வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 11

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

11. தோல்வி என்று எதுவும் இல்லை. அவை எல்லாம் நமக்கு ஏற்படும் அனுபவங்களும் அவற்றை நாம் எதிர்கொள்வதும் தான். - டாம் க்ரூஸ்.

சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியில் பாடகர் மனோ தொகுத்து வழங்கும் "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் திருமதி. எஸ். ஜானகி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

தனது ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்துகொண்ட எஸ். ஜானகி அவர்கள் முக்கியமாகக் குறிப்பிட்டது 'சிங்கார வேலனே தேவா" பாடலைப் பற்றித்தான்.

இப்போதைய அறிவியல் தொழில் நுட்பங்கள் எதுவுமே இல்லாமலிருந்த அன்றைய காலகட்டத்தில் இந்தப் பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டதே ஒரு மிகப் பெரிய சாதனைதான்.

சுந்தரர் தேவாரமான " மந்திரமாவது நீறு" என்ற பதிகத்தினை ஆபேரி ராகத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் வாசித்திருந்தார். அந்த வாசிப்பை ஒலிப்பதிவு செய்துகொண்டார்கள். அந்த வாசிப்புக்கு பொருத்தமாக கு. மா. பாலசுப்ரமணியம் "சிங்கார வேலனே தேவா" பாடலை எழுத - பாடலையும் அதற்கான ஸ்வரக்குறிப்புகளையும் பாடவந்த எஸ். ஜானகி அவர்களிடம் கொடுத்து அவரைப் பாடவைத்தார் சுப்பையா நாயுடு.

பிறகு இரண்டையும் ஒருங்கிணைக்கும் வேலை. ஒலிப்பதிவாளர் திரு. ஜீவா அவர்கள் உயிரைக் கொடுத்து உழைத்தார் என்றே சொல்லவேண்டும்.

இப்போதெல்லாம் அந்தக் கஷ்டமே இல்லை. டூயட் பாடலைக்கூட இருவரையும் சேர்ந்துதான் படவைத்து ஒலிப்பதிவு செய்வது இல்லையே! பாடகர் அவருக்கு சௌகரியப்படும் நேரத்தில் வந்து தனது பகுதியைப் பாடிவிட்டுச் செல்கிறார். பாடகி தனக்கான நேரத்தில் வந்து தனது பகுதியைப் பாடிவிட்டுச் செல்கிறார்.
இரண்டையும் கணினி சுலபமாக இணைத்துவிடுகிறது.

தனது குரலுக்கு நடிப்பவர் யார். அவரது குரலுக்கு பொருந்துமாறு பாடவேண்டுமே என்ற உணர்வு கூட இருப்பதாக தெரிவதில்லை. அது தெரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஏனென்றால் அவர்கள் பாடுவதெல்லாம் நடிக, நடிகையரின் குரல்களுக்கு அல்லவே. டப்பிங் ஆர்டிஸ்டின் குரலுக்கு தானே அவர்கள் பின்னணி பாடுகிறார்கள்? ஆகவே அந்தக் கவலையும் இல்லை. உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டிய அவசியமே தேவைப்படுவதில்லை. அந்த இடத்தில் வாத்தியங்களை ஓங்கி ஒலிக்க வைத்து வார்த்தைகளே புரியாதபடி செய்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை.

இப்படி வெளிவரும் பாடல்களைக் கேட்கும் நமக்கு "சிங்கார வேலனே தேவா" பாடல் உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இந்தப் பாடலுக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடு பயன்படுத்திய இசைக் கருவிகள் மூன்றே மூன்று தான். நாதஸ்வரம், தவில், - மற்றும் எஸ். ஜானகியின் குரல். அவ்வளவே தான்.

அதிலும் பாடலின் முடிவில் வரும் ஸ்வரங்களை தான் பாடிய விதத்தை எஸ். ஜானகி அவர்கள் "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டபொழுது உண்மையிலேயே ஒரு கணம் சிலிர்த்துப் போனது நிஜம்.

"நான் கர்நாடக இசை படிச்சதே கொஞ்சம் தான். என் அக்காவோட குரு "பைடிசாமி"
என்கிறவரிடம் தான் நானும் குண்டூரிலே இருந்தபோது கத்துக்க ஆரம்பிச்சேன்.

