சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு
3. எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். - ஐன்ஸ்டீன்.
பக்த ராமதாஸ் - 1935-இல் வெளிவந்த இந்தப் படத்தில் ஹார்மோனியக் கலைஞராக திரை உலகில் அடிஎடுத்து வைத்த சுப்பையா நாயுடு தொடர்ந்து பல படங்களில் ஹார்மோனியக் கலைஞராக பணிபுரிய ஆரம்பித்தார்.
ஆரம்பக் காலங்களில் சினிமாத்துறை என்பது சென்னையைச் சார்ந்திருக்கவில்லை. படத் தயாரிப்பாளர்களின் புகலிடமாக விளங்கியது கோவை மாநகர் தான். புகழ் பெற்ற சென்ட்ரல் ஸ்டூடியோவும், பக்ஷிராஜா ஸ்டூடியோவும் தயாரிப்பாளர்களை தங்கள் வசம் இழுத்தன. (இவற்றில் சென்ட்ரல் ஸ்டூடியோ பழைய நினைவுகளைச் சுமந்தபடி இன்றும் கோவை-திருச்சி சாலையில் இருக்கிறது. பக்ஷிராஜா ஸ்டூடியோ பல மாறுதல்களைக் கடந்து இப்போது "விக்னேஷ் மஹால்" என்ற திருமண மண்டபமாக மாறிவிட்டிருக்கிறது).
|
ஏற்கனவே சொன்னதுபோல அப்போதெல்லாம் ஒப்பந்த முறையில் மாத சம்பளத்தில் நடிகர் நடிகைகள் முதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருமே நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் 1937 -ஆம் வருடம் மாதச் சம்பளத்தில் ஹார்மோனியக் கலைஞராக சேர்ந்தார் சுப்பையா நாயுடு.
பிரபல கர்நாடக இசைமேதை முசிறி சுப்ரமணிய அய்யர் நடித்த "துக்காராம்" படத்தில் ஹார்மோனியம் வாசித்தார் அவர். தொடர்ந்து இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்களின் படங்களில் ஹார்மோனியக் கலைஞராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆர்யமாலா, ஜகதலப் பிரதாபன் போன்ற படங்களில் அந்த மாபெரும் மேதையுடன் இணைந்து பணியாற்றினார் சுப்பையா நாயுடு.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த "மனோன்மணி" படத்திற்கு ஜி. ராமநாதனை தவிர சுப்பையா நாயுடுவும் சில பாடல்களுக்கு இசை அமைத்தார்.
தமிழ்சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் இப்படி ஒரே படத்தில் இடம் பெரும் பாடல்களுக்கு இரண்டு சிலசமயம் மூன்று இசை அமைப்பாளர்கள் கூட இசை அமைத்தனர். சேர்ந்து இசை அமைப்பது என்றால் ஒன்றாகக் கூடிக் கலந்து ஆலோசித்து இசை அமைக்க மாட்டார்கள். ஒரு படத்தில் பத்துப் பாடல்கள் என்றால் ஒருவர் ஐந்துக்கும் அடுத்தவர் ஐந்துக்கும் இசை அமைப்பார்கள். (சில சமயம் இந்த எண்ணிக்கை கூடக் குறையக்கூட செய்யலாம்) பின்னணி இசையை தனியாக வாத்திய கோஷ்டி கவனித்து வந்தது.
அப்போது ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் "கண்ணகி" படத்தின் மாபெரும் வெற்றியின் விளைவாக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து படங்களைத் தயாரித்து வந்தது. ஜூபிடரில் நிரந்தரப் பணியாளராக மாத சம்பளத்திற்கு இசை அமைப்பாளராகச் சேர்ந்தார் சுப்பையா நாயுடு. அதே நிறுவனத்தில் "ஆபீஸ் பாய்" என்பார்களே அப்படி வந்து சேர்ந்தான் ஒரு பதினான்கு வயது சிறுவன். அவனை சுப்பையா நாயுடுவுக்கு மிகவும் பிடித்துப் போனது. தனக்கு எடுபிடி வேலை செய்ய ஒரு உதவியாளனாக அவனை நியமித்துக் கொண்டார் அவர். இசை மீதிருந்த அபாரப் ப்ரேமையின் காரணமாக அவருக்கு சேவைகள் செய்து வந்தான் அவன். தனது குழுவினருடன் பாடல்களுக்கு இசைப் பதிவுகள் சேர்க்கும் போதெல்லாம் ஆவலோடு கூர்ந்து கவனித்து வருவான் அவன். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. பின்னாளில் "மெல்லிசை மன்னராக" மகுடம் சூட்டப்பட்ட எம்.எஸ். விஸ்வநாதனேதான். மெல்ல மெல்ல சுப்பையா நாயுடுவின் பாடல்கள் பிரபலமாகத் தொடங்கின.
