சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
டி. சலபதிராவ் - 4
4. பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் முயற்சியை கைவிட்டுவிட்ட பிறகும் அயராமல் தொடர்வதால் ஒருவனுக்கு கிடைப்பதாகும் - WILLIAM FEATHER.
ஒரு மொழியில் ஒரு வார்த்தை கூட எழதப் படிக்கத் தெரியாத ஒரு பெண் – அந்த மொழியின் பொருள் உணர்ந்து உச்சரிப்பு கெடாமல் உணர்வு பூர்வமாகப் பாட முடியுமா?
முடியும். கண்டிப்பாக முடியும்..
ஆனால் அதைச் செய்ய உள்ளார்ந்த ஈடுபாடும், அந்த மொழியின்மீது ஒரு பயபக்தியும், அதனைச் சிதைக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும், எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான மனதோடு கூடிய கடின உழைப்பும் கண்டிப்பாக வேண்டும்.
இவை எல்லாமே அன்று எஸ். ஜானகி அவர்களிடம் இருந்தன. அதனால் தான் அவரால் தனக்கு சுத்தமாகத் தெரியாத தமிழ் மொழியில் அமைந்த பாடல்களை அட்சர சுத்தமாக, உணர்வு பூர்வமாக காகிதப் பிரதி கூட வைத்துக்கொள்ளாமல் பாடி பாடல் பதிவில் அனைவரையும் அசர வைக்க முடிந்தது.
ஆனால் எஸ். ஜானகியோ, அவரது இந்த வெற்றிக்கு காரணம் இசை அமைப்பாளர் சலபதிராவ் அவர்கள் கொடுத்த தைரியமும் ஊட்டிய தன்னம்பிக்கையும், கொடுத்த ஆதரவுமே காரணங்கள் என்று தான் நம்பினார்.
இதை அவரே பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் கூட இதை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
"என்னோட இத்தனை வளர்ச்சிக்கும் காரணமே அன்று இசை அமைப்பாளர் தாதநேனி சலபதிராவ் அவர்கள் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும், பேராதரவும் தான். அவர் தான் என்னை வளர்த்துவிட்டவர். அவர் மட்டும் இல்லைன்னா நான் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கவே முடியாது." - தாதநேனி சலபதிராவைப் பற்றி ஜானகியின் நன்றியில் ஊறிய கருத்துக்கள் இவை.
ஆனால்.. விதியின் விளையாட்டோ என்னவோ..
"விதியின் விளையாட்டு" படம் .. பாடல் பதிவோடு முடங்கிப் போனது. ஆகவே . எஸ். ஜானகி அவர்கள் கடினமாக உழைத்துப்பாடிய முதல் பாடல்கள் நமக்கு கேட்கக் கிடைக்காமல் போய்விட்டன.
பின்னாளில் பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ். பாலையா அவர்கள் சொந்தமாகத் தயாரித்த "மகதல நாட்டு மேரி" என்ற படத்தின் மூலம் எஸ். ஜானகி தமிழ்த் திரை உலகில் ஒரு பின்னணிப் பாடகியாக நுழைந்தது தனிக்கதை.
"விதியின் விளையாட்டு" படம் முடங்கிப் போனதால் சலபதிராவ் ஒன்றும் சோர்ந்து போய்விடவில்லை. அவருக்கான வாய்ப்போடு அவரது சகோதரர் டி. பிரகாஷ்ராவ் அவர்கள் இயக்கிய தெலுங்குப் படம் காத்திருந்தது. என்.டி. ராமராவ், ஏ.என். நாகேஸ்வரரவ், நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோர் நடிப்பில் "பரிவர்த்தனா" என்ற தெலுங்குப் படம் சலபதிராவ் இசையில் வெளிவந்தது. படமும் பாடல்களும் பெருவெற்றி பெற்றன.
