இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 18
"மதுரை வீரன்"- பாண்டியநாட்டு மக்களின் காவல் தெய்வமாகக் கொண்டாடப்படும் மதுரை வீரன் கதை நாடக உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.
வீரமும் தீரமும் நிறைந்த அந்த வரலாற்றை படமாக்க முடிவு செய்த லேனா செட்டியார் அதன் கதாநாயகனாக எம். ஜி. ஆர் அவர்களை தேர்ந்தெடுத்தார்.
படத்தை ஒப்புக்கொள்ள சற்று தயங்கினார் எம். ஜி. ஆர். காரணம் - மதுரை வீரன் ஒரு காவல் தெய்வம். அவர் சார்ந்திருந்த திராவிட இயக்க கொள்கைகளுக்கு நேர்மாறான பாத்திரங்களை ஏற்று நடிக்க எம்.ஜி. ஆரிடம் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அவரும் அப்போது திராவிட இயக்கத்தில் தான் ஈடுபட்டிருந்தார். ஆகவே அந்தப் படத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை வலியுறுத்தும் வண்ணம் சில மாறுதல்கள் செய்யப்பட எம்.ஜி. ஆர். நடிக்க சம்மதித்தார். அதுவும் தவிர மக்கள் மனத்தில் பரவலாக நிலைபெற - குறிப்பாக பாமர மக்கள் மனதில் தான் ஒரு "மாஸ் ஹீரோவாக" நிலைபெற - இப்படிப் பட்ட வேடங்கள் கை கொடுக்கும் என்பதால் சம்மதித்தார் அவர்.
பி, பானுமதி, பத்மினி, டி.எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் நடித்த படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பை ஜி. ராமநாதனுக்கு அளித்தார் லேனா செட்டியார்.
நாடக மேடையில் பிரபலமான கதைக்கு அதே நாடக மேடையில் இருந்து வந்த ராமநாதன் இசை அமைப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்யும் என்று கருதினாரோ என்னவோ? அந்தக் கணிப்பு வீண் போகவில்லை.
மகத்தான வெற்றிபெற்ற மதுரை வீரன் படம் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.
ஒரு நடிகராக இருந்த எம்.ஜி. ஆர். அவர்களை "மக்கள் திலகமாக" மாற்றிய பெருமை மதுரை வீரன் படத்துக்கு உண்டு.
அந்தக் காவல் தெய்வத்தின் வேடத்தை ஏற்று திறம்பட நடித்த அவர் லட்சோப லட்சம் மக்களின் இதய தெய்வமாக நிலை பெற அடித்தளம் அமைத்துக்கொடுத்த படம் மதுரை வீரன் தான்.
ஒரிஜினல் கதைப்படி சிவபக்தியில் திளைத்திருந்த மதுரை வீரனை திராவிட இயக்க புரட்சியாளனாக உருமாற்றினாலும் படத்தில் அந்தக் குறையே தெரியாதபடி கண்ணதாசன் கதை அமைக்க - எம்.ஜி. ஆர். நடிக்க - திறம்பட இயக்கி இருந்தார் இயக்குனர் திரு.யோகானந்த் அவர்கள்.
எம்.ஜி. ஆர். அவர்களை வெற்றிச் சிகரத்தில் ஏற்றிய மதுரை வீரன் இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனுக்கு என்று பிரத்யேகமாக ஒரு வெற்றி மகுடம் சூட்டவும் தவறவில்லை.
இத்தனைக்கும் பாடல்களுக்கான மெட்டுக்களில் சில இரவல் மெட்டுக்கள். இரவல் மெட்டுக்கள் என்றால் பொதுவாக செய்வது போல ஹிந்திப் பட மெட்டுக்கள் அல்ல.
நாடக மேடைகளில் பிரபலமான பாடல்களின் டியூன்கள் சில எடுத்தாளப்பட்டிருந்தன. இடைக்காலத்தில் தியாகராஜ பாகவதரின் நாடகங்களுக்கு இசை அமைத்தபோது மக்களின் ரசனையை நேரிடையாக கணித்தாரல்லவா? அந்த அனுபவம் இப்போது ஜி. ராமநாதனுக்கு கை கொடுத்தது.