அதே சமயம் ஜூபிடர் நிறுவனம் அதுவரை சிறுசிறு வேடங்களில் ஆரம்பித்து துணை நடிகராக தனது நடிப்பாலும் அழகினாலும் மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருந்த ஒரு இளம் நடிகரை முதல் முறையாகக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து ஒரு படத்தை ஆரம்பித்தது.
அந்தக் கதாநாயக நடிகர்..... நமது "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர் அவர்களே தான். ஆம்.. ஜூபிடரின் 'ராஜகுமாரி' படம் தான் அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம்.
அதற்கு முன்பே ஒரு படம் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்து சில ஆயிரம் அடிகள் வரை எடுக்கப்பட்டு பிறகு நிர்ப்பந்தம் காரணமாக அவரை விலக்கிவிட்டு வேறு ஒரு பிரபல நடிகரை வைத்து மறுபடியும் ஆரம்பிக்கப் பட்ட கொடுமையும் நடந்தது. அகவே தனது திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனைப் படமாக "ராஜகுமாரி" படத்தைக் கருதினார் எம்.ஜி.ஆர்.
படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். ஆனால் படத்தின் டைட்டில் அவரை வசனகர்த்தாவின் உதவியாளராகவே அறிமுகம் செய்தது. படத்தில் எம்.ஜி.ஆரின் நண்பனாக இரண்டாவது கதாநாயகனாக நடித்தார் எம்.என். நம்பியார்.
இந்தப் படத்திற்கு முழு இசை அமைப்பாளராக அனைத்துப் பாடல்களுக்கும் இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. அதுவரை பாடும் நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில் இருந்து இரண்டாம் கட்டத்தை நோக்கி தமிழ்த் திரையுலகம் நகரத் தொடங்கிய நேரம்.
தனது "நந்தகுமார்" படத்தில் யசோதையாக நடித்த நடிகைக்கு லலிதா வெங்கட்ராமனைப் பாடவைத்து பிண்ணனி பாடும் முறையை ஏ.வி.எம். அவர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்.
ஆனால் ஆண் பாடகர்கள் அதுவரை படவுலகில் நுழையவில்லை. கதாநாயக நடிகர்களே பாடவும் செய்ததால். ஆனால் "ராஜகுமாரி" படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கோ குரல் வளம் அவ்வளவாக இல்லை. அவருக்கு இசை பற்றிய ஞானம் அபரிமிதமாக இருந்தாலும் பாடுவதற்கேற்ற வல்லமை அவரிடம் இல்லை.
அதனால் என்ன? திரு. ஏ.வி.எம். அவர்கள் காட்டிக் கொடுத்த வழியில் இரண்டு பாடகர்கள் "பாய்ஸ்" நாடகக் கம்பெனியில் இருந்து படவுலகுக்கு வந்தார்கள்.
திருச்சியைச் சேர்ந்த எம்.எம். மாரியப்பாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரனான லோகநாதனும் (ஆம். நமது திருச்சி லோகநாதனே தான்) தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்கள் என்ற பெருமைக்குரிய பாடகர்களாக "ராஜகுமாரி" படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்கள்.
அவர்களை ராஜகுமாரி படத்தில் பாடவைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப் படுத்திய பெருமை அவருக்கு கிடைத்தது.
ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆருக்கு பிண்ணனி பாடிய - அதுவும் முதல் முதலாக எம்.ஜி.ஆருக்கு பாடிய பெருமை எம்.எம். மாரியப்பாவுக்கு கிடைத்தது. நம்பியாருக்கு பிண்ணனி பாடினார் திருச்சி லோகநாதன்.
முதல் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படத்துக்கு இசை அமைத்த பெருமையும் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் "ராஜகுமாரி" படம் தான் அவர் தனியாக இசை அமைத்த முதல் படமும் கூட.
