வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 20

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"வணங்காமுடி" - முதல் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 150 அடி உயர ராட்சச கட் அவுட் வைத்து விளம்பரம் செய்யப்பட்ட படம்.

சிவாஜி கணேசன், சாவித்திரி, ராஜசுலோச்சனா. எம்.என். நம்பியார், நாகைய்யா, கண்ணாம்பா, தங்கவேலு, எம். சரோஜா ஆகியோரின் அருமையான நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம்.

பாடல்கள் அனைத்தையும் தஞ்சை ராமய்யாதாஸ் அவர்களையே எழுதவைத்து அவருக்கு ஒரு நிலையான இடத்தை பாடலாசிரியர்கள் வரிசையில் ஏற்படுத்திக் கொடுத்த படம்.

குறைந்த முதலீட்டில் நால்வர் இணைந்து தயாரித்து ஆளுக்கு ஒன்றரை லட்சம் லாபம் சம்பாதிக்க வைத்த படம்.

இசை அரசி பி. சுசீலாவுக்கு ஒரு தெளிவான, அழுத்தமான முகவரியை ஏற்படுத்திக் கொடுத்த படம் என்று கூட இதனைக் கூறலாம்.

படத்தின் டைட்டில் காட்சியே அந்த கான தேவதையின் குரலோடுதான் ஆரம்பமாகும்.

"ராஜயோகமே பாரீர்" - என்ற பல்லவியோடு இணைந்த பி. சுசீலாவுக்கு உண்மையிலேயே ராஜயோகம் ஆரம்பமானது இந்தப் படத்தில் தான். பாடல் அமைந்த ராகம்.. வேறேது..? ராமனாதனின் பேரபிமானத்துக்குரிய "பீம்ப்ளாஸ்"தான்.

ஆனால் பல்லவி கோரஸ் பாடகியரின் குரலில்தான் துவங்குகிறது. "ராஜயோகமே பாரீர்" என்ற கோரஸ் குரல்கள் மத்யம ஸ்தாயியில் ஒலிக்க "ஓ..ஓ..." என்று பி. சுசீலாவின் குரலில் ஒரு சிறு ஹம்மிங். தொடர்ந்து "வாழ்வினிலே ஒரு நாள். அதே திருநாள்" என்று மறுபடி கோரஸ் பாடகியரின் உற்சாகமான தொடர்வு.

அதனை தொடர்ந்து "விண் மேவும் தாரா..." என்று நட்சத்திரங்களை அழைக்கும் சுசீலாவின் குரல் சரணத்தின் ஆரம்ப வரிகளிலேயே உச்சம் தொட்டுவிடும். (ஆம். தாரகைகள் விண் மீது இருப்பதை காட்டவேண்டும் என்றால் குரல் மேலே எழும்பித்தானே ஆகவேண்டும்!) சென்ற வேகத்திலேயே அதனை "விளையாட வாராய்" என்று அழைத்துக்கொண்டு அந்தக் குரல் சமநிலைக்கு வருவதும். - "பண்பாடி ஜோராய் படகோட்ட வாராய்" என்று அழைக்கும்போது "படகோட்ட வாராய்" என்னும்போது அந்த தேன்குரலின் ஜாலம் அற்புதமாக வெளிப்படும் படி சங்கதிகள் கொடுத்து பாடலை அமைத்து பாடவைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

இந்த இடத்தில் ராமநாதன் பாடக/பாடகியரை பாடவைக்கும் முறை பற்றி ஒரு விஷயம் குறிப்பிடவேண்டும். இப்போது போல அப்போதெல்லாம் ஒலிநாடா வசதியோ, குறுந்தகடு வசதியோ கிடையாது. அது மட்டும் அல்ல. கணினி வந்து பாடுவோரின் வேலையை மிகச் சுலபமாக்கி விட்டிருக்கிறது. தவறு இருந்தால் அந்த இடத்தில் மட்டும் திருத்தி பாடினால் போதும். (அல்லது அந்த இடத்தில் இணைப்பிசையை குரலை மீறி ஒலிக்கவிட்டாலும் போதும்..),

ஆனால் இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலகட்டத்தில் ராமநாதன் போன்ற இசை அமைப்பாளர்கள் எப்படி இன்றும் நிலைத்திருக்கும் பாடல்களை உருவாக்கினார்கள்.?

ராமநாதன் பாடுவோருக்கு பாடல்களை கற்றுக்கொடுக்கும் விதமே தனி. முதல் நாள் பக்க வாத்தியங்கள் எதுவும் இல்லாமல் பாடல் வரிகளை திரும்பத் திரும்ப தான் நினைத்த "எபெக்ட்" வரும் வரை அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக்கொடுப்பார்.

இரண்டாவது நாள் ஹார்மோனியம், தபேலாவுடன் ஒத்திகை. அடுத்த நாள் முழு வாத்தியக்குழுவுடன் ஒத்திகை. அதில் முழு திருப்தி ஏற்பட்ட பிறகுதான் பாடல் பதிவுக்கு செல்வார்.

அந்த வகையில் சுசீலாவின் முழுத்திறமையும் வெளிப்படும் விதமாக அவரை வேலைவாங்கி "ராஜயோகத்தை" அவருக்கு ஆரம்பமாக்கி வைத்தார் ராமநாதன்.

சுசீலாவின் பாடல் முடிவடைந்ததும் உடனேயே சீர்காழியின் குரலில் ஒரு ஆலாபனம். அதனைத் தொடர்ந்து "மலையே உன் நிலையை நீ பாராய்" என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் தொடரும் - இப்படி தொடர்ச்சியாக இரண்டு பாடல்களை இணைத்து அமைத்து அதே சமயம் இரண்டையுமே வெற்றிப்பாடல்களாக்கி இருக்கிறார் ஜி. ராமநாதன்.