அதே சமயம் தனது தனித்தன்மையை நிலை நாட்டும் பாடல்களை வழங்கவும் அவர் தவறவில்லை.
"செந்தமிழா எழுந்து வாராயோ. உன் சிங்காரத் தாய் மொழியைப் பேசாயோ " என்ற நடனப் பாடலை காம்போதி ராகத்தில் சுத்தமான கர்நாடக பாணியின் ராமநாதன் இசை அமைக்க பாடியவர் இசை வீராங்கனை திருமதி. எம்.எல். வசந்தகுமாரி என்னும்போது
பாடலின் அருமையை சொல்லவும் வேண்டுமோ!
இந்தப் பாடலுக்கு கற்பனை ஸ்வரங்கள் எல்லாம் அமைத்து பின்னி எடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன். அவர் நினைத்தை விட ஒரு படி மேலாகவே வெகு அனாயாசமாக பாடி இருக்கிறார் எம்.எல்.வி. அவர்கள்.
அதனால் தானோ என்னவோ பின்னணிப் பாடகியரைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஒரு வசந்த குமாரி போதாது. இன்னும் நிறைய வசந்த குமாரிகள் வரவேண்டும்" என்று அவருக்குத் தான் முதலிடம் கொடுத்து சொல்வாராம் ஜி. ராமநாதன்.
பாமரர்களை வசியம் செய்த பாடல் " வாங்க மச்சான் வாங்க" பாடல் தான். சுத்தமான நாட்டுப்புற மெட்டில் அனாயசமாக ஜிககி பாட, "வாங்க மச்சான்.. சும்மா வாங்க மச்சான்.. கிட்டே வாங்க மச்சான். " என்ற வரிகளுக்கு இடையில் ராமநாதன் கொடுத்திருக்கும் இணைப்பிசை பாடலுக்கு இன்னும் மெருகேற்றுகிறது. கேட்பவரை தாளம் போடவைக்கும் தெம்மாங்குப் பாடல்.
மானைத் தேடிவந்த மதுரை வீரன் கதாநாயகியின் அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிட நாயகியின் தோழியர் அவனைக் கலாய்ப்பது போன்ற பாடலில் முதலில் திணறும் கதாநாயகன் சமாளித்துக்கொண்டு பதிலடி கொடுக்கும்பொழுது விருத்தமாக ஆரம்பித்து "தேடி வந்தேன் புள்ளி மானே" என்று சுத்த கர்நாடகமாக பாடும்போது டி.எம்.எஸ். அவர்களின் முழுத் திறமையும் வெளிப்படும் வண்ணம் பாடவைத்திருக்கிறார்
ஜி. ராமநாதன்.
அடுத்து தன்னைச் சிறை எடுக்க மதுரை வீரன் வரவேண்டும் என்று மீனாட்சி அம்மனிடம்
பொம்மியம்மா (பி. பானுமதி) வேண்டிப் பாடும் பாடல் அருமையான பாடல் - ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிட்டத்தட்ட மறக்கப்பட்ட பாடலாக அமைந்துவிட்ட பாடல். கண்ணதாசனின் கருத்தாழம் மிக்க "அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா" என்ற பாடல்.
ஏற்கெனவே கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதிய "இல்லறஜோதி" படத்தில் ஜி. ராமநாதன் தேஷ் ராகத்தில் அமைத்த பாடலின் மெட்டு லேனா செட்டியாருக்கு மிகவும் பிடித்துப் போக அதே மெட்டில் பாடல் வேண்டும் அவர் விரும்ப - ஏற்கெனவே எழுதிய வரிகளை சற்றே மாற்றி கண்ணதாசன் எழுதிக்கொடுக்க - தான் போட்ட அதே டியூனை மீண்டும் பயன்படுத்தி ஜி. ராமநாதன் அமைத்துக் கொடுத்த பாடல் இது.
