வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சி. ஆர். சுப்பராமன் -1

பி.ஜி.எஸ். மணியன்  

பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அவை மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப் படுகிறதோ அதே ராகத்தில் தான் படங்களிலும் கையாளப்படும்.

உதாரணமாக - சலங்கை ஒலி படத்தில் "பால கனகமய",

சிந்துபைரவியில் "மஹா கணபதிம்" ,

கவரிமான் படத்தில் "ப்ரோவபாரமா",

சங்கராபரணம் படத்தில் வரும் "ப்ரோசேவாரெவருரா", "மானச சஞ்சரரே" ஆகிய பாடல்களை கூறலாம்.

("சங்கராபரணம்" படத்தில் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் பாடலில் "தொரகுணா இட்டுவண்டி சேவா" என்ற பல்லவியின் ஆரம்ப வரிகள் மட்டுமே தியாகராஜருடையதாகவும் மற்றவை வேட்டுரி சுந்தர மூர்த்தி அவர்கள் எழுதியவையாகவும் இருந்ததால் "தொரகுணா" கீர்த்தனையின் ஒரிஜினல் ராகமான பிலஹரியில் அல்லாமல் கல்யாணி ராகத்தில் இசை அமைத்து இருந்தார் கே. வி. மகாதேவன்.)

இப்படி கர்நாடக இசைமேடைகளில் இசைக்கப்படும் கீர்த்தனைகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப் பட்டும் வருகின்றன. ஆனால் ஒருபோதும் ஒரு திரைப்படப்பாடல் எவ்வளவுதான் சாஸ்திரீய சுத்தமாக இருந்தாலும் கச்சேரி மேடைகளில் பாடப்படுவது இல்லை.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்.

"சிந்துபைரவி" படத்தில் வரும் "கலைவாணியே" பாடல்
முழுக்க முழுக்க கல்யாணி ராகத்தின் ஆரோகணத்திலேயே அமைந்த பாடலாக இருந்தாலும் -

ஒரு டிசம்பர் சங்கீத சீசனில் டி. எம். கிருஷ்ணாவோ, சுதா ரகுநாதனோ, அவ்வளவு ஏன் படத்தில் அந்தப் பாடலை பாடிய யேசுதாஸ் அவர்களோ பாடினால்..?

அவ்வளவுதான். அடுத்த நாள் ஒரு பத்திரிகை விடாமல் இசை விமரிசகர்கள், "சாஸ்திரீய மேடையில் சினிமா பாடலா?" என்று கேள்வி எழுப்புவார்கள்.

அடுத்த நாள் என்ன அடுத்த நாள்?

கச்சேரி முடிந்து திரும்பும்போதே," என்ன சார் இது? எந்தப் பாட்டை எங்கே பாடறதுன்னு ஒரு வரைமுறையே இல்லையா? இது அகாடமி கச்சேரி சார். ஆர்கெஸ்ட்ரா மேடை இல்லே." என்று ஒருவர் என்னமோ கர்நாடக இசைக்கே அவர்தான் அத்தாரிடி மாதிரி பேசிக்கொண்டு வருவார். (சொல்கிறவருக்கோ ஆதி தாளத்தை கூட சரியாக போடத் தெரியாது என்பது வேறு விஷயம்!)

ஆனால் -

இதற்கு மாறாக - திரைப்படத்தில் - அதுவும் நமது தமிழ் திரைப்படத்தில் -இடம்பெற்ற ஒரு பாடல் -

இன்று வரை - அனேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் அனைத்துப் பாடகர்களாலும் அதே மெட்டில் பாடப்பட்டு வருகிறது என்றால் -
.
அதுவும் நேயர் விருப்பமாக - சீட்டு எழுதி அனுப்பி கேட்கப்பட்டு வருகிறது என்றால் -

பாடி முடித்தபிறகு - அதனைப் பாடிய பாடகருக்கு / பாடகிக்கு...

