வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 4


பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

4. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வழி என்னவென்றால் நீங்கள் செய்வதற்கு பயந்து கொண்டிருக்கும் செயலைச் செய்வதும் அதன் மூலம் உங்களுக்கு பின்னால் காத்துக்கொண்டிருக்கும் வெற்றிகரமான அனுபவங்களின் பதிவுகளைப் பெறுவதும் தான்.
- வில்லியம் ஜென்னிங்க்ஸ் ப்ரையன்

பதினான்கு வயது விஸ்வநாதன் போட்ட மெட்டை தன்னுடையதாக்கிக் கொண்டார் எஸ்.எம். சுப்பையா நாயுடு என்றால் .. அதற்கு காரணம் இருந்தது.

அந்த மெட்டு "ஆபீஸ் பாய்" என்ற ஒரு கடைநிலை ஊழியன் போட்டது என்றால் அதனை யாரும் அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவும் தவிர வாத்திய கோஷ்டியில் உள்ள மற்றவர்கள் அதற்கு சரியான இசை வடிவம் கொடுக்க எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்?

"நாம் இத்தனை பேர் இருக்கிறோம். நம்மை ஒரு டியூன் போடச் சொன்னால் போடமாட்டோமா? போயும் போயும் ஒரு கடைநிலை ஊழியனை விடவா நாம் மட்டமாகப் போய்விட்டோம்" - என்ற எண்ணத்தில் அவர்கள் ஏதாவது காரணங்களைச் சொல்லி சரிவர ஒத்துழைக்காமல் போய்விட்டால் அந்த நல்ல மெட்டு இசையாக வடிவம் பெறாமலே போய்விடுமே?

அதோடு நிற்காமல் - யாராவது ஏதாவது சொல்லி விஸ்வநாதனை ஜுபிடர் நிறுவனத்தை விட்டே வெளியேற்றச் செய்துவிட்டால் அவனது எதிர்காலம் என்னவாகும்?

இப்போது மெட்டுப்போடும் இந்தப் பையனுக்கு நல்ல இசை ஞானம் இருக்கிறது. இவனுக்கு இன்னும் வாத்திய இசைச் சேர்க்கை வரை கற்றுக்கொடுத்து நல்லவிதமாக முன்னுக்குக் கொண்டுவரவேண்டும். அதுவரை இவனை நம் கூடவே வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த எண்ணங்கள் தோன்றியதால் தான் சுப்பையா நாயுடு அன்று எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட மெட்டை தன்னுடையதாக்கிக் கொண்டாரே தவிர வேறு எந்த உள்நோக்கமும் அதற்கு இல்லை.

இயல்பாகவே பரந்த மனம் கொண்டவர் அவர். விஸ்வநாதனிடம் அன்பும் கரிசனமும் அவருக்கு நிறைய இருந்தது. அவனைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார் அவர்.

"அபிமன்யு" படமும் வெற்றிப் படமானது. "புது வசந்தமாமே வாழ்விலே" பாடல் பெருத்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஜூபிடரில் அவர் இருந்த வரை இசை அமைத்த பாடல்களில் விஸ்வநாதனின் பங்களிப்பு அதிகம் இருந்தது.

விஸ்வநாதன் அதைப் பற்றி எல்லாம் ஒன்றும் கவலைப் படவில்லை. அவரைப் பொறுத்தவரை சுப்பையா நாயுடு எதைச் செய்தாலும் அது அவரது நன்மைக்குத் தான் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. ஆகவே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதுவும் ஜுபிடர் நிறுவனத்தின் தயாரிப்புதான். படத்தின் பெயர் "மோகினி". டி.எஸ். பாலையா - மாதுரிதேவி நாயகன்-நாயகியாக நடித்த இந்தப் படத்தில் பாலையாவின் தங்கையாக வி.என். ஜானகி நடிக்க அவரது காதலராக இரண்டாவது கதாநாயகனாக நடித்தார் எம்.ஜி.ஆர். எஸ்.எம். சுப்பையாநாயுடுவைத் தவிர படத்துக்கு இசை அமைத்த இன்னொரு இசை அமைப்பாளர் இசை மேதை சி. ஆர். சுப்பராமன்.

சில பல மாதங்களுக்கு முன்னாள் பொதிகைத் தொலைக் காட்சி இந்தப் படத்தை ஒளிபரப்பியபோது படத்தின்பிரதி சரியாக இல்லாத காரணத்தால்
பாதி ஒளிபரப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் இந்தப் படத்தின் குறுந்தகடு இன்றும் காணக் கிடைக்கிறது. இதில் வில்லனின்
எடுபிடியாக ஒரு நகைச்சுவை வேடத்தில் சிறப்பாக பரிமளித்திருந்தார் எம்.என். நம்பியார்.

