சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 5
6. நேற்று நடந்தவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
இன்று முதல் வாழத் துவங்குங்கள். நாளை என்பதன் மீது நம்பிக்கை
வையுங்கள்" -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இந்த இடத்தில் "பக்ஷிராஜா" நிறுவன அதிபரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீராமுலு நாயுடு அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.
வெற்றியின் சிகரத்தில் ஏறத் துடிப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு அற்புதமான பாடம்.
"இந்தியத் திரை உலகச் சரித்திரத்திலேயே - ஏன் உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மூன்று படப்பிடிப்பு நிறுவனங்களை வளர்த்த, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் படங்களைத் தயாரித்து இயக்கிய பெருமைக்குரியவர் ஸ்ரீராமுலு நாயுடு ஒருவர்தான்" - என்கிறார் பிரபல திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளருமான திரு. ராண்டார் கை அவர்கள்.
|
அது மட்டும் அல்ல. ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரித்து இயக்கி அனைத்தையும் மாபெரும் வெற்றி பெறச் செய்தவர் என்ற பெருமைக்கும் அவர் ஒருவரே சொந்தக்காரர்.
1910ஆம் வருடம் சுப்பராயுலு முனுசாமி நாயுடு என்பவருக்கு மகனாக திருச்சியில் பிறந்தார் ஸ்ரீராமுலு நாயுடு. அவரது தந்தை திருச்சியில் அப்போது "சவுத் இந்தியன் ரயில்வே லிமிடெட்" என்ற ரயில்வே நிறுவனத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். (பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் ரயில்வேத் துறை அப்போது இங்கிலாந்தை தலைமை அகமாகக் கொண்டு இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் ஆளுகையின்கீழ் இயங்கி வந்தது. ரயில்வேயின் பெரும்பாலான பங்குகளை வாங்கி விற்பனை செய்வது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் வசமாகவே இருந்து வந்தது.
சுதந்திரம் அடைந்த பிறகு தான் ரயில்வேத்துறை தேசியமயமாக்கப் பட்டு அரசின் வசம்
வந்தது.)
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோயம்புத்தூருக்கு வந்த முனுசாமி நாயுடு அங்கே புகழ் பெற்ற "தவே அண்ட் கம்பெனி"நிறுவனத்தின் பெயரில் பேக்கரி ஒன்றைத்
தொடங்கினார். அப்போது இண்டர்மீடியட் முடித்திருந்த ஸ்ரீராமுலு நாயுடு தந்தையின்
பேக்கரியில் சேர்ந்து உழைக்கத் தொடங்கினார்.
தொழிலில் நுழைந்த நாள் முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார் ஸ்ரீராமுலு நாயுடு. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி - கேக்குகள் தயாரிப்பு முதல் ஏற்றுமதிக்காக பெட்டி அடிப்பது வரை - எந்த வேலையாக இருந்தாலும் சரி தானே இறங்கி உழைக்க அவர் தவறவில்லை. ஒழுங்கு முறையிலும் நேரம் தவறாமையிலும் கடமையான நம்பிக்கை வைத்திருந்தார் அவர். கடிகாரத்தை பார்த்துக்கொண்டே வேலை செய்பவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.
அது மட்டும் அல்ல. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் - அவரைப் பொறுத்தவரை "தவறென்றால் அது தவறுதான். சரி என்றால் அது சரிதான்" - இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற மனோபாவம் கொண்டவர்.
அதே சமயம் பலதரப் பட்டவர்களுடன் கலந்து சகஜமாக பழகும் சுபாவமும் அவருக்கு கைவந்தது. தனது இருபதாவது வயதிலேயே "COIMBATORE COSMOPOLITAN CLUB" பில் அங்கத்தினராக சேர்ந்தார் ஸ்ரீராமுலு நாயுடு. ஒரு பேக்கரி நிறுவனராக தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு திரைப்படத்துறையில் நுழையவேண்டும் என்றோ, ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவேண்டும் என்றோ, படங்களைத் தயாரித்து இயக்கவேண்டும் என்ற எண்ணமோ சுத்தமாக கிடையாது - கோவை
சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் பெற்ற வெற்றியைக் காணும்வரை.
|
சாமிக்கண்ணு வின்சென்ட் –
இவர் தான் திரை உலக வரைபடத்தில் கோவையை இடம் பெறச் செய்த சரித்திரத்தை
உருவாக்கியவர்.