அவர் மிகவும் பிரபலமான நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக இருந்தாலும் சரி...

அப்போதுதான் வளர்ந்து வரும் இசைக் கலைஞராக இருந்தாலும் சரி.. கைதட்டல்களை வாங்கிக்கொடுக்கிறது என்றால் -

அந்தப்பாடல் பிறவி மேதை சி. ஆர் . சுப்பராமன் அவர்கள் மெட்டமைத்து -

எம். எல். வசந்தகுமாரியும் - பி.என். சுந்தரமும் இணைந்து பாடிய -

"மணமகள்" படத்தில் இடம்பெற்ற -

மகாகவி பாரதியாரின் -

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" - பாடலாகத்தான் இருக்கும்.

ஆம். இன்று கர்நாடக இசை மேடைகளில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் இந்தப்பாடலை அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்த பெருமைக்குரியவர் இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் அவர்கள் தான்.

பிறவி மேதை என்று அனைவராலும் கொண்டாடப்பட்டவர்.

இசை நுணுக்கங்களை தன் விரல் நுனியில் வைத்திருந்தவர்.

லத்தீன் அமெரிக்க இசை வடிவங்களை தான் இசை அமைத்த படங்களில் அழகாகக் கையாண்டவர்.

திரை இசையில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தவர்.

கர்நாடக இசையில் மும்மூர்த்திகள் என்றால் தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோரைக் குறிக்கும்.

தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்றால் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரைக் குறிக்கும்.

அதுபோலவே தமிழ்த் திரை இசையில் மும்மூர்த்திகள் என்றால் அது சி.ஆர். சுப்பராமன், எஸ். வீ. வெங்கட்ராமன், ஜி. ராமநாதன் ஆகியோரைக் குறிக்கும்.

இளம் வயதிலேயே இந்த வரிசையில் இடம்பிடித்தவர் சி.ஆர். சுப்பராமன்.

ஒரு இசை அமைப்பாளராக மட்டும் இல்லாமல் ஒரு குருவாகவும் இருந்து தனக்கு பிறகு தன் பெயர் சொல்ல சிறப்பான சிஷ்ய பரம்பரையை உருவாகிய முதல் இசை அமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் தான்.

கண்டசாலா, பி. லீலா போன்ற பாடகர்களை உருவாகிய பெருமைக்குரியவர்.

அது மட்டுமா?. அன்றும் இன்றும் என்றும் திரைஇசை என்று எடுத்துக்கொண்டால் இவர்களைப் பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு சரித்திரம் படைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டையர்களை உருவாக்கிய பெருமைக்குரிய ஆசான் இவர்தான்.

"நீலவண்ணக் கண்ணா வாடா" என்று அழைத்த இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, ஜி.கே. வெங்கடேஷ், டி. ஜி. லிங்கப்பா, கோவர்த்தனம், மாண்டலின் ராஜூ ஆகியோரும் இவரது பாசறையில் உருவானவர்கள்தான்.

"அவர் ஒரு CREATIVE GENIOUS " - இது சி. ஆர். சுப்பராமனைப் பற்றி நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை பி. பானுமதியின் கருத்து.

"அவருடைய திறமை அபாரமானது. பாடலுக்கு உரிய சூழ்நிலையைச் சொல்லி விட்டால் போதும். நிமிட நேரத்துலே அருமையான டியூன்களை கம்போஸ் பண்ணிடுவார். தெலுங்குலே நானும் கண்டசாலாவும் சேர்ந்து பாடாத படமே இல்லை என்கிற அளவுக்கு எனக்கு பெயரும் புகழும் கிடைச்சது என்றால் அதுக்கெல்லாம் அவர்தான் காரணம்" - மறைந்த பாடகி பி. லீலா அவர்கள் தனது குருவான சி.ஆர். சுப்பராமனை பற்றி நெகிழ்வுடன் இப்படிக் குறிப்பிடுவார்.

