வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு


பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

2. "மனித குணங்களில் முதன்மையானது தைரியம் ஒன்றுதான். ஏனென்றால் அதுதான் மற்ற குணங்களை உறுதி செய்கிறது" - வின்ஸ்டன் சர்ச்சில்.

இரவு எட்டரை மணி. இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு பாய்ஸ் நாடகக் கம்பெனி தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டின் திண்ணையில் தனது வெற்றிலைப் பெட்டி சகிதம் வந்து அமர்ந்த மதுரை ஜெகன்னாதையரின் கண்களில் தென்பட்டான் அந்த பதினான்கு வயது சிறுவன். கடந்த மூன்று நாட்களாக அவரும் அவனை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். கம்பெனி நடிகர்கள் தாங்கும் அந்த வீட்டின் திண்ணையில் மூன்று நாட்களாக தவம் இருப்பவன் போல காத்துக் கொண்டிருக்கிறானே!

ஆம். விலாசம் தெரிந்துகொண்டு தேடி வந்த சுப்பையா உடனேயே கம்பெனியில் சேர்ந்துவிடவில்லை. ஏதோ வேகத்தில் வந்துவிட்டானே தவிர ஏதோ ஒரு தயக்கம் அவனை உடனே ஜகன்னாதையரை அணுகவிடாமல் தடுத்தது. அதோடு கூட நாடகங்களை அவை நடக்கும் கொட்டகையிலே சென்று பார்த்துவிட்டு வருவான். கையில் இருந்த காசில் உணவை முடித்துக்கொண்டு கம்பெனி நடிகர்கள் தாங்கும் வீட்டின் திண்ணையில் தங்குவான். உள்ளே நடக்கும் ஒத்திகைகள், பாடல் சாதகங்கள் எல்லாம் காதில் வந்து விழும். அப்படியே அங்கு இருந்துவிடுவான். யாராவது தன்னை நெருங்கி "யாரப்பா நீ" என்று கேட்கட்டும். அதன் பிறகு பார்த்துக்கொள்வோம்" என்று அங்கேயே இருந்துவிட்டான். ஆனால் யாருமே அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

அவனை மூன்று நாட்களாக கவனித்துக் கொண்டிருந்த ஜெகன்னாதையர் "யாரப்பா நீ? இங்கே மூணு நாளா இருந்துண்டு இருக்கியே. என்னவேணும் உனக்கு?" என்று கேட்டார்.

"எனக்கு நாடகக் கம்பெனியில் சேரணும்" - "பளிச்"சென்று பதில் வந்தது சுப்பையாவிடமிருந்து.

"அப்படியா.. உன் பேர் என்ன?" - ஜெகன்னாதையரின் அடுத்த கேள்வி.

"சுப்பையா நாயுடு" என்றான் அவன். அந்தக் காலத்தில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரையும் சேர்த்துச் சொல்லும் வழக்கம் பரவலாக இருந்து வந்தது. அதனை அனுசரித்தே தன பெயரை அப்படித் தெரிவித்தான் அவன்.

ஒருவினாடி அவனை ஏற இறங்கப் பார்த்த ஜகன்னாதையர் வீட்டின் உள்புறம் திரும்பி, "சாரங்கா .. டேய் சாரங்கா" என்று குரல் கொடுத்தார்.

பின்னாளில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், சிறந்த குணச் சித்திர நடிகராகவும் விளங்கிய நடிகர் சாரங்கபாணி (அப்போது சிறுவயது பையன்) வந்து நின்றார்.

அவரிடம் சுப்பையாவைக் காட்டி, "இதோ இந்தப் பையனுக்கு கம்பெனியிலே சேரணுமாம். வாத்தியார் கிட்டே கூட்டிண்டு போய் பாடச்சொல்லி சரியா வந்தா சேத்துக்கச் சொல்லு." என்று ஜெகன்னாதையர் சொல்லவும் சுப்பையாவை உள்ளே அழைத்துச் சென்று கம்பெனியின் வாத்தியார் "யதார்த்தம்" பொன்னுசாமிப் பிள்ளையிடம் கொண்டுபோய் நிறுத்தினார் சாரங்கபாணி.