அப்போதெல்லாம் மதராஸ் வானொலி நிலையத்தில் தமிழ்ப் படப் பாடல்கள் மட்டும் அல்ல, ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படப் பாடல்களையும் ஒலிபரப்புவது வழக்கமாக இருந்து வந்தது.
ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒரு அரை மணி நேரம் பிறமொழிப் படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுவந்தன.
முஹம்மது ரபி, கண்டசாலா ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானது இப்படித்தான்.
பின்னாளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த அறுபதுகளின் பிற்பகுதி வரை இந்த நிலைமை நீடித்து வந்தது.
அது மட்டும் அல்ல. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது "ஆந்திரகேசரி" பிரகாசம் அவர்கள் "மதராஸ் மனதே" (மதராஸ் எங்களுடையதே) என்று சென்னையை ஆந்திரத்துடன் இனைக்கக் கோரி போராட்டங்கள் நடத்தியதில் இருந்தே தெலுங்கு பேசும் மக்கள் சென்னையில் கணிசமான அளவுக்கு இருந்துவந்தனர் என்று உணரமுடிகிறதல்லவா?
எதற்காக இதை எல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால் தெலுங்கு திரைப்படங்களும், பாடல்களும் சென்னையில் கணிசமான வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்த காலகட்டம் ஒன்றும் தமிழ் நாட்டில் நிலவி இருந்தது என்பதை நாம் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதற்காகத்தான். ஆதலால் "பரிவர்த்தனா" படத்தின் பாடல்கள் தமிழ் நாட்டின் தலை நகரிலும் ஒலிக்க ஆரம்பித்தன.
“பரிவர்த்தனா” படம் தமிழ் திரை உலக தயாரிப்பாளர்களையும் கவர்ந்து
விட்டிருக்கவேண்டும். அதன் விளைவாக இயக்குனர் டி. பிரகாஷ்ராவ் அவர்களுக்கு தமிழ்ப் படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பும் கூடிவந்தது.
பின்னாளைய பிரபல இயக்குனர் ஸ்ரீதர் - ஒரு கதை வசனகர்த்தாவாக பல படங்களுக்கு எழுதிக்கொண்டிருந்த நேரம்.
தனது நண்பர்கள் சிலரோடு பாகஸ்தராக இணைந்து படத்தயாரிப்பில் அவர் ஈடுபட தொடங்கினார். - வீனஸ் பிக்சர்ஸ் என்ற வெற்றிப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் பட்டிருந்த நேரம்.
அந்த நிறுவனத்தின் தயாரிப்பான "உத்தம புத்திரன்" படம் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதரின் கதைவசனத்தில் தனது அடுத்த படமான "அமர தீபம்" படத்தை தொடங்கியது.
உத்தம புத்திரன் படத்தை இயக்கிய டி.பிரகாஷ்ராவ் அவர்களே அமர தீபம் படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படத்துக்கு இசை அமைக்க அப்போது வளர்ந்து கொண்டிருந்த இசை அமைப்பாளரான டி. சலபதிராவ் அவர்களை தேர்ந்தெடுத்தனர். சலபதியும் வெகு உற்சாகமாக இசை அமைக்க தொடங்கினார்.
ஆனால். என்ன காரணத்தினாலோ .. அந்தப் படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களை இன்னும் இருவர் இசை அமைத்துக் கொடுத்தனர். "நாடோடிக் கூட்டம் நாங்க" என்ற பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்களும், "எங்கு மறைந்தனையோ" என்ற உச்ச கட்ட காட்சிக்கான பாடலை பிரபல கர்நாடக இசை இளவரசர் திரு. ஜி.என். பாலசுபரமனியம் அவர்களும் அமைத்துக் கொடுத்தனர்.
ஆனால்.. மற்ற பாடல்கள்,. பின்னணி இசை அமைப்பு என்று அனைத்துமே சலபதிராவ் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன.
தமிழ்த் திரை உலகில் தனது பாடல்களால் புது முத்திரை பதிக்க வந்தார் டி. சலபதிராவ்.
(சிகரம் தொடுவோம்)
|