ஆம். மறைந்த பின்னணிப்பாடகி பி. லீலா அவர்கள் இவரிடம் ஆரம்ப நாட்களில் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர்.

ஒருவருடைய முன்னேற்றம் படிப்படியாக அமைந்தால் தான் அவரது எதிர்காலம் சிறக்கும் என்ற கொள்கைப்படி பி. லீலாவை ஆரம்பத்தில் ஒரு கோரஸ் பாடகியாக அறிமுகப் படுத்தி அதன் பிறகே அவரை முன்னணிப் பாடகியாக ஆக்கியவர்.

தன்னுடன் பணிபுரியும் அனைவரையும் தன்னைப்போலவே நினைத்து ஒரு அன்பும் பரிவும் காட்டுவதில் தாய்க்கு நிகராகவும், அவர்களுடைய வளர்ச்சிக்கு வழி வகுத்துக்கொடுப்பதில் தகப்பனுக்கு நிகராகவும் இருந்த கண்ணியம் மிக்க மாமனிதர்.

இன்றைக்கு "Child prodigy " - என்று சொல்கிறோமே அதுபோல பிறவி இசைக் கலைஞராக உருவானவர்.

பத்தொன்பது வயது முதல் இருபத்தெட்டு வயதுக்குள்ளான காலகட்டத்தில் யாராலும் தொடமுடியாத சிகரத்துக்கு உயர்ந்தவர்.

ஏட்டுக்குள் அடங்காத பெருமையும் அதே சமயம் அந்தப் பெருமையை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத தன்னடக்கமும் ஒருங்கே பொருந்தியவர்.
அவரது வாழ்க்கையில் வளரும் தலைமுறைக்கு ஒரு பாடமே அடங்கி இருக்கிறது.

ஒரு வெற்றிகரமான இசை அமைப்பாளராக பின்னாளில் உயர்ந்த சி.ஆர். சுப்பராமனுக்கு அதற்காக அவர் நடைபோட்ட பாதை ஆரம்பத்தில் மலர்ப் படுக்கையாக ஒன்றும் இருக்கவில்லை.

பாதையில் எதிர்ப்பட்ட சோதனைகளை கடந்து வர அவர் காட்டிய நிதானமும், பொறுமையும், மன உறுதியும், விடாமுயற்சியும், துணிச்சலும், தன்னுடைய திறமையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் - நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------
1924ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள "சிந்தாமணி" என்ற கிராமத்தில் ராமசாமி அய்யருக்கு மகனாக பிறந்த சுப்பராமனின் மூதாதையர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆகவே வீட்டில் பேச்சு வழக்காக தாய் மொழியான தெலுங்கே இருந்து வந்தது. இவரது இளைய சகோதரர் தான் பிரபல இசை அமைப்பாளர் சங்கர் (கணேஷ்).

ஐந்து வயதிலேயே இசையில் மிகுந்த ஈடுபாடு சுப்பராமனுக்கு இருந்ததால் அவனது தந்தை மகனுக்கு முறையான இசைப் பயிற்சி அளிக்க முடிவு செய்தார்.

சுப்பராமனின் குரு யார் என்ற விவரங்கள் எல்லாம் சரியாக கிடைக்கவில்லை. (அவரைப் பற்றிய செய்திகளின் பதிவுகளே மிகக் குறைவாக இருக்கிறது. ) அதன் பிறகு கும்பகோணம் வந்து அங்கு ஒரு நாதஸ்வர வித்வானிடம் இசை பயின்றார் என்று தெரியவருகிறது. அந்த நாதஸ்வர வித்வானைப் பற்றியும் முறையான தகவல்கள் இல்லை. எது எப்படி இருப்பினும் இசையில் சுப்பராமன் அசாதாரண தேர்ச்சி பெற்றார் என்பது உண்மை.

