சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 12
12. நீங்கள் எவ்வளவு சாதித்திருக்கிறீர்கள் என்பதோ அல்லது எவ்வளவு வெற்றிகரமான மனிதராக இருக்கிறீர்கள் என்பதோ ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் செய்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. . கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறையவே இருக்கின்றன. . சாதிப்பதற்கும் இன்னும் அதிகமாவே இருக்கின்றன . - பராக் ஒபாமா.
அறுபதுகளின் பிற்பகுதி முதல் எழுபதுகளின் முற்பகுதி வரை எஸ்.எம். சுப்பையா நாயுடு
அவர்களின் இசையில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் அதுவரை அவரது இசை அமைப்பில் வெளிவந்த படங்களிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.
"கொஞ்சும் சலங்கை" வரை அவரது இசையில் கர்நாடக இசையின் தாக்கம் சற்றே மேலோங்கி நின்றாலும், அதன் பிறகு வந்த படங்களில் மெல்லிசையின் தாக்கம் பரவலாக இருந்து வந்தது.
வாத்தியக் கருவிகளை - குறிப்பாக வயலின்களை அவர் பயன்படுத்திய விதம் பாடலைக்
கேட்டவுடனேயே இது சுப்பையா நாயுடுவின் பாடல் என்று "பளிச்" சென்று கண்ணை
மூடிக்கொண்டு சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது.
"ஆசை முகம்" தொடங்கி "குல கெளரவம்" வரை வந்த படங்களின் பாடல்களைக் கேட்டோமானால் இதனை நன்றாக உணர முடியும்.
"ஆசை முகம்" படத்தில் இடம் பெற்ற ஒரு டூயட் பாடல் " நீயா இல்லை நானா. நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா" - கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடிய ஒரு இனிமையான பாடல் இது. இந்தப் பாடலின் சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் இடையில் வயலின்களை இணைப்பிசையாக சுப்பையா நாயுடு பயன்படுத்தி இருக்கும் விதம் ஒரு தனித்துவத்தை அவருக்கு கொடுத்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற டி.எம். சௌந்தரராஜன் தனித்து பாடிய பாடல் "இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை" என்று தொகையறாவாக துவங்கி.. “எத்தனை பெரிய மனிதருக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு. எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு" - என்ற பல்லவியோடு ஆரம்பமாகும்.
இந்தப் பாடலின் சரணத்திலும், குறிப்பாக இரண்டாவது சரணத்தில் "கோழியைப் பாரு காலையில் விழிக்கும். குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்" என்ற முதலடியை அடுத்து வயலின்களின் இணைப்பிசை - ஒரு நிமிடத்துக்கும் குறைவான கால அளவில் கொடுத்திருப்பார். பாடல் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு இந்த இணைப்பிசை ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. பாடல் பெருவெற்றி பெற்றுவிடவே இந்த உத்தியை மெல்லிசையில் தனது தனிப்பாணியாக அடுத்து வந்த படங்கள் ஒவ்வொன்றிலும் கையாள ஆரம்பித்தார் சுப்பையா நாயுடு. ஆசை முகம் படத்தில் "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு" என்ற டி.எம். எஸ். சின் பாடலும் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.
அதே போல சரணம் முடிந்து மீண்டும் பல்லவிக்கு திருப்புவதற்கு முன்பும் வயலின்களின் இணைப்பிசையை கொடுக்கும் உத்தியையும் அவர் அதிகமாக கையாளத் தொடங்கினார்.
உதாரணமாக ரவிச்சந்திரன் - ஜெயலலிதா இணைந்து நடித்த "பணக்காரப் பிள்ளை" என்ற படத்தில் இடம் பெற்ற "மாணிக்க மகுடம் சூட்டிக்கொண்டாள் மகாராணி மகாராணி" பாடல். டி.எம்.சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் இணைத்து இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார்கள்.
முதலில் டி.எம். எஸ். அவர்கள் பாடி முடித்ததும் அடுத்து பல்லவியில் பி. சுசீலா "காணிக்கை என்று சொல்லித் தந்தான் மகாராஜன். மகாராஜன்." என்று இணைவார். அதற்கு முன்னால் ஒரு வினாடி நேர இணைப்பிசையாக இடம்பெறும் வயலின்களின் துரிதகால இசை - கேட்ட மாத்திரத்திலேயே இது சுப்பையா நாயுடுவின் பாடல் என்று அடையாளம் காட்டிவிடும்.