பேசும் சினிமா வரத்தொடங்கிய காலகட்டத்தில் கொல்கத்தாவில் 1933 -ஆம் ஆண்டு இவர்
தயாரித்த "வள்ளி திருமணம்" ஒரு மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக ஆனது. அந்த வெற்றி பலரை - குறிப்பாக சாதிக்கத் துடித்துக்கொண்டிருந்த இளைஞரான ஸ்ரீராமுலு நாயுடுவை " நாமும் சினிமா எடுத்தால் என்ன?" என்று நினைக்க வைத்தது.
உடனடியாக அவர் "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று படத்தயாரிப்பில் இறங்கி விடவில்லை. அப்போது கோவையில் இருந்த பிரீமியர் சினிடோன் ஸ்டூடியோவில் சேர்ந்து தயாரிப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவருக்கு அங்கு பல பிரபலங்களின் நட்பு கிடைத்தது. அவற்றுள் சில அவருக்கு வாழ்நாள் முழுவதும் கைகொடுத்தன.
அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஆர்.கே. ராமகிருஷ்ணன் செட்டியார். இவரது சகோதரர் தான் பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மந்திரி சபையில் அங்கம் வகித்த ஆர்.கே. சண்முகம் செட்டியார்.
இன்னொரு நண்பரான கே.எஸ். நாராயண அய்யங்கார் பின்னாளில் நாராயணன் அண்ட் கம்பெனி என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி "கணவனே கண்கண்ட தெய்வம்" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
ஆரம்பத்தில் இந்த நாராயண அய்யங்கார் அவர்களுடைய ஏஜண்டாக கோயம்பத்தூர் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமுலு நாயுடு அவருடன் பாகஸ்தராக இணைந்து "பக்ஷிராஜா பிலிம்ஸ்" என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
சில காலங்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் தனித்தனியே செயல்பட விரும்பி நாராயண அய்யங்கார் விலகியதும் "பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்" என்ற புதிய பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தத் தொடங்கினார் ஸ்ரீராமுலு நாயுடு.
இந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் பானரில் வெளிவந்த முதல் படம் பி.யு. சின்னப்பா நடித்த "ஆர்யமாலா". தொடர்ந்து சின்னப்பாவின் நடிப்பில் "ஜகதலப்ரதாபன்",
எம். கே. தியாகராஜ பாகவதரின் நடிப்பில் "சிவகவி" என்று வரிசையாக வெற்றிப்படங்களைக்
கொடுத்த ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு - ஒரு திடீர் சரிவு லக்ஷ்மிகாந்தன் கொலையின்
காரணமாக ஏற்பட்டது.
அந்தக் கொலைவழக்கில் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீராமுலு நாயுடுவும் கைதுசெய்யப்பட்டார்.
ஆனால் அந்தச் சரிவும் தற்காலிகம்தான். கொலைக்காக சதித்திட்டம் தீட்டியதில் ஸ்ரீராமுலு நாயுவுவும் பங்கு கொண்டதற்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்று தீர்மானித்து அவரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் தான் ஏற்கெனவே பங்குதாரராக இருந்த கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் இருந்து விலகி கோவையில் ஏற்கனவே இருந்துவந்த கந்தன் ஸ்டூடியோவை வாங்கி "பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்" என்ற புதிய படப்பிடிப்புத்
தளத்தையே உருவாக்கினார். பக்ஷிராஜா தயாரிப்பு நிறுவனப் படங்கள் எல்லாம் அந்த ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப் பட்டன.
