இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 14
லேனா செட்டியாரின் அடுத்த படத்துக்கு ஜி. ராமநாதன் இசை அமைப்பாளரானதே ஒரு தனிக் கதை.
ஆரம்பத்தில் தனது படத்துக்கு இசை அமைப்பாளராக எம்.எஸ். ஞானமணி அவர்களைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார் லேனா செட்டியார்.
ஞானமணியும் சாதாரண ஆளல்ல. அற்புதமான இசைஞானம் மிக்கவர். மிகுந்த ஞானஸ்தர். ஆனால் வாழ்வில் முன்னேற - அதுவும் திரை உலகில் முன்னேற - வெறும் ஞானம் மட்டும் போதாதே. சாமர்த்தியமும் மற்றவர்களை அனுசரித்துப்போகும்
தன்மையும் வேண்டுமே. இவை இரண்டும் இல்லாத காரணத்தால் திரை உலகில் வெளிச்சத்துக்கே வராமல் அணைந்து போன சுடர்கள் எத்தனையோ உண்டல்லவா? அந்த வரிசையில் இவரும் ஒருவர். ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டபிறகு மற்றவர்களோடு ஒத்துப் போகமுடியாமல் ஒன்று அவராகவே விலகுவார் அல்லது விலக்கப்படுவார். லேனா செட்டியாரின் படத்திலும் அதுவே நடந்தது.
அடுத்து படத்துக்கு இசை அமைக்க யாரை அணுகலாம் என்று செட்டியார் யோசித்தபோது அவருக்கு "மருமகள்" படத்தின் வெற்றிக்கு காரணமான ஜி. ராமநாதனின் நினைவு வந்தது.
அந்தச் சமயத்தில் ஜி.ராமநாதன் மீண்டும் நாடகமேடைக்கே திரும்பி இருந்தார். ஆம். சொந்தப் படத்தில் தோல்வியால் அனைத்தையும் இழந்திருந்த ஜி.ராமநாதனை
நாடகமேடை தன்னிடம் அழைத்துக்கொண்டது. தாயின் மடியில் தஞ்சம் புகும் மகனைப் போல நாடக மேடைக்கு மீண்டும் வந்தார் அவர்.
அவரை நாடக மேடைக்கு அழைத்து வந்தவர் வேறு யாரும் அல்ல. எம்.கே.தியாகராஜ பாகவதர்தான்.
மறுவாழ்வு தேடி அவர் தயாரித்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுருண்டு கொண்டாலும், அவருக்கு நாடெங்கும் "ஸ்பெஷல்" நாடகங்கள் நடத்த அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. தனது நாடகங்களுக்கு இசை அமைத்துக் கொடுக்கவும்,
ஹார்மோனியம் வாசிக்கவும் வருமாறு அவர் ஜி. ராமநாதனை அழைத்தார். திரை உலகம் சற்றே ராமநாதனைப் புறக்கணித்திருந்த நேரம் அது.
உற்சாகத்துடன் சம்மதம் சொன்ன ராமநாதன் தனது ஹார்மோனியத்துடன் பாகவதரின் நாடகக் குழுவில் ஒருவராகக் கிளம்பிவிட்டார். பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, ஜி. ராமநாதன் - இவர்கள் முன்னிலை வகித்த அந்த ஸ்பெஷல் நாடகக் குழு தமிழ் நாட்டில் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகப் பயணித்தது.
நாடக மேடையில் நாடகம் முடிந்ததும் பாகவதரைப் பாடல்கள் பாடுமாறு மக்கள்
கேட்டுக்கொள்வார்கள். "அதுக்குத் தானே வந்திருக்கேன்" என்றபடி பாகவதரும் விடிய விடியப் பாடுவார். அவர் பாடுவதற்கென்றே புதுப் புதுப் பாடல்களை மெட்டமைத்துக் கொடுப்பார் ஜி. ராமநாதன்.
தனது புதிய டியூன்கள் மக்களிடம் எப்படிச் சென்றடைகிறது. அவற்றை அவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதையெல்லாம் கூர்மையாக கவனித்து தெரிந்து கொள்ள இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜி. ராமநாதன். திரை உலகில் அவரது அடுத்த "இன்னிங்க்ஸ்" தொடங்கியபோது இப்படி மக்களிடம் நேரிடையாக
அங்கீகாரம் பெற்றுக்கொண்ட டியூன்கள் பாடல்களாக பரிமாணம் அடைந்து அவரது வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தன.
அதுதான் ஜி. ராமநாதன்.
இன்னொருவராக இருந்தால் முன்னேறிக்கொண்டிருந்த பொழுது இப்படி ஒரு சறுக்கல் ஏற்பட்டால் - மீண்டும் ஆரம்ப காலகட்டத்துக்கே வர நேர்ந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்..?
"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பார்த்தியா?" என்று சுயபச்சாதாபத்தில் கரைந்து அப்படியே முடங்கிப் போய்விட மாட்டார்களா? சாதாரணமாக ஒரு சறுக்கல் அதுவும் புகழோடு இருந்த மனிதர்களுக்கு தன்னிலை தாழும்போது அப்படி தோன்றுவது சகஜம் தான். அட. அவர்களுக்காகத் தோன்றாவிட்டாலும் அடுத்தவர்கள் எதற்கு
இருக்கிறார்களாம்? அனுதாபம் காட்டுவது போல இன்னும் அழுத்திவிடுவார்களே.!
அதற்கு மாறாக வெற்றி தோல்வி என்பது நம் கையில் இல்லை. வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் இவை இரண்டையும் சந்தித்தே ஆகவேண்டும். பகலும் இரவும் மாறி மாறி வருவதுபோல இவை வரும். போகும்.
வெற்றி என்பது என்ன? எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பதா. ? இல்லை. எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருப்பதுதான் வெற்றி என்பதல்ல. தோற்று விழும் ஒவ்வொரு முறையும் துவண்டு விடாமல் மீண்டும் நிமிர்ந்து எழுவதற்கு பெயர்தான் வெற்றி.
வெற்றிக்கான இந்தப் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ஜி. ராமநாதன்.
அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க நேர்ந்தது என்பது மிகவும் குறைவு. அப்படி கொடுத்த நேர்காணல்களில் கூட தன் கடந்த கால வாழ்வைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாமல், தான் அடுத்து செய்யப்போவதை மட்டுமே அவர் குறிப்பிடுவது வழக்கமாம்.
ஆகவே நாடக மேடைக்கு மீண்டும் வந்த பொழுது - அரைத்த மாவையே மீண்டும் அரைக்காமல் - தனது புது "டியூன்களால்" மக்களின் ரசனையை அளந்து விரல் நுனிக்குள் வைத்துக்கொள்ள முயன்றார் அவர். அதில் வெற்றியும் பெற்றார்.
*****
அப்படி ஒரு நாடக மேடை அனுபவத்துக்குப் பிறகு சென்னை திரும்பியபோதுதான் அவருக்கு லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஞானமணி விலகிக்கொள்ள - அல்லது - விலக்கப்பட அந்த வாய்ப்பு ஜி. ராமனாதனைத் தேடி வந்தது.
சிவாஜி கணேசன், டி.எஸ். பாலையா, லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் நடிக்க தனது அடுத்த படமாக ஒருகாலத்தில் நாடக மேடையில் பிரபலமாக இருந்த "தூக்கு தூக்கி" கதையைப் படமாக தயாரிக்க ஆரம்பித்தார் லேனா செட்டியார். ஏற்கெனவே தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டமான 1934இல் மேடை நாடகங்கள் படங்களான ஆன காலகட்டத்தில் இது படமாகவும் வந்திருந்தது. இப்போதெல்லாம் பாடல்களில் "ரீ-மிக்ஸ்" வருகிறதல்லவா அதுபோல அன்று வெளிவந்த "ரீ-மேக்" திரைப்படம். சொல்லப் போனால் "ரீ-மேக்" படங்களின் சகாப்தத்தை ஆரம்பித்துவைத்த முதல்படமும் இதுதான்.
