சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 8
8. "நமது மிகப்பெரிய பலவீனம் விட்டுக் கொடுத்தல் என்பது. வெற்றிக்கு மிகவும்
தீர்மானமான வழி என்பது இன்னும் ஒரு முறை முயற்சி செய்வது" -
- தாமஸ் ஆல்வா எடிசன்.
"நாடோடி மன்னன்" திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நாள் முழுதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்துக்களை தமிழ் நாட்டின் மந்திரச் சொற்களாக மாற்றிய பெருமைக்கு அடித்தளமிட்ட படம் இது.
எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இலக்கணமாக அமைந்த படம் இது.
பொதுவாக வளரத் தொடங்கும் எந்த நடிகரும் அடுத்து வரும் படங்களைத் தேர்வு செய்வதையும், அடுத்தடுத்த வெற்றிகளை அடைவதிலுமே கவனமாக இருப்பார்கள். சொந்தப் படத்தத் தயாரிப்பில் இறங்கும் விஷப் பரீட்சையில் ஈடுபட்டு கைகளைச் சுட்டுககொள்ள விரும்பமாட்டார்கள்.
அதிலும் எம்.ஜி.ஆர் அவர்களைப் போல துண்டு துக்கடா வேடங்களில் அறிமுகமாகி பிறகு ஒருவழியாக கதாநாயகனாக உருமாறி வளர்ந்து வரும் நிலையில் இருப்பவர் என்றால் ... கண்டிப்பாக சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கும் விஷப் பரீட்சையை கனவிலும் கருதவே மாட்டார்கள். அப்படி ஒரு சோதனையில் ஈடுபட வேண்டும் என்றால் அதற்கு அபாரமான துணிச்சல் தேவை. விளைவு எதுவாக இருந்தாலும் அதை இலகுவாக எதிர்நோக்கும் பக்குவம் தேவை. இவை இரண்டுமே எம்.ஜி.ஆரிடம் இருந்தது.
நாடோடி மன்னன் - படத்துக்கு கதையும் அவரே. தயாரிப்பும் அவரே. படத்தை இயக்கியவரும் அவரே. இப்படி மூன்று பொறுப்புகளையும் ஏற்று ஒரு படத்தை ஆரம்பித்து அதை வெற்றிப்படமாகவும் அவர் மாற்றினார் என்றால் அது அவரால் மட்டுமே முடிந்த சாதனை.
படத்தின் கதை "THE PRISONER OF ZINDA " என்ற ஆங்கில நாவலின் அடிப்படியில் அமைந்த "IF I WERE KING " என்ற மேடை நாடகத்தையும், திரைப்படத்தையும் தழுவியது. கதைக்காக திரு. ஆர்.எம். வீரப்பன், வித்வான் வே. லட்சுமணன், எஸ்.கே.டி. சாமி என்ற மூவர் அடங்கிய குழுவை அமைத்து அவர்களை மேற்குறித்த ஆங்கிலப் படங்களை பார்க்கச் ய்து தான் மனதில் உருவாக்கி வைத்திருந்த "அவுட் லைன்" பற்றி
குறிப்பிட்டு தீவிரமான வாதப் பிரதிவாதங்கள் செய்து, தனது ஆலோசனைகளையும்
கொடுத்து அந்தக் கதையை தமிழ் நாட்டுக்கும், பாரதக் கலாசாரத்துக்கும் ஏற்ற வகையில் உருமாற்றி -
வசனங்களை கவியரசு கண்ணதாசன், ரவீந்தர் ஆகிய இருவரையும் எழுதவைத்து ..
எல்லாம் மனதுக்கு திருப்திகரமாக வந்த பிறகு தயாரிப்பில் இறங்கினார் அவர்.
தயாரிப்பின் போது அவர் சந்தித்த சோதனைகள் ஒன்றா இரண்டா? தயாரிப்பை பற்றிய விளம்பரம் செய்தித்தாள்களில் வந்த நாள் முதலாக அவை ஆரம்பித்து விட்டன. அதே சமயம் "THE PRISONER OF ZINDA " படத்தை தானும் தனது பரணி பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கப் போவதாக நடிகை பானுமதியும் அறிவித்துவிட்டார். ஒரே கதையை தழுவி இரண்டு படங்களா..? யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தாக வேண்டுமே. எம்.ஜி.ஆரும், பானுமதியும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். ஒரு வழியாக பானுமதி விட்டுக்கொடுக்க நாடோடி மன்னன் படம் ஆரம்பமானது.
