி எதிர்கொண்டிருப்பான் என்பது புரியாத புதிர்.

(சி.எஸ். ஜெயராமன் இசை அமைத்து வெளிவந்த "உதயணன்" படம் படுதோல்வி அடைந்தது என்பது நிஜம். பாகவதரின் இடத்தில் வேறு எவரையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது நிரூபணமானது. அந்தப் படத்தோடு ஜி.என்.பி. திரைப்படத்துறையை விட்டு நிரந்தரமாக விலகி கச்சேரி மேடைகளில் "துருவ" நட்சத்திரமாக பிரகாசிக்க ஆரம்பித்தார்).

அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் சி.ஆர். சுப்பராமனின் வாழ்க்கைப் பாதை எப்படி இருந்தது என்பதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை.

மறுபடியும் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1947 என்று தான் கூறவேண்டும். தெலுங்குப் பட உலகில் அவருக்கு அந்த வாய்ப்பை அளித்தவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா.

அவரது முதல் சொந்தத்தயாரிப்பான "ரத்னமாலா"வுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை சி.ஆர். சுப்பராமனுக்கு அளித்தார். "செஞ்சு லக்ஷ்மி"க்கு பாடல், வசனம் எழுதிய சமுத்ரால ராகவாச்சர்யா தான் "ரத்னமாலா"வுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆகவே சுப்பராமனின் வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரண கர்த்தா இவர் தான் என்று ஊகிக்க இடம் இருக்கிறது.

சுப்பராமன் இசை அமைத்த பெரும்பாலான தெலுங்குப் படங்களுக்கு பாடலாசிரியர் சமுத்ரால ராகவாச்சர்யா தான் என்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

ரத்னமாலா படம் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி சுப்பராமனுக்கு ஒரு புதிய பாதையை திறந்து வைத்தது. அதன் காரணமாக பானுமதியின் "பரணி பிக்சர்ஸ்" நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரானார் சி.ஆர். சுப்பராமன்.

ரத்னாமாலாவில் வாய்ப்பு வந்த நேரம் சுப்பராமனின் வாழ்வில் நல்ல நேரமாக இருந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் வெளிவந்த "பக்த கபீர்" என்ற கன்னடத் திரைப்படத்துக்கும் இசை அமைத்த சி.ஆர். சுப்பராமன் தன்னிடம் இசை பயின்று வந்த மாணவி பி. லீலாவை சின்னவயது கபீருக்காக பாடவைத்தார்.

அவரை உதறித் தள்ளிய தமிழ்ப் பட உலகிலும் அவருக்கு புனர்வாழ்வு தேடி வந்தது.

அந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்து அந்தச் சாதனையாரின் கணக்கை ஆரம்பித்து வைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர் தான்.

25 -4-1947 அன்று விடுதலையான தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சொந்தப்படங்கள் தயாரிக்க முற்பட்டபோது அவர்கள் இருவரின் நினைவுக்கு வந்த இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன்தான்.

ஆம். எந்த பாகவதரின் படத்துக்கு இசை அமைக்கும் போது வாய்ப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பாக சுப்பராமன் இழந்தாரோ அதே பாகவதரின் படத்தின் மூலம்தான் அவர் தமிழ்ப் பட உலகுக்குள் வலது காலெடுத்து வைத்தார்.

பாகவதர் சொந்தமாக துவங்கிய "நரேந்திரா பிக்சர்ஸ்" சார்பாக எடுக்கப்பட்ட "ராஜ முக்தி" படத்தோடு தான் சுப்பராமனின் புதுக்கணக்கு தமிழ்ப் பட உலகில் தொடங்கியது.

புனேயில் உள்ள பிரபாத் ஸ்டூடியோவில் "ராஜமுக்தி" தயாரானது. இந்தப் படத்தில் தியாகராஜ பாகவதருடன் வி.என்.ஜானகி, பி. பானுமதி, எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்ரபாணி ஆகியோரும் நடித்தனர்.

