சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 6
6. தான் செய்யும் தொழிலில் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த
மூன்று விஷயங்கள் தேவை. அவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருக்கவேண்டும்.
அதனை அளவுக்கு அதிகமாக செய்யக்கூடாது. மேலும் அவர்களுக்கு அதில்
வெற்றிபெறுவதற்கான அறிவு இருக்கவேண்டும். - ஜான் ரஸ்கின்.
""ஏழை படும் பாடு" - 1950 -ஆம் வருடம் தீபாவளி தினத்தன்று
வெளிவந்த "பக்ஷிராஜா"வின் முதல்தரமான இந்தப் படம் தமிழ்த் திரை உலக
வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் அது மிகை அல்ல. படத்தை இயக்கியவர் திரை
மேதை கே. ராம்நாத்.
விக்டர் ஹியூகோவின் "LES MISERABLES " என்ற பிரெஞ்சு மொழியில் உலகப்
புகழ் பெற்ற நாவலை மிக அருமையாக எடுத்தாண்டு தயாரிக்கப்பட்ட படம்.
பாகவதர், சின்னப்பாவுக்கு பிறகு - சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நட்சத்திர
அந்தஸ்தை நடிகர்கள் யாரும் எட்டியிருக்காததால் (எம். ஜி. ஆர். அப்படி
ஒரு நிலையை அடைய தட்டுத் தடுமாறி கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு
வந்துகொண்டிருந்த நேரம் அது.) குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நடிகர்கள்
யாரும் படத்தில் கிடையாது.
கதாநாயகன் "கந்தன்" சந்தர்ப்ப வசத்தால் சிறைக்கு சென்ற ஒரு ஏழை.
சிறையில் இருந்து தப்பி ஒரு பாதிரியாரால் மனம் மாறி தலை மறைவு வாழ்க்கை
வாழும் ஒரு கைதி, அவனைக் கண்டுபிடிக்க அலையும் ஒரு கடமை தவறாத,
கண்டிப்பும் கடுமையும் நிறைந்த ஒரு போலீஸ் அதிகாரி, கைதியின் மகள்,
அவளது காதலன், இடையில் ஊடுபாவாக இந்திய விடுதலைப் போராட்டத்தையும்
இணைத்து வெகு நேர்த்தியாகப் பின்னப்பட்ட கதை.
கைதி கந்தனாக - கதாநாயகனாக நடித்த நாகையா அவர்கள் கதாபாத்திரமாகவே
மாறிவிட்டிருந்தார். அவரது நேர்த்தியான யதார்த்தமான நடிப்பு அருமையாக
அமைந்தாலும் அனைவரின் மனதையும் கவர்ந்தது காவல் துறை அதிகாரியாக நடித்த
சீதாராமன் என்ற நடிகரின் நடிப்புதான். அவர் அடிப்படையில் ஒரு
வழக்கறிஞர்.
|
நடிகராக இதில் அறிமுகமாகி பிற்காலத்தில் நடிப்போடு திரைக்கதை
அமைப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். "ஜாவர்" என்ற போலீஸ்
அதிகாரியாக படத்தில் வந்த இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
விளைவு? அவர் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரம் அவரது பெயரோடு
இணைக்கப்பட்டு "ஜாவர்
சீதாராமன்" என்றே அவர் தனது வாழ்நாள் முழுவதும் அடையாளம் காணப்பட்டு வந்தார்.
இந்த இருவரைத் தவிர செருகளத்தூர் சாமா, டி.எஸ். பாலையா, எஸ். துரைராஜ்,
லலிதா - பத்மினி சகோதரிகள், குமாரி என். ராஜம் ஆகியோருடன் கைதி கந்தனின்
மகளின் (பத்மினி) காதலனாக இந்தப் படத்தில் அறிமுகமான இளம் நடிகர் வி.
கோபாலகிருஷ்ணன்.
ஸ்ரீராமுலு நாயுடுவிடம் ஒரு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால்
தனக்கு முழுதிருப்தி ஏற்படாத வரை விடமாட்டார். "பரவாயில்லை. வந்தவரை
போதும்" என்று எதற்காகவும் யாருக்காகவும் தயாரிப்பு விஷயத்தில் விட்டுக்
கொடுத்துக்கொள்ள மாட்டார். இந்தப் படத்திலேயே அதற்கு இரண்டு சம்பவங்களை
குறிப்பிடலாம்.
முதலில் - பாதிரியார் ஒருவரிடம் சிறையில் இருந்து தப்பிய கைதி கந்தன்
அடைக்கலம் புகுகிறான். அவனுக்கு உணவளித்து தங்க இடமும் தருகிறார் அவர்.