வாத்தியார் "யதார்த்தம்" பொன்னுசாமிப் பிள்ளை - நடிக்க வரும் சிறுவர்களுக்கு நடிப்புத்தொழிலைக் கற்றுக் கொடுத்து நாடகமேடைக்கு தயார் செய்வதில் வல்லவர். ஆரம்ப காலத்தில் ஜகன்னாதையரின் கம்பெனியில் இருந்துவிட்டு பிறகு விலகி தனியாக நாடகக் கம்பெனி ஆரம்பித்தவர். இவரது நாடகக் கம்பெனியில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர். ராதா ஆகிய வைரங்கள் பட்டை தீட்டப் பட்டனர்.

அது என்ன "யதார்த்தம்" பொன்னுசாமிப் பிள்ளை? பெயரே விசித்திரமாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு ..

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மனோன்மணி" படத்தில் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஜோடியுடன் நகைச்சுவை வேடத்தில் பொன்னுசாமிப் பிள்ளை நடித்தார். அதில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் யதார்த்தம். அது பிரபலமானதால் அவரது பெயருக்கு முன்பாக அந்த "யதார்த்தம்" வந்து ஒட்டிக்கொண்டு விட்டது. (வெறும் சீனிவாசன் "தேங்காய்" சீனிவாசன் ஆனது போல!).

தன்முன்பாக வந்து நின்ற சுப்பையாவை ஏற இறங்கப் பார்த்தார் பொன்னுசாமிப் பிள்ளை.

"பாட்டு வருமா?" - என்று கேட்டார்.

"சொல்லிக் கொடுத்தாப் பாடுவேன்" - என்றான் சுப்பையா தயக்கமோ பயமோ இல்லாமல்.

"எங்கே பாடு பாக்கலாம்" என்றவர் இரண்டு வரிகள் பாட அதை அப்படியே பிடித்துக் கொண்டு பாடினான் சுப்பையா.

"பரவாயில்லே. குரல் பேசறது. நீ இங்கேயே இரு" என்று சேர்த்துக் கொண்டுவிட்டார் அவர்.

அடுத்த நாள் கபீர்தாசர் நாடகம். அதில் கபீர்தாசாக நடித்தவர் எஸ்.வி. வெங்கட்ராமன். (ஆம். சிகரம் தொட்டவர்கள் "முதல் பாகத்தில்" சந்தித்தோமே அதே எஸ்.வி. வெங்கட்ராமன் தான்.) அந்த நாடகத்தில் ஒரு சிறு வேடம் சுப்பையாவுக்கு கிடைத்தது.

இப்படியாக நாடக மேடை சுப்பையாவை சுவீகரித்துக் கொண்டது. ஆனால்.. ஒரு வாரம். ஒரே வாரம் தான்.

வீட்டை விட்டு வெளியே வந்து அலைந்து திரிந்த அலைச்சல் காரணமாக உடம்பு சூடு கண்டுவிட்டதாலோ அல்லது சுப்பையாவின் போதாத காலமோ என்னமோ அம்மை முத்துக்கள் அவன் உடம்பெங்கும் வார்க்க ஆரம்பித்தன.

அவ்வளவுதான். "உடனே கிளம்பி வீட்டுக்குப் போயிடு. குணமானதும் வந்து சேந்துக்க" என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்கள்.

"முன்னுக்கு வாராமல் வீட்டுக்குப் போவதில்லை" என்ற வைராக்கியம் காரணமாக அங்கிருந்து வெளியேறிய சுப்பையா நேராக மதுரை வந்து "மங்கம்மா" சத்திரத்தில் வந்து தலையோடு கால் போர்த்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டுவிட்டான்.