நேரம், காலம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர் என்பதனால் சரியான ராகுகாலத்தில் படப்பிடிப்பை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.
தனது சொத்து முழுவதையும் அடமானம் வைத்து படத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆரிடம் குசும்புத்தனமாக,"ஒருவேளை படம் வெற்றிபெறாவிட்டால்..?" என்ற கேள்வியை ஒரு நிருபர் கேட்டதற்கு.."இந்தப் படம் வென்றால் நான் மன்னன். தோல்வி அடைநதால் நான் நாடோடி" என்று இரண்டே வார்த்தைகளில் பதிலளித்துவிட்டு தனது முயற்சியில் ஈடுபட்டார் அவர்.
எம்.ஜி.ஆரும், அவரது குழுவினரும், இரவுபகலாக இயங்கத்தொடங்கினார்கள். ஆரம்பத்தில் படத்தை இயக்கம் பொறுப்பை திரை மேதை கே. ராம்நாத் அவர்களிடம்
ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால்.. யாரும் எதிர்பாராத விதமாக அக்டோபர் நான்காம் நாள் -1956 -இல் ராம்நாத் அவர்கள் அகால மரணம் அடைந்துவிடவே படத்தை தானே இயக்குவது என்ற முடிவுக்கு எம்.ஜி.ஆர் வந்தார்.
படத்தின் முதற்பாதி கருப்பு வெள்ளையிலும், பிற்பகுதி வண்ணத்திலும் படமாக்கம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் - அவர்களுக்கு இணையாக பானுமதி நடித்தார். இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார் சரோஜாதேவி.
இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க - பானுமதி, சரோஜாதேவி, எம்.என். ராஜம் ஆகியோர் அவருக்கு இணையாக நடிக்க, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார் - ஆகியோர் எதிர்மறை வேடங்கள் ஏற்று நடிக்க, நகைச்சுவை வேடங்களில்
சந்திரபாபு - ஜி. சகுந்தலா - அங்கமுத்து ஆகியோர் நடிக்க படம் வளர்ந்தது
தயாரிக்கப் பட்ட முழுத் திரைப்படம் ஐந்து மணிநேரத்துக்கு நீண்டது. ஆர்.எம். வீரப்பன், மற்றும் வித்வான் லட்சுமணன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு நீக்க வேண்டிய காட்சிகளை நீக்கி சுவாரஸ்யம் குன்றாதவகையில் ஒருங்கிணைக்கும் பொறுப்பு எடிட்டரிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை இது ஒரு மிகக் கடினமான பணியாக அமைந்தது.
ஆரமபத்தில் ஆறுமுகம் என்பவர் எடிட்டராக நியமிக்கப்பட்டார். அவர் தன்னால் முடியாது என்று விலகிக்கொள்ள, அடுத்து கே. பெருமாள் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரும் பாதியிலேயே விலகிக்கொள்ள இறுதியாக ஜம்பு படத் தொகுப்பாளராக பணியாற்றி சவாலான பொறுப்பை திறம்பட முடித்துக் கொடுத்தார்.
காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு இறுதியாக வெளிவந்த படம் மூன்றரை நேரங்கள்
கொண்ட படமாக அமைந்தது.
(வாசகர்கள் கவனிக்கவேண்டும். இன்றைக்கு வெளியாகும் படங்களோ இரண்டு மணிநேரங்கள் - ஏன் சமயத்தில் ஒன்றரை மணி நேரத்திலேயே கூட முடிந்துவிடுகின்றன. அவற்றைக்கூட உட்கார்ந்து பொறுமையாகப் பார்க்க முடிவதில்லை. ஒருவாரத்திலேயே திரை அரங்கை விட்டு வெளியேறி
விடுகின்றன. ஆனால்.. நாடோடி மன்னன் படமோ - மூன்றரை மணிநேரப் படம். ஒரு நிமிடம் கூட அலுப்புத்தட்டாமல் விறுவிறுப்பு குன்றாமல் இன்று வெளியானாலும் திரை அரங்குகளில் கூட்டம் குவிகின்றது என்றால்... ஒரு நல்ல திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக நாம் மேலை நாட்டுக்கெல்லாம் போகவே வேண்டாம். இந்தப் படம் ஒன்றே போதுமே. இதுவும் இதுபோன்ற படங்களும் வெளிவந்த அந்த நாட்கள் உண்மையிலேயே ஒரு வசந்தகால நாட்கள் தான்.)