இந்தப் படத்தின் பாடல்களில் இன்னொரு புதிய முயற்சியிலும் ஈடுபட்டார் அவர். ஒரே நடிகருக்கு மூன்று பாடகர்களை பாடவைத்து மூவரின் பாடலகளையுமே வெற்றிப் பாடல்களாக்கி இருக்கிறார் அவர்.

"இந்தப் பாட்டை இன்னார் பாடினால்தான் பாடல் எடுபடும். அதற்கு தகுந்தபடி வாயசைத்து அபிநயிப்பவர் தான் நடிகர்"- என்ற கொள்கையில் அசைக்கமுடியாத பிடிமானம் கொண்டவர் அல்லவா அவர்?

ஆகவேதான் வணங்காமுடியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், ஏ.எம். ராஜா ஆகிய மூவரையும் பாடவைத்து மூட்ரையுமே "ஹிட்" பாடல்களாக்கினார் ஜி. ராமநாதன்.

"மலையே உன் நிலையை நீ பாராய்" - சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் இது.

"ஒம்காரமாய் விளங்கிடும் நாதம்" - டி.எம். சௌந்தரராஜன்.

"மோகனப் புன்னகை வீசிடும் நிலவே - மேகத்திலே நீ மறையாதே" - டி.எம். எஸ். - பி. சுசீலாவின் குரல்களில் ஒரு இனிய டூயட்.

"வாழ்வினிலே நம் வாழ்வினிலே" - ஏ.எம். ராஜா - பி. சுசீலா.

இப்படி ஒரே படத்தில் மூவரின் குரல்களுக்கேற்ப வாயசைத்து நடித்தார் நடிகர் திலகம்.

அடுத்து "வளர்மதியே வா" - என்ற ராஜசுலோச்சனாவின் நடனப் பாடல் - சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல். எம்.எல். வசந்த குமாரியின் கம்பீரமான, அழுத்தமான, சாஸ்திரீய சுத்தமான குரலில் இந்தப் பாடலைக் கேட்பதில் அதிசயம் இல்லைதான்.

ஆனால்.. முதல் முதலாக பி. சுசீலாவை - முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தில் - மெல்லிசை சற்றும் கலக்காமல் அமைந்த "என்னைப்போல் பெண்ணல்லவோ" என்ற தோடி ராகப் பாடலை வெகு அற்புதமாகப் பாடவைத்து பதிவாக்கி இருக்கிறாரே அதற்காகவே ஜி. ராமநாதனை எவ்வளவு கொண்டாடினாலும் தகும்.

"அந்த அம்மாகிட்டே இருந்து இப்படி ஒரு பாடலை நான் எதிர்பார்க்கவே இல்லை சார். மெல்லிசையில் முத்திரை பதித்த அவரை எவ்வளவு அற்புதமாக இந்த தோடி ராகப் பாடலை பாட வைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்." - பிரபல எழுத்தாளர் ராண்டார் கை அவர்களை சந்தித்து ஜி. ராமநாதனைப் பற்றி நான் கேட்டபோது அவர் வியந்து சொன்ன தகவல் இது. இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாடலை எனக்கு அறிமுகப் படுத்தியவரே அவர்தான். "வணங்காமுடி" படப் பாடல்களில் பி. சுசீலாவின் இந்தப் பாடலுக்கு ஒரு தனி இடம்.

இதுபோலவே "ஆட்சியின் திமிராலே" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அசரீரிப் பாடலும் குறிப்பிடப் படவேண்டிய பாடல்.

இப்படி கர்நாடக ராகங்களைப் பண்டிதர் முதல் பாமரர் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுப்பதில் தன்னிகரற்று விளங்கினார் ஜி. ராமநாதன்.

"ஜி. ராமனாதனா? அவர் கர்நாடக சங்கீதத்துலே தான் பாட்டுக்கள் போடுவார். வெஸ்டர்ன் மியூசிக்கிலே அவராலே பாட்டுப் போட முடியுமா என்ன?" - இந்த சந்தேகத்தை தகர்த்தெறிய வந்த படம் தான் வீனஸ் பிக்சர்சின் "உத்தம புத்திரன்."

ஏற்கெனவே மாடர்ன் தியேட்டர்ஸின் "உத்தம புத்திரனுக்கு" இசை அமைத்த அவரேதான் அதன் மறுபதிப்பாக வெளிவந்த இரண்டாவது உத்தம புத்திரனுக்கும் இசை அமைத்தார்.

வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்த இரண்டாவது உத்தம புத்திரனில் காலத்துக்கேற்ப சில மாற்றங்களை செய்து திரைக்கதை வசனம் எழுதினர் பிற்கால இயக்குனர் ஸ்ரீதர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடமேற்று நடித்த இந்தப் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் பத்மினி. மற்றும் கண்ணாம்பா, எம்.என். நம்பியார், தங்கவேலு, ராகினி ஆகியோரும் நடித்தனர்.

பாடல்களைப் பொறுத்த அளவில் ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தி இருக்கிறார் ஜி. ராமநாதன். அந்த சாம்ராஜ்யம் எப்படி இருந்தது...?

அடுத்த இடுகை வரை சற்று காத்திருங்களேன் ப்ளீஸ்.

வணங்காமுடி படப் பாடல்களுக்கான இணைப்பு:
http://www.in.com/music/vanangamudi/songs-55131.html

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.