ஆனால் அவரிடமிருந்த வெள்ளி விளக்கை திருடிக்கொண்டு அங்கிருந்து
ஓடிவிடுகிறான் அவன். ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம்
சிக்கிக் கொள்கிறான் அவன். அவனை அவர்கள் பாதிரியாரிடமே அழைத்து வந்து
வெள்ளி விளக்கை காட்டி விவரம் சொல்ல, அவரோ அவனைக் காட்டிக் கொடுக்காமல்
தானே அதை கொடுத்தனுப்பியதாக சொல்லிக் காப்பாற்றி விட, மனம்
திருந்துகிறான் அவன்.
கதையின் திருப்பு முனை கதாபாத்திரமாக அமைந்த பாதிரியார் வேடத்துக்கு
ஆரம்பத்தில் ஸ்ரீராமுலு நாயுடு ஒப்பந்தம் செய்ததென்னவோ நாகர்கோவில் கே.
மகாதேவன் என்ற நடிகரைத் தான். (ஆரம்ப கால சினிமாவில் "நாரதர்" வேடத்தில்
பிரபலமானவர் இவர்.) ஆனால் என்ன காரணத்தாலோ அவரது நடிப்பு ஸ்ரீராமுலு
நாயுடு எதிர்பார்த்தஅளவுக்கு அமையவில்லை. சற்றும் தயங்காமல் அவரை
நீக்கிவிட்டு செருகளத்தூர் சாமாவை பாதிரியார் வேடத்தில் நடிக்க வைத்தார்
அவர்.
படத்தின் இயக்குனர் கே. ராம்நாத் அவர்களைப்பற்றி குறிப்பிடவேண்டும்
என்றால் "விதியின் விளைவால்" என்ற ராதா-ஜெயலக்ஷ்மி பாடும் பாடல் காட்சி
படமாக்கப் பட்ட விதத்தைக் குறிப்பிடலாம். எம். ராஜம் என்ற நடிகை நடித்த
இந்தப் பாடல் காட்சியை கட் எதுவும் கொடுக்காமல் ஒரே டேக்கில் படமாக்கி
இருந்தார் அவர்.
தனக்கு மறுவாழ்வு கொடுத்த நிறுவனம் என்ற எண்ணத்தாலோ என்னவோ எஸ்.எம்.
சுப்பையா நாயுடுவின் இசை முதல் தரமான இந்தப் படத்தின் தரத்துக்கு மேலும்
மெருகூட்டியது.
நாகையா சொந்தக் குரலில் பாடிய இரண்டு பாடல்கள், ராதா ஜெயலட்சுமியின்
பாடல், மற்றும் எம்.எல். வசந்தகுமாரியின் டிஜிட்டல் குரலில் முத்தான
இரண்டு பாடல்கள் என்று அனைத்தையும் அருமையாகக் கொடுத்திருந்தார் அவர்.
"யௌவனமே ஆஹா யௌவனமே" என்ற எம்.எல்.வி.யின் பாடல் துள்ளவைக்கும் வண்ணம்
அமைந்த மெல்லிசைப் பாடல் என்றால், "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்" என்ற
பாரதியின் பாடலோ சுத்தமான கர்நாடக இசை மோஸ்தரில் பின்னப்பட்ட ஒரு
அருமையான ராகமாலிகைப் பாடல். கரஹரப்ரியா, அடாணா, நாட்டக்குறிஞ்சி ஆகிய
ராகங்களில் இந்தப் பாடலை எம்.எல்.வி. பாடுவதைக் கேட்கும்போது கேட்பவரை
மெய்மறக்கச் செய்கிறது. சுப்பையா நாயுடுவின் இசை படத்தின் மாபெரும்
வெற்றிக்கான காரணிகளில் ஒன்றாக இருந்தது.
படத்தில் பத்மினியும், வி. கோபால கிருஷ்ணனும் இணைந்து ஆடும் ஒரு பாடல்
காட்சி ஸ்ரீராமுலு நாயுடுவின் தன்னம்பிக்கைக்கும், எடுத்ததை முடிப்பதில்
அவர் காட்டும் ஈடுபாட்டுக்கும் ஒரு சான்று. இந்தக் காட்சி
படமாக்கப்படவேண்டிய நாளில் இயக்குனர் ராம்நாத் அவர்களின் மனைவிக்கு உடல்
நலம் சரியில்லாததால் அவர் சென்னை சென்று விட்டார். நடிகர் வி.
கோபாலகிருஷ்ணனோ ராம்நாத் அவர்களின் மீது பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். ஆகவே அன்று படப்பிடிப்பு இருக்காது என்று அவர் தனது
ஹோட்டல் அறையிலேயே தங்கி விட்டார்.
படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு விஷயத்தைக்
கேள்விப்பட்டதும் கோபமே வந்துவிட்டது. "ராம் நாத் இல்லை என்றால் என்ன?