ஆசை முகம் படத்திற்குப் பிறகு ஆண்டொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் சுப்பையா நாயுடுவுக்கு பட வாய்ப்புகள் சுருங்க ஆரம்பித்தன. ஆரம்பம் முதலே அவருக்கு ஒரே நிலையான வாய்ப்புகள்தான் இருந்துவந்தன என்பதால் முற்றிலும் ஒதுக்கப்பட்டவராக இல்லாமல் கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றை சரிவரப் பயன்படுத்திக்கொண்டு தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவராகவே அவர் இருந்து வந்தார்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்கள் தவிர, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகிய இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசை அமைத்து வந்தார்.
அறுபதுகளின் பிற்பகுதியில் ஜெயசங்கர் - ஜெயலலிதா இணைந்து நடித்து வெளிவந்த இன்னொரு படம் "ராஜா வீட்டுப் பிள்ளை" - எஸ். எம். சுப்பையா நாயுடுவின் இசையில் வெளிவந்த படம்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற "பூவோ பூவு" என்ற எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் பூக்களின் பெயர்களை வரிசைப் படுத்தி ஆரம்பித்து "அரும்பா இருந்தது நேத்து இது அழகா சிரிக்குது பூத்து" என்று பல்லவி வளரும் பாடல் - உண்மையிலேயே ஒரு அழகான பாடல். பூவிற்கும் பெண்ணாக நடித்த ஜெயலலிதாவுக்கு எல்.ஆர். ஈஸ்வரியை பாடவைத்திருந்தார் சுப்பையா நாயுடு.
அடுத்து ஒரு டூயட் பாடல் "ராஜா வீட்டுப் பிள்ளைன்னாலும் நாலும் இருக்கணும். அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும் நியாயம் இருக்கணும்" - டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடியிருந்தனர். மெல்லிசையிலும் தன் திறமையை சுப்பையா நாயுடு நிரூபித்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு தத்துவப் பாடலை கட்டாயம் குறிப்பிட்டே
ஆகவேண்டும். பாடலுக்கு முதலிசையாக ஹார்மோனியத்தில் ஒரு அழகான பிட். தொடர்ந்து டி.எம். எஸ்.ஸின் அழுத்தமான குரலில் பாடல் -
"பைத்தியக்காரன் பத்தும் சொல்வான். போகட்டும் விட்டுவிடு.
படைத்தவன் இருப்பான் பார்த்துக்கொள்வான். பயணத்தை தொடர்ந்துவிடு - நீ பயணத்தை தொடர்ந்து விடு. - கருத்துச் செறிவுள்ள பாடலை அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். எம். சுப்பையா நாயுடு.
சரணத்தில் வரும் வரிகள்:
"ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் இருப்பானா
அத்தனை பேருக்கும் நல்லவானாக ஆண்டவன் கூட இருப்பானா.
உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா
அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக் கூடிய காரியமா" -
அடுத்தவர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற்றத்தில் தளர்ந்து போகும் மனிதருக்கு தன்னம்பிக்கையையும் புது தெம்பையும் கொடுக்கும் வரிகள்.
பாடலின் இறுதியிலோ "காய்த்த மரம் தான் கல்லடி படுமென கண்கூடாகப் பார்த்ததுண்டு - புத்தன் இயேசு காந்தியைக் கூட குற்றம் சொல்லிக் கேட்டதுண்டு"
“அடுத்தவர் பொறாமையில் பேசும் வார்த்தைகள் நமக்கு மறைமுகமான பாராட்டு” (JEALOUS IS AN INDIRECT FORM OF COMPLEMENT ) என்பதை எடுத்துச் சொல்லி பொறாமையினால் பாதிக்கப் பட்ட உள்ளங்களை ஆறுதல் படுத்தி தெம்பூட்டும் அற்புத வரிகள். இந்த வரிகள் கேட்பவர் மனதில் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறது சுப்பையா நாயுடுவின் மெட்டும் இசையும். வார்த்தைகள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் கேட்பவர் மனதில் அழுத்தமாகப் பதியவேண்டும் என்பதில்தான் அந்தநாளைய இசை அமைப்பாளர்கள் எவ்வளவு கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்!
அதே கால கட்டத்தில் வெளிவந்த "நாம் மூவர்", "சபாஷ் தம்பி" - ஆகிய படங்கள் சுப்பையா நாயுடுவிற்கு படங்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள உதவின என்றே தான் சொல்லவேண்டும்.
அடுத்து ஜெமினி கணேசன், ஏ.வி.எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்த "சக்கரம்" என்ற படத்திற்கு இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. இந்தப் படத்தில் டி.எம். சௌந்தரராஜன் பாடிய "காசேதான் கடவுளப்பா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா" என்ற பாடல் இன்று வரை காற்றலைகளில் பவனி வருகிறது.
சுப்பையா நாயுடுவின் இசையில் குறிப்பிடப் படவேண்டிய ஒரு படம் "முத்துச் சிப்பி" - ஜெய்சங்கர் - ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தில் பி. சுசீலா பாடிய "மாலையிட்ட கணவன் நாளை வருவான் இந்த முத்துவண்ணச் சித்திரத்தின் முகம் பார்க்க" - என்ற பாடல் இன்றளவும் பிரபலம். பல்லவியில் துரிதமாக எடுப்பு. சரணங்களோ நயம் மெல்லடி எடுத்துவைத்தது போன்று நிதானமாக - அவரது ஸ்பெஷலான வரிகளுக்கிடையேயான வயலின்களின் இணைப்பிசையோடு - நடை மாறி வந்து பல்லவியைத் தொடும்போது மீண்டும் வேகமெடுக்கும் பாடல். பல்லவி முடித்து சரணம் ஆரம்பிக்கும் முன்பாக சுப்பையா நாயுடு கொடுத்திருக்கும் வயலின்களின் இணைப்பிசையைக் கேட்கும் போதே படத்தில் இந்தப் பாடல் இடம் பெறும் காட்சி அமைப்பானது ஒரு விறுவிறுப்பான கட்டத்துக்கானது என்பதை படத்தை பார்க்காமலே நாம் உணர முடியும்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு குறிப்பிடப் படவேண்டிய பாடல் - சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஒரு அசரீரிப் பாடல்.
"தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக. கண் பட்ட இடம் பூமலரும் பொன்மகளே வருக - நீ வருக" - என்ற இந்தப் பாடல்"கலைச்செல்வி"
ஜெயலலிதா அவர்கள் அரசியலில் நுழைந்து இன்று தமிழக முதல்வராக மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களால் அவரது புகழ் பாடும் பாடலாக நிரந்தரப் புகழ் பெற்றுவிட்ட பாடலாக அமைந்துவிட்டிருக்கிறது. பாடலுக்கு இசை அமைத்த எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களின் திறமைக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மறைமுக அங்கீகாரம் இது.
"தங்க கோபுரம்" - இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை மையமாக வைத்து தயாரிக்கப் பட்ட படம். ஸ்ரீவித்யாவுக்கு அம்மாவாக ஜெயலலிதா நடித்திருக்கிறார் என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். ஜெயசங்கர், ஜெயலலிதா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்றிருந்த இந்தப் படத்தை இயக்கியவர் எம்.எஸ். சோலைமலை. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் பி. சுசீலா - ஜிக்கி இணைந்து பாடிய "மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை. இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை" என்ற பாடல் எழுபதுகளின் இறுதிவரை காற்றலைகளில் தவழ்ந்து வந்து செவிகளை நிறைத்த இனிமையான ஒரு பாடல்.
இப்படியாக அறுபதுகளின் இறுதியில் சுப்பையா நாயுடு அவர்களின் இசை அமைப்பில் வெளிவந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையா விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கும் வண்ணம் அமைந்திருந்தன.
என்றாலும் - மெல்லிசையின் தாக்கம் மேலோங்கி நின்ற கால கட்டம். இரட்டையர்களாக
அதுவரை பவனி வந்துகொண்டிருந்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் தனித்தனியே செயல்பட ஆரம்பித்த நேரம். விஸ்வநாதன் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்தார்.
பிரபல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவரையே பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். குறிப்பாக ஸ்ரீதர், பி. மாதவன், ஏ.சி. திருலோகச்சந்தர் போன்ற இயக்குனர்களின் அபிமான இசை அமைப்பாளராக எம்.எஸ். வி. வலம் வர ஆரம்பித்தார்.
தேவர் பிலிம்ஸ் நிறுவனமும், ஏ. பி. நாகராஜன் அவர்களும் கே.வி. மகாதேவனை ஆஸ்தான
இசை அமைப்பாளராக கொண்டு இயங்க ஆரம்பித்தனர். (கே.வி. மகாதேவனுக்கு பிறகு தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் படங்களுக்கு தொடர் வாய்ப்புகளை சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் பெற்றுக்கொண்டு முன்னேறி வர ஆரம்பித்தனர்.)
இசை அமைப்பில் வெளிவந்த படங்கள் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெறாமல் போகவே - எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுக்கு "இலையுதிர் காலம்" ஆரம்பமாகத் தொடங்கியது.
(சிகரம் தொடுவோம்)
|