இதே போலவே இசை அமைப்பும் - முதலில் என்.எஸ். பாலக்ருஷ்ணன் என்ற இசை அமைப்பாளர் "செந்தமிழா வணக்கம்", "சம்மதமா நான் உங்கள் கூட வரச் சம்மதமா" என்ற கவிஞர் முத்துகூத்தனின் பாடல்களுக்கும், "பாடுபட்டதனாலே" என்ற ஆத்மநாதன் பாடலுக்கும் இசை அமைத்த பிறகு விலகிக்கொள்ள -
சற்றும் கலங்காமல் இசை அமைக்க எஸ்.எம். சுப்பையா நாயுடு அவகளை ஒப்பந்தம் செய்தார் எம்.ஜி.ஆர்.
சுப்பையா நாயுடுவின் இசையில் காலத்தை வென்று நிலைத்திருக்கும் காவியப் பாடல்கள் பதிவாகின.
"உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெதிலே சொல் என் தோழா" - இசை மணி சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் ஒலிக்கும் தியாகி
லக்ஷ்மணதாஸ் எழுதிய பாடல் பலராகங்கள் கொண்ட ஒரு ராகமாலிகை - சுப்பையா நாயுடுவின் தன்னேரில்லாத் திறமைக்கும், திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் இசை ரசனைக்கும் சாட்சியாக அமைந்த பாடல்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் மூன்று."மானைத் தேடி மச்சான் வரப் போறார்" - என்ற ஜிககி குழுவினருடன் இசைக்கும் பாடல். "கண்ணோடு கண்ணு கலந்தாச்சு" - இதுவும் ஜிககி குழுவினருடன் பாடும் பாடல்.
இவற்றை விட இன்றளவும் ஏன் என்றும் சாகா வரம் பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான் "சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி" - என்ற டி.எம்.எஸ். - பி. பானுமதி இணைந்து பாடிய பாடலும், டி.எம்.எஸ். தனித்துப் பாடிய "தூங்காதே தம்பி தூங்காதே" பாடலும் தான்.
"சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாமே பாடுபட்டு" - பாடலில் கஷ்டப்பட்டு உழைத்தும் நம் வாழ்க்கை தரம் உயரவில்லையே என்று குடியானவப் பெண் தன் தலைவனிடம் "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு காலும் கையும்தானே மிச்சம்." என்று சொல்ல. "காடு விளையாட்டும் பெண்ணே நமக்கு காலமிருக்குது கண்ணே" என்று அவளுக்கு தெம்பூட்டுகிறான் அவன்.
எளிமையான அதே சமயம் வலிமையான வார்த்தைகள். கும்மிச் சிந்து வகையில் இந்தப் பாடலை எஸ்.எம். சுப்பையா நாயுடு அமைத்திருக்கும் அழகு வார்த்தைகளுக்கு அழகும் அர்த்தமும் கொடுக்கிறது.
படத்தின் பெயரைச் சொன்னாலே உடனே நினைவில் வரும் பாடல் "தூங்காதே தம்பி தூங்காதே. சோம்பேறி என்ற பெயர் வாங்காதே" பாடல் தான்.
"நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கேட்டார்.
சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்"
எளிமையான வரிகளில் அமைந்த அமைந்த அழுத்தமான கருத்துக்களைக் கொண்ட
பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள் பாமர மக்களின் மனதிலும் இடம் பெற சுப்பையா நாயுடு அவர்கள் போட்டிருக்கும் மெட்டுக்கள் இன்றளவும் அமரத்துவம் வாய்ந்தவையாக அல்லவா அமைந்துவிட்டிருக்கின்றன.
அந்தக் காலப் படங்களில் கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவை ஜோடிக்கும் ஒரு பாடல் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பாடலும் கூட ஏனோ தானோ என்று இல்லாமல் அனைவரும் முணுமுணுக்கும் வகையில் ஒரு வெற்றிப்பாடலாகவே அமைந்திருக்கும்.
