சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 7
7. வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் - தங்கள் முயற்சிகளைக் கைவிடும் மனிதர்கள் தாங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவது தான்
- தாமஸ் ஆல்வா எடிசன்.
"மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.
ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.
ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர் அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமிட்ட படம் மலைக்கள்ளன் தான்.
அதனால் தான் "மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால், எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலையை அடைந்திருக்கும்" என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.
"கர்நாடக இசையா, ஜனரஞ்சகமான மெட்டா - எதுவானாலும் தன்னால் சிறப்பாகக் கொடுக்கமுடியும் என்று இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் சுப்பையா நாயுடு.
பழம்பெரும் பாடகி பி.ஏ. பெரியநாயகியும், படத்தின் கதாநாயகி பி. பானுமதியும் பெண் குரலுக்கான பாடல்களைப் பாடினார்கள்.
"நீலி மகன் நீ அல்லவோ"- பி.ஏ. பெரியநாயகியின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் ஒரு நடனப் பாடல். சாய்-சுப்புலட்சுமி இருவரின் நடனத்துக்கான இந்தப் பாடலை கரஹரப்ரியா" ராகத்தில் வெகு அற்புதமாக அமைத்திருந்தார் சுப்பையா நாயுடு.
"உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ" - பி. பானுமதி பாடி ஆடுவதாக அமைந்த இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது. நடனத்தில் பானுமதிக்கு அவ்வளவாக பெயர் கிடையாது என்றாலும் இலகுவான அசைவுகளில் பாடலுக்கே ஒரு அழகை அவர் ஏற்படுத்தியிருந்தார்.
"பெண்களாலே உலகிலே" "நல்ல சகுனம் நோக்கி செல்லடி" ஆகியவையும் பானுமதி பாடியவை.
ஆனால் இவை அனைத்தையும் ஓரம்கட்டி விட்டு இன்றளவும் காலத்தை வென்று நிலைத்திருக்கும் பாடல் ஒன்றே ஒன்று தான்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.
அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."
- கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!. பாடலை காட்சியுடன் கண்டு கேட்க இணைப்பு :
http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss. ஆபேரி ராகத்தில் (பீம்ப்ளாஸ்) ஜனரஞ்சகமாக இசை அமைத்து இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை அற்புதமாக கொடுத்திருக்கிறார் சுப்பையா நாயுடு.
மலைக்கள்ளன் படமும் பாடல்களும் பெற்ற மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆர் அவர்களை வெற்றிப்பாதையில் மிடுக்கோடு நடைபோட வைத்தது. தன்னை ஒரு மக்கள் திலகமாக அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு சொந்தப் படத் தயாரிப்பில் அவர் இறங்கினார். "எம்ஜியார் பிக்சர்ஸ்" - பானரில் அவரது கனவுப் ப்ராஜெக்ட் ஒன்று படமாக தயாராகத் தொடங்கியது. நடிகர் நடிகையர் தேர்வுக்காக அவர் சற்று யோசித்தே செயல்பட்டிருக்கலாம். எந்த வேடத்துக்கு யாரை ஒப்பந்தம் செய்வது, இவரைப் போட்டால் சரியாக வருமா - இரண்டாவது கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்யலாமா என்றெல்லாம் கூட அவர் யோசித்திருக்க கூடும். ஆனால் இசை அமைப்புக்கு - அப்படியெல்லாம் செய்யவே இல்லை.
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்" - பாடல் மூலம் தனக்கு ஒரு தனியான அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடுவையே இசை அமைப்பாளராக தேர்வு செய்து தனது "கனவு ப்ரொஜெக்ட்" படத்தை ஆரம்பித்தார்.
ஆம். "நாடோடி மன்னன்" படம் தயாராகத் தொடங்கியது.
(சிகரம் தொடுவோம்)
இணைப்பு : மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். - பி. பானுமதி.
|