அடுத்து குறிப்பிடவேண்டிய படம் ஜுபிடர் நிறுவனத்தின் "கிருஷ்ண விஜயம்". இந்தப் படத்தில் சி.எஸ். ஜெயராமனும் ஒரு இசை அமைப்பாளர். பாபநாசம் சிவன் அவர்கள் எழுதி மெட்டமைத்த ஆறு பாடல்களுக்கு இணைப்பிசை கொடுத்தவர் சுப்பையா நாயுடு. இந்தப் படத்தில் "சங்கீதம்-எஸ்.எம். சுப்பையா நாயுடு" என்று டைட்டில் கார்டில் குறிப்பிடப் பட்டிருப்பதால் சுப்பையா நாயுடுவுக்கு இசை அமைப்பில் முக்கியத்துவம் கொடுத்த படம் என்று கூட இதைச் சொல்லலாம். "முப்பதுக்கும் மேற்பட்ட ராகங்கள் பிரவகிக்கும் படம் இது" என்பது திரு. வாமனன் அவர்களின் திரை இசை அலைகள் மூலம் கிடைக்கும் தகவல்.

நரசிம்ம பாரதி கிருஷ்ணராக நடித்த இந்தப் படத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும் சாதுக்களின் கோஷ்டியில் ஒருவராக தோன்றி நடித்ததுடன் நில்லாமல் கோரஸ் பாடகராக திரை உலகில் தனது கணக்கை முதல் முதலாகத் தொடங்கினார் டி.எம். சௌந்தரராஜன். பத்து வருடங்களுக்கு முன்னால் எப்போதோ ஒருமுறை பொதிகைத் தொலைக் காட்சியில் இந்தப் படத்தை பார்த்த நினைவு. ஆனால் நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி படம் வெற்றிப்படமாக அமைந்த காரணத்தால் பாடல்கள் அனைத்துமே மிகவும் பிரபலமாக அமைந்திருக்கவேண்டும். ஏனென்றால் அப்போதெல்லாம் படத்தின் வெற்றியைத் தீர்மானித்தவை பாடல்கள் தானே!

அடுத்து வந்த படம் - 1947 -இல் வெளியான ஜுபிடரின் கன்னியின் காதலி என்ற படம். ஷேக்ஸ்பியரின் "பன்னிரண்டாவது இரவு" என்ற நாடகத்தை அருமையான முறையில் திரைக்கதை அமைத்து இயக்கினார் திரை மேதை டி.ஆர். ரகுநாத் அவர்கள். வசனங்களை கவிஞர் எஸ்.டி. சுந்தரம் எழுத, கலை இயக்குனர் ஆர்.கே. சேகரின் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் (இவர் புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத் தயாரிப்பான "சந்திரலேகா"வுக்கு கலை வண்ணம் கொடுத்தவர்) எஸ்.ஏ. நடராஜன், அஞ்சலி தேவி, மாதுரி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு சி. ஆர். சுப்பராமனுடன் சேர்ந்து இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

படம் ஆரம்பித்தபோது ஒரு நாள் ஒரு இளைஞர் வசனம் எழுத வாய்ப்பு கேட்டு இயக்குனர் டி.ஆர். ரகுநாத் அவர்களைக் காணவந்தார்.

"கதை எழுத ஆளுங்க இருக்காங்க. பாட்டு எழுத வருமா?" என்று அந்த இளைஞரிடம் கேட்டார் டி.ஆர். ரகுநாத்.

சற்றும் தயங்காத அந்த இளைஞர் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டு பாடலாசிரியராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அவர்தான் கவியரசு கண்ணதாசன்.

"கலங்காதிரு மனமே கலங்காதிரு மனமே. உன் கனவெல்லாம் நிஜமாகும் ஒரு தினமே" என்ற பல்லவியோடு ஆரம்பித்த கவியரசு கண்ணதாசனின் முதல் பாடலுக்கு ஹிந்துஸ்தானி பெஹாக் ராகத்தில் அற்புதமாக மெட்டமைத்து கவிஞரின் முதல் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் என்ற பெருமைக்குரியவரானார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

வரிக்கு வரி ராகம் மாறும் "காலையிலே" என்று தொடங்கும் ஒரு நடனப் பாடலும் சுப்பையா நாயுடுவின் இசை மேதைமையைப் பறைசாற்றுகின்றது.