சொந்தக் குரலில் பாடுவதில் வல்லவரான நடிகை சொந்தக் குரலில் பாடுவதில் வல்லவரான நடிகை பி. பானுமதி அற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது.
அற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது.
தேஷ் ராகம் - ஜி. ராமநாதன் - பானுமதி ஆகிய மூவரின் சேர்க்கை பாடலுக்கு கொடுத்திருக்கும்இனிமையே தனி.
அற்புதமான பொக்கிஷம் ஒன்று காணாமல் போகும் நிலை வருவதற்குமுன்னால் அதை
பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டியது ரசிகர்களான நமது பொறுப்பு. மதுரை வீரன் படத்தின் பிரதி இருக்கிறது. இந்தப் பாடலும் இருக்கிறது. இதனைச் சேகரித்து ரசித்து அழியாமல் காக்க வேண்டியது ரசிகர்களான நமது கையில் தான் இருக்கிறது.
மதுரை வீரன் படம் வெளிவந்த சமயம் - சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் வெளிவந்த படம் "காலம் மாறிப் போச்சு" . இந்தப் படத்தில் இசை அமைப்பாளர் எம்.ஏ. வேணு அவர்களின் இசையில் வெளிவந்த "ஏருபூட்டிப் போவாயே
அண்ணே என் சின்னண்ணே " என்ற நாட்டுப் புறப்பாடல் மெட்டு அப்படியே "மதுரை வீரன்" படத்தில் லலிதா-ராகினி ஆகியோரின் நடனப் பாடல் ஒன்றில் கையாளப் பட்டது.
"சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம். சோம்பல் வளர்த்தா நாட்டுக்கு நஷ்டம். உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று பட்டு வாழோணும் தானே தன்னன்னா " என்ற பாடலைப் பாடியவர்கள் ஜிக்கி - ரத்னமாலா.
அப்போது காலம் மாறிப்போச்சு படத்தின் விநியோக உரிமை பெற்றிருந்த திரு. ஏ.வி.எம். அவர்கள் இந்தப் பாடலால் தனது படத்தின் வெற்றி பாதிக்கப் படும் என்று கருதி முதலில் "போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் செய்து... இறுதியாக தனது படத்தின் பாடல் மெட்டை திருடி விட்டதாக லேனா செட்டியார் மீது வழக்கு தொடர்ந்த சம்பவமும் நடந்தது.
லேனா செட்டியாருக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் வி.எல். எத்திராஜ் அவர்கள் வாதாடி "நாட்டுபுற பாடல் மெட்டுக்கள் அனைவருக்கும் பொதுவானது என்றும் இதில் யாரும் தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது" என்றும் தீர்ப்பை பெற்றுத் தந்த சம்பவமும் நடந்தது.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் "திருநீலகண்டர்" படத்தில் இடம் பெற்ற "தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே" பாடலின் மறுவடிவமாக "ஏய்ச்சுப் பொழைக்கும் பொழைப்பே சரிதானா எண்ணிப் பாருங்க – நல்லா எண்ணிப் பாருங்க" பாடல்.
பொதுவாக இப்படி இன்னொருவரின் மெட்டைப் பிரதி எடுப்பது ஜி. ராமநாதனுக்கு அறவே பிடிக்காத ஒன்று. இதே காரனத்துக்க்காகத் தானே நடிகை மாதுரி தேவியின் "ரோஹிணி" படத்தைப் புறக்கணித்தார் அவர்.? அப்படி இருந்தும் மதுரை வீரனில் இப்படி பிரதி எடுப்பது போல செயல்பட்டதற்கு லேனா செட்டியாரின் மீது கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாக இருக்கலாம்.
அல்லது இடைக்காலத்தில் தான் எடுத்த தவறான முடிவின் காரணமாக - (அதுதான் சொந்தப் படம் எடுத்தது) - ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீளவேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக தயாரிப்பாளரை அனுசரித்துப் போகவேண்டிய நிர்ப்பந்தமும் காரணமாக இருக்கலாம்.