அந்தவகையில் இந்தப் படத்திலும் ஒரு பாடல் சந்திரபாபு - ஜமுனாராணி இணைந்து பாடும் "தடுக்காதே என்னைத் தடுக்காதே" பாடல் இன்றளவும் வானொலி, பண்பலை
வரிசைகளில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தொலைகாட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அது சரி.. எம்.ஜி.ஆர் படம் என்றால் இணைப்பாடல் (டூயட்) ஒன்று வேண்டாமா? இந்தப் படத்திலும் ஒரு அருமையான இணைப்பாடலை டி.எம்.எஸ். அவர்களும் - ஜிககியும் இணைந்து பாடியிருக்கின்றனர். உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய "கண்ணில் வந்து மின்னல் போல் தோணுதே உயர் காவியக் கலையே ஓவியமே" பாடல் - இசை அமைப்பாளர் - பாடகர்கள் - பாடலாசிரியர் - ஆகிய மூவரின் அபரிமிதமான திறமைக்கும் ஒரு அற்புதச் சான்றாக அமைந்து விட்டிருக்கிறது.
படத்தயாரிப்பில் பல சோதனைகளிலும் இன்னல்களையும் எம்.ஜி.ஆர் சந்தித்த அதே நேரம் அவருக்கு எதிர்பாராத வகையில் பல உதவிகளும் கிடைத்தன.
ஆசியாவின் மிகப் பெரிய படப்பிடிப்பு தளமான விஜயா ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான படப்பிடிப்பு அரங்கங்களை நிர்மாணித்துக்கொள்ள
பி. நாகிரெட்டி அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அனுமதி அளித்தார். அதுவரை வெளியாருக்கு ஸ்டூடியோக்களை தரும் வழக்கம் இல்லாமல்
இருந்தது. தந்திரகாட்சிகளைப் படமாக்க தன்னிடம் இருந்த விலை உயர்ந்த உபகரணம் ஒன்றை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து உதவினார் ஜெமினி ஸ்டூடியோ அதிபரான திரு. எஸ்.எஸ். வாசன். சாதாரணமாக தனது படப்பிடிப்பு உபகரணங்களை ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காதவர் அவர். அதன் மூலம் தந்திரக்காட்சிகளை சிறப்பாகப் படமாக்க எம்.ஜி.ஆரால் முடிந்தது.
"என்னதான் திறமையாக தாமே படத்தை இயக்கினாலும், முதல் முதலாக இயக்குவதால் தனது பணியை மேற்பார்வை செய்ய ஒரு திறமைசாலி இயக்குனர் இருந்தால் நன்றாக இருக்கும்" என்று எண்ணிய எம்.ஜி.ஆர். பிரபல இயக்குனர் திரு. கே. சுப்பிரமணியம் அவர்களை தனது வேலையை மேற்பார்வை செய்யும்படி கேட்டுக்கொண்டார். எம்.ஜி.ஆர் அவர்கள் இயக்கிய ஒரு பகுதியை ரஷ் பார்த்த இயக்குனர் கே. சுப்பிரமணியம் அவர்கள் - எம்.ஜி.ஆரின் திறமையை வெகுவாகப் பாராட்டி எம்.ஜி.ஆருக்கு ஒரு மேற்பார்வையாளரே தேவை இல்லை என்ற சொல்லிவிட்டுச் சென்றார். அதோடு நிற்கவில்லை அவர். வெளிப்புறக் காட்சிகளுக்காக மூணாறில் சகல
ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததோடு நிற்காமல், தானே மும்பை சென்று
முதல் தரமான வண்ணப் படப்பிடிப்பு சுருள்களை வாங்கி வந்து கொடுத்து
வேலைகளில் தொய்வு ஏற்படாதவண்ணம் பேருதவி புரிந்தார்.
1956 -இல் துவங்கப்பட்ட படம் பல இடைஞ்சல்களையும் கடந்து 1958 -இல் வெளியானது. மகத்தான சரித்திரம் படைத்தது. மாபெரும் வசூலை அள்ளிக்குவித்தது. எம்.ஜி.ஆர். என்ற பெயரை தமிழ்த் திரை உலகில் தவிர்க்கமுடியாத ஒரு பெயராக நிலை நிறுத்திவைத்தது.
படத்தின் வெற்றிக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் பின்னணி இசையும், பாடல்களும் பேருதவி புரிந்தன.
(சிகரம் தொடுவோம்)
|