ஆனால் "அம்மை" முத்துக்கள் உடம்பெங்கும் அரிப்பை கொடுத்து அவனை அரற்ற வைத்து மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிட்டன. அங்கிருந்த யாரோ சிலர் அவனை தர்மாஸ்பத்திரியில் சேர்த்துவிட்டனர். அங்கு மனித நேயம் மிக்க ஒரு மருத்துவர் சுப்பையாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தியதோடு அல்லாமல் "தம்பி.. உனக்கோ யாரும் இல்லை என்கிறாய். பேசாமல் என் வீட்டுக்கு வந்து என்ன கூடவே இருந்துடேன். உன்னை நல்ல முறையில் படிக்கவைத்து முன்னுக்கு கொண்டு வருகிறேன்" என்று கனிவோடு கூறினார்.

சுப்பையாவின் மனம் தனக்கு சமீப காலங்களாகக் கிடைத்த அனுபவங்களினால் மெல்ல மெல்ல பக்குவப் படத் தொடங்கி இருந்தது. அதே நேரம் நாடகக் கம்பெனியில் அவன் கேட்ட தோடியும், பைரவியும் அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன.

"நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பவில்லை ஐயா. நாடகக் கம்பெனிக்கே திரும்பப் போகிறேன். ஒருவேளை அங்கே அவங்க சேர்த்துக்க மறுத்துட்டா நேரா உங்க கிட்டேயே வந்துடுறேன்." என்று சொல்லிவிட்டு மறுபடி ஜகன்னாதையர் நாடகக் கம்பெனிக்கே வந்து சேர்ந்துவிட்டான் அவன்.

ஆனால்.. வந்து சேர்ந்த சிலநாட்களிலேயே - ஜெகன்னாதையர் நாடகக் கம்பெனியில் முன்னணி நடிகராக விளங்கிய "நவாப்" ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் அங்கிருந்து விலகி தனியாக தனது "மதுரை தேவி பால வினோத சங்கீத சபா" வைத் தொடங்க - தானும் அவருடன் சேர்ந்துகொண்டான் சுப்பையா.

சில நாட்களிலேயே சுப்பையாவின் மனோபாவத்தைப் புரிந்து கொண்டுவிட்டார் "நவாப்" ராஜ மாணிக்கம் பிள்ளை. நடிப்பில் அவனுக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை என்பது புரிந்து போயிற்று அவருக்கு. ஆனால் அதற்காக தன்னிடம் வந்து சேர்ந்த அந்தப் பையனை கைவிட்டுவிட அவருக்கு மனம் இல்லை.

இந்த இடத்தில் "நவாப்" ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களைப் பற்றி சில தகவல்களை இன்றைய தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் நாடகக் கலையின் வரலாற்றை சற்றே புரட்டிப் பார்க்கும் எவரானாலும் சரி "நவாப்" ராஜமாணிக்கம் பிள்ளையை ஒதுக்கிவிட்டு பார்க்கவே முடியாது. நாடகக் கலையின் வரலாற்றில் அவருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. எந்த ஒரு தீயபழக்க வழக்கமும் இல்லாதவர் அவர். அவரது நாடக மன்றத்தில் பயின்று வந்தவர்களும் அப்படியே. ஒழுக்க சீலர். தெய்வ பக்தியும் தேச பக்தியும் அவருக்கு இரண்டு கண்கள். கடுமையான கட்டுப்பாடுகளை வலியுறுத்துவார். மிகவும் கண்டிப்பானவர். அதே சமயம் தனது கண்காணிப்பில் இருக்கும் சிறுவர்களுக்கு தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக விளங்கினார். சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. அவரது குருகுலத்தில் பயின்று வந்து நடிப்பிலும் ஒழுக்கத்திலும் பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்கியவர்தான் மறைந்த "வில்லன்" நடிகர் எம்.என். நம்பியார். "பக்த ராமதாஸ்" நாடகத்தில் ராமதாசரை சிறையில் அடைக்க உத்தரவிடும் "நவாப்" வேடத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர். அதன் காரணமாக "நவாப்" என்ற அடைமொழி அவர் பெயரோடு இணைந்து கொண்டது.