ஆனால் கொஞ்ச காலத்துலேயே அவர் இறந்துட்டாரு. மரணம் அடையறதுக்கு கொஞ்சநாள் முன்னாடி என் தலையிலே கைய வச்சு "நீ ரொம்ப நல்லா வருவே" என்று மனப்பூர்வமா எனக்கு ஆசீர்வாதம் பண்ணினாரு. இந்த சிங்கார வேலனே தேவா பாட்டையும், அதிலே பின்னாடி வர ஸ்வரங்களையும் ஒரே தடவை கேட்டுவிட்டே வேற எந்த ஒத்திகையும் இல்லமே அப்படியே ஒரே டேக்கிலே நான் பாடிக்கொடுத்தேன் என்றால் அதுகெல்லாம் காரணம் என் குருநாதரோட ஆசீர்வாதம் தான்.” - என்று
எஸ். ஜானகி கூறியபோது அவரது அசாதாரணமான திறமையை எண்ணி வியக்காமல்
இருக்க முடியவில்லை.

நாதஸ்வரத்தில் வரும் சங்கதிகள், பிருகாக்கள் எல்லாமே ஜானகியின் குரலில் வெளிப்படும்போது - பாடலின் கடைசியில் வரும் அதிவேக ஸ்வரங்களில் எஸ். ஜானகியின் குரலும், நாதஸ்வரமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து வரும்போது - பாடல் நம்மை பிரமிக்க வைக்கிறது.

இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, எஸ். ஜானகி மற்றும் தனித்தனியே எடுக்கப்பட்ட இரண்டு பதிவுகளையும் ஒன்று சேர்த்த ஒலிப்பதிவாளர் திரு. ஜீவானந்தம் ஆகிய மூவரின் கடின உழைப்பு -பாடலுக்கு வாயசைத்து நடித்த நடிகையர் திலகம் சாவித்திரி வெளிப்படுத்திய பிரமிக்கவைக்கும் பாவனைகள் - எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பாடலை ஒரு மாபெரும் வெற்றிப்பாடலாக்கின. படம்
வெளிவந்த போது விற்பனையில் சாதனை புரிந்த இசைத்தட்டு "கொஞ்சும் சலங்கை"
பாடல்களின் இசைத்தட்டுதான் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.

பல்லவியை அடுத்து வரும் "செந்தூரில் நின்றாடும் தேவா - தேவர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா" என்ற வரிகளைப் பாடும்போது "செந்தூரில்" என்ற வரியில் வரும் "ச"விற்கும் "சிறை தீர்த்து" என்பதில் வரும் "ச"வுக்கும் உள்ள துல்லியமான வேறுபாட்டை எஸ்.ஜானகியின் குரல் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும்.

ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தாய் மொழியோ தெலுங்கு. இசைத்துறைக்கோ அவர் அப்போதுதான் புதிதாக வந்திருந்த இளம் பாடகி. தமிழ் வார்த்தைகளை - அதுவும் தூய தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கத் தடுமாறினால் - அதைக்கூட "மழலை"யாக மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தெரிந்த ரசிகர்கள் நிறைந்த தமிழ் நாடு. என்றாலும் மொழியைச் சிதைக்காமல் பொருளை உணர்ந்து கவனத்துடனும் சிரத்தையுடனும் எஸ். ஜானகி அவர்கள் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார் என்றால் என்ன சொல்லி அந்த இசை அரசியைப் பாராட்டுவது? (இதே போலத்தான் பி. சுசீலாவும். அதனால் தான் அவர்கள் இருவரும் ஈடு சொல்ல முடியாத பின்னணிப் பாடகியராக இன்றும் நிலைத்த புகழோடு இருந்து வருகிறார்கள்.)

"சிங்கார வேலனே தேவா" பாடல் ஒன்று மட்டும் தானா "கொஞ்சும் சலங்கை"யில் பிரபலமானது? இல்லை. இன்னும் இருக்கின்றன.

"கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதியபாட்டு" - பி. லீலாவின் கணீர்க்குரலில் வரும் ஒரு நடனப் பாடல். கானடா ராகத்தில் அற்புதமான மெட்டைப் போட்டு பாடலைப் பிரமாதப் படுத்தி இருக்கிறார் எஸ். எம். சுப்பையா நாயுடு.

இதே போல "காணக் கண்கோடி வேண்டும்" என்ற ராகமாலிகைப் பாடல் - கவிஞர் வி. சீதாராமன் இயற்றியது. பல்லவியின் இந்த முதல் வரிகள் மட்டும் பாபநாசம் சிவன் அவர்களின் பிரபலமான கீர்த்தனையின் வரிகள். குமரி கமலா பரத நாட்டியமாடும் இந்தப் பாடலில் சிதம்பரம், திருவரங்கம், மதுரை, திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிய ஆலயங்களை சென்று தரிசித்த நிறைவைத் தரும் ஒரு அற்புதமான பாடல். இந்தப் பாடலை பைரவி, கேதார கௌளை, ஹம்சானந்தி, சிம்மேந்திர மத்யமம், கேதாரம் ஆகிய ராகங்களை ஒன்று சேர்த்து அருமையாக இசை அமைத்திருக்கிறார் எஸ். எம். சுப்பையா நாயுடு. பாடலைப் பாடியிருப்பவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி.