நான் காட்சியை எடுக்கமாட்டேனா?" என்றவர் "கோபியை இன்று இரவு
ஷூட்டிங்குக்கு வரச் சொல்லுங்க." என்று ஆளை அனுப்பி வரவழைத்தார். ஆனால்"ராம்நாத் இயக்காமல் நான் நடிக்கமாட்டேன்" என்று கோபால கிருஷ்ணன்
மறுத்துவிட."அப்படியா? அவருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து சென்னைக்கே
அனுப்பிவிடு" என்று உத்தரவு போட்ட ஸ்ரீராமுலு நாயுடு கதாநாயகன்
இல்லாமலேயே அந்த டூயட் காட்சியை தானே படமாக்கினார்.
பத்மினியின் தங்கை ராகினிக்கு கோட் சூட் போட்டு தலையில் தொப்பி வைத்து
ஆண்வேடமிட்டு பத்மினியோடு இணைந்து வி. கோபால கிருஷ்ணனுக்கு பதிலாக
நடிக்கவைத்து லாங் ஷாட்டிலும், மிட்-ஷாட்டிலும் பெரும்பாலும்
காமிராவுக்கு முதுகுப் பக்கத்தை காட்டியும் பத்மினியோடு இணைந்து நடிக்க
வைத்து வெற்றிகரமாகப் படமாக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு.
படம் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. தமிழ்த் திரை உலக வரலாற்றில்
சிறந்த கதை அம்சமும், சிறப்பான நடிப்பும், இனிமையான இசையும், அருமையான
இயக்கமும் கொண்ட படம் என்று அனைவரின் பாராட்டையும் பெற்ற படமாக அமைந்தது.
ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் பங்கு கொண்ட அனைவரும் அடையாளம்
காணப்பட்டு மேலும் வாய்ப்புகளைப் பெறுவார்கள் அல்லவா?
அந்த வகையில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு "ஏழை படும் பாடு" படம் ஒரு
நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஸ்ரீராமுலு நாயுடு இந்தப் படத்தை "பீடல பாடலு" என்று தெலுங்கிலும்
தயாரிக்க அதற்கும் சுப்பையா நாயுடுவே இசை அமைத்தார்.
அதற்கு பிறகு வந்த "மர்ம யோகி" யில் மீண்டும் சி. ஆர் சுப்பராமனுடன்
இணைந்து இசை அமைத்தார் சுப்பையா நாயுடு.
அதன் பிறகு அவர் இசை அமைப்பில் மீண்டும் பக்ஷிராஜா நிறுவனத் தயாரிப்பான"பொன்னி" ஸ்ரீராம்-பத்மினி நடிப்பில் ஏ.எஸ்.ஏ. சாமியின் இயக்கத்தில்
வெளிவந்தது. ஆனால் இந்தப் படம் வெற்றிபெறவில்லை. அதனால் பாடல்கள்
எதுவும் கிடைக்கவில்லை.
"பொன்னி'யின் தோல்வியால் மனம் தளராத ஸ்ரீராமுலு நாயுடு அடுத்த படத்தை
அதிரடியாக ஆரம்பித்தார். ஆறு மொழிகளில் அதனைத் தயாரித்து தானே ஆறு
மொழிகளிலும் படத்தை இயக்கி அனைத்தையும் பெரு வெற்றி பெற வைத்தார்.
தமிழில் தயாரிக்கப் படத்தில் கதாநாயகனாக நடித்த "எம். ஜி. ஆர்."
அவர்களுக்கு காலத்தை வென்ற புகழைச் சேர்த்து அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு
படம் உயர்த்தி வைத்தது. எஸ். எம். சுப்பையா நாயுடுவுக்கும் பெயர்
சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்று சொல்லும் அளவுக்கு
இன்றளவும் அவரது பெயரைக் குறிப்பிட்டாலே நினைவுக்கு வரும் படமாக அமைந்து
அவரையும் சிகரம் தொட வைத்தது.
வெற்றி என்றால் எப்படி...? முதல் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்
பதக்கத்தை பரிசாகக் பெற்ற தமிழ்ப் படம் என்ற பெருமை அடையும் அளவுக்கு
கிடைத்த வெற்றி.
அது மட்டும் அல்ல. எம்.ஜி.ஆர் படம் என்றாலே தத்துவப் பாடல் ஒன்று
கண்டிப்பாக இருக்கும் அல்லவா? அந்த வகையில் எம்.ஜி.ஆர். படத்தில் முதல்
முதலாக இடம் பெற்ற
தத்துவப் பாடலுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர் என்ற
சிறப்பை எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த
படமாகவும் அதுவே அமைந்தது.
ஆம்.. மலைக்கள்ளன் வந்துவிட்டான்.
(சிகரம் தொடுவோம்..)
இணைப்பில் உள்ள படங்கள்:
1. வி. நாகையா.
2. "ஏழை படும் பாடு" படத்தில் ஒரு காட்சி. |