முன்பு தனிக்காட்டு ராஜாவாக இருந்த காலம் மாறி இப்போது இளைய தலைமுறையின் ஆதிக்கம் வேரூன்றி விட்டிருக்கும் சூழலில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற நோக்கமும் காரணமாக இருந்திருக்கலாம்.
எது எப்படியோ இப்படி இரவல் மெட்டுக்களை ராமநாதனும் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஆனால் ஒன்று. இப்படி இரவல் மெட்டுக்கள் படம் முழுக்க விரவிக்கிடந்தாலும் மிகவும் பிரபலமானது என்னவோ ஜி. ராமனாதனின் தனித் தன்மையைக்காட்டும் வண்ணம் அவர் இசையமைத்த பாடல்கள் தான்.
இவற்றில் "வாங்க மச்சான் வாங்க" ஜனரஞ்சக வரவேற்பைப் பெற்றது என்றால் - பண்டிதர் முதல் பாமரர் வரை அனைவரின் கவனத்தையும் கவர்ந்த கிளாசிக் பாடல் ஒன்றும் மதுரை வீரன் படத்தில் இருக்கிறது என்றால் அது திருமதி. எம்.எல். வசந்த குமாரி அவர்கள் பாடிய "ஆடல் காணீரோ.." என்ற திருவிளையாடற்புராணப் பாடல் தான்.
உடுமலை நாராயண கவிராயர் இயற்றிய இந்தப் பாடலை ஜி. ராமநாதன் அமைத்திருக்கும் விதம் கர்நாடக இசை வல்லுனர்களால் இன்றளவும் பாராட்டப் படும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஏற்கெனவே "ஹரிதாஸ்" படத்தின் மூலம் ராமனாதனால் பிரபலப் படுத்தப் பட்ட ராகமான சாருகேசி மீண்டும் பரமனின் திருவிளையாடற்புராணப் பாடலாக பரிமளித்தது.
இரண்டு பாடல்களுக்கும் ஒரே ராகம் தான் என்றாலும் இரண்டையும் ராமநாதன் கையாண்டிருக்கும் விதத்தில் தான் எத்தனை வித்தியாசம்!
"மன்மத லீலையை வென்றார் உண்டோ.." ச்ருங்கார ரசப் பாடல் என்றால் "ஆடல் காணீரோ" பக்திரசப் பாடல்.
முன்னதில் ஆண்மையின் கம்பீரம் முழுக்க வெளிப்படுகிறது என்றால் இதில் பெண்மையின் நளினம்.
முன்னதில் ஆற்றொழுக்குப் போல ஒரே சீரான நடையில் சாருகேசி பிரவாகம் எடுக்கிறது என்றால் இதில் நடை பேதம் மிளிர துள்ளிக் குதித்து ஆடிவரும் அழகு.
இந்தப் பாடல் பத்மினி ஆடும் ஒரு பரத நாட்டியப் பாடல்.
பொதுவாக நடனத்தில் இரண்டு வகை உண்டு. ஆண்கள் ஆடுவது தாண்டவம் என்றும் பெண்கள் ஆடுவது "லாஸ்யம்" என்றும் பொதுவாகக் குறிப்பிடப் படுவது உண்டு.
பரமனின் "ஆடலைக் காணீரோ" என்று ஒரு பெண் வியக்கும் அற்புத பாவம் பாடல் முழுதும் வெளிப்படும் வண்ணம் அமைந்த நாட்டியப் பாடல் இது.
ஒரு பெண்ணின் நடனத்துக்குள்ள நடனம் பாடல் முழுதும் மிளிரும் அதே சமயம் பாடலின் கருப்பொருள் பரமனின் நடனம் அல்லவா? ஆகவே சிவனின் ஆட்டத்தை - அதாவது ஒரு ஆணின் தாண்டவத்துக்கான இசையை முகப்பிசையாகக் கொடுத்து அதற்கேற்ற தாளக் கட்டுடன் பாடலைக் கம்பீரமாக ஆரம்பிக்கிறார் ஜி. ராமாநாதன்.