பாடல்களை உடுமலை நாராயண கவியாரும், மருதகாசியும் எழுத இசை அமைப்புக்கு ஜி. ராமநாதன்.
கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு அப்போது பிரபலமாக இருந்த திருச்சி லோகநாதனை
பாடவைப்பது என்று முடிவெடுத்து அவரை அணுகினார்கள்.
படத்தில் கதாநாயகனுக்கு மொத்தம் எட்டுப் பாடல்கள்."மந்திரிகுமாரி" படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகநாதன் தனது ரேட்டை கணிசமாக உயர்த்தி இருந்த நேரம் அது. ஆகவே தனக்கு ஒரு பாட்டுக்கு ஐநூறு ரூபாய் வீதம் எட்டு பாடல்களுக்கு நாலாயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருச்சி லோகநாதன்.
"ஒன்றிரண்டு பாடல்கள் என்றால் சரி. ஆனால் ஹீரோவுக்கான மொத்தப் பாடல்களையும் நீங்களே பாடுவதால் பாடலுக்கு இருநூற்றைம்பது ரூபாய் வீதம் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கிறோம்." என்றார்கள் தயாரிப்பு நிர்வாகத்தினர்.
லோகநாதன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சு வார்த்தை நீடித்தது.
அந்த சமயத்தில் தன்னையும் அறியாமல் திருச்சி லோகநாதன் இப்படிச் சொன்னார்:
"என் சம்பளத்தை நான் குறைச்சுக்க மாட்டேன். மலிவான ரேட்டிலே பாடவேண்டும் என்றால் அந்த மதுரைக்காரப் பையனைப் போட்டுக்குங்க"
"மதுரைக்காரப் பையன்" என்று அவர் குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல. டி.எம். சௌந்தர்ராஜனைத்தான்.
அதுவரை அவர்தான் பாடவேண்டும் என்று வந்தவர்கள், அவரே இப்படி ஒரு மாற்றுப் பாடகரைப் பற்றிக் குறிப்பிட்டதும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
சென்னை தியாகராயநகரில் சிகரெட்டு அட்டையின் பின்புறத்தைக் கிழித்து அதில் தனது விலாசத்தை எழுதி வைத்துக்கொண்டு அதனையே தனது "விசிட்டிங் கார்டாக" பயன்படுத்திக்கொண்டு வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்த டி.எம். சௌதர்ராஜனை கவிஞர் மருதகாசி நேரில் சந்தித்து கையேடு அழைத்துக்கொண்டு சென்றார்.
முதல் முதலாக ஒரு படத்தில் கதாநாயகனுக்கான - அதுவும் சிவாஜி கணேசனுக்கு - அனைத்துப்பாடல்களையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ். அவர்களுக்கு கிடைத்தது இப்படித்தான்.
ஆனால் - அதிலும் அவருக்கு ஒரு எதிர்ப்பு காத்துக் கொண்டிருந்தது. "தூக்கு தூக்கியில்" நாடோடி மெட்டுக்களும், தெம்மாங்கு மெட்டுக்களும்தான் அதிகம்.
அவற்றை ஒரு புதுப் பாடகரைப் பாடவைப்பதை விட அப்போது பிரபலமாக இருந்த சிதம்பரம் எஸ். ஜெயராமன் பாடினால் படமும் எடுபடும், பாடல்களும் பிரபலமாகும் என்று நினைத்தார் சிவாஜிகணேசன். தனது முதல் படமான பராசக்தியில் தனக்கு பின்னணி பாடியவராயிற்றே.! ஆகவே அவரைப் பரிந்துரைத்தார் சிவாஜி கணேசன்.