காலையில் கற்றுக்கொண்ட வர்ணத்தை அன்று மாலைக்குள்ளாகவே அழுத்தமாகவும் அருமையாகவும் ஸ்ருதிசுத்தமாகவும் பாடுவார்.
பதினான்கு வயதுக்குள் ஹார்மோனியம் வாசிப்பதில் கை தேர்ந்துவிட்டிருந்தார் சுப்பராமன்.

அந்தக் காலத்தில் ஹெச்.எம். வீ. நிறுவனம் கிராமபோன் ரெக்கார்டுகள் தயாரித்து வெளியிட்டு வந்துகொண்டு இருந்தது. ஆகவே அதற்காகவே ஒரு வாத்திய இசைக்குழு ஹெச்.எம். வீ. யில் நிரந்தரமாக சின்னையா என்பவரின் தலைமையில் இயங்கி வந்தது.

இசை மேதை ஜி. ராமநாதனின் சகோதரர் சுந்தர பாகவதர் மூலமாக ஹெச்.எம்.வீ.யின் வாத்திய கோஷ்டியில் சேர்ந்தார் சுப்பராமன். அப்போது அவருக்கு வயது பதினாறேதான்.

தந்தையும் மகனும் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தனர். அப்போது பியானோ வாசிப்பில் ஈடுபாடு கொண்ட சுப்பராமன் திருவல்லிக்கேணியில் வாழ்ந்துவந்த ஒரு ஆசிரியரிடம் பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

தந்தையார் துணையோடு மயிலையில் இருந்து திருவல்லிக்கேணிக்கு நடந்தே வகுப்புகளுக்கு வருவாராம் அவர்.

தனது அசாத்திய திறமையினால் கூடிய விரைவிலேயே ஹெச்.எம்.வீ. வாத்தியக்குழுவின் துணை இசை அமைப்பாளாராக உயர்ந்தார் சுப்பராமன்.

அப்போது தினமும் வேலை முடிந்து ஓய்வாக இருக்கும் இரவு வேளைகளில் கீர்த்தனைகளைப் பாடுவார் சுப்பராமன். அப்போது ஹெச்.எம்.வீ.யில் தற்காலிகப் பணியாளராக வயலின் வாசிக்கும் வேலையில் சேர்ந்த ஒரு இளைஞன் அவருக்கு வயலின் வாசிப்பான். அவனது வாசிப்பால் ஈர்க்கப்பட்ட சுப்பராமன் ஹெச்.எம்.வீ. மானேஜரிடம் "இந்தத் தம்பியோட சவுண்ட் நல்லா இருக்கு. இவன் நல்லா வருவான்" என்று சிபாரிசு செய்து அவனது வேலையை நிரந்தரமாக்கி தனக்கு உதவியாளராக வைத்துக்கொண்டார். அவரது பரந்த மனப்பான்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு சுப்பராமனால் அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞன் வேறு யாருமல்ல. பின்னாளில் எம். எஸ். விஸ்வநாதனுடன் சேர்ந்து காலத்தால் அழிக்கமுடியாத காவியப் பாடல்களை நமக்கு கொடுத்த இசை அமைப்பாளர் டி. கே. ராமமூர்த்திதான்.

அந்தச் சமயத்தில் தான் முதல் திருப்பம் சுப்பராமனின் வாழ்வில் ஏற்பட்டது. ஹெச்.எம்.வீ.யின் வாத்தியக் குழு திரைப்படங்களுக்கும் வாசித்து வந்தது.

தமிழ்நாடு டாக்கீஸ் என்ற பட நிறுவனம் அப்போது "செஞ்சுலக்ஷ்மி" என்ற தெலுங்குப் படத்தை தயாரித்து வந்தது. அதற்கு ஹெச்.எம்.வீ. யின் சின்னையா தான் இசை அமைப்பாளாராக முதலில் இருந்தார். ஓரிரு பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்தார்.