அருமையான, எளிமையான, பாமரரும் புரிந்துகொண்ட ரசிக்கக் கூடிய பாடல் வரிகள் மதுரைமாநகரில் ஈசன் ஆடிய திருவிளையாடல்களை எத்தனை அழகாக விவரிக்கின்றன. முழுக்க முழுக்க கர்நாடக இசையில் அமைக்கப்பட்ட பாடலாக இருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும் வண்ணம் எவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார் ஜி. ராமநாதன் என்பதைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.
பிட்டுக்கு மண் சுமக்க வந்து பாண்டிய மன்னனின் கைப் பிரம்பால் அடிபடுகிறார் பரமன். அவர் மீது மன்னன் அடித்த பிரம்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள், மனிதர்கள் அனைவர் மீதும் அந்தக் கணமே படுகிறது. எப்படி? இவருக்கு பின் அவர்.. அவருக்குப் பின் அடுத்தவர் என்று முறை வைத்தா படுகிறது? மன்னன் அடித்தான் அடுத்த கணமே அனைவர் மீதும் அந்த அடி படுகிறது. அவ்வளவு விரைவாக!
அந்த வேகத்தை பாடலில் காட்டவேண்டுமே. காட்டியிருக்கிறார் ஜி. ராமநாதன். "பித்தனைப் போலே கைப் பிரம்பாலே பட்ட அடி" என்ற வரிகளுக்கு அடுத்து வரும் "பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு தழும்பேற்ற" - என்று வரும் சரணத்தின் கடைசி வரிகளை மத்யம காலத்தில் - அதாவது வெகு வேகமான காலப் பிரமாணத்தில் அமைத்து - முடிவில் "ஆடல் காணீரோ."- என்ற பல்லவியை இணைத்து அருமையாக பாடலின் அமைப்பு குன்றாத வண்ணம் அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.
அதுபோலவே வளையல் விற்ற படலத்தைக் குறிப்பிடும் கட்டத்தில் "வைரவளை, முத்துவளை, ரத்னவளை விற்ற விளையாடல் காணீரோ.." என்ற வரிகளில் ஒரு நடைபேதம் காட்டி சட்டென்று மீள்வது.. பாடலின் சுவையை இன்னும் கூட்டுகிறது.
இந்தப் பாடலின் வெற்றியாலோ என்னவோ திருமதி. எம்.எல்.வசந்தகுமாரி தனது மகள் நடிகை ஸ்ரீவித்யாவின் பரத நாடியத்துக்காக பாடல்களை வடிவமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஜி.ராமநாதனுக்கு அளித்தார் என்றும் அதனை ஏற்றுக்கொண்டு
ஸ்ரீவித்யாவின் நடனத்துக்கான பாடல்களை ஜி. ராமநாதன் வடிவமைத்துக் கொடுத்ததாகவும்
ஒரு தகவல்.
அடுத்து ஒரு டூயட் - டி.எம்.எஸ் - ஜிக்கி இருவர் குரல்களில் "நாடகமெல்லாம் கண்டேன் உனது ஆடும் விழியிலே" - இன்றளவும் மக்கள் நினைவில் இருந்து மங்காத ஒரு பாடல்.
இப்படிக் கேட்பவரை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வண்ணம் அமைந்த பாடல்கள் மதுரை வீரனின் வெற்றிக்கு பக்க பலமாக நின்று அதனை ஒரு வெள்ளிவிழாப் படமாக்கின.
விளைவு.. இடையில் சற்று சரிந்திருந்த ஜி. ராமநாதனின் வெற்றிக்கான வரைபடம் (GRAPH ) மீண்டும் உயரத் தொடங்கியது.
சிகரம் தொடுவோம்...
|