வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

டி. சலபதிராவ் - 5

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

தொடர்வதற்கு முன்...
பிரபல எழுத்தாளர் திரு. கலாப்ரியா அவர்கள் வசந்த மாளிகை படத்தை டி. பிரகாஷ்ராவ் அவர்கள் இயக்கியதாக நான் எழுதியிருந்ததில் இருந்த தவற்றை சுட்டிக் காட்டி இருந்தார்.   அவருக்கு என் நன்றி...
தகவல்களை தொகுக்கும் போது ஏற்பட்ட இந்த மாதிரியான தவறுகளை இனிமேல் தவிர்த்து..  இடுகைகளை தருவேன் என்பதை உறுதி செய்துகொண்டு...  தொடர்கிறேன்.  உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் கலாப்ரியா சார். 
-------------------------------------------------------------------------------------------------------------
5) பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.  -  ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.

“அமர தீபம்"  -  இயக்குனர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான ஒரு முக்கோணக் காதல் கதை.  இந்த வகைக் கதைகளில் அவருக்கு நிகர் அவர்தானே!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, பத்மினி, எம்.என். நம்பியார், வி.  நாகையா, கே. ஏ. தங்கவேலு, ஈ. வி. சரோஜா -  ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் இது.  படம் வெளிவந்த ஆண்டு - 1956. 

தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியான பிரபல தொழிலதிபரின் மகள் அருணா, வேலையில்லாத பட்டதாரி வாலிபன் அசோக்கை சந்திக்க நேரிடுகிறது.  சந்திப்பு காதலாக மாறுகிறது.  அருணாவை ஒருதலையாக நேசிக்கும் அவளது முறைப் பையன் சுகுமார்.

இடையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அசோக்கிற்கு பழைய நினைவுகள் எல்லாமே மறந்துபோகின்றன.  

தான் யார் என்றே புரியாமல் தடுமாறும் அந்த நிலையில் அவனுக்கு அடைக்கலம் தருகிறாள் நாடோடிப் பெண்ணான ரூபா.  அவளும் அசோக்கை காதலிக்கிறாள்.

இப்படிச் செல்லும் கதையில் அசோக்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், அருணாவாக சாவித்திரியும், ரூபாவாக பத்மினியும், சுகுமாராக நம்பியாரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு தங்களுடைய உன்னதமான நடிப்பால் உயிர் கொடுத்தனர் என்றால் அது மிகையாகாது. 

பாடல்களை கே.எஸ். கோபால கிருஷ்ணன், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், ஆத்மநாதன் ஆகியோர் எழுதி இருந்தனர்.

பாடல்களுக்கு சலபதிராவ் அமைத்த இசையில் கொஞ்சம் கூட தெலுங்கு கலப்போ, வாசனையோ இல்லை.

பாடல்களைக் கேட்பவர்களிடம் இவையெல்லாம்  ஒரு தெலுங்கு தேசத்து இசை அமைப்பாளர் இசை அமைத்த பாடல்கள் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட நம்புவது கடினம். ஏனென்றால் நான் முன்பே சொன்னபடி அப்போது வெளிவந்து கொண்டிருந்தவை நேரடித் தமிழ் தெலுங்குப் படங்கள்தான்.
"நாணயம் மனிதனுக்கு அவசியம்" - என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடி இருந்தார்.  எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய கருத்துச் செறிவுள்ள கே.எஸ். ஜியின் பாடல் வரிகள்  மிக எளிமையாக பாமரரையும் சென்றடையும் வண்ணம் அமைந்திருந்தன.  பாடலை உழைத்துச் செதுக்கி கருத்துக்கெல்லாம் உயிரோட்டம் கொடுத்து அருமையாக இசை அமைத்திருந்தார் சலபதிராவ்.
என்றாலும்..  இந்தப் பாடல் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.  