அடுத்து வள்ளலாரின் திருவருட்பா. "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற" என்ற அருட்பா விருத்தமாக நாதஸ்வரத்துடன் இணை சேர்ந்து ஒலிக்கிறது. பிலஹரி ராகத்தை ஆலாபனையாக காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் நாதஸ்வரத்தில் வாசிக்க சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அற்புதமாக பாடியிருக்கிறார். வேறு எந்த இசைக் கருவிகளும் பாடலுக்கு பயன்படுத்தவில்லை.

பிரபல பாடகி சூலமங்கலம் ஜலக்ஷ்மி அவர்களுக்கு இந்தப் படமும், பாடல்களும் ஒரு திருப்புமுனை என்றே சொல்லவேண்டும். இந்தப் படத்தில் அவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுக்கு உதவியாளராக பணியாற்றி திரை இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

அடுத்து வருவது ஒரு போட்டி நடனப் பாடல் - குமரி கமலாவும், குசல குமாரியும் ஆடும் ஒரு போட்டி நடனப் பாடல்.

"பிரம்மன் தாளம் போட" என்ற விருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. விருத்தத்தை தொடர்ந்து வரும் "அபிநயங்கள் காட்டியே நீ ஆடலாமோ போட்டியே" - என்ற பல்லவியை ஷண்முகப்ரியா ராகத்திலும் தொடர்ந்து வரும் சரணங்களை முறையே நவரச கன்னடா, உசேனி, மத்யமாவதி போன்ற ராகங்களில் அற்புதமாக அமைத்திருக்கிறார் எஸ். எம். சுப்பையா நாயுடு.

ராதா ஜெயலட்சுமியும், சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும் இணைந்து பாடலை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். பாடல் காட்சியில் குமாரி கமலா வெளிப்படுத்தும் அடவுகள் ஒவ்வொன்றும் "பளிச்" என்றும் அழுத்தமாகவும் அமைந்திருக்கின்றன. சாஸ்த்ரீய சுத்தமான சம்பிரதாயமான இப்படிப்பட்ட ஒரு பரதநாட்டியக் காட்சியை தமிழ் சினிமாவில் அமைக்க தயாரிப்பாளருக்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் படத்தை தயாரித்து இயக்கி இருந்த எம். ராமன் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

(பாடலை காட்சியுடன் கண்டு ரசிக்க இணைப்பு: http://www.youtube.com/watch?v=7YVB-iqrkbo&noredirect=1)

இப்படி நடனமும் நாதஸ்வர இசையும் ஒருங்கிணைந்த கதையம்சம் கொண்ட படத்தில் இசை அமைக்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு தனது முழுத் திறமையும் வெளிப்பட பாடல்களை அமைத்திருந்தார் எஸ். எம். சுப்பையா நாயுடு.

என்ன செய்து என்ன?

படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் தோல்வியையே தழுவியது. ஆனாலும் - பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்று இன்று வரை திரை இசையில் வரலாற்று சாதனை படித்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்து மீண்டும் "பக்ஷிராஜா" நிறுவனத்துடன் இணைந்தார் சுப்பையா நாயுடு. படம்: "கல்யாணியின் கணவன்."

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி இணைந்து நடித்த இந்தப் படத்தில் எம்.ஆர். ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும் இடம்பெற ஸ்ரீராமுலு நாயுடு அவர்களின் இயக்கத்தில் படம் வெளிவந்தது. இன்றும் கூட தொலைகாட்சி அலைவரிசைகளில் படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சுப்பையா நாயுடுவின் இசை படத்தின் வெற்றிக்கு துணை நின்றது.

"சொல்லத் தெரியாது. சொல்லவும் முடியாது" - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலும்,

"எனது ராஜசபையினிலே ஒரே சங்கீதம். அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்." பாடலும் - (இதுவும் டி.எம். எஸ். - பி. சுசீலா பாடியபாடல் தான்) இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் பெயர் சொல்லும் பாடல்களாக அமைந்துவிட்டிருக்கின்றன. படத்தின் பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருந்தார் சுப்பையா நாயுடு.

அடுத்து மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஒரு படம். மோகன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இணைந்து நடித்த இந்தப் படத்தில் சுப்பையா நாயுடு அவர்கள் மெட்டமைத்த அனைத்து பாடல்களுமே "ஹிட்" பாடல்களாகின

படம் : ஆசை முகம்.

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.