வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 23

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

ஒரு வழியாக லேனா செட்டியாரின் "ராஜா தேசிங்கு" படம் 1961 -இல் வெளிவந்தது.
ஜி. ராமநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாகவே அமைந்தன. என்றாலும் தயாரிப்பில் ஏற்பட்ட காலதாமதம் படத்தின் வெற்றியை வெகுவாகப் பாதித்தது.

தாமதமாக வந்த படத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஒரு பக்தி நடனப் பாடலைச் சேர்த்தார் லேனா செட்டியார். (படம் வெளியானபிறகு எதிர்பார்த்த வெற்றியை பெறாததால்
அந்தப் பாடல் காட்சியை இணைத்து வெளியிட்டார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.) ஆனால் இந்த பாடல் காட்சி ராஜ தேசிங்கு படத்தின்குறுந்தகடில் இடம் பெறவில்லை.

ராகமாலிகையில் அமைந்த தசாவதாரப் பாடல் அது. பாடலை எழுதியவர் உடுமலை நாராயண கவி. பாடியவர் டாக்டர். எம்.எல். வசந்தகுமாரி.

"பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மீதே பள்ளிகொண்டாய் ரங்கநாதா" பரந்தாமனின் பத்து அவதாரங்களை விவரிக்கும் இந்த நீண்ட ராகமாலிகைப் பாடலை ஒன்பது ராகங்களை வெகு பொருத்தமாகக் கையாண்டு அற்புதமாக அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

"பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மீதே பள்ளிகொண்டாய் ரங்கநாதா. உந்தன் பதமலர் நிழல் தேடி பரவசமுடன் பாடி கதிபெறவே ஞானம் நீ தா - தேவா" - என்ற பல்லவியை ஷண்முகப்ரியா ராகத்திலும் தொடர்ந்து வரும் பத்து அவதாரங்களை கீழ்க் கண்ட ராகங்களிலும் மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்:

1 மச்சாவதாரம் - கேதார கௌளை
2.. கூர்மாவதாரம் - சாமா
3. வராஹாவதாரம் - அடாணா.
4. நரசிம்மாவதாரம் - மோகனம்.
5. .வாமன, பரசுராம அவதாரங்கள் - பிலஹரி.
6. ராம, பலராம அவதாரங்கள் -  கானடா
7. கிருஷ்ணாவதாரம் -  காபி
8. கல்கி அவதாரம் - சிவரஞ்சனி.

ராகமாலிகை அமைப்பதில் ராமனாதனின் தனித்திறமை இருக்கிறதே அதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு இந்தப் பாடல். ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்கு மாறுவதற்கு அவர் கொடுக்கும் இணைப்பிசையும் சரி, மாறும் லாவகமும் சரி வெகு இயல்பாக மிக நேர்த்தியாக அமைந்துவிட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. அதிலும் பாடியிருப்பவர் எம்.எல்.வி. என்னும்போது பாடலின் தரத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
.
இந்தப் பாடலில் "ஈனன் ஹிரண்யாக்ஷன் என்னும் படுபாவி பாயாய் எழுகடலுள் மறைத்த பூதேவி" என்ற வரிகளைத் தொடர்ந்து "அவள் தீனரக்ஷகா சகல லோக ரக்ஷகா" என்று கதறும் இடத்தில்
வீரரசம் பொருந்திய ராகமான அடாணா கேட்பவரைக் கழிவிரக்கம் கொள்ள வைக்கிறதே.. அது எப்படி..?

அதேபோல் "எங்கிருக்கிறான் ஹரி எங்கிருக்கிறான் சொல்லடா" என்று ஹிரண்யகசிபு தன் மகன் பிரஹலாதனை அதட்டிக் கேட்கும்போது மோகன ராகத்தில் தெறிக்கும் ஆக்ரோஷம் அடுத்த வரியிலேயே "அவன் எங்கும் இருப்பான்.. தூணில் இங்கும் இருப்பான்" என்று பிரஹலாதன் பதில் சொல்லும்போது அதே மோகனத்தில் வெளிப்படும் பணிவு.. ராமநாதனுக்கு மட்டுமே இது சாத்தியம். பாடியிருக்கும் எம்.எல்.வி. அவர்களும் நன்றாக அனுபவித்துப் பாடியிருப்பார்.

முன்பு "ஆடல் காணீரோ" பாடலில் செய்தது போலவே ஒரு நடைபேதம் இந்தப் பாடலிலும் வருகிறது. க்ருஷ்ணாவதாரத்தைக் குறிப்பபிடும் சரணத்திற்கு முன்பாக அதுவரை இருந்து வந்த இயல்பிலிருந்து மாறி ஒரு துள்ளலும், உற்சாகமும் நடையில் வருகிறது. "ஆவணி ரோஹினி அஷ்டமியிலே அர்த்தஜாம நேரத்திலே அவதரித்தவனே" என்ற சரண வரிகளில் தெரியும் சந்தோஷம் ஆம்.. பொதுவாக ஒரு குழந்தை பிறப்பது என்பதே சந்தோஷமான விஷயம் தானே. அதிலும் இங்கு அவதரித்திருப்பவனோ கண்ணன் என்னும் போது அந்த உற்சாகம் பலமடங்காக பெருகவேண்டுமல்லவா? பெருகவைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்குகிறது இந்த ராகமாலிகைப் பாடல். இந்தப் பாடலை திரைப்பட பாடல் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முடியாது என்று கருதியோ என்னவோ எம்.எல்.வி. அவர்கள் தனது கச்சேரிகளிலும் இந்தப் பாடலைப் பாடிப் பிரபலப்படுத்தி வந்தார். இன்றும் கூட எம்.எல்.வி. அவர்களின் சிஷ்ய பரம்பரையில் வரும் திருமதி. மீனா சுப்ரமணியம், திருமதி. சுதா ரகுநாதன் போன்றவர்கள் தங்கள் கச்சேரிகளில் "பாற்கடல் அலை மேலே" என்ற இந்தப் பாடலைப் பாடி வருகின்றனர்.

அடுத்து "ராஜா தேசிங்கு" படத்தில் குறிப்பிடப்படவேண்டிய பாடல்களில் "வனமேவும் ராஜகுமாரா" பாடலுக்கு தனி இடம் உண்டு. சீர்காழி கோவிந்தராஜன் - ஜிக்கி இணைந்து பாடும் ஒரு ஜோடிப்பாடல் இது. இந்தப் பாடலின் இறுதியில் சி. எஸ். ஜெயராமன் - பி. பானுமதியும் இணைந்து கொள்வார்கள். "காபி" ராகத்தை ராமநாதன் கையாண்டிருக்கும் விதமும், பாடலின் இனிமையும் "பேஷ். பேஷ். ரொம்ப நன்னா இருக்கு" என்று சொல்லவைக்கிறது.

"சரசராணி கல்யாணி" - சி.எஸ். ஜெயராமன் - பி. பானுமதி இணைந்து பாடும் இன்னொரு பாடல். எம்.ஜி.ஆருக்கு சி.எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருக்கிறார் ஜி.ராமநாதன். தேசிங்குராஜனும், அவனது மனைவியும் க்ரஹநிலை சரி இல்லாததால் சில காலம் பிரிந்திருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் செஞ்சிக்கே ஆபத்து வந்துவிடும் என்று ஆஸ்தான ஜோதிடர் கூறுகிறார். தனக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் தனது தாயின் நிம்மதிக்காகவும், செஞ்சியின் நலனுக்காகவும் மனைவியை தற்காலிகமாகப் பிரிந்திருக்க சம்மதிக்கிறான் ராஜா தேசிங்கு. இரவில் மனைவி வீணை மீட்டிப் பாடும் சித்திரத்தைப் பார்த்ததும் பிரிவின் கொடுமை தேசிங்குவைத் தாக்குகிறது. அவளை நினைத்துப் பாடுகிறான் அவன். பாடல் கனவாக மாறுகிறது.. கனவில் நாயகி வந்து பாடலில் இணைந்து கொள்கிறாள்.

தந்தி வாத்தியக் கருவியான வீணை இந்தப் பாடலில் வெகு அற்புதமாகக் கையாளப் பட்டிருக்கிறது. முதலில் மனைவியின் சித்திரத்தைப் பார்க்கும்போது பிரிவின் சோகத்தை வீணை பிரதிபலிக்க அதையே முகப்பிசையாக (prelude ) அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன். அதே வீணை இசை அடுத்து தொடரும் கனவுக் காட்சியில் காதலின்பத்தை வெளிப் படுத்துவதாக அமைத்து வீணையை வெகு அழகாகக் கையாண்டிருக்கிறார் ராமநாதன்.

பாடல் அமைப்பைப் பார்த்தோமானால் இது ஒரு சிறிய பாடல் தான். பல்லவி அதை அடுத்து ஒரே ஒரு சரணம்தான். ஆனால் பாடலுக்கான இசையும் காட்சி அமைப்பும் மிகச் சிறப்பாக அமைந்துவிட்டிருக்கிறது.

கண்ணதாசனின் கருத்துச் செறிவான கதை வசனம், சிறப்பான காட்சி அமைப்புகள், இனிமையான பாடல்கள், எம்.ஜி.ஆர். (இரண்டு வேடங்கள்), எஸ்.எஸ். ஆர், பானுமதி, பத்மினி என்று திறமை வாய்ந்த நட்சத்திரங்களின் சேர்க்கை, அருமையான இசை - இவை எல்லாம் படத்தில் இருந்ததென்னவோ உண்மைதான்.

என்ன இருந்து என்ன?

தயாரிப்பாளர் லேனா செட்டியாருக்கும், கதாநாயகன் எம், ஜி. ஆருக்கும் இடையில் இருந்த நட்பில் ஏற்பட்ட விரிசல், அதனால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக படம் தோல்வியையே அடைந்தது.

படத்திற்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது எம்.ஜி. ஆர். ஒரு வளரும் நடிகராக இருந்தார். படம் வெளிவந்தபோதோ அவருக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. அதனால் அவர் இரட்டை வேடத்தில் நடித்தும் - இரு கதாபாத்திரங்களுமே இறந்துவிடுவது போன்ற காட்சி அமைப்பை - அதுவும் ஒரு எம்.ஜி.ஆர். இன்னொரு எம்.ஜி.ஆராலேயே கொலைசெயயப்படுவதும் கொன்றவர் தற்கொலை செய்துகொளவதுமான முடிவை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விளைவு "ராஜா தேசிங்கு" தோல்வியைத் தழுவியது.

இதுபோலவே காலதாமதம் காரணமாக வெளிவந்து தோல்வியைத் தழுவிய இன்னொரு படம் "அரசிளங்குமரி". எம். ஜி. ஆர். - பத்மினி நடித்து வெளிவந்த படம் என்றதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளிவந்தனர். தங்கையைக் கைவிட்ட காதலனுடன் அண்ணன் சேர்த்துவைக்கும் கதை சரித்திர முலாம் பூசப்பட்டு வந்தது. இதில் அண்ணனாக எம். ஜி. ஆரும், அவரது தங்கையாக பத்மினியும் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆருக்கு தங்கையாக பத்மினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் பாடல்களில் ஜி. ராமநாதன் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா" என்ற டி. எம். சௌந்தரராஜனின் பாடல் ஒன்றே போதுமே. காலத்துக்கும் நிலைத்துவிட்ட கருத்துச் செறிவுள்ள பாடல் அல்லவா இது? இந்தப் பாடலுக்கு ஜி. ராமநாதன் அமைத்திருக்கும் இசை அமைப்பு அவரது பெயரை நிலைக்க வைத்துவிட்டது.

என்றாலும் கட்டபொம்மனுக்கு பிறகு அவரது இசை அமைப்பில் வெளிவந்த படங்கள் எதுவுமே சரியாகப் போகாததால் ஜி. ராமநாதனுக்கு சரிவு காலம் ஏற்படத் தொடங்கியது.

அதே சமயம் கட்டபொம்மனின் வெற்றி தந்த உற்சாகத்தில் பி. ஆர். பந்துலு அவர்கள் இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரரான செக்கிழுத்த செம்மல் வ. ஊ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை "கப்பலோட்டிய தமிழன்" படமாகத் தயாரித்தார்.

வ.ஊ.சி அவர்களாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கட்டபொம்மனில் பத்மினி என்றால் கப்பலோட்டிய தமிழனில் சாவித்திரி. சுப்ரமணியம் சிவாவாக "அவ்வை"டி.கே. சண்முகம், மகாகவி பாரதியாராக எஸ்.வி. சுப்பையா என்று பங்கேற்ற அனைவருமே அப்படியே அந்தந்த தியாகிகளை தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். இறைவனிடம் வரம் வாங்கி வந்த அபூர்வக் கலைஞர் அல்லவா அவர்.

ஜி. ராமனாதனின் இசையில் பாரதியின் பாடல்கள் அனைத்துமே செந்தேனாக இனித்தன.

"பாருக்குள்ளே நல்ல நாடு" - சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலில் வரும் சங்கதிகள் பிரமிக்கவைக்கின்றன.

"வந்தே மாதரம் என்போம்" - சீர்காழி கோவிந்தராஜன் குழுவினருடன் இணைக்கும் இந்தப் பாடலில் அந்நியத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தும் காட்சிக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

"வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" - சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் குழுவினர் பாடும் இந்தப் பாடல் சுதேசிக் கப்பல் விடப்போகும் சுதந்திர வீரர்களின் உற்சாகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறதே. ராமநாதனின் ப்ரேமைக்குரிய "பீம்ப்ளாஸ்" அல்லவா கையாளப் பட்டிருக்கிறது.

"காற்றுவெளியிடைக் கண்ணம்மா" - பஹாடியில் பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா இணையும் ஒரு செவிக்கினிய டூயட் பாடல். பாரதியின் கண்ணம்மா பாடல் இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குவதே ராமனாதனின் திறமைக்கு ஒரு சாட்சி.

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி" - திருச்சி லோகநாதன் வெளுத்து வாங்கினார். இதே போலவே "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" பாடலும் "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை" - பாடலும் திருச்சி லோகநாதனின் குரல் வளத்திற்கும் திறமைக்கும் சாட்சி சொன்ன பாடல்.


"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்ற பாரதியின் பாப்பா பாடலை சிவாஜிக்காக பாடினார் சீர்காழி கோவிந்தராஜன்

என்ன செய்து என்ன? படம் பலத்த அடி வாங்கியதுதான் மிச்சம். ஆம். பாடல்கள், நடிப்பு என்று அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கிய படம் என்றாலும் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும், ரசிகர்களும் ஒரேயடியாகப் படத்தை புறக்கணித்துவிட்டனர். பாடல்கள் மட்டுமே உயிரோட்டத்துடன் இருந்தன.

சுதந்திர தினம், குடியரசு தினம், பாரதி பிறந்த நாள், நினைவு நாள் ... இந்த நாட்களிலெல்லாம் அகில இந்திய வானொலியால் கண்டிப்பாக "வந்தே மாதரம் என்போம்", "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்", "ஓடி விளையாடு பாப்பா" போன்ற பாடல்கள் தவறாமல் ஒலிபரப்பப் பட்டு வந்தன. இப்போது தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பினால் வானொலி ஒலிபரப்பும் இந்தப் பாடல்கள் வானோடு தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் காலம் செல்லச் செல்ல - எழுபதுகளில் மறுபடியும் படம் திரையிப்பட்ட பொழுது கொஞ்சம் அதிகமாகப் பேசப்பட்டது. படத்திற்கு அப்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் வரிவிலக்கு அளிக்கப் பட்டது.

படம் வெளிவந்த அறுபதில் காங்கிரஸ் அரசாங்கம் எந்தச் சலுகையும் வழங்கவில்லை. ஆனால் எழுபதில் மீண்டும் ஒரு சுற்று வந்த பொழுது "வரிவிலக்கு" அளிக்கப் பட்டு சிறப்பிக்கப் பட்டது.

ஜி. ராமநாதனைப் பொறுத்தவரையில் சரிவு அதற்கு முன்பே ஆரம்பமாகி விட்டது.

1958 -முதல் வெளிவரத் தொடங்கிய இயக்குனர் பீம்சிங்கின் "பா" வரிசைப் படங்களில்
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆரம்பித்து வைத்த "மெல்லிசை அலை" முழுவதுமாக ரசிகர்களை அவர்கள் பக்கம் திருப்பிக் கொண்டுவிட்டது.

முழுமையான "கர்நாடக" இசையாக இல்லாமல் மேற்கத்திய இசைக் கலப்போடு அதே சமயம் ராகம் சார்ந்த மெல்லிசையாக வழங்கிய இரட்டையர்களில் புதிய பாணி பெருத்த வரவேற்பைப் பெற ஆரம்பித்துவிட்டது.

"என்னடா இது சங்கதி இல்லாத பாட்டுக்களா வர ஆரம்பிச்சுடுத்தே? இனிமே நாமும் இப்படி மியூசிக் போட்டத்தான் ஜனங்க ஒத்துப்பாங்க போல இருக்கே" என்று ஜி. ராமநாதனே சொல்ல ஆரம்பித்தார் என்றால் அவற்றின் வீச்சு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

காலமாறுதலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவரல்லவா அவர்?

எனவே தன்னைப் புதுப்பித்துக்கொண்டு மூன்றாவது சுற்றுக்கு தயாரானார் ஜி. ராமநாதன்.
ஆனால் - அப்போது பார்த்து அவரது உடல் நலம் சீர்கெட ஆரம்பித்தது.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.