ஆகவே," லோகநாதன் இல்லாட்டா என்ன? ஜெயராம பிள்ளையை எனக்காகப் பாடச் சொல்லாம வேற யார் யாரையோ பாடவைக்கறேன்னு சொல்லறீங்களே?" என்று சிவாஜி கணேசன் குறைப்பட்டுக்கொண்டாராம். இதே கருத்தை கவிஞர் உடுமலை நாராயண கவியும், இயக்குனர் எஸ். கிருஷ்ணசாமியும் வலியுறுத்தினர்.
ஆனால் இன்னொரு பாடலாசிரியர் மருதகாசியும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் டி.எம்.சௌந்தரராஜன் தான் பாடவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
"தெம்மாங்குப் பாடறதுலே சௌந்தரராஜனுக்கு முன்னாலே யாரும் நிக்கமுடியாது. அவனுக்கு நிகர் அவனே தான்" - இது ஜி. ராமனாதனின் கருத்து.
இந்த நிலையில் படத்தின் நாயகர் சிவாஜிகணேசனை நேரில் சந்தித்தார் டி.எம்.சௌந்தரராஜன்.
"நீங்க சி.எஸ். ஜெயராமனைப் பாடச் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரே ஒரு பாட்டையாவது உங்களுக்கு பாட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. அதைக் கேட்டுவிட்டு சரியாக இல்லை என்று உங்களுக்கு பட்டால் நான் வந்த வழியே திரும்பிப் போய்விடுகிறேன்" - என்று கேட்டுக்கொண்டார் அவர்.
அரை மனதுடன் தலை அசைத்தார் சிவாஜி.
டி.எம்.எஸ். அவர்களுக்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்கிற துடிப்பு நிறையவே இருந்தது. "இதை விட்டால் அப்புறம் அடுத்த சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோ?. ஆகவே எப்படியாவது ஒரே ஒரு பாட்டையாவது சிவாஜி கணேசனுக்கு பாடிவிடவேண்டும்" என்கிற வெறி என்று கூட அதை சொல்லலாம். அதுவரை ஒரு கோரஸ் பாடகனாகவும், அசரீரிப் பாடகனாகவும் மட்டுமே இருந்துவந்த தனக்கு கதாநாயகனுக்கு பாடக்கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு வேகம் அவருக்கு இருந்தது.
ஜி.ராமநாதனோ, "இந்த சௌந்தரராஜனை முழுத் திறமையும் வெளிப்படப் பாடவைத்து தனது தேர்வு தவறல்ல என்று இவனை ஏற்க மறுப்பவர்களுக்கு புரியவைக்க வேண்டும்" என்பதால் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு செயல்படத் துவங்கினார் அவர்.
பல முறை கற்றுக்கொடுத்து - தனக்கு முழுத் திருப்தி ஏற்படும் வரை சௌந்தரராஜனை சாதகம் செய்யவைத்து - அதன் பிறகு பாடவைக்கவும் செய்தார் அவர்.
பி. லீலா, ஏ.பி. கோமளாவுடன் இணைந்து டி.எம்.எஸ். அவர்கள் பாட பாடல் பதிவு செய்யப் பட்டது. இப்படி ஒன்றல்ல- மூன்று பாடல்கள் டி.எம். சௌந்தர்ராஜனைப் பாடவைத்து பதிவு செய்தார் அவர்.
பாடல்கள் தயாரானதும் சிவாஜி கணேசனுக்கு தெரிவிக்கப் பட, அப்போது ஒரு பிசியான நடிகராக இயங்கிக் கொண்டிருந்த அவரும் பாடலைக் கேட்க நேரம் ஒதுக்கிக் கொண்டு படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து சேர்ந்தார்.
"சுந்தரி சௌந்தரி நிரந்தரியே.." ஜி. ராமநாதனுக்கு மிகவும் பிடித்த குறிஞ்சி ராகத்தில் அமைந்த பாடல் ஒலிக்கத் தொடங்கியது..
சிகரம் தொடுவோம்...
|