தன்னிடம் வந்து சேர்ந்த நடிப்பில் ஆர்வம் இல்லாத சுப்பையாவுக்கு கம்பெனியில் மற்ற சிறுவர்களை மேற்பார்வை செய்து ஒழுங்கு முறைக்கு கொண்டுவரும் "சட்டாம் பிள்ளை" உத்தியோகத்தைக் கொடுத்தார் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. அந்த உத்தியோகம் சுப்பையாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

அதே சமயம் அவனியும் அறியாமல் அவனது மனப்போக்கில் ஒரு மாறுதல் ஏற்படத் தொடங்கியது.
அடுத்தவர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி சரிப் படுத்தும் பொறுப்பில் உள்ளவனே தவறு செய்யலாமா? முதலில் தான் ஒழுங்காக இருந்துகொள்ளவேண்டும் என்று அவனுக்கு யாரும் சொல்லிக்கொடுக்காமலே தோன்றவே யாருக்கும் அடங்காத முரட்டுக் காளையாகத் திரிந்துகொண்டிருந்தவன் தானாகவே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்தான்.

அவன் மீது மிகுந்த அக்கறை காட்டிய ராஜமாணிக்கம் பிள்ளையும் "இப்படி ஒரு சட்டாம்பிள்ளையாக மட்டுமே காலம் முழுக்க இருந்துகொண்டிருக்க கூடாது. நடிப்பில் ஈடுபாடு இல்லாவிட்டால் என்ன? வேறு ஏதாவது ஒரு துறையில் இவனை முன்னுக்குக் கொண்டுவரவேண்டும்" என்று நினைத்தார்.
அப்போது சுப்பையாவை நாடகமேடையில் இடம் பெற்றிருந்த "ஹார்மோனியம்" பெரிதும் கவர்ந்து இழுத்தது. இத்தனை கால நாடக வாழ்க்கையில் அவனை பெரிதும் கவர்ந்தது "காதர் பாட்சா" என்பவரின் ஹார்மோனிய வாசிப்பு. அந்தக் காலத்தில் ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாடுவதில் பெயரும் புகழும் பெற்று விளங்கியவர் காதர் பாட்சா. அவரைப் போல தானும் வரவேண்டும் என்ற ஆவல் சுப்பையாவிடம் உள்ளுறையாக இருந்து வந்தது. அதனை புரிந்துகொண்ட நவாப் ராஜமாணிக்கம்,"பாட்டை எடுத்துக்கொள். நீ நல்லா முன்னுக்கு வருவாய்" என்று ஆசி கூறியதோடு நிற்காமல் அவரது நாடகக் கம்பெனியில் இருந்த டி. பாலசுப்ரமணிய பாகவதரிடம் முறையான இசைப் பயிற்சியை சுப்பையாவுக்கு ஆரம்பித்து வைத்தார்.

பாகவதரிடம் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தான் சுப்பையா. அதே சமயம் இசைத்துறையில் தன்னைப் பட்டை தீட்டிக்கொள்ள இன்னொரு மறைமுக வாய்ப்பும் அவனுக்கு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் அவன் தவறவில்லை.
**********
**********
சிதம்பரத்தில் இசை வேளாளர் மரபில் தோன்றியவர் சுந்தரம் பிள்ளை. இசையில் அபார ஞானம். சங்கீத முமூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர். நிறைய கீர்த்தனைகள் - குறிப்பாக தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளில் அவருக்கிருந்த பாடாந்திரம் குறிப்பிடத் தக்கது.