தனக்கேற்பட்ட சரிவில் இருந்து மீண்ட பிறகு அவர் தயாரித்த "கன்னிகா". படம் வெளியாகி
பலத்த அடி வாங்கியது. ஆனால் அதற்காக மனம் தளரவில்லை ஸ்ரீராமுலு நாயுடு. அடுத்து ஏற்கெனவே பாகவதர் நடித்து பெருவெற்றி பெற்ற "பவளக்கொடி" படத்தை மறுபதிப்பு செய்தார்.
நாடக மேடையில் பிரபலமான "அல்லி-அர்ஜுனன்" கதைதான் இது. அல்லி ராணியாக
டி.ஆர். ராஜகுமாரியை ஒப்பந்தம் செய்தவர்அர்ஜுனனாக நடிக்க டி.ஆர். மகாலிங்கத்தை
அணுகினார். ஆனால் டி.ஆர். மகாலிங்கமோ தனக்கு கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கவே விருப்பம் என்றதால் டி.ஈ. . வரதன் என்ற புதுமுகம் அர்ஜுனன் வேடமேற்றார். (இவரது மகன்தான் பின்னாளில் இந்திய அணியில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான டி.ஈ. ஸ்ரீனிவாசன்).
படத்தில் சி. ஆர். சுப்பராமன் இசை அமைத்த சில பாடல்கள் பிரபலம் அடைந்தன. எதிர்பார்த்த வெற்றியைப் படம் பெறாவிட்டாலும் ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு அவரது பெயரை நிலை நிறுத்திக்கொள்ள படம் உதவியது.
பக்ஷிராஜா பட நிறுவனம் மீண்டும் கிளர்ந்தெழுந்தாலும் அடுத்து வரும் படம் அனைத்து அம்சங்களிலும் சிறப்பானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார் ஸ்ரீராமுலு நாயுடு.
இசை அமைப்பில் மெல்ல மெல்ல மாறுதல்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். ஏற்கெனவே தனது தயாரிப்புகளில் வெளிவந்த ஆர்யமாலா, ஜகதலப்ரதாபன் போன்ற படங்களில் ஹார்மொநியக் கலைஞராகப் பணியாற்றிய எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் ஏற்பட்டிருந்த நட்பானது வேர்விட்டு வளரத் தொடங்கி இருந்தது.
ராஜகுமாரி, அபிமன்யு, மோகினி, கன்னியின் காதலி என்று வரிசையாக சுப்பையா நாயுடுவின் இசை அமைப்பில் வெளிவந்த படங்கள் பிரபலமடைந்ததால் ஸ்ரீராமுலு நாயுடுவின் கவனத்தை கவர்ந்தார் அவர்.
சென்ட்ரல் ஸ்டூடியோ நிறுவனம் கோவையில் மூடப்பட்டதும், "பக்ஷிராஜா" நிறுவனத்தில் சேர்ந்து படங்களுக்கு இசை அமைக்க - அதுவும் தனியாகவே இசை அமைக்க - எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு அழைப்பு வந்தது.
கரும்பு தின்னக் கசக்குமா என்ன? பக்ஷிராஜா நிறுவனத்தில் ஆஸ்தான இசை
அமைப்பாளரானார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
வருடம் 1950 - தீபாவளி தினத்தன்று வெளியான பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் தயாரித்த அந்தப் படம் மகத்தான வெற்றி பெற்று எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்து அவரை முன்னணி இசை அமைப்பாளர்கள் வரிசையில் சேர்த்தது.
அந்தப் படம்தான் "ஏழை படும் பாடு".
(சிகரம் தொடுவோம்..)
இணைப்பில் உள்ள படங்கள்:
1. ஸ்ரீராமுலு நாயுடு - பிரபல ஹிந்தி நடிகர் திலீப்குமாருடன்.
2. பக்ஷி ராஜா - நிறுவனத்தின் வெற்றிச் சின்னம்.
|