இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 21
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடமேற்று நடித்த "உத்தம புத்திரன்" படத்திற்கு ஜி. ராமநாதன் அமைத்த இசையை அலசுவதற்கு முன்பாக ஏற்கெனவே
பி. யு. சின்னப்பா நடித்து வெளிவந்த முதல் உத்தம புத்திரனில் அவரது இசையைப் பற்றி ஏற்கெனவே சொல்லி இருந்ததை சற்று நினைவு கூர்வோம்.
முந்தைய படத்தில் பாடல்களின் வீச்சு அதிகம் இருக்கவில்லை. ஆனால் அந்தக் குறையை பின்னணி இசையில் ஈடுகட்டி விட்டார் அவர். காட்சிகளை இணைக்க அவர் பயன்படுத்திய விறுவிறுப்பான இசை படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
|
அதே படத்தை மறுபதிவு செய்தபோது...ராமநாதனே இசை அமைக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள்.
அவர்களது முதல் தயாரிப்பான "அமர தீபம்" சிவாஜி, பத்மினி, சாவித்திரி நடித்து 1956 -இல் வெளிவந்தது. அதற்கு இசை அமைத்தவர் டி. சலபதிராவ். அந்தப் படத்தில் ஒரே ஒரு நாடோடிப் பாடலுக்கு ஜி. ராமாநாதன் இசை அமைத்துக் கொடுத்தார். (உச்ச கட்ட காட்சியில் இடம் பெற்ற இன்னொரு பாடலுக்கு பிரபல கர்நாடக இசை மேதை ஜி. என். பாலசுப்ரமணியம் மெட்டமைத்துக் கொடுத்தார்.)ஜி. ராமநாதன் இசை அமைத்த "நாடோடிக் கூட்டம் நாங்க தில்லாதாங்கலேலோ" என்ற பாடலைப் பாடியவர்கள் டி.எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா, சீர்காழி கோவிந்தராஜன், டி.வி. ரத்னம்- கிராமிய இசையில் ராமனாதனின் வல்லமையை இந்தப் பாடல் நிரூபித்தது. அந்தப் பாடல் அமைந்த வெற்றியே வீனஸ் பிக்சர்சின் அடுத்த தயாரிப்பான உத்தம புத்திரனுக்கு ராமநாதனை இசை அமைக்க வைத்திருக்கவேண்டும்.
முதல் உத்தம புத்திரனில் செய்ய நினைத்து முடியாமல் போனதை எல்லாம் இதில் செய்துவிட விரும்பியோ என்னமோ ராமநாதன் முன்பே சொன்னது போல இசை சாம்ராஜ்யமே நடத்தி விட்டார்.
திரைக்கதை வசனத்தில் ஸ்ரீதர் செய்த சில மாறுதல்கள் பாடல்களுக்கான் சூழ்நிலைகளையும் சற்று மாற்றவே செய்தன.
"முத்தே பவழமே.." என்ற ஒரு தாலாட்டு பாடல் ஆர். பாலசரஸ்வதி- ஏ.பி. கோமளா ஆகியோர் குரல்களில் ஒரு சுகமான தாலாட்டாக அமைந்தது. பச்சிளம் குழந்தைகளை
தொட்டிலில் இட்டுத் தாலாட்டும்போது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்த பாடல்.
அடுத்து கதாநாயகியின் அறிமுகப் பாடல் "மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையின் லீலை" - பி.சுசீலா - ஜிக்கியின் குரல்களில் ஒரு உற்சாகமான பாடல். பாடலை ராமநாதன் அமைத்திருக்கும் விதம் அந்த உற்சாகத்தை கேட்பவருக்கும்
தொற்றிக்கொள்ள வைக்கிறது.
அடுத்த பாடல் தான் அவரை மேற்கத்திய இசையிலும் வல்லவராகக் காட்டிய பாடல். நான் சொல்லாமலே அனைவருக்கும் நன்கு தெரிந்த பாடல்தான்.
ஆம்.. "யாரடி நீ மோகினி. கூறடி என் கண்மணி" பாடல் தான். குடியும் கும்மாளமுமாக இருக்கும் இளவரசன் விக்ரமன் நடன மங்கையருடன் ஆடிப் பாடுவதான காட்சி.