ஆனால் திடீர் என்று அவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப் படவே அவருக்குப் பதிலாக எஸ். ராஜேஸ்வர ராவ் இசை அமைப்பாளரானார். என்ன காரணத்தாலோ அவராலும் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.

வாத்திய கோஷ்டியில் துணை இசை அமைப்பாளராக இருந்த சி. ஆர். சுப்பராமனுக்கு அந்த வாய்ப்பு அவனது பதினேழாவது வயதில் தேடி வந்தது.

ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் "செஞ்சுலக்ஷ்மி" படத்தின் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி வந்த சமுத்ரால ராகவாச்சார்யா பாடலுக்கான கட்டங்களை விளக்க அருமையான மெட்டுக்களை அற்புதமான முறையில் அமைத்து திரை உலக இசை அமைப்பாளர்களுள் ஒருவராக திரைப்படத் துறையில் காலெடுத்து வைத்தார் சி.ஆர். சுப்பராமன்.

ஒருவருக்கு எப்போது வாய்ப்புகள் வரும் என்று யாராலும் கணித்துச் சொல்லமுடியாது. ஆனால் அப்படி வரும்போது அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தயார் நிலையில் இருக்கும் அளவுக்கு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சி.ஆர். சுப்பராமனின் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.

"செஞ்சுலக்ஷ்மி" படத்துக்கு இசை அமைத்தபோது பல புதுமைகளை தைரியமாக புகுத்தினார் சுப்பராமன். படத்தின் டைட்டில் காட்சியிலேயே லத்தீன் அமெரிக்க இசை வடிவங்களை நமது கர்நாடக இசையுடன் அருமையான முறையில் இணைத்து பாராட்டுக்களை பெற்றார் அவர்.

படமும் பெருவெற்றி பெற்று மிக இளம் வயதிலேயே இசை உலகில் முத்திரை பதித்த இசைஅமைப்பாளர் என்ற பெருமையை சுப்பராமனுக்கு அளித்தது.

அதே சமயம் எச். எம். வீ.யின் இசை அமைப்பாளர் சின்னையா காலமாகி விடவே அதுவரை துணை இசை அமைப்பாளராக இருந்து வந்த சுப்பராமன் பிரதான இசை அமைப்பாளராக உயர்ந்து கிராமபோன் ரெகார்டிங்குகளுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார் சுப்பராமன்.

அவர் இசை அமைப்பில் வெளிவந்த ரெக்கார்டுகள் பெரும் வரவேற்பை பெற்று விற்பனையில் சாதனை புரிந்தன.

கல்கத்தாவில் இயங்கி வந்த எச். எம். வீ.யின் தலைமை நிறுவனத்தின் நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் இருந்த ஆங்கிலேய அதிகாரி, "சின்னயாவுக்கு பிறகு வரும் ரெக்கார்டுகள் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. அற்புதமாகவும் இசை அமைந்து இருக்கிறது. இவற்றுக்கு யார் இசை அமைக்கிறார்கள்? அவருக்கு என் வாழ்த்துக்கள்." என்று சென்னை அலுவலகத்துக்கு கடிதம் எழுதி பாராட்டும் அளவுக்கு சுப்பராமனின் இசை அமைந்தது.

ஆனால் எச்.எம்.வீ. அளித்த சம்பளம் நிறைவாக இல்லாததால் சுப்பராமன் அதனை விட்டு விலகினார். அந்த தருணத்தில் அவரது ரெக்கார்டுகளை கேட்ட எம். கே. தியாகராஜ பாகவதர் அவரது திரைப்படம் ஒன்றுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அந்த இருபத்தோரு வயது வாலிபனுக்கு அளித்தார்.

எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பினால் உண்மையிலேயே பூரித்துப்போனான் அந்த வாலிபன்.

ஆனால் அந்தச் சந்தோஷத்துக்கு "அற்பாயுசு"தான் என்பது பாவம் அவனுக்கு அப்போது தெரியாது.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.