சாதிக்கத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் பட்டாளம் (எம்.ஜி.ஆர்., கலைஞர், எஸ்.எம். சுப்பையா நாயுடு) தங்கள் திறமையை வெளிப் படுத்தி வெற்றிச் சிகரத்தில் ஏற ஆரம்பித்த தருணம் என்று கூட "ராஜகுமாரி" படத்தைச் சொல்லலாம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த முதல் படத்தின் குறுந்தகடு இன்றும் காணக் கிடைக்கிறது. (பாகவதர் கிராப் வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். அவர்களை நாம் பார்க்கலாம்)
படத்தில் டைட்டிலில் அவர் பெயர் "எம்.ஜி. ராம்சந்தர்" என்றே ஆரம்ப காலங்களில் குறிப்பிடப்பட்டுவந்தது. இந்தப் படத்திலும் அவர் "ராம்சந்தர்" தான். அவருக்கு ஜோடியாக மாலதி என்ற நடிகை நடித்தார். (பின்னாளில் வெளிவந்த "பாதாள பைரவி" படத்திலும் இவர் நடித்திருந்தார். ஏனோ தமிழ் படவுலகில் அவ்வளவாகப் பிரகாசிக்காத இந்த நடிகை தெலுங்குப் படவுலகில் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்தார்)
எல்லாம் சரி.. படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன. ?
அந்தக் காலத்து வழக்கப்படி சுத்தமான கர்நாடக ராகங்களிலேயே பாடல்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. சுப்பையா நாயுடுவின் இசைப் புலமை பாடல்களில் நன்கு புலப்படுகிறது.
"அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயால் சொல்லத் தரமா" - எம்.ஜி.ஆரின் முதல் டூயட். அவருக்காக எம்.எம். மாரியப்பாவும் கதாநாயகிக்காக யு. ஆர். ஜீவரத்தினமும் பாடி இருக்கின்றனர். இந்தப் பாடல் ஆனந்த பைரவி ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இரண்டாவது டூயட் "திருமுக எழிலை திருடிக்கொண்டது தாமரை" - இந்தப் பாடல்கள் இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அந்நியப்பட்டிருக்கும் மெட்டுக்கள். ஆனால் படம் வெளிவந்த புதிதில் கண்டிப்பாக சக்கைபோடு போட்டிருக்கவேண்டும். படத்தின் வெற்றி இதனை உறுதிப்படுத்துகிறது. படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய பங்கு வகித்த காலகட்டம் அல்லவா அது?
மந்திரவாதி அபகரித்துச் சென்ற ராஜகுமாரியை தேடிச் செல்லும்போது, "கண்ணாரக் காண்பதெப்போ காதல் வளர்த்த பெண்மானைக் காண்பதெப்போ என்று சிந்துபைரவியில்
எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வருவார். எம். எம். மாரியப்பாவின் குரலில் அழுத்தமாக
உணர்வு பூர்வமாகப் பாடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் இப்பொழுது கூட மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது என்றால் படம் வெளிவந்தபோது நிச்சயம் வெற்றிப் பாடலாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி தேடிக்கொண்டு வரும்போது எம். ஜி.ஆருக்கு எம்.என். நம்பியாரின் தோழமை கிடைக்கிறது. நம்பியாரின் அறிமுகக் கட்டத்தில் அவருக்கும் ஒரு பாடல். (அந்தக் காலத்து நாடக மேடை மரபு படத்தில் பின்பற்றப் பட்டிருப்பது இந்தக் காட்சியில் தெளிவாகிறது) "காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வு தான்" - திருச்சி லோகநாதன் பாடிய முதல் பாடல் இது.
கருத்தாழம் மிக்க எளிய வரிகள். இனிமையான மெட்டுடன் சேரும் போது கேட்பவர் செவிகளை மட்டுமல்ல. மனதையும் நிறைக்கத் தவறுவதில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு இந்தப் பாடல். உடுமலை நாராயண கவிராயரின் வரிகளுக்கு அருமையாக மெட்டமைத்து பாடல்களைப் பிரபலமாக்கினார் சுப்பையா நாயுடு.
அருமையான தொய்வில்லாத திரைக்கதையும், கலைஞரின் வசனங்களும், எம்.ஜி. ஆரின் நடிப்பும், பாடல்களும், அருமையான இயக்கமும் சேர்ந்த "ராஜகுமாரி" மகத்தான வெற்றி பெற்றது.
ஆனால். .. "ராஜகுமாரியின்" வெற்றிக்காக எம்.ஜி. ஆருக்கு அடுத்தடுத்து கதாநாயக
வாய்ப்புகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தயாரிப்பாளர்கள் தந்துவிடவில்லை. கலைஞருக்கும் அப்படியே. அது மட்டுமல்ல.. என்ன காரணத்தினாலோ எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கும் தனித்து இசை அமைக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துவிடவில்லை.