ஆகக்கூடி "ராஜகுமாரி"க்குப் பிறகு தனித்துஇசை அமைக்கும் வாய்ப்பு சரியாக அமையாத போதிலும், கிடைத்தவாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக்
கொண்டு முன்னேறிவர அவர் தவறவில்லை.

"நமக்கென்ன? ஜுபிடர் இருக்கிறது. நிரந்தர மியூசிக் டைரக்டராக நாம் தானே இருக்கோம். சமயம் வரும்போது பார்த்துக்கலாம்" என்று இருந்தவரை அதிர்ச்சிக்குள்ளாகும் செய்தி ஒன்று வந்தது.

அந்தச் சமயத்தில் தலை நகர் சென்னை படத்தயாரிப்பில் ஈடுபட்டவர்களைத் தன்வசம் ஈர்த்துக் கொள்ளத் தொடங்கியது. அதனால் ஜுபிடர் நிறுவனமும் தனது "சென்ட்ரல் ஸ்டூடியோவை "இழுத்து மூடிவிட்டு சென்னையில் புதிய நிர்வாகத்தை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து கோவையில் பணியில் இருந்தவர்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் வேலை பறிபோனது. சுப்பையா நாயுடு உட்பட. நேரடியாக நிர்வாகத்திடம் சென்றார் சுப்பையா நாயுடு.

"என்னை வீட்டுக்கு அனுப்பறதைப் பத்திக் கவலை இல்லை. ஆனால் என் கிட்டே அசிஸ்டண்டா இருக்கானே இந்த விஸ்வநாதன் இவனை சென்னை ஆபீஸ்லே மியூசிக்லே சேர்த்துக்க வழி பண்ணுங்க." என்று கேட்டுக்கொண்டார் அவர்.

"என்னய்யா இது.. இங்கே எடுபிடி வேலை பாக்குறவுன்னு இசையைப் பற்றி என்ன தெரியும்? இவனை எதுக்கு சென்னையிலே நியமனம் செய்யணும்?" என்று நிர்வாகம் கேள்வி எழுப்பிய பொழுது..

சற்றும் தயங்காமல் உண்மையைப் போட்டு உடைத்தார் சுப்பையா நாயுடு.

"நம்ம அபிமன்யு படத்துலே வந்துதே "புது வசந்தமாமே வாழ்விலே" என்கிற ஹிட் பாட்டுக்கு டியூன் போட்டது யாருன்னு நெனைச்சீங்க. நான் இல்லே.. இதோ இந்தப் பையன் விஸ்வநாதன்தான். "என்று ஆரம்பித்தவர் அடுத்து வந்த படங்களில் விஸ்வநாதன் டியூன் போட்டுக் கொடுத்த பிரபலமான பாடல்களையும் பட்டியல் போட்டுவிட்டு.."இவனுக்கு கண்டிப்பா சென்னை ஆபீஸ்லே வேலை போட்டுக் கொடுக்கணும். " என்று விஸ்வநாதனுக்காக வாதாடினார் சுப்பையா நாயுடு.

அசந்து போனார்கள் நிர்வாகத்தினர்.

"அப்படி என்றால் சென்னையில் இசை அமைப்பை சி.ஆர். சுப்பராமந்தான் கவனிச்சுக்கப் போகிறார். அவர் சரி என்றால் இவனை சென்னைக்கு அழைச்சுகிட்டு போறதுலே எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை." என்று நிர்வாகம் கூற...

"அவ்வளவு தானே.. சுப்பராமனுக்கும் இவனைப் பற்றித் தெரியும். அவர் கண்டிப்பாக இவனை ஏற்றுக்கொள்வார்" என்று அடித்துப் பேசி சென்னைக்கு விஸ்வநாதனை அழைத்தப் போக வைத்தார் அவர்.

சரியான தருணத்தில் விஸ்வநாதனின் வளர்ச்சிக்கு தன்னால் செய்யவேண்டியதை கச்சிதமாகச் செய்துவிட்ட நிறைவோடு அவரை வாழ்த்தி சி.ஆர். சுப்பராமனிடம் அனுப்பி வைத்தார் சுப்பையா நாயுடு.

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ நிரந்தரமாக மூடப் பட்டுவிட்டது.

அடுத்து என்ன செய்வது என்று சுப்பையா நாயுடு யோசித்துக் கொண்டிருந்தபொழுது தனித்து இசை அமைக்கும் அருமையான வாய்ப்போடு "பக்ஷி ராஜா" நிறுவனம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றது.'

(சிகரம் தொடுவோம்..)


இணைப்பில் உள்ள படங்கள்:

1.கவியரசு கண்ணதாசன்.
2.கன்னியின் காதலி படத்தில் அஞ்சலி தேவி

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.