வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

டி. சலபதிராவ் - 3

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

3) அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பட்டிருக்கின்றன. வெறும் வலிமையினால் அல்ல. - சாமுவேல் ஜான்சன்.

அந்த நாட்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் எல்லாவற்றையும் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு தளங்கள் எல்லாமே சென்னையை மையமாகக் கொண்டே இயங்கி வந்தன. ஆகவே சலபதிராவ்வும் சென்னை வாசத்தை ஏற்க வேண்டிவந்தது.

அவரது முதல் படம் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆகவே மளமளவென்று முன்னேறத் தொடங்கினார் அவர்.

அப்பொழுதெல்லாம் ஒரே கதை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப் பட்டுவந்தன. மொழிமாற்று படங்கள் (டப்பிங்) குறைவு. இரு மொழிகளிலும் அந்த அந்த மொழிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கதாநாயகர்களாகவும், அதே சமயம் கதாநாயகியாக இரு மொழிகளையும் நன்றாகப் பேசி நடிக்கத்தெரிந்த - அதே சமயம் இரு மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமான - நடிகையையும் ஒப்பந்தம் செய்து படங்களைத் தயாரித்து வந்தனர். அநேகமாக நடிகையர் திலகம் சாவித்திரி, கண்ணாம்பா, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ் ஆகியவர்கள் இரு மொழிப் படங்களிலும் இருந்து வருவார்கள். கதாநாயகன், காமெடியன் ஆகியோர் மட்டும் அந்த அந்த மொழி ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக இருப்பார். தெலுங்கில் என்.டி. ராமராவ், நாகபூஷணம், ஏ.என். நாகேஸ்வரராவ், ரேலங்கி என்று இருந்தால் தமிழில் பெரும்பாலும் ஜெமினி கணேசன், கே.ஏ. தங்கவேலு ஆகியோர் இருப்பார்கள்.

இப்படியாக இருமொழிகளிலும் வெளிவந்த நேரடித் தயாரிப்புப் படங்கள் பெருவெற்றி கண்டன. மிஸ்ஸியம்மா, மாயாபஜார், மனம் போல் மாங்கல்யம், கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை, மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்தவீட்டுப்பெண் - ஆகிய படங்கள் இந்த வரிசையைச் சேர்ந்தவைதான்.

அந்த வகையில் "விதியின் விளையாட்டு" என்ற ஒரு படமும் இரு மொழித் தயாரிப்பாக ஆரம்பமானது. இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு சலபதிராவ் அவர்களுக்கு கிடைத்தது.

அப்போது பி. லீலா, ஜிக்கி ஆகியோர் பிரபலமான பாடகியராக இருந்தனர். பி. சுசீலா திரை உலகில் கால் பதித்து தன் தேன்குரலால் முன்னேறிக்கொண்டிருந்த நேரம்.

தனது படத்துக்கு புதிய பாடகி ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தார் சலபதிராவ். அவரைச் சந்திக்க வந்தார் ஒரு பெரியவர். கூடவே ஒரு இளம் பெண்.

"என் பெயர் சந்திரசேகர். எங்களுக்கு சொந்த ஊர் குண்டூர். நீங்க மியூசிக் போடற படத்துலே இந்தப் பெண்ணுக்கு பாடறதுக்கு சான்ஸ் கொடுக்கணும்" சரளமான தெலுங்கில் பேசினார் அவர்.
"இந்தப் பெண் யார். உங்க மகளா?" என்று அவரிடம் சாதாரணமாகக் கேட்டார் சலபதிராவ்.

"இவள் என் மருமகள். என் மகன் ஹரிப்ரசாத்தின் மனைவி" என்றார் சந்திரசேகர ராவ்.
"மருமகளா?" சலபதிராவ்விற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

பொதுவாக ஒரு பெண்ணிடம் என்னதான் திறமை இருந்தாலும் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்துவிட்டது என்றால் அவளுக்கு அடுப்படியே கதி என்று இருந்த காலகட்டமல்லவா அது?
"என்னது.. நல்லா பாடுவியா? அப்போ சர். தினமும் வீட்டுலே விளக்கேத்தினதுக்கு அப்புறம் சுவாமி படத்துக்கு முன்னாலே உக்காந்து சின்னதா ஒரு கீர்த்தனம் பாடு. அது போதும்.: என்ற அளவோடுதான் பாடுவதற்கு சுதந்திரம் கொடுப்பார்கள் புகுந்த வீட்டில்.

வீட்டுவேலை செய்து கொண்டிருக்கும் பொது தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே திருப்தி பட்டுக்கொள்வாள் அந்தப் பெண்.

அதிகப் பட்சமாக இருக்கவே இருக்கிறது நவராத்திரி பண்டிகை. அக்கம் பக்கத்து வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் கொலுவுக்கு சென்று அங்கே "ஒரு பாட்டு பாடம்மா" என்ற சம்ப்ரதாய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு "கஜவதனாவை"யோ அல்லது ஒரு "மருகேலரா"வையையோ பாடிவிட்டு வரவேண்டியதுதான்.

அல்லது ஒரு கல்யாணம் காட்சி சமயங்களில் ஊஞ்சல் வைபவத்தில் "லாலி" பாடிவிட்டு(அந்தக் கூட்டத்தில் யார் கேட்கப் போகிறார்கள்!) அந்த அளவோடு அடங்கிவிடவேண்டியதுதான்.
புகுந்த வீட்டில் அவளது திறமை, தனித்தன்மை எல்லாமே இந்த அளவுக்குள் முடங்கிவிடும்.
முடக்கப்பட்டுவிடும்.

அப்படிப்பட்ட சமுதாயச் சூழல் நிலவி வந்த ஒரு காலத்தில் தன் மருமகளிடம் உள்ள இசைத் திறமையை வெளிப்படுத்தி அவளை ஒரு பாடகியாக்கி பெயரும் புகழும் பெற வைக்க வேண்டும் என்று ஒரு மாமனாரே முன்வந்து அவளுக்காக வாய்ப்புகளை தேடிக்கொடுக்க முயற்சி எடுப்பது என்பது புதுசு. ரொம்பவே புதுசு.
அதற்கெல்லாம் ஒருவருக்கு முற்போக்கான சிந்தனையும், ரொம்ப பரந்த மனசும் இருக்கவேண்டும் அல்லவா?. சந்திரசேகருக்கு அவை ரொம்பவே இருந்தன.

முற்போக்கு சிந்தனை கொண்ட சலபதி ராவிற்கு சந்திரசேகரின் மனப்பான்மை பிடித்துப்போகவே அவரது மருமகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

"இதுக்கு முன்னாலே பாடிய அனுபவம் இருக்கா?" சலபதியின் இந்தக் கேள்விக்கு, "சினிமாவுக்கு பாடினது இல்லே. ஆனால் ஏ.வி.எம். நிறுவனத்துலே கொலம்பியா ரெக்கார்டுக்கு காண்ட்ராக்ட் முறையிலே பாடிக்கொண்டு இருக்கிறாள்" என்று தன் மருமகளைப் பற்றி கூடுதல் தகவல் தந்தார் சந்திரசேகர்.
"அப்போ சரி. நான் சான்ஸ் தரேன். ஆனால் நான் கொஞ்சம் கண்டிப்பானவன். நான் நினைக்கிற மாதிரி சங்கதி உன்னோட குரலில் வருகிறவரைக்கும் விடமாட்டேன்." என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சலபதி.

இப்போது அந்தப் பெண் தெலுங்கிலேயே பேசினாள் "பாபுகாரு. கண்டிப்பா நீங்க நெனைக்கிறபடி எதிர்பார்க்கிற அளவுக்கு பாடுவேன்." என்றாள் அவள். .
“உனக்கு தமிழ் தெரியுமா?" இது சலபதிராவின் அடுத்த கேள்வி.
"ஒரு வார்த்தை கூட எழுதப், படிக்க, பேசத் தெரியாது." என்றாள் அவள்.

அப்போது சலபதிராவிற்கு "விதியின் விளையாட்டு" படத்துக்காக இரண்டு பாடல்கள்.. அதுவும் சோகப் பாடல்கள் பாடுவதற்கு ஒரு பெண் குரல் தேவைப்பட்டது.

சோக ரசம் ததும்ப வேண்டும். வார்த்தை உச்சரிப்பில் சுத்தம் இருக்கவேண்டும். மொழியைக் கடித்துத் துப்பக் கூடாது. - இவை எல்லாம் அந்தக் காலத்தில் தமிழ்ப் படத்தில் பாடுவதற்கு கட்டாயமாக இசை அமைப்பாளர்களால் கடைப் பிடிக்கப்பட்டுவந்த எழுதப்படாத சட்டங்கள்.

சலபதிராவ் இயல்பிலேயே தெலுங்கு தேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனாலும் எந்த மொழியில் பாடினாலும் இவற்றை எல்லாம் முக்கியமாக கடைப்பிடித்துவந்தார். சலபதிராவ் மட்டும் என்று இல்லை. ஆந்திரத்திலிருந்து வந்த எஸ். ராஜேஸ்வரராவ் ஆகட்டும், ஆதி நாராயண ராவ் ஆகட்டும் - சொந்த மொழியை விட தமிழில் பாடவைக்கும் போது இதை எல்லாம் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களால் காலத்தை வென்று நிற்கும் பாடல்களைத் தரமுடிந்தது.

"சரி. ஒரு பரீட்சார்த்தமாக இவளையே பாடவைப்போமே. தமிழ் ஒரு வார்த்தைகூடத் தெரியாத இந்தப்பெண்ணை சுத்தமான தமிழில் பாடவைக்கவேண்டும்.முயற்சி செய்துதான் பார்ப்போமே." என்று தீர்மானித்து அவளிடம் காட்சி அமைப்பை விளக்கி பாடலாசிரியர் எழுதிக்கொடுத்திருந்த பாடலை தமிழ் தெரிந்த உதவியாளரைக் கொண்டு பொறுமையாக வரிக்கு வரி அர்த்தத்தை விளக்கி சொல்லிக்கொடுத்து பாடல் வரிகளை அவளுக்கு தெரிந்த தெலுங்கில் அப்படியே எழுதிக் கொள்ளச் சொல்லி - எந்த எந்த வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும். எங்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். என்பதை எல்லாம் விளக்கிவிட்டு -

இவ்வளவும் செய்தபிறகு..

"இன்னிக்கு ஒருநாள் டைம் தரேன். நாளைக்கு காலையில் இரண்டு மணி நேரம் பாடல் பதிவுக்கு உனக்கு ஒதுக்கி இருக்கேன். நன்றாக பயிற்சி செய்துகொண்டுவந்து தப்பில்லாமல், பிசிறில்லாமல் வார்த்தைத் தெளிவோடு பாடித் தரவேண்டும்." என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார் அவர்.

மறுநாள் குறித்த நேரத்தில் தன் மாமனாருடன் வந்தால் அந்த இளம் பாடகி.

ரெக்கார்டிங் நேரத்தில் "எழுதிக் கொடுத்த பிரதியைப் பார்த்துப் பாடம்மா" என்று ஒலிப்பதிவிற்கு தயாரானார் சலபதிராவ்.

"பிரதி வேண்டாம் சார். நான் மனப்பாடமே பண்ணிட்டேன். நினைவில் இருக்கு..உங்க ஆசீர்வாதத்துலே சரியாப் பாடிடுவேன்" என்றாள் அவள் தன்னம்பிக்கையுடன்.

பாடல் பதிவு தொடங்கியது.

சற்றுக் கூடத் தடுமாறாமல் சலபதிராவ் சொல்லிக்கொடுத்ததை அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு காகிதப் பிரதி எதுவும் வைத்துக்கொள்ளாமல் அந்த இரண்டு பாடல்களையும் - சோக ரசம் ததும்ப அட்சர சுத்தமான தமிழில் -இடை இடையே விம்மல்கள் - விசும்பல்கள் வரவேண்டிய இடங்களில் அவற்றையும் கொடுத்து ஒரே டேக்கில் இரண்டு பாடல்களையும் பாடி முடித்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள் அந்தப் பெண்.

தனது இசை அமைப்பில் வெகு அற்புதமாகப் பாடிய அந்தப் பெண்ணை வெகுவாகப் பாராட்டி அவர் முன்னணிக்கு வருவதற்கு தகுந்த ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு பாட வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்தார் சலபதிராவ்.
அந்தப் பெண்...

அவர்தான் திருமதி. எஸ். ஜானகி.

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </