வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

டி. சலபதிராவ்

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

1. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளியே கொண்டு வருவதற்கு வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும். வலிமையோ புத்திசாலித்தனமோ அல்ல.
- வின்ஸ்டன் சர்ச்சில்


வருடம் 1942 . இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நேரம்.

"செய் அல்லது செத்துமடி" என்ற கோஷத்துடன் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கிய காலகட்டம்.

அந்நிய காலனி ஆதிக்கத்தின் காரணமாக நமது கலாச்சாரமும் பாதிக்கப் படத் தொடங்கிய காரணத்தால் மக்களிடம் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி "இந்திய மக்கள் நாடக இயக்கம்" (INDIAN PEOPLE 'S THEATRE ASSOCIATION ) சுருக்கமாகச் சொன்னால் "இப்டா" (IPTA ) என்ற மேடை நாடக அமைப்பை இந்த வருடம் தான் நிறுவியது. ஆரம்பத்தில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் ஆரம்பமான இந்த அமைப்பானது மெல்ல மெல்ல மும்பை, அஸ்ஸாம் ஆகிய மற்ற மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

இடதுசாரி இயக்கத்தின் கலாசார அமைப்பு என்று இதனைச் சொல்லலாம். பிரிட்டிஷாரின் அடக்குமுறை, நிலச்சுவாந்தார்களின் ஆதிக்க மனப்பான்மை, சமூகத்தில் புரையோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மேடை நாடகங்கள் வாயிலாக பாமர மக்களிடையே எடுத்துச் செல்ல கம்யூனிச இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது "இப்டா" தான்.

இதன் ஆரம்ப கால உறுப்பினர்களாக ப்ரிதிவிராஜ்கபூர் (ராஜ்கபூர் அவர்களின் தந்தை), பிஜோன் பட்டாச்சார்யா, ரித்விக் கதக், உத்பல் தத், கே.ஏ. அப்பாஸ், சலீல் சௌத்ரி, ஜ்யோதிந்திர மொய்த்ரா, நிரஞ்சன் சிங் மான், மற்றும் பல பின்னாளைய பிரபலங்கள் "இப்டா"வில் தான் தங்கள் கலைவைழ்க்கையைத் தொடங்கினார்கள்.

1942-இல் மூண்ட இரண்டாம் உலப்போரின் பின்னணியில் துவங்கிய "இப்டா" இயக்கம் 1943-இல் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக உருவான பஞ்சம், பட்டினிச்சாவுகளை (இந்தப் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்) மற்றைய மாநிலத்தவரின் கவனத்திற்கு கொண்டு வந்து, காலனியர் ஆதிக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சீரழிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.

1943-இல் அனைத்திந்திய மக்கள் நாடக அமைப்பின் கருத்தரங்கம் மும்பையில் நடைபெற்றது. அதில் "இப்டா"வை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.

அதன் விளைவாக - "இப்டா" - பொதுவுடைமைக் கட்சியினரால் இந்தியாவெங்கும் கொண்டு செல்லப் பட்டது. அப்படி வந்தபோது தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வலுவாக இருக்கும் ஆந்திரம், கேரளம் ஆகிய இடங்களில் "இப்டா" வேரூன்றி செழிக்க ஆரம்பித்தது. குறிப்பாக ஆந்திரத்தில் - இப்டாவின் கிளை அமைப்பு "ஆந்திரப் பிரதேச பிரஜா நாட்டிய மண்டலி" என்ற பெயரில் நாடகக் குழுக்களாக வளர ஆரம்பித்தன.

வருடங்கள் நகர்ந்தன. 1947 -இல் இந்தியா சுதந்திர நாடாக உருவானது. சுதந்திரம் கிடைத்ததென்னவோ உண்மைதான். ஆனால் அது யாருக்கு என்பதுதான் கேள்விக்குறியானது. வெள்ளையரிடம் இருந்து தப்பி ஆதிக்க சமூகத்தின் பிடியில் பாமர மக்கள் அடிமைப்பட்டு கிடக்க ஆரம்பித்தனர். அவர்களைப் பொறுத்த அளவில் சுதந்திரம் என்பது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலுமே இருந்து வந்தது.

இந்த நிலையில் தங்கள் "தலைவிதி"யை காரணம் காட்டியே அடிமைகளாக்கப்பட்டிருந்த கல்வியறிவு மறுக்கப்பட்டு, ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டிருந்த கிராமத்து விவசாயக் கூலிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய அவசியம் "இப்டா"வுக்கு ஏற்பட்டது.

அந்த வகையில் ஆந்திரப் பிரதேச பிரஜா நாட்டிய மண்டலியின் நாடகங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்ட ஆரம்பித்தன.

அந்தக்கால வழக்கப்படி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் துண்டுப்ப்ரசுரங்கள் மூலமாகவும், தெருமுனை நாடகங்கள் மூலமாகவும் ஆந்திராவில் வேரூன்ற ஆரம்பித்தன.

நாடகங்கள் என்றால் பாடல்கள் இல்லாமலா? எளிமையான வரிகளில் பாமர மக்களை ஈர்க்கும் விதத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பாடல்கள் மூலமாக மக்களிடம் எடுத்துச் சென்றதில் "இப்டாவின்" கிளை அமைப்பான "ஆந்திரப் பிரதேச பிரஜா நாட்டிய மண்டலி" பெருவெற்றி பெற்றது.

என்னடா இது? சலபதிராவ் அவர்களைப் பற்றி எழுத வந்துவிட்டு இவன் என்னமோ "இப்டா" "கிப்டா: வென்று அளந்து கொண்டிருக்கிறானே என்று நினைப்பவர்களுக்கு..

இந்த "இப்டா"வின் மூலமாக நமக்கு கிடைத்த பொக்கிஷம் தான் இசை அமைப்பாளர் திரு. டி. சலபதி ராவ்.

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இசை அமைத்திருந்தாலும் அவரது இசை அமைப்பில் வெளிவந்த பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டு அகலாதவை.

ஆந்திரத்தில் இருந்து தமிழுக்கு வந்த இசை அமைப்பாளர் என்றாலும் தனது பாடல்களில் "கோங்குரா" வாசம் வீசாமல் தமிழ் மண்ணுக்கே உரிய வகையில் இசை அமைத்துத் தந்தவர்.

அவரது பாடல்களை புதிதாகக் கேட்பவர்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் இவை ஒரு தெலுங்கு தேசத்து இசை அமைப்பாலரால் மெட்டமைக்கப் பட்ட பாடல்கள் என்று நம்பவே முடியாது. அந்த அளவுக்கு தமிழ் மண்ணின் மனம் வீசும் பாடல்களைத் தந்தவர் அவர். தமிழைத் தவிர தெலுங்கிலும் தன் இசை அமைப்பில் தனி முத்திரை பதித்தவர் அவர்.

அறுபது எழுபதுகளில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிகரமாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த பிரபல நடிகையிடம் ஒரு நேர்காணலின் பொழுது நிருபர் ஒருவர் "உங்களுக்கு பிடித்த இசை அமைப்பார் யார்?" என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல் அதிரடியாக பளிச்சென்று " சலபதிராவ் தான்" என்று பதிலளித்தார் அந்த நடிகை. அவர் வேறு யாருமல்ல. தற்போதைய தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் தான்.

தான் இசை அமைத்த முதல் தமிழ்ப் படத்திலேயே பாடல்களைக் கேட்டவர்களைத் " தேன் உண்ணும் வண்டாக" அவரது இசையில் மெய்மறக்க செய்தவர் அவர்.

புனர்ஜன்மம் எடுத்தது போல உற்சாகத் துள்ளலை ஏற்படுத்தக்கூடிய அதே நேரத்தில் கேட்பவர் ஆன்மாவை ஊடுருவி மயக்க வைக்கும் இன்னிசையின் சங்கமம் அவரது பாடல்கள்.

இசை வானில் ஒரு "அமரதீபமாய்" ஒளிவீசிக்கொண்டிருக்கும் டி. சலபதி ராவ் அவர்கள் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மட்டும் அல்ல. பொதுவுடைமை வாதி,

படித்தவர். பண்பு நிறைந்தவர். பொதுவுடைமைவாதி. திரை உலகில் இருக்கும் இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இசை அமைப்பாளரிடம் பணிபுரியும் இசைக்கருவிகளை கையாளும் துணைநிலை ஊழியர்கள் ஆகியவர்களின் நலன் கருதி திரை இசைத் தொழிலாளர்களுக்கு என்று "cine musicians union" என்ற தொழிற்சங்க அமைப்பு ஒன்று உருவாகக் காரணகர்த்தாவாக இருந்தவர். ஆரம்ப காலத்தில் இதில் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தவர். ..நலிந்த இசைக் கலைஞர்களுக்கு புகலிடமாக இருந்தவர். சொல்லிக்கொண்டே போகலாம் அவரது அருமை பெருமைகளை…

சிகரம் தொட்ட அந்த மாபெரும் சாதனையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கபிலேஸ்வரம் என்ற கிராமத்துக்கு நாம் செல்லவேண்டும். அங்கிருந்து தான் அவரது வாழ்க்கைப் பயணம் ஆரம்பமாகிறது....

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</