இந்தக் காட்சிக்கான பாடலில் மேற்கத்திய இசை வடிவமான "ராக் அண்ட் ரோல்" வகையில் அமைந்தால் நன்றாக இருக்குமே என்று அனைவரும் விரும்ப ஜி. ராமநாதன் சற்றும் தயங்காமல் அனாயாசமாக டியூன் போட்டு டி.எம். சௌந்தரராஜன் - ஜிக்கி - ஜமுனாராணி ஆகிய மூவரையும் இணைத்துப் பாடவைத்து இந்த வெற்றிப் பாடலைக் கொடுத்து விட்டார்.
இன்றும் கூட உத்தம புத்திரன் என்று சொன்னாலே உடனே நினைவுக்கு வரும் பாடல் இதுதான். பாடலும், அதன் மெட்டும், முகப்பிசையும், இணைப்பிசையும், பாடல் முடிந்த பிறகு தொடரும் உற்சாகமான கரவொலியுடன் இணையும் கிட்டாரும், தாளக்கட்டும், கேட்பவரை தாளம் போட வைக்கும் விதத்தில் அமைந்த பாடல் இது.
இந்தப் பாடலில் பாடகி ஜிக்கியின் தனித் திறமையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கடைசியில் வரும் ஒரு நீண்ட சரணத்தை அனாயாசமாக ஒரே மூச்சில் பாடி அசத்தி இருப்பார் அவர்.
அடுத்து.நாயகனை சந்திக்க வருவதாக சொல்லி இருக்கிறாள் நாயகி. ஆனால் அவள் அரசவையில் வகையாக மாட்டிக்கொண்டு விடுகிறாள். அவளது நடனத் திறமையைக்
காட்டவேண்டிய நிர்ப்பந்தம். இந்தச் சூழலில் பிறந்த பாடல் தான் "காத்திருப்பான் கமலக் கண்ணன்" - பி. லீலாவின் கணீர்க்குரலில் கர்நாடக சுத்தமான ஒரு பாடல். மோகன ராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் இடையில் சாருகேசியையும் புகுத்தி மறுபடி மோகனத்துக்கு வந்து.. என்று ஜி. ராமநாதன் புரிந்திருக்கும் ரசவாதம் அவருக்கு மட்டுமே சாத்தியம்.
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே" - கானடா ராகத்தில் காதுக்கினிய ஒரு டூயட். பாடியவர்கள் டி.எம்.சௌந்தரராஜனும்
பி.சுசீலாவும். இந்தப் பாடலுக்கு வயதே கிடையாது. எப்போது கேட்டாலும்
அப்போதுதான் புத்தம் புதிதாகக் கேட்பது போலிருக்கும். ராகங்களைக் கையாள்வதில்
ராமநாதனுக்கு இருக்கும் அசாத்தியமான வல்லமைக்கு ஒரு தரச் சான்றிதழ்
இந்தப் பாடல்.
பாகேஸ்ரீயில் “அன்பே அமுதே அருங்கனியே" என்று இன்னொரு அற்புதமான இணைப் பாடல் அதே டி.எம்.எஸ். - பி. சுசீலாவின் இணைவில். இந்தப் பாடலின் சரணத்தில் பி. சுசீலா "என்ன தவம் செய்தேன்..." என்று ஆரம்பிக்கும் எடுப்பு காதுகளில் ரீங்காரம் இடும் இனிமையே தனி.
அதே போல இறுதியில் "அன்பே" என்று டி.எம்.எஸ்.ஸும் "சுவாமி" என்று சுசீலாவும் அழைத்து நிறுத்தும்போது வரும் தபேலாவின் தாளக்கட்டு உற்சாகமாகத் துள்ளி எழும் போது அந்த உற்சாகம் கேட்கும் நம்மையும் தொற்றிக்கொள்வது போல ராமநாதன்
அமைத்திருக்கும் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை.
பிற்கால இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தனது ஆரம்ப காலத்தில் ஒரு பாடலாசிரியராகத் தான் தனது கலையுலக வாழ்வை தொடங்கினார். அந்த வகையில் உத்தம புத்திரனில் அவர் எழுதிய பாடல்தான் "உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன்வசமாய் ஆனதினாலே" என்ற பாடல். சுசீலா தனித்துப் பாடிய இந்தப் பாடல் ஜி.ராமனாதனின் திறமைக்கு இன்னும் ஒரு சான்று.
"பொதுவாக ஜி. ராமநாதன் அட்சரங்களை நீட்டும்போது குறில்களையோ, ஒற்றை எழுத்துக்களையோ நீட்ட மாட்டார். நெடில்களைத்தான் நீட்டுவார்" - என்று டாக்டர் திருமதி பிரமிளா குருமூர்த்தி அவர்கள் எழுத்தாளர் வாமனன் அவர்களிடம் ஜி. ராமநாதன் பற்றிய தனது ஆய்வை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் பாடல் அதற்கு சரியான உதாரணம்.
