சி. ஆர். சுப்பராமன் -2
முதல் வாய்ப்பு - இது எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தே ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது.
எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் திரைத்துறையில் இது ஒருவனுடைய தலை எழுத்தாகவே கருதப் படுகிறது.
அந்த வாய்ப்பில் கிடைக்கும் வெற்றி என்பது இங்கு அவனைப் பொருத்த ஒரு விஷயம் மட்டும் அல்ல.
பலதரப் பட்ட மனிதர்களில் கூட்டு முயற்சியால் இயங்கும் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் வெற்றி என்பது படம் பார்க்கும் ரசிகர்களால் தீர்மானிக்கப் படுகிறது.
அதில் வெற்றி கிடைத்துவிட்டால் அவன் உயர்வு தடுக்கமுடியாது.
அடுத்த வாய்ப்புகள் மளமளவென குவிந்தவண்ணம் இருக்கும்.
தோல்வி கண்டுவிட்டாலோ அவ்வளவு தான் - இருக்கும் இடம் தெரியாமல் போகக்கூட சாத்தியக்கூறு இருக்கிறது.
இதில் பாதுகாப்பான விஷயம் என்னவென்றால் - ஏற்கெனவே வெற்றி பெற்ற சாதனையார்களின் படங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது தான். அது தங்க நாற்கரச் சாலையில் பயணம் செய்வது மாதிரி.
இருபத்தோரு வயது சுப்பராமனுக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரின் படத்துக்கு இசை அமைக்க கிடைத்த வாய்ப்பு அப்படிப்பட்டது தான்.
அந்தக் காலத்தில் பாடலாசிரியர் என்றாலோ இசை அமைப்பாளர் என்றாலோ அவர்களுக்கு சரியான அங்கீகாரமாக ஒரே ஒரு வாய்ப்பைத்தான் அவர்கள் கருதினார்கள்.
அதுதான் ஏழிசை மன்னன் எம்.கே. தியாகராஜ பாகவதர் தனது பாடலைப் பாடவேண்டும் என்று பாடலாசிரியர் கருதுவார்.
இசை அமைப்பாளரோ பாகவதர் பாடும் பாட்டுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவேண்டும் என்று தவமே இருப்பார்.
அந்த ஆசை இளைஞனான சுப்பராமனுக்கும் இருந்தது. அந்த ஆசை நிறைவேறும் வாய்ப்பு அவனது இருபத்தோராவது வயதிலேயே அவனைத் தேடி வந்தது.
வருடம் 1945 . "ஹரிதாஸ்" படத்தின் மாபெரும் வெற்றியால் பாகவதரின் பெயர் உச்சரிக்கப் படாத இடமே இல்லை என்னும்படி அவர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம் அது.
பட வாய்ப்புக்கள் மளமளவென்று அவருக்கு வந்து குவிந்துகொண்டிருந்த நேரம் அது.
அப்போது ஒரு மாபெரும் இசைக்காவியமாக தயாரிக்கப்படவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் "உதயணன்". டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் ராமநாதன் செட்டியார் தயாரித்த இந்தப் படத்தில் உதயணனாக எம்.கே. தியாகராஜ பாகவதரும் வாசவதத்தையாக வசுந்தராதேவியும் (நடிகை வைஜயந்திமாலாவின் தாயார்) ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் பொன்னான வாய்ப்பு இருபத்தியோரு வயது வாலிபனான சி. ஆர். சுப்பராமனுக்கு கிடைத்தது.
தனது இசையில் வெளிவரப்போகிற முதல் தமிழ்ப் படத்துக்கு "ஹீரோ" தியாகராஜ பாகவதர்!
உற்சாகத்தில் மிதந்தான் அந்த இளைஞன்.
"நான் போட்டுக்கொடுக்கும் மெட்டுக்கு பாகவதர் பாடப்போறார். அது மட்டும் அல்ல. பாகவதர் படத்தோட "டைட்டில்லே" "சங்கீதம்-சி.ஆர். சுப்பராமன் என்று என் பெயரும் இடம் பெறப்போகிறது. அதெல்லாம் கூடப் பெரிசில்லே. அந்த மேதையோட பாட்டுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சு இருக்கே. இதுவே பெரிய பாக்கியம் ஆச்சே"
- இரவெல்லாம் தூக்கமே வரவில்லை சுப்பராமனுக்கு.
தனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஆகவே "பாட்டுக்கெல்லாம் அருமையா பாகவதரே மெச்சும்படியா இசை அமைத்துக் கொடுக்கவேண்டும்" - என்று தன்னுடைய கற்பனையில் உருவான இசைக் கோர்வைகளை கவனமாக ஒருங்கிசைத்து அருமையான இசை வடிவங்களாக உருவாக்கிக்கொண்டு ஒலிப்பதிவாகும் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான் சுப்பராமன்.
அந்த நாளும் வந்தது.
12.2.1945 - இளைஞன் சுப்பராமனின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாள். அன்று தான் அவன் இசை அமைப்பில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடப்போகிறார். .
வாத்திய இசைக்குழுவுக்கு மெட்டுக்களை கற்றுக்கொடுத்து அனைவரையும் தயார்படுத்தி விட்டாயிற்று. எம்.கே. தியாகராஜ பாகவதரின் வருகைக்காக அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
இதோ - வாசலில் பாகவதரின் கார் வந்து நின்றது. அதிலிருந்து பட்டு ஜிப்பா ஜரிகை அங்கவஸ்திரம் அணிந்து வைரக் கடுக்கண்கள் காதுகளில் டாலடிக்க அலை அலையாய் கேசம் புரள நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு பளிச்சிட தனக்கே உரித்தான புன்னகை இதழ்களில் அரும்ப இறங்கி ஒலிப்பதிவுக் கூடத்தை அடைந்தார் அந்த ஏழிசை மன்னர்.
அவருக்கு மெட்டுக்களை விளக்கியாயிற்று. இன்னும் சில நிமிடங்களில் சி.ஆர். சுப்பராமனின் இசையில் பாகவதர் பாடப்போகிறார்.
மனசுக்குள் "எல்லாம் நல்லபடியாக அமையவேண்டுமே" என்ற படபடப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து இயங்கத் தயாரானான் சுப்பராமன்.
மைக் அருகே வந்த தியாகராஜ பாகவதர் அதை சரி செய்துகொண்டு பாட ஆரம்பித்த அந்த வேளையில் -
திடீரென ஒளிப்பதிவுக்கூடத்தின் கதவைத் திறந்து கொண்டு வேகமாக தியாகராஜ பாகவதரை நெருங்கிய அவரது நண்பர் மாமுண்டி ஆசாரி அவர் காதுகளில் ஏதோ சொன்னார்.
மறுவினாடி பாகவதரின் முகம் கறுத்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியேறினார் அவர். யாருக்கும் எதுவுமே புரியவில்லை.
அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரையும் அதிரவைக்கும் அந்தச் செய்தி வந்தது.
"லக்ஷ்மி காந்தன் கொலைவழக்கில் எம். கே. தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார்."
சி.ஆர். சுப்பராமனின் தலையில் இடி இறங்கியது போல இருந்தது. அப்படியே ஸ்தம்பித்துப் போய் நாற்காலியில் அமர்ந்து விட்டான் அவன்.
நிமிட நேரத்தில் அந்த ஒலிப்பதிவுக்கூடம் வெறிச்சோடி விட்டது. கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருந்தான் சுப்பராமன்.
காலையில் - பாகவதர் பாடுவதற்காக அவன் அருமை அருமையாய் ஆசை ஆசையாய் தயாரித்து எடுத்து வந்த இசைக் குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் - அங்கே கேட்பாரற்றுக் கிடந்தன. அவனைப்போலவே.
"உதயணன்" படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் பாகவதருக்கு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு -
படத்தை ஒரேயடியாக முடக்கிவிட தயாரிப்பாளர் ராமநாதன் செட்டியாருக்கு மனம் இல்லை.
"ஒரு நல்ல இசைக் காவியமாக" அதை உருவாக்கி வெளியிட முடிவு செய்து தியாகராஜ பாகவதருக்கு பதிலாக அப்போது முன்னணி இசைக்கலைஞராக வளர்ந்து கொண்டிருந்த ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களை கதாநாயகனாக வசுந்தரா தேவியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்து படத்தை மறுபடியும் தயாரிக்கலானார்.
ரெக்கார்டிங் சமயத்தில் பாகவதர் கைது செய்யப்பட்டதால் சென்டிமென்டலாக "இசை அமைப்பாளர் ராசி இல்லாதவர்" என்று சுப்பராமனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சி.எஸ். ஜெயராமனை இசை அமைக்க வைத்து படம் மறுபடி தயாரானது.
சுப்பராமனுக்கு கிடைத்த முதல் தமிழ்ப் பட வாய்ப்பு (அதனை முழுமையான முதல் பட வாய்ப்பு என்றும் சொல்லலாம்) கை நழுவிப் போனது.
சிகரம் தொடுவோம்...
|