அடுத்து ஜூபிடர் தயாரித்த "அபிமன்யு" - எம். ஜி. ஆர் அவர்களை மீண்டும் இரண்டாவது அந்தஸ்துக்கே தள்ளியது. இந்தப் படத்தில் அபிமன்யுவின் தந்தை அர்ஜுனனாக நடித்தார். கதாநாயகனாக அறிமுகம் செய்த நிறுவனத்தின் படம் என்பதால் மறுப்பு சொல்லாமல் நடித்துக் கொடுத்தார். எம்.ஜி. ஆர். கலைஞர் திரைக்கதை வசனம் எழுதியும் அவரது பெயரே டைட்டிலில் இடம் பெறாமல் இருட்ட்டடிப்பு செய்யப்பட்டது.
என்ன காரணத்தாலோ எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு தனித்து இசை அமைக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்தப் படத்துக்கு சி. ஆர்.. சுப்பராமனுடன் எஸ்.எம். சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தார்.
இந்தப் படத்தில் ஒரு பாடல். "தீம் சாங்" - மையப் பாட்டு என்பார்களே அதுபோல மறுபடி மறுபடி இடம்பெறும் பாடல் "புது வசந்தமாமே வாழ்விலே. இனிதாய் இன்பம் பெறுவோம் நாம்" என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். இந்தப் பாடலுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார் சுப்பையா நாயுடு.
ஆனால்.. ஏனோ தெரியவில்லை. வரிகளுக்குப் பொருத்தமான மெட்டு அமைய மறுத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் அவர். கிடைத்த மெட்டுக்கள் அவருக்கு திருப்தியைத் தரவில்லை. இசை அமைப்பாளருக்கே திருப்தி இல்லை என்னும்போது
மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
மதியம் உணவு நேரமும் நெருங்கியது. "சரி..சற்று இடைவெளி விட்டு பிறகு
முயற்சிக்கலாம்." என்று சாப்பிடச் சென்றார் சுப்பையா நாயுடு. சாப்பிடும் போதும் கூட மனம் பாடல் வரிகளுக்கான மெட்டிலேயே அலைந்து கொண்டிருந்தது.
சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு திரும்பியவரின் காதுகளில் "புது வசந்தமாமே வாழ்விலே. இனிதாய் இன்பம் பெறுவோமே" - புதிய வசீகரமான மெட்டில் கணீர் என்று யாரோ பாடுவது கேட்டது.
"அட. ரொம்ப பிரமாதமா இருக்கே. யார் பாடறாங்க?" - வியப்பும் ஆவலும் உந்தித் தள்ள வேகமாக அறையை அடைந்தார் அவர். உள்ளே பாடிக்கொண்டிருந்தவரைக் கண்டதும் அப்படியே உறைந்துபோனார்.
அங்கே.. எடுபிடி வேலைக்காக சேர்ந்த பதினான்கு வயதுச் சிறுவன் விஸ்வநாதன் தான் ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்தான்.
வேகமாக உள்ளே சென்றவர் "யாரப்பா இந்த மெட்டை சொல்லிக்கொடுத்தது. யார் சொல்லி நீ பாடிட்டு இருக்கே?' என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.
அதிர்ச்சியால் "ஹார்மோனியத்தை" அப்படியே வைத்துவிட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த விஸ்வநாதன் "அது..வந்து.. நான் தான் அய்யா இந்த டியூனைப் போட்டேன்" என்று தயங்கியபடியே சொன்னான் அவன்.
இசை அமைப்பாளரால் முடியாத ஒன்ற எடுபிடி வேலைக்குச் சேர்ந்த ஆபீஸ் பையன் போடுவது என்றால்.... அதை எந்த இசையமைப்பாளர் ஏற்றுக்கொள்வார்? இன்றோடு
நம்ம கணக்கு தீர்ந்தது என்று உள்ளுக்குள் பயந்தபடியே அவரைப் பார்த்தான்
விஸ்வநாதன்.
அவன் நினைத்தற்கு மாறாக முகத்தில் மலர்ச்சி பொங்க, "பிரமாதம்டா. ரொம்ப நல்லா வந்திருக்கு" என்று தட்டிக் கொடுத்து பாராட்டிய சுப்பையா நாயுடு அடுத்த கணம் என்ன நினைத்தாரோ, " ஆனால்..இந்த டியூனை நீ போட்டதா யார்கிட்டேயும் சொல்லிக்காதே. நான் போட்டதாகவே இருக்கட்டும். என்ன சரியா?" - என்றார்.
(சிகரம் தொடுவோம்)
இணைப்பில் உள்ள படங்கள்.
1. ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆர். - மாலதி.
2. திருச்சி லோகநாதன் - தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்.
|