ரெகார்டிங் ஸ்டுடியோவில் பாபநாசம் சிவன் எழுதிய பாடலை மெட்டுப் போடுவதற்காக படிக்க ஆரம்பித்தார் சுப்பராமன்.

"உன்னை அல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா" -

அடுத்த சிலநிமிடங்களில் சாரமதி ராகத்தில் பாடல் டியூன் செய்யப்பட்டு பாகவதர் பாட ஒலிப்பதிவாகிவிட்டது. (http://www.youtube.com/watch?v=S7rXRnnAjXI).
அதே போல "மானிட ஜன்மம்" என்ற கமாஸ் ராகப் பாடலையும் பாகவதரைப் பாடவைத்தார் சுப்பராமன். இரண்டு பாடல்களும் வெகுவாகப் பிரபலம் ஆகி சுப்பராமனை வெற்றிச் சிகரத்தில் ஏற வைத்தன.

இந்தப்படத்தில் பாகவதருடன் இணைந்து டூயட் பாடும் வாய்ப்பை முதலில் தனது சிஷ்யையான பி. லீலாவுக்கே கொடுத்தார் சுப்பராமன். அவருக்கு பாடல்களையும் சொல்லிக்கொடுத்து விட்டார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் புனே பயணம் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை பி. லீலாவுக்கு ஏற்பட்டது. ஆகவே அவருக்கு பதிலாக ஒரு புதிய பாடகி அந்தப் படத்தில் அறிமுகமானார். அவர் தான் எம். எல். வசந்தகுமாரி. ஆம். சி.ஆர். சுப்பராமனைப்போலவே எம்.எல்.வி.க்கும் "ராஜ முக்தி"தான் முதல் படம். அவர் பாடி ஒலிப்பதிவான முதல் பாடல் பாகவதருடன் இணைந்து பாடிய "என்ன ஆனந்தம்" என்ற சிம்மேந்திர மத்யம ராகத்தில் அமைந்த பாடல்.

http://us.dada.net/music/mlvasanthakumari_mkthyagarajabhagavathar/enna-anandam_1350710m

தொடர்ந்து பாகவதருடன் இணைந்து "இங்கும் அங்கும் எங்கும் இன்பமே" என்ற மத்யமாவதி ராகப் பாடலையும் சுப்பராமனின் இசையில் பாடினார் எம்.எல்.வி. . இவை அல்லாமல் "குலக்கொடி தழைக்க திருவருள் கடைக்கண் பாராய்" என்ற ராமப்ரியா ராகத்தில் அமைந்த பாடல், "ஆராரோ நீ ஆராரோ" என்று யமன் கல்யாணியில் அமைந்த தாலாட்டு என்று அந்த முதல் படப் பாடகியை முத்தான பாடகியாக அடையாளம் காட்டும் வண்ணம் சி.ஆர். சுப்பராமன் பாடல்களைத் தந்தார் என்றால் அது மிகையாகாது. இந்தப் படத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி தோடி ராஜரத்தினம் பிள்ளை பத்து நிமிடங்கள் நாதஸ்வரம் வாசித்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் அருமையான பாடல்களுக்கு வெகு அழகாக இசை அமைத்தார் சுப்பராமன்.

இதில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது. முதல் முதலாக தமிழ் திரைப் படத்தில் "குத்துப் பாடல்" ஒன்று இடம் பெற அதற்கு இசை அமைத்த முதல் இசை அமைப்பாளரும் சி. ஆர். சுப்பராமன் தான். அதுவும் பாகவதரின் "ராஜ முக்தி"யில்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைப் பாடல் "மச்சி உன் மொகத்துலே மீசையக் காணோம்" - சுப்பராமனின் இசையில் பி.ஜி. வெங்கடேசன் பாடலைப் பாடினார். ஆனால் இது போன்ற பாடல்கள் எல்லாமே SEASONAL SONGS தானே!. ஆகவே காலப் போக்கில் வழக்கொழிந்து போய்விட்டது இந்தப் பாடல். ஆகக் கூடி அனைத்து தரப்பினருக்கும் இசையை கொண்டு சென்ற முதல் இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன்தான்.

"உதயணன்" படத்திலிருந்து தன்னை ஒதுக்கிய திரை உலகுக்கு தன்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டியே தீரவேண்டும் என்ற உத்வேகத்துடன் "ராஜமுக்தி"க்கு சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தாரோ என்று கருதும்படி பாடல்கள் அனைத்தும் அமைந்தன.

ஆனால் படத்தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக ராஜ முக்திக்கு முன்னால் என்.எஸ். கிருஷ்ணனின் "பைத்தியக்காரன்" படம் வெளிவந்து தமிழில் சுப்பராமனின் முதல் படம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது.

என்.எஸ்.கிருஷ்ணனின் "பைத்தியக்காரன்" படத்தில் "குயில் போல இசை பாடும்" என்ற இனிமையான பாடலை பாடவைத்து "கண்டசாலா " என்ற புதிய பின்னணிப் பாடகரை தமிழ் நாட்டுக்கு அறிமுகப் படுத்தினார் சி.ஆர். சுப்பராமன். தனது ஆரம்ப காலப் படத்திலேயே புதிய பாடகரைப் பாடவைக்கும் துணிச்சல் சுப்பராமனுக்கு இருந்தது.

ஆனால் இந்தப் படங்கள் இரண்டும் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் சுப்பராமனின் இசை அமைப்பும் பாடல்களும் பெரிதும் பேசப்பட்டன.

அதே சமயம் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் தங்கள் தயாரிப்பான அபிமன்யு, மோகினி ஆகிய படங்களில் சுப்பராமனுக்கு இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை கொடுத்தனர்.

மோகினி படத்தில் டி.எஸ்.பாலையா - மாதுரி தேவி ஹீரோ - ஹீரோயினாக நடிக்க - இரண்டாவது கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் வி.என். ஜானகி. (ஆம். எம்.ஜி.ஆருடன் வாழ்க்கையில் பின்னாளில் இணைந்த ஜானகி அம்மையாரேதான்!.) இந்தப் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளராக எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் பணியாற்றினார். சி.ஆர். சுப்பராமனின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரானார் சுப்பையா நாயுடு.

மோகினி படத்தில் இடம் பெற்ற லலிதா-பத்மினி ஆடும் நாட்டியப் பாடல் ஒன்றை தனது சிஷ்யை பி.லீலாவை கே.வி. ஜானகியுடன் சேர்ந்து பாட வைத்தார் சுப்பராமன். "ஆகா இவர் யாரடி" - என்ற இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சுப்பராமனின் வீடு தேடி வந்து, "நீங்க ஒரு பெரிய மேதை" என்று மனமாரப் பாராட்டி விட்டுப் போனார் "இசைச் சக்ரவர்த்தி " ஜி. ராமநாதன்.

அதுவரை கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த ஜுபிடர் பிக்சர்ஸ் தனது நிர்வாகத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டபோது கோவையில் தங்களுடன் இருந்த பலரை - இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு உட்பட - பணி நீக்கம் செய்தது. அப்போது அங்கிருந்த இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு தன்னுடன் அதுவரை பணிபுரிந்து வந்த திறமைசாலியான இளைஞன் ஒருவனை உதவியாளனாக சேர்த்துக்கொள்ளும் படி சி.ஆர். சுப்பராமனைக்கேட்டுக்கொண்டார். திறமை எங்கிருந்தாலும் அதனை ஆதரிக்கும் குணம் கொண்ட சுப்பராமன் சந்தோஷமாக அந்த வாலிபனை தன்னுடைய குழுவில் இணைத்துக்கொண்டார்.

சி.ஆர். சுப்பராமன் என்ற இசைக் கடலைத் தேடி வந்து சங்கமமான அந்த நதி வேறு யாருமல்ல. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் தான்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.