அடுத்து சீர்காழி கோவிந்தராஜன் - பி. லீலாவின் குரல்களில் " புள்ளி வைக்குறான் பொடியன் சொக்குறான்" - நாட்டுப்புற மெட்டில் ஜனரஞ்சகமான ஒரு பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு வரி முடிந்து அடுத்த வரி ஆரம்பிக்கும் முன்பாக வரும் வயலின்களின் மீட்டு, துள்ளவைக்கும் தபேலாவின் தாளக்கட்டு - உற்சாகமூட்டி காட்சியோடு ஒன்ற வைக்கும் பாடல்.
இந்தப் பாடலை பாட பாடகி பி.லீலாவை ராமநாதன் தேர்ந்தெடுத்தபோது படத்தின் இயக்குனர் பிரகாஷ்ராவ் அவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கர்நாடக சங்கீதப் பாணியில் பாடுவதில் வல்லவரான பி. லீலா இந்தப் பாடலை பாடினால் அது சரியாக வருமா?" என்ற சந்தேகம் தான் அது. ஆனால் பாடல் பதிவானதும் பி. லீலாவின் திறமை அவரை பிரமிக்க வைத்தது. அவ்வளவு சிறப்பாக பாடியிருந்தார் பி. லீலா.
அது சரி.. பாடல்கள் எல்லாம் சரி.. பின்னணி இசை? அதுவும் ஒரு சரித்திரப் படத்துக்கு அதுதானே மிகவும் முக்கியம். ? அதில் மட்டும் கோட்டை விடுவாரா என்ன ராமநாதன்?
முதல் உத்தம புத்திரனிலேயே காட்சிகளை இணைக்க விறுவிறுப்பான வாத்திய இசையைத் தந்து அனைவரையும் கட்டிப்போட்டவராயிற்றே! இதிலும் அப்படியே.
குறிப்பாக ஒரு கட்டம். அரண்மனைக்கு தனது காதலியை ரகசியமாக சந்திக்க வந்து திரும்பிச் செல்லும் பார்த்திபனை உருவ ஒற்றுமையின் காரணமாக மோசமான இளவரசன் விக்ரமன் என்று நினைத்த அவனது தாயான மகாராணி தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகிறார். தாயையும் தவிர்க்கமுடியாமல், விக்ரமன் வருமுன்பாக தப்பிச் செல்லவும் வேண்டுமே என்று தவிக்கிறான் பார்த்திபன். நடிகர் திலகத்தின் நடிப்பு இந்தக் கட்டத்தில் நம்மை பதைபதைக்க வைக்கிறது என்றால் அதற்கு சரிசமமாக பின்னணி இசையும் நம்மை தவிக்க வைக்கிறது. அதே சமயம் சிவாஜி கணேசனின் நடிப்பை இசை முழுங்கி ஆக்கிரமித்து விடாதபடி எவ்வளவு அழகாக, அழகாக வாத்தியங்களை கையாண்டு இசை அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்!
இப்படி ஜி. ராமனாதனின் இசை படத்தின் மாபெரும் வெற்றிக்கு இன்னொரு தூணாக அமைந்தது.
ஆனால்.. உத்தம புத்திரன் வெளிவந்த அதே 1958 -இல் ஜி. ராமநாதனின் இசையில் வெளிவந்த மற்றபடங்கள் எல்லாமே சொல்லிவைத்தது போல ஒன்றன் பின் ஒன்றாக தோல்வி அடைந்தன.
மதுரைவீரன் படத்தை அடுத்து லேனா செட்டியார் எம்.ஜி.ஆர். பானுமதியை மறுபடியும் இணைத்து "ராஜா தேசிங்கு" படத்தை தயாரித்தார். ஆனால் படம் வெளிவர கால தாமதமானது.
இந்நிலையில் அதை அப்படியே விடுத்து இடைக்கால நிவாரணமாக ஒரு குறுகிய காலத் தயாரிப்பாக பாலாஜி, ராகினி இருவரும் நடிக்க "மாங்கல்ய பாக்யம்" என்ற படத்தை தயாரித்தார் அவர். ஜி. ராமநாதன் இசை அமைப்பில் வெளிவந்த இந்தப் படம் பலத்த அடி வாங்கியது. ராமநாதனின் இசையில் ஒரு குறையும் இல்லைதான். ஆனால் ஒரு படத்தின் வெற்றி வெறும் இசையால் மட்டுமே வந்துவிடுவதில்லையே. மிகவும் செயற்கையான மிகைப்படுத்தப் பட்ட சம்பவங்களின் கோர்வை படத்தை மகத்தான தோல்விப் படமாக்கி விட்டது.