அவரது மூன்று மகன்களில் கடைக்குட்டி தான் "சிதம்பரத்துச் சிங்கக் குட்டி" என்று அழைக்கப் பட்ட ஜெயராமன். (ஆம். நமது சி.எஸ். ஜெயராமன்தான்!). நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் சி.எஸ். ஜெயராமன் முன்னணி நடிகராக "ராஜபார்ட்" அந்தஸ்தோடு இருந்துவந்தார். "ராஜபார்ட்" நடிகருக்கு சில விசேஷ சலுகைகள் உண்டு. அதன் படி தன மகன் எங்கு சென்றாலும் கூடவே சென்று அவனது இசைத் திறமையை விருத்தி செய்யவும், சாதகம் செய்யவைக்கவும், புதுப் புது பாடல்களைக் கற்றுக்கொடுக்கவும் சுந்தரம் பிள்ளையும் கூடவே சென்று தங்குவார்.

நாடகம் முடிந்த ஓய்வு நேரங்களில் ஜெயராமனுக்கு இசைப் பயிற்சிகள் தொடங்கும். ஜெயராமனுக்கு அவர் தந்தை சொல்லிக் கொடுக்கும் சங்கீத நுணுக்கங்களை தானும் கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொண்டதோடு தனது இசை அறிவைப் பெருக்கிக் கொண்டான் சுப்பையா. இசை மீது அவனுக்கு ஏற்பட்ட ஆவல் அந்த தெய்வீகக் கலையின் சிறப்பம்சங்களை கிரகித்துக்கொள்ளும் வாய்ப்பை தானாகவே ஏற்படுத்தித் தந்தது.

குறிப்பிட்ட ஒரு துறையில் ஒருவன் முன்னேறவேண்டும் என்றால் அந்தத் துறையைப் பற்றிய நுணுக்கமான விஷய ஞானம் அவனுக்கு கைவரவேண்டும். அதற்காக அவன் எங்கேயும் அலைய வேண்டாம். அவனது ஆர்வம் உண்மையாக இருந்தால் அதற்கான வாய்ப்புகள் தானாகவே அவனைத் தேடி வரும். சுப்பையாவின் விஷயத்திலும் இதுவே நடந்தது.

அந்த சங்கீத நுணுக்கங்களை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் கம்பெனியில் ஹார்மோனிய வித்தகராக இருந்த இளைஞர் ராஜகோபால அய்யங்காரிடம் ஹார்மோனியத்தை கையாளக் கற்றுக்கொண்ட போது பிரயோகித்துப் பயிற்சிகளை மேற்கொண்டான்.

நாட்கள் நகர்ந்தன.

உடல் நலம் பாதிக்கப்பட்டு ராஜகோபால அய்யங்கார் கம்பெனியை விட்டு விலகிச் செல்லும் முன்பாக சுப்பையாவை அழைத்து "இனிமேல் என் இடம் உனக்குத்தான்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவரது வாக்கு பலித்தது. நவாப் கம்பெனியின் நிரந்தர ஹார்மோனியக் கலைஞனாக உயர்ந்தான் சுப்பையா.

நவாப் அவர்களின் "பக்த ராமதாஸ்" திரைப்படமாக வந்தபோது அதில் பணியாற்றிய கலைஞர்களின் பெயர்கள் டைட்டிலில் இடம் பெற்றபோது "ஹார்மோனியம் - எஸ்.எம். சுப்பையா நாயுடு" என்று அவனது பெயர் டைட்டிலில் இடம் பெற திரைத் துறையில் காலெடுத்து வைத்தான் சுப்பையா.
அப்பா அடித்ததனால் வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் சுப்பையா - எஸ்.எம். சுப்பையா நாயுடுவாக திரைத் துறையில் எடுத்து வைத்த முதல் காலடி வெற்றிக்கான காலடியாக அமைந்து அவனது முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.

(சிகரம் தொடுவோம்)


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.