சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
டி. சலபதிராவ் - 2
2. "வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக் கொள்ளுங்கள்.போராட்ட உத்வேகமும், புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்." - சுவாமி சுகபோகானந்தா.
கபிலேச்வரம் ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள
ஒரு அழகான கிராமம்.இந்தக் கிராமத்தில்தான் தாதிநேனி சலபதிராவ் என்ற டி.சலபதிராவ் அவர்கள் 20.12.1920 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அன்பான பெற்றோர், இரண்டு சகோதரிகள், அந்தக் காலத்து வழக்கப்படி கூட்டுக்குடும்ப வாழ்க்கை. ஆகவே பெரியப்பா, சிற்றப்பா, மாமா - என்று அனைவரும் ஒன்றாக இருந்ததால் அடுத்த தலைமுறையினரிடமும் அந்த பாசமும் நெருக்கமும் நிலவி வந்தன.
இவரது ஒன்று விட்ட சகோதரர் தான் பின்னாளில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக விளங்கிய திரு. டி. பிரகாஷ்ராவ் அவர்கள்.
உத்தம புத்திரன், அமரதீபம், படகோட்டி- ஆகியவை மட்டும் அல்லாமல் அன்றும் இன்றும் ஏன் என்றுமே அழியாத அமரத்துவம் வாய்ந்த காதல் காவியமான "வசந்த மாளிகை" - டி. பிரகாஷ் ராவ் அவர்களின் ஒப்பற்ற கைவண்ணத்தில் உருவான படங்களில் சில.
மொத்தத்தில் சலபதிராவ் அவர்களின் குடும்பம் கலைத்துறையோடு ஒன்றி இருந்த குடும்பம். கலாரசனை, கலையில் ஈடுபாடு ஆகியவை குடும்பத்தில் ஊறி இருந்திருக்க வேண்டும். ஆனால் பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த குடும்பமாகவும் அது இருந்தது. அவரது குடும்பம் மட்டும் அல்ல. அந்த கிராமம் முழுதுமே வீடு தோறும் கம்யூனிஸ்ட் கட்சிக்கொடி பட்டொளி வீசிப் பரந்துகொண்டிருதது.
அருகில் உள்ள வுய்யூர் என்ற கிராமத்தில் சர்க்கரைத் தொழிற்சாலை ஒன்று இருந்தது. கபிலேஸ்வரத்தில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வந்தனர். ஆகவே தொழிற்சங்கம் . வர்க்கப் போராட்டம், தொழிலாளர் நல உரிமை.. ஆகியவற்றை முக்கியமாக கொண்டு இயங்கி வந்த பொதுவுடைமை கட்சியின் ஆதிக்கம் கபிலேஸ்வரத்திலும் அதிகமாக இருந்துவந்தது.
அது எந்த அளவுக்கு என்றால்... அந்த கிராமத்தில் வீடுகளில் பெண்கள் காலையில் வாசல் தெளித்து கோலம் போடும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் சின்னத்தையே தெருவை அடைத்து போடும் அளவுக்கு அந்த கட்சியின் ஆதிக்கம் இருந்துவந்தது.
சலபதிராவின் குடும்பமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தது. அதே சமயம் கலை உணர்விலும் ஊறி இருந்தது. அவரது இளைய சகோதரி தமயந்திக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கப் பட்டது. பாட்டு வாத்தியார் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சகோதரிக்கு சொல்லிக்கொடுக்கப் பட்ட பாடங்களை கூர்ந்து கவனித்து தன் இசை அறிவை வளர்த்துக்கொண்டான் அவன்.
அப்போது பால்ய விவாஹத் தடைக்காக 'சாரதா சட்டம்" அமுலுக்கு வரவிருந்த காலகட்டம்.
என்னதான் பொதுவுடைமை கொள்கையில் ஈடுபாடு கொண்ட குடும்பமாக இருந்தாலும் சம்பிரதாயங்களை கைவிட மனமில்லாத காரணத்தால் சலபதிக்கு பள்ளியில் படித்துவந்த பருவத்திலேயே சொந்தத்திலேயே "அன்னபூர்ணத்தம்மா"வை திருமணம் செய்து வைத்தனர். பின்னாளில் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் தன் கணவனுக்கு தானே ஜமுனா குமாரியை இரண்டாவது திருமணம் செய்து வைத்தார் அன்னபூர்ணத்தம்மா.
காலம் சென்றது. பள்ளிப்படிப்பை முடித்த இளைஞன் சலபதி பொறியியல் பட்டப் படிப்புக்காக பம்பாய்க்கு (இன்றைய மும்பை) பயணமானான். அங்கு இஞ்சினீரிங் படிப்போடு இசையிலும் தன்னை மேம்படுத்திக்கொண்டான்.
இசையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு மும்பையில் "இப்டா"வின் நாடகங்களைப் பார்க்கத் தூண்டி இருக்கவேண்டும். ஏற்கெனவே பொதுவுடைமைக் கொள்கையில் ஊறிய குடும்பத்தில் பிறந்தவரல்லவா?
எஞ்சினீரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்து சொந்த ஊருக்கு திரும்பியதும் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக இயங்க ஆரம்பித்தார் சலபதி.
இப்டாவின் கிளை அமைப்பான "ஆந்திரப் பிரதேச பிரஜா நாடிய மண்டலியின்" நாடகங்களில் சலபதியின் இசையில் பாடல்கள் பொதுவுடைமைக் கொள்கைகளை பாமர் மக்களிடம் கொண்டு சேர்த்தன.
வருடம் 1948. சுதந்திர இந்தியாவில் கம்யூனிச இயக்கம் ஒரு புரட்சிகரமான இயக்கமாக கருதப்பட்டு நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு அதன் முன்னணித் தலைவர்களையும், தொண்டர்களையும் நாடெங்கும் கைது செய்து சிறையில் அடைக்க ஆரம்பித்தது.
சலபதிராவும் சிறை சென்றார். ஒன்றல்ல இரண்டல்ல. முழுசாக மூன்று வருஷங்கள். அரசியில் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கும் பலரை பாடவைத்து அமர்க்களப் படுத்திவிட்டார் அவர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகவே சிறையில் அவரது வாழ்வு கழிந்தது. மூன்றாண்டுகளுக்கு
பிறகு விடுதலையான சலபதிராவின் வருகைக்காக திரை உலகம் காத்துக்கொண்டிருந்தது.
அவரது சகோதரர் டி. பிரகாஷ் ராவ் அப்போது திரை உலகில் ஒரு உதவி இயக்குனராக சேர்ந்து படிப்படியாக முன்னேறி ஒரு தெலுங்குப் படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றிருந்தார். அந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக திரை உலகில் தனது வலது காலை எடுத்துவைத்து நுழைந்தார் சலபதிராவ்.
இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கத்தை வாசகர்களுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சலபதி ராவ் அவர்களின் முதல் பட வாய்ப்பு எப்படி யாரால் கிடைத்தது என்ற தகவல்கள் சரியாகப் பதிவாகவில்லை.
ஏற்கெனவே அவரது சகோதரர் திரை உலகில் இருந்த காரணத்தால் அவரது பிரவேசம் எளிதாக அமைந்திருக்க கூடும். இயக்குனர் பிரகாஷ் ராவ் சலபதியின் இசைத் திறமையை நன்கு அறிந்திருந்த காரணத்தால் அவருக்கு முதல் வாய்ப்பை கொடுத்திருக்க கூடும்.
ஆனால் அதன் பிறகு அவரது முன்னேற்றத்துக்கு காரணம் அவரது கடும் உழைப்பும். திறமையுமே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எது எப்படியோ.. சலபதிராவ் என்ற உன்னதமான இசை அமைப்பாளர் திரை உலகுக்கு கிடைத்து விட்டார்.
(சிகரம் தொடுவோம்)
|