மணிமேகலை, கல்யாணிக்கு கல்யாணம், சாரங்கதாரா, காத்தவராயன், இயக்குனர் ராமண்ணாவின் "ஸ்ரீ வள்ளி" ஆகிய படங்களும் இந்த வரிசையில் சேர்ந்தன.
இவற்றில் மணிமேகலை டி.ஆர். மகாலிங்கம் - பி. பானுமதி இணைந்து நடித்தது. இதில் மிக நீண்ட ஒரு சோகப் பாடாலை - அசரீரிப் பாடலை ஜி. ராமநாதனே பாடியிருந்தார்.
"சாரங்கதாரா" படத்தில் ஜி. ராமாதான் இசை அமைத்த சாருகேசி ராகப் பாடலான - டி.எம்.எஸ். பாடிய "வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" பாடல் மட்டும் என்றும் மாறாத முல்லையாக வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.
காத்தவராயனோ நாற்பதுகளில் பி. யு. சின்னப்பா நடித்து வெளிவந்த "ஆர்யமாலா"வின் மறுபதிப்பு.
சமீபத்தில் கலைஞர் சிரிப்பொலி தொலைக்காட்சியில் இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் தோல்விக்கான காரணங்கள் விளங்கின.
அவற்றில் மிக முக்கியமானது தவறான நட்சத்திரங்களின் தேர்வு. காத்தவராயனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஆர்யாமாலாவாக நடிகையர் திலகம் சாவித்திரி. - சரியான தேர்வுதான். மறுக்கவில்லை.
ஆனால் மற்ற கதாபாத்திரங்கள். ?
ஆர்யாமாலாவில் மலையாள மந்திரவாதியாக என்.எஸ். கிருஷ்ணன் தோன்றி அருமையான நகைச்சுவை விருந்தளித்தார். காத்தவராயனில் அந்த வேடத்தை டி.எஸ். பாலையா அவர்கள் ஏற்றிருந்தார். பாலையாவின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாதுதான். ஆனால் என்.எஸ். கிருஷ்ணனின் "அய்யோடா" மக்களைக் கவர்ந்த அளவுக்கு பாலையாவின் நகைச்சுவை மக்களை கவரவில்லை. நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை பக்குவமாகச் சொன்ன கலைவாணரின் நடிப்பு மக்கள் மனதில் பதிந்த அளவுக்கு பாலையா அவர்களின் வேடப் பொருத்தம் அமையவில்லை. வெறும் கோமாளிக் கூத்தாகத் தான் அது முடிந்தது.
அதுபோலவே வில்லன் வேடமும். ஆர்யமாலாவை அடைய முயற்சிக்கும் தளபதியின் வேடத்தில் தங்கவேலு. ஒரு நம்பியார் செய்யவேண்டிய வேடத்தை நகைச்சுவை நடிகரான தங்கவேலுவிடம் கொடுத்தால் ..? அதுவும் மக்கள் ரசனைக்கு எடுபடாமல் போனது.
பாடல்களில் "வா கலாப மயிலே" என்ற டி.எம்.எஸ்.ஸின் பாடல் ஜி. ராமநாதனின் பெயரைச் சொன்னது. ஆனால் படம் படுத்துவிட்ட காரணத்தால் பாடல்களை வானொலியில் கூடக் கேட்பது அரிதாகப் போய்விட்டது.
அறுபது, எழுபதுகளிலேயே இந்த நிலைமை என்றால் - இன்று சொல்லவா வேண்டும்?
இப்படி இசை அமைத்த படங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அடி வாங்கிக் கொண்டிருந்த காரணத்தால் ராமநாதனுக்கு மீண்டும் ஒரு சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
அந்தச் சரிவில் அவர் மீள்வதற்கு கைகொடுத்ததோடு நிற்காமல் அவருக்கு உலகளாவிய பெருமையையும், அங்கீகாரத்தையும் சேர்ப்பதற்காக வந்தான் "வீரபாண்டிய கட்டபொம்மன்".
சிகரம் தொடுவோம்...
|