காரணம்  காதுக்கு ரம்மியமான ஸ்ருதியில் ஏ.எம். ராஜா - பி. சுசீலாவின் குரல்களின் இணைவில் சலபதிராவ் மோகன ராகத்தில் கொடுத்த - "தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு சேர்ந்தலைந்து பாடுவதேன் ஆனந்தம் கொண்டு.." என்ற மருதகாசியின் பாடல் "தேன் உண்ட வண்டாக" ரசிகர்களைக் கிறங்கடித்ததுதான். http://www.youtube.com/watch?v=7svF84dnMpI&feature=relmfu
இன்றளவும் அமர தீபம் படத்தில் முதல் இடம் பெற்ற பாடல் இதுதான்.  பி. சுசீலாவின் தேன் குரலில் தெறிக்கும் உற்சாகம் கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும் பாடல் இது.
அமர தீபம் படத்தில் இரு நாயகியர்.  இருவருக்கும் இரு வேறு பின்னணிப் பாடகியர்.
படித்த மேல்தட்டு வர்க்கத்துப் பெண்ணாக வரும் சாவித்திரிக்கு பி. சுசீலா பின்னணி பாடினார் என்றால் நாடோடிப் பெண்ணாக வரும் பத்மினிக்கு - ஜிக்கியைப் பாடவைத்தார் சலபதிராவ்.
பத்மினியின் அறிமுகப் பாடலாக தஞ்சை ராமையாதாஸ் எழுதிய "ஜாலிலோ ஜிம்கானா"  - ஜிக்கியின் குரலில் கேட்பவரைத் தாளம் போடவைத்த பாடல்.  இந்தப் பாடலில் வரும் தபேலாவின் பீட் கிராமிய நாட்டுப்புற இசையை மையப்படுத்தியது.  "பிரஜா நாட்டிய மண்டலியில் தயாரானவர் அல்லவா சலபதிராவ்.  ஆகவே பாமர மக்களையும் பாடல் சென்றடைய வேண்டும்.  அதே சமயம் காதுக்கு ரம்மியமாகவும் ஒலிக்கவேண்டும் என்பதில் சலபதிராவ் காட்டிய அக்கறை இந்தப் பாடலில் நன்கு தெரிகிறது.

"பச்சைக்கிளி பாடுது.  பக்கம் வந்தே ஆடுது.
இங்கே பாரு துன்பம் எல்லாம் பறந்தோடுது.." - 
தஞ்சை ராமையாதாஸ் எழுதிய இந்தப் பாடலை ஜிக்கியின் குரலில் கேட்கும்பொழுது மயிலிறகால் மனதை வருடுவது போன்ற ஒரு சுகமான உணர்வு கட்டாயம் தோன்றி மறையும்.
http://www.youtube.com/watch?v=eu3Jl8m-kJc&feature=relmfu.   ஹரிகாம்போதி ராகத்தை எவ்வளவு அருமையாகக் கையாண்டிருக்கிறார் சலபதிராவ் என்று வியக்க வைக்கிறது.
அடுத்தாற்போல தங்கவேலு, ஈ.வி. சரோஜா பாடுவதாக அமைந்த ஒரு நகைச்சுவை பாடல் "காவி கட்டி கொட்டை கட்டி" -எஸ்.சி. கிருஷ்ணனும் - ஏ.பி. கோமளாவும் பாடி இருந்தனர்.  காட்சி அமைப்போடு பார்க்கும்வேளையில் நன்றாக இருந்த பாடல் இது.  ஆனால் "தேன் உண்ணும் வண்டும்"  " பச்சைக் கிளி பாடுது" -  ஆகிய இரு பாடல்களும் காலங்களைக் கடந்தும் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

"துன்பம் சூழும் நேரம்.."  என்று ஜிக்கியின் குரலில் ஒரு சோகம் ததும்பும் காதல் பாடல் மனதை நிறைக்கத் தவறாத அருமையான மெலடி.  http://www.youtube.com/watch?v=xLJvegGMXLY&feature=relmfu
இப்படியாக தனது முதல் தமிழ்ப் படத்திலேயே பெயர் சொல்லும் அளவுக்கு பாடல்களையும் கொடுத்து, பின்னணி இசையிலும் முத்திரை பதித்து தமிழ்ப் படவுலகில் தனது கணக்கை ஆரம்பித்தார் சலபதிராவ்.
அமர தீபம் - பெருவெற்றி பெற்றது.

விளைவு  -  வீனஸ் பிக்சர்ஸ், ஸ்ரீதர், சலபதிராவ்- ஆகியோரின் கூட்டணி அடுத்த படத்திலும் தொடர்ந்தது. இம்முறை பழம்பெரும் இயக்குனர் ஆர்.எஸ். மணியின் இயக்கத்தில் ஸ்ரீதரின் கதை வசனத்தில் சிவாஜி - பத்மினி இணைந்து நடித்தனர்.
படம் : புனர் ஜென்மம்.
******
"புனர் ஜென்மம்" -  ஐம்பதுகளின் இறுதியில் வெளிவந்த மறக்கமுடியாத ஒரு படம்.  குடிப்பழக்கத்தால் ஒரு நல்லவன் எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறான்: அதனால் அவனைச் சுற்றி உள்ள குடும்பத்தினர் எந்த அளவுக்கு அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதை வெகு அருமையாகச் சித்தரித்திருந்த ஒரு படம்.
கருத்துச் செறிவு மிக்க கதையை எழுதி உணர்ச்சிகரமான மனதைத் தொடும் வசனங்களைப் படம் நெடுக அமைத்து அற்புதமாக வடிவமைத்திருந்தார் பின்னாளைய இயக்குனர் ஸ்ரீதர்.

சிவாஜி கணேசன், பத்மினி, கண்ணாம்பா, தங்கவேலு, எம்.எஸ். சுந்தரிபாய் ஆகியோர் நடிக்கவில்லை.  ஏற்றிருந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டிருந்தனர்.

அருமையான கதை அம்சம், அற்புதமான நடிப்பு, தெளிவான திரைக்கதை என்றிருந்த படத்தை கொஞ்சம் கூட தொய்வே இல்லாமல் இயக்கி இருந்தார் பழம் பெரும் இயக்குனர் ஆர். எஸ். மணி அவர்கள்.
இந்தக் கூட்டணியில் ஒன்றிணைந்த இசை அமைப்பாளர் சலபதிராவ் பின்னணி இசையிலும் பாடல்களிலும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்றால் அது மிகை அல்ல.
கதைப்படி சேகர் (சிவாஜிகணேசன்) ஒரு சிற்பக் கலைஞன்.  வாழ்வில் முன்னேற அவன் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியில் முடியவே மன அமைதிக்கு மதுவை நாடுகிறான் அவன்.  அவனைத் திருத்த அவன் அன்னையும், காதலியும் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிகின்றன. 

நயந்து சொல்லிக் கேட்காத மகனை பொறுமையை இழந்த தாய் அடித்துத் திருத்துகிறாள்.  மனம் திருந்திய அவன் வாழ்வில் முன்னேறிய பிறகே ஊர் திரும்புவதாக கூறி அன்னையை தன காதலியின் ஆதரவில் விட்டுவிட்டு பட்டணம் சென்று முன்னேறி திரும்புகிறான்  அவன்.  அப்பாடா.. இனிமேல் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது என்று நிம்மதியுடன் திரும்பும் ஒருவனின் மன நிலையைஎப்படி இருக்கும்.  அது பாடலில் தெரிகிறது. பாடல் இப்படி வருகிறது.

"என்றும் துன்பம் இல்லை பெரும் சோகமில்லை.
பேரின்ப  நிலை வெகு தூரமில்லை"


இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை -நெஞ்சை
வாட்டிடும் கவலைகள் இல்லை -கொடும்
வாதைக்கும் போதைக்கும் வேலை இல்லை

எங்கள் வாழ்வினில் துயர் வரப் பாதை இல்லை.
என்று உற்சாகமாகப் பாடிக்கொண்டு அவன் ஊர் திரும்பும் அதே வேளையில் இருந்த ஒரு குடிசையையும் இழந்து மகனைத் தேடி வருகிறாள் தாய்.

"அன்புத் தாயெனும் கோயிலை நாடி" ஆவலுடன் வரும் மகனும், தவிப்புடன் அவனைத் தேடிவரும் தாயும் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிகரமான கட்டத்தில் சலபதிராவ் அமைத்திருக்கும் இசை பாடலுக்கும், காட்சி அமைப்புக்கும் அருமையாகப் பாலமிட்டு கொடுத்திருக்கிறது "என்றும் துன்பம் இல்லை பெரும் சோகமில்லை. - புனர்ஜென்மம் படத்தில் அடிக்கடி இடம் பெரும் பாடல் இது.  "தீம் சாங்"  - என்று கூட இதனைச் சொல்லலாம். வெகு அருமையான இந்தப் பாடல் - படத்தில் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் ஒருமுறையும் (ஆம். சிவாஜி கணேசனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணி பாடிய முதலும் கடைசியுமான பாடல் இது. ), டி.எம். சௌந்தரராஜனின் குரலில் ஒரு முறையும், பி. சுசீலாவின் குரலில் இன்னொரு முறையும் இடம் பெறும்.  மாறுபட்ட குரல்களில் ஒலிக்கும் ஒவ்வொரும் முறையும் பாடல் மனதைத் தொடத் தவறவே இல்லை.

பாட்டுக்கு ஒரு பட்டுக்கோட்டை என்று இன்றும் போற்றப்படுகின்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் மிக எளிமையாக அனைவரின் மனதிலும் பதியும் படி அமைந்த பாடல் இது.
இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்த காதலனை அடுத்த முறை சந்தோஷத்துடன் நெருங்கும் காதலிக்கு அவன் மதுவின் மயக்கத்தில் மறுபடி இருப்பதை கண்டுவிட்டால் அவள் மனம் என்ன பாடுபடும்?

அந்தக் காதலியின் மனத்துடிப்பை "கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் மீது வைப்பது போல்" சிதறுண்ட அவளது மனவேதனையை "இந்தக் காதலும் பொய்தானா?"  என்று துவங்கும் பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்.  பி. சுசீலாவின் குரலில் தெறிக்கும் சோகம் நம்மையும் கட்டிப்போடும்.  அந்தச் சோகத்துக்கு துணை செய்து காட்சியின் விறுவிறுப்பை வயலின்களின் இணைப்பிசை உச்சகட்டத்துக்கு கொண்டு சேர்க்கும்.  இணைப்பிசை முடியும் தருணத்தில் சலபதிராவ் சேர்த்திருக்கும் புல்லாங்குழலிசை காயம் பட்ட அவள் மனதை மெல்ல வருடிக் கொடுக்கும்.

தெலுங்குக் கலப்பில்லாத தூய, இனிய தமிழ்ப் பாடலுக்கு சலபதிராவ் அமைத்த இசையின் சிறப்பு சொன்னால் புரியாது.  கேட்டுத்தான் உணரவேண்டும்.

மதுவின் மயக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு முன்னேறித் திரும்பிய காதலனும்  காதலியும் சேர்ந்து பாடும் ஒரு டூயட் பாடல் இது.

"உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே."
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய கேட்கக் கேட்க திகட்டாத பாடல்.  .  ஏ. எம். ராஜா-பி.சுசீலாவின் இணைவில் உற்சாகத் துள்ளல் நடையில் "பெஹாக்" ராகத்தின் அடிப்படையில் சலபதிராவின் இசையின் ஆளுமை பாடலில் தெரிகிறது.  முகப்பிசை, இணைப்பிசை என்று அனைத்தையும் அழகுற அமைத்து இந்த வெற்றிப்பாடளைத் தந்திருக்கிறார் தாதநேனி சலபதிராவ்.   பொதுவாக நமது தமிழ்ப் படங்களில் சோக ரசத்தைப் பிழிவதற்காக என்றே பயன்படுத்தப் பட்ட வாத்தியம் ஷெனாய்.  அந்த ஷெனாயை இந்தப் பாடலுக்கான இணைப்பிசையில் சலபதிராவ் பயன்படுத்தி இருக்கும் விதம் அலாதி.  வயலின்களின் விறுவிறுப்பு, புல்லாங்குழலின் மனதை வருடும் ஒற்றை இழுப்பு, ஆகியவற்றை தொடர்ந்து வரும் துள்ளல் இசைக்கு ஷெனாயை அற்புதமாக தபேலாவின் தாளக்கட்டுடன் இணைத்து பயன்படுத்தி இருக்கும் சலபதிராவின் திறமையை சொன்னால் புரியாது.  பாடலைக் கேட்டுத்தான் உணரவேண்டும்.  இந்தப் பாடலில் சரணத்தில்
"எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண்மேல் சுகமே...." 
என்று ஏ.எம். ராஜா முதல் இரண்டு அடிகளைப் பாட பி. சுசீலா அடுத்த அடிகளைத் தொடரவேண்டும்.  ராஜா கடைசி வரிகளை முடிப்பதற்கு முன்பே ஒரு ஹம்மிங்கோடு சுசீலா தொடர்ந்து
 "சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே
தென்றல் வீசியே நன்றி கூறுமே.." 
-  பாடும்போது அந்தக் குரலில் உண்மையாகவே தென்றலின் சுகம் தெரியும். link for the song :  ullangal ondraagi thullum pothiley http://www.youtube.com/watch?v=Z8f3IAZ3GY0

பத்மினி, ராகினியின் நடனப்பாடல் ஒன்றும் படத்தில் இருக்கிறது.  உற்சாகத் துள்ளல் நடையில் அமைந்த "மனம் ஆடுது"  என்று துவங்கும் இந்த பாடலை ஜமுனாராணியும், ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள். .

குடிகாரக் காதலனை திருத்த தானும் குடித்தது போல நடித்து காதலி பாடும் காட்சிக்கான பாடல் "உருண்டோடும் நாளில்"  -  பி. சுசீலாவின் குரலில் போதையும் மயக்கமும் தெரிய பாடலை சலபதிராவ் அமைத்திருக்கும் விதமே அலாதி

:http://www.youtube.com/watch?v=uWUd1yaV6fU&feature=related.

அக்கால மரபுப்படி நகைச்சுவை ஜோடிக்காக என்றே ஒரு பாடல்.   "போதும் சரிதான் மிஸ்டர் " - என்று துவங்கும் இந்தப் பாடலை பி. பி. ஸ்ரீநிவாசும், ஜிக்கியும் சேர்ந்து பாடி இருக்கிறார்கள்.  டி.ஆர். ராமச்சந்திரன் - ராகினி ஜோடிக்கான பாடல் இது.

இப்படிப்  பாடல்கள் அனைத்துமே வெற்றிப்பாடல்கலாக, பின்னணி இசையிலும் தனது முழுத் திறமையை பயன்படுத்தி வெற்றிச் சிகரத்தைத் தொட சலபதிராவின் கடின உழைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அமர தீபம், புனர் ஜென்மம் -  ஆகிய படங்களின் வெற்றி - இசை அமைப்பில் சலபதிராவ் அவர்களின் ஈடுபாடு - கதை வசனம் எழுதிய ஸ்ரீதரின் மனம் முழுவதையும் நிறைத்திருந்தன. பின்னாளில் தான் ஒரு இயக்குனராக ஆனால் கண்டிப்பாக சலபதிராவின் இசையில் - முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி கலை அம்சம் நிறைந்த ஒரு படம்,செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தன் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.

அந்த நல்ல